மீளாய்வு ஆண்டு: 2009 2009 ஆம் ஆண்டு 2008 செப்டம்பர் வோல் ஸ்ட்ரீட் பொறிவினால் கட்டியம் கூறப்பட்ட உலகளாவிய பொருளாதாரச் சரிவின் பரவலால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும், அத்துடன் அதிகமாக ஆசியாவின் “வளரும் பொருளாதாரங்களிலும்” வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் பெருகின. அத்தனை நாடுகளிலும் ஆளும் உயரடுக்கினர் பாரிய வேலைவாய்ப்பின்மையை, ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகளை சரியச் செய்வதற்கும் உழைப்புக்காகும் செலவுகளை கூர்மையாகக் குறைப்பதற்கும் உதவுகின்ற ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினர். தொழிலாள வர்க்கம் முந்தைய நூற்றாண்டின் பாதையிலான மிகக் கடுமையான போராட்டங்களின் வழியாக வென்றெடுத்திருந்த சுகாதார பாதுகாப்பு, கல்வி மற்றும் ஓய்வூதியம் போன்ற சமூக நல உதவிகளின் மீது ஒரு நேரடித் தாக்குதலை அவர்கள் தொடுத்தனர். அமெரிக்காவும் வோல் ஸ்ட்ரீட்டும் இதில் முன்னிலை வகித்தன. புஷ் நிர்வாகத்தின் மீது உண்டாகியிருந்த பாரிய வெறுப்பை அறுவடை செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த “மாற்றம்” என்ற வெற்று சுலோகத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட ஒரு விளம்பரப் பிரச்சாரத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவரான ஜனாதிபதி பராக் ஒபாமா, வெகுவிரைவிலேயே அமெரிக்க வரலாற்றின் மிகப் பிற்போக்குத்தனமான நிர்வாகம் என நிரூபணமாகவிருந்த ஒரு நிர்வாகத்திற்குத் தலைமை கொடுத்தார். பிரதிநிதிகள் சபை, செனட் இரண்டிலுமே ஜனநாயகக் கட்சியினருக்கு பெரும்பான்மை இருந்த நிலையில், புதிய அரசாங்கமானது தனது முந்தைய அரசாங்கத்தின் வலது-சாரிக் கொள்கைகளை தொடர்ந்தது; ஆழப்படுத்தியது. முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி 2008 நெருக்கடியானது உலக முதலாளித்துவத்தின் வரலாற்றை உருமாற்றியதொரு நிகழ்வாக அமைந்திருந்தது. 2009 ஆம் ஆண்டிற்கான முதல் WSWS முன்னோக்கில், நிக் பீம்ஸ் எழுதினார்: எப்போது ஒரு வரலாற்று மீளாய்வை செய்தாலும் குறிப்பான சில வருடங்கள் அதனுடன் தொடர்புபட்ட சில தீர்மானகரமான நிகழ்வுகளுக்காக பெரும்பான்மையான கவனத்தை ஈர்க்கும். 1914,1929,1933,1939 மற்றும் மிக சமீபத்தில் என்றால் 1956 மற்றும் 1989 ஆகியவை அத்தகைய சில ஆண்டுகள். 2008 ஆம் ஆண்டும் இந்தக் குழுவுடன் இணைந்து கொள்ளத் தகுதியுடையதாகி இருக்கிறது. ஆழமான வேர்களுடனான ஒரு அமைப்புமுறை நெருக்கடியின் வெளிப்பாடே வோல் ஸ்ட்ரீட் பொறிவு ஆகும். இந்த நெருக்கடியானது உலகெங்கும் வர்க்க மோதலைத் தீவிரமாக்கி “ஒரு புரட்சிகர நெருக்கடிக்கான புறநிலை முன்னவசியங்களை” உருவாக்கும் என்று ஜனவரி 10 அன்று நடந்த அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் மிட்வெஸ்ட் கூட்டத்தில் தேசியத் தலைவர் டேவிட் நோர்த்தும் தேசியச் செயலரான ஜோசப் கிஷோரும் வலியுறுத்தினர். இந்த நெருக்கடிக்கு அமைதியானதும் “சமூக நடுநிலையானதுமான” தீர்வு எதுவுமில்லை. பொருளாதாரக் கிளர்ச்சிக்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மேம்படுத்தப்பட்ட பதிலிறுப்புகள், எந்தப் பிரச்சினையையும் தீர்க்கப் போவதில்லை. அவசரமாக உருவாக்கப்பட்ட பல்வேறு பிணையெடுப்புத் திட்டங்களில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் இறைக்கப்பட்டு விட்டன. ஜனாதிபதி ஒபாமாவைப் பொறுத்தவரை, ’நெருக்கடிக்கு தீர்வாக முதலாளித்துவத்தின் அடித்தளங்களையும் நிதி உயரடுக்கின் நலன்களையும் கைவைக்காத ஒரு தீர்வு’ என சாத்தியமில்லாத ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறார். ஜனவரி 10 அன்று ஒபாமா பதவியேற்கவிருந்த நிலையில் அதற்கு 10 நாட்களுக்கு முன்பாக அளிக்கப்பட்ட இந்த அறிக்கை வரவிருந்த நிர்வாகத்தின் தன்மையை கோடிட்டுக் காட்டியது. “சுதந்திர உலகின் தலைவர்” எனும் தனது பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாகவே ஒபாமா, தனது மந்திரி சபை தெரிவுகளிலும், தனது உத்தேச பொருளாதார “ஊக்குவிப்பு” தொகுப்புகளிலும், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் விடயத்திலான தனது மவுனத்திலும், பெருநிறுவன உயரடுக்கின் மிகச் சக்திவாய்ந்த அடுக்குகளுக்கான தனது விசுவாசத்தை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார். தந்திரோபாயத்திலும் தொனியிலும் என்ன மாற்றங்கள் நேர்ந்தாலும் அமெரிக்க இராணுவ எந்திரம் என்பது அகற்றப்படப் போவதில்லை எனும்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய அபிலாசைகளில் இருந்து பின்வாங்கல் இருக்குமா என்பதெல்லாம் சொல்லவும் அவசியமில்லாதது..... வங்கிகளுக்கு பாரிய கையளிப்புகளைக் கொடுக்கும் நிர்வாகத்தின் கொள்கையைத் தொடரவிருப்பதை ஒபாமா தெளிவாக்கி விட்டிருக்கிறார்... ஒபாமா தனது பிரச்சார வாக்குறுதிகளை திகைப்பூட்டும் வகையில் அத்தகைய விரைவாய் கைதுறந்தமையானது அவரது சொந்த நேர்மையின்மை மற்றும் சிடுமூஞ்சித்தனத்துக்கும் அதிகமான கூடுதலான பல விடயங்களை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க ஜனநாயகத்திலான ஒரு ஆழமான நெருக்கடியை அது பிரதிபலிக்கிறது. நடப்பு ஸ்தாபனங்களும் அரசியல் கட்டமைப்பும் வெகுஜன விருப்பத்தின் ஜனநாயக வெளிப்பாடு ஊடுருவ இயலாதவையாக இருக்கின்றன. அதிகாரத்தில் இருப்பவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரா அல்லது குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரா என்பது அரசாங்கக் கொள்கையின் அடிப்படையான திசை மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ”இரு-கட்சி” அமைப்புமுறையானது ஆளும் நிதிச் சிலவர் கூட்டம் தனது அரசியல் அதிகாரத்தைச் செலுத்துவதற்கும் அரசைக் கட்டுப்படுத்துவதற்கும் வழிவகையளிக்கும் ஒரு சாதனமாக முன்னிலும் அப்பட்டமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அடிப்படையான அரசியல் உண்மையில் இருந்து புலனாகக் கூடியது என்னவென்றால் ஜனநாயகக் கட்சியை நோக்கி நோக்குநிலை கொண்ட பல வண்ணமான இடது-தாராளவாத மற்றும் குட்டி-முதலாளித்துவ ஆர்ப்பாட்ட அமைப்புகள் கூறி வருவதைப் போல “இடதில்” இருந்தான வெகுஜன அழுத்தத்தின் மூலமாக எல்லாம் ஒபாமா நிர்வாகத்தின் திசையானது மாற்றப்பட்டு விட முடியாது என்பதாகும். போர் மற்றும் சமத்துவமின்மைக்கு முடிவுகட்டுவதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களுக்குக் கணக்குத் தீர்ப்பதும் ஒரு சீரழிந்த முதலாளித்துவ-ஏகாதிபத்திய ஆட்சியின் கட்டமைப்புக்குள்ளாக எட்டவியலாதவை ஆகும். அவசியமாக இருப்பது ஒபாமா பிரச்சாரத்தின் வெற்று மந்திரமான “மாற்றம்” என்பதல்ல, மாறாக ஒரு சமூகப் புரட்சியாகும். உலகெங்கும் சமூகப் போராட்டத்தின் பெருக்கத்தை முன்கணித்த இந்த அறிக்கை விளக்கியது: ஒவ்வொரு வரலாற்று நெருக்கடியும் முக்கிய வர்க்கங்களை சுயாதீனமானதொரு நிலைப்பாட்டைத் தழுவவும் கூடிய அல்லது குறைந்த தெளிவுடனான ஒரு வர்க்க தீர்வை முன்வைக்கவும் நிர்ப்பந்திக்கிறது. தேசிய ஐக்கியம் மற்றும் பொதுவான தியாகத்திற்கான ஆரம்ப அழைப்புகள் எல்லாம் பரஸ்பர பதிலடிகள், பெருகும் வன்மம் மற்றும் பகிரங்க மோதலாக வெகுவிரைவாக மாற்றம் காண்கின்றன. 2009 இன் அபிவிருத்திகள் இந்த பகுப்பாய்வின் சரியான தன்மையை உறுதி செய்தன. அந்த ஆண்டின் ஆரம்ப மாதங்களில் உலகப் பொருளாதாரம் நில்லாது சரிந்து கொண்டிருந்தது. ஜனவரி பிற்பகுதியில் ஒற்றை நாளில் 74,000 பணி நீக்கங்கள் அறிவிக்கப்பட்டன. ஜனவரி மாதத்தில் மட்டும் முக்கால் மில்லியன் வேலைகள் அழிக்கப்பட்டன. ஏறக்குறைய அதே எண்ணிக்கையில் பிப்ரவரியிலும் அழிக்கப்பட்டன. இதனிடையே, பங்குச் சந்தைகள் கூர்மையான சரிவைச் சந்தித்தன. மார்ச் மாதத்தில் ஒருநாளில் 4.6 சதவீதம் பங்குகள் விற்கப்பட்டதானது அமெரிக்க டோவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியை 12 ஆண்டுகளின் மிகக் குறைந்த மட்டத்திற்குக் கீழிறக்கியது. உலகச் சந்தைகளும் இதனை அடியொற்றிச் சரிந்தன. நிதிப் பொறிவு ஆழமடைந்ததால் ஒவ்வொரு நாட்டிலும் நிதிநிலைப் பற்றாக்குறைகளும் அதிகரித்தன. ஏனென்றால் வேலைவாய்ப்பின்மை உதவிகள் மற்றும் பிற நிவாரண உதவி வடிவங்களுக்கான அரசாங்க ஒதுக்கீடுகள் அதிகரித்த நிலையில் வரி வருவாய்கள் கீழ்நோக்கிச் சரிந்தன. ஐரோப்பாவில் ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ், அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கான அரசாங்கக் கடன் வட்டி விகிதங்கள் அதிகரித்துச் சென்றதை அடுத்து ஐரோப்பிய மண்டலம் உடையும் சாத்தியம் குறித்த எச்சரிக்கைகள் வெளியாயின. ஜேர்மனியில் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் பெரும் கூட்டணி அனைத்து ஐரோப்பிய நாடுகளும் நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. சமூகச் செலவினங்களிலான மாபெரும் வெட்டுகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையின் அதிகரிப்பு என்பதே இதன் பொருளாகும். இதனிடையே பெரு வணிகத்திற்கு உதவும் பொருட்டு வரி விலக்குகளும் பிற ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. நெருக்கடியின் விளைவாக வீழ்ந்த முதல் அரசாங்கமாக ஐஸ்லாந்து நாட்டின் அரசாங்கம் இருந்தது. இந்நாட்டில் நாணய மதிப்பு மற்றும் வங்கி அமைப்புமுறை பொறிவுகண்டதை ஒட்டி பாரிய ஆர்ப்பாட்டங்கள் எழுந்தன. ஜனவரியின் பிற்பகுதியில் WSWS குறிப்பிட்டது: “நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வலது-சாரி சுதந்திரக் கட்சி பிரதமரான ஜேர் ஹார்டி மீது முட்டை, பெயிண்ட் மற்றும் கழிவறைக் காகித உருளைகளைக் கொண்டு எறிந்தனர். போலிஸ் பதிலுக்கு கண்ணீர்ப் புகைக் குண்டினை வீசியது. 1949க்குப் பின்னர் ஐஸ்லாந்தில் பொதுமக்கள் மீது கண்ணீர்ப் புகை பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறை.” இது, வரவிருந்த விடயங்களின் அடையாளக் குறியாக இருந்தது. பாரிய நாணய மதிப்புக் குறைப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது மாபெரும் நிதிச் சுமைகளை வைப்பது ஆகிய அடிப்படைகளில் சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பசுமைக் கட்சியினர் ஒரு தேசிய அரசாங்கக் கூட்டணியை உருவாக்கினர். பிரிட்டனில் வேலைவாய்ப்பின்மை 2 மில்லியன் என்ற எண்ணிக்கையைத் தாண்டி அதிகரித்தது. பிப்ரவரி மாதத்து அளவு 1971க்குப் பின் வேலைவாய்ப்பின்மையில் மிகப்பெரும் மாதாந்திர அதிகரிப்பாக இருந்தது. பிரான்சில் தொடர்ச்சியான வேலைநாள்குறைப்புகள் தொழிலாள வர்க்கத்தில் பரவலான எதிர்ப்பைத் தூண்டியது. இதனையடுத்து தொழிலாளர்களின் கோபத்தை வடியச் செய்வதற்கும் அதன்மூலம் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் வலது-சாரி அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்கான இயக்கம் எதனையும் முன்கூட்டித் தடுக்கும் பொருட்டும் தொழிற்சங்கங்கள் ஜனவரி இறுதியில் தேசிய அளவிலான ஒருநாள் ஆர்ப்பாட்ட தினத்திற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்தம் பெற்றன. கிழக்கு ஐரோப்பாவெங்கிலும் போராட்டங்கள் எழுந்தன. முன்னர் ஸ்ராலினிச ஆட்சிகளின் கீழிருந்த நாடுகளின் உழைக்கும் மக்கள் முதலாளித்துவ நெருக்கடியின் கூர்முனைத் தாக்குதலுக்கு முகம்கொடுத்தன. லாட்வியா, செக் குடியரசு மற்றும் ஹங்கேரியில் அரசாங்கங்கள் கவிழ்ந்தன. ஸ்கான்டினேவியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது, ஸ்வீடனில் அரை மில்லியன் மக்கள் வேலையளிக்கப்படாமல் இருந்தனர், கார் உற்பத்தி நிறுவனமான சாப் திவால்நிலைக்கு விண்ணப்பம் செய்தது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆசியாவின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரங்கள் கூர்மையாக மந்தமடையத் தொடங்கின. சீனாவில் தொழிற்சாலைகளின் மூடலால் கிராமப்புறங்களில் இருந்து புலம்பெயர்ந்திருந்த 20 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ஒரு பெரும் ஊக்குவிப்பு செலவினத் திட்டத்தைக் கொண்டு பதிலிறுப்பு செய்த ஆட்சியானது அதேசமயத்தில் ஊதியங்களைக் குறைக்கவும் உலகின் முதனிலை மலிவு உழைப்புக் களமாக சீனாவின் நிலையைத் தக்கவைக்கவும் உழைத்தது. ஜப்பானின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் உலகளாவிய மந்தநிலையால் நாசமடைந்ததை அடுத்து, ஜப்பான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து அதன் வருடாந்திர வளர்ச்சி 12.7 சதவீத எதிர்மறை விகிதத்தைக் கண்டிருந்தது. இந்தியப் பொருளாதாரம் சுவரில் மோதி நின்றது. அரை மில்லியன் வேலைகள் அழிக்கப்பட்டன, 2009 இன் முதல் பாதியில் இன்னுமொரு 1.5 மில்லியன் வேலைகள் அழிக்கப்படவிருப்பதாக மதிப்பிடப்பட்டது. இன்னுமொரு வேகமாக வளர்ந்து செல்லக் கூடிய பிராந்தியப் பொருளாதாரமான துருக்கியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. நெருக்கடிக்கான பதிலிறுப்பாக அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியும் WSWSம் ஏராளமான கூட்டங்களை நடத்தின. “உலகப் பொருளாதார நெருக்கடியும், முதலாளித்துவத்தின் தோல்வியும் சோசலிசத்துக்கான காலமும்” என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட தொடர்ச்சியான பிராந்தியக் கருத்தரங்குகளும் இதில் அடங்கும். நெருக்கடிக்கு பதிலிறுப்பான ஒரு சோசலிச முன்னோக்கின் உருவரை காட்டும் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. 2009 வசந்த காலத்தின் போது WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் நெருக்கடியின் வரலாற்று மூலங்களையும் அரசியல் சம்பந்தங்களையும் விளக்கி இரண்டு முக்கிய அறிக்கைகளை வழங்கினார். மார்ச் மாதக் கூட்டங்களில் நோர்த் வழங்கிய “முதலாளித்துவ நெருக்கடியும்வரலாறு திரும்புதலும்” என்ற அறிக்கை, இந்த நெருக்கடியானது முதலாளித்துவத்தின் தத்துவார்த்த அடித்தளங்களை கீழறுத்து விட்டிருக்கிறது என்ற குறிப்புடன் தொடங்கியது. 1930களுக்குப் பிந்தைய மிக மோசமான இந்த உலகப் பொருளாதார நெருக்கடியானது முதலாளித்துவ அமைப்புமுறையின் சர்வதேச அங்கீகாரத்திற்கு ஒரு கிடுகிடுக்க வைக்கும் அடியைக் கொடுத்துள்ளது. சுமார் மூன்று தசாப்த காலங்களாக அரசியல்வாதிகள், ஊடகங்களின் விவாத மேதைகள் மற்றும் பல கல்வித்துறை பொருளாதார அறிஞர்கள் ஆகியோரால் சவால்செய்ய முடியாத உண்மைகளாகப் போற்றப்பட்டு வந்திருக்கும் சுதந்திரச் சந்தை லேகியங்கள் எல்லாம் புத்திஜீவித்தனரீதியாகவும் சரி தார்மீகரீதியாகவும் சரி மதிப்பிழந்து விட்டிருக்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவு திட்டமிட்ட பொருளாதாரம் நீடிக்கவியலாதது என்பதை நிரூபித்ததாகக் கூறிய முதலாளித்துவத்தின் வக்காலத்துவாதிகள் எல்லாம் இப்போது உலகப் பொருளாதார நிலைகுலைவின் வரலாற்று முக்கியத்துவம் குறித்த விடயத்தில் நழுவுவதற்கும், இப்பொறிவு சந்தை அடிப்படையிலான இலாப அமைப்புமுறையின் தோல்வியைக் குறித்தது என்பதை மறுப்பதற்கும் - இதனை நோர்த் “புத்திஜீவித்தன இரட்டை வேடம்” என்று அழைத்தார் - நோர்த் கவனம் செலுத்தினார். அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகாலச் சரிவிலும் போருக்குப் பிந்தைய பொருளாதார அமைவின் உடன்வருகின்ற முரண்பாடுகளிலும் தான் இந்த நெருக்கடியின் வேர்கள் தேடப்பட வேண்டும் என்று நோர்த் விளக்கினார். அமெரிக்க தொழிற்துறை அடித்தளம் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆரம்ப காலகட்டங்கள் தொடங்கி போட்டிநிலை அதிகரிப்புக்கு அமெரிக்கப் பெருநிறுவனங்கள் திண்ணப்படுத்தல் (consolidation) என்ற நிகழ்முறை மூலம் பதிலிறுப்பு செய்த மிக சமீபத்திய காலகட்டங்கள் வரையிலும் அமெரிக்காவில் இணைவுகள் மற்றும் கையகப்படுத்தல்களின் வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களை இந்த விரிவுரை விரிவாகத் திறனாய்வு செய்தது. 1980களுக்குள்ளாக பங்குச் சந்தை அதிகமான ஆதிக்கப் பாத்திரத்தை ஆற்ற ஆரம்பித்தது. அத்துடன் “புதிய நிதி-செலுத்த பெருநிறுவன மாதிரியின் அடிப்படையாக ஒட்டுண்ணித்தனமான, அழிவுகரமான மற்றும் குற்றவியல் தன்மை படைத்த செயல்பாட்டு முறை உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டது.” நோர்த் நிறைவு செய்தார்: கடனால் எரியூட்டப்படுவதாக இருக்கும் அதிகமான நிதி ஊகம் என்பது நெருக்கடிக்கான காரணம் அல்ல, மாறாய் அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இருக்கும் ஆழமான வேர் கொண்ட முரண்பாடுகளின் ஒரு வெளிப்பாடே. அமெரிக்க முதலாளித்துவம் நான்கு வருடங்களுக்கு முன்பாக அது எதிர்கொண்ட பொருளாதார அழுத்தங்களுக்குப் பதிலிறுப்பு செய்ய எடுத்த அதே நடவடிக்கைகள் தான் இன்று அது எதிர்கொள்கின்ற நெருக்கடிக்கு அடித்தளங்களை தயாரித்தன. நடப்பு நெருக்கடியின் கீழமைந்திருக்கும் முரண்பாடுகளின் வரலாற்று மற்றும் உலகளாவிய தன்மையின் அதே காரணத்தால் தான், ‘நடப்பு சரிவானது குறிப்பிட்ட பொருத்தமானதொரு காலத்திற்குள்ளாக விலகி புதுப்பிக்கப்பட்ட மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவிடும், அதனுடன் கைகோர்த்ததாக வெகுஜன மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மீட்சி செய்யப்படுவதும் மேம்படுவதும் நிகழும்’ என்பதான ஒபாமா நிர்வாகத்தின் கூற்றுகள் எல்லாம் நிகழ்வுகளால் மதிப்பிழக்க நேரிடும். அமெரிக்க முதலாளித்துவத்தின் கட்டமைப்பு உருமாறியதன் சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கங்களை நோர்த் சுட்டிக் காட்டினார். முதலாளித்துவத்தின் முறிவுக்கு ஆளும் உயரடுக்கினர் 1930கள் மற்றும் 1940களில் அவர்கள் காட்டிய மிருகத்தனத்துக்கு சளைத்ததாய் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் மற்றும் இரண்டாவது தசாப்தங்களில் பதிலிறுப்பு செய்வார்கள் என்று நம்புவதற்கான முகாந்திரம் எதுவுமில்லை. பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கைச் சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் தமது நலன்களைப் பாதுகாப்பதில் சென்ற நூற்றாண்டின் தனவான்களை விடவும் கூடுதல் நாகரிகமானவர்களாயும் வன்முறைக்கு அதிகம் இடம் தராதவர்களாயும் ஆகியிருக்கிறார்கள் என்று சான்றளிக்கும் வகையில் சமகால கலாச்சாரத்தில் எதுவும் இருக்கவில்லை. முதலாளித்துவப் பொருளாதாரம் எவற்றை மேலெழச் செய்கிறதோ மற்றும் எவற்றில் அது பொதிந்துள்ளதோ அந்த வர்க்க உறவுகள் மற்றும் நலன்களில் இருந்து ஏதோவொரு மீவியற்பியல் (metaphysical) வகையில் அதன் செயல்பாட்டை பிழிந்தெடுத்துக் கொள்ள முடியாது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் சிதைவானது பரந்த செல்வத்திற்குத் தலைமையிலமைந்த ஒரு சக்திவாய்ந்த சமூகத் தொகுப்பை உருவாக்கியுள்ளது. அதன் சமூக மற்றும் அரசியல் ஆணவமானது அதன் பொருளாதார ஒட்டுண்ணித்தனத்தின் காரணமாக பூதாகரமாக்கப்படுகிறது. அதன் சொந்தக் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட திவால்நிலைகளுக்கும் பொறிவுகளுக்குமான அதன் ஆரம்பகட்ட பதிலிறுப்பில் இருந்து ஏதேனும் முடிவுக்கு வருவதாக இருந்தால், ’நெருக்கடிக்கான விலையை பரந்த மக்களின் தலையில் கட்ட வேண்டும் என்பதில் ஆளும் வர்க்கம் தீர்மானத்துடன் இருக்கிறது’ என்பதாகவே அது இருக்கும். மே மாதத்தில் நடந்த பிராந்தியக் கருத்தரங்குகளில் வழங்கிய “பொருளாதார நெருக்கடியும் அமெரிக்காவில் வர்க்க மோதலின் மறுஎழுச்சியும்” என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையில் நோர்த் நெருக்கடியின் மூலங்களை மீண்டும் மீளாய்வு செய்தார். அதில் அமெரிக்காவில் வர்க்க மோதலின் வரலாற்றின் மீது குறிப்பான முக்கியத்துவம் அளித்தார். அமெரிக்க ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது 30 ஆண்டு கால இடைவிடாத தாக்குதல்களை தொடர்ந்து வந்திருந்ததில், 1920களுக்குப் பின் கண்டிராத மட்டங்களுக்கு சமூக ஏற்றத்தாழ்வின் மிகப்பெரும் வளர்ச்சி உருவாகியிருந்தது. இருந்தபோதிலும் உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் சமூக எதிர்ப்பினை நொருக்க முனைந்த காரணத்தால் வேலைநிறுத்த நடவடிக்கையிலான ஒரு உருக்குலைவும் இதனுடன் கைகோர்த்து நிகழ்ந்தது. தொழிற்சங்கங்களின் அங்கத்தவர் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு சென்றது; அத்துடன் இச்சங்கங்களில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் தொடர்ச்சியாக ஊதிய மற்றும் நல உதவிக் குறைப்புகளை சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது; என்ற நிலையிலும் அச்சங்கங்களின் நிதிச் சொத்துகள் தொடர்ந்து வளர்ச்சி கண்டு சென்றிருந்ததை இந்த அறிக்கை திறனாய்வு செய்தது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வர்க்கப் போராட்டம் ஒடுக்கப்பட்டதும் கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதும் 1980கள், 1990கள் மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் போது கடனுடன் பிணைந்து நிதித் தொழிற்துறை பாரிய வளர்ச்சி பெற்றதுடன் தொடர்புபட்ட கொள்கைகளுக்கு ஒரு ஆதரவான சூழலை உருவாக்கின. மூலதனத்தின் பொறுப்பற்ற ஊகச் செயல்பாடுகள் மீதான அத்தனை தளைகளையும் - சமூக, பொருளாதார மற்றும் சட்டரீதியானதும் கூட - ஒடுக்குவது இந்தச் சூழலுக்கு அவசியமாக இருந்தது. சமூக மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஒரு நெடிய காலகட்டமானது சமூக மற்றும் பொருளாதார முரண்பாடுகள் பலவந்தமாகவும் செயற்கையாவும் ஒடுக்கப்பட்டதை குறித்து நிற்கிறது. இந்த முரண்பாடுகள் எந்த மட்டத்திற்கு ஒடுக்கப்பட்டன என்பது அதனைத் தொடர்ந்து வந்த நெருக்கடியின் விசையையும் தீவிரத்தையும் தீர்மானிப்பதாய் இருக்கிறது. ஆகவே நடப்பு நெருக்கடியானது வெடிப்புமிகுந்த சமூக எழுச்சிகளுக்கு வழிகோலும் என்பது எதிர்பார்க்கக் கூடியதாகும்.
ஐஸ்லாந்து நாடாளுமன்ற அவையின் முன்னால் போலிஸ் மீது முட்டைகளும் பெயிண்டும் வீசப்படுகிறது.
ஒபாமா பதவியேற்றுக் கொள்கிறார் Featured material
ஒபாமா நிர்வாகமும் உலகளாவிய சமூக எதிர்ப்புரட்சியும் WSWS ஏற்கனவே எச்சரித்திருந்ததைப் போல நெருக்கடிக்கான உலக அரசாங்கங்களின் பதிலிறுப்பு “சமூகரீதியாக நடுநிலையானதாக” இல்லை, மாறாக நிதிப் பிரபுத்துவத்தின் நலன்களை நிபந்தனையின்றிப் பாதுகாப்பதாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவில் இது முழு உண்மையாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பலிகொடுத்து அமெரிக்க நிதியமைப்பு முறையை முட்டுக் கொடுப்பதில் மூர்க்கமாக இறங்குவதே வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கான ஒபாமா நிர்வாகத்தின் பதிலிறுப்பாக இருந்தது. ஒபாமா ஒரு வர்க்கப் போருக்கான அமைச்சர் குழுவை ஒன்றுசேர்த்தார். தனது பதவியின் ஆரம்ப உரையிலேயே நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை விலை செலுத்தச் செய்யும் வண்ணம் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை வலியுறுத்தினார். புதிய அரசாங்கமானது புஷ் நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்ட 700 பில்லியன் டாலர் அளவுக்கான வங்கிப் பிணையெடுப்புகளை மேலும் விரிவுபடுத்தியது. ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிலான நாடாளுமன்றமும் இதற்கு ஆதரவளித்தது. கோடைக்குள்ளாக வங்கிப் பிணையெடுப்புக்கென ஒதுக்கப்படுவதான தொகை 23 டிரில்லியன் டாலரைத் தொடும் என மதிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் அமல்படுத்தப்பட்டிருந்த ஏராளமான வேலைத்திட்டங்களின் வரிசையும் இதில் அடங்கும். வோல் ஸ்ட்ரீட்டுக்கு அளித்த கையளிப்புகளுடன் ஒப்பிட்டால் மிகக் குறைவான அத்துடன் ஒரேயொரு நேரடியான வேலை-உருவாக்க நடவடிக்கையும் கூட இல்லாத ஒரு ஊக்குவிப்புத் தொகுப்பை ஒபாமா அறிமுகம் செய்து நாடாளுமன்றத்தின் வழியாக முன் தள்ளினார். இதில் வணிகங்களுக்கான வரி விலக்குகளும் மானியங்களும் அத்துடன் உடனடி திவால்நிலைக்கு முகம் கொடுத்து நின்ற மாநில அரசாங்கங்களுக்கான ஒரு சொற்ப உதவித் தொகையும் இடம்பெற்றிருந்தன. பிணையெடுக்கப்பட்ட நிறுவனங்களில் உயரதிகாரிகளுக்கான சம்பள வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும் என்று உருவான அழைப்புகளை ஒபாமா தவிர்த்து விட்டார், இதன்மூலம் ஸ்தாபகரீதியாகவும் சரி தனிநபர் ரீதியாகவும் சரி வோல் ஸ்ட்ரீட் உயரடுக்கினரின் நலன்களை அவர் நிச்சயம் பாதுகாப்பார் என்கிற உறுதியை அவர்கள் பெற்றனர். புதிய நிர்வாகமானது பெருஞ்செல்வந்தர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் நெருக்கடிக்கான விலையை தொழிலாள வர்க்கத்தை செலுத்தச் செய்வதற்கும் அவசியமான அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்கவிருக்கிறது என்கிற உறுதி வோல் ஸ்டீரிட்டுக்குக் கிட்டிய காரணத்தால் மார்ச்சின் மத்தியில் பங்குச் சந்தையில் ஒரு எழுச்சி இருந்தது. முக்கியமான சமூக வேலைத்திட்டங்களின் செலவைக் குறைப்பதற்கான முயற்சிகள் இதனுடன் கைகோர்த்து நிகழ்ந்தன. காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மருந்து உற்பத்தியாளர்களுக்கும் ஒரு பெரும் ஏமாற்றுவாய்ப்பாக அமைந்த ஒபாமாவின் மோசடியானதும் பிற்போக்குத்தனமானதுமான சுகாதாரப் பராமரிப்புச் சட்டம் இதில் முன்னிலையில் நின்றது. ஆசிரியர்களின் ஊதியங்களையும் வேலைநிலைமைகளையும் சரியச் செய்வதற்கும், அரசுப் பள்ளிகளை மூடி விட்டு கூடுதலான சார்ட்டர் (charter) பள்ளிகளை திறப்பதற்கும், அத்துடன் கட்டாய சோதனையை அதிகப்படுத்துவதற்கும் அரசுகளை ஊக்குவிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்ட “உச்சிக்கு விரைவோம்”(Race to Top)திட்டத்தின் மூலம் புதிய நிர்வாகமானது பொதுக் கல்வியின் மீதான புஷ்ஷின் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியது. பங்குகள் விலையுயர்ந்தது போலவே, வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்தது. வோல் ஸ்டீரீட்டின் செல்வங்களுக்கும் தொழிலாள வர்க்கத்தின் செல்வங்களுக்கும் இடையிலிருந்த இணக்கமின்மை பெருகிச் சென்றதை 2009 ஆம் ஆண்டு எடுத்துக் காட்டியது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் இடைநில்லாமல் ஏறிச் சென்று அக்டோபரில் உத்தியோகபூர்வ உயர்ந்தபட்ச அளவாக 10.2 சதவீதத்தைத் தொட்டது. உழைப்புக்குரிய ஊதியம் கிட்டாதவர்களையும் ஆர்வம்குன்றச் செய்யப்பட்டவர்களையும் கணக்கில் கொண்டால் உண்மையான விகிதம் 17 சதவீதத்திற்கு நெருக்கமாய் இருந்தது. தொழிலாள வர்க்கப் பகுதிகளில் வறுமையும் சமூகத் துயரமும் மேலும் ஆழமடைந்தது. வேலை அழைப்புகளும் சரி அல்லது இலவச சுகாதாரப் பராமரிப்பு சேவைகளும் சரி எங்கு தென்பட்டாலும் அங்கு ஆயிரக்கணக்கான பேர் நிர்க்கதியாய் அணிவகுத்ததில் இந்நிலைமை மிக அப்பட்டமாக பிரதிபலித்தது. அமெரிக்க வாகன உற்பத்தித் துறை “மீட்பில்” அமெரிக்க தொழிலாளர்களின் ஊதியங்களை வெட்டுவதற்கு பச்சைக் கொடி காட்டியதே ஒபாமா நிர்வாகத்தினால் தொடங்கி வைக்கப்பட்ட சமூக எதிர்ப்புரட்சியின் உச்சப் புள்ளியாகும். ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லர் ஆகிய நிறுவனங்களில் எப்பிரிவிலும் புதிதாக வேலையில் அமர்த்தப்படுபவர்களுக்கு 50 சதவீத சம்பள வெட்டினை வெள்ளை மாளிகை வலியுறுத்தியது. வாகன உற்பத்தித் தொழிலாளர்களிடம் இருந்து இன்னும் பெரிய “தியாகங்களை” அவசியமாக்கும் ஒரு திட்டத்திற்கு ஆதரவாக பிறிதொரு உத்தேச வாகன உற்பத்தித் துறை பிணையெடுப்புத் திட்டத்தை நிராகரித்ததாக ஒபாமா அறிவித்த சமயத்தில், WSWS எழுதியது: ஒபாமா பிரதிநிதித்துவம் செய்கின்ற முதலீட்டு வங்கியாளர்கள் பொருளாதார நெருக்கடியை அமெரிக்காவில் வர்க்க உறவுகளை அடிப்படையாக மறுகட்டமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மூன்று-தசாப்த தாக்குதலின் உச்சகட்டமாக, தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை மேலும் தீவிரப்படுத்துகின்ற வகையில் தொழிலாளர்களின் முந்தைய தலைமுறைகளால் வென்றெடுக்கப்பட்ட நல உதவிகளில் மிஞ்சியிருக்கும் எச்சசொச்சங்களையும் அவர்கள் அழித்துக் கொண்டிருக்கின்றனர். வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்களின் மீதான தாக்குதல் நாடு முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் தொழிலாளர்களுக்கு எதிரான இதேபோன்ற தாக்குதல்களுக்கு முன்முனையாக ஆகவிருக்கிறது. வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்கள் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லரில் ஏற்பாடாகியிருந்த ஒப்பந்தங்களை நிராகரிக்கவும், ஐக்கிய வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் சங்கத்தில் (UAW)இருந்து முறித்துக் கொள்ளவும், அத்துடன் தமது வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களைப் பாதுகாப்பதில் முன்நிற்கும் வகையில் சுயாதீனமான சாமானியத் தொழிலாளர் கமிட்டிகளை அமைக்கவும் SEP மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. GM தொழிலாளர்களின் ஒப்பந்த உறுதிப்படுத்தல் கூட்டங்களில் பரவலாக விநியோகம் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில், SEP, தொழிலாளர்கள் நூறாயிரக்கணக்கில் வேலைகளைத் தொலைத்திருக்கின்ற அதேநேரத்தில் தொழிற்சங்கத்திடம் 1.2 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்துகள் திரண்டிருந்ததை சுட்டிக் காட்டியது. UAW பெயரளவில் தான் ஒரு தொழிற்சங்கம். பல தசாப்தக் காட்டிக்கொடுப்புகளின் உச்சம் தான் ஒரு வணிக ஸ்தாபனமாக அது உருமாற்றம் பெற்றது, அதனை “UAW, Inc." என்று கூறுதல் இன்னும் பொருத்தம். இந்த ஊழலடைந்த அடுக்கின் நலன்கள் சாமானியத் தொழிலாளர்களின் நலன்களுடன் சம்பந்தமில்லாதவை, அத்துடன் குரோதமானவை. கனடாவில் இருந்த GM, ஃபோர்டு மற்றும் கிறைஸ்லர் தொழிற்சாலைகளிலும் அந்த நாட்டின் தொழிலாளர்கள் மீதும் இதேபோன்ற ஊதிய வெட்டுகளும் நல உதவி வெட்டுகளும் அமலாக்கப்பட்டன. UAW போலவே கனடா வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் சங்கமும் இதற்கு ஒத்துழைத்தது. ஊதியங்களிலும் நல உதவிகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 20 டாலருக்கும் அதிகமென்ற அளவில் (பெடரல் கன்சர்வேடிவ் மற்றும் ஓண்டாரியோவின் லிபரல் அரசாங்கங்களின் ஆதரவுடனான) இந்த வெட்டுகள் இருந்தன. கனடாவின் தொழிலாளர்கள் இந்த வெட்டுகளை நிராகரிப்பதோடு அமெரிக்க வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலைகளின் சாமானியத் தொழிலாளர்களுடன் இணைந்து ஒரு எல்லை-கடந்த போராட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று கனடாவின் SEP பிரச்சாரம் செய்தது. GM இன் ஜேர்மன் துணைநிறுவனமான ஓப்பலும் இதே மிரட்டல் தந்திரத்தையே பயன்படுத்தியது. தொழிலாளர்கள் கணிசமான வேலை மற்றும் ஊதிய வெட்டுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஆலைகளை மூடவிருப்பதாக அல்லது ஒட்டுமொத்தமாக கலைத்து விட இருப்பதாக அது அச்சுறுத்தியது. ஐரோப்பாவின் வாகன உற்பத்தித் திறனில் சுமார் 30 சதவீதம் வெட்டப்பட வேண்டியிருப்பதாக அது அறிவித்தது. தொழிலாளர்கள் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் GM மற்றும் பிற வாகன உற்பத்தித் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுவதற்கு மாறாக தமது “சொந்த” தேசிய நிறுவனத்திற்காக தியாகம் செய்வதற்கு ஜேர்மனியின் மிகப்பெரும் தொழிற்சங்கமான IG Metall தொழிலாளர்களை மிரட்டியது. வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்களும் GM, ஃபோர்டு, கிறைஸ்லர் மற்றும் பிற கார் உற்பத்தி நிறுவனங்களை அடியொற்றி நடந்து கொண்டன. பிரிட்டனில் ஊதிய வெட்டுகளுக்கான கோரிக்கைகளால் விஸ்டியன் ஆலை ஒன்றில் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து வெஸ்டியஸ் பிளேட்ஸ் காற்றாலை டர்பைன் தொழிற்சாலையிலும் தொழிலாளர்கள் இதேபோன்றதொரு நடவடிக்கையில் இறங்கினர். தென் கொரியாவில் சசாங்யோங் மோட்டார்ஸ் நிறுவனம் உலக நெருக்கடியால் மோசமாகப் பாதிக்கப்பட்டு திவால் நிலைக்கு விண்ணப்பம் செய்ததோடு 2,600 தொழிலாளர்களை, அதாவது மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாக அறிவித்ததை அடுத்து மே மாதத்தில் அந்நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நிறுவனத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். 77 நாள் உள்ளிருப்புப் போராட்டத்தின் போது தொழிலாளர்களுக்கும் போலிசுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்தன. ஜனாதிபதி லீ மியுங்-பேக் அரசாங்கத்தினால் களமிறக்கப்பட்ட 4,000 கலகத் தடுப்பு போலிசார் இப்போராட்டத்தை வன்முறையான அடக்குமுறை மூலமாக நசுக்கினர். இப்போராட்டத்தின் அரசியல் படிப்பினைகளைத் உள்ளீர்த்துக்கொண்ட ஒரு முன்னோக்கில் WSWS விளக்கியது: சசாங்யோங் உள்ளிருப்புப் போராட்டத்தின் மீதான அரச ஒடுக்குமுறையானது, ஒரு வேலைக்கான அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதென்பது ஒரு புரட்சிகரப் பிரச்சினை என்பதை எடுத்துக் காட்டுகிறது. முதலாளித்துவத்தின் ஆழமடையும் நெருக்கடிக்கு இடையில் தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படையான உரிமைகள் பெரு வணிகத்தின் கோரிக்கைகளுக்கு இணக்கமற்றதாக இருக்கிறது. வேலைகளைப் பாதுகாத்தான எந்தப் போராட்டமும் வெறும் தனிப்பட்டவொரு நிறுவனத்திற்கு எதிராக மட்டுமன்றி, அரசாங்கத்திற்கு எதிராக, பெருநிறுவன உயரடுக்கிற்கு எதிராக மற்றும் அதன் தொழிற்சங்க உடந்தையாளர்களுக்கு எதிராகவுமான ஒரு அரசியல் போராட்டத்தை அவசியமாக்குகிறது. உலகெங்குமான வாகனத் தயாரிப்புத் துறை தொழிலாளர்களது போராட்டங்களுடன் சேர்த்து, முதலாளித்துவ நெருக்கடிக்கு தொழிலாளர்களை விலை செலுத்தச் செய்வதற்கு முனைந்த முதலாளிகள் மற்றும் அரசாங்கங்களினால் தூண்டப்பட்ட இன்னும் பல முக்கியமான வர்க்கப் போராட்டங்கள் குறித்த செய்திகளையும் WSWS வெளியிட்டது, அப்போராட்டங்களுக்கு ஒரு தலைமை கொடுக்கப் போராடியது. அவற்றில் சில: அயர்லாந்தில் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து பெரும் போராட்டங்கள் வெடித்தன. வாட்டர்போர்டு கிறிஸ்டல் ஒர்க்ஸ் நிறுவன மூடலை எதிர்த்து அதன் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அத்துடன் இலையுதிர் காலத்தில் நடந்த ஒரு சக்திவாய்ந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் உச்சமாக 300,000 பொதுத்துறை ஊழியர்கள் ஒருநாள் வேலைப்புறக்கணிப்பு செய்தனர். பிரிட்டனில் நடைபெற்ற லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தத்தில், “பிரிட்டிஷ் வேலைகள் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கே” என்ற சுலோகத்தைக் கொண்டு போராட்டத்தை ஒரு தேசியவாத திசையில் திருப்புவதற்கு முனைந்த தொழிற்சங்கங்கள் மற்றும் “இடது” குழுக்களின் முயற்சிகளை SEP எதிர்த்தது. இலண்டன் நிலவறைத் தொழிலாளர்கள், அஞ்சல் தொழிலாளர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் குப்பை வண்டித் தொழிலாளர்கள் உட்பட பிரிட்டனில் பொதுத் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தங்கள் நடந்தன. அஞ்சல் தொழிலாளர்களின் போராட்டம் நீண்ட நாள் நீடித்தது. தொடர்ச்சியான பல போராட்டங்களை அத்தொழிலாளர்கள் நடத்தினர். இறுதியில் அஞ்சலகத் தொழிற்சங்கங்களில் கணிசமான செல்வாக்கு செலுத்திய “இடது” குழுக்களின் ஆதரவுடன் இந்த வேலைநிறுத்தங்கள் இறுதியில் காட்டிக் கொடுக்கப்பட்டன. டொரோன்டோ மற்றும் ஓன்டாரியொவின் வின்ட்சர் ஆகிய இடங்களில் கனடாவின் மாநகராட்சித் தொழிலாளர்கள் நெடிய போராட்டங்களை நடத்தினர். வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் ஒரு இடத்தில் ஊடக அவதூறுகளுக்கு முகம் கொடுத்தனர், இன்னொரு இடத்திலோ வேலைநிறுத்த முறிப்பாளர்கள் பணியமர்த்தப்படக் கண்டனர்.
Featured material
காஸா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் மற்றும் இலங்கையிலான போர் புஷ் நிர்வாகத்திற்கான போர்-எதிர்ப்பு மாற்றினை ஒபாமா பிரதிநிதித்துவப்படுத்தியதாக எழுந்திருந்த வெகுஜனப் பிரமைகள் தான் ஒபாமாவின் தேர்தல் வெற்றிக்கு மிகப்பெரும் காரணமாக அமைந்தன. புதிய நிர்வாகத்தின் குணவியல்பானது பதவியேற்பதற்கு முன்பாகவேயே வெளிப்பட்டு விட்டது - காஸா பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய நாசகரத் தாக்குதலை ஜனாதிபதி புஷ் மற்றும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஒபாமா இருவருமே ஆதரித்தனர். நான்கு வாரங்கள் நடந்த மிருகத்தனமான ஒருதரப்பான வன்முறையில் இஸ்ரேலியப் படையினர் சிறு எண்ணிக்கையிலான படைவீரர்களை மட்டும் பலிகொடுத்து 1,300க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்திருந்தனர். போரைக் கண்டனம் செய்யும் ஒரு அறிக்கையில், WSWS எழுதியது: மத்தியத் தரைக்கடலுக்கும் பாலைவனத்திற்கும் இடையில் வெள்ளித் துண்டை வெட்டி வைத்தது போல், பெருநகர டெட்ராயிட்டின் அளவுக்கான ஒரு பகுதிக்குள்ளாக ஒன்றரை மில்லியன் மக்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். வடக்கிலும் கிழக்கிலும் நகர விடாமல் அவர்களை இஸ்ரேலியத் துருப்புகள் தடுத்துக் கொண்டு நிற்கின்றன. தெற்கில் நகர விடாமல் எகிப்து சர்வாதிகாரி முபாரக்கின் துருப்புகள் நிற்கின்றன. ஜனவரி 10 அன்று “காஸா நெருக்கடிக்கான ஒரு சோசலிசப் பதில்” என்ற ஒரு அறிக்கையை WSWS வெளியிட்டது. இந்த அறிக்கை காஸா மீதான இஸ்ரேலியப் போரை எதிர்த்து நடைபெற்ற சர்வதேச ஆர்ப்பாட்டங்களில் விநியோகம் செய்யப்பட்டது. இஸ்ரேலிய அரசின் கொள்கைகளைக் கொண்டு ஒட்டுமொத்த இஸ்ரேலிய மக்களின் கொள்கைகளை மதிப்பிடுவதற்கான முயற்சி எதனையும் நிராகரித்த இந்த அறிக்கை, இஸ்ரேலுக்கு உள்ளாக இருந்த தீவிரமான ஏற்றத்தாழ்வினை சுட்டிக்காட்டியது. இஸ்ரேலிய சமூகம் ஆழமான சமூகப் பிளவுகளால் பின்னப்பட்டிருக்கிறது. அதன் அரசாங்கம் முழுக்க ஊழலடைந்து விட்டிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையில் காஸா பகுதியில் தாக்குதல் நடத்துவதன் நோக்கங்களில் ஒன்று இஸ்ரேலுக்கு உள்ளே இருக்கும் கடுமையான சமூகப் பதட்டங்களில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதாகும். சியோனிசம் யூத மக்களுக்கு ஒரு பொறியாக நிரூபணமாகி இருக்கிறது. யூதப் பிரச்சினையானது மத அடிப்படையில் ஒரு முதலாளித்துவ தேசிய அரசினை உருவாக்குவதன் மூலமாக தீர்க்கப்பட முடியாது என்பதை சோசலிஸ்டுகள் எப்போதும் எச்சரித்து வந்திருக்கின்றனர். யூத விரோதத்தையும் யூதர்கள் தண்டிக்கப்படுவதையும் வெல்வது என்பது முதலாளித்துவ வர்க்க சமூகத்தைக் கைவிடுவதுடனும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் கதியுடனும் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளது. ஜேர்மன் தொழிலாளர்’ இயக்கத்தை நாஜிக்கள் முன்கூட்டி அழித்து விட்டதால் மட்டுமே யூதப் படுகொலை என்பது சாத்தியமானது. அடுத்து வந்த ஒரு வருணனை, மத்தியக் கிழக்கிலான பல்வேறு அரபு முதலாளித்துவ ஆட்சிகள், அவை முடியாட்சிகளாய் இருந்தாலும் சரி அல்லது இராணுவம் இயக்கிய போலிஸ் அரசுகளானாலும் சரி, ஆற்றிய துரோகப் பாத்திரத்தை அம்பலப்படுத்தியது. ஒபாமா வெள்ளை மாளிகைக்குள் காலடி எடுத்து வைத்த சில வாரங்களிலேயே ஆப்கானிஸ்தான் போரைத் தீவிரப்படுத்தத் தொடங்கி விட்டார். அங்கு 2001 அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பின்னர் அமர்த்தப்பட்ட ஹமீத் கர்சாயின் கைப்பாவை அரசாங்கம் உருக்குலைந்து கொண்டிருந்தது. பிப்ரவரி மாதத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 17,000 கூடுதல் துருப்புகளை அனுப்பினார் ஒபாமா. இதனைத் தொடர்ந்து மார்ச்சில் இன்னுமொரு 4,000 துருப்புகள் அனுப்பப்பட்டன. நவம்பர் பிற்பகுதியில் கூடுதலாய் 30,000 துருப்புகளுடனான இன்னும் பெரிய “அதிகரிப்பு” ஒன்றையும் அறிவித்தார். இது அங்கிருந்த மொத்த அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையை 100,000 ஆக உயர்த்தியது. டிசம்பர் 1 அன்று தொலைக்காட்சியில் தேசிய அளவில் ஒளிபரப்பான ஒரு உரைக்கு WSWS பதிலளித்தது: போரை, பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு தற்காப்பாக சித்தரிப்பதற்காக 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களை ஒபாமா இழுப்பது ஒரு மோசடியாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மூலோபாயத்தின் நலன்களின் பேரில் எண்ணெய்வளம் செறிந்த மத்திய ஆசியாவில் மேலாதிக்க நிலையைத் தக்கவைத்துக் கொள்வது தான் ஆப்கானிஸ்தானிலான அமெரிக்க ஆக்கிரமிப்பு போருக்கு உண்மையான காரணமாகும். இது வெளியுறவுக் கொள்கைக்கான ஸ்தாபகத்தில் முன்னரே பரவலாக விவாதிக்கப்பட்டதே ஆகும். ஆப்கானிஸ்தானிலான குவிப்புடன் சேர்ந்து பாகிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்ட கெரில்லா படைகளது தளங்களும் பாதுகாப்பான இடங்களும் அமைந்திருந்த எல்லை தாண்டிய இலக்குகள் மீதும் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டன. இந்த இலக்குகளுக்கு எதிராக ஆளில்லா விமானத் தாக்குதல்களை தொடங்கியது புஷ் நிர்வாகம் தான் என்ற போதிலும், இத்தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படும் வகையில் - இவர்களில் பலரும் அப்பாவிக் கிராமவாசிகள் - இத்தாக்குதலின் வீச்சையும் வேகத்தையும் பெருமளவில் ஒபாமா விரிவுபடுத்தினார். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிலான போர் அதிகரிப்பின் தாக்கங்களை இந்தியா, சீனா, ரஷ்யா, மத்திய ஆசியா, காகசஸ் மற்றும் ஈரான் உள்ளிட்ட பரந்ததொரு பரப்பில் அதிகரித்த பதட்டங்கள் மற்றும் போர் வாய்ப்புகளின் பொருளில் WSWS பகுப்பாய்வு செய்தது. புஷ் நிர்வாகத்தில் இருந்து தக்கவைக்கப்பட்டிருந்த பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ், மற்றும் வெளியுறவுச் செயலரான ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் சூழ ஒபாமா மத்திய ஆசியாவிற்கான ஒரு புதிய இராணுவ மூலோபாயத்தை வெளியிட்டதற்குப் பின்னர், அதன் அபாயகரமான தாக்கங்கள் குறித்து WSWS ஆசிரியர் குழு ஒரு அறிக்கை விடுத்தது. ஆப்கானிஸ்தான் களத்தில் போர் அதிகரிப்பானது வெகுஜனமக்களுக்கு இன்னும் அதிகமான பாதிப்பையும் இரத்தவெள்ளத்தையும் கொண்டுவந்திருக்கிறது. ஒபாமா ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கத் தளபதியான ஜெனரல் டேவிட் மெக்கிர்னனை மாற்றி விட்டு கிளர்ச்சித் தடுப்பு நிபுணரான ஜெனரல் ஸ்டான்லி மெக்கிரிஸ்டலைக் கொண்டு இடம்பெயர்த்திருக்கிறார். இவரது சிறப்புத் துருப்புகள் ஈராக்கில் அவை நடத்திய படுகொலைப் பிரச்சாரத்தின் ஆக்ரோஷத்திற்காய் அறியப்பட்டவை. கூடுதல் அமெரிக்கத் துருப்புகள் வந்துசேர அனுமதிக்கும் விதமாக திட்டமிடப்பட்டிருந்த ஜனாதிபதித் தேர்தலை கர்சாய் ஆட்சி ஒத்திவைத்தது. இறுதியில் அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்புப் படைகளின் துப்பாக்கிகளின் கீழ் ஆகஸ்ட் மாதத்தில் ஒருவழியாக தேர்தல் நடந்து முடிந்த போது அது ஒரு முழுமோசடியாக இருந்தது. எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தகுதியிழக்கச் செய்யப்படுவது, கள்ள வாக்குகள் போடப்படுவது, வாக்காளர்கள் அதிகம் பங்குபெறாமை, மற்றும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்ட ஒரு இறுதிப்போட்டி புறக்கணிக்கப்பட்டமை ஆகியவற்றால் இறுதியாக கர்சாய் அமெரிக்க ஆசிகளுடன் இரண்டாவது தடவையாக பதவியில் அமர்த்தப்பட்டார். ஆப்கானிஸ்தான் நெருக்கடியில் ஒரு புதிய அம்சமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதன்முறையாக ஜேர்மன் இராணுவப் படைகள் ஒரு முக்கியமான தாக்குதல் பாத்திரத்திற்கு எழுச்சி கண்டன. இது செப்டம்பரில் நடந்த குண்டுஸ் படுகொலைக்குக் காரணமானது. இதில் ஒரு ஜேர்மன் அதிகாரியால் உத்தரவிடப்பட்ட ஒரு வான்வழித் தாக்குதலில் 119 பேர் கொல்லப்பட்டனர். புஷ்ஷிற்கும் ஈராக் பிரதமரான நூரி அல்-மாலிகிக்கும் இடையில் 2008 ஆம் ஆண்டில் கையெழுத்தான படைகளின் நிலை ஒப்பந்தத்தின் படி நிர்ணயம் செய்யப்பட்ட கால அளவிற்கு ஒபாமா இசைவளித்தார் என்பதால் அந்த ஆண்டு முழுவதிலும் அமெரிக்கா ஈராக் மீதான தனது ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பராமரித்தது. ஒரேயொரு படைவீரரின் திரும்பும் காலத்தையும் கூட ஒபாமா துரிதப்படுத்தவில்லை. ”ஈராக், மறக்கப்பட்ட போர்” என்ற தலைப்பிலான ஒரு முன்னோக்கில் WSWS கருத்திட்டது: ஒப்பீட்டளவிலான நடப்பு ஸ்திரநிலையானது ஈராக் மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பால் ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு - போர் அதிகரிப்பு ஆண்டுகள் இதில் மிக வன்முறையானவையாக இருந்தன - இரத்த வெள்ளத்தில் கடுமையான அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் எட்டப்பட்டது. 1.2 மில்லியன் ஈராக்கியர்கள் வரை தமது இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள், அத்துடன் 4,500 வரையான அமெரிக்க மற்றும் பிற ஆக்கிரமிப்புத் துருப்புகளும் உயிரிழந்துள்ளனர். ஒரு சமூகம் அடித்து நொறுக்கப்பட்டு மீளாத்துயரத்துக்கு ஆட்படுத்தப்பட்டு, வகுப்புவாதப் பிளவுகளால் சிதறடிக்கப்பட்டு அதன்பின்னும் வெகுஜன மக்களின் மிக அடிப்படையான சமூகத் தேவைகளையும் கூட பூர்த்தி செய்ய இலாயக்கற்றதாக இருப்பது தான் அமெரிக்க ஆக்கிரமிப்பின் அடையாளச்சுவடாக இருக்கிறது. ஜூன் மாதத்திற்குள்ளாக, அமெரிக்கத் துருப்புகள் முக்கிய ஈராக்கிய நகரங்களில் இருந்து திரும்பின. ஆகஸ்ட் மாத இறுதிக்குள்ளாக சண்டையிடும் துருப்புகள் திரும்பிப் பெறப்பட்டு அவற்றில் பலவும் ஆப்கானிஸ்தானில் அமர்த்தப்பட்டன. முக்கியமான எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்காவால் அமர்த்தப்பட்ட மாலிகி ஆட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதை அடுத்து ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் உண்மையான நோக்கம் அந்நாட்டின் பரந்த எண்ணெய் வள ஆதாரங்களைக் கைப்பற்றுவது தான், என்பது தோலுரிந்தது. நவம்பரில் எக்சான்-மொபில் நிறுவனம் மிகப்பெரும் மேற்கு குர்னா எண்ணெய் வயலை இயக்க ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து போரினால் நேரடி ஆதாயமடைந்த முதல் அமெரிக்க எண்ணெய் பெருநிறுவனமானது. ஈராக்கில் நிலைமைகள் மிகவும் ஸ்திரமற்றதாகவும் வன்முறை மிகுந்ததாகவுமே இன்னும் இருந்தன என்பதை பாக்தாத்தில் நடந்த தொடர்ச்சியான கார் குண்டுவெடிப்புகளும், ஈராக் முதலாளித்துவத்திற்குள் இருந்த சுன்னி, ஷியா, குர்தீஷ் ஆகிய போட்டி சக்திகளுக்கு இடையே நடந்த கடுமையான அரசியல் உட்சண்டைகளும் - இவை நாட்டை உள்நாட்டுப் போரின் ஒரு புதிய சுற்றின் விளிம்புக்குக் கொண்டுவந்தன - எடுத்துக் காட்டின. அமெரிக்காவால் இயக்கப்பட்ட தற்கொலைப் படைகள் ஈராக் வாழ்க்கையில் மிகச் சக்திவாய்ந்த காரணியாக தொடர்ந்தன. ஈராக்கில் இருந்து திரும்பிய வீரர்களின் எண்ணிக்கையை விட ஆப்கானிஸ்தான் போர் அதிகரிப்பில் ஈடுபடுத்தப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருந்ததால், அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக, ஒபாமா நிர்வாகம் அந்நியப் போர்களில் ஈடுபட்டிருந்த துருப்புகளின் எண்ணிக்கையை தனக்கு முன்னிருந்த நிர்வாகத்தை விடவும் அதிகமாக்கியிருந்தது. ஆயினும் இது, கூடுதல் போர்களைச் செலுத்துவதற்கு வேறெந்தவொரு மனிதரையும் விட அதிக பொறுப்புக் கூறத்தக்க தனிமனிதரான ஜனாதிபதி ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதில் இருந்து நோர்வே நாடாளுமன்றக் குழுவினைத் தடுத்து விடவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய தலைவரின் பக்கம் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் நிற்பதை அறிவிப்பதே இந்த விருது என “நோபல் போர் பரிசு” என்ற தலைப்பிலான ஒரு முன்னோக்கில் WSWS விளக்கியது: :இந்தப் போர்களை அங்கீகரிப்பதன் மூலமாகவும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பன்முகத்தன்மை திரும்பிவிட்டதென விளம்பரப்படுத்துவதன் மூலமாகவும் ஐரோப்பிய சக்திகள் இராணுவவாதத்தை நோக்கிய தமது சொந்த திரும்புதலுக்கு அங்கீகாரம் பெறவும் தமது சொந்த மக்களிடையே போருக்கு நிலவுகின்ற எதிர்ப்பை ஒடுக்குவதற்குமான ஒரு வழிமுறையைக் காண்கின்றன. ஒபாமாவின் நோபல் பரிசானது உலகின் மிகப்பெரும் இராணுவ சக்தி அமைதியை நோக்கி மீள்கின்ற நம்பிக்கையைக் குறிப்பதற்கு வெகு அப்பால் போருக்கான ஒரு அங்கீகாரமாகவே இருக்கிறது என்பதோடு ’உலக முதலாளித்துவத்தின் தீவிரமடையும் நெருக்கடியானது மறுஎழுச்சி காணும் இராணுவவாதத்திற்கும் விரிவடையும் சர்வதேச மோதல்களின் அச்சுறுத்தலுக்குமான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது’ என்பதற்கான ஒரு எச்சரிக்கையாகவும் சேவை செய்கிறது. புஷ் நிர்வாகத்தின் கீழ் இழைக்கப்பட்ட சித்திரவதை மற்றும் பிற போர்க் குற்றங்களுக்கு ஏறக்குறைய ஒட்டுமொத்தமான பொதுமன்னிப்பு என்று சொல்லத்தக்க ஒன்றை அளித்ததன் மூலம் ஒபாமா நிர்வாகமானது நோபல் பரிசுக்கு முந்தைய மாதங்களிலியே தனது உண்மையான முகத்தைக் காட்டி விட்டிருந்தது. பயங்கரவாத சந்தேகத்திற்கு உரியவர்களை சித்திரவதைக்கு எளிதான நாடுகளுக்குக் கொண்டு செல்கின்ற விடயத்தைப் பொறுத்தவரை வெள்ளை மாளிகையானது அதே அடிப்படைக் கொள்கையைத் தான் பின்பற்றியது என்பது ஆகஸ்டில் தெரிந்து விட்டது. குவாண்டனமோ குடாவின் வதைமுகாமை மூடுவதாக தேர்தல் பிரச்சாரத்தில் ஒபாமா கொடுத்த வாக்குறுதி ஒரு விலாசமில்லாத கடிதமாகவே தொடர்ந்தது. 2009 இல் இலங்கையின் நீண்டகால உள்நாட்டு யுத்தம் என்ற இன்னுமொரு இராணுவ மோதல் ஒரு இரத்தம்தோய்ந்த முடிவுக்கு வந்தது. வசந்த காலத்தில் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷாவின் அரசாங்கம் தொடுத்த ஒரு இராணுவத் தாக்குதல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE)அமைப்பினை அழித்தது, நூறாயிரக்கணக்கிலான தமிழ் மக்களை இடம்பெயரச் செய்தது, சுமார் 40,000 பேர் வரை கொன்றொழித்தது. இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி, தமிழ் மக்களுக்கு எதிரான போரை தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிற அதேநேரத்தில் LTTE ஏற்றுக் கொண்டிருந்த தேசிய பிரிவினைவாத முன்னோக்கையும் எதிர்த்தது. இந்த முன்னோக்கின் மூலமாக தமிழ் முதலாளித்துவம் தமிழ் தொழிலாளர்களை, தான் சொந்தமாக சுரண்டுவதற்கு உகந்த நிலைமைகளை ஸ்தாபிப்பதற்கு முனைந்தது. மார்ச் மாதத்தில் SEP விடுத்த ஒரு அறிக்கை அரசாங்கத் தாக்குதலைக் கண்டனம் செய்ததோடு ஒரு மாற்று முன்னோக்கையும் முன்வைத்தது: ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கம் ஒடுக்கப்பட்ட வெகுஜன மக்களை தனக்குப் பின்னால் அணிதிரட்ட முடியும் என்பதோடு சமூக ஏற்றத்தாழ்வு, வகுப்புவாதம் மற்றும் போர் ஆகியவற்றின் உண்மையான மூலமான இலாப அமைப்புமுறைக்கு எதிரான ஒரு தாக்குதலை முன்நிறுத்த முடியும். இலங்கை ஆட்சியால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களைக் கண்டனம் செய்கின்ற ஒரு அறிக்கையில், SEP பொதுச் செயலரான விஜே டயஸ் அறிவித்தார்: இறுதித் தாக்குதல் விடுதலை செய்கின்ற நடவடிக்கையாக இருப்பதெற்கெல்லாம் வெகு அப்பால், இராணுவமானது அப்பாவிப் பொதுமக்களை முள்வேலியும் ஆயுதமேந்திய காவலர்களும் சூழ்ந்த அழுக்கடைந்த அடைப்பு முகாம்களுக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. அவர்கள் எல்லாம் அகதிகள் போல் நடத்தப்படாமல் போர்க் கைதிகளைப் போல நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இராஜபக்ஷாவின் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது சிங்கள ஆளும் உயரடுக்கின் அரசியல் அதிகாரத்தையும் சிறப்பதிகாரங்களையும் வலுவூட்டுவதற்கான ஒரு போராகும். இந்த மோதலில் ஒட்டுமொத்தமாக நாட்டின் தமிழ் பேசும் சிறுபான்மையினர் எதிரியாக கருதப்படுகின்றனர். LTTE இறுதியாக அழிக்கப்பட்டதற்குப் பின்னர் வெளியான ஒரு மேலதிக விபரக் கட்டுரையில், டயஸ் எழுதினார்: அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்களில் இருந்து விடுக்கப்படும் வெறுப்பூட்டும் சீண்டல்களை அனைத்துத் தொழிலாளர்களும் நிராகரிக்க வேண்டும். SEP தொழிலாளர்களுக்குச் சொல்வதெல்லாம், இது உங்களது போருமல்ல, இது உங்களின் வெற்றியுமல்ல என்பதையே. வெற்றி ஊர்வலங்களின் பின்புறத்தில், தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார மற்றும் சமூக நிலையின் மீது மிருகத்தனமான புதியதொரு தாக்குதலுக்கு தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நாங்கள் எச்சரிக்கிறோம்.
Featured material
ஈரானின் “பசுமைப் புரட்சி”யும் பிற அரசியல் அபிவிருத்திகளும் ஈரானில் ஜூன் 12 அன்று நடந்த ஜனாதிபதித் தேர்தல் இஸ்லாமியக் குடியரசின் அரசியல் உயரடுக்கிற்குள் இருந்த கடுமையான பிளவினை எடுத்துக் காட்டியது. அதிகாரத்தில் இருந்து வந்த ஜனாதிபதி மக்மூத் அகமதிநிஜாத் பல போட்டியாளர்களையும் வென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டார். தெஹ்ரானில், முக்கியமாக எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தமது பிரதான ஆதரவுக் களத்தைக் கொண்டிருந்த நடுத்தர-வர்க்க மற்றும் உயர்-நடுத்தர வர்க்கப் பகுதிகளில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஈரானில் வெகுஜனக் கிளர்ச்சியாகச் சொல்லப்பட்ட ஒன்று மேற்கத்திய ஊடகங்களால் “பசுமைப் புரட்சி”யாக ஊக்குவிப்பு செய்யப்பட்டதன் சந்தேகத்திற்கிடமான அம்சங்களை WSWS விமர்சனம் செய்தது. WSWS இந்த நெருக்கடிக்கான தனது அணுகுமுறையில், ஈரானியப் புரட்சி குறித்தும் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் அடிப்படைப் படிப்பினைகள், எல்லாவற்றிற்கும் மேலாய் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் ஏதோவொரு கன்னையின் பின்னால் அணிதிரள்வதற்குப் பதிலாக ஒரு சுயாதீனமான அரசியல் நிலைப்பாட்டை தழுவிக் கொள்வதற்கான அவசியம், குறித்துமான ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வை அடித்தளமாகக் கொண்டது. ஈரான் நெருக்கடியை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் தமது சொந்த ஏகாதிபத்திய நலன்களை முன்தள்ளுவதற்குப் பயன்படுத்தின. கிழக்கு ஐரோப்பாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் தனக்கு விருப்பமான ஆட்சிகளை அதிகாரத்தில் அமர்த்துவதற்கு பல்வேறு “வண்ணப் புரட்சிகளுக்கும்” ஆதரவளித்த சமயத்தைப் போலவே இப்போதும் ஏகாதிபத்திய பிரச்சார எந்திரமானது, ஈரானின் கடுமையாகப் பிளவுபட்டிருந்த அரசியல் ஸ்தாபகத்தில் தனக்கு உகப்பான பிரிவுக்கு ஆதரவை ஒழுங்கமைப்பதற்காக “மனித உரிமை”ப் பிரச்சாரத்தைப் பயன்படுத்தியது. WSWS விளக்கியதைப் போல, ஒபாமா நிர்வாகத்திற்கும், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் மற்றும் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் தி நேஷன் போன்ற அவற்றின் தாராளவாத ஆதரவாளர்களுக்கும் ஈரானுக்கு எதிரான பிரச்சாரத்தில் புதிய கூட்டாளிகள் இப்போது கிடைத்திருந்தார்கள். புஷ் நிர்வாகத்தை எதிர்த்து வந்திருந்த ஆனால் இப்போது ஒபாமாவின் பின்னால் அணிவகுத்திருந்த நடுத்தர வர்க்க “இடது” குழுக்களே அவர்கள். இது பின்னர் லிபியா மற்றும் சிரியாவிலான போர்களுக்கு அவர்கள் அளித்த ஆதரவில் நகலெடுக்கப்பட இருந்தது. WSWS எழுதியது: அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் இருக்கக் கூடிய “முற்போக்கு” மற்றும் “இடது” அமைப்புகளின் ஏறக்குறைய ஒட்டுமொத்தக் குழாமுமே, தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் மிர் ஹோசைன் முசாவியின் தலைமையிலான எதிர்க் கட்சி இயக்கத்திற்கான ஆதரவில் தத்தமது சொந்த அரசாங்கங்களுக்குப் பின்னால் அணிவகுப்பதற்கான தருணமாக ஜூன் 12 ஈரானியத் தேர்தல் ஆகியிருக்கிறது. இந்தக் குழுக்கள் எல்லாமே தேர்தல் களவாடப்பட்டு இருக்கிறது என்பதான முசாவியின் கூற்றுகளை விமர்சனமற்றுத் தழுவிக் கொண்டிருக்கின்றன என்பதோடு எதிர்க்கட்சியின் வலது-சாரி பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளையும், அதன் தலைமையின் முதலாளித்துவத் தன்மையையும், அதன் பிரதான சமூக அடித்தளம் நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளைக் கொண்டதாய் இருக்கிறது என்ற உண்மையையும் உதாசீனப்படுத்தியுள்ளன. தேர்தலைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஈரானியத் தொழிலாளர்களில் பாரிய எண்ணிக்கையிலானோர் கலந்து கொள்ளவில்லை என்பதும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய அரசாங்கங்கள் எதிர்க்கட்சிக்குப் பின்னால் சீராக அணிவகுத்திருக்கின்றன என்பதும் மௌசாவியினது இயக்கத்தின் ஜனநாயக மற்றும் முற்போக்கு குணாம்சங்களாக சொல்லப்படுபவை குறித்து இரண்டாவது கண்ணோட்டத்திற்கு இடமில்லாமல் செய்து விடுகின்றன. ஈரானில் நிகழ்வுகளுக்கு பதிலிறுப்பாய் மலர்ந்திருக்கக் கூடியதைப் போன்று பரந்த மக்கள் அடிப்படையிலான ஒரு அரசியல் நிகழ்வானது குறிப்பிட்ட சமூக அடுக்குகளின் அரசியல் நோக்குநிலையில் ஏற்பட்டிருக்கும் கூர்மையான நகர்வுகளைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. இந்த விடயத்தில், ஒரு சமயத்தில் இடது-சாரி பொதுக் கருத்தில் மேலாதிக்கம் செலுத்திய நடுத்தர-வர்க்க அடுக்குகள் அரசியல் வலதின் முகாமுக்குள் நகர்ந்திருப்பதை இது பிரதிபலிக்கிறது. ஈரானிய நெருக்கடி பல மாதங்களுக்கு நீடித்த காரணத்தால், முசாவியைச் சுற்றி ஒன்றுதிரண்டிருந்த நடுத்தர வர்க்க ஆர்ப்பாட்ட இயக்கத்தின் திசை இயக்கமானது மேலும் மேலும் தெளிவானது. இந்நிகழ்முறையில், சோசலிஸ்ட் அல்லது மார்க்சிஸ்ட் என முகமூடி தரித்து வந்திருக்கக் கூடிய பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA), மற்றும் இங்கிலாந்தின் சர்வதேச மார்க்சிசப் போக்கு உள்ளிட்ட பல்வேறு போலி-இடது அமைப்புகள் அம்பலப்பட்டன. 2009 பிப்ரவரியில் பிரான்சில், நீண்டகால பப்லோவாத அமைப்பான LCR (Ligue Communiste Révolutionnare)தன்னை ”புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி”க்குள்ளாக (NPA)கலைத்துக் கொண்டது. இப்புதிய அமைப்பானது ட்ரொட்ஸ்கிசத்துடனான எந்தத் தொடர்பையும் வெளிப்படையாக மறுதலித்தது. மாறாக, மதிப்பிழந்து விட்டிருந்த தொழிற்சங்கங்கள் மற்றும் பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி உள்ளிட்ட அது “முதலாளித்துவ விரோதமானவை” என்று கருதிய நடுத்தர வர்க்க மற்றும் முதலாளித்துவ “இடது” அமைப்புகள் அத்தனையையும் “ஐக்கியப்படுத்துவதே” தனது நோக்கங்களில் ஒன்று என அது தெரிவித்தது. வரலாறு மற்றும் அரசியல் முன்னோக்கு ஆகிய விடயங்களில் NPA முற்றிலும் உணர்ச்சியற்று இருந்ததோடு இடதாயினும் வலதாயினும் அரசியல் கூறுகளின் அத்தனை வகைகளுடனும் தான் கூட்டுச் சேர்வதற்கு வசதியாக இந்தக் கேள்விகளின் மீதான அலட்சியத்தையும் வளர்த்தெடுத்தது என்பதை WSWS சுட்டிக்காட்டியது. பொருளாதார நெருக்கடி மோசமடைந்து கொண்டிருந்த நிலையிலும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எதிர்ப்பு பெருகியதற்கு மத்தியிலும் வெகுஜனக் கோபத்தை பாதுகாப்பான பாதைகளுக்கு திசைதிருப்புவதற்கு ஆளும் உயரடுக்கிடம் இருந்த ஆழமான தேவையையே NPA இன் ஸ்தாபகம் பிரதிபலித்தது. ”தொழிலாள வர்க்கத்தின் இடது திசையிலான அரசியல் அபிவிருத்தியின் மீதான ஒரு வேகத்தடை”யாகவே NPA செயல்படுகிறது என்பதை WSWS விளக்கியது. ஆசியாவில் 2009 இல் முக்கியமான தேர்தல்கள் பல நடந்தன. ஜனவரியில், பங்களாதேஷில் அவாமி லீக் தலைமையிலான 17 கட்சிக் கூட்டணி தேசியத் தேர்தலில் வெற்றி பெற்று பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி மற்றும் அதன் இஸ்லாமிய அடிப்படைவாதக் கூட்டாளிகளை படுதோல்வியடையச் செய்தது. இராணுவ ஆதரவுடனான முந்தைய ஆட்சிக்கு இருந்த பரவலான மக்கள் வெறுப்பை இது வெளிப்படுத்தியது. இந்தியாவில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வலுப்பெற்றது. ஸ்ராலினிசத் தலைமையிலான இடது முன்னணி மக்களவையில் தனது உறுப்பினர் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் இழந்து மிகப்பெரும் இழப்பை சம்பாதித்தது. இதில் மேற்கு வங்காளத்தில் ஸ்ராலினிஸ்டுகளின் படுதோல்வி குறிப்பிடத்தக்கதாகும். இம்மாநிலத்தில் ஸ்ராலினிசக் கட்டுப்பாட்டு மாநில அரசாங்கம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும் மற்ற பெரு வணிக அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் விவசாய நிலங்கள் பறிமுதல் செய்யப்படுவதை எதிர்த்த விவசாயிகளை ஒடுக்குவதற்காக அரச வன்முறை மற்றும் குண்டர்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட “முதலீட்டாளர் ஆதரவு”க் கொள்கைகளை சபதம்போட்டுப் பின்பற்றி வந்தது. தேர்தலுக்குப் பிந்தைய சற்று காலத்திற்கெல்லாம் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசாங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட்)கட்சியை “பயங்கரவாத” அமைப்பு என்று கூறித் தடைசெய்தது. கனிமவள அகழ்வு மற்றும் சுரங்கத் திட்டங்களுக்காக பழங்குடி மக்களிடம் இருந்து அவர்களது பூர்விக நிலங்களைக் கைப்பற்றும் நோக்கமுடையதாக இருந்த ஜனநாயக விரோத ”பயங்கரவாத-எதிர்ப்பு” நடவடிக்கைகளுக்கு CPI மற்றும் CPM ஸ்ராலினிஸ்டுகள் ஆதரவு இருந்தது. இதனையடுத்து மாவோயிசக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஒரு முக்கியமான இராணுவத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதற்கென 100,000க்கும் அதிகமான துருப்புகள் அணிதிரட்டப்பட்டன. ஜப்பானில், ஆகஸ்டில் நடந்த தேசியத் தேர்தலில் பிரம்மாண்டமான சமூகக் கோபம் வெளிப்பாடு கண்டது. ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சி(LDP)அது ஸ்தாபிக்கப்பட்ட 1955 இல் இருந்தான இரண்டாவது முறையாக, படுதோல்வியடைந்து அதிகாரத்தில் இருந்து வெளியேறும் நிலை தோன்றியது. LDP இன் முன்னாள் உறுப்பினர்களும் சோசலிஸ்ட் கட்சியும் ஸ்ராலினிச ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தான ஆதரவுடன் உருவாக்கிய ஒரு கலவையான DLP(ஜனநாயக தாராளவாதக் கட்சி)யுகியோ ஹடோயாமா தலைமையில் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கியது. WSWS இன் ஒரு முன்னோக்கு விளக்கியது: 1930களுக்குப் பிந்தைய ஒரு மிகப்பெரும் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் LDP இன் இந்த அவமானகரமான தேர்தல் நிலைகுலைவானது, ஜப்பானில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில், அரசியல் என்பது வரையறைக்குள் இல்லாத சூறாவளிச் சூழல்களுக்குள் காலடி எடுத்து வைக்கிறது என்பதன் இன்னொரு அறிகுறி ஆகும். செப்டம்பரில் ஜேர்மனியில் கூட்டரசாங்க நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. பெரும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த இரண்டு பெரும் கட்சிகளான சான்சலர் அங்கேலா மேர்கெலின் வலதுசாரி கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியமும் சரி சமூக ஜனநாயகக் கட்சியும் சரி உலக நெருக்கடி ஜேர்மனி மற்றும் ஐரோப்பா மீது என்ன தாக்கத்தைக் கொண்டிருந்தது என்பதான தீவிர விவாதம் எதனையும் தவிர்த்து விட்டனர். தேர்தலில் மேர்கெல் மற்றும் CDUவுக்கும் அவருக்கு விருப்பமான வலது-சாரிக் கூட்டணிக் கூட்டாளியான சுதந்திர ஜனநாயகக் கட்சிக்கும்(FDP)வெற்றி கிட்டி அவர்களுக்கு பெரும்பான்மை கிடைத்ததை அடுத்து பெரும் கூட்டணி முடிவுக்கு வந்தது. உண்மையில் பார்த்தால் வலது-சாரிக் கட்சிகளுக்கு வாக்குகள் குறைந்து விட்டிருந்தன, ஆனால் சமூக ஜனநாயகக் கட்சியின் வாக்குகள் அதனினும் சரிந்து வெறும் 23 சதவீதத்திற்கு அமிழ்ந்து விட்டிருந்தது. SPDயும் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் மக்களிடம் இருந்து ஆழமாக அந்நியப்பட்டிருந்ததை இது பிரதிபலித்தது என்றபோதும் பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சி உள்ளிட ஒரு அரசியல் மாற்றினைப் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகளுக்கு இது ஆதாயமாக அமைந்தது. மத்திய அமெரிக்காவில் ஹோண்டுராஸில் வெடித்த ஒரு முக்கிய நெருக்கடியில், ஜூன் 28 அன்று பனிப்போர் காலத்திற்குப் பிந்தைய முதல் லத்தீன் அமெரிக்க இராணுவக் கவிழ்ப்பு நடந்தேறியது. ஒரு கன்சர்வேடிவாக ஆட்சியில் அமர்ந்திருந்த போதும் ஹோண்டுராஸின் சிறிய பொருளாதார மற்றும் அரசியல் உயரடுக்கிற்குக் கோபமூட்டுகின்ற சில கொள்கைகளைத் தழுவிக் கொண்ட காரணத்தால் ஜனாதிபதி மனுவேல் செலயா அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டு கோஸ்டா ரிகாவிற்கு கட்டாயமாக நாடுகடத்தப்பட்டார். அமெரிக்க வெளியுறவுத் துறை இந்த கவிழ்ப்பை வெளியில் விமர்சனம் செய்தபோதும் திரைக்குப் பின்னால் தனது ஓசையற்ற ஆதரவை வழங்கியது. அமெரிக்க ஆதரவுடனான “மத்தியஸ்தம்” செலயாவின் வெளியேற்றத்துக்கு விரைவிலேயே அங்கீகாரம் வழங்கியது. ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாகவே, செலயா தனது வெளியேற்றத்துக்கான “சீண்டலை” அவரே செய்தார் என அமெரிக்க வெளியுறவுத் துறை அவர் மீதே பழிபோட்டது. இந்தக் கவிழ்ப்புக்கான பாரிய வெகுஜன எதிர்ப்பு பல மாதங்களுக்குத் தொடர்ந்தது. இராணுவத்தால் அமர்த்தப்பட்டிருந்த புதிய ஆட்சி இதற்கு ஒடுக்குமுறையைக் கொண்டு பதிலிறுப்பு செய்தது. வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி ஹோண்டுராஸ்க்கு இரகசியமாகத் திரும்பி பிரேசில் தூதரகத்தில் தஞ்சமடைந்த போது, இந்த ஆட்சி ஒரு முற்றுகை நிலையை நிறுவியது. செலயாவுக்கும் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தப் போராட்டத்தையும் நடத்தும் திறனோ விருப்பமோ இல்லாதிருந்தது. நவம்பர் 29 அன்று நடந்த ஒரு வாக்கெடுப்பில் போர்ஃபிரியோ லோபோவின் தலைமையிலான ஒரு புதிய வலது-சாரி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வாக்களிப்பு விகிதம் 50 சதவீதத்திற்கும் குறைவாய் இருந்தது. கனடாவின் கன்சர்வேடிவ் அரசாங்கமும் ஜனநாயக-விரோத வழிமுறைகளைப் பயன்படுத்தியது. ஒரு அரசியல் நெருக்கடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஒரு ஆண்டு காலத்தில் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தை மூடியது. 2008 டிசம்பரில் கன்சர்வேடிவ்கள் நடத்திய ஒரு “அரசியல்சட்டரீதியான கவிழ்ப்பு நடவடிக்கை”யில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை தோற்கடிப்பதைத் தவிர்ப்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்-ஜெனரலைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்பட்டது. பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானில் நடந்த சித்திரவதையில் கனடா உடந்தையாக இருந்ததா என்பது குறித்த நாடாளுமன்ற விசாரணைகளைத் தடம்புரளச் செய்வது கன்சர்வேடிவ்களின் நோக்கமாக இருந்தது. அரசாங்கமும் கனேடிய ஆயுதப் படையினரும்(CAF)கைதிகளை சித்திரவதை செய்வதற்காக அவர்களை ஆப்கான் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர் என்று ஆப்கானிஸ்தானில் இருந்த கனடாவின் முன்னாள் உயர் தூதரக அதிகாரி சாட்சியமளித்ததிற்குப் பின்னர், பிரதமர் ஸ்டீபன் ஹார்பரும் உயர் இராணுவத் தலைமையும் பொய்களையும் அவதூறுகளையும் கொண்டு இதற்குப் பதிலிறுப்பு செய்தனர்.
Featured material
அனைத்துலகக் குழுவின் பணி பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரான ரோபர்ட் சேர்விஸ் எழுதிய லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைச்சரிதம் ஒரு அப்பட்டமான பொய்மைப்படுத்தலாக இருந்ததை அம்பலப்படுத்தியமை 2009 இல் ICFI செய்த பணிகளில் மிக முக்கியமானதாக இருந்தது. சேர்விஸின் வசைமாரி குறித்து WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் எழுதிய மதிப்பாய்வு மார்க்சிசத்தின் மீதும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் வரலாற்றுப் போராட்டத்தின் மீதும் அவதூறு பூசுவதற்கான இந்த சமீபத்திய முயற்சிக்கான மறுப்பாக அமைந்திருந்தது. நோர்த் எழுதினார்: ட்ரொட்ஸ்கி: ஒரு வாழ்க்கைச் சரிதம் என்ற இந்தப் புத்தகம் கொச்சையானதும் புண்படுத்தும் வகையிலுமான புத்தகம் ஆகும். வரலாற்றுத் தகமைக்கான மிகக் குறைந்த பட்ச அவசியங்களை கொஞ்சமும் மதிக்காமல் இப்புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சேர்விஸின் “ஆராய்ச்சி” (அப்படி ஒருவர் அதை அழைக்க விரும்பும் பட்சத்தில்) மோசமான நம்பிக்கையுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. அவர் எழுதிய ட்ரொட்ஸ்கி, வரலாறல்ல மாறாக ஆளுமைப் படுகொலையின் பயிற்சி. ட்ரொட்ஸ்கியின் தனிநபர் குணநலன்கள் மீது தாக்குதல் தொடுப்பதில் கவனம் செலுத்தி அவர் சொன்ன உண்மைக் கண்ணோட்டங்களை உதாசீனப்படுத்துதல் என்ற சேர்விஸின் வேலைமுறையை நோர்த் அம்பலப்படுத்தினார். வரலாற்று விடயங்களிலும் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை குறித்தும் சேர்விசுக்கு குறைந்த புரிதலே இருந்தது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் இந்தப் புத்தகம் தகவல் பிழைகள் நிரம்பியதாக இருந்தது. தான் எழுதிய வரலாற்றுச்சரிதம் “முழுநீளமானது” என்று சேர்விஸ் சுயதிருப்தியுடன் விவரித்துக் கொண்டபோதும், ட்ரொட்ஸ்கியின் முக்கியமான அரசியல் படைப்புகளில் இருந்து ஏறக்குறைய எந்தவொரு பிழிந்தெடுத்த சாறுகளோ, அல்லது போதுமான சுருக்கவுரைகளோ கிடையாது. 35 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு ட்ரொட்ஸ்கியின் அரசியல் வேலைக்கான அடித்தளங்களை உருவாக்கியிருந்த நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் குறித்தோ அடிக்கோள்கள் குறித்தோ கூட சேர்விஸ் திறனாய்வு செய்யவில்லை. சீனா, ஜேர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் குறித்தும் கூட ட்ரொட்ஸ்கி எழுதிக் குவித்திருந்த விடயங்கள் குறித்து அரிதாகவும் குறிப்பிடப்படக் கூட இல்லை.... இருபதாம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவரை அவரது இலக்கியப் படைப்புகளுக்கு அவசியமான கவனம் செலுத்தாமல் அவர் குறித்த ஒரு “முழு-நீள வாழ்க்கைச்சரித”த்தை எழுதுவது எப்படி சாத்தியம்? ட்ரொட்ஸ்கி தனது யூத மூலங்களை காட்டிக் கொள்ளாமல் இருக்க முனைந்தார் என்பதான சேர்விஸின் கூற்றினை நோர்த் மறுத்ததோடு யூதவிரோத மனோநிலைக்கு விண்ணப்பிக்கும் வகையில் எப்படி இந்த வாதம் பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதை விரிவாக எடுத்துக் காட்டினார். சேர்விஸுக்கான இந்தப் பதிலுக்குப் பின் இலண்டனில் நடந்த ஒரு முக்கியமான பொதுக் கூட்டத்தில் “வரலாற்றாசிரியர்கள் ‘பெரும் பொய்’க்கு சேவை செய்கிறார்கள்: பேராசிரியர் ரோபர்ட் சேர்விஸ் எழுதிய ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைச் சரிதம் மீதான ஒரு ஆய்வு” என்ற ஒரு உரையை நோர்த் வழங்கினார். இந்த உரை இவ்வாறு நிறைவுற்றது: லெவ் டேவிடோவிட்ச் ட்ரொட்ஸ்கியும் [ட்ரொட்ஸ்கியின் முதல் மனைவியான] அலெக்சாண்ட்ரா லவோவ்னா சொகோலோவ்ஸ்கயாவும் அசாதாரணமான மனிதர்கள். மனிதகுல மேம்பாட்டிற்காக எல்லையற்ற சுய-தியாகத்தைச் செய்யும் திறன் படைத்திருந்த ஒரு புரட்சிகரத் தலைமுறையின் பிரதிநிதிகள். அத்தகைய மரகதங்களை அவமதிப்புகள் மூலமும், பொய்மைப்படுத்தல்கள் மூலமும், அவதூறுகள் மூலமும் தனது பரிதாபகரமான மட்டத்திற்கு கீழிழுத்து வருவதில் வெற்றி பெற முடியும் என்று பேராசிரியர் சேர்விஸ் மற்றும் அவரைப் போன்றவர்கள் நம்புவது எத்தனை பரிதாபகரமானது. இந்தத் திறனாய்வும் விரிவுரையும் சேர்விஸின் வழிமுறைகளை உலுக்கியெடுக்கும் அம்பலப்படுத்தல்களைக் கொண்டிருந்த அதே சமயத்தில், ட்ரொட்ஸ்கி இறந்து சுமார் 70 வருடங்களுக்கு பின்னர், அவர் எதற்காகப் போராடினாரோ எதனை அடையாளப்படுத்தினாரோ அந்த புரட்சிகர முன்னோக்கினை சக்திவாய்ந்த வகையில் பாதுகாப்பதையும் கொண்டிருந்தது. அனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த மற்றும் அரசியல் பணியில் இன்னுமொரு முக்கிய பங்களிப்பாக அமைந்தது, காலஞ்சென்ற மார்க்சிச வரலாற்றாசிரியரும் சமூகவியலாளருமான வாடிம் ரோகோவின் எழுதிய ‘1937-38 ஸ்ராலினின் பயங்கரம்: சோவியத் ஒன்றியத்தின் அரசியல் இனப்படுகொலை’ (Stalin’s Terror of 1937-38: Political Genocide in the USSR) புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு வெளியிடப்பட்டதாகும். 1990க்கும் 1998இல் அவர் இறப்பதற்கும் இடையில் ரோகோவின் எழுதிய ஏழு-தொகுதிகள் கொண்ட வரலாற்றில் இது ஐந்தாவது தொகுதியாகும். ஆசிரியர் சோவியத் ஒன்றியத்திற்குள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஒரு மார்க்சிசரீதியான எதிர்ப்பாளராக இருந்துள்ளார். “ஸ்ராலினுக்குப் பிந்தைய சகாப்தத்தின் மாபெரும் சோவியத் வரலாற்றாசிரியராக கருதப்பட தகுதிபடைத்தவர்”. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து சோசலிசத்தின் மீதும் ரஷ்யப் புரட்சியின் மீது தொடுக்கப்பட்ட கம்யூனிச விரோதத் தாக்குதல்களுக்கு எதிரியாக இருந்த ரோகோவின் 61 வயதில் அகால மரணமடைவதற்கு முந்தைய ஆண்டுகளில் அனைத்துலகக் குழுவுடன் சுமூகமான உரையாடல் நடத்தி வந்ததோடு நெருக்கமாக ஒத்துழைத்தும் வந்திருந்தார். அனைத்துலகக் குழுவின் பிரிவுகள், இந்தத் தத்துவார்த்த மற்றும் வரலாற்று வேலையுடன் இணைந்து, தமது சோசலிச வேலைத்திட்டத்தை உலகெங்கிலுமான உழைக்கும் மக்களின் பரந்த பிரிவுகளிடையே கொண்டுசெல்வதற்கான பிரச்சாரங்களையும் நடத்தின. இலங்கையில் இந்த நோக்கத்திற்கென மாகாண மற்றும் தேசிய அளவிலான தேர்தல்களில் தலையீடு செய்த சோசலிச சமத்துவக் கட்சி ஆண்டின் ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர்கள் இடையே, மீனவ கிராமங்களில், தலைநகர் கொழும்புவில், இரயில் தொழிலாளர்கள் இடையே, தமிழ் தொழிலாளர்கள் இடையே மற்றும் பிற இடங்களில் எல்லாம் பிரச்சாரம் மேற்கொண்டது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், 2010 ஜனவரிக்கென திட்டமிடப்பட்டிருந்த தேசிய அளவிலான தேர்தலுக்கு SEP தனது பிரச்சாரத்தைத் தொடக்கியது. 2009 இலையுதிர் காலத்தில், இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இடையே ஒரு பெரும் போராட்டம் வெடித்தது. இந்த வெடிப்பு பிரதானமாக தமிழ் சிறுபான்மை மக்களில் இருந்து உருவானதாய் இருந்தது. இத்தொழிலாளர்கள் நெடுங்காலம் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டும் வந்திருந்தனர். ஊழலடைந்த அரசியல் பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிய தொழிற்சங்கங்கள் விரலுயர்த்தவும் கூட மறுத்தன. முதலாளிகள் மற்றும் அரசாங்கங்களுடன் சேர்ந்து கொண்டு தொழிற்சங்கங்கள் இன்னுமொரு வறுமை-மட்ட ஊதிய ஒப்பந்தத்தைத் திணிப்பதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருந்தன என்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை SEP எச்சரித்தது. தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்டு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணிதிரள்வதற்கு தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களை கட்சி வலியுறுத்தியது. மத்திய மலைப் பகுதியில் இருக்கும் அகரபதனவின் பல்மோரல் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் SEP இன் அரசியல் உதவியுடன் ஒரு நடவடிக்கைக் குழுவை உருவாக்கி இதற்கு பதிலிறுப்பு செய்தனர். அவர்கள் பிற தொழிலாளர்களுக்கு பின்வருமாறு விண்ணப்பம் செய்தனர்: “பொருளாதார முறிவுக்கு நாம் பொறுப்பல்ல என்கையில் அராஜகமான இலாப அமைப்புமுறையால் உருவாக்கப்பட்ட நெருக்கடிக்கு நாம் விலை செலுத்த முடியாது. வசதி படைத்த ஒரு சிலரின் தேவைகளை அல்லாமல் தொழிலாளர்களாகிய நமது தேவைகளை சோசலிசப் பாதையில் பூர்த்தி செய்கின்ற வகையில் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட ஒரு சமூகத்துக்காகப் போராட வேறெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களுடன் நாம் கைகோர்க்க வேண்டும்.” 2009 ஆரம்பத்தில், ஆஸ்திரேலியாவின் மோசமான காட்டுத்தீக்கள் குறித்த விரிவான கட்டுரைகளை WSWS எழுதியது. விக்டோரியா மாநிலத்தில் நடந்த இந்த சமூகப் பேரிடரில் 173 பேர் கொல்லப்பட்டிருந்தனர். களச் செய்திகள், உயிர் பிழைத்தவர்களுடனான நேர்காணல்கள், காட்டுத்தீ நிபுணர்கள் மற்றும் காலநிலை மாற்ற விஞ்ஞானிகளுடனான நேர்காணல்கள் மற்றும் இந்த துயரகரமான சம்பவத்தை அரசியல்ரீதியாக அரசாங்கம் இருட்டடிப்பு செய்ததன் மீதான அம்பலப்படுத்தல்கள் ஆகியவை இச்செய்திகளில் இடம்பெற்றன. ஆகஸ்ட் மாதத்தில் டெட்ராயிட் மேயர் பதவிக்கு நடந்த கட்சி-சாரா முதனிலைத் தேர்தலில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி தனது சொந்த வேட்பாளரைக் களமிறக்கியது. சோசலிச சமத்துவக் கட்சியிலும் அதன் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கிலும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான காலத்திற்கு உறுப்பினராக இருந்து வந்திருக்கக் கூடிய மாநகரத் தொழிலாளர் டி’ஆர்டக்னன் கோலியர் தான் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். இவர் மே மாதத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடக்கினார். மாநகரைச் சீரழித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிக்கு அரசியல்ரீதியாக எப்படிப் பதிலடி கொடுக்கலாம் என்பது குறித்து தொழிலாளர்களின் பரந்த பிரிவுகள் இடையே அவர் பேசினார். ஒரு காலத்தில் பாரிய தொழிற்துறை மையமாகவும், உலக வாகன உற்பத்தித் துறையின் உற்பத்தியகமாகவும் திகழ்ந்த டெட்ராயிட் சமீபத்திய தசாப்தங்களில் தனது மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் இழந்து விட்டிருந்தது. ஜேர்மனியில் கூட்டரசாங்கத் தேர்தலில் வாக்குச்சீட்டு அந்தஸ்தை PSG (Partei für Soziale Gleichheit) வென்றிருந்தது. முன்னதாக ஜூனில் நடந்த ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தனது வேட்பாளர்களுக்கு வாக்குச்சீட்டில் இடம்கிடைக்க செய்த இதேபோன்ற முயற்சியில் வெற்றி பெற்றிருந்தது. கட்சியின் தேர்தல் அறிக்கை முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியத்தை கண்டனம் செய்ததோடு ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்காகப் போராட தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது: ஐரோப்பிய ஒன்றியத்தையும், அதன் ஸ்தாபனங்களையும் மற்றும் அதன் திட்டமிடப்பட்ட அரசியல்சட்டத்தையும் PSG நிராகரிக்கிறது. நாங்கள் இதை தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து அல்லாமல் சர்வதேச சோசலிசத்தின் நிலைப்பாட்டில் இருந்து செய்கிறோம். ஒரு சோசலிச அடித்தளத்தில் மட்டுமே ஐரோப்பா முற்போக்கான வகையில் ஐக்கியப்படுதல் சாத்தியமாகும். இந்த அறிக்கை ஜேர்மனியில் ஏராளமான புலம்பெயர்ந்த மக்கள் பேசும் மொழியான துருக்கிய மொழியிலும் மற்றும் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. ஜேர்மனியின் மிகப்பெரும் மாநிலமான வடக்கு ரைன் - வெஸ்ட்பாலியா அத்துடன் பேர்லின் ஆகிய இடங்களில் PSG வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். லைய்ப்சிக், ஹாம்பேர்க், முனிச், ஃபிராங்பேர்ட் மற்றும் பிற நகரங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் 70வது ஆண்டை முன்னிட்டு ICFI ஏராளமான அரசியல் கூட்டங்களை நடத்தியது. ஐரோப்பியப் பிரிவுகள் இலண்டனில் நடத்திய ஒரு கூட்டத்தில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் இருந்து வந்திருந்த விரிவுரையாளர்கள் ஏகாதிபத்திய பற்றவைப்பையும் அது ஐரோப்பா முழுவதிலும் இருந்த தொழிலாள வர்க்கத்தின் மீது கொண்டிருந்த தாக்கத்தையும் பகுப்பாய்வு செய்தனர். கலிபோர்னியாவின் சான் டியகோ மாநில பல்கலைக்கழகத்தில் இதே தலைப்பில் டேவிட் நோர்த் ஒரு விரிவுரை வழங்கினார். சிட்னியிலும் மெல்போர்னிலும் நிக் பீம்ஸ் “இரண்டாம் உலகப் போர்: படிப்பினைகளும் எச்சரிக்கைகளும்” என்ற தலைப்பில் உரைகளை வழங்கினார். முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் மூலங்கள் மற்றும் ஏராளமான உயிர்ச்சேதங்கள் உட்பட்ட அவற்றின் விளைவுகளை மீளாய்வு செய்த பின், டேவிட் நோர்த், இன்றும் உலக முதலாளித்துவ அமைப்புமுறையை இதேபோன்ற முரண்பாடுகள் கிழித்துப் போட்டுக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார். அவர் இவ்வாறு நிறைவு செய்தார்: 95 ஆண்டுகளுக்கு முன்பாக முதலாம் உலகப் போர் தொடங்கிய பின்னர், 70 ஆண்டுகளுக்கு முன்பாக இரண்டாம் உலகப் போர் தொடங்கியதற்குப் பின்னர் எத்தனையோ மாற்றங்கள் நடந்து விட்டிருக்கின்றன என்றபோதிலும் நாம் இன்னும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆக, இன்று மனிதகுலம் முகம் கொடுக்கும் மிகப்பெரும் பிரச்சினைகள் இவை தான்: சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவிலான அபிவிருத்தி ஏகாதிபத்தியத்தின் பெருகிச் செல்லும் அழிவுகரப் போக்குகளுக்கு எதிர்செயல்பாட்டை வழங்குமா? முதலாளித்துவமும் ஏகாதிபத்திய தேசிய-அரசு அமைப்புமுறையும் மனிதகுலத்தை அதலபாதாளத்திற்குக் கொண்டுசெல்வதற்கு முன்பாக தொழிலாள வர்க்கம் போதிய அரசியல் நனவைக் காலத்தே பெற்று விடுமா? இவையெல்லாம் வெறுமனே கல்வி சார்ந்த சிந்தனைகளுக்கானவை மட்டுமே அல்ல. இந்தக் கேள்விகளை முன்வைப்பதே ஒரு செயலூக்கமான பதிலிறுப்பைக் கோரித் தான். பதில்கள் வகுப்பறைகளில் வழங்கப்படாது, மாறாக சமூக சக்திகளின் உண்மையான மோதலில் தான் வழங்கப்படும். போராட்டம் தான் விடயத்தைத் தீர்மானிக்கும். இந்தப் போராட்டத்தின் விளைபொருளானது ஒரு தீர்மானகரமான மட்டத்திற்கு, புரட்சிகர நனவின் அதாவது சோசலிச நனவின் அபிவிருத்தியால் செல்வாக்கு செலுத்தப்படுவதாக இருக்கும். ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமானது தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய அரசியல் தலைமையை அபிவிருத்தி செய்வதற்கான போராட்டத்தில் தான் தனது உயர்ந்தபட்ச வெளிப்பாட்டைக் காண்கிறது.
Featured material
கலை, விஞ்ஞானம் மற்றும் வரலாறு WSWS சர்வதேசத் திரைப்பட விழாக்கள் குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டது. அத்துடன் தி ரீடர், ஸ்லம்டாக் மில்லியனர், துல்பான், தி ஹர்ட் லாக்கர், இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ், பிரைட் ஸ்டார், வின்சியர், எ சீரியஸ் மேன் மற்றும் பல பிற படங்கள் குறித்து திறனாய்வுகளையும் வெளியிட்டது. இதில் குறிப்பாகக் கூறத்தக்க வகையில் பெத்ரோன்ட் தவர்னியே மற்றும் டிரெவர் கிரிப்த்ஸ் உள்ளிட்ட உலக திரைப்பட மற்றும் நாடகத் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களின் நேர்காணல்கள் ஏராளமாய் வெளியிடப்பட்டன. கலைப் பிரிவின் ஆசிரியரான டேவிட் வால்ஷ் திரைப்பட வரலாறு குறித்த தனது ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டார். 1950களின் ஹாலிவுட் ஒதுக்கிவைப்பு பட்டியல் குறித்தும், ஓர்சன் வெலஸ் தொழில்வாழ்க்கை குறித்துமான அவரது கட்டுரைகள் இடம்பெற்றன. நினைவஞ்சலிக் கட்டுரைகளில் பிரிட்டிஷ் நாடகாசிரியரான ஹரோல்டு பிண்டருக்கான நினைவஞ்சலியும் அமெரிக்க நாவலாசிரியரான ஜான் உப்டிக்கின் தொழில்வாழ்க்கை குறித்த ஒரு மதிப்பீடும் இடம்பெற்றன. ஜனவரி மாதத்தில், ஜோன் ஆடம்ஸ் மற்றும் அமெரிக்க புரட்சி குறித்து HBO இல் வந்த ஒரு முக்கியமான தொலைக்காட்சி தொடரை WSWS திறனாய்வு செய்தது. “கதைநாயகரின் வீட்டு வாழ்க்கையையும் (குறிப்பாக அவரது அற்புதமான மனைவி அபிகெய்ல் உடனான அவரது உறவு) பொது வாழ்க்கையையும் சித்திரப்படுத்தி, புரட்சிகர நனவும் அமெரிக்கா எத்தகையதொரு தேசமாக ஆகவிருக்கிறது என்பதிலான உள்முக மோதலும் பெருகியதைப் படம்பிடித்துக் காட்டுவதில்” இத்தொடர் தேறியிருக்கிறது. செப்டம்பரில் திரைப்பட இயக்குநர் ரோமன் போலன்ஸ்கி ஸ்விஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதில் எழுந்த பிரச்சினைகளுக்கு WSWS குறிப்பான கவனத்தைச் செலுத்தியது. போலந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளது இரட்டைக் குடியுரிமை கொண்டவரும் யூதப்படுகொலையில் தப்பி உயிர்பிழைத்தவருமான போலன்ஸ்கி, 32 வருடங்களுக்கு முன்பாக ஒரு சிறுமியுடன் சட்டவிரோதமாகப் பாலுறவு கொண்டதாகக் கூறப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட அச்சுறுத்தப்பட்டார். லிபரல் மற்றும் போலி-இடது சூழலில் இருந்து போலன்ஸ்கிக்கு எதிராக நடத்தப்பட்ட பிற்போக்குத்தனமான பிரச்சாரத்தை WSWS எதிர்த்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை மீண்டும் எழுப்புவதற்கான முயற்சிகளுக்கு நியூயோர்க் டைம்ஸும், முதலாளித்துவ பெண்ணியவாதிகளும் மற்றும் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு போன்ற போலி-இடதுகளும் ஆதரவளித்தனர். தாராளவாதிகளும் “இடது” வேடதாரிகளும் போலன்ஸ்கி அமெரிக்காவில் இருந்து தப்பியோட நேர்ந்த சூழ்நிலைகளை - பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்த ஒரு நீதிபதி வாதிக்கும் பிரதிவாதிக்கும் இடையிலான ஒரு சமரச ஒப்பந்தத்தை (plea agreement) முறித்துப் போடும் தனது எண்ணத்தை சமிக்கை செய்து விட்டிருந்தார் - கவனத்தில் கொள்ள மறுத்தனர். சூரிச்சில் இரண்டு மாதங்கள் போலன்ஸ்கி சிறைவாசம் இருந்த பின் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதன்பின் ஸ்விஸ் அதிகாரிகள் நாடுகடத்தலைத் தொடர வேண்டாம் என முடிவு செய்தனர். இந்த நிகழ்வுகளின் சமயத்தில் WSWS, போலன்ஸ்கியின் தொழில்வாழ்வைத் திறனாய்வு செய்ததோடு அவருக்கு எதிரான பிரச்சாரத்தை, அவரது சொந்த அனுபவங்கள் மற்றும் அந்த அனுபவங்கள் அவரது படைப்பில் எப்படி வெளிப்பாடு கண்டன என்ற உட்பொருளுக்குள்ளாக நிறுத்தியது. அறிவியலின் வரலாறு உட்பட அறிவியல்களின் அபிவிருத்திகள் குறித்த WSWS செய்திகள் தொடர்ந்து அதிகமான அளவில் வெளியாகின. தொல்லுயிரியல் மற்றும் மனிதப் பரிணாம வளர்ச்சி ஆகிய துறைகளிலான பல கட்டுரைகளும் இதில் இடம்பெற்றன. ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் சேவை குறித்த செய்திகளையும் WSWS வெளியிட்டது. கலிலியோவின் மிகப் பிரபலமான கண்டுபிடிப்புகளின் 400வது ஆண்டு, முதல்முதலாக மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்ததன் 40வது ஆண்டு ஆகியவற்றை ஒட்டிய திறனாய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றன. சார்லஸ் டார்வின் இருநூறாவது பிறந்ததினத்தை ஒட்டி டார்வினின் மாபெரும் உழைப்புக்கும் அவரது சமகாலத்தின் மகத்தான மனிதர் காரல் மார்க்ஸுக்கும் இடையிலிருந்த தொடர்பு குறித்த ஒரு பகுப்பாய்வுக் கட்டுரை இடம்பெற்றது. சுற்றுச்சூழல் பிரிவில், “மார்க்சிசம், சோசலிசம் மற்றும் சூழல் மாற்றம்” என்கிற தலைப்பில் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுக் கூட்டங்களில் வழங்கப்பட்ட இரண்டு முக்கியமான விரிவுரைகளை WSWS வெளியிட்டது. தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றில் தொடங்கி அமெரிக்க உள்நாட்டுப் போர் முதல் மிக சமீபத்திய 20 ஆம் நூற்றாண்டு அபிவிருத்திகள் வரை, வரலாற்று விடயங்களுக்கு WSWS அதிகமான கவனம் கொடுத்தது. “வரலாற்றில் இந்த வாரம்” பகுதி அறிமுகப்படுத்தப்பட்டதும் இதில் அடங்கும். 1934 ஆம் ஆண்டில் மினபோலிஸ், டொலெடோ மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த பொது வேலைநிறுத்தங்கள், 1886இல் சிக்காகோவில் நடந்த ஹேமார்க்கெட் படுகொலை, அடிமைமுறை ஒழிப்புப் போராளியான ஜான் பிரவுன் ஹார்பர்’ஸ் ஃபெரி நகரில் இராணுவக்கிடங்கைக் கைப்பற்ற முயற்சி செய்த நாளின் 150வது ஆண்டு, ஸ்டாலின்-ஹிட்லர் ஒப்பந்தம் மற்றும் இரண்டாவது உலகப் போரது தொடக்கத்தின் 70வது ஆண்டுதினம் ஆகியவற்றை ஒட்டியான கட்டுரைகள் வெளிவந்தன. 1925-1927 சீனப் புரட்சியின் துயரம், சீன ஸ்ராலினிச அதிகாரத்துவம் நடத்திய தியானென்மென் சதுக்கப் படுகொலையின் 20வது ஆண்டுதினம், பேர்லின் சுவர் வீழ்ந்த 20வது ஆண்டுதினம், சீனப் புரட்சியின் 60வது ஆண்டுதினம், கியூபப் புரட்சியின் 50வது ஆண்டுதினம் மற்றும் பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்களது வேலைநிறுத்தத்தின் 25 வது ஆண்டு ஆகியவற்றை ஒட்டி வெளியான கட்டுரைகளும் முக்கியமானவை.
HBO இன் ஜோன் ஆடம்ஸ் தொடரில் போல் ஜியாமெட்டியும் (ஆடம்ஸாக, இடப்பக்கத்தில் நிற்பவர்) ஜோர்ஜ் வாஷிங்டனாக டேவிட் மோர்ஸும். Featured material
|