WSWS : Tamil : நூலகம்
பதினைந்தாவது ஆண்டு தினம்

உலக சோசலிச வலைத் தளத்தின் பதினைந்து வருடங்கள்: 1998-2013

உலக சோசலிச வலைத் தளத்தின் 15 வது ஆண்டு நிறைவுக்கு வாசகர் வாழ்த்துக்கள்
உலக சோசலிச வலைத் தளம் 1998
உலக சோசலிச வலைத் தளம் 1999
உலக சோசலிச வலைத் தளம் 2000
உலக சோசலிச வலைத் தளம் 2001
உலக சோசலிச வலைத் தளம் 2002
உலக சோசலிச வலைத் தளம் 2003
உலக சோசலிச வலைத் தளம் 2004
உலக சோசலிச வலைத் தளம 2005
உலக சோசலிச வலைத் தளம 2006
உலக சோசலிச வலைத் தளம 2007
உலக சோசலிச வலைத் தளம 2008
உலக சோசலிச வலைத் தளம 2009

Year in Review: 2007

மீளாய்வு ஆண்டு: 2007

அமெரிக்காவிலும் சரி சர்வதேச அளவிலும் சரி, இராணுவவாதத்தின் வளர்ச்சியை பழைய அரசியல் கட்சிகள் மூலமாகவும் முதலாளித்துவ அரச எந்திரத்தின் மூலமாகவும் எதிர்த்துப் போராடுவது என்பது சாத்தியமற்றது என்பதை 2007 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் எடுத்துக் காட்டின. எப்படி உலக மக்கள் கருத்தை மதிக்காமல் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ்ஷும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரும் 2003 இல் போரைத் தொடுத்தனரோ, அதேபோல 2006 நவம்பரில் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட போதும் புஷ் 2007 இல் போரைத் தீவிரப்படுத்தினார்.

2006 தேர்தலுக்குப் பின்னர் ஈராக்கில் போர் நடவடிக்கைகள் அதிகரிப்பு

அமெரிக்காவில் ஜனநாயகத்தின் தோல்வி அப்பட்டமாகியது. 2006 நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் புஷ் நிர்வாகத்திற்கும் ஈராக் போருக்கும் எதிரானவர்களாகக் காட்டிக் கொண்ட வேட்பாளர்களுக்கே மக்கள் பெருவாரியாக வாக்களித்தனர். ஆனால், அதிகாரத்தில் அமர்ந்தவுடன், அதே ஜனநாயகக் கட்சியினர் புஷ்ஷின் வெள்ளை மாளிகையுடன் ஒத்துழைத்து, போருக்கு இன்னும் நூறு பில்லியன்கணக்கிலான தொகையை ஒதுக்க ஒப்புதலளித்தனர்.

ஆண்டு தொடங்கிய வெகு விரைவிலேயே, ஈராக்கில் போரை கணிசமாகத் தீவிரப்படுத்துவதற்கான திட்டங்களை புஷ் அறிவித்தார். இந்த அதிகரிப்பில் பாக்தாத்திலும் அன்பார் மாகாணத்திலும் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிரான எதிர்ப்பின் மையங்களாகத் திகழும் இடங்களில் கூடுதலாகக் குவிக்கப்படும் வகையில் சுமார் 30,000 துருப்புகள் மே மாதத்திற்குள் கூடுதலாக அனுப்பப்படவிருந்தனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் தீவிரப்படுத்தல் மற்றும் பரந்த போர்த் திட்டங்களுக்கு பதிலிறுப்பாக WSWS ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை குறிப்பிட்டது:

ஈராக்கிலான போர் ஜனநாயகத்தின் நலனுக்காக நடத்தப்படுவதாக புஷ் நிர்வாகம் கூறிக் கொள்கின்ற அதேவேளையில், அப்போரின் அதிகரிப்பு என்பது அமெரிக்காவிற்குள்ளான ஜனநாயக நடைமுறைகளின் உடைவை அம்பலப்படுத்துவதற்கே சேவை செய்திருக்கிறது. சென்ற நவம்பர் தேர்தலின் போது வாய்வீச்சாக முழங்கப்பட்டு, உலகெங்கும் மில்லியன்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்ற, போருக்கான வெகுஜன எதிர்ப்பானது அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாகவோ அல்லது அதன் இரு பெரும் அரசியல் கட்சிகளுக்குள்ளாகவோ எந்த உண்மையான வெளிப்பாட்டையும் காணவில்லை.

ஈரானுடனான அமெரிக்க போர்த் தயாரிப்புகளை எதிர்த்து WSWS ஆசிரியர் குழுவும் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டது. அத்துடன் அந்த அறிக்கையை ஈரான் மக்களின் பிரதான மொழியான பார்ஸியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், WSWS, மூன்றாம் உலகப் போரை புஷ் தூண்ட முயல்வதைக் கண்டனம் செய்ததோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஈரானின் புவியரசியல் முக்கியத்துவம் என்ன என்பதை ஆராயும் ஒரு மூன்று-பாகக் கட்டுரையையும் வெளியிட்டது.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் இளைஞர் இயக்கமும் மிச்சிகன் ஆன் ஆர்பரில் போருக்கு எதிரான ஒரு அவசரகால மாநாட்டைக் கூட்டின. இந்த மாநாட்டில் 17 மாநிலங்கள் மற்றும் கனடாவில் இருந்தான இளைஞர்களும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானமானது, ஈராக்கில் நடைபெறும் போருக்கும் தாயகத்தில் ஜனநாயக உரிமைகள் மீதும், வேலைகள் மீதும் மற்றும் வாழ்க்கைத் தரங்களின் மீதும் பெருகும் தாக்குதலுக்கும் இடையிலான தொடர்பை விளக்கியதோடு கூர்மையானதொரு எச்சரிக்கையையும் அளித்தது:

ஈராக், ஏகாதிபத்தியப் போரின் முதல் இலக்கும் அல்ல, முதலாளித்துவ அமைப்புமுறையானது தூக்கிவீசப்படும் வரை, கடைசி இலக்காகவும் இருக்கப் போவதில்லை. 21 ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்னும் ஒரு தசாப்தம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே, தொழிலாள வர்க்கத்தின் தலையீடு இல்லையென்றால் சென்ற நூற்றாண்டின் துயரங்களும் இரத்தம் தோய்ந்த குற்றங்களும் மீண்டும் தொடரும் என்பது மட்டுமல்லாமல் அவை இன்னும் அதிகரிக்கவும் செய்யும் என்பது இன்னும் மிகத் தெளிவாகி விட்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஈராக்கிலான அமெரிக்க நடவடிக்கைகள் சமூகப் படுகொலைக்கு - அதாவது ஒட்டுமொத்த சமூகத்தையும் திட்டமிட்டு முறையாகப் படுகொலை செய்வதென்ற ஒன்றுக்கு, இட்டுச் சென்றிருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டும் வகையில் பில் வான் ஓகென் எழுதிய மூன்று-பாக கட்டுரை ஒன்றை மே மாதத்தில் WSWS வெளியிட்டது. இந்தக் கட்டுரை கூறியது:

ஒருசமயத்தில் இப்பிராந்தியத்தில் மிக முன்னேறிய நாடுகளில் ஒன்றாக இருந்த ஈராக், இன்று, அடிப்படையான பொருளாதார மற்றும் சமூகக் குறியீடுகளைக் கொண்டு பார்த்தால், துணை சஹாரா ஆபிரிக்காவின் மிக ஏழ்மையான நாடுகளின் மட்டத்திற்கு இறக்கப்பட்டு விட்டது.

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் படைகள் ஐரோப்பாவை நாசம் செய்த காலத்திற்குப் பின் கண்டிராத ஒரு மட்டத்திற்கு வன்முறையையும் குற்றங்களையும் கட்டவிழ்த்து விடுவதன் மூலமாக ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையும் திட்டமிட்டு அழிப்பதில் என்ன சம்பந்தப்பட்டிருக்கிறது?

சமூக உடைவின் குறியீடுகளில் இடம்பெற்றுள்ளவை சில:

நூறாயிரக்கணக்கில் இறந்தோர் எண்ணிக்கை

2 மில்லியன் வெளிநோக்கிய அகதிகள் மற்றும் இன்னுமொரு 1.9 மில்லியன் உள்முக இடப்பெயர்வு என்ற மதிப்பீடு.

குழந்தை இறப்பில் 150 சதவீத அதிகரிப்பு

மொத்தக் குழந்தைகளில் பாதிப் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு

பெண்களின் நிலையில் ஒரு பெருந்துயரான வீழ்ச்சி

உண்மையான வேலைவாய்ப்பின்மை விகிதம் 70 சதவீதம் வரை அதிகரிப்பு

போரின் படுபயங்கர தன்மை நாளுக்கு நாள் அதிக வெளிப்படையாகிக் கொண்டிருந்த அதேவேளையில், நவம்பர் தேர்தலின் விளைவாக ஜனவரியில் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டைப் பெற்று விட்டிருந்த ஜனநாயகக் கட்சியோ புஷ்ஷின் போர் அதிகரிப்பை நிறுத்த எதுவும் செய்யவில்லை. வசந்த கால சமயத்தில், ஜனநாயகக் கட்சியினர்:

இந்த அதிகரிப்பிற்கு ஒப்புதல் மறுக்கும் ஒரு கட்டுப்படுத்தா தீர்மானத்தின் மீது வாக்களிக்கும் திட்டங்களை கைவிட்டிருந்தனர்.

அமெரிக்க துருப்புகளின் இடநிறுத்தம் மாற்றியமைக்கப்படும் என்ற வெற்று வாக்குறுதிக்கு பிரதிபலனாக போருக்கான நிதியாதாரத்தை மேலும் 18 மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டனர்.

துருப்புகளுக்கான ஆதரவு என்ற பேரில் போருக்கான நிதியாதாரம் எதனையும் துண்டிப்பதை எதிர்க்கும் ஒரு செனட் தீர்மானத்தை 94-1 என்ற வித்தியாசத்தில் நிறைவேற்றினர்.  

போருக்கு நிதியாதாரம் அளிக்கும் சட்டத்தில் திரும்பப் பெறும் காலக்கெடு ஒன்றைச் சேர்ப்பது குறித்த விவாதம் எதனையும் கைவிட்டனர்.

இறுதியாக, ஈராக் நடவடிக்கைகளில் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி போர் நிதியாதாரத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற புஷ்ஷின் வெள்ளை மாளிகையின் கோரிக்கைகளுக்கு அவை மற்றும் செனட்டின் ஜனநாயகக் கட்சி தலைவர்கள் தலைவணங்கினர். WSWS குறிப்பிட்டது:

ஜனநாயகக் கட்சியின் தன்மையே ஜனநாயகக் கட்சியினரின் கையாலாகாத்தனத்திற்கான அடிப்படைக் காரணம் ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்சியான குடியரசுக் கட்சியினருக்கு இக்கட்சி எந்தவிதத்திலும் சளைத்ததல்ல. ஈராக் மீதான ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்பின் கீழமைந்த அடிப்படையான ஏகாதிபத்திய நோக்கங்களையும், உலக ஆதாரவளங்கள் மற்றும் சந்தைகளை மேலாதிக்கம் செய்வதற்கு அமெரிக்க நிதி உயரடுக்கு தனது இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதையும் ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பத்தில் இருந்தே ஆதரித்து வந்திருக்கின்றனர்.

அதேசமயத்தில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்வுப் பிரச்சாரம் தொடங்கியது. அனைவரும் முன்னணி வேட்பாளராகக் கருதிய செனட்டர் ஹிலாரி கிளிண்டன் செனட்டர் பராக் ஒபாமாவிடம் இருந்து சவாலை எதிர்கொண்டார். ஈராக் போர் குறித்து ஒபாமா முன்வைத்த நிலைப்பாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களை சாதிக்க சிறந்தது எது என்ற தந்திரோபாய வித்தியாசங்களையே ஒட்டுமொத்த அடித்தளமாகக் கொண்டிருந்தது. வருங்காலத்தில் ஜனாதிபதியாகவிருந்தவர் குறித்து அவர் பதவியேற்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே WSWS எழுதியது:

ஒபாமாவும் அவரது சகாக்கள் போலவே பெருநிறுவன அமெரிக்காவின் புவி-அரசியல் நலன்களை பாதுகாப்பதில் உண்மையாகச் செயல்பட நிரூபணமானவர். அவர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் மத்திய கிழக்கிலோ, மத்திய ஆசியாவிலோ மற்றும் உலகில் வேறெங்கிலுமோ அமெரிக்க மேலாதிக்கத்தை பத்திரப்படுத்திக் கொள்ள இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதற்கு அவர் தயங்கப் போவதே இல்லை.

ஈராக் போரை உண்மையாக எதிர்த்து உடனடியாக அப்போரை முடிவுக்குக் கொண்டு வர புதிய நாடாளுமன்ற பெரும்பான்மையானது நடவடிக்கை எடுக்கும் என்ற பிரமைகளில் இருந்தவர்களுக்கு ஜனநாயகக் கட்சியினரின் அடிபணிவு கோபத்தை ஏற்படுத்தியது. ஈராக்கில் கொல்லப்பட்ட படைவீரரின் தாயான சிண்டி ஷீஹன் - முக்கியமான போரெதிப்பு செயல்பாட்டாளராக ஆகியிருந்தார்  - ஜனநாயகக் கட்சியில் இருந்து பகிரங்கமாக இராஜினாமா செய்தார். நேஷன் இதழ் உட்பட ஜனநாயகக் கட்சியினரின் இடது வக்காலத்துவாதிகள் இந்த நடவடிக்கை குறித்து எந்தக் கருத்தும் கூறுவதை தவிர்த்து விட்டனர்.

போர் அமெரிக்க சமூகத்தில் ஏற்படுத்திய மோசமான பின்விளைவுகள் இன்னொரு அத்தியாயத்தில் வெளிப்பட்டன. ஏப்ரல் மாதத்தில் வர்ஜினியா டெக் கல்வி நிறுவனத்தில் 23 வயது சோ சியங் ஹூய் 32 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார். இது அமெரிக்க வரலாற்றில் நடந்த மிக மோசமான வெறிச்சம்பவமாக அமைந்தது. இந்த நிகழ்வின் விரிவான முக்கியத்துவம் குறித்து கருத்துத் தெரிவித்த டேவிட் வோல்ஷ், இந்தப் படுகொலை சம்பவத்திற்கு முந்தைய தசாப்தத்தில் இராணுவவாதமும் வன்முறையும் செழித்திருந்தது என்று எழுதினார்:

குறிப்பாக செவ்வாய் மாலை வர்ஜினியா டெக் நிறுவனத்தில் நடந்த கூட்டத்தில் ஜோர்ஜ் W. புஷ் கலந்து கொண்டமை சற்றும் பொருத்தமற்றதாக இருந்தது. இவர் தான் அமெரிக்காவின் மோசமான பகுதியின், அதன் வசதிபடைத்த மற்றும் ஊழலடைந்த ஆளும் உயரடுக்கின் உருவடிவமாக இருந்தவர். டெக்சாஸ் ஆளுநராக, புஷ் 152 மனித உயிர்கள் மரணதண்டனை பெறுவதற்குத் தலைமை தாங்கினார். ஜனாதிபதியாக, ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின், பத்தாயிரக்கணக்கிலான ஆப்கனியர்களின், மற்றும் நூறாயிரக்கணக்கிலான ஈராக்கியர்களின் இரத்தக் கறை அவர் கைகளில் படிந்திருக்கிறது. இடைவிடாத வன்முறையையே தனது உலகளாவிய கொள்கைகளுக்கான அடித்தளமாகக் கொண்டிருக்கும் அவரது நிர்வாகம் படுகொலைகளையும், இரகசிய சிறைகளையும் சித்திரவதையையும் நியாயப்படுத்தியிருக்கிறது.

அமெரிக்கா, கொலம்பைனுக்குப் பிந்தைய எட்டு ஆண்டுகளில் அநேக காலம் மத்திய ஆசியா அல்லது மத்திய கிழக்கின் பகுதிகளை ஆக்கிரமித்து இருந்து வந்திருக்கிறது. கைப்பற்றப்பட்ட ஒரு தேர்தலைத் தொடர்ந்து செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களை பயன்படுத்தி, புஷ்-செனி ஆட்சி பொய்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு போரைத் தொடங்கியது. ஆளும் உயரடுக்கினர் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் தெளிவாக இருக்கிறது: ஒருவரின் நோக்கங்களைச் சாதிக்க எந்த வகை அட்டூழியமும் நியாயமானதே.....வன்முறையின் பெருக்கம், அச்சத்திற்கு தொடர்ந்த வேண்டுகோள்களை விடுப்பது மற்றும் பாதுகாப்பின்மையைத் தூண்டி விடுவது-இவை எல்லாமே பின்விளைவுகளைக் கொண்டிருக்கிறது, இது ஒரு வகையான சூழலை உருவாக்குகிறது.


அமெரிக்க இராணுவ ஜெனரல் டேவிட் பெட்ரேஸ் பாக்தாத் மீது பறக்கிறார்


அமெரிக்க இராணுவ டாங்கி ஒன்று பாக்தாத்தை ரோந்து சுற்றுகிறது

Featured material

 

புஷ் நிர்வாகத்தின் நெருக்கடியும் அமெரிக்க ஜனநாயகத்தின் சிதைவும்

ஜனநாயகக் கட்சியினரின் சரணடைவு என்பது புஷ் நிர்வாகத்தின் வலிமையின் விளைபொருள் அல்ல, மாறாக ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமுமே வெளிநாட்டில் இராணுவவாதம் என்ற ஒரு குற்றவியல் கொள்கைக்கு உறுதிப்பூண்டிருக்கிறது என்ற உண்மையின் வெளிப்பாடே ஆகும். ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியை என்ன விமர்சனங்கள் செய்த போதும் அந்நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு அடிப்படையான உந்து சக்திகளாக இருப்பவை குறித்த எந்த ஆய்வையும் தடுக்க தீர்மானத்துடன் இருக்கின்றனர். ஜனநாயகக் கட்சியினரின் பகீரத முயற்சிகளையும் தாண்டி, அரசாங்கத்தின் நெருக்கடியும் மற்றும் குற்றத்தன்மையும் 2007 இன் ஏராளமான நிகழ்வுகளில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டன. அவற்றில் சில:

துணை ஜனாதிபதி செனியின் முன்னாள் ஊழியர் தலைவரான லூயிஸ் லிபி, ஈராக் போர் குறித்து பகிரங்க விமர்சனம் செய்த ஒருவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சிஐஏ முகவராக இருந்த அவரது மனைவியின் பெயரை திட்டமிட்டுக் கசியச் செய்த விவகாரம் தொடர்பாக, அவர் மீது பொய் கூறியது நீதி நடைமுறைகளுக்கு இடைஞ்சல் செய்தது என நான்கு குற்றங்களின் கீழ் மார்ச் மாதத்தில் குற்றம் பதிவு செய்யப்பட்டது.

2006 தேர்தலின் போது குடியரசுக் கட்சியுடன் தொடர்புபட்ட குழுக்கள் கொண்டுவந்த வாக்களிப்பு மோசடி தொடர்பான போலிக் குற்றச்சாட்டுகள் மீது விசாரணைகள் மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டிய அமெரிக்க அரசு வழக்கறிஞர்களை பதவியில் இருந்து அகற்றுவதற்கு வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அரசியல் உதவியாளரான கார்ல் ரோவ் நீதித் துறைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார் என பல மாதங்கள் செய்திகள் தொடர்ந்து வெளியானதற்குப் பிறகு ஆகஸ்டு மாதத்தில் அவர் இராஜினாமா செய்தார்.

அதே மாதத்தின் பிற்பகுதியில் அட்டர்னி ஜெனரலான ஆல்பெர்டோ கோன்ஸேல்சும் இராஜினாமா செய்தார். அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில், இவர் பலமுறை நாடாளுமன்றக் கமிட்டிகளின் முன்னதாய் ஆஜராகி தன்மீது பழியேற்றுக் கொண்டதாய் குற்றம் சாட்டப்பட்டிருந்ததன் மீது விசாரணை நடந்துவந்தது ஒரு காரணம் என்றால் அமெரிக்கக் குடிமக்களை சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்பது மற்றும் சித்திரவதை செய்வதை நியாயப்படுத்திய சட்ட அறிவிக்கைகளை மேற்பார்வை செய்ததில் அவர் பெற்றிருந்த பங்கு இன்னொரு காரணம்.

போரின் விரிவாக்கம் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் தீவிரப்படுவதுடன் தொடர்புபட்டதாய் இருந்தது. அந்த ஆண்டில் வெள்ளை மாளிகை விரிவுபடுத்தப்பட்ட உள்நாட்டு ஒட்டுக்கேட்புக்கு நீதிமன்ற ஒப்புதலைப் பெற்றது; ஜோஸ் படிலா விசாரணைக்கு நெருக்குதலளித்து இறுதியில் குற்றப் பதிவைப் பெற்றது; நாடாளுமன்ற விசாரணைகளுக்கு எதிரான நிர்வாக சிறப்பதிகாரம் குறித்து மிதமிஞ்சிய கருத்துகளை வெளியிட்டது; அத்துடன் சிஐஏ விசாரணைகளில் சித்திரவதையைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதலளிக்கும் ஒரு நிர்வாக உத்தரவைப் பிறப்பித்தது.

புரூக்ளினைச் சேர்ந்த ஒரு அமெரிக்கக் குடிமகனான ஜோஸ் படிலாவின் வழக்கு குறிப்பான முக்கியத்துவம் படைத்ததாகும். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கான முக்கிய சாட்சி என்று சொல்லி படிலா 2002 மே மாதத்தில் கைது செய்யப்பட்டார். அணுக்கழிவு குண்டு சதி என்ற முகாந்திரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் புஷ் நிர்வாகம் பின்னர் அவரை எதிரிப் போராளி என அறிவித்து இராணுவச் சிறைக்கு அனுப்பி வைத்தது. அங்கு அவர் தனிச் சிறையில் அடைக்கப்பட்டு தூக்கமின்றிச் செய்யப்பட்டார்; மூளையைக் கலங்கடிக்கும் மருந்துகளுக்கு ஆட்படுத்தப்பட்டார்; இன்ன பிற மேம்பட்ட விசாரணை வடிவங்களுக்கும் ஆட்படுத்தப்பட்டார். மூன்றரை ஆண்டுகளுக்கு அவருக்கு ஒரு வழக்கறிஞருக்கான அணுகல் மறுக்கப்பட்டது.

படிலா ஒரு சோதனை மாதிரியாகப் பயன்படுத்தப்பட்டார். ஜனாதிபதி நினைத்தால் அமெரிக்க மண்ணில் கைது செய்யப்படும் ஒரு அமெரிக்கக் குடிமகனை உரிய நடைமுறைகளுக்கான அரசியல்சட்ட உரிமையை எல்லாம் மறுதலித்து காலவரையற்ற இராணுவச் சிறைக்குள் தள்ள உத்தரவிட முடியும் என்கிற தனது கருத்தை உறுதிப்படப் பிரகடனப்படுத்துவதற்கு புஷ் நிர்வாகம் படிலாவைப் பயன்படுத்த விரும்பியது என்று WSWS குறிப்பிட்டது. 2005 நவம்பரில் படிலாவின் கைது சட்டவிரோதமானது என உச்சநீதிமன்ற தீர்ப்பின் முடிவு வரக் கூடும் என்ற கவலை வந்தவுடன் புஷ் நிர்வாகமானது படிலாவை ஒரு சாதாரணச் சிறைக்கு மாற்றியதோடு ஆரம்பத்தில் அவர் மீது என்ன குற்றச்சாட்டுகள் கூறப்பட்டனவோ அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத மற்ற குற்றச்சாட்டுகளை வைத்தது.

அத்துடன் துணை ஜனாதிபதி செனி தனது அலுவலகம் நிர்வாக உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க அவசியமில்லை என்று அறிவித்து அடிப்படையாக சட்ட வரம்புக்கு மேற்பட்டதாக அதனை வைத்ததும் 2007 இல் நடந்தது. இதனிடையே இராணுவத்தில் ஜனாதிபதிக்கான அதன் சொந்த அணுகுமுறைக்கான இடம் இருக்கிறது என்றும், பரந்த வெகுஜன எதிர்ப்பின் போது ஜனாதிபதியின் நடவடிக்கையை இராணுவம் ஆதரிக்க முடியும் என்றும் புஷ் கூறினார்.

தொலைபேசி அழைப்புகளையும் மின்னஞ்சல்களையும் சட்டவிரோதமாக இடைமறிப்பதில் ஒத்துழைக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சட்டப்பிரச்சினைகளின்றி பார்த்துக் கொள்வதுடனான பரவலான அரசாங்க ஒட்டுக்கேட்பு நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் ஒரு புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது உள்ளிட ஜனநாயக உரிமைகள் மீதான இந்தத் தாக்குதல்களுக்கு ஜனநாயகக் கட்சியினர் முழு ஒத்துழைப்பைக் கொண்டு பதிலிறுப்பு செய்தனர்

சிஐஏ, சித்திரவதையை அது பயன்படுத்தியதை ஆவணப்படுத்திய வீடியோ சுருள்களை இரண்டு வருடங்களுக்கு முன்பு அழித்து விட்டிருந்த விடயம் டிசம்பரில் வெளியானது. அபு சுபய்தா உள்ளிட்ட குறைந்தபட்சம் இரண்டு சிறைக்கைதிகளை தண்ணீர் சித்திரவதைக்கு உட்படுத்தியதற்கான ஆவணங்களும் இந்த சுருள்களில் இருந்தன. முன்னதாக அரசக் கொள்கையின் சாதனமாக சித்திரவதை பயன்படுத்தப்படுவதை அங்கீகரிக்கும் ஒரு முன்னுதாரணமாக சுபய்தா விடயத்தை ஆக்கும் வண்ணம் சுபய்தா மீதான சித்திரவதையை புஷ் நிர்வாகம் மிகமிகக் கவனமாக முன்னெடுத்தது.

வீடியோச் சுருள் அழிப்பு சிஐஏவைப் பாதுகாத்ததோடு மட்டுமல்ல, விசாரணைகளின் போது விடயங்கள் தொடர்ந்து விவரிக்கப் பெற்ற நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் உள்ளிட ஒட்டுமொத்த அரசாங்கத்தின் பொறுப்பையும் மறைக்கவும் செய்தது. சித்திரவதையையும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் மறைப்பதில் ஜனநாயகக் கட்சியினரின் தெளிவான பங்குபற்றல் குறித்து கருத்துக் கூறிய WSWS கூறியது:

அமெரிக்கப் பெருநிறுவன உயரடுக்கின் இரண்டு கட்சிகளுக்குள்ளேயுமே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எந்தவித அக்கறையான உறுதிப்பாடும் இல்லாமல் இருக்கிறது என்பதையே ஜனநாயகக் கட்சியினரின் உடந்தையானது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2008 இல் வெள்ளை மாளிகையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சியினர் வென்றாலும் கூட, அமெரிக்க அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையில் எந்த முக்கியமான மாற்றமும் இருக்கப் போவதில்லை. சித்திரவதை தொடங்கி உள்நாட்டில் வேவு பார்ப்பது மற்றும் சட்டவிரோத வம்புப் போர்கள் வரை, ஜனநாயகக் கட்சியினர் புஷ் நிர்வாகத்தின் நேரடிக் கூட்டாளிகளாய் இருப்பது மீண்டும் மீண்டும் அம்பலப்பட்டிருக்கிறது.


அமெரிக்காவின் மூத்த இராணுவத் தலைவர்களுடனான ஒரு கூட்டத்திற்குப் பின் ஜோர்ஜ் W.புஷ் செய்தியாளர்களுக்கு அறிக்கையளிக்கிறார்

Featured material


உலகப் பொருளாதார நெருக்கடியின் நொருங்கல் சத்தங்கள்

அமெரிக்காவில் கொள்ளை நோக்கத்துடனான வீட்டு அடமானக் கடன் உருக்குலைந்ததில் மையம் கொண்டு பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி பெருகியதன் அறிகுறிகளை 2007 முழுவதிலும் WSWS பகுப்பாய்வு செய்தது. 2000 ஆவது ஆண்டில் டாட்.காம் குமிழி உடைந்ததற்குப் பிறகு அமெரிக்க ஆளும் வர்க்கம் வட்டி விகிதங்களை நன்கு குறைத்து பதிலிறுப்பு செய்தது. அடமானக் கடன் சந்தையில் ஒரு புதிய ஊக வணிகக் குமிழி உருவாக்கப்பட்டது. முதலில் கொள்ளை வட்டி விகிதத்திற்கு கடன் கொடுப்பது பின்னர் இந்தக் கடன்களை அடமான ஆதரவுப் பத்திரங்களாக வடிவமைத்து மறுவிற்பனை செய்வது என வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பெரும் இலாபங்களைக் குவித்தன.

அதேசமயத்தில் தொழிலாளர்கள் தேங்கி விட்ட தமது ஊதியங்களுக்குச் சரிக்கட்டும் விதமாக அதிகரித்த வீட்டு விலைகளையும் மற்றும் எளிதாகக் கிடைத்த கடன்களையும் பயன்படுத்தினர். ஆரம்ப காலத்தில் வட்டி விகிதம் குறைவாகவும் பிந்தைய ஆண்டுகளில் அது கூர்மையாக அதிகரிப்பதுமான (நெகிழ்வு விகித அடமானக் கடன்கள் என்றழைக்கப்படுவன) வடிவ அடமானக் கடன்களில் தொழிலாள வர்க்கக் குடும்பங்களை உடன்படச் செய்வதில் கடனளிக்கும் நிறுவனங்கள் சிறப்புத் திறன் பெற்றன. புதிய விகிதங்கள் செயலாக்கப்படும்போது, அதிகரித்திருந்த செலவிற்கு ஈடுகட்ட மில்லியன்கணக்கான வீட்டுரிமையாளர்களுக்கு இயலாமல் போனது.

இந்த ஒட்டுமொத்த நிகழ்முறையுமே உடன்பொதிந்த ஸ்திரநிலையின்மையுடன் இருந்தது என்பதோடு அதிகரித்த வீட்டு ஒப்படைப்புகளில் வெளிக்காட்டியவாறு அந்த ஆண்டு முழுவதிலும் அவிழ்ந்து செல்லத் தொடங்கியது. இந்த வீட்டு அடமானக் கடன் சந்தையிலான பிரச்சினைகள் மற்ற சொத்துகளுக்கும் பரவி உலக சந்தைகளில் கடுமையான வீழ்ச்சிகளின் ஒரு தொடர்ச்சிக்கு இட்டுச் சென்றது. சரிந்து சென்ற வீட்டு மதிப்புகளின் காரணமாகவும் பொதுவாக பொருளாதாரப் பாதுகாப்பின்மையின் காரணத்தாலும் நுகர்வோர் செலவினம் கூர்மையாக வீழத் தொடங்கியது.

இந்த ஊக வணிக வெறியாட்டத்தின் பரந்த முக்கியத்துவத்தை WSWS விளக்கியது:

முக்கியமான நிதி நிறுவனங்கள் வீட்டு அடமானக் கடன் சந்தைக்குள் நுழைந்தமையானது நிதி மூலதனம் இலாபத்தைத் தேடி கூடுதல் ஆபத்தான முயற்சிகளில் நுழைவது என்கிற இன்னும் பொதுவானதொரு நிகழ்முறையின் ஒரு வெளிப்பாடு ஆகும். மற்ற அம்சங்களுடன் சேர்ந்து இன்னொரு அம்சமாக, மலிவுப் பணத்தின் பாய்வானது அமெரிக்காவில் நெம்பப்பட்ட விலைகளிலான கொள்முதல்களுக்கு நிதியாதாரம் அளிக்க உதவியிருக்கிறது. இக்கொள்முதல்களின் அளவு சென்ற ஆண்டில் 418 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2005 இல் இருந்த அளவை விடவும் மூன்று மடங்குக்கும் அதிகமானதாகும்.

ஜூன் மாதத்தில் வோல் ஸ்ட்ரீட்டின் ஒரு முன்னணி நிறுவனமான பீர் ஸ்டர்ன்ஸ் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படும் இரண்டு முக்கியமான துணிகர நிதியங்கள் உடைவு கண்டமையானது இந்த பெரும் நெம்பிய துணிகர நிதிகளின் நொறுங்குதன்மையை எடுத்துக் காட்டியது.

மார்ச் முதல் ஆகஸ்டு வரையான காலத்தில் வோல் ஸ்ட்ரீட் அன்றாடம் பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. ஜூலை 19 அன்று டவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரி ஆயுள் கால சாதனை அளவாக 14,000 ஐ தொட்டது, பின் அடுத்த சில வாரங்களில் 638 புள்ளிகள் சரிந்து, பங்குச் சந்தை மதிப்பில் நூற்றுக்கணக்கான பில்லியன்களை அழித்தது.

ஆகஸ்ட் 7 அன்று, மிகப்பெரும் பிரெஞ்சு பொது நிறுவனமான BNP பரிபா, அமெரிக்க அடமான-ஆதரவுப் பத்திரங்களில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த தனது துணை நிறுவனங்களில் மூன்றில் செயல்பாடுகளை நிறுத்தி வைத்தது. டவ் ஜோன்ஸ் 387 புள்ளிகள் சரிந்தன, இதன் அதிர்வுகள் உலகெங்கும் உணரப்பட்டன.

நிதி-சாரா நிறுவனங்களின் இலாப விகித வீழ்ச்சியிலும் புதிய குமிழிகளை உருவாக்கும் நோக்கத்துடனான அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகிதக் குறைப்புக் கொள்கையும் தான் நடப்பு நெருக்கடியின் மூலங்களாய் இருந்தன என்பதை ஆகஸ்டு 17 அன்று வெளியிட்ட ஒரு கட்டுரையில் WSWS ஆராய்ந்தது.

உலகமயமாக்கல் சகாப்தத்தில் உலகப் பொருளாதாரத்தின் ஆழமான ஒருங்கிணைப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் விதமாக, இந்த நெருக்கடி ஐரோப்பா மற்றும் ஆசியா இரண்டிலுமே தனது தாக்கத்தைக் கொண்டிருந்தது. முதல்வரிசைப் பாதிப்பைப் பெற்றதில் பல பிரிட்டிஷ் வங்கிகள் இருந்தன. அமெரிக்க அடமானக் கடன் பரிவர்த்தனைகளுக்கு நேரடியான தொடர்பு இல்லாத போதும் கூட நார்தர்ன் ராக் முதலில் பொறிவு கண்டது. நார்தர்ன் ராக், அதேபோல்  SachsenLB மற்றும் IKB ஆகிய ஜேர்மன் வங்கிகளின் பிணையெடுப்பில், பாரிய பொது நிதிகளை எளிதாகக் கைமாற்ற அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் இடம்பெற்றிருந்தன.

சீனா கொண்டிருந்த மிகப்பெரும் அளவிலான அந்நியச் செலாவணிக் கையிருப்பு பங்குச் சந்தைக் குமிழிக்கு இட்டுச் சென்றதை அடுத்து சீனாவில் பாரிய நிதித் தடுமாற்றங்கள் ஏற்பட்டன. அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக, சீனாவின் வர்த்தக உபரி 11 ஆண்டுகளில் மிகப் பெரியதாய் இருந்த பணவீக்க அளவுக்கு பங்களித்து சமூகக் கிளர்ச்சிக்கு தூண்டுதலளித்தது.


பின்னாளில் பொறிவு கண்டு பிணையெடுக்கப்பட இருந்த Northern Rock என்ற இங்கிலாந்து வங்கியை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு நிற்கின்றனர்

 

Featured material

 

உலக அரசியல் அபிவிருத்திகள்

அந்த ஆண்டில் ஐரோப்பாவில் முக்கியமான அரசியல் அபிவிருத்திகள் நிகழ்ந்தன. பிரிட்டனில் ஒரு புதிய பிரதமரும் பிரான்சில் ஒரு புதிய ஜனாதிபதியும் வந்திருந்தார். இத்தாலி மற்றும் ஜேர்மனியில் இடது குழுக்கள் ஒரு புதிய மற்றும் பிரதானமான பாத்திரத்தை ஆற்றின.

மே மாதத்தில் வலது சாரி UMP இன் வேட்பாளரான நிக்கோலோ சார்க்கோசி சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரான செகோலீன் ரோயலைத் தோற்கடித்து பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். பதவிக்காலம் முடிந்து வெளியேறும் UNP கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியான ஜாக் சிராக்குக்கு அடுத்தபடியாக இவர் ஜனாதிபதி பதவியை வென்றிருந்தார். ரோயலுக்கும் சார்க்கோசிக்கும் இடையில் இருந்த வித்தியாசம் தந்திரோபாயரீதியிலானதே தவிர, அடிப்படையில் வித்தியாசம் ஏதுமில்லை என்று WSWS வலியுறுத்தியது. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் தேசிய நலன்களை பாதுகாப்பதிலும், தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் காவுகேட்கும் ஆழமான கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு பிரெஞ்சு பெருநிறுவனங்களை உலகளாவ கூடுதல் போட்டித்திறனுடையதாக ஆக்குவதிலும் இருவருமே உடன்பாடு கொண்டிருந்தனர்

பிரான்சில் உத்தியோகபூர்வ தொழிலாளர் இயக்கத்தின் தசாப்த கால சரிவின் இறுதி விளைவையும் தேர்தல்கள் அடையாளப்படுத்திக் காட்டின. ஒருகாலத்தில் ட்ரொட்ஸ்கிசக் குழுக்களாகக் காட்டிக் கொண்டவை எல்லாம் முழுமையாக முதலாளித்துவ அரசியலின் முகாமுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டிருந்தன. கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சிகள் மீது தொழிலாளர்கள் கொண்ட வெறுப்பில் இலாபமடைந்த அதி-தீவிர வலதுசாரி தேசிய முன்னணி (FN) மட்டுமே இந்த உத்தியோகபூர்வ இடதுகளின் திவால்நிலையில் இருந்து இலாபமடைந்த ஒரே கட்சி ஆகும்.

10 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்து விட்டிருந்த பிறகு டோனி பிளேயர் ஜூன் மாதத்தில் கிரேட் பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தார். ஏறக்குறைய தலைமைக்கு எந்தப் போட்டியும் இல்லாமல் அவருக்கு அடுத்தபடியாக கோர்டன் பிரவுன் மேலே அமரவைக்கப்பட்டமையானது தொழிற்கட்சியானது உழைக்கும் மக்களிடம் ஆழமான குரோதம் படைத்த வலது-சாரித் திரட்சிக்கும் சற்று கூடுதலாய் தான் இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்தது.

பிளேயர் மற்றும் பிரவுன் கன்னைகளுக்கு இடையில் நடந்த கடுமையான மோதலில் கடுகளவும் கூட கோட்பாடு என்பது இல்லை. தொழிற்கட்சி அதன் சீர்திருத்தவாதக் கொள்கைகளைக் கைவிட்டதில் இருவருமே கூட்டு வடிவமைப்பாளர்களாய் இருந்தனர். வருங்காலத்தில் பிளேரின் இடத்தில் அமரவிருப்பதாக வாக்குறுதியளித்து பிரவுன் 1994 இல் தனது தலைமைக் கனவுகளை நிறுத்தி வைத்திருந்தார். தொழிற்கட்சி அதிகாரத்தில் இருந்த 10 வருடங்களுமே அரசாங்கத்தின் ஆழமான வெகுஜன விரோத நடவடிக்கைகள் அத்தனைக்கும் பிரவுன் ஆதரவளித்து வந்திருந்தார். அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட உடனேயே, பிரவுன் புதிய தொழிற்கட்சியின் திட்டநிரலைத் தொடர தான் தீர்மானத்துடன் இருப்பதை ஊர்ஜிதம் செய்தார்.

இந்தப் போட்டியானது கட்சியின் இடது பிரிவு தொங்குசதையாக குறைந்து போயிருந்ததை ஊர்ஜிதம் செய்தது. அதன்  வேட்பாளரான ஜோன்  மெக்டொனால்ட் மொத்தமிருக்கும் 355 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அவரது சொந்த சோசலிசப் பிரச்சாரக் குழுவினரில் இருக்கும் சிலர்  உள்ளிட வெறும் 45 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்ட தவறிய நிலையில் அவரால் ஒரு சவாலை முன்வைக்க இயலாமல்  போனது. அந்த ஆண்டின் இறுதியில், ஸ்காட்லாந்து சோசலிஸ்ட் கட்சி போலவே போலி-இடது Respect-Unity கூட்டணி உடைந்தது.

இத்தாலியில் ரிஃபோண்டசியோனா கம்யூனிஸ்டா (PRC) மற்றும் சினிஸ்ட்ரா கிரிட்டிகா என்ற பப்லோவாதக் குழு ஆகியவற்றின் ஆதரவுடனான ரோமனோ பிரோடியின் “மத்தியவாத-இடது” அரசாங்கம், ஆப்கானிஸ்தான் போரில் இத்தாலியின் பங்கேற்பைத்  தொடர்ந்ததன் மூலமும், வட இத்தாலியில் விசென்ஸாவில் அமைந்திருந்த அமெரிக்க இராணுவத் தளத்தின் குத்தகைக் காலத்தை நீட்டித்ததன்  மூலமும், வெறுப்பைச் சம்பாதித்த ஓய்வூதியச் சீர்திருத்தம் போன்ற தொழிலாள வர்க்கத்தின் மீதான நீண்ட-கால விளைவுகள் கொண்ட  தாக்குதலை முன்னெடுத்ததன் மூலமும் தனது வலது-சாரிக் குணாம்சத்தை எடுத்துக்காட்டியது. அரசாங்கத்தின் போர்க் கொள்கையை எதிர்த்து  100,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்குப் பிறகும் கூட PRC பிரோடியை ஆதரித்தது.

ஜுன் மாதத்தில் ஜேர்மனியில், PDS என்று பெயர் மாற்றப்பட்ட கிழக்கு ஜேர்மனியின் முன்னாள் ஸ்ராலினிச ஆளும் கட்சியும் அத்துடன் SPD கட்சியைச் சேர்ந்த முன்னாள் தலைவர் ஆஸ்கர் லஃபோன்டெயின் தலைமையிலான மேற்கு ஜேர்மனியின் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும்  முன்னாள் சமூக ஜனநாயகவாதிகளின் ஒரு குழுவும் ஒன்றிணைக்கப்பட்டு இடது கட்சி உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது.  தொழிலாள வர்க்கத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதும் உள்ளபடியான நிலைக்கு எதிரான எந்த சுயாதீனமான இயக்கத்தையும் ஒடுக்குவதுமே புதிய கட்சியின் மைய நோக்கமாக இருந்தது.

நவம்பர் மத்தியில், ஆஸ்திரேலியாவில் வலது-சாரி ஹோவார்டு அரசாங்கம் தூக்கியெறியப்பட்டது. இந்த அவமானகரமான தோல்வி புஷ்ஷின்  ஆரம்ப “விருப்பக் கூட்டணி”யின் எஞ்சியிருந்த கடைசிக் கூட்டாளியின் முடிவை அடையாளப்படுத்தியது. அரசாங்கத்திற்கு எதிரான  வாக்குகள் தாராளவாத-தேசியவாதக் கூட்டணியை சொற்பமாக்கி விட்டது மட்டுமல்ல, ஹோவார்டே கூட 33 வருடங்கள் தக்க வைத்திருந்த  அவரது ஆசனத்தை இழக்க நேர்ந்தது.

ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புப் போரில் ஒரு முக்கிய கூட்டாளியான பாகிஸ்தானில் அமெரிக்க ஆதரவுடனான இராணுவ சர்வாதிகாரத்தில்  பெருகிய நெருக்கடியை 2007 முழுவதிலும் WSWS பகுப்பாய்வு செய்தது. புஷ் நிர்வாகம் பெனாசிர் பூட்டோ மற்றும் அவரது பாகிஸ்தான்  மக்கள் கட்சியின் (PPP) ஆதரவைப் பெற்றுத் தந்து ஜெனரல் பர்வேஸ் முஷரப்பின் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க முனைந்தது. இறுதியில்  முஷரப் ஜனாதிபதியாக “மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட” PPP ஏற்பாடு செய்வதான ஒரு ஒப்பந்தத்தையும் மத்தியஸ்தம் செய்தளித்தது.

கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும்” என்ற அச்சத்தால் முஷாரப்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான வெகுஜன இயக்கம் எதனையும்  தடுப்பதில் தான் முழுத் தீர்மானத்துடன் இருப்பதாக முந்தைய ஐந்து ஆண்டு காலத்தில் தொடர்ந்து சொல்லி வந்திருந்த பெனாசிர் பூட்டோ  அக்டோபரில் பாகிஸ்தான் திரும்பினார். ஆனால் புஷ் ஆதரவுடன் முஷாரப்புடனான ஒரு உடன்பாடு வெகுவிரைவில் வெளிப்பட்டது. நவம்பர்  ஆரம்பத்தில் முஷாரப் அவசர நிலை ஒன்றை திணித்தார், பின்னர் ஜனவரி 8 அன்று நடைபெறவிருந்த கண் துடைப்பான தேசிய மற்றும் மாகாணத் தேர்தலையொட்டி அந்த அவசரநிலையை அகற்றினார். வாக்கெடுப்புக்கு இரண்டு வாரங்கள் முன்னதாக பூட்டோ படுகொலை  செய்யப்பட்டார். பாதுகாப்பு படைகள் ஏற்பாடு செய்த ஒரு அரச கொலையில் காணப்படக்கூடிய அத்தனை அடையாளங்களும் அந்தப்  படுகொலையில் இருந்தது.


புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி


2007 இல் கேம்ப் டேவிட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுடன் கைகுலுக்குகிறார்

Featured material

சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள்

உலகப் பொருளாதார நெருக்கடியின் அபிவிருத்தியானது தன்னுடன் சேர்த்து அடிப்படையான அரசியல் கேள்விகளை முன்வைத்த முக்கியமான தொழிலாள வர்க்கப் போராட்டங்களையும் ஏராளமாய் உடன் அழைத்து வந்தது.

ஜூன் மாதம் தொடங்கி, பிரிட்டனின் அஞ்சல்துறைத் தொழிலாளர்கள், ஞாயிறு விநியோக அகற்றம் உட்பட ராயல் மெயில் மேற்கொண்ட வெட்டுகளுக்கு எதிராக தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களைத் தொடங்கினர். முன்னறிவிப்பற்ற வேலைநிறுத்தங்கள் வெடித்தமையானது வேலைநிறுத்த நடவடிக்கையைக் கைவிடும் தகவல்தொடர்பு தொழிலாளர் சங்கத்தின் (CWU) தீர்மானமான உறுதியை மேலும் அதிகப்படுத்தியது. தொழிற்சங்கம் அக்டோபரில் 48 மணி நேர வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்தது, ஆனால் பிரிட்டனின் SEP உத்தியோகப்பூர்வமற்ற வேலைநிறுத்தங்களுக்கான தனது பதிலிறுப்பாக, தொழிற்சங்கத்தில் இருந்து சுயாதீனமாக இந்த முன்முயற்சியைக் கைக்கொள்ளும்படி அஞ்சல் தொழிலாளர்களை அழைக்கும் ஒரு அறிக்கையை விடுத்தது:

அஞ்சல் தொழிலாளர்கள் இறுதி வரை போராடியாக வேண்டிய ஒரு போராட்டத்தில் நிற்கின்றனர். CWU திணிக்கும் தளைகளில் இருந்து அவர்கள் உடைத்துக் கொள்ளாத வரை எதையும் பாதுகாத்துக் கொள்ள முடியாது. ராயல் மெயிலுக்கு எதிராக மட்டுமன்றி நாடாளுமன்றத்தில் அதன் பிரதிநிதிகளாக இருப்பவர்களுக்கு எதிரான ஒரு சுயாதீனமான அரசியல் மற்றும் தொழிலக நடவடிக்கை தான் இப்போது அவசியமாக இருக்கிறது.

பிரிட்டனில் இதேபோன்ற தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய பிற தொழிலாளர்களையும் அதேபோல ஐரோப்பாவெங்கிலும் தனியார்மயமாக்க அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும் அஞ்சல் தொழிலாளர்களையும் எட்டக் கூடிய சாமானியத் தொழிலாளர் குழுக்களை உருவாக்குவது இத்தகையதொரு போராட்ட முன்னெடுப்பில் அவசியமாக இருக்கிறது.

CWU தலைமையில் கணிசமான செல்வாக்கு கொண்டிருக்கக் கூடிய அரச-முதலாளித்துவ குழுவான சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் (SWP) பாத்திரத்தையும் WSWS அம்பலப்படுத்தியது. போராட்டத்திற்கு குழிபறிப்பதிலும் ஒவ்வொரு அம்சத்திலுமே தொழிலாளர்களுக்கு ஒரு கணிசமான தோல்வியாய் கருதப்படக் கூடிய ஒரு ஒப்பந்தத்தை முன் தள்ளுவதிலும் SWPயும் CWU அதிகாரத்துவமும் கைகோர்த்துக் கொண்டன.

ஜூலை மாதத்தில், கைவினைத் தொழிற்சங்கமான GDL இல் ஒழுங்கமைந்திருந்த இரயில் ஓட்டுநர்கள் 30 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய உயர்வைக் கோரி போராடினர். இரண்டு உத்தியோகப்பூர்வ இரயில்வே தொழிற்சங்கங்களுமே வேலைநிறுத்த உடைப்பாளர்களாக செயல்பட்டதை WSWS சுட்டிக் காட்டியது. இரயில் ஓட்டுநர்களின் தீவிரப்பட்ட மனோநிலை, வேலைநிறுத்தத்திற்கு பொது மக்களிடம் கிட்டிய பரவலான ஆதரவு எல்லாம் இருந்தும் சுயாதீனமான GDL தொழிற்சங்கத்தின் சமரசத்திற்கான முயற்சிகள் தோல்விக்கே அழைத்துச் சென்றன.

ஜேர்மன் இரயில் வேலைநிறுத்தத்தின் போது, பிரான்சில் போக்குவரத்து மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் சார்க்கோசி அரசாங்கம் உத்தரவிட்ட ஓய்வூதிய வெட்டுகளை எதிர்த்து பாரிய போர்க்குண வெளிப்பாட்டைக் காட்டும் வகையில் புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்தின் மட்டம் அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மோதலைத் தணிக்க சார்க்கோசி தொழிற்சங்கத் தலைவர்களை குறிப்பாக ஸ்ராலினிசத் தலைமை கொண்ட CGT தலைவர்களை நாடினார்.

இந்த பிரெஞ்சு வேலைநிறுத்த இயக்கம் நவம்பரில் மேலும் விரிவடைந்தது. வாயு விநியோகத் தொழிலாளர்கள் மற்றும் மின்சக்தித் துறை தொழிலாளர்கள் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர், இரயில் தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். இவர்கள் அனைவருமே இத்துறைகளில் தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்த ஓய்வூதிய ஏற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சார்க்கோசி வைத்த கோரிக்கைகளை எதிர்த்துப் போராடினர். ஒரே சமயத்தில் பிரான்சிலும் ஜேர்மனியிலும் தொழிலாள வர்க்கம் நடத்திய முக்கியப் போராட்டங்களின் தாக்கங்கள் குறித்து  சுட்டிக் காட்டி WSWS ஆசிரியர் குழு நவம்பர் 19 அன்று ஒரு அறிக்கை விடுத்தது:

உழைக்கும் மக்கள் முகம் கொடுக்கும் நெருக்கடிக்கு தேசிய அளவிலான பதில் கிடையாது. சார்க்கோசிக்குப் பின்னால் ஐரோப்பிய ஒன்றியம் நிற்கிறது, ஐரோப்பிய அரசாங்கங்கள் நிற்கின்றன, மற்றும் பெரும் சர்வதேசப் பெருநிறுவனங்களும் வங்கிகளும் நிற்கின்றன.

ஜேர்மன் இரயில் ஓட்டுநர்களும் பிரெஞ்சு இரயில்வே தொழிலாளர்களும் ஒரேசமயத்தில் போராட்டங்கள் நடத்துவதென்பது வெறுமனே தற்செயலல்ல. ரைன் நதியின் இரண்டு பக்கங்களிலுமே, பொதுச் சேவைகளையும் அத்துடன் தமது சொந்த வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களையும் பெரு வணிகத்தின் உத்தரவுக்குக் கீழ் வைக்கின்ற செயலை எதிர்த்தே போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், ஐக்கியப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையில், செப்டம்பரில் வேலைநிறுத்தத்தில் இறங்கிய பத்தாயிரக்கணக்கிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குரிய ஒரு புரட்சிகர முன்னோக்கினை சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்தது. இந்த ஒருநாள் வேலைநிறுத்தம் நாட்டின் வரலாற்றில் மிகவும் பரந்துபட்டதாக இருந்தது, ஆனால் போலிஸ் அடக்குமுறையையும் நீதிமன்ற நடவடிக்கையைக் கொண்டுமே அரசாங்கம் பதிலிறுப்பு செய்தது. இறுதியில் தொழிற்சங்கங்கள் எந்த மேலதிக வேலைநிறுத்த நடவடிக்கையையும் கைவிட்டு அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்தன.

அமெரிக்காவில் வாகனத் துறை தொழிலாளர்கள் ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் சங்கத்தினால் (UAW) காட்டிக் கொடுக்கப்பட்டது குறித்த விரிவான செய்திகளை WSWS வழங்கியது. இரண்டு முக்கியமான விடயங்கள் நடந்தேறின: கிறைஸ்லர் ஒரு துணிகர நிதியத்தால் கைப்பற்றப்பட்டமை மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் (GM) நிறுவனத்தின் புதியதொரு ஒப்பந்தம்.

செப்டம்பரில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை ஒட்டி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட GM ஒப்பந்தம், நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற சுமார் 400,000 ஓய்வூதியதாரர்களுக்கும் அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவர்களுக்கும் ஆரோக்கியப் பராமரிப்பு உதவிகளைச் செலுத்தும் கடமையில் இருந்து நிறுவனத்தை விடுவித்தது. அதற்குப் பதிலாக ஊழியர்கள் தன்னார்வ நலன் அமைப்பு (VEBA) என்கிற பெயரில் பல பில்லியன் டாலர்களுடனான ஒரு அறக்கட்டளை தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உருவாக்கித் தரப்பட இருந்தது. இதன்மூலம் தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்களைச் சுரண்டுவதில் முழுவீச்சிலான பங்குதாரர்களாக ஆக்கப்பட்டார்கள். புதிதாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கென முதல்முறையாக ஒரு ஈரடுக்கு ஊதிய முறையையும் இந்த ஒப்பந்தங்கள் செயல்படுத்தின.

WSWS இந்த வரலாற்றுப் பின்னடைவுகளுக்கான பதிலிறுப்பாக UAW ஒப்பந்தக் காட்டிக் கொடுப்பின் படிப்பினைகளை எடுத்துக்காட்டும் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்கள் தமது வேலைகளையும் வாழ்க்கைத் தரங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான எந்தவொரு உருப்படியான போராட்டத்திற்குமான முன்னவசியமாய் UAW இல் இருந்து முறித்துக் கொள்ள அக்கட்டுரை அழைப்பு விடுத்தது.

ஒரு தேசியவாத வேலைத்திட்டத்தை அடிப்படையாய்க் கொண்ட அனைத்து தொழிற்சங்கங்களும் மற்றும் தொழிலாளர் அமைப்புகளும் மறைந்து போனதானது தொழிற்சங்கவாதத்தின் உடன்பொதிந்த வரம்புகளையும் ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையிலான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் அவசியத்தையும் எடுத்துக் காட்டுகிறது. தொழிலாளர்கள் இன்று முகம் கொடுக்கும் எந்தப் பிரச்சினைகளுமே முதலாளிகள் மற்றும் தேசிய அரசிற்கு நெருக்கடி கொடுப்பதான தொழிற்சங்க கருத்தாக்கத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட முடியாது.

நவம்பர் மாதத்தில், அமெரிக்க எழுத்தாளர் அமைப்பின் (WGA) 12,000 உறுப்பினர்கள் தமது வேலைகளைப் புறக்கணித்துப் போராடினர். இது இருபது ஆண்டுகளில் எழுத்தாளர்களின் முதல் போராட்டமாகும். இந்தப் போராட்டம் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நடந்ததால், பொழுதுபோக்குத் துறையின் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் எழுத்தாளர்களுக்கு ஆதரவு கிட்டியது. வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையேயான WSWS இன் தலையீட்டில் பங்குபெறுவதற்காக WSWS இன் கலைப்பிரிவு ஆசிரியர் டேவிட் வால்ஷ் ஹாலிவுட் சென்றார். தொழிலாளர்களை நேர்காணல் செய்த WSWS வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கான குரலை வழங்கியது.

 


2007 எழுத்தாளர் வேலைநிறுத்தம்

Featured material

 

ட்ரொட்ஸ்கி மற்றும் சடவாதத்தை ICFI பாதுகாத்தமை

ரஷ்யப் புரட்சியின் சக தலைவரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அனைத்துலகக் குழு நடத்தி வந்த பிரச்சாரத்தில் 2007 ஆம் ஆண்டு ஒரு மிக முக்கிய முன்னேற்றத்தைக் குறித்தது. லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைச் சரித புத்தகங்களை எழுதிய இயான் தாட்சர் மற்றும் ஜேப்ரி ஸ்வேயின் ஆகிய இரண்டு பிரிட்டிஷ் கல்வியியலாளர்களின் பொய்மைப்படுத்தல்களை அம்பலப்படுத்தும் உரைகளை கிரேட் பிரிட்டனில் டேவிட் நோர்த் வழங்கியதுடன் இது ஆரம்பமானது.

இந்த உரைகள் பின்னர் தாட்சர் மற்றும் ஸ்வேயின் தொகுதிகள் மீதான நான்கு-பகுதி திறனாய்வாக WSWS இல் வெளியிடப்பட்டன. பின்பு ’லியோன் ட்ரொட்ஸ்கியும் சோவியத்துக்குப் பிந்தைய வரலாற்றுப் பொய்மைப்படுத்தல் பள்ளியும்’ என்ற தலைப்பின் கீழ் ஒரு புத்தகமாகவும் வெளியிடப்பட்ட இது ’லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து’ புத்தகத்திலும் பின்னர் இடம்பெறச் செய்யப்பட்டது. வரலாற்றுப் பொய்மைப்படுத்தல் என்பது சர்வதேச தொழிலாளர் இயக்கத்தைப் பொறுத்தவரை வாழ்வா சாவா என்பதான முக்கிய கேள்வியாக அமைந்தது என்று நோர்த் வாதிட்டார்.

ஸ்ராலினிச பயங்கரத்தின் மூலங்களை நன்கு ஆய்ந்து அதன் பின்விளைவுகளை தீவிரமாக உணர்ந்து கொண்ட எவரொருவரும் வரலாற்றுப் பொய்மைப்படுத்தலின் அரசியல்ரீதியாக பிற்போக்குத்தனமான மற்றும் சமூகரீதியாக அழிவுகரமான பின்விளைவுகளைக் குறைத்து மதிப்பிடமாட்டார்கள். ரஷ்யப் புரட்சியின் வரலாறு குறித்த பொய்மைப்படுத்தலில் தன்னை முதன்முதலில் வெளிப்படுத்திக் கொண்ட அரசியல் நிகழ்முறை தான் இறுதியாக ரஷ்யப் புரட்சிகரவாதிகளை மொத்தமாய் ஒழித்துக்கட்டுவதாய் பூதவடிவம் எடுத்தது என்பதை சோவியத் ஒன்றிய உதாரணத்தின் மூலம் நாம் அறிவோம்.

”லியோன் ட்ரொட்ஸ்கியை ஒரு முக்கியமான வரலாற்று ஆளுமையாக ஏற்றுக்கொள்ளாது விடுவதும், ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிசத்துக்கான ஒரு மாற்றினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதையும் அவரது அரசியல் பாரம்பரியம் நிகழ்காலத்திற்கு பொருத்தமானதாயும் எதிர்காலத்திற்கு மதிப்புமிக்கதாயும் இருக்கிறது என்பதை மறுப்பதுமே” பொய்மைப்படுத்துவோரது புதிய பள்ளியின் பிரதான நோக்கமாக இருக்கிறது என்று நோர்த் விளக்கினார். இந்தப் புத்தகங்களில் இருக்கும் திரிப்புகளையும் பொய்களையும் விரிவாக அம்பலப்படுத்திய நோர்த், ட்ரொட்ஸ்கியை அவமதிப்பதற்கான அவர்களது முயற்சிகளுக்கும் ஸ்ராலினுக்கான அவர்களது வக்காலத்துகளுக்கும் இடையிலிருந்த முரண்பாட்டுக்கு கவனத்தை ஈர்த்தார்.

ட்ரொட்ஸ்கி மீதான இந்தத் தாக்குதல்களின் புறநிலை முக்கியத்துவத்தையும் நோர்த் விளக்கினார். ஆளும் கட்சிகள், அதிலும் குறிப்பாக ஒருகாலத்தில் தொழிலாளர்’ இயக்கத்துடன் அடையாளப்படுத்திப் பார்க்கப்பட்ட கட்சிகள் நாளுக்கு நாள் மதிப்பிழந்து சென்ற நிலையில், இந்தப் புத்தக வெளியீடுகள் எல்லாம் ட்ரொட்ஸ்கி மற்றும் புரட்சிகர சோசலிசம் குறித்த ஆர்வங்கள் மறுஎழுச்சி காண்பதைத் தடுக்கும் நோக்கம் கொண்டவையாக இருந்தன.

வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்கள் ஒட்டுமொத்தமாக கல்வியியலாளர்களால் எவ்வாறு உணரப்பட்டன என்பதை ஸ்வேயின் மற்றும் தாட்சர் மீதான விமர்சனம் சுட்டிக் காட்டியது. ”இந்த இரண்டு பரிதாபகரமான புத்தகங்களுமே மிகவும் அனுசரணையுடன் எதிர்கொள்ளப்பட்டதை எப்படி விளக்குவது?” என்று அவர் வினவினார்.

’ஒரு விவரிப்பின் உட்கூறுகள் இசைவுடன் இருக்க வேண்டும், அதனை அதன் சொந்த நிர்ணயங்களைக் கொண்டே தீர்மானிக்க முடியும்’ என்பதாகக் கூறி புறநிலை உண்மையை சமகாலத்தில் மறுதலிப்பது என்பது முக்கியமான ஆய்வுப் படைப்புகளுக்கு, இன்னும் சொன்னால் பகுத்தறிவுச் சிந்தனைக்குமே கூட, தீங்கானதாகும். பொய்மை செழிக்கலாம், வரலாற்றைப் பற்றி பொய்கள் கூறப்படும்போது எந்த எதிர்ப்பும் இருக்காது என “எதுவும் சாத்தியமே” என்பதான ஒரு சூழலுக்கு இது ஊக்கமளிக்கிறது.

ஒரு புதிய தலைமுறை இன்று தீவிரமான மற்றும் வாழ்க்கையை அச்சுறுத்தும் பிரச்சினைகளை எதிர்கொண்டு நிற்கிறது. எங்கெங்கிலும் அது நெருக்கடிக்கும் சிதைவுக்கும் முகம் கொடுக்கிறது. உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடிக்கு பதில்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் இப்பூகோளத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும். இருபத்தியோராம் நூற்றாண்டில் மனிதகுலத்துக்கு அவசியமாக இருக்கும் அந்தப் பதில்களைக் கண்டுபிடிப்பதில் வரலாறு குறித்த ஆய்வு ஒரு மையமான பாத்திரத்தை ஆற்றியாக வேண்டும். ஆனால் வரலாற்றின் ஆவணப்பதிவுகள் பொய்மைப்படுத்தப்பட்டால் அதை எப்படி சரியாக ஆராய முடியும்? உலகின் உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் உண்மை தேவை. அதனைக் கண்டுபிடிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான போராட்டம் தான் மனிதகுல முன்னேற்றத்திற்கான புத்திஜீவித உந்துசக்தியாக இருக்கிறது.

மோசடியானதும் மற்றும் அரசியல்ரீதியான உள்நோக்கத்துடனானதுமான பொய்மைப்படுத்தல்களுக்கும் உண்மையான மனச்சாட்சியுடனான ஆய்வாளர்களின் படைப்புகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் என்ன என்பதை புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு குறித்த இரண்டு முக்கியமான தொகுதிகளின் வெளியீடு அடிக்கோடிட்டுக் காட்டியது. இந்த இரண்டு தொகுதிகளுமே WSWS இல் திறனாய்வு செய்யப்பட்டன. அலெக்சாண்டர் ரபினோவிட்ச் எழுதிய அதிகாரத்தில் போல்ஷிவிக்குகள் என்ற புத்தகமும் பிரையன் பால்மர் எழுதிய ஜேம்ஸ் பி.கனனும் அமெரிக்க புரட்சிகர இடதின் மூலங்களும், 1890-1928 என்ற புத்தகமும் தான் அவை.

இண்டியானா பல்கலைக்கழக பேராசிரியரான ரபினோவிட்ச் வரலாற்று அறிஞர்களது முழுத்தகமையுடன் ஒரு முக்கிய படைப்பை வழங்கியிருந்தார். 20 வருட ஆராய்ச்சியின் அடிப்படையில் - இதில் அநேக காலம் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் புதிதாகத் திறந்து விடப்பட்டிருந்த ஆவணக்காப்பகத்தில் நடந்தேறியிருந்தது - முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் தூக்கியெறியப்பட்டதற்குப் பிந்தைய அரசியல் மற்றும் சமூகப் பின்விளைவுகளையும் 1918 சமயத்தில் போல்ஷிவிக் ஆட்சி அபிவிருத்தியுற்றதையும் அவர் ஆராய்ந்தார்.

பிரெடரிக் சோயட்டும் டேவிட் நோர்த்தும் தமது திறனாய்வில் இந்த ஆய்வையும் பெட்ரோகிராடில் போல்ஷிவிக்கின் ஆட்சியது முதலாம் ஆண்டு குறித்த விவரங்கள் விரிவாக வெளியிடப்பட்டிருப்பதையும் வெகுவாகப் பாராட்டினர். அதேசமயத்தில் இந்த விடயங்களை அதன் சரியான வரலாற்று மற்றும் அரசியல் உள்ளடக்கத்தில் பொருத்தி வைப்பதற்கான ஒரு பொருள்விளக்க கட்டமைப்பு ரபினோவிட்ச்சிடம் இருக்கவில்லை என்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர். எப்படியிருந்தபோதிலும், அவர்கள் எழுதினர், “மார்க்சிச வாசிப்பாளரைப் பொறுத்தவரை ரபினோவிட்ச் வழங்கும் தகவல்களில் இருந்து ஏராளமான விடயங்களை கற்றுக் கொள்ள முடியும், அவை கூறும் அரசியல் பொருள் குறித்த அவரது மதிப்பீட்டில் பல முக்கியமான இடங்களில் கருத்து உடன்பாடு இல்லாத பட்சத்திலும் கூட.”

பிரையன் பால்மரின் தொகுதி கனனின் வாழ்க்கையின் முதல் 38 ஆண்டுகள் குறித்த ஒரு தீவிர ஆய்வை வழங்கியது. உலக தொழிற்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமைக்கு உயர்ந்தது, அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் (CPUSA) ஸ்தாபகம் மற்றும் ஆரம்ப வருடங்களில் அவரது பங்கு, அதன் பின் ஸ்ராலினிசத்திலிருந்து தீர்மானகரமாக முறித்துக் கொண்டு இடது எதிர்ப்பணிக்கு ஆதரவளித்தது, அதன் உச்சமாக அவர் CPUSA இல் வெளியேற்றப்பட்டு அமெரிக்காவின் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை ஸ்தாபித்தது ஆகியவற்றின் காலகட்டத்தை இது அலசியது.

ஃபிரெட் மெசெலிஸ் மற்றும் டோம் மக்கமேன் விளக்கியது போல, “இது தொழிலாள வர்க்க இயக்கத்தின் வரலாற்றுக்கான அதிமுக்கிய உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் விதத்திலான மிகப்பெரும் ஆராய்ச்சி மற்றும் முனைவு வேலையின் முக்கியமானதொரு வேலையாகும். கனன் மற்றும் ஆரம்ப கால கம்யூனிஸ்ட் கட்சி குறித்த ஆய்வுகளில் இது வருங்காலத்தில் ஒரு முக்கியமான ஒப்பீட்டுப் புள்ளியாக ஆகும்.”

ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை ICFI பாதுகாத்தமையானது, புரட்சிகர முன்னோக்குகளின் இன்னும் விரிந்ததொரு விளக்கத்தின் ஒரு பகுதியாகும். 2006 ஆம் ஆண்டில் வேர்க்கர்ஸ் லீக்கின் (அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடிக் கட்சி) இரண்டு முன்னாள் உறுப்பினர்களான அலெக்ஸ் ஸ்ரைனர் மற்றும் பிராங்க் பிரென்னர் - இவர்கள் இருவரும் கால் நூற்றாண்டு காலத்திற்கு அரசியல்ரீதியாக செயலற்று இருந்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது - “புறநிலைவாதமா அல்லது மார்க்சிசமா” என்ற தலைப்பின் கீழ் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் தத்துவார்த்த வேலை, அரசியல் நிலைப்பாடு, மற்றும் நடைமுறை வேலைகள் மீது கடுமையாக தாக்கும் ஒரு ஆவணத்தை வெளியிட்டனர்.

பிராங்பேர்ட் பள்ளியுடன் தொடர்புபட்ட கற்பனாவாத மற்றும் மார்க்சிச-விரோதக் கருத்தாக்கங்களில் வேரூன்றியிருந்த இந்த விமர்சனமானது, புரட்சிகர வரலாறு, மார்க்சிசத் தத்துவம் மற்றும் சோசலிச அரசியலின் மிக முக்கியமான பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது. டேவிட் நோர்த் எழுதிய மார்க்சிசம், வரலாறு மற்றும் சோசலிச நனவு அவர்களது ஆவணத்திற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உரைத்த பதிலாக அமைந்தது. இது WSWS இல் வெளியிடப்பட்டது, 2007 ஆகஸ்டில் புத்தக வடிவிலும் வெளியானது.

ஒரு நீண்டகால முக்கியத்துவத்துடனான பதிலில், நோர்த் ”WSWS ஆக....முகமாற்றம் செய்து கொண்டமைக்கும்” மற்றும் ”புரட்சிகர சர்வதேசியவாதத்தின் அமைப்புரீதியான வெளிப்பாட்டை.....அழுக்குமூட்டை போல் அடைத்து வைத்திருந்தமைக்கும்” ICFI ஐ கண்டனம் செய்தது உட்பட்ட ஸ்ரைனர் மற்றும் பிரென்னரின் வாதங்களை விரிவாக பகுப்பாய்வு செய்தார். WSWS இன் வரலாற்று முக்கியத்துவத்தை விளக்கிய நோர்த் எழுதினார்:

1998 பிப்ரவரியில் WSWS ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், அனைத்துலகக் குழுவின் கோட்பாடுகள், வரலாறு, தத்துவார்த்தக் கண்ணோட்டம் மற்றும் முன்னோக்கின் அடிப்படையில் ஒன்றுதிரட்டப்பட்ட தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் எண்ணிக்கையிலான மார்க்சிச எழுத்தாளர்களின் கூட்டு வேலையைச் செலுத்துகின்ற ஒரு சர்வதேச ஆசிரியர் குழுவினால் 18,000க்கும் அதிகமான கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டு இருக்கின்றன. தத்துவத்திலும் சரி நடைமுறையிலும் சரி WSWS புரட்சிகர சர்வதேசியவாதத்தின் அபிவிருத்தியில் ஒரு வரலாற்று மைல்கல்லைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கிறது.

ICFI இன் ”புறநிலைவாதம்” எனக் கூறி ஸ்ரைனர் மற்றும் பிரென்னர் அளித்த விமர்சனமானது  சமூகப் பொருளாதார நிலைமைகளையும் அரசியல் போக்குகளின் வர்க்கத் தன்மையையும் ஆராய்வதற்கு மார்க்சிச இயக்கம் அளித்த மையமான முக்கியத்துவத்தை நிராகரிப்பதையே அதன் மையத்தானத்தில் கொண்டிருந்தது. “கற்பனாவாத”த்தையே சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதற்கான அடிப்படையாக அவர்கள் ஊக்குவித்ததுடன் அது தொடர்புபட்டிருந்தது. சோசலிச நனவுக்கும் புறநிலை யதார்த்தத்திற்கும் இடையிலான உறவு குறித்த மார்க்சிச புரிதலை சுருங்கக் கூறும் ஒரு அதிமுக்கிய பத்தியில், நோர்த் எழுதினார்:

சோசலிச நனவு குறித்த பிரச்சினையானது ஒரு உண்மையான சமூகப் பொருளாதார நிகழ்முறை அகத்தில் ஏற்படுத்தும் பிரதிபலிப்பாக அதனை உணர்ந்து கொண்டவர்களுக்கு ஒரு வகையாக காட்சியளிக்கிறது; முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அடித்தளங்களுக்கும் சமூக சிந்தனையின் உருவாக்கத்திற்கும் இடையில் அத்தகையதொரு புறநிலையானதும் அவசியமானதுமான உறவு இருக்கவில்லை என்று கருதுபவர்களுக்கு முற்றிலும் வேறொரு வகையாகவும் காட்சியளிக்கிறது. மார்க்சிஸ்டுகளைப் பொறுத்தவரை, சோசலிச நனவுக்கான போராட்டம் என்பது முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்த பரந்த தொழிலாளர் கூட்டத்தை சமாதானப்படுத்துவதை கொண்டதல்ல. மாறாக, புறநிலையான உபரி-மதிப்புப் பிழிவு என்னும் சுரண்டல் நிகழ்முறையில் இருந்து உதயமாகி முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமடையும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியால் தீவிரமுற்று இத்தகைய போராட்டங்கள் தவிர்க்கவியலாது எழுகின்றன என்பதை அங்கீகரிப்பதில் இருந்து முன்செல்லுகின்ற மார்க்சிச இயக்கமானது, வரலாறு என்பது நியதிகளால் ஆளப்படும் ஒரு நிகழ்முறை என்ற ஒரு விஞ்ஞானப் புரிதலை, முதலாளித்துவ உற்பத்தி முறை மற்றும் அது வளர்த்தெடுக்கும் சமூக உறவுகள் பற்றிய ஒரு அறிவை, மற்றும் நடப்பு நெருக்கடியின் உண்மைத் தன்மை மற்றும் அதன் உலக-வரலாற்று சம்பந்தங்கள் குறித்த ஒரு ஆழமான உட்பார்வையை தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவுகளுக்குள்ளாக அபிவிருத்தி செய்வதற்கு பாடுபடுகிறது. உலக முதலாளித்துவ நெருக்கடி தீவிரமடைவதை முன்கணித்து அதன் விளைவுகளுக்குத் தயாரிப்பு செய்வது, நிகழ்வுகளின் தர்க்கரீதியான பாதையை தோலுரித்துக்  காண்பது, மற்றும் உரிய அரசியல் பதிலிறுப்பை மூலோபாயரீதியாகவும் தந்திரோபாயரீதியாகவும் சூத்திரப்படுத்துவது என ஒரு நனவற்ற வரலாற்று நிகழ்முறையை நனவானதொரு அரசியல் இயக்கமாக உருமாற்றும் விடயமாகும் இது.

Featured material

 

சோசலிச சமத்துவக் கட்சிப் பிரச்சாரங்கள்

அந்த ஆண்டின் போது, ஆஸ்திரேலியாவில் மாநில மற்றும் மத்திய தேர்தல்களில் பூர்வகுடி மக்களை மோசமாக நடத்துவதற்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தும் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி தொடர்ச்சியான முக்கியமான பல அரசியல் தலையீடுகளை மேற்கொண்டது. இதில் நியூ சவுத் வேல்ஸ் தேர்தல்களில் போட்டியிட்டது, குவாண்டனமோ குடாவில் டேவிட் ஹிக்ஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டதில் ஆஸ்திரேலியாவின் ஒத்துழைப்பை அம்பலப்படுத்துவதற்கான ஒரு பிரச்சாரம், அத்துடன் ஹோவார்ட் அரசாங்கத்தின் பூர்வகுடிமக்கள்-விரோத வட பிராந்திய தலையீட்டுக்கு எதிர்ப்பு ஆகியவை அடங்கும்.

பூர்வகுடிமக்கள் மீது ஆஸ்திரேலிய அரசாங்கம் இராணுவ-போலிஸ் ஆட்சியைத் திணிக்கிறது என்ற ஒரு அறிக்கையை சோசலிச சமத்துவக் கட்சி ஜூன் 22 அன்று வெளியிட்டது. தனியாக பூர்வகுடி சமூகங்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்திற்கு விரிவுபடுத்தப்படும் என்பதை அந்த அறிக்கை விளக்கியது.

பூர்வகுடி மக்களின் நிலங்களை சுரண்டலுக்கும், தனியார் வீட்டுவசதித் துறைக்கும், மற்றும் சுரங்கத் தொழில், சுற்றுலாத் தொழில் மற்றும் விவசாயம் போன்ற வணிக நிறுவன இலாபங்களுக்குமாய் திறந்து விடுவது தான் அரசாங்கத் திட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது என்பதை அடுத்து வந்த ஒரு ஆய்வு விளக்கியது. “பொருளாதார ரீதியாக போட்டித்திறனற்ற” சமூகங்கள் அரசாங்க நிதியாதாரமில்லாமல் செய்யப்பட்டு மூடப்படும், அச்சமூகவாசிகள் நல உதவி வேலைத்திட்டங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு மலிவு உழைப்பு திட்டங்களுக்குள் தள்ளப்படுவார்கள்.

இலண்டன் நிலத்தடி ரயில் பாதைகளிலான 2005 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல்களில் உதவியதாகச் சொல்லி எந்த வித விசாரணையும் இன்றி ஹோவார்ட் அரசாங்கம் மற்றும் உளவுத் துறை முகமைகளால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த இளம் மருத்துவரான டாக்டர் முகமது ஹனீபை SEP பாதுகாத்தது. ஹனீபுக்கு பெயில் வழங்க உத்தரவிட்ட நீதிமன்ற ஆணையை ஏற்க வழக்கு தொடுத்தவர்கள் மறுத்த நிலையில், ஹனீபின் வழக்கறிஞர் ஹனீப் குற்றமற்றவர் என்பதை தெளிவாக நிரூபணம் செய்யும் ஆவணங்களை வெளியிட்டு பதிலிறுப்பு செய்ததை அடுத்து, அரசாங்கம் அவர் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட்டு அவரை விடுதலை செய்ய தள்ளப்பட்டது. இவ்வாறாக அரசியல்ரீதியான இந்த இட்டுக்கட்டல் வழக்கு ஹோவார்ட் அரசாங்கத்திற்கு ஒரு அரசியல் படுதோல்வியாக ஆனது.

இறுதியாக, அக்டோபரிலும் நவம்பரிலும் கூட்டரசாங்கத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தியது. வலது-சாரி ஹோவார்ட் அரசாங்கத்தின் மீதான பெருவாரியான வெகுஜன குரோதத்தின் காரணத்தால் வெல்லும் அனுகூலத்தைப் பெற்றிருந்த எதிர்க்கட்சியான தொழிற் கட்சியின் மீது எந்தப் பிரமைகளையும் வளர்த்துக் கொள்வதற்கு எதிராக அது எச்சரித்தது.

வாக்காளர்கள் வாக்குச் சீட்டில் இருக்கும் அத்தனை கட்சிகளையுமே விருப்பரீதியாக வரிசைப்படுத்தி தேர்வு செய்தாக வேண்டும் என்ற ஆஸ்திரேலிய வாக்களிப்புமுறையின் கீழ் எந்தக் கட்சியுடனும் வாக்குகளை மாற்றிக் கொள்வதற்காய் எந்த உடன்பாட்டுக்கும் செல்வதை, ஒரு கோட்பாட்டுப் பிரச்சினையாக சிந்தித்து, SEP நிராகரித்தது. மற்ற கட்சிகளை ஏதோவொரு வரிசையில் இட SEP வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தது. தொழிற் கட்சிக்கோ அல்லது பசுமைக் கட்சியினருக்கோ இதில் முன்னுரிமை எதனையும் கொடுக்கவில்லை. இந்த இரண்டு முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எடுபிடிகளைப் போல தேர்தலில் பங்கேற்ற போலி-இடது குழுக்களின் கொள்கைக்கு இது நேரெதிரானதாக அமைந்ததாகும்.

பிரிட்டனில் ஸ்காட் நாடாளுமன்றத்திற்கும் வேல்ஸ் சட்டமன்றத்திற்கும் நடந்த தேர்தல்களில் SEP வேட்பாளர்களை நிறுத்தியது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க ஏகாதிபத்திய மூர்க்கத்தனத்தை குற்றத்தன்மை கொண்டு ஆதரித்த ஒரு பெருஞ் செல்வந்தர்களது அரசாங்கத்திற்கு எதிரான ஒரு புதிய சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்ய எங்களது பிரச்சாரம் போராடியது.

தேசியவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கும், இனவாதம், மற்றும் இன மற்றும் மதப் பேரினவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்காக போராடுவதே பிரச்சாரத்தின் மையமான அம்சமாக இருந்தது. ஸ்காட்டிய அல்லது வேல்ஷ் தேசியவாதத்தை ஒரு புதிய தொழிலாளர் கட்சியைக் கட்டியமைப்பதற்கான அடிப்படையாகச் சித்தரிப்பதற்கு முயற்சிகள் செய்யப்பட்ட நிலையிலும், ஆங்கிலேய ஆட்சி தான் இந்த நாடுகளிலான பிரச்சினைகளுக்கு காரணம் என்பதான ஸ்காட்டிய தேசியக் கட்சி (SNP) மற்றும் பிளெய்ட் சிம்ருவின் வாதங்களுக்கு ஆதரவாக முயற்சிகள் நடந்து வந்த நிலையிலும், இந்தப் பிரச்சாரம் குறிப்பான முக்கியத்துவத்தை பெற்றது. நாங்கள் எமது தேர்தல் பிரச்சார அறிக்கையில் விளக்கினோம்: தேசியப் பிரிவினைவாதத்திற்கும் சோசலிசத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. உள்நாட்டு மூலதனத்துடனும், நாடு கடந்த நிறுவனங்களுடனும், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் தமது சொந்த உறவுகளை உருவாக்கிக் கொள்ள விழையும் அபிலாசையுடனான நடுத்தர வர்க்க அடுக்கு ஒன்றின் நலன்களையே இது வெளிப்படுத்துகிறது.

இலங்கையில் வடக்கு நகரான யாழ்ப்பாணத்தின் அருகிலுள்ள கெய்த்ஸ் தீவைச் சேர்ந்த கட்சி உறுப்பினரான நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பரான சிவநாதன் மதிவாணன் ஆகிய இருவரும் இரண்டு கடலோரச் சோதனைச் சாவடிகளுக்கு இடையில் பயணம் செய்கையில் காணாமல் போன சம்பவத்தில், அவர்கள் இருவருக்காகவும் SEP அந்த ஆண்டு முழுவதும் போராடியது.

SEP இன் தொடர்ந்த பொதுப் பிரச்சாரத்தின் காரணமாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம், காணாமல் போனவர்கள் குறித்த ஒரு விசாரணைக்குத் தள்ளப்பட்டது. போலிசாரும் இராணுவ அதிகாரிகளும் இந்த விசாரணையையும் இதற்கடுத்து வந்த விசாரணைகளையும் பெருமளவில் புறக்கணித்தனர் என்றபோதும் இந்த விசாரணைகள் விமலேஸ்வரனும் அவரது நண்பரும் பாதுகாப்புப் படையினரால் தான் கைது செய்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற உணர்வூட்டுகின்ற கணிசமான ஆதாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன. SEPம் காணாமல் போன இருவரின் மனைவியரும் தொடர்ந்து இந்தப் பிரச்சினையை எழுப்பிக் கொண்டிருந்த நிலையில், HRC விசாரணை குயுக்தியாக மூடப்பட்டது.

பிரிட்டனில் நடந்த ஒரு துயரகரமான கார் விபத்தில் தோழர் ரவீந்திரநாதன் செந்தில் ரவி அகால மரணம் அடைந்தார். இது அனைத்துலகக் குழுவுக்கு ஒரு பெரும் இழப்பாக அமைந்தது. யாழ்ப்பாணத்தில் பிறந்த செந்தில், 1987 ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து பாரிசுக்கு புலம்பெயர்ந்தார். பாரிசில் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களுடன் தொடர்பு உருவானதை அடுத்து, புலம் பெயர்ந்த தமிழர்களிடையே அனைத்துலகக் குழுவின் செல்வாக்கைக் கட்டியமைக்க அவர் பாடுபட்டார். இலங்கையில் LSSP இன் காட்டிக் கொடுப்பையும் அதற்கு எதிராய் RCL இன் கோட்பாட்டுடனான போராட்டத்தையும் புரிந்து கொண்டு ட்ரொட்ஸ்கிச இயக்கம் பெற்ற படிப்பினைகளை முழுவதுமாய் உட்கிரகித்துக் கொள்ள செந்தில் போராடி வந்தார். 2000 இல் ஆரம்பிக்கப்பட்ட WSWS இன் தமிழ் மொழிப் பிரிவை இந்தியத் துணைக்கண்டத்தில் ICFI ஐக் கட்டுவதற்கான ஒரு தீர்மானகரமான கருவியாக அவர் ஏற்றுக் கொண்டார்.

Featured material

 

 

 
ரென்டிஷன் திரைப்படத்தில் ஒரு காட்சி

கலை, கலாச்சாரம் மற்றும் அறிவியல்

WSWS இன் கலாச்சாரப் பிரிவின் வருணனைக்கான தொனி, ஜனவரியில் ஒன்டாரியோ, டொரான்டோவில் இருக்கும் யார்க் பல்கலைக்கழக பட்டதாரி திரைப்படிப்பு மாணவர்கள் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் கலைப் பிரிவின் ஆசிரியர் டேவிட் வோல்ஷ் ஆற்றிய உரையில் உருவாகியிருந்தது. திரைப்படம், வரலாறு, மற்றும் சோசலிசம் என்ற தலைப்பில் பேசிய வோல்ஷ், சினிமா மற்றும் கலை இரண்டிலுமே ஒட்டுமொத்த அரசியல் சூழல் வெளிப்பாடு தான் பொதுவான நெருக்கடியாக இருக்கிறது, ஆனால் சோசலிசக் கலாச்சாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் மட்டுமே அது வெல்லப்பட முடியும் என்று விளக்கினார்.

1930கள் மற்றும் 1940களில் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த ஐரோப்பிய திரைப்பட படைப்பாளிகள், சோசலிசக் கருத்தாக்கங்களால் செல்வாக்கு செலுத்தப்பட்ட அரசியல் புரிதலையும் தம்முடன் சேர்த்து அழைத்து வந்த ஹாலிவுட்டின் பொற்காலத்தை வோல்ஷ் நினைவுகூர்ந்தார். வோல்ஷ் கூறினார்:

முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் குறித்து கலைஞர்களுக்கு மார்க்சிஸ்டுகளுடன் உடன்பாடில்லாமல் இருக்கலாம், ஆனால் நடப்பு சமூகமானது வெளியேறிக் கொண்டிருக்கிறது; வருங்கால மனித ஒழுங்கமைப்பின் கலாச்சார பிரச்சினைகளுக்கு சிந்தனை செலுத்தப்பட்டாக வேண்டும் என்ற ஒரு பொதுவான, உள்ளுணர்வுடனான ஏற்பு பாரிஸில், பேர்லினில், இலண்டனில், வியன்னாவில், புடாபெஸ்டில் மற்றும் மாஸ்கோவில் உள்ள மிகவும் ஆழமாய் சிந்திக்கக் கூடிய புத்திஜீவிகளிடையே இருக்கிறது.

2006 ஆம் ஆண்டை விட ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் 2007 ஆம் ஆண்டில், மதிப்பு மிக்கதோ குறைந்ததோ, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களைக் கையாளும் ஏராளமான படங்கள் வெளியாகின. Redacted, Rendition, மற்றும் Battle for Haditha என்ற அருமையான ஒரு படம் ஆகியவையும் இதில் அடங்கும். Pan’s Labyrinth, The Good Shepherd, Children of Men, மற்றும் Michael Clayton போன்ற திரைப்படங்களும் கூட மிகுந்த திறனாய்வுடனான ஒரு அணுகுமுறையைக் கொண்டிருந்தன.

கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கிய இரண்டு திரைப்படங்கள் ஐவோ ஜிமாவில் நடந்த இரண்டாம் உலக யுத்தத்தை ஜப்பானிய மற்றும் அமெரிக்க கண்ணோட்டங்களில் காட்டியது. சுரிபாஷி மலை மீது கொடி நாட்டிய சிறப்பு மிகுந்த (மற்றும் நாடகம் போன்ற) நிகழ்வில் பங்கெடுத்த மூன்று சிப்பாய்களை அமெரிக்க அதிகாரிகளும் ஊடகங்களும் எத்தனை சிடுமூஞ்சித்தனமாக சுரண்டிக் கொண்டன என்பதை Flags of Our Fathers  திரைப்படம் சித்தரித்தது.

Letters from Iwo Jima  இன்னும் அம்சமானதொரு படமாக இருந்தது. போர்க்களத்தில் உயிரிழந்த ஜப்பானியப் படைவீரர்களது வெளியான கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு அனுதாபகரமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. டேவிட் வால்ஷ் எழுதினார்:

உங்களது படைவீரர்களது துயரங்களைக் குறித்து படமெடுப்பது ஒரு விடயம், எதிரியின் மீது செலுத்தப்படும் பயங்கரங்களைக் குறித்து படமெடுப்பது என்பது முற்றிலும் வேறான இன்னொரு விடயம். எண்ணிலடங்கா உயிர்களையும் பில்லியன்கணக்கான டாலர்களையும் காவு வாங்கியிருக்கும் புஷ் நிர்வாகத்தின் முடிவற்ற பயங்கரவாதத்தின் மீதான போருக்கு நடுவில் இந்தப் படைப்பு உருவாக்கப்பட்டிருப்பதில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. 1998 இல் சேவிங் பிரைவேட் ரையான் வந்ததற்குப் பிறகு அமெரிக்க திரைப்பட உருவாக்கம் குறைந்தபட்சம் கொஞ்ச தூரமேனும் கடந்து வந்திருக்கிறது.

மைக்கேல் மூரின் புதிய படைப்பான சிக்கோ, அவரது 2004 போர் எதிர்ப்பு ஆவணப்படமான ஃபாரன்ஹீட் 9/11 இல் இருந்து ஒரு படி குறைவு தான் என்று வால்ஷ் விமர்சனமளித்தார். மகிழ்ச்சியூட்டும் - பல சமயங்களில் மலிவாக - என்று மூரே கருதும் சில இடங்களில் படம் நீண்ட நேரமெடுக்கிறது, பெரிய பிரச்சினைகளைச் சட்டெனக் கடந்து சென்று விடுகிறது. WSWS இன் திறனாய்வாளர்கள் பல முக்கிய திரைப்பட விழாக்களில் பங்குபெற்றனர். மைக்கேலேஞ்சலோ அண்டோனியோனி, இங்மார் பேர்க்மேன், மற்றும் ஜோன் ஹஸ்டன் போன்ற இயக்குநர்களின் மதிப்பீடுகளை தளம் வெளியிட்டது.

நாடக அரங்கைப் பொருத்தவரை, ஹங்கேரியில் பிறந்த நாடகாசிரியர் ஜோர்ஜ் டபோரி (1914-2007) இன் நினைவஞ்சலியை WSWS வெளியிட்டது. அதேபோல் ஈராக்கின் ஃபலுஜா நகரின் மீதான அமெரிக்க முற்றுகை குறித்து பிரிட்டனில் இருந்து வெளியான முக்கியமானதொரு நாடகமான ஃபலுஜா, மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த ரஷ்ய புரட்சிகரவாதிகளின் வாழ்க்கையை நாடகமாக்கிய டாம் ஸ்டாப்பார்டின் The Coast of Utopia ஆகிய நாடகங்கள் மீதான திறனாய்வுகளும் இடம்பெற்றன.

ஆலென் கின்ஸ்பெர்கின் (1926-1970) பிரபலமான ஹவுல் என்கிற கவிதை வெளியிடப்பட்ட 50வது ஆண்டு தினம் குறித்த ஒரு கட்டுரை, அதேபோல எமிலி கார் (1871-1945) என்கிற கனடாவின் ஒரு ஓவியரது படைப்பு மீதான ஆய்வுக் கட்டுரையும் WSWS இல் வெளியானது.

இசைப் பிரிவில், ஜேம்ஸ் பிரவுன் (1933-2006) நினைவஞ்சலியை ரிச்சர்ட் பிலிப்ஸ் எழுதியிருந்தார். பெருமந்தநிலை காலத்தில் சவுத் கரோலினாவின் வறுமை சூழ்ந்த பார்ன்வெல் பகுதியில் வளர்ந்து அமெரிக்காவில் மகத்தான ரிதம் அன் ப்ளூ பாடகர்களில் ஒருவராக அவர் அபிவிருத்தி கண்டது எப்படி என்பதை அக்கட்டுரையில் ரிச்சர்ட் பிலிப்ஸ் அலசினார்.

இயற்கை அறிவியல் வட்டத்தில் WSWS சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு, அதிலும் குறிப்பாக புவி வெப்பமாதல் என்பதே மனித நடவடிக்கையின் விளைவு தான் என்கிற அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு, கணிசமான கவனத்தைச் செலுத்தியது. காலநிலை ஆய்வுகளில் பெரும் எண்ணெய் வணிகங்களது சார்பிலான அரசியல் தலையீடு என்பது துரிதமாய் வளர்ந்து கொண்டிருந்தது என்பதற்கான கருத்துகளை WSWS ஆராய்ந்தது, வெளிக் கொண்டுவந்தது. கியோட்டோவின் ஐநா பசுமை வாயு வெளியீடு பரிவர்த்தனைத் திட்டம் என்பது இலாபமெடுப்பதற்கான வசதியான மூலம் என்பதை அம்பலப்படுத்தும் கட்டுரைகளை WSWS வெளியிட்டது. புவி வெப்பமடையக் காரணமான வாயு வெளியீடுகளை வருங்காலத்தில் குறைப்பதற்கு பங்களிப்பு செய்யக் கூடிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதில் இந்தத் திட்டம் முட்டுக்கட்டை போட்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது.

இரண்டு பகுதிகளாக ஆஸ்திரேலிய SEP விடுத்த ஒரு அறிக்கையானது 2007 பெடரல் தேர்தலில் காலநிலை மாற்றப் பிரச்சினையை எழுப்பியது. காபன் பரிவர்த்தனை திட்டம், கார்பன் சரிசெயல், மற்றும் பசுமைக் கட்சியினர் உட்பட ஆஸ்திரேலியாவின் ஸ்தாபக அரசியல் கட்சிகள் அத்தனையும் கொடுக்கும் திவாலான தீர்வுகள் ஆகியவை குறித்த ஒரு விரிவான அம்பலப்படுத்தலை இந்த அறிக்கை வழங்கியது.

நாத்திகம் குறித்து 2007 இல் வெளியான ஏராளமான புத்தகங்களின், இதில் மிக முக்கியமானது பிரபலமான பரிணாம உயிரியல் அறிஞரான ரிச்சர்டு டாகின்ஸ் எழுதிய The God Delusion என்கிற புத்தகம், மீதான ஒரு தத்துவார்த்த மற்றும் அரசியல் மதிப்பீட்டையும் WSWS வெளியிட்டது. டாகினது அணுகுமுறையின் வலிமைகள் மற்றும் வரம்புகளை WSWS ஆராய்ந்தது. டாகின்ஸ் புத்தகத்தின் மீதும், அதேபோல சாம் ஹாரிஸ் எழுதிய இன்னும் பிற்போக்குத்தனமானதொரு புத்தகத்தின் மீதான திறனாய்வும், வரலாற்றுவழியல்லாத நாத்திகத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான இஸ்லாமிய-விரோத மற்றும் வலது-சாரி ஆதரவுக்கும் இடையிலான தொடர்பை சுட்டிக் காட்டியது.