World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Vote for the Socialist Equality Party in the German parliamentary elections

For a socialist answer to the capitalist crisis

ஜேர்மனிய பாராளுமன்றத் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிப்பீர்

முதலாளித்துவ நெருக்கடிக்கு ஒரு சோசலிச பதில்

18 August 2009

Use this version to print | Send feedback

ஜேர்மனிய கூட்டாட்சிக் குடியரசு நிறுவப்பட்ட காலத்திலிருந்து, மிகப் பெரிய பொருளாதார மந்தநிலைக்கு இடேயே இடையே, 2009ம் ஆண்டின் ஜேர்மனிய பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மில்லியன்கணக்கான தொழிலாளர்கள், வேலை இழப்புகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை தரங்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், இந்த நெருக்கடியை தோற்றுவித்தவர்கள் இப்பொழுது புதிய மட்டத்திலான செல்வம், மற்றும் இலாபங்களை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆளும் உயரடுக்கு, இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி பல தலைமுறைகளாக தொழிலாள வர்க்கம் போராடிப் பெற்ற சமூகநலன்கள் அனைத்தையும் தகர்க்க நினைக்கின்றனர். தொழிலாளர்கள் நிரந்தர பொருளாதார பாதுகாப்பற்ற தன்மையை எதிர்கொண்டிருக்கும் நிலையில், Deutsche Bank மிக அதிக இலாபங்களைப் பெற்றது, மேலும் DAX பங்குச்சந்தைகளின் பட்டியலில் உள்ள அதன் நிர்வாகிகள் கடந்த ஆண்டு சராசரியான 3.8 மில்லியன் யூரோக்களைப் பெற்றனர். அதே ஆண்டில், வரி செலுத்துவோர் நிதியைக் கொண்டு பெருமளவில் பிணையெடுப்பு பெற்ற வோல் ஸ்ட்ரீட் வங்கிகள், நிர்வாகிகளுக்கு $33 பில்லியனை போனஸாக (bonuses) வழங்கின.

மத்திய பாராளுமன்றத்திலுள்ள எந்த அரசியல் கட்சியும், உலகப் பொருளாதாரத்தைச் சரிவின் விளிம்பிற்கு கொண்டு வந்த நிதிய தன்னலக்குழுவின் பொறுப்பற்ற செயல்கள் மீது கடுமையான தடைகளைச் சுமத்தத் தயாராக இல்லை. இதற்குக் காரணம் இக்கட்சிகள் அனைத்தும், மாபெரும் நிதிய நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றிற்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளன என்பதுடன், அவற்றினால் கட்டுப்படுத்தவும் படுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gelichheit-PSG) இத்தேர்தலில் பங்கு பற்றி, வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மற்றும் பேர்லின் மாநிலங்களின் அதன் பிராந்திய பட்டியலில் வேட்பாளர்களை நிறுத்த முடிவெடுத்துள்ளது. எங்கள் பிரச்சாரத்தின் நோக்கம், தொழிலாளர்கள் சுயாதீன முறையில் அதன் நலன்களுக்காக அரசியலில் குறுக்கீடு செய்வதற்கு வசதியாக ஒரு புதிய கட்சியைக் கட்டமைப்பதாகும். எந்த தனி சமூக அல்லது அரசியல் பிரச்சினையையும் நிதிய தன்னலக்குழுக்களின் பொருளாதார, அரசியல் பிடியை முறிக்காமல் தீர்ப்பதென்பது இயலாத காரியமாகும்.

நாங்கள் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்கிறோம்: சமூகத்தின் தேவைகள், மூலதனத்தின் சொந்தக்காரர்களுடைய இலாப நலன்களைவிட அதிக முன்னுரிமை பெற வேண்டும், பொருளாதாரத்தின் நெம்புகோல்களான வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பெரிய தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவை பொதுவுடைமை நிறுவனங்களாக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் மாற்றப்பட வேண்டும்.

நாங்கள் சர்வதேசியவாதிகள். பூகோளமயமாக்கலுக்கு எங்கள் விடையிறுப்பு, தேசிய எல்லைகளை வலுப்படுத்தி ஒரு நாட்டில் இருக்கும் தொழிலாளர்களின் வேலைகளை மற்ற நாட்டுத் தொழிலாளர்களின் இழப்பில் பாதுகாப்பது அல்ல. மாறாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதாகும். தொழிலாளர்கள் எங்கு வசிக்கிறார்கள், அவர்களின் தேசியம், தோலின் நிறம் அல்லது மதம் பற்றி பொருட்படுத்தாமல், நாங்கள் அனைத்து தொழிலாளர்களின் நலன்களையும் பாதுகாக்கிறோம்.

பெருகிவரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களையும் பாதிக்கிறது. ஒரு சமூகப் புயல் உலகெங்கிலும் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஜேர்மனியிலும், உலகெங்கிலும் சமூக மக்கள் போராட்டங்களின் தவிர்க்க முடியாத எழுச்சி உண்டாவதற்கு, தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் தயாரிக்க முற்படுகிறோம். அதே போல், அவர்களை வெற்றிக்கு இட்டுச் செல்வதற்கு ஒரு சர்வதேச, சோசலிச மூலோபாயத்தையும் வழங்க முற்படுகிறோம். எங்கள் நோக்கம் முதலாளித்துவத்தின் சக்தியை முறித்து, ஒரு தொழிலாளர்கள் அரசாங்கத்தை நிறுவி, உண்மையான ஜனநாயகம், சமூக சமத்துவம் என்ற ஒழுங்கை நிறுவுவதற்கான ஒரு பாரிய சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பதாகும்.

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் சிந்தனைகளைத் தொழிலாளர்களின் பல தலைமுறைகளுக்கு கற்பித்த சமூக ஜனநாயகத்தின் ஆரம்ப ஆண்டுகளின் அடித்தளத்திலும்; சமூக ஜனநாயகத்தினுள் சந்தர்ப்பவாத வளர்ச்சியையும், முதல் உலக யுத்தத்தின் தொடக்கத்தில் அதன் நிபந்தனையற்ற சரணடைவையும் எதிர்த்த லெனின், ரோசா லுக்சம்பேர்க் மற்றும் கார்ல் லீப்னெட் ஆகியோரின் அடித்தளத்திலும்; இடது எதிர்ப்பு மற்றும் ஸ்ராலினிசத்தின் குற்றங்களுக்கு எதிராகப் போராடியவரும், 1938ல் நான்காம் அகிலத்தை நிறுவியவருமான லியோன் ட்ரொட்ஸ்கியின் அடித்தளத்திலும்; மற்றும் இக்கொள்கைகளை 1953லிருந்து பாதுகாத்து வரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்துடனுமான ஒரு சக்தி வாய்ந்த மரபின் அடித்தளத்தில் எம்மை நாங்கள் நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம்.

ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருக்கும் எங்கள் சக சிந்தனையாளர்களுடன் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்த நாங்கள் ஒற்றை சர்வதேச கட்சியை உலக சோசலிசத்திற்காக கட்டமைக்கின்றோம்.

எங்கள் இணையதள வெளியீடான உலக சோசலிச வலைத் தளம் உலகம் முழுவதும் வாசகர்களை ஈர்த்துள்ளதுடன், பெருகிய முறையில் மார்க்சிசத்தின் உண்மையான குரல் என்று அறியப்பட்டுள்ளது.

சமூக ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்கங்களின் வீழ்ச்சி

ஒரு காலத்தில், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிபலிப்பதாக கூறிக் கொண்டன. இன்று அவற்றின் கோழைத்தனம் மற்றும் அடிபணிந்து நிற்கும் தன்மைக்கும் எந்த வரம்பும் இல்லை. இன்று அவை வங்கிகள், முதலாளிகள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து வேலைகளையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்களை அழிக்கவும் ஒத்துழைக்கின்றன.

அதன் தேர்தல் அரங்கில்"ஜேர்மன் திட்டத்தில்"தொழிலாளர்களின் இழப்பில் ஜேர்மன் வணிக நலன்களை வலுப்படுத்துவது தான் கட்சியின் இலக்குகள் என்பதை துணை அதிபரும் சமூக ஜனநாயகக் கட்சி தலைவருமான பிராங்க் வால்ட்டர் ஸ்ரைன்மையர் (Frank-Walter Steinmeier) தெளிவுபடுத்தியுள்ளார். இத்திட்டம் வெளிப்படையாகக் கூறுவது: "செழுமை என்பது தனிநபர்கள், முயற்சிகளின் சுதந்திரம் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டது என்பதை நாங்கள் அறிவோம்." "செல்வத்தைச் சமத்துவமாக பிரிக்கும் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் கூறுவதையும் கொண்ட ஒரு நாட்டை" சமூக ஜனநாயகக் கட்சி திட்டவட்டமாக நிராகரிக்கிறது. அதாவது அரசாங்கம் சமூக சமத்துவத்தை வளர்ப்பதை எதிர்க்கிறது.

ஸ்ரைன்மையரின் "ஜேர்மன் திட்டம்" முன்னாள் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரின் (Gerhard Schröder) 2010 செயற்திட்டத்தின் தொடர்ச்சியாகும். ஆட்சியில் இருந்த கடந்த 11 ஆண்டுகளின் போதும், சமூக ஜனநாயகக் கட்சி நிதியச் சந்தைகளைக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, செல்வந்தர்களுக்கு வரியைக் குறைத்து, நீண்ட காலம் வேலையில்லாமல் இருப்பவர்களுடைய வருமானத்தை அற்பத்தொகையாக குறைத்தது (Hartz IV திட்டம்). அது வங்கிகள் ஊக வகையில் கோலகலமாக செயல்படுவதற்கு அனைத்து முன்னிபந்தனைகளையும் நிறுவியது, பின்னர் பொருளாதார குமிழி உடைந்த போது, பில்லியன்கணக்கான பொது நிதியை அவற்றிற்கு அளித்தது.

இப்பொழுது அது தொழிலாள வர்க்கம் இதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பு, "கடன் குவிப்பின் மீது தடை" என்பதை ஜேர்மனிய அரசியலமைப்பில் சேர்த்துள்ளது; அது, வருங்கால அரசாங்கங்கள் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட பில்லியன் கணக்கான பணத்தை மீண்டும் அடைவதற்கு பொதுநலச் செலவுகளை அதிகம் குறைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இந்த அரசியலமைப்பு விதி தவிர்க்க முடியாமல் செப்டம்பர் 27 அன்று வாக்குச்சாவடிகள் மூடப்பட்டவதற்கு முன், முன்னர் கொடுக்கப்பட்ட அனைத்து சமூக முன்னேற்றம் பற்றிய உறுதிமொழிகளையும் இல்லை என்று ஆக்கிவிடும்.

தொழிற்சங்கங்களும், சமூக ஜனநாயகக் கட்சியுடன் நெருக்கமாகப் பிணைந்த தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களில் இருக்கும் அவற்றின் உறுப்பினர்களும், தொழிலாளர்களைச் சுரண்டுவதில் நிர்வாகத்தின் திறமையான கருவியாக செயல்படுகின்றனர். இதற்குச் சரியான உதாரணம், IG Metall மற்றும் Opel நிறுவனத்தில் இருக்கும் அதன் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களுமாகும். பல வாரங்கள், அவை தொழிற்சங்க அமைப்பின் நலன்களுக்கு உத்தரவாதம் கொடுக்கத் தயாராக இருக்கும் எந்த நிதிய சுறாமீனுக்கும், GM உடைய ஐரோப்பியப் பிரிவு விற்கப்படுவதற்கு ஆதரவு கொடுத்தனர். IG Metall அதிகாரிகளுடைய பதவிகளும் மற்றும் வருமானங்களும் பாதுகாப்பாக இருக்கும் வரை 12,000 வேலைகளைத் தியாகம் செய்வது அவற்றிற்கு பிரச்சினை இல்லை. "தொழிற்சங்கம்" என்று அழைத்துக் கொள்ளுவது, நாடெங்கிலும் இருக்கும் கார் தொழிலாளர்களின் வேலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, அவர்களை ஒன்று திரட்ட மறுக்கிறது. தனித்தனி தொழிற்சாலைகள் மற்றவற்றிற்கு எதிராகப் போராடுதல் என்ற கருத்தால், ஒற்றுமை உணர்வு என்ற கொள்கை நீண்ட காலத்திற்கு முன்னரே மாற்றப்பட்டுவிட்டது. தொழிற்சங்க செயலர்கள் இணை மேலாளர்களாகி விட்டதுடன், கூட்டுப் போராட்டம் ஒவ்வொன்றையும் நாசப்படுத்துகின்றனர். தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் தொழிலாளர்களைக் காட்டிக் கொடுப்பதற்கு நல்ல வருமானம் பெறுகின்றனர்.

இந்த இழிசரிவின் மிகப் புரையோடிய வடிவத்தை, ஒஸ்கார் லாபொன்டைனின் (Oscar Lafontaine) இடது கட்சியில் காணலாம். "இடதுசாரி போல் பேசு, வலதுசாரி போல் நட" என்ற கொள்கையை அது கட்சித் திட்டமாக மாற்றியுள்ளது. இடது கட்சி "சமூக அநீதி" பற்றி உரத்த குரலில் புகார் கூறுகிறது. ஆனால் எங்கு அதிகாரத்தில் இருந்தாலும், அது தன்னை மட்டுமே தீவிரமாக வளர்த்து கொள்கிறது. எந்த கூட்டாட்சி மாநிலமும், மக்கள் பொதுநலச் செலவுகளைத் தொடர்ந்து பேர்லின் போல் குறைத்ததில்லை. அங்குத்தான் இடது கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி கூட்டணியின் அங்கமாக எட்டு ஆண்டுகளாக ஆட்சி புரிகிறது. சோசலிச குரல் கொடுக்கும் சொற்றொடர்களை எப்பொழுதாவது இடது கட்சி பயன்படுத்தினாலும், அது முதலாளித்துவ சொத்துரிமை உறவுகளைக் காப்பதுடன், அரசாங்கத்தின் வங்கிமீட்புத் திட்டத்திற்கு மாற்றீடு எதையும் அளிக்கவில்லை.

தங்களை "சோசலிஸ்ட்டுக்கள்" என்று அழைத்துக் கொள்ளும் Socialist Alternative (SAV), marx21 ஆகிய பல குழுக்கள் இடது கட்சியில் சேர்ந்துள்ளன. தங்கள் ஆதரவுடன் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கும் இயக்கத்தைக் கட்டமைக்க முடியும் என்று அவை கூறுகின்றன. இது அடிப்படையிலேயே தவறாக உள்ளது. முதலாளித்துவத்தை சீர்திருத்தும் வாய்ப்பு உண்டு என்ற போலித் தோற்றத்தை வளர்ப்பதின் மூலம், ஓர் உண்மையான சோசலிச இயக்கத்தை ஒடுக்குவது தான் இடது கட்சியின் உண்மையான பாத்திரமாகும். இது ஏமாற்றத்திற்கும், தோல்விக்கும் மட்டுமே வழிவகுக்கும் என்பதுடன், இதிலிருந்து வலதுசாரி சக்திகள் இலாபம் அடைய முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி, இடது கட்சியை அரசியல் எதிரி என்று தான் கருதுகிறது. ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தைத் தொழிலாள வர்க்கத்திற்காக கட்டமைப்பது என்ற எங்களின் நோக்கம், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடது கட்சியுடன் முறித்துக் கொண்டு, தொழிற்சங்கங்களுக்கு எதிராக எழுச்சியை வழிநடத்துவதின் மூலம்தான் சாத்தியமானது.

தற்போதைய நெருக்கடி ஒன்றும் திடீரென வானில் இருந்து இறங்கிவிடவில்லை. வரலாற்றுரீதியாக காலம் கடந்துவிட்ட ஒரு சமூக அமைப்புமுறையின் விளைவு தான் இது. 1914 மற்றும் 1945க்கு இடையே ஏற்பட்ட இரண்டு உலக யுத்தங்களின் மற்றும் பாசிசத்தின் காட்டுமிராண்டித்தனங்களுக்குள் மனிதகுலத்தை தள்ளிய அதே முரண்பாடுகள் தான் இப்பொழுது மீண்டும் எழுந்துள்ளன. உற்பத்தி முறையில் தனியார் உடமை என்பது தற்கால உற்பத்தி முறையுடன் சமரசப்படுத்தப்பட முடியாது. இது பல மில்லியன்கணக்கான மக்களை ஒன்றாக இணைத்திருப்பதுடன், அவர்கள் ஒருவரையொருவர் சார்ந்திருக்க செய்துள்ளது. உலகை போட்டியிடும் தேசிய அரசுகளாக பிரித்தல் என்பது தற்கால உற்பத்திமுறையின் பூகோளமயமாக்கப்பட்ட இயல்புடன் இயைந்திருக்க முடியாது.

பங்குச்சந்தைகள் தற்பொழுது பெரும் பங்கு விலைகளின் உயர்வால் களிப்புற்றாலும், நிலைமையை பற்றிய தீவிர பகுப்பாய்வுகள் அனைத்தும் நெருக்கடியின் முழுத்தன்மை இனித்தான் வரவுள்ளது என்பதைக் காட்டுகின்றன. முக்கிய பொருளாதார பயிலகங்கள் ஜேர்மனியின் பொருளாதாரம் இந்த ஆண்டு 65 சதவீதம் சுருங்கும் என்று கணக்கிட்டுள்ளனர்; வேலையின்மையின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரிக்கும். "கணக்கெடுக்கப்படாத" வேலையற்றோரும் சேர்க்கப்பட்டால், இன்று ஏற்கனவே 6 மில்லியன் மக்கள் வேலையில் இல்லை, அத்துடன் இரண்டு மில்லியன் மக்கள் குறைந்த நேர வேலை செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளனர் அல்லது வேலையின்மை என்ற தீவிர அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், குறைவூதியப் பிரிவு விரைவாக பெருகிக் கொண்டிருக்கிறது. சுமார் 6.5 மில்லியன் மக்கள் ஐந்தில் ஒரு தொழிலாளர் என்பதையும் விட மேலாக மேற்கு ஜேர்மனியில் மணிக்கு 9.62 யூரோவிற்கு குறைவான ஊதியத்திலும், கிழக்கு ஜேர்மனியில் 7.18 யூரோவிற்கும் உழைத்து கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 1.2 மில்லியன் தொழிலாளர்கள் மணி ஒன்றிற்கு 5 யூரோவிற்கும் குறைவான ஊதியத்தைப் பெறுகிறார்கள். குறைவூதியப் பிரிவு, சராசரி ஊதியங்களைத் தொடர்ந்து குறைப்பதற்கான கருவியாக செயல்பட்டு வருகிறது.

குறைந்த ஊதியங்களும், பெருகிய வேலையின்மையும் நேரடியாக பொது வரவுசெலவுத் திட்டங்களை பாதிக்கின்றன. வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாய் குறையும்போது, வேலையற்றோர், குறைந்த நேரத் தொழிலாளர்கள் மீதான செலவுகள் பெருகுகின்றன. அடுத்த ஆண்டு இறுதியில், உயரும் வேலையின்மை மற்றும் சுகாதார காப்பீட்டுச் செலவினங்களால் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகள் 50 பில்லியன் யூரோவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, மாநில மற்றும் மாநகர அரசாங்கங்களின் மொத்த வரி வருமான குறைவு அடுத்த மூன்று ஆண்டுகளில் 300 பில்லியன் யூரோவிற்கும் அதிகமாக இருக்கும் என்று நிதி அமைச்சரகத்தின் வல்லுனர்கள் கணக்கிட்டுள்ளனர்.

இவ்வளவு மாபெரும் தொகைகளை மீட்பதற்கும், வங்கி மீட்புத் திட்டங்களுக்கு செலவிட்டபட்ட இதையும் விட அதிக தொகைகளை மீட்பதற்கும், எதிர்வர இருக்கும் ஒவ்வொரு அரசாங்கமும்தேசிய தேர்தலின் முடிவு எப்படி இருந்தாலும்இதற்கு முன்னர் ஒருபோதும் காணப்பட்டிருக்காத கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த முற்படுவர்.

சோசலிசமா அல்லது காட்டிமிராண்டித்தனமா

சமூக ஜனநாயகக் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்-கிறிஸ்தவ சமூக யூனியன் (SPD, CDU-CSU Union (Christian Democratic Union and Christian Social Union), பசுமை வாதிகள், மற்றும் தாராளவாத ஜனநாயக கட்சி (FDP-) ஆகியவை அனைத்தும் ஒருமித்த குரலில், தாங்கள் அனைத்தும் யுத்தத்திற்கு பிந்தைய காலத்தில் கொன்ராட் அடினவரின் (Konrad Adenauer) பொருளாதார மந்திரியாக இருந்த லுட்விக் எர்ஹார்ட்டின் (Ludwig Erhard) "சமூகச் சந்தை பொருளாதாரத்தை" புதுப்பிக்க இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால் சமூக நிலையை முதலாளித்துவத்தின் கீழ் முன்னேற்ற உதவிய, யுத்தத்திற்குப் பிந்தைய பொருளாதார ஏற்றம் ஒரு வரலாற்று இடைக்கால நிகழ்வே தவிர, மீண்டும் திரும்பி வரப்போவதில்லை. இரண்டாம் உலக யுத்தத்தினால் ஏற்பட்ட பாரிய அழிவுகளைச் சொந்தமாக்கி கொண்டு, பொருளாதார செயற்பாடுகளை விரிவாக்க புதிய வாய்ப்புக்கள் உருவானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் வலிமை, பரந்துபட்ட மக்களின் ஒவ்வொரு புரட்சிகர இயக்கத்தையும் ஸ்ராலினிச அதிகாரத்துவமும் அதன் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் அடக்கியது போன்ற அசாதாரணமான சூழ்நிலைகளை யுத்தத்திற்கு பிந்தைய பொருளாதார ஏற்றம் அடித்தளமாக கொண்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்க முதலாளித்துவத்தின் செல்வமும், பாசிசத்துடனான தொடர்பினால் இழிவுற்றுவிட்ட ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வலுவற்ற தன்மையும், அப்பொழுது இருந்த உத்தியோகபூர்வ தொழிலாளர் இயக்கங்கள், காலம் வெளிக்காட்டியுள்ளபடி, பெரும், தற்காலிக சலுகைகளைப் பெற உதவின.

அப்பொழுதிலிருந்து, சர்வதேச நிலைமை ஓர் அடிப்படை மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. இன்று அமெரிக்க முதலாளித்துவம் நெருக்கடியின் மையத்தில் உள்ளது. ஆசிய, ஐரோப்பிய வணிகப் போட்டியாளர்களின் அழுத்தத்தைக் கொண்டு, ஆழ்ந்த கடனில் இருக்கும் அது, தன்னுடைய பொருளாதார வலுவற்ற தன்மைக்கு ஈடுகட்டும் வகையில் அதன் மேன்மையான இராணுவ வலிமையைப் பயன்படுத்த முற்படுகிறது. இதன் விளைவுகள் தான் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடக்கும் ஏகாதிபத்தியப் யுத்தங்களாகும். போர்கள் ஆகும்.

1980களின் ஆரம்பத்தில், முதலாளித்துவம் தொழிலாளர்களுக்கு எதிராக ஓர் உலகளாவிய தாக்குதலைத் தொடங்கியது. பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி முறை மற்றும் நிதியச் சந்தைகளின் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்ற நிலையை எதிர்கொண்ட நிலையில், தேசிய அடித்தளத்தைக் கொண்ட தொழிற்சங்கங்களும், சீர்திருத்தக் கட்சிகளும் தங்களை "தங்களுடைய சொந்த" முதலாளித்துவ வர்க்கங்களின் அடிமைத் துணைக் கருவிகளாக மாற்றிக் கொண்டன. அப்பொழுதிலிருந்து ஊதியங்கள், சமூக செலவினங்கள் தேக்கமுற்றதுடன், நிர்வாகிகளின் ஊதியமும் வானளாவ உயர்ந்தன.

சமூக சமத்துவமின்மை திகைக்க வகைக்கும் பரிமாணங்களை ஏற்றுள்ளது. ஜேர்மனிய மக்களின் 10 சதவீத செல்வந்தர்கள் சமூக சொத்துக்களில் பாதிக்கும் மேல் வைத்துள்ளனர். ஐம்பது சதவீத ஏழைகளோ வெறும் 2 சதவீத சமூக சொத்துக்களை மட்டுமே கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட 2.5 மில்லியன் குழந்தைகளும், இளவயதினரும் பொதுநல உதவியைப் பெற்று வாழ்கின்றனர். 15 வயதிற்குட்பட்ட 2.5 மில்லியன் குழந்தைகளில், ஆறில் ஒரு குழந்தை வறுமையில் வாழ்கிறது. சமூக முரண்பாடுகள் அமெரிக்காவில் மிக அதிகமாக வெளிப்படுகின்றன.

1990களின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியமும், முன்னாள் கிழக்கு ஜேர்மன் GDRம் (ஸ்ராலினிச ஜேர்மன் ஜனநாயக குடியரசு) சரிந்தவுடன் முதலாளித்துவம் கொண்டிருந்த தயக்கங்கள் அனைத்தும் மறைந்து போயின. அதன் வெற்றிகரமான பணம் செய்யும் குதூகல முறைக்கு வரம்பில்லாமல் போயிற்று. வங்கிகளும் தனியார் முதலீட்டு நிதிகளும் மடத்தனமாக நிதிய செயற்பாடுகளில் ஈடுபட்டு அசாதாரணமான இலாபங்களை ஈட்டின. வங்கியாளர்களும் வணிக மேலாளர்களும் பல மில்லியனை ஊதியமாக பெற்றனர். இப்பொழுது இந்த ஊகவாணிப குமிழி வெடித்துவிட்டது. அனைவரும் பார்க்கும்படி முதலாளித்துவத்தின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. "ஒளிவு மறைவற்றது" என்றும், "சமூக பொருளாதாரம்" என்றும் ஒருகாலத்தில் உவப்புடன் விவரிக்கப்பட்ட ஒன்று, இப்பொழுது நிதிய மூலதனத்தின் அப்பட்டமான சர்வாதிகாரம் என்று அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.

பேர்லின் சுவர் சரிந்து இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், சோசலிசம் தோற்றுவிட்டது, எனவே முதலாளித்துவத்திற்கு மாற்றீடு ஏதும் இல்லை என்ற கற்பனையை முதலாளித்துவத்தின் உலக நெருக்கடி அழித்துவிட்டது. சோவியத் ஒன்றியத்திலும், ஜேர்மன் ஜனநாயக குடியரசிலும் சோசலிசம் தோற்கவில்லை. மாறாக சலுகை பெற்ற சர்வாதிகார அதிகாரத்துவத்தின் தேசிய எல்லைகளுக்குள் சோசலிச சமுதாயம் போன்ற ஒரு மாதிரியை நிறுவும் முயற்சிதான் தோற்றது. உண்மையான கம்யூனிஸ்ட்டுக்கள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தில் பெரும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். 1937-38ல் நடந்த மாஸ்கோ போலி விசாரணைகள் மாபெரும் அளவில் அவர்களைக் கொன்றன. தொழிலாளர்களுக்கு ஜனநாயகம் இருந்ததில்லை. ஆனால், தொழிலாளர்களின் ஜனநாயகமும், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் மிக உயர்ந்த வளர்ச்சியைத் தளமாகக் கொண்ட உலக உற்பத்தியாளர்களின் கூட்டுழைப்பும் உண்மையான சோசலிசத்திற்கான முன்நிபந்தனை ஆகும்.

முதலாளித்துவம் மீண்டும் அறிமுகப்படுத்தபட்டமை பெரும் பிற்போக்கான நடவடிக்கை என்பதை கிழக்கு ஐரோப்பாவின் பேரழிவு தரக்கூடிய நெருக்கடி இப்பொழுது தெளிவாக்கியுள்ளது. புதிய பணக்காரர்கள் மற்றும் முன்னாள் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் உள்ளடங்கிய ஒரு சிறிய உயரடுக்கு சமூக சொத்தை அபகரித்துக் கொண்டு இப்பொழுது செல்வத்தில் திளைக்கிறது. ஆனால் மக்களின் பரந்த அடுக்குகள் துன்பத்தில் வாட நேர்ந்துள்ளது.

நன்கு அறிந்தபடி, பிரெஞ்சுப் புரட்சிக்கு சற்று முன்னதாக நிலமானியப் பிரபுத்துவம் அதன் செல்வம், சலுகைகளை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. இன்றைய நிதியப் பிரபுத்துவமும் அதே போன்றுதான் நடந்து கொள்கிறது. நெருக்கடிக்கு விடையிறுக்கையில் அது தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை அதிகரித்து அதன் சர்வதேச போட்டியாளர்களுடன் மோதல்களை பெருக்கிக் கொள்ளவும் செய்துள்ளது. எல்லா இடங்களிலும் இராணுவவாத வளர்ச்சி பெருகியுள்ளதுடன், அரசாங்கத்தின் அடக்குமுறைக் கருவிகளும் கட்டமைக்கப்படுகின்றன.

கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இருந்தது போலவே, முதலாளித்துவத்தின் நெருக்கடி மனிதகுலத்தை சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற விதத்தில் எதிர்கொள்ளுகிறது. எந்த ஒரு சமூக அல்லது அரசியல் பிரச்சினையும் நிதிய மூலதனத்தின் பிடியை முறிக்காமல் தீர்க்கப்பட முடியாது. முதலாளித்துவத்திற்கு ஒட்டுப்போடும் விதத்தில் நெருக்கடி கடக்கப்பட முடியாது. ஒரு சமூக மாற்றமும் சோசலிச சமுதாய கட்டமைப்பும்தான் தேவையாகும்.

நாங்கள் எதனை முன்வைக்கின்றோம்:

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக

ஒரு சோசலிச மாற்றம் வரவேண்டும் என்றால் அதற்கு மக்கள் நனவுடன் அரசியல் வாழ்வில் தலையிட வேண்டியது முன்னிபந்தனையாகும். சோசலிச சமத்துவ கட்சி (PSG) அத்தகைய தலையீட்டிற்கு அடித்தளமான அரசியல் சூழ்நிலை, வேலைத்திட்ட அடித்தளத்தை நிறுவ முற்படுகிறது.

நாங்கள் வேலைநிறுத்தங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்கள், மக்கள் ஆர்ப்பாட்டங்கள் என்று தொழிலாளர்களின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தும் அனைத்து ஆரம்ப முயற்சிகளுக்கும் ஆதரவு தருகிறோம். அவை அரசியல் ஆளும்வர்க்கம் மற்றும் பெருவணிகத்தில் உள்ள ஒட்டுண்ணிகளின் சர்வாதிகார சக்திக்கு அறைகூவல் விடுக்கும். ஆனால் இத்தகைய போராட்டங்கள் வெற்றியடைய வேண்டும் என்றால், அவை சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக நடத்தப்பட்டால்தான் முடியும். இப்போராட்டங்களின் தலைமை அதிகாரத்துவக் கருவிகளிடம் வழங்கப்பட முடியாது. மாறாக, சுயாதீனமான, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வேலைநிறுத்த குழுக்கள், தொழிலாளர்கள் குழுக்கள் வளர்ச்சியுற்று, தொழிலாள வர்க்கத்திற்கு நேரடியாக பொறுப்புக் கூறும் அடிமட்ட தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடி, ஒரு புதிய சர்வதேச வர்க்கப் போராட்டங்களுக்கு கட்டியம் கூறுகிறது. பெருகிய முறையில் தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்கள் உரிமைகள் மற்றும் நலன்களுக்கான போராட்டம் தவிர்க்க முடியாதது என்பதைக் காணலாம். தடையற்ற சந்தை பொருளாதாரத்திற்கு மாற்றீடு இல்லை என்று கூறும் உத்தியோகபூர்வ சிந்தனை இந்த நெருக்கடியின் விளைவாகப் பெரும் தாக்குதலை சந்தித்துள்ளது. ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளிலும் சமூக மோதல்கள் வன்முறையில் வெடித்துள்ளன.

சர்வதேச சோசலிச இயக்கத்தின் மூலோபாய அனுபவங்களை தளமாகக் கொண்டுள்ள ஒரு கட்சியை வளர்க்க நாங்கள் விரும்புகிறோம். 20ம் நூற்றாண்டில் தொழிலாளர்களின் இயக்கத்தின் வெற்றிகள், தோல்விகள் ஆகியவற்றின் காரணங்களைப் புரிந்து கொள்ளாமலும், 1933 ஜேர்மன் பேரழிவிற்கு காரணமான சமூக ஜனநாயகக் கட்சியின் வலதுசாரிக் கொள்கை, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் (KPD) தீவிர இடதுப் போக்கு ஆகியவை ஹிட்லரின் வெற்றிக்கு பாதையை அமைத்ததை விளங்கிக்கொள்ளாமலும் இன்று ஒரு தீவிர புரட்சிகர நிலைநோக்கை வளர்ப்பது கடினமாகும். இந்த அனுபவங்கள் நான்காம் அகிலத்திலும் மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிராக 1923ல் லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் போராட்டத்தை நடத்திய இடது எதிர்ப்பிலும் இயைந்துள்ளன. அப்பொழுது முதல், ட்ரொட்ஸ்கிச இயக்கம் மார்க்சிச கொள்கைகளைப் பாதுகாக்க அயராத போராட்டங்களை நடத்தி வந்துள்ளது; தற்போதைய நிகழ்வுகளில் அவை உறுதியாகின்றன.

சமுதாயத்தின் சோசலிச மாற்றத்திற்காக

உலகம் முழுவதிலும் உள்ள வறுமை மற்றும் பின்தங்கிய நிலைமையை கடப்பதற்கும், மனிதகுலத்தின் வாழ்க்கைத்தரம் மற்றும் கலாச்சார மட்டத்தை உயர்த்துவதற்கான சடவாத நிலைமைகளை நவீன, உலகந்தழுவிய உற்பத்தி சக்திகள் வழங்குகின்றன. ஆனால் எவ்வாறிருப்பினும், இதற்காக சமூகத்தின் உற்பத்தி சக்திகள் அனைத்தும், முதலாளித்துவ தனிச்சொத்துமை, மற்றும் தேசிய அரசு என்ற தளைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு ஒட்டுமொத்த சமூகத்தின் சேவையில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

இதற்கு பெருவணிகத்தின் நலன்கள் என்பதற்கு பதிலாக, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பேணும் தொழிலாளர்கள் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும். அத்தகைய அரசாங்கத்தால் தான் நெருக்கடியை கடக்கும் திறனுடைய தீவிரமான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

வேலை, கல்வி, முதியோர் பாதுகாப்பு, நோயாளிகள் பாதுகாப்பு ஆகியவை அடிப்படை சமூக உரிமைகளாகும். அரசாங்கம் உறுதியளிக்கும் ஓய்வூதியம், அனைத்து மூத்த குடிமக்களையும் வாழ்வின் எஞ்சிய பகுதியை வசதியாக கழிக்க உதவுவது, விரிவான, பொதுநிதியில் செயல்படும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி ஆகியவை அனைவருக்கும் உறுதியளிக்கப்பட வேண்டும்.

அரசியல்வாதிகளும், செய்தி ஊடகவியலாளர்களும் இவற்றிற்கு போதிய பணம் இல்லை என்றும், சமூகத்திட்டங்களை விரிவாக்குவதை நிராகரிக்குமாறும் கோருகிறார்கள். ஆனால் வங்கிகளை மீட்பதற்கு அரசாங்கம் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை ஒரு சில நாட்களுக்குள் செலவழிக்க முடிந்தது. அதற்கு வழிவகைகள் உள்ளன. ஆனால் அவை ஒரு சிலரின் கைகளில், மிகவும் சமத்துவமின்றி ஏகபோக உரிமையாக பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன.

பொது சேவைகளுக்கான பாரிய திட்டத்திற்கு நிதி திரட்டவும், சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விரிவான திட்டத்திற்கு நிதி திரட்டவும், பொருளாதாரத்தின் மைய அஸ்திவாரங்களை மாற்றுவது இன்றியமையாததாகும். இதற்கு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில்துறை கூட்டமைப்புகள் ஆகியவை சமூக உடைமையாக்கப்பட்டு, உண்மையான ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். தப்பிப் பிழைப்பதற்கு போராடும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் திருப்பி அளிக்க இயலக்கூடிய கடன்களைப் பெற வேண்டும். அது அவற்றிற்கு வேலைகள், அவற்றின் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்க உதவும். உயர்மட்ட வருமானங்கள், மூலதனம், செல்வம் இவற்றை வைத்திருப்பதால் கிடைக்கும் வருமானங்கள் ஆகியவை அதிக அளவில் வரிவிதிக்கப்பட்டு சமூக செலவுகளுக்குத் தேவையான நிதி பெறப்பட வேண்டும்.

ஒரு தொழிலாளர்கள் அரசாங்கம் இன்றைய அரசாங்கங்களைவிடக் கூடுதலான ஜனநாயகத்தன்மையை கொண்டிருக்கும். அரசியல் நனவு கொண்ட மக்களின் தீவிர ஆதரவை அது தளமாகக் கொண்டு, முடிவெடுப்பதிலும், கொள்கைகளை நிறைவேற்றுவதிலும் நேரடியாக ஈடுபட்டிருக்கும். மாறாக, முதலாளித்துவ அரசாங்கத்தின்கீழ் இருக்கும் ஜனநாயக வழிவகைகள் அனைத்தும் பெயரளவிற்குத்தான், ஒரு மூடுதிரையாகத்தான் உள்ளன. பில்லியன்களை வங்கிகளுக்கு கொடுக்கும் முடிவு ஒரு சில நபர்களால்தான் எடுக்கப்பட்டது. சமூக அபிவிருத்தியின் மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காக

ஒரு சர்வதேச தொழிலாள வர்க்கம் மகத்தான சமூக சக்தியைக் கொண்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சமூக வலிமை உலகெங்கிலும் மாபெரும் விதத்தில் வளர்ந்துள்ளது என்பதையே கடந்த தசாப்தங்களின் பொருளாதார மாறுதல்கள் குறிப்பிட்டு காட்டுகின்றன. தகவல், தொடர்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சிகள் முன்னொருபோதும் இல்லாத வகையில் உலகப் பொருளாதாரத்தை ஒருங்கிணைத்துள்ளன. உற்பத்தி, வணிகப் பிணைப்பு ஆகியவை மில்லியன்கணக்கான மக்களை உலகெங்கிலும் ஒன்றாகக் கொண்டு வந்துள்ளது, ஏதேனும் ஒருவிதத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளனர். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என அழைக்கப்படுவதில் உள்ள பல மில்லியன் தொழிலாளிகள், உழைப்பாளர் பட்டாளத்தில் சேர்ந்துள்ளனர். சிறிது காலத்திற்கு முன்னர் விவசாயத்தை நம்பியிருந்த சீனா, இந்தியா போன்ற நாடுகள் இன்று உலகின் முக்கிய தொழில்துறை பகுதிகளாக கருதப்படுகின்றன. நகரங்களில் வசிக்கும் மக்களுடைய சதவிகிதம் முன்பு இருந்ததைக் காட்டிலும் உயர்ந்துவிட்டது. இந்த மக்கள் ஏற்கனவே உலக உற்பத்தி நிகழ்போக்கில் நேரடியாக ஒருங்கிணைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் ஒழுங்குற அமைக்கப்பட்ட முதலாளித்துவம் உற்பத்தியின் உலக பங்கீட்டினை தேடிப் பயன்படுத்தி குறைவூதியப் பகுதிகளில் இருக்கும் தொழிலாளரை சுரண்ட முற்படுகிறது. தொழிலாள வர்க்கத்திடம் அதன் வேலைகள், வாழ்க்கைத் தரக்களைக் காப்பாற்றிக் கொள்ள சர்வதேச மூலோபாயம் இல்லை. தொழிற்சங்கங்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பிரிக்கும் வகையில் அவற்றின் போராட்டங்களை தேசிய நாடுகளின் வடிவமைப்பிற்குள் வரம்பு கட்டுகின்றன. ஒரு தொழிற்சாலையை மற்றொன்றிற்கு எதிராக நிறுத்தி, பாதுகாப்புவாதம் மற்றும் தேசியவாதம் ஆகியவற்றையும் தூண்டுகின்றன.

நான்காம் அகிலத்தின் ஒரு பிரிவு என்ற முறையில் சோலிச சமத்துவக் கட்சி (PSG) தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக போராடுகிறது. உலக நிறுவனங்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களைச் சந்திக்க உலகளாவிய முறையில் தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும். ஜேர்மனிய மற்றும் ஜேர்மனிக்குள் இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்துதல், ஜேர்மனிய தொழிலாளர்களை அவர்களுடைய கிழக்கு ஐரோப்பா அல்லது ஆசியாவில் இருக்கும் சக தொழிலாளர்களுக்கு எதிராக தூண்டிவிடுதல் ஆகிய முயற்சிகளை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம்.

ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக

ஐரோப்பிய பாராளுமன்றம் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்புகள், பெருகிய முறையில் ஐரோப்பிய பெரும் சக்திகள் மற்றும் பெருவணிகத்தின் மிகச் செல்வாக்கு உடைய பிரிவுகளின் எடுபிடிகளாக வெளிப்படையாக செயல்படுகின்றன. ஐரோப்பிய அரசாங்கங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பயன்படுத்தி நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடியின் சுமையை மக்கள் முதுகில் சுமத்த முற்படுகின்றன. இதற்கு பிரஸ்ஸல்ஸில் இருந்து வரும் போட்டிக் கட்டுப்பாடுகள், ஜனநாயக உரிமைகள் முறையாகத் தவிர்க்கப்படுதல், ஒரு ஐரோப்பிய போலீஸ் அரசு அமைத்தல் ஆகியவை வசதியளிக்கின்றன. ஐரோப்பிய ஆணைக்குழு என்பது கட்டுப்பாடுகளை அகற்றுதல், தாராளமயமாக்குதல் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகளைத் தகர்த்தல் இவற்றோடு முற்றிலும் இணைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், அதன் அமைப்புகள், அது திட்டமிட்டுள்ள அரசியலமைப்பு அனைத்தையும் சோலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது. தேசியவாதத்தின் அடிப்படையில் இல்லாமல் நாங்கள் இதை சர்வதேச சோசலிச நிலைப்பாட்டில் இருந்து நிராகரிக்கிறோம். ஐரோப்பாவை படிப்படியாக ஐக்கியப்படுத்துவது ஒரு சோசலிச அடிப்படையில் தான் முடியும். தேசிய எல்லைகளைக் கடத்தல், கண்டத்தின் தொழில்நுட்ப மற்றும் கலாச்சார வளங்களை இணைத்தல் என்பது வறுமை, பின்தங்கிய நிலை இவற்றைக் கடக்க அடித்தளத்தை அளிப்பதுடன், ஐரோப்பா முழுவதும் வாழ்க்கை தரங்களையும் உயர்த்தும்.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு

சமூக வெற்றிகளைப் பாதுகாத்தல் என்பது தவிர்க்க முடியாமல் ஜனநாயக உரிமைகளைக் பாதுகாத்தலுடன் பிணைந்துள்ளது. "பயங்கரவாதத்தை" எதிர்ப்பதாக கூறும் போலிக் காரணத்தின் அடிப்படையில், எங்கும் விரைவாக ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்படுவதை சோலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது. ஆளும் உயரடுக்கும், அதன் அரசியல் பிரதிநிதிகளும் வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கு தயாரிப்பதற்காக அடிப்படை ஜனநாயக உரிமைகளை அழிக்க முற்படுகின்றனர். பயங்கவாத எதிர்ப்பு தொடர் என்ற பின்னணியில் நூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. இரகசியப் பிரிவுகள், போலீஸ், மத்திய எல்லைப் போலீஸ் போன்ற பாதுகாப்புப் படைகளின் அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டு அவற்றிற்கான வரவுசெலவுத் திட்ட தொகைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்களின் பரந்த பிரிவினர் இணைய கண்காணிப்புக்கள், தகவல் பாதுகாப்பு மீறப்படுதல் ஊடாக வாடிக்கையான பரந்த கண்காணிப்பு வலை மூலம் கண்காணிப்பிற்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சமூக செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிந்திருக்கும் வரையிலும், பத்திரிகை மற்றும் ஊடகம் பெருவணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரையிலும், கல்வியும், கலாச்சாரமும் ஒரு சிறிய உயரடுக்கின் சலுகையாக இருக்கும் வரையிலும் வேலைத்தல ஜனநாயகம் என்பது விலக்கி வைக்கப்பட்டு தான் இருக்கும். இந்த சூழ்நிலையில் உண்மையான ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. கலாச்சாரம் மற்றும் கலைக் கல்வித் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட குறைப்புக்கள் சமூகத்திற்கு கணக்கிலடங்கா சேதத்தை ஏற்படுத்துகின்றன. இராணுவவாதம், தேசியவாதம், மிருகத்தனம், தன்முனைப்பு ஆகியவற்றிற்கும் முந்தைய காலங்களின் கலை, பண்பாடு மரபியத்தை நிராகரிப்பதற்கும் இடையே தவிர்க்க முடியாத பிணைப்பு உள்ளது.

அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்காக

அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் அனைவருக்கும் ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்கான முன்னோடிச் செயல்கள் ஆகும். ஐரோப்பாவில் நுழைவதற்கு எல்லைகளை கடக்கையில் ஆண்டு ஒன்றிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். நாடு கடத்தப்பட நீதிமன்ற உத்தரவு இல்லாமல் காவலில் வைத்தல், கடுஞ்சிறை முகாம்கள், குடும்பங்களை பிரித்தல், அரசியல், சமூக உரிமைகள் இல்லாத நிலை ஆகியவை ஐரோப்பாவில் இருக்கும் அகதிகளின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதி ஆகும்.

கண்டத்தில் இருக்கும் மில்லியன்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகளைக் காக்காமல், ஐரோப்பிய தொழிலாளர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைக் காக்க முடியாது. குடியேறுபவர்களை சூனியவேட்டையாடுதல் தொழிலாள வர்க்கத்தைப் பிரித்து முடக்கத்தான் உதவும். அகதிகளும், புலம்பெயர்ந்தோரும் தொழிலாள வர்க்கத்தின் முக்கியம் வாய்ந்த கூறுபாடுகள் ஆவர். இவர்கள் வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களில் முக்கிய பங்கைக் கொள்வர்.

இராணுவவாதத்திற்கும், யுத்தத்திற்கும் எதிராக

பொருளாதார நெருக்கடியானது, ஒவ்வொரு நாட்டிலும் சமூக முரண்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது மட்டுமில்லாமல் சர்வதேச மோதல்கள் விரிவாகவும் வழிவகுத்துள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தங்களின் போக்கில், மூலோபாயத்திற்கு மையமான உலகின் எண்ணெய் வளம் நிறைந்த பகுதிகள் மீதான கட்டுப்பாட்டிற்கு கடுமையான மோதல்கள் விளைந்துள்ளன. ஜேர்மனிய இராணுவம் உலகை கடந்த நூற்றாண்டில் இருமுறை குருதியில் மூழ்கடிக்க பொறுப்பு கொண்டிருந்தாலும், அது மீண்டும் பொருளாதார உயரடுக்கின் நலன்களைக் காப்பதற்கு முன்னணியில் நின்று போரிடுகிறது.

ஆப்கானிஸ்தானில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படைகளின் மோதல் விரிவாக்கப்படுகையில், ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கை பெருகிய முறையில் மிருகத்தனமாக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இராணுவத் தலைமைப்பீடம் தன்னை மீண்டும் ஒரு சுதந்திரமான அரசியல் பிரிவாக உயர்த்திக் கொள்ள முற்படுகிறது. இரண்டாம் உலகப் யுத்தத்திற்குப் பின்னர் முதல் தடவையாக பீரங்கிகள், டாங்குகள் ஆகியவற்றை எழுச்சியாளர்களுக்கு எதிராக பயன்படுத்தும் முடிவு ஜேர்மனிய இராணுவ உயர் கட்டுப்பாட்டால் பாராளுமன்றத்தை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்டது. இத்தகைய முடிவுகள் தளபதிகளின் கைகளில் உள்ளது என்று ஜேர்மன் இராணுவத் தளபதி Wolfgang Schneiderhan கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விநியோகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஜேர்மனிய முதலாளித்துவம் ஏகாதிபத்திய நலன்களை பின்தொடர்கிறது. இது தவிர்க்க முடியாமல் ஜேர்மனியில் இடைக்கால நட்புநாடுகளுடன் மோதலை ஏற்படுத்துகிறது. நிதிய, பொருளாதார பிரச்சினைகள் வளர்கையில், ஒவ்வொரு நாட்டின் தேசியத் அடித்தளம்கொண்ட முதலாளித்துவக் குழுக்களின் சுயநலன்கள்தான் லண்டன், பாரிஸ் மற்றும் பேர்லினில் மேலாதிக்கம் செலுத்துகின்றன. பாதுகாப்புவாதத்தை முற்றாக தழுவிக்கொள்வது பொருளாதார யுத்தங்களுக்கு ஆரம்பகட்டமாகும், இறுதியில் பெரும் சக்திகளுக்கு இடையே இது மோதல்களை ஏற்படுத்தும்.

யுத்தத்திற்கு எதிரான போராட்டம் சமூகப் பிரச்சினையில் இருந்து, அதாவது இராணுவவாதம் வேர்களைக் கொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்கப்பட முடியாது. அறவழியில் கடிந்து கொள்வதன் மூலம் போர் நிறுத்தப்பட முடியாது. சர்வதேச மோதல்கள் பெருவரும் நிலைமையில் அமைதிவாதம் அதற்கு முற்றிலும் எதிராக எவ்வாறு விரைவாக மாற்றத்தை எடுத்துகொண்டு விடுகிறது என்பதை பசுமைவாதிகளின் உதாரணம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தொழிலாளர்கள் இந்த யுத்த உந்துதலுக்கு விடையிறுக்கும் வகையில் தங்கள் கூட்டு சர்வதேச பதிலை அபிவிருத்தி செய்ய வேண்டும். அனைத்து அமெரிக்க தளங்களும் ஜேர்மனிய மண்ணில் உடனடியாக மூடப்பட வேண்டும், நேட்டோ கலைக்கப்பட வேண்டும், அனைத்து வெளிநாட்டுப் படைகளும், குறிப்பாக ஜேர்மனிய படைகள், பால்கன்கள், மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களித்திடுக

இந்த வேலைத்திட்டத்திற்கு உங்கள் ஆதரவை நிரூபணம் செய்வதற்கு செப்டம்பர் 27ம் தேதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்கவும். எங்கள் செயற்பாடுகளில் பங்கு பெற்ற, அன்றாடம் எங்கள் வலைத் தளமான www.wsws.org/de ஐ படிக்கவும். எமது தேர்தல் பிரச்சாரம் பற்றிக் கூடுதலான தகவல்கள் www.wsws.gleichheit.de ல் கிடைக்கும்.