World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP campaigns in Tamil suburb in Colombo

இலங்கை சோ.ச.க. கொழும்பில் தமிழ் புறநகர் பகுதியில் பிரச்சாரம்

By our correspondents
9 April 2009

Use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் கடந்த வாரக் கடைசியில் கொழும்பின் தென்பகுதியில் உள்ள வெள்ளவத்தையில், மாகாண சபைக்கான கட்சியின் தேர்தல் பிச்சாரத்தை மேற்கொண்டனர். ஏப்ரல் 25 நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தலுக்காக, தலைநகரில் சோ.ச.க. 46 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

வெள்ளவத்தை 100 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். மத்திய கொழும்புக்கு அருகில் இருக்கும் வெள்ளவத்தையில், பல குடியிருப்பாளர்கள் வர்த்தகர்களும் அரசாங்க ஊழியர்களுமாவர்.

இந்தப் பிரதேசம் 1950களில் இருந்து மீண்டும் மீண்டும் தமிழர்-விரோத படுகொலைகளுக்கு இலக்காகி வந்தது. 1956ல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) அரசாங்கம் சிங்களத்தை மட்டும் அரச மொழியாக்கிய பின்னர் தமிழர்கள் இரண்டாந் தரப் பிரஜைகளாக தரம் குறைக்கப்பட்டதற்கு, அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு பிரதிபலிப்பாக, கொழும்பில் உள்ள தமிழ்ப் பிரதேசங்கள் மீது சிங்கள இனவாதக் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். வெள்ளவத்தையில் குடியிருந்த பலர் தலைநகரை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை கட்டவிழ்த்து விடத் தயாராகிய நிலையில், 1983 ஜூலையில் படுமோசமான படுகொலைகள் நடத்தப்பட்டன. இதை கறுப்பு ஜூலை என்று அழைப்பர். படையினர் மீதான புலிகளின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஐ.தே.க. வின் ஆதரவுடன் செயற்பட்ட குண்டர்கள், பேரச்சம் நிறைந்த வன்முறை அலைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும் காயமும் அடைந்ததோடு அவர்களுடைய கடைகள் மற்றும் வீடுகள் எரித்து தரை மட்டமாக்கப்பட்டன. மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வெள்ளவத்தையும் ஒன்றாகும். தமிழ் மக்கள் இந்து ஆலயங்கள் மற்றும் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் அகதிகளாக செல்லத் தள்ளப்பட்டார்கள்.

நீண்ட யுத்தம் தொடர்ந்த நிலையில், இந்தப் பிரதேசம் தொடர்ச்சியான பொலிஸ் அடக்குமுறை மற்றும் குண்டர் தாக்குதலுக்கும் உள்ளாகின்றது. ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ 2006 இல் மீண்டும் யுத்தத்தை புதுப்பித்ததில் இருந்து, நிலைமை மிக மோசமடைந்தது. தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் கைதுகள், தடுத்து வைத்தல், கடத்தப்படல், கப்பம் கோரல் மற்றும் படுகொலைகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். இவர்களால் விட்டுச்செல்லப்பட்ட பெருமளவில் வயோதிபர்களும் சிறுவர்களும் இடையறா மன வேதனையில் இங்கு வாழ்கின்றனர்.

வழமை போல், சோ.ச.க. பிரச்சாரம் செய்த அன்றும், ஆயுதம் தாங்கிய பொலிசார், சிப்பாய்கள், கடற்படையினர் மற்றும் ஊர்காவற் துணைப்படையினரும் பிரதான வீதியின் இரு பக்கமும் குறுகிய இடைவெளியில் இருவர் இருவராக நின்றிருந்தனர். அவர்கள் வேலைகளுக்காகப் போய்க் கொண்டிருக்கும் தொழிலாளர்களை மனம் போன போக்கில் சோதித்தார்கள். அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் ஒவ்வொரு தமிழரையும் எதிரிகளாக நடத்துவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளன.

ஆரம்பத்தில் அடக்கத்துடன் இருந்த ஒரு பொறியியலாளர், சோ.ச.க. யின் முன்னோடி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) என்பதை அறிந்தபின்னர் பிரதிபலித்தார். அவர் "கறுப்பு ஜூலையின்" அனுபவத்தை மீண்டும் நினைவுபடுத்தினார். "நான் பேராதனை பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவனாக இருந்தேன். பெரும் சிரமத்துடன் நான் ஒரு நண்பனின் காரில் வீட்டுக்கு விரைந்தேன். ஏனெனில் குண்டர்கள் தமிழர்களைத் தேடி கொலை செய்து கொண்டிருந்தார்கள். கண்டியில் இருந்து நான் வரும் வழியில், பல வீடுகள் எரிவதையும் மற்றும் ஒரு மனிதன் கொலை செய்யப்பட்டிருந்ததையும் கண்டேன். ஹம்டன் வீதியில் இருந்த எனது வீட்டை கும்பல் ஒன்று உடைத்து சூறையாடியிருந்தது. நான் எனது குடும்பத்தை கதிரேசன் கோயிலில் இருந்த அகதி முகாமில் கண்டுபிடித்தேன்."

அந்த நேரத்தில் பல்கலைக் கழகங்ககளில் இருந்த தமிழ் மாணவர்களை இனவாதிகளிடமிருந்து பாதுகப்பதற்கான பு.க.க. வின் நடவடிக்கைகள் பற்றி அவர் அறிந்திருந்ததாகக் கூறினார். "அப்பொழுதில் இருந்து நாங்கள் அச்சுறுத்தலுடன் தான் வாழ்ந்துவருகிறோம். பிரச்சினைகள் சுமூகமாகும் என நம்புவதற்கு காரணங்கள் கிடையாது. கப்பம் பெறுதலும் கடத்தல்களும் அடிக்கடி நடக்கின்றன. எமது வீடுகளில் எதுவிதமான முன்னறிவித்தலுமின்றி அடிக்கடி தேடுதல்கள் நடத்தப்படுகின்றன. நாங்கள் அடிக்கடி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். எமது அயலவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள்."

சோ.ச.க. யின் சோசலிச முன்னோக்குப் பற்றி நீண்ட கலந்துரையாடலின் பின்பு அவர் தனது கருத்தைத் தெரிவித்தார். "எனவே நீங்கள் என்னை தொழிலாள வர்க்கத்துக்குள் சேர்த்துள்ளீர்கள். நான் ஒரு பொறியியலாளர். ஒரு வகையில் நாங்களும் தொழிலாளர்களே. எவ்வாறாயினும் என்னாலும் தனியாக நிற்க முடியாது என்பதை உணர்ந்தது நல்லது." புலம்பெயர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளில் வேலைசெய்வதால் அவர்களது குடும்பங்கள் நிதி உதவி பெற்று வந்தன. ஆனால் தற்போதைய பூகோள பொருளாதார நெருக்கடியால் பலர் தமது வேலையை இழந்துவிட்டனர் என அவர் குறிப்பிட்டார்.

ஒரு முன்னாள் மாணவரும் அங்கு கருத்துத் தெரிவித்தார்: "இந்த யுத்தத்தின் முடிவு ஒரு தீர்வைக் கொண்டு வரும் என்று நான் நினைக்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுமல்ல ஏனைய பிரதேசங்களிலும் எந்தவொரு தமிழ் தனிநபரும் யுத்தம் மற்றும் அடக்கு முறைகளால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படாமல் இல்லை. எமக்கு யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் இருக்கின்றனர். எமது முழுக் குடும்பமும் இடம்பெயர்ந்து விட்டது. பெருந்தொகையானவர்கள் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்த்து பெற முயற்சிக்கின்றனர்."

ஒரு தமிழ் முதலாளித்துவ அரசை ஸ்தாபிக்கும் புலிகளின் முன்னோக்கை கட்சி எதிர்ப்பதாக சோ.ச.க. குழுவின் உறுப்பினர்கள் விளக்கினர். அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கு மத்தியில் மாற்றீடான சோசலிச வேலைத்திட்டம் சம்பந்தமாக கலந்துரையாடுவதை புலிகள் எதிர்க்கும் அதே வேளை, அவர்கள் யுத்தத்துக்கு ஆதரவளிக்கும் அதே சர்வதேச சக்திகளுக்கு வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கின்றனர், என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

லண்டன், பாரிஸ், ஸ்டுட்காட், டொரான்டோ ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், புலிகளின் ஆதரவாளர்கள் சோ.ச.க. ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கூறியபோது, பொறியியலாளர் பதிலளித்தார்: "புலிகள் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. அவர்களுடைய பிழையான கொள்கைகள் தமிழர்களை அவர்களின் உண்மையான நண்பர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி விட்டது. உங்களுடைய இயக்கம் சர்வதேச ரீதியில் செயற்படுவதையிட்டு நான் சந்தோசப்படுகின்றேன்."

ஒரு ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி மோகன், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சோ.ச.க. யை பாராட்டினார். 1950 இல் ட்ரொஸ்கிசக் கட்சியாக இருந்த லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.), சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்த்து வழங்குமாறு அழைப்பு விடுத்ததை அவர் சுட்டிக் காட்டினார். எவ்வாறாயினும், 1964 இல், ல.ச.ச.க. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கூட்டரசாங்கத்தில் இணைந்து சிங்களம் மட்டும் கொள்கையை ஆதரிக்கத் தொடங்கியது. ல.ச.ச.க. தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர்.டி. சில்வா, பெளத்த மதத்தை அரச மதமாகவும் மற்றும் சிங்களத்தை அரச மொழியாகவும் ஆக்கிய 1972ம் ஆண்டு அரசியல் யாப்பை வரைந்தவரானார். இந்தக் காட்டிக் கொடுப்பே தற்போதைய நிலமைக்குப் பங்களிப்புச் செய்துள்ளது, என்பதை மோகன் சுட்டிக் காட்டினார்.

பலர் தேர்தல் மீதான தமது வெறுப்பை வெளிப்படுத்தினார்கள். சாதாரண தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை இது தீர்த்து வைக்காது என்பதை அவர்கள் வலியுறுத்தினார்கள்.

சாப்பாட்டுக் கடையொன்றில் வேலை செய்யும் தம்பி என்ற இளைஞன், சோ.ச.க. யை ஏனைய அரசியல் கட்சிகளைப் போல் தேர்தல் காலங்களில் உறுதிமொழி வழங்கும் ஒரு கட்சியாக முதலில் நினைத்தார். முதலில் சோசலிச முன்னோக்குக்கான போராட்டம் நடைமுறைச் சாத்தியமற்றது என நிராகரித்த அவர், நீண்ட கலந்துரையாடலுக்குப் பின்பு வெளிப்படையாகப் பேசினார். "நாங்கள் இங்கு இனவாத அடக்கு முறைக்கு முகம் கொடுக்கின்றோம். உங்களுடையது ஒரு கனவு. அடக்குமுறையை தோற்கடிப்பதற்கு எமக்கு ஒரு உறுதியான தேசிய சக்தி தேவை," என அவர் கூறினார். ஆனால் புலிகளின் அரசியல் வங்குரோத்து பற்றி சோ.ச.க. என்ன சொல்கிறது என்பதை கவனமாகக் கவனித்ததுடன் சோ.ச.க. யின் தேர்தல் பிரசுரங்களை படிப்பதற்கு ஒத்துக் கொண்டார்.

ஒரு தமிழ் வயோதிபப் பெண், யுத்தத்தினால் அவரது குடும்பம் அனுபவித்த துன்பங்களை விளக்கினார். அவர் முதலில் 1990 இல் புங்குடுதீவில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சிக்கு சென்றார். ஆனால் ஒரு வருடத்துக்குப் பின்னர் வவுனியாவுக்கு நகரத் தள்ளப்பட்டார். பல மாதங்களுக்குப் பின்னர் கொழும்பு வந்து 12 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்.

"ஒரு அறையை வாடகைக்கு எடுக்க முதலில் நாங்கள் மாதாந்தம் 3,000 ரூபாய் (30 அமெரிக்க டொலர்) கொடுத்தோம். தற்போது நாங்கள் 12,000 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. எனது கணவர் ஒரு ஓய்வு பெற்ற மின்னியலாளர். அவருக்கு 65 வயது ஆனால் அவர் தனியார் கம்பனி ஒன்றில் மாதாந்தம் 9,000 ரூபாய்க்கு வேலை செய்கிறார். வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.

"இங்கு நாங்கள் சுதந்திரமாக நடமாட முடியாது. அரசாங்கம் இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் சமாதானம் வந்து எமது வாழ்க்கை நிலைமை முன்னேறுமா? நான் அதை நம்பவில்லை. தமிழ் பேசும் மக்களின் நிலமை மேலும் மோசமாகவே இருக்கும். ஆனால் சிங்கள ஏழை மக்களின் நிலமையும் மிகவும் கஸ்டமானது. உங்களுடைய வேலைத் திட்டம் ஒரு மார்க்கம் காட்டுவது போல் தெரிகிறது. சிங்கள மற்றும் தமிழ் ஏழைகள் -நீங்கள் சொல்வது போல் தொழிலாளர்கள்- ஐக்கியப்பட வேண்டும்."

அவர் பிரிட்டன் போன்ற நாடுகளில் பொருளாதார நெருக்கடி பற்றி குறிப்பிட்டார். அவருடைய உறவினர்கள் தங்களுடைய வாழ்க்கை சிரமத்தில் இருப்பதாக அவருக்குக் கூறியுள்ளார்கள். முன்னைய காலத்தில் சிலர் வெளிநாட்டில் இருக்கும் தமது பிள்ளைகளின் உதவியுடன் வீடுகளை வாங்கினார்கள். ஆனால் அது நீடிக்கவில்லை. இப்பொழுது கொழும்பில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 80 தொடர் மாடி வீடுகளில் 7 மட்டுமே விற்பனையாகியுள்ளதாக அவர் சொன்னார்.

ஒரு அரசாங்க உத்தியோகத்தர் வவுனியாவில் வேலை செய்த அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அவர் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் என்று தம்மை கூறிக் கொண்டிருக்கும் தொழிற்சங்கத் தலமைகளின் துரோகத்தைப் பற்றி தனது கருத்தை தெரிவித்தார்.

"இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். மலையக மக்கள் முன்னணித் தலைவர் பெ. சந்திரசேகரன் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆ. தொண்டமானும் வன்னிக்கு சென்று புலிகளின் தலைவர்களைச் சந்தித்தார்கள். அந்த நாட்களில் அவர்கள் சமாதானம் பற்றிப் பேசினார்கள். ஆனால் இப்பொழுது அவர்கள் (சந்திரசேகரனும் தொண்டமானும்) அரசாங்கத்தில் அமைச்சராக இருந்துகொண்டு யுத்தத்துக்கு ஆதரவு வழங்குகின்றார்கள்.

''வேறு அரசியல் கட்சிகளின் கொள்கைகளுடன் ஒப்பிடும் போது, உங்களுடைய கட்சியின் கொள்கை வித்தியாசமானது. எல்லாக் கட்சிகளும் யுத்தத்துக்கு ஆதரவாகப் பேசுகின்றன. ஆனால் நீங்கள் யுத்தத்துக்கு எதிராகப் பேசும் போது நான் வித்தியாசமாக உணர்கிறேன்.''