WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Sixty years after the Chinese Revolution: Lessons for
the working class
சீனப் புரட்சிக்கு பின்னர் 60 ஆண்டுகள்: தொழிலாள வர்க்கத்திற்கான படிப்பினைகள்
John Chan
1 October 2009
Use this version
to print | Send
feedback
இன்று மாவோ சேதுங் தலைமையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி (சீகக)
அதிகாரத்தைக் கைப்பற்றி சீன மக்கள் குடியரசைப் பிரகடனப்படுத்தி 60 ஆண்டுகளாவதை குறிக்கிறது.
சீனாவில் நடந்த புரட்சிகர எழுச்சி, இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததைத்
தொடர்ந்து தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் உலகம் முழுவதும் செய்த எழுச்சியின் ஒரு பகுதியாகும்.
ஆசியா, இலத்தின் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவின் மற்ற பகுதிகளைப் போல் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும்
விவசாயிகளும் காலனித்துவ ஆட்சியின் தளைகளை அகற்றித் தூக்கி எறிய உறுதி கொண்டனர்; சீனாவில் 1930களில்
இது ஒரு மிருகத்தனமான ஜப்பானிய இராணுவ ஆக்கிரமிப்பு என்ற வகையில் வந்திருந்தது. போராட்டத்தின் மகத்தான
தன்மை இருந்தபோதிலும்கூட, 1949 புரட்சி, சோசலிச புரட்சியும் அல்ல, கம்யூனிச புரட்சியும் அல்ல. இது
தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வரவில்லை; ஆனால் மாவோவின் விவசாயிகள் படையைத்தான்
கொண்டுவந்தது.
அதன் "கம்யூனிஸ்ட்" தன்மைகள் என்று கூறிக் கொள்பவை ஒருபுறம் இருந்தபோதிலும்,
இன்று சீனா முழுமையாக உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தில் அதன் முக்கிய குறைவூதிய உழைப்பு மேடையாக
உள்ளது என்பது வெளிப்படை. இல்லாவிடின் இரண்டு பழமைவாத அமெரிக்க ஜனாதிபதிகள், மூத்த புஷ்-ம், இளைய
புஷ்-ம் சீனப் புரட்சியின் 60வது ஆண்டு நிறைவு விழாவிற்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பியதை வேறு எவ்விதம்
விளக்க முடியும்? அல்லது நிகழ்வைக் குறிப்பிடும் வகையில் நியூ யோர்க் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் சிவப்பு, மஞ்சள்
வண்ணங்களில்--சீனப்புரட்சி வண்ணங்கள்-- அலங்காரம் செய்யப்பட்டு இருப்பதை எப்படி விளக்க முடியும்?
இந்தக் கொண்டாட்டங்கள் மாவோயிசம் மற்றும் 1949 சீனப் புரட்சியில் இருந்து
வேறுபட்டவை அல்ல; ஆனால் அவற்றின் தர்க்கரீதியான விளைவுதான். 1921ல் சீன கம்யூனிஸ்ட் கட்சி, 1917
ரஷ்ய புரட்சியின் பிரதிபலிப்பாக மார்க்சிச அடிப்படையில் அமைக்கப்பட்ட போதும், அது சோவியத் ஒன்றியத்தில்
ஸ்ராலினிசத்தின் எழுச்சியால் விரைவில் பாதிப்பிற்கு ஆளானது. முதல் தொழிலாளர்கள் அரசாங்கம்
தனிமைப்படுத்தப்பட்டிருந்த சூழ்நிலையில், ஒரு பழமைவாத அதிகாரத்துவக் கருவியின் நலன்களைப் பிரதிபலித்த,
ஸ்ராலின் தன்னலக்குழு, 1924ல் லெனின் மறைவிற்குப் பின் சர்வதேச சோசலிசத்தை நிராகரித்ததன் அடிப்படையில்
அதிகாரத்தைக் கைப்பற்றியது.
குறிப்பாக ஸ்ராலின், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை தாக்கினார்;
அதன்படி ரஷ்யா, சீனா போன்று காலம் கடந்து முதலாளித்துவ வளர்ச்சியுற்ற நாடுகளில் தொழிலாள வர்க்கம்
ஒன்றுதான் தேசிய ஜனநாயகப் பணிகளை நிறைவேற்றும் திறன் உடையவை என்று நிலைநாட்டப்பட்டிருந்தது.
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமை என்ற நிலையில் அதிகாரத்தைக் கைப்பற்றியபின், தொழிலாள வர்க்கம் சோசலிச
நடவடிக்கைகளை சர்வதேச சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகச் செயல்படுத்தும்
கட்டாயத்தில் இருக்கும். ஸ்ராலினைப் பொறுத்தவரையில், 1917 நிகழ்வுகளுக்கு மிகத் துல்லியமான தத்துவார்த்த
வழிகாட்டியாக நிரூபித்திருந்த, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி அதிகாரத்துவத்தின் சலுகை பெற்ற நிலைக்கு
பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு அச்சுறுத்தலாகத் தோன்றியது; அதிகாரத்துவத்தின் நலன்கள் பிற்போக்கு
ஸ்ராலினிச தத்துவமான "ஒரு நாட்டில் சோசலிசம்" என்பதில் சுருக்கமாகக் கூறப்பட்டிருந்தது.
சீனாவில் தன்னுடைய சந்தர்ப்பவாதக் கூட்டை தேசியவாத கோமின்டாங் (KMT)
உடன் விரிவுபடுத்திக் கொள்ளுவதற்காக, ஸ்ராலின் இளம் சீன கம்யூனிஸ்ட் கட்சியை இந்த முதலாளித்துவக் கட்சியுடன்
இணைத்துக் கொள்ளக் கட்டாயப்படுத்தினார். ரஷ்ய புரட்சியின் படிப்பினைகளை நேரடியாக நிராகரித்த முறையில்,
முதலில் தேசிய ஜனநாயகப் பணிகள் சீன முதலாளித்துவத்தால் முடிக்கப்படும், பின்னர் ஒரு தொலை வருங்காலத்தில்
சோசலிசம் நிறுவப்படும் என, அவர் சீனப் புரட்சி இரு கட்டங்களில் இருக்கும் என்றார். ஆனால் 1925-1927
புரட்சியின் போது சீன முதலாளித்துவ வர்க்கம் ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தையும் விட ஊழல்மலிந்தது என்று
நிரூபணம் ஆயிற்று. புரட்சி எழுச்சியைக் கண்டு அதிர்ச்சியுற்ற கோமின்டாங் (KMT),
சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிலாள வர்க்கத்தை இரத்தத்தில் மூழ்கடித்தது --அத்தோல்வி மாஸ்கோவில்
இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கரங்களை வலுப்படுத்தியது.
1927க்கு பின்னர், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இரு போக்குகள் வெளிப்பட்டன.
ஒன்று இடது எதிர்ப்பின் பக்கம் திரும்பியது; அதுதான் ஸ்ராலினின் தயாரிப்பில் இருந்த பேரழிவு பற்றி எச்சரித்து
ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சியை தழுவியது. மற்றது, மாவோவின் தலைமையில் இருந்தது, ஸ்ராலினிசம்
பிரச்சினை அல்ல என்றும் புரட்சியை நடத்திச் செல்வதற்கான தொழிலாள வர்க்கத்தின் இயல்பான
திறமையின்மைதான் பிரச்சினை என்ற முடிவிற்கு வந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி, ட்ரொட்ஸ்கிஸ்டுகளை வெளியேற்றி,
மாவோவின் தலைமையில் நகர்ப்புற தொழிலாள வர்க்கத்திடம் இருந்து தன்னை அகற்றிக் கொண்டு,
விவசாயிகளிடத்திலும் கொரில்லா போர் முறைகளிலும் புகலிடம் கொண்டது.
1932 ல் குறிப்பிடத்தக்க வகையில்
கருத்துக்களை உள்ளடக்கியிருந்த கட்டுரை ஒன்றில், ட்ரொட்ஸ்கி மாவோவின் "செஞ்சேனை" தொழிலாள
வர்க்கத்திற்கு விரோதமான குட்டி முதலாளித்துவ உடைமையாளர்களின் இயக்கம் என்றார். அவர்களுடைய விரோதப்
போக்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வேறுபட்ட வர்க்க பார்வையில் வேர்களைக் கொண்டிருந்தது
--முந்தையது பேரளவிலான சமூக மயமாக்கப்பட்ட உற்பத்தியையும், பிந்தையது நகர்ப்புற தொழில்துறை மற்றும்
கலாச்சாரத்தை எதிர்க்கும் சீரழிந்துவரும் மத்தியதர வர்க்கத்தின் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியது.
ட்ரொட்ஸ்கி, விவசாயிகளின் படைகள் நகரங்களில் நுழைந்தவுடன், தொழிலாளர்களின் சுயாதீன இயக்கம் எதையும்
அடக்கும் என்றும் அத்துடன் அதன் ஆணையிடும் பகுதிகள் படிப்படியாக முதலாளித்துவத்தின் பகுதியாகிவிடும் என்றும்
எச்சரித்தார்.
அந்தப் பகுப்பாய்வு 1949ல் சரியெனப் போயிற்று. இரண்டாம் உலகப் போருக்குப்
பின்னர் இருந்த ஸ்ராலின்ச கட்சிகளைப் போல் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பத்தில் முதலாளித்துவ கோமிண்டாங்
உடன் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்க முற்பட்டது, ஆனால் தோல்வியுற்றது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான
பனிப்போரின் எழுச்சியினால் ஊக்கம் பெற்ற கோமிண்டாங் தலைவர் சியாங் கேய் ஷேக் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு
எதிராக பெரும் திகைப்புடன் கூடிய உள்நாட்டுப் போர் ஒன்றைத் தொடக்கினார். இதன் விளைவு
மிகைப்படுத்தப்பட்ட மாவோவின் இராணுவத் திறமையினால் அல்லாமல், கோமிண்டாங் ஆட்சியின் ஆழ்ந்த
பொருளாதார, அரசியல் நலிந்த தன்மையினால் தீர்மானிக்கப்பட்டது. அது கிட்டத்தட்ட உள்வெடிப்பைக் கண்டது.
ட்ரொட்ஸ்கி எச்சரித்திருந்தபடி, மாவோவின் புதிய "கம்யூனிஸ்ட்"
அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன முன்முயற்சி எதையும் அடக்கி, தனியார் சொத்து உரிமையையும்
பாதுகாத்தது. ரஷ்ய புரட்சியில் இருந்தது போல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்கள்
குழுக்களோ சோவியத்துக்களோ நிறுவப்படவில்லை. தொழிலாள வர்க்கத்தின் மீது ஆட்சிக்கு இருந்த நீடித்த பயம்
சீன ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகளை 1952ல் சிறையில் அடைத்ததின் மூலம் வெளிப்பட்டது.
புதிய ஆட்சியின் வழிகாட்டும் முன்னோக்கு சோசலிசம் அல்ல; மாறாக மாவோவின்
"புதிய ஜனநாயக கட்டம்" ஆகும். இதில் முதலாளித்துவக் கட்சிகளுடனும் தைவானுக்கு சியாங்குடன் ஓடிவிடாமல்
இருந்த நபர்களுடனும் கூட்டு என்பதாக இருந்தது. இதன் மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களான, நிலங்களை
தேசிய மயமாக்குதல், நிலச்சீர்திருத்தம், அடிப்படை பொதுநல நடவடிக்கைகள் மற்றும் சமூகத் தீமைகளான
விபச்சாரம், அபின் பயன்பாடு ஆகியவற்றை சட்டவிரோதமாக்குதல் போன்றவை முதலாளித்துவ நடவடிக்கைகள்
ஆகும். இதே போல் கொரியப் போர் தோற்றுவித்த பொருளாதார நெருக்கடிக்கு நடுவே தேசியமயமாக்குதல்
நடந்ததும் "சோசலிசம்" அல்ல; இந்தியா போன்ற தேசிய பொருளாதாரக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளுக்கு
இணையாக நடந்தவைதான். சீன கம்யூனிஸ்ட் கட்சி வெறுமே, இந்தியாவின் நேரு போன்றோர் காலனித்துவ
எதிர்ப்பு இயக்கத்தின் முதலாளித்துவ தலைவர்கள் செயல்படுத்திய திட்டத்தைத்தான் இன்னும் கூடுதலாகச் செய்தது.
மாவோயிச ஆட்சிக்குள் தீவிர பிளவுகள் வெளிப்பட்டன. சீன கம்யூனிஸ்ட் கட்சி
முந்தைய முதலாளித்துவத்தினர் மற்றும் நகர்ப்புற தொழில்திறமை உடையவர்களை தொழிலை நடத்துவதற்கு நம்பும்
கட்டாயத்திற்கு ஆளானது; ஏனெனில் அதன் பெரும்பாலான விவசாயத் தொண்டர்கள் தற்கால உற்பத்தி முறைபற்றி
ஏதும் அறிந்திருக்கவில்லை. இது நகர்ப்புறத் தொழில்துறை, பண்பாடு எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள
வர்க்கம் மீது கொண்டிருந்த விவசாயிகளின் விரோதப் போக்கை பிரதிபலித்த மாவோவின் தீவிரப்போக்கிற்கும்
பெரிய அளவு தொழில் மற்றும் சந்தை போன்றவை தடையற்ற முறையில் இயங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற
முதலாளித்துவ பாதையினர் என்று கூறப்படுபவர்களுக்கும் இடையிலான வருங்கால பூசல்களின் விதைகளைக்
கொண்டிருந்தது. இரு பிரிவுகளும் தேசிய வடிவமைப்பான "ஒரு நாட்டில் சோசலிசம்" என்பதில்தான் வேரூன்றி
இருந்தன--சீனாவின் தனிமைப்படலைக் கடப்பதற்கான சோசலிச மாற்றீடு பற்றி --அதாவது உலக சோசலிசப்
புரட்சி வேலைத்திட்டத்திற்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நாடுதல் என்பதற்கு-- இயல்பாக விரோதப்
போக்கைக் கொண்டிருந்தன.
மாவோவின் கிராமப்புற சோசலிசம், விவசாய கம்யூன்கள் மற்றும் கொல்லைப்புற
தொழில்பிரிவு ஆகியவற்றிற்கான கற்பனை நகரத் திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பேரழிவை ஏற்படுத்தி இறுதியில்
தன்னுடைய போட்டியாளர்களுக்கு எதிராக அவர் 1966ல் நடத்திய மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சாரப்
புரட்சியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. தங்கள் கைகளிலேயே தொழிலாளர்கள் முடிவுகளை எடுக்கத்
தொடங்கியவுடன், பெரும் பீதிக்கு உட்பட்ட அதிகாரத்துவம் தன் வேறுபாடுகளை விரைவில் களைந்து தொழிலாள
வர்க்கத்தை அடக்குவதற்கு இராணுவத்தை கொண்டு வந்தது. அப்பொழுதில் இருந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சித்
தலைமை மாவோவை சுற்றி ஒரு வழிபாட்டு முறையைக் கொண்டுவந்து தன் அடக்குமுறை நடவடிக்கைகளை
நியாப்படுத்தியதுடன், அவருடைய விவசாய தீவிரப்போக்குடைய வேலைத்திட்டமும் புதைக்கப்பட்டது. 1976ல்
மாவோ இறந்த பின், ஆட்சியானது நால்வர் குழு என அழைக்கப்பட்டிருந்தவர்களை கைது செய்து கலாச்சாரப்
புரட்சியின் கோஷங்களையும் தூக்கி எறிந்தது.
1960,1970களின் மத்தியதர வர்க்க தீவிரப்போக்கினர் கலாச்சாரப் புரட்சியை
பெருமைப் படுத்தினாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக நனவான பிரதிநிதிகிள் "சிவப்பு சீனா" வும் சோவியத்
ஒன்றியத்தின் வர்க்கத் தன்மையும் ஒன்றல்ல என்பதை உணர்ந்தனர், பிந்தையது உருக்குலைந்திருந்தபோதிலும், ஒரு
தொழிலாளர் அரசாக தொடர்ந்தது. அக்டோபர் 1967 "கலாச்சார புரட்சியின்" உச்சக் கட்டத்தில்
Foregin Affairs
ஏட்டில் ரிச்சார்ட் நிக்சன், அவருடைய வரவிருக்கும் ஜனாதிபதிக் காலம் "சீனாவை உலக சமூகத்திற்குள் மீண்டும்
கொண்டுவரும்--ஆனால் உலகப் புரட்சியின் மையத்தானம் என்று இல்லாமல் ஒரு பெரிய, முன்னேறும் நாடாக"
என்று எழுதினார்.
Ü«î Foreign
Affairs பதிப்பில் மற்றொரு பகுப்பாய்வாளர் மாவோவின்
ஆட்சி காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் அதிகாரத்திற்குக் கொண்டுவந்திருந்த முதலாளித்துவ அரசாங்கங்களை விட
மாறுபட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஒரே வேறுபாடு, "சீனக் கம்யூனிசம் வரலாற்றளவில் முதலாளித்துவ
உற்பத்தி முறை எனப்படுவதுடன் தொடர்பு கொண்டுள்ள நோக்கங்களை செயல்படுத்துவது மற்றும் அதில் கட்டப்படும்
சமூக ஒழுங்கை பரமரிப்பதில் மிக உயர்ந்த திறமையை வெளிப்படுத்தியதுதான்.... மாவோயிசத்தின் தனிச்சிறப்பு
கம்யூனிசத்தின் பெயரில் எந்த வகையான தேசிய புரட்சிகர இயக்கத்தின் நோக்கங்களையும் சாதிப்பதற்காக
மக்களை திரட்ட கையாண்ட வழிவகைதான்: அதாவது, பெரும் சக்தி அரசியலைத் தொடர்வதற்கு போதுமான
விதத்தில் சீனாவை தொழில்மயமாக்குதல், (அணுசக்தி உட்பட) இராணுவ வழிவகைகளைப் பெறுதல் ஆகும்."
அனைத்து அடிப்படைகளிலும் இதுதான் கடந்த 30 ஆண்டுகளாக நடந்துள்ளது. நிக்சன்
மாவோவை 1972ல் சந்தித்து சோவியத் எதிர்ப்புக் கூட்டிற்கு தளம் அமைத்து, சீன வெளிநாட்டு முதலீட்டிற்கு ஆரம்பத்தில்
வழிவிட அடித்தளமும் அமைத்தார். 1978ம் ஆண்டு டெங் க்சியாவோ பிங் பெரிய அளவில் வெளிநாட்டு முதலீட்டை
விரைவுபடுத்தி முதலாளித்துவ சந்தையை மீண்டும் நிறுவ வகை செய்தார். இது 1970 களின் கடைசிப் பகுதியில்
உலக முதலாளித்துவ உலகந்தழுவிய உற்பத்தி முறைக்கு மாறியது, குறைவூதிய தொழிலாளர் அரங்குகளை அமைத்தது
இவற்றுடன் ஒரே நேரத்தில் வந்தது. 1989 தியனன்மென் சதுக்கப் படுகொலை தொழிலாள வர்க்கத்தை நசுக்க
மிகவும் இரக்கமற்ற வழிவகைகளை பயன்படுத்தும் என்று நிரூபணமானதும் வெளிமூலதன வரவு என்பது ஒரு வெள்ளப்
பெருக்கென ஆயிற்று.
எந்த சாதனைகள் இன்று கொண்டாடப்படுகின்றன? 1949 புரட்சியின் குறைந்த
வரம்புடை சீர்திருத்தங்கள்கூட சீன முதலாளித்துவத்தை பிரதிபலிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியால்
அகற்றப்பட்டுவிட்டன; இந்த ஆட்சி செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே ஆழ்ந்த சமூகப் பிளவு
ஏற்பட்டுள்ளதற்குத்தான் தலைமை தாங்குகிறது. ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவம், உலகந்தழுவிய
முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளுடன் சீனக் குடியரசு மக்களின் நல்வாழ்விற்கு மது அருந்துகையில், அவர்கள் மிகப்
பெரிய அளவில் வளர்ந்துவிட்ட மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுடன் ஒருங்கிணைந்துவிட்ட சீனத்
தொழிலாளர்களை தங்கள் தோள்களுக்கு மேலாக கடைக்கண் வழியே பயத்துடன் திரும்பிப் பார்க்கின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, 1930 களுக்கு பின்னர் மோசமான உலக முதலாளித்துவ
நெருக்கடிக்கு இடையே, அவர்கள் தொழிலாள வர்க்கம் 1949 புரட்சியை பற்றிய அரசியல் படிப்பினைகளை
கற்று, மீண்டும் உலக சோசலிசப் புரட்சி என்ற பாதைக்கு திரும்பிவிடுமோ என்று அஞ்சுகின்றனர். சீனாவில் அதன்
பொருள் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியைக் கட்டியமைத்து
அடிப்படைப் புரட்சிகரத் தலைமையை வழங்குவது ஆகும். |