WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: An appeal to all workers by the Balmoral
Estate Action Committee
இலங்கை: பெல்மோரல் தோட்ட நடவடிக்கை குழு சகல தொழிலாளர்களுக்கும் விடுக்கும்
வேண்டுகோள்
22 September 2009
Use this
version to print | Send
feedback
அக்கரபத்தனை பெல்மோரல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், இலங்கை பூராவும்
உள்ள தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோளை இங்கு
பிரசுரிக்கின்றோம். தற்போதைய சம்பள உடன்படிக்கையை நிராகரிப்பதோடு சகல தொழிற்சங்கங்களிலும் இருந்து
பிரிந்து சுயாதீனமாக ஒரு நடவடிக்கை குழுவை அமைப்பதன் மூலம் விவகாரத்தை தமது சொந்தக் கைக்குள் எடுக்க
தாம் எடுத்துள்ள ஆரம்ப நடவடிக்கையை பின்பற்றுமாறு பெல்மோரல் தொழிலாளர்கள் அழைப்பு விடுக்கின்றார்கள்.
சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அரசியல் வழிகாட்டலுடன்
பெல்மோரல் தோட்ட நடவடிக்கை குழு ஸ்தாபிக்கப்பட்டது. ஞாயிறு நடந்த நடவடிக்கை குழு கூட்டத்தில், இந்த
வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, அதை ஏனைய பெருந்தோட்டங்களிலும் அதே போல் தொழிற்சாலைகள் மற்றும் வேலைத்
தளங்களிலும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் விநியோகிக்கவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த வேண்டுகோளில் விளக்கியுள்ளவாறு, 405 ரூபா (3.50 அமெரிக்க டொலர்)
வறிய மட்ட நாள் சம்பளத்துக்கு முதலாளிகளுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட அதே போல் அதை எதிர்ப்பதாகக்
கூறிக்கொள்ளும் சகல தொழிற்சங்கங்களுடனும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் விளைவாகவே இந்த நடவடிக்கை
குழுவை ஸ்தாபிக்க முடிவெடுக்கப்பட்டது. 2006ல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கையொப்பமிட்ட உடன்படிக்கையை
எதிர்ப்பதாகக் கூறிக்கொண்ட தொழிற்சங்கங்கள், பரந்த வேலை நிறுத்த நடவடிக்கையை முடிவுக்கு
கொண்டுவரவும், அதன் மூலம் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த அரசாங்கத்துக்கும் முதலாளிகளுக்கும் வாய்ப்பை
ஏற்படுத்திக்கொடுக்க செயற்பட்டன.
பெல்மோரல் தோட்ட தொழிலாளர்கள் எடுத்துள்ள உற்சாகமான நிலைப்பாடு,
தீவிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு பரந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொழிற்சங்கங்கள்,
அரசாங்கத்துக்கும் பெரும் வர்த்தகர்களுக்கும் சார்பாக செயற்படும் கைத்தொழில் பொலிஸ்காரனாக
மாற்றமெடுத்திருப்பது ஒரு சர்வதேச நிகழ்வாகும். உற்பத்தி பூகோளமயமாக்கப்பட்டுள்ள நிலைமைகளின் கீழ்,
அரசாங்கங்களும் முதலாளிகளும் மற்றும் தொழிற்சங்கங்களும் சகல இடங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு "சர்வதேச
போட்டிக்காக" அர்ப்பணிக்குமாறு கூறுகின்றன.
இலங்கையில், இந்தத் தொழிற்சங்கங்கள் முதலாளிகளின் கோரிக்கைகளை திணித்தது
மட்டுமன்றி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இனவாத யுத்தத்துக்கும் தொழிலாளர்களை
அடிபணியச் செய்தன. 2006ல் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது, அவர்கள் தேசிய
பாதுகாப்பை கீழறுப்பதாகவும் "புலி பயங்கரவாதிகளுக்கு" ஆதரவளிப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ
கண்டனம் செய்தார். மே மாதம் புலிகளை தோற்கடித்த அரசாங்கம், இப்போது வர்த்தகர்களின் சார்பில் நாட்டின்
பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது திணிக்க "பொருளாதார யுத்தம்" ஒன்றை
முன்னெடுத்துள்ளார்.
ஞாயிறன்று பெல்மோரல் தோட்ட நடவடிக்கை குழு கூட்டம் கூடிய போது, தொழிற்சங்கங்களின்
ஆதரவுடன் அரசாங்கமும் முதலாளிமாரும் ஒடுக்குமுறையை முன்னெடுப்பது பற்றி தொழிலாளர்கள் நியாயப்பூர்வமாக
கவனம் செலுத்தினர். இலங்கையில், யுத்தத்தின் போது ஒரு பிரமாண்டமான பொலிஸ் அரச இயந்திரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
மே மாதம் மோதல்களின் போது இடம்பெயர்ந்த இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் பொது மக்களை
கால வரையறை இன்றி தடுத்து வைத்திருப்பதன் மூலம், அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை அலட்சியம் செய்வது வெளிப்பட்டுள்ளது.
தோட்டப்புற சம்பள உடன்படிக்கைக்கு எதிராக ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த
தொழிலாளர்கள் மீது ஏற்கனவே பொலிஸ் மற்றும் தொழிற்சங்க குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெல்மோரல் தோட்ட தொழிலாளர்களை தனிமையில் விட முடியாது. ஆதரவு செய்திகளையும்
மனுக்களையும் அனுப்புவன் மூலம் இந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்குமாறு பெருந்தோட்டங்களிலும் தீவுபூராவும்
உள்ள தொழிலாளர்களுக்கு நாம் அழைப்பு விடுப்பதோடு தமது உரிமைகளுக்காகப் போராட சுயாதீனமான நடவடிக்கை
குழுக்களை ஸ்தாபிப்பதில் அவர்களை உதாரணமாக கொள்ளுமாறும் வேண்டுகிறோம். இந்தப் போராட்டத்துக்கு
சோ.ச.க. தனது முழு ஆதரவையும் அரசியல் வழிநடத்தலையும் வழங்குவதாக உறுதியளிக்கிறது.
***
அக்கரபத்தனை பெல்மோரல் தோட்டத்தின் தொழிலாளர்களாகிய நாம், எங்களது
உரிமைகளுக்காகப் போராடுவதற்காக எமது சொந்த நடவடிக்கை குழுவை அமைத்துள்ளதோடு பெருந்தோட்டங்கள்
பூராவும் உள்ள தொழிலாளர்களும் ஏனைய பகுதி தொழிலாளர்களும் இதே போன்று செயற்பட வேண்டுமெனவும்
அழைப்பு விடுக்கின்றோம்.
காலத்துக்குக் காலம் எங்களை விற்று வந்துள்ள எந்தவொரு தொழிற்சங்கத்தின் மீதும்
எங்களுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் நாம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். சகல பெருந்தோட்டத்
தொழிற்சங்கங்களும் எங்களை இன்னும் இரண்டு வருடங்களுக்கு வறிய மட்டத்திலான சம்பளத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக
முதலாளிகளுடனும் அரசாங்கத்துடனும் சேர்ந்து செயற்படுகின்றன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) லங்கா தேசிய தோட்டத்
தொழிலாளர் சங்கம் (ல.தே.தோ.தொ.ச) மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும்
எங்களுக்கு புறமுதுகு காட்டிவிட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எங்களது குறைந்தபட்ச நாள் சம்பளத்தை 405
ரூபாவில் நிறுத்துவதற்காக முதலாளிகளுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. ஆரம்பத்தில் கோரிய 750
ரூபா சம்பளம் பற்றியோ அல்லது அதை 500 ரூபாவுக்கு குறைப்பது பற்றியோ அல்லது அதைவிட குறைந்த
சம்பளத்தை ஏற்றுக்கொள்வது பற்றியோ எங்களுடன் எவரும் தொடர்புகொள்ளவில்லை.
மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.), அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்
சங்கம் (அ.இ.தோ.தொ.ச), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் போன்ற
ஏனைய தொழிற்சங்கங்களும் இந்த வியாபாரத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்கின்றன. ஆனால் அவர்கள் 2006ல்
செய்ததையே இம்முறையும் செய்கின்றனர். அதாவது, அரசாங்கத்துடனும் கம்பனிகளுடனும் மூடிய கதவுகளுக்குள் தமது
சொந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் நடத்தும் அதே வேளை, அவர்கள் தொழிலாளர்களின் எந்தவொரு
சுயாதீன நடவடிக்கையையும் தடுக்கின்றனர்.
இந்தத் தொழிற்சங்கங்கள் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் பகுதியாகும்.
ம.ம.மு. தலைவர் சந்திரசேகரன் இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதோடு தற்போதைய
பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாளர்கள் விலை கொடுக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையுடன்
உடன்படுகின்றார். அ.இ.தோ.தொ.ச. மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) சார்ந்ததாகும்.
ஜே.வி.பி., இராஜபக்ஷ ஆட்சிக்கு வர உதவி, அவரது தமிழர் விரோத யுத்தத்தையும் ஆதரித்ததோடு அவரது
இராணுவ வரவு செலவுத் திட்டத்துக்கும் வாக்களித்ததுடன் அவரது கொடூரமான அவசரகாலச் சட்டத்துக்கும்
தொடர்ந்தும் வாக்களிக்கின்றது.
ஜனாதிபதி இராஜபக்ஷ தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என
சந்திரசேகரன் அழைப்பு விடுக்கின்றார். ஆனால், 2006ல் இராஜபக்ஷ தலையிட்டு இ.தொ.கா. வின்
உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு இந்த சங்கங்களுக்கு கூறிய போது, அவர்கள் அதை கடமை உணர்ச்சியுடன்
ஏற்றுக்கொண்டு தாம் எதுவும் செய்யப் போவதில்லை என்பதை வலியுறுத்தினர். அவர்கள் அதையே திரும்பவும்
செய்வர். அரசாங்கம் ஏற்கனவே 405 ரூபா உடன்படிக்கையை ஆதரிக்குமாறு சகல தொழிற்சங்கங்களுக்கும்
அழைப்பு விடுத்துள்ளது. இந்த உடன்படிக்கைக்கு எதிராக பொகவந்தலாவையில் தொழிலாளர்கள் போராட்டம்
நடத்திய போது, கண்ணீர் புகை வீசவும் அவர்களது தலைக்குமேல் துப்பாக்கிச் சூடு நடத்தவும் அரசாங்கம்
பொலிஸை அனுப்பியது.
அரசாங்கத்துக்கும் முதலாளிகளுக்கும் தொழில்துறை பொலிஸ்காரனாக செயற்படும்
தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்களால் நம்பிக்கை வைக்க முடியாது. சகல தொழிலாளர்களும் தமது சொந்த
சுயாதீன பலத்துடன் அணிதிரள வேண்டும் என நாம் கூறுகிறோம். அதனாலேயே நாம் தோட்டங்கள் அதே போல்
தொழிற்சாலைகள், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் மற்றும் ஏனைய வேலைத் தளங்களில் உள்ள தொழிலாளர்களும்
தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தமது சொந்த நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும் என நாம்
அழைப்பு விடுக்கின்றோம். வாழ்க்கையை கொண்டு நடத்துவது சாத்தியமற்றது என்பதையே நாம் அனைவரும்
காண்கிறோம்.
தொழிற்சங்கங்களின் ஜனநாயக விரோத ஒடுக்குமுறை கட்டமைப்புக்குள்
இருந்துகொண்டு தொழில், சம்பளம் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தை
முன்னெடுக்க முடியாது. அதற்கு மாறாக, எங்களது கோரிக்கைகளை அமைக்கவும் அவற்றுக்காகப் போராட பிரச்சாரமொன்றை
திட்டமிடவும் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளின் மாநாடு ஒன்று கூட்டப்பட வேண்டும் என நாம் பிரேரிக்கின்றோம்.
இந்தக் கோரிக்கைகள் எமது சம்பள அதிகரிப்புக்கும் அப்பால் செல்ல வேண்டும் என நாம் நம்புகிறோம். நாள்
சம்பளம் என்ற சுரண்டல் முறைக்கு முடிவுகட்டுவதோடு நாமும் எங்களது குடும்பங்களும் வாழத் தேவையான மாத
சம்பளத்துக்காக நாம் போராட வேண்டும். வீடு, பாடசாலை, மருத்துவ பராமரிப்பு மற்றும் ஏனைய அத்தியாவசிய
தேவைகள் இட்டுநிரப்பப்பட வேண்டும்.
இந்தப் போராட்டம் தொழிற்சங்க நடவடிக்கைக்கும் மேலானவற்றை
உள்ளடக்கிக்கொண்டுள்ளது. நாம் அரசாங்கத்துக்கும் முதலாளிகளுக்கும் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக
தொழிற்சங்கங்களுக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்பதை புரிந்துகொண்டுள்ளோம்.
சம்பள போராட்டம் சம்பந்தமான சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையை நாம் வாசித்துள்ளதோடு அதை
ஏற்றுக்கொள்கிறோம். அதை வாசிக்குமாறும் அது எழுப்பும் பிரச்சினைகளில் அக்கறையுடன் கவனம் செலுத்துமாறும்
நாம் வேண்டுகோள் விடுக்கிறோம். (பார்க்க: "இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச
முன்நோக்கு")
பூகோள பொருளாதார வீழ்ச்சியின் சுமைகளை தொழிலாளர்களே தாங்க வேண்டும்
என இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு கூறப்பட்டுள்ளது என்ற விடயத்தை அந்த
அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஆனால், அதற்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல மற்றும் எதேச்சதிகார இலாப
முறையால் உருவாக்கப்பட்ட நெருக்கடிக்கு நாம் விலை கொடுக்க வேண்டியதில்லை. ஒரு சில செல்வந்தர்களுக்காக
அல்லாமல், எமது தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவாறு சோசலிச முறையில் மீள்கட்டமைக்கப்பட்ட
சமுதாயமொன்றுக்காக போராட நாம் சகல இடங்களிலும் உள்ள தொழிலாளர்களுடன் இணைந்துகொள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, சமுதாயத்தில் உள்ள சகல செல்வங்களதும் உண்மையான உற்பத்தியாளர்கள்
தொழிலாளர்களே.
நாம் எமது சிங்கள மொழி பேசும் வர்க்க சகோதர சகோதரிகளுக்கு ஒரு விசேட
வேண்டுகோள் விடுக்கிறோம். மிக நீண்ட காலமாக, அரசாங்கங்களும் மற்றும் சகல பிரதான கட்சிகளும் தமது
இனவாத அரசியலின் மூலம் எங்களுக்கிடையில் ஒரு பிளவை ஏற்படுத்தியுள்ளனர். நாம் அனைவரும் ஒரே வர்க்க பிரச்சினைகளை
எதிர்கொள்கிறோம்: அரசாங்கமும் பெரும் வர்த்தகர்களும் எமது வாழ்க்கைத் தரத்தின் மீது முடிவின்றி தாக்குதல்
தொடுக்கின்றனர். தனது யுத்தத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும் என எங்களை வலியுறுத்திய அரசாங்கம், இப்போது
"தேசத்தை கட்டியெழுப்ப" நாம் அர்ப்பணிக்க வேண்டும் எனக் கோருகிறது. ஆனால், இது தேசிய சொத்தில்
மிகப் பெரும் பகுதிக்கு உரிமைகோரும் பணக்காரத் தட்டுக்காக மேலும் அர்ப்பணிப்பதையே அர்த்தப்படுத்துகிறது.
தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக பொலிஸ் அரச வழிமுறைகளை பயன்படுத்த இராஜபக்ஷ
அரசாங்கம் தயங்கப் போவதில்லை என நாம் முன்கூட்டியே எச்சரிக்கின்றோம். யுத்தத்தின் போது, வேலை
நிறுத்தம் செய்த துறைமுகத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக
ஊழியர்களையும், அதே போல், ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மற்றும் விவசாயிகளையும் தேசத் துரோகிகள்
என இராஜபக்ஷ கண்டனம் செய்தார். இப்போது தனது "பொருளாதார யுத்தத்தை" முன்னெடுத்துள்ள நிலையில்,
அரசாங்கம் அதனது பொருளாதார திட்டங்கள் மற்றும் வர்த்தகர்களின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்
எவருக்கும் எதிராக இரக்கமின்றியே நடந்துகொள்ளும்.
எங்களால் தனித்து போராட முடியாது. நாம் அனைத்து தொழிலாளர்களுக்கும் தமது
சொந்த நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறும், எமது வேண்டுகோளையும் மற்றும் சோ.ச.க. அறிக்கையையும்
சாத்தியமானளவு விரிவாக ஏனையவர்களுக்கு விநியோகிக்குமாறும், எங்களையும் சோசலிச சமத்துவக் கட்சியையும்
தொடர்புகொள்ளுமாறும் மற்றும் அடுத்த நடவடிக்கை பற்றி தீர்மானிக்கும் மாநாடு ஒன்றுக்கான தயாரிப்புக்காக
பிரதிநிதிகளை தேர்வு செய்யுமாறும் அழைப்புவிடுக்கின்றோம். |