WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:ஆசியா
: கொரியா
South Korea: The political lessons of the Ssangyong
occupation
தென் கொரியா: சாங்யோங் ஆக்கிரமிப்பின் அரசியல் படிப்பினைகள்
James Cogan
18 August 2009
Use this
version to print | Send
feedback
ஆகஸ்ட் 5ம் தேதி ஆயிரக்கணக்கான தென்கொரிய கலகப் பிரிவு போலீசார்,
நிறுவனங்களின் குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு, தங்கள் வேலைகளைக் காப்பாற்றிக் கொள்ள போராடிவரும்
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் 77 நாட்களாக நடத்திவரும் பயோங்டெக்கில் இருக்கும் சாங்யோங் ஆலை ஆக்கிரமிப்பை
வன்முறையில் அகற்றினர். அதற்கு மறுநாள் Korean
Metal Workers Union (KMWU), மற்றும்
KCTU எனப்படும்
கொரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகம் கோரிய மிகப் பெரிய வேலைக்குறைப்புக்களை ஏற்றன.
சாங்யோங் தோல்வியின் விளைவுகள் ஏற்கனவே பேரழிவைத் தரும் வகையில் உள்ளன.
நிர்வாகம் உற்பத்தியை மீண்டும் ஆரம்பிக்கும்போது, 2,600 தொழிலாளர்கள் அகற்றப்பட்டுவிடுவர் அல்லது விரைவில்
அகற்றப்படுவர். இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் பகையுணர்ச்சி கொண்டு,
போலீஸ் தாக்குதல்களை எதிர்த்ததாக 64 தொழிலாளர்கள் குற்றங்களை எதிர்கொள்ளுகின்றனர். ஆக்கிரமிப்பை
உடைத்தது வேலைகள், ஊதியங்கள் மற்றும் பணிநிலைமைகளை குறைப்பதற்கான தங்களது சொந்த திட்டங்களை மேலெடுத்துச்செல்ல
மற்ற நிறுவனங்களுக்கும் பச்சை விளக்கைக் காட்டியுள்ளது.
இந்தக் கசப்பான அனுபவத்தின் படிப்பினைகள் தென் கொரியாவிலும் சர்வதேச அளவிலும்
தொழிலாளர்களால் கற்கப்பட வேண்டும். சாங்யோங் ஆக்கிரமிப்பை அரசாங்கம் அகற்றியது வேலைக்கான அடிப்படை
உரிமையை பாதுகாப்பது என்பது ஒரு புரட்சிகர வினா என்பதை எடுத்துக்காட்டுகிறது. முதலாளித்துவத்தின்
நெருக்கடி அதிகரிக்கையில் தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படை உரிமைகள் பெருவணிகத்தின் கோரிக்கைகளுடன்
இயைந்து இராது என்பதைக் காட்டுகிறது. வேலைக்கான போராட்டம் என்பது, வெறுமனே தனிப்பட்ட நிறுவனத்திற்கு
எதிராக என்று இல்லாமல், அரசாங்கம், பெருநிறுவன உயரடுக்கு மற்றும் அவற்றிற்கு உடந்தையாக இருக்கும் தொழிற்சங்கங்களுக்கு
எதிரான அவசியமான வகையில் சம்பந்தப்பட்டுள்ள ஒரு அரசியல் போராட்டம் ஆகும்.
சாங்யோங் ஆக்கிரமிப்பு மே 22 அன்று, நிர்வாகத்திற்கு கடன்
கொடுத்தவர்--நியமித்த நிர்வாகமானது, திவால்தன்மையை தடுத்து நிறுத்த 36 சதவிகித தொழிலாளர்
தொகுப்பினரை அகற்ற இருக்கும் அதன் விருப்பத்தை அறிவித்தவுடன் தொடங்கியது. அதற்கு விடையிறுக்கும் வகையில்
பயோங்டெக்கில் இருக்கும் தொழிலாளர்கள் ஆலையை ஆக்கிரமித்து பணிநீக்கம் கூடாது, அனைத்து ஊழியர்களுக்கும்
வேலைப் பாதுகாப்பு, மற்றும் ஆலையின் உற்பத்தியை வெளியே பிற நிறுவனங்களுக்கு கொடுக்க அனுமதிக்கக்கூடாது
என்று கோரினர்.
இந்த ஆக்கிரமிப்பு ஜனாதிபதி லீ மையுங்-பக்கின் வலதுசாரி
Grand National Party (GNP)
அரசாங்கத்தின் செயற்பட்டியலுக்கு நேரடி சவாலைப் பிரதிபலித்தது. தொழிலாளர் சந்தையில் "வளைந்து
கொடுக்கும் தன்மை" -அதாவது தொழிலாளர்களை விரும்பியபடி பணிநீக்கம் செய்யும் உரிமை கூடுதலாக இருக்க
வேண்டும் என்று லீ விரும்புகிறார்; தவிரவும் கொரிய நிறுவனங்கள், குறிப்பாக சீனத் தளத்தை கொண்ட
உற்பத்தியாளர்களிடம் இருந்து வரும் பெருகிய சவால்களை எதிர்கொள்ளுவதற்கு ஏற்ப போட்டித் தன்மையை தக்க
வைத்துக் கொள்ளும் வகையில் ஊதியங்கள் அதே நிலையில் வைக்கப்பட வேண்டும், என வலியுறுத்துகிறார்.
ஆயினும்கூட ஒரு மாதத்திற்கும் மேலாக லீ அரசாங்கம் ஆக்கிரமிப்பிற்கு எதிராக
போலீசாரை பயன்படுத்த தயக்கம் காட்டியது; இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவது ஒரு பரந்த எழுச்சியை
வேலையில்லாதவர்களிடையே தூண்டுமோ, ஒரு ஆழ்ந்த சமூக நெருக்கடி ஏற்படுமோ என அஞ்சியது. வலுவான
நிலையில் இருப்பதற்கு முற்றிலும் மாறாக, லீ பரந்த வெறுப்பிற்கு உள்ளானார். கடந்த ஆண்டு பதவிக்கு வந்த சில
மாதங்களுக்குள் அவருடைய நிர்வாகம் அமெரிக்க மாட்டு இறைச்சி இறக்குமதிகளுக்கு எதிராக வெடித்த பெரும்
எதிர்ப்புக்களையொட்டி கிட்டத்தட்ட பொறிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டது.
சாங்யோங் ஆக்கிரமிப்பை கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும் அது வேலையிழப்பு, ஊதிய,
பணிநிலைக் குறைப்புக்களை எதிர்கொள்ளும் பிற தொழிலாளர்களின் கவனத்தை ஈர்க்கும் தளமாக மாறுவதைத்
தடுக்கவும் கொரிய தொழிற்சங்கங்களைத்தான் லீ முற்றிலும் நம்பியிருந்தார்.
KMWI மற்றும்
KCTU
இரண்டும், இலாபத்தை மீட்பதற்காக நிர்வாகம் கோரிய வேலை வெட்டுக்கள் பற்றி எந்த கருத்து வேறுபாடும்
கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய பேச்சுவார்த்தைகளின் ஒரே நோக்கம் ஒரு சமரசத்தை அடைதலாக
இருந்தது, அதன்படி பதவி நீக்கம் பெற உள்ள சிறுபான்மைத் தொழிலாளர்கள் நிறுவனத்தில் வேறு வேலை
கொடுக்கப்படுவர் அல்லது காலவரையற்ற ஊதியமில்லாத விடுப்பு கொடுக்கப்படுவர்.
தொழிற்சங்கங்கள் வேலைகள், பணி நிலைமைகளை காப்பாற்றுவதற்கு பரந்த
தாக்குதல் நடத்தும் விருப்பத்தை சிறிதும் கொண்டிருக்கவில்லை. கடந்த மூன்று மாதங்களில் அவர்கள்
தொழிலாளர்களின் இழப்பில் நிறுவனங்களை மறுசீரமைக்க தொடர்ச்சியான இழிந்த உடன்பாடுகள் பலவற்றை
செய்துள்ளன. மே மாதம் தொழிற்சங்கங்கள் கார் உதிரிப்பாக நிறுவனமான
Shinchang Electrics
ல் 20 சதவிகித ஊதியக் குறைப்புக்கு ஒப்புக் கொண்டன. ஜூலை மாதம் திவாலாகிவிட்ட ஜெனரல் மோட்டார்ஸின்
Daewoo
குழுவுடன் முழுத் தொழிலளார் தொகுப்பின் ஊதிய முடக்கத்திற்கும் உடன்பாட்டைக் கண்டது. இதே போன்ற
உடன்பாட்டை இப்பொழுது Kia Motors
விரும்புகிறது.
KCTU மற்றும் அத்துடன் இணைந்த
அமைப்புக்களான KMWU
போன்றவை 1980 களின் கடைசியில் அதிக ஊதியங்கள் மற்றும் நல்ல நிலைமைகளுக்கு போராடிய போர்க்குணமிக்க
போராட்டங்களுக்கு இடையே விரைவில் சட்டவிரோத அமைப்புக்கள் என்று விரிவடைந்து தங்களுக்கு என ஒரு பெயரை
உருவாக்கிக் கொண்டன. ஆனால் அவர்களுடைய அரசியல் முன்னோக்கு இராணுவ சர்வாதிகாரத்திற்கு முடிவு
கட்டுவது, சிறு சிறு சீர்திருத்தங்கள் என்பதற்கு அப்பால் செல்லவில்லை--வேறுவிதமாகக் கூறினால், கிம் டே ஜங்
போன்ற ஜனநாயக கட்சியினரின் வேலைத்திட்டத்தை தாண்டவில்லை.
1997-98ல் ஆசியப் புலிகள் என்று அழைக்கப்பட்ட அனைத்தையும் தாக்கிய
பொருளாதார நெருக்கடிக்கு இடையே இந்த திட்டத்தின் வரம்புகள் மிகவும் வெளிப்படையாக தெரிந்தன.
இப்பொழுது சட்டபூர்வமாக இருக்கும் KCTU,
IMF
கோரிக்கைகளான பொருளாதார மறு சீரமைப்பு மூலம் ஜனாதிபதி கிம் டே ஜங், வாழ்நாள் முழுவதும் வேலை
என்பதைத் திறமையாக அகற்றுவதில் முக்கிய பங்கை ஆற்றியது.
கடந்த தசாப்தத்தில், முதலில் கிம், பின்னர் ஜனாதிபதி ரோ மூ-ஹ்யுன் கீழ்
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் ஒவ்வொரு முக்கிய போராட்டத்தையும் நாசப்படுத்தியுள்ளன. தொழிலாளர்
தொகுப்பில் கிட்டத்தட்ட 33 சதவிகிதத்தினர் அன்றாட அல்லது தற்காலிக ஒப்பந்தங்களுக்கு நகர்த்தப்பட்டு,
முழுநேரத் தொழிலாளியின் ஊதியத்தில் 60 சதவிகிதம் மட்டுமே சராசரியாகப் பெறுகின்றனர்; அதாவது
பலநேரமும் ஒரு மணி நேரத்திற்கு $3 என்ற குறைந்த அளவில் ஆகும். இப்பொழுது தென் கொரியப்
பொருளாதாரம் உலக மந்த நிலையினால் பேரழிவிற்கு உட்பட்டிருக்கும்போது, தொழிலாளர்கள்
பெருநிறுவனங்களுடனும், லீ நிர்வாகத்துடனும் காட்டுமிராண்டித்தனமான புதிய சுற்று மறு சீரைமைப்பிற்கு
ஒத்துழைக்கின்றன.
இத்தகைய முறையில் தென் கொரிய தொழிற்சங்கங்கள் மாறியிருப்பது ஒரு சர்வதேச
வழிவகையின் பகுதியாகும். தென் கொரியாவும் ஒரு இணைந்த பகுதியாக இருந்த, கடந்த மூன்று தசாப்தங்களில்
நடந்த உற்பத்தி நிகழ்முறைகளின் உலகளாவிய ஒருங்கிணைப்பு, தொழிற்சங்கவாதத்தின் தேசிய சீர்திருத்தவாத
முன்னோக்குகளை கீழறுத்துள்ளது. இந்த அமைப்புக்கள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக்கூட
காப்பதில்லை; மாறாக சர்வதேச போட்டித் தன்மையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக,
அதாவது தென் கொரிய முதலாளித்துவத்தின் நலனுக்காக, கூடுதலான உற்பத்தித் திறன் என்ற பெயரில்
பெருவணிகத்தின் கோரிக்கைகளை சுமத்துகின்றன.
ஆக்கிரமிப்புக் காலத்தில், சாங்யோங் தொழிலாளர்கள் பெரும் தைரியத்தையும்,
உறுதியையும் நிரூபித்தனர். தங்கள் தொண்டர் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து ஆக்கிரமிப்பை முறியடிக்க முற்பட்ட
நிறுவனக் குண்டர்களுடன் போராடினர். தொழிற்சங்கங்கள் ஒரு உடன்பாட்டிற்கு தரகராக இருக்கும் முயற்சிகளுக்கு
எதிராக தொழிலாளர்கள் அனைத்து வேலைகளும் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் இது போதவில்லை. ஆக்கிரமிப்பின் பெரும் வலுவின்மை ஒரு மாற்றீட்டு
அரசியல் முன்னோக்கு இல்லாதுதான். தொழிற்சங்கங்களின் கடந்த கால துரோகத்தை கருத்தில் கொள்கையில்,
தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது சந்தேகப்பட்டனர், ஏன் முற்றிலும் விரோதப் போக்கு
காட்டினர் என்றே கூறலாம்; ஆனால் நிறுவனமும் அரசாங்கமும் இன்னும் தங்கள் கோரிக்கையை கொடுக்க அழுத்தம்
கொடுக்கப்பட முடியும் என்ற கருத்தாய்வில் உறுதியாக இருந்தனர். இதன் விளைவு தொழிற்சங்கத் தலைமை
ஆக்கிரமிப்பை பெரிதும் ஒதுக்கி வைக்க முடிந்தது; இது அரசாங்கம் மற்றும் நிறுவனத்தை தங்கள் சக்திகளைத்
திரட்டி இறுதி உடைப்பைச் செய்ய அனுமதித்தது.
இதன் அரசியல் படிப்பினைகள் என்ன?
முதலில் தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படைத் தேவைகளை பாதுகாப்பது கூட
இருக்கும் முதலாளித்துவ முறையை எதிர்க்கும் தேவையைக் கொடுத்துள்ளது. வேலைகளை காப்பதற்காக தீவிரப்
போராட்டம் என்பது விரைவில் அரசாங்கம், முதலாளித்துவ அரசு இவற்றிற்கு எதிரான அரசியல் போராட்டமாகிறது.
ஆயினும், லீ நிர்வாகத்தை வீழ்த்துவதற்கான யுத்தமானது, அதேபோன்ற வேலைத்திட்டத்தை
செயல்படுத்தியுள்ள ஜனநாயகக் கட்சியை நம்பியிருக்காமல், இதேபோன்ற பொருளாதார, சமூக நெருக்கடியை
எதிர்கொள்ளும் தொழிலாள வர்ககத்தின் மற்ற பிரிவுகளை தோக்கித் திரும்ப வேண்டியதன் அவசியத்தை முன்வைக்கிறது.
லீக்கு எதிரான போராட்டமானது, கார்த் தயாரிப்பு நிறுவனங்கள் தேசியமயமாக்கப்படல் உள்ளடங்கலான, சோசலிச
கொள்கைகளை அமல்படுத்தும் ஒரு தொழிலாளர் விவசாயி அரசாங்கத்தின் ஒரு புரட்சிகரமான முன்னோக்கை
கட்டாயம் அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.
இரண்டாவதாக, சோசலிசத்திற்கான போராட்டம் என்பது தவிர்க்கமுடியாத வகையில்
குணநலனில் சர்வதேசத் தன்மையை கொண்டது ஆகும். உலக பொருளாதாரப் பின்னடைவு சர்வதேச கார்த் தொழிலில்
ஆழ்ந்த நெருக்கடியை தோற்றுவித்துள்ளது, பெரிய உற்பத்தியாளர்களிடையே போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது மற்றும்
புதிய சுற்று இணைப்புக்களையும் மறு கட்டமைப்புக்களையும் தூண்டிவிட்டுள்ளது. தென் கொரிய தொழிலாளர்கள்
KCTU
உடைய தேசியவாத, பாதுகாப்புவாத முன்னோக்கை நிராகரிக்க வேணடும்; இது தென் கொரியத்
தொழிலாளர்களை சர்வதேசரீதியாக அவர்களுடைய சகோதர, சகோதரிகளுக்கு எதிராக நிறுத்துகிறது.
மூன்றாவதாக, தொழிலாளர்கள் புதிய அமைப்புக்களை கட்டமைக்க வேண்டும்;
எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு புதிய கட்சியை நிறுவ வேண்டும். உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒன்றுதான், அதன் வரலாறு, வேலைத்திட்டம் ஆகியவற்றின் காரணமாக உலகெங்கிலும்
இருக்கும் தொழிலாளர்களை சோசலிச சர்வதேசியத்திற்கான போராட்டத்தில் ஐக்கியப்படுத்த முடியும். சோசலிச
சிந்தனையுடைய தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளை தென் கொரியாவில் நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியைக் கட்டியமைக்கும் பணிக்கு வருமாறு வலியுறுத்துகிறோம். |