WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : வட
அமெரிக்கா
Obama's inaugural address: Amid banalities, a call
for austerity
ஒபாமாவின் பதவியேற்பு உரை: பல வெற்றுச் சொற்றொடர்களுடன், கடும் சிக்கனத்திற்கு
ஒரு அழைப்பு
By Bill Van Auken
21 January 2009
Use this
version to print | Send
this link by email | Email
the author
செவ்வாயன்று நிகழ்த்திய பதவியேற்பு உரையில், ஜனாதிபதி
பாரக் ஒபாமா பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் உறுதிமொழிகளையோ, திட்டங்களையோ
முன்வைக்காததுடன், அதேபோல் போர் நிறுத்தம் பற்றியும் கருத்து ஏதும் கூறவில்லை. மாறாக அமெரிக்க மக்கள்
இன்னும் கடுமையான தியாகங்களை ஏற்க வேண்டியிருக்கும் என்ற குறிப்பைத்தான் காட்டியுள்ளார்.
அமெரிக்க குடியரசு 220 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் பெற்றதிலிருந்து நடைபெற்று
வரும் ஆடம்பரப் பகட்டு நிகழ்வுகளுக்கு, முதல் ஆபிரிக்க அமெரிக்கர் ஜனாதிபதி பதவிக்கு வந்ததில் மீண்டும்
புத்துயிர்ப்பு கொடுக்கப்பட்டது. இது ஒபாமாவின் சொற்களில் இருந்த வெற்றுத்தனத்தையும், அவருடைய செய்தியின்
வெறுமைக்கும் முற்றிலும் எதிரிடையாக இருந்தது.
வாஷிங்டன் திறந்தவெளி அரங்கில் குழுமியிருந்த மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகள்
அத்தினத்தின் ஒரு ஆபிரிக்க அமெரிக்கர் பதவிக்கு வருவது உண்மையான மாற்றத்தைக் குறிக்கும் என்றும் ஜோர்ஜ் டபுள்யூ
புஷ்ஷின் வெளியேற்றம் நிம்மதியையும் கொடுக்கும் என்ற விதத்தில் இருந்தன; புஷ் அமெரிக்க காங்கிரஸின் படிகளில்
முதலில் தோன்றியபோது கூடியிருந்த கூட்டத்தில் இருந்து ஏளனக்குரல்கள் ஒலித்தன. நிகழ்வு முடிந்த பின்னர், உலாவரும்
வீதியில் இருந்து நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் வெறுக்கப்பட்ட ஜனாதிபதி புஷ்ஷை சுமந்த உலங்குவானூர்தி பறந்தவுடன்
கூட்டம் ஒரு எதிர் விளையாட்டுக் குழுவை கேலி செய்யும் விதத்தில் வரும் ஒலிகளான, "நா, நா, நா, நா,
ஹே, ஹே, குட்பை" என்று குரலெழுப்பியது.
ஒரு புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு, ஒரு திருடப்பட்ட தேர்தலுடன் தொடங்கிய
எட்டு ஆண்டு கால தேசிய தீயகனா, இரு ஆக்கிரமிப்புப் போர்கள், வரலாற்றில் முன்னோடியில்லாத வகையில்
நடைபெற்ற அரசியல் அமைப்பு உரிமைகள்மீதான தாக்குதல்கள், தடையற்று வளரும் சமூக சமத்துவமின்மை, அமெரிக்காவின்
தற்கால வரலாற்றில் உள்ள ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க அடையாளம்
காட்டும் என்று நம்பப்பட்டது. இத்தகைய உணர்வுகள் அந்நிகழ்வை சர்வதேச ஒளிபரப்புக்களில் கண்ணுற்ற உலகெங்கிலும்
இருக்கும் மக்களாலும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
ஆயினும் ஒபாமாவின் உரை அத்தகைய எதிர்பார்ப்புக்களை பெரிதும் அடக்கிவிடும்
நோக்கத்தை கொண்டிருந்ததுபோல எழுதப்பட்டிருந்தது. ஒபாமா "பொறுப்பு வாய்ந்த புதிய சகாப்தத்திற்கு"
அழைப்புவிடுகிறார் என்ற விதத்தில்தான் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்
ஆகியவற்றின் வலைத் தளங்களில் முக்கிய செய்தியாக நிகழ்வைப்பற்றி தலைப்புக்கள் கொடுத்திருந்தன; மற்றய
பெருநிறுவன செய்தி ஊடகத்தினரும் இவ்வித்தில்தான் அறிவித்திருந்தன.
இத்தகைய அழைப்புகள் கசப்பான வஞ்சகபுகழ்ச்சியால் நிறைந்துள்ளன. ஏனெனில்
பொறுப்பு எடுத்துக்கொள்வது தொடர்பான கொள்கை அதிக வேறுபாடுகளுடன் தான் பிரயோகிக்கப்படவுள்ளது.
சமீப வாரங்களில் ஒபாமாவும் அவருடைய ஆலோசகர்களும் பல முறை தாங்கள் புஷ், செனி அல்லது மற்ற மூத்த
அதிகாரிகளை எவ்விதத்திலும் அவர்கள் கடைபடித்த கொள்கைகளுக்கு பொறுப்புக்கூற வைக்கும் விருப்பம் அற்றவர்கள்
எனக் கூறியுள்ளனர்; அவையோ போர்க்குற்றங்களாவதுடன், அவர்கள் பதவியில் இருக்கும்போது அரசியலமைப்பிற்கு
எதிராகச் செய்த குற்றங்கள் ஆகின்றன.
அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்றில் வந்துள்ள மிக ஆழ்ந்த நிதிய நெருக்கடியை
பொறுத்தவரையில், நிர்வாகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் எவரும் ஒபாமாவின் மதிப்பீட்டில் பொறுப்பு
ஏற்பதற்கில்லை. "எமது பொருளாதாரம் மோசமாக வலுவழந்துள்ளது, சிலரின் பேராசை, பொறுப்பற்ற தன்மை
என்பதாலும், கடிமான முடிவுகளை நாம் கூட்டாக எடுக்கத் தவறி மற்றும் நாட்டை புதிய சகாப்தத்திற்கு
தயாரிக்காததாலும் இந்தநிலை" என்று அவர் தன்னுடைய உரையின் ஆரம்பத்தில் கூறினார்.
இத்தகைய கருத்து தங்கள் வேலைகளையும் வீடுகளையும் எக்குற்றமும் செய்யாமல்
இழக்கும் நிலையை எதிர்கொண்டுள்ள பல மில்லியன் தொழிலாளர்கள் வோல் ஸ்ட்ரீட் நிர்வாகிகள், தனியார்
முதலீட்டு மேலதிகாரிகளுடன் சேர்ந்து இந்த நெருக்கடிக்கு சமமான முறையில் பொறுப்பை கொள்ள வேண்டும் என்று
கூறுகிறது; வால் ஸ்ட்ரீட் நிர்வாகிகள், தனியார் முதலீட்டு மேலதிகாரிகளின் நிதிய ஒட்டுண்ணித்தனமும் குற்றம்சார்ந்த
தன்மையும்தான் தங்கள் நிறுவனங்களையும் உலகப் பொருளாதாரத்தையும் அழிவிற்கு இட்டுச் சென்றன.
இப்பொழுது ஒபாமா தொழிலாளர்களிடம், அவர்கள் தங்கள் வாழ்வை அழித்துக்
கொண்டிருக்கும் நெருக்கடிக்கு "பொறுப்பு" ஏற்க வேண்டும் என்றும், இதற்காக இன்னும் ஆழ்ந்த முறையில்
வேலைகள், ஊதியங்கள், சமூக நலன்கள் ஆகியவை தாக்கப்படுவதற்கு உட்பட வேண்டும் என்றும் கூறுகிறார்; அதே
நேரத்தில் டிரில்லியன் கணக்கான பொதுப்பணம், தலைமை நிர்வாகிகள் தங்கள் ஏழு, எட்டு இலக்க நஷ்ட
ஈட்டுத்தொகையை பெற்றுச் செல்லும் வோல் ஸ்ட்ரீட்டை பிணை எடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.
ஒபாமாவின் அலங்காரச் சொற்றொடர்கள் சிலவற்றில் அவரும் அவருடைய உரை
எழுதுபவர்களும் பெருமந்தநிலை நிறைந்த காலமான 1933ல் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் கொடுத்த முதல் ஆரம்ப
உரையைப் போல் உரை தயாரிக்க முற்பட்டனர் என்ற குறிப்புக்கள் உள்ளன. வரலாற்று சமாந்திரங்கள் உள்ளன
என்பது தெளிவு; அது இன்னும் தெளிவான முறையில் செவ்வாயன்று சந்தை 8,000 புள்ளிகளை விடக் குறைந்ததில்
புலனாயிற்று; அதன் மிகமுக்கிய பங்குச்சந்தை கூறியீடு ஒபாமா பதவி ஏற்றுக்கொண்டிருக்கையிலேயே 5
சதவிகிதத்திற்கும் மேலாகக் குறைந்தது.
ஆயினும்கூட ரூஸ்வெல்ட் 76 ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படையாக பேசியதைப்போல்
ஒபாமாவினால் பேசமுடியவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். புதிய ஜனாதிபதியின் ஆரம்ப உரை
எல்லாவற்றிற்கும் மேலாக எதைப்பற்றியும் உறுதியாக கூறாத தன்மையைத்தான் கொண்டிருந்தது.
ரூஸ்வெல்ட் நாட்டிற்கு உரையாற்றியபோது, "தான் உண்மையை, முழு உண்மையையும்
வெளிப்படையாகவும் தைரியமாகவும்" பேசப்போவதாக உறுதியளித்தார். அப்படி ஒன்றும் உறுதியாகச்
செய்யவில்லை என்றாலும், அவருடைய நோக்கம் முதலாளித்துவத்தை சமூகப் புரட்சியில் இருந்து காப்பாற்றுவதாக
இருந்தது; எனவே அவர் நெருக்கடியை எது தோற்றுவித்தது என்பதைப் பற்றி வெளிப்படையாகவே முதலில் கூறி
பின்னர் அதைப்பற்றித் தான் என்ன செய்ய உள்ளார் என்பது பற்றியும் கூறினார்.
1930 களின் நெருக்கடி இயற்கையின் "வளங்கள்" குறைந்துவிட்டதாலோ, அல்லது
அந்த வளங்களை அதிகரிக்கசெய்ய "மனித முயற்சிகள்" போதைமையாக இருந்ததால் அல்லாது, மாறாக
"மனிதகுலத்திற்கு தேவையான பொருட்களை பறிமாற்றம் செய்பவர்கள் தங்கள் பிடிவாதம், திறைமையின்மை
ஆகியவற்றில் தோற்றுவிட்டதால் ஏற்பட்டது" என்றும் ரூஸ்வெல்ட் அறிவித்தார். அவர் தொடர்ந்து "மன உறுத்தல்
அற்ற வங்கியாளர்களின் நடைமுறைகள், மக்கள் கருத்து என்ற நீதிமன்றத்தில் குற்றச்சாட்டிற்கு உட்பட்டுள்ளதுடன்,
மக்களின் அறிவாலும், இதயத்தாலும் நிராகரிக்கப்பட்டுவிட்டது." என கூறினார்.
இந்தக் கருத்தாய்வின் முதல் பகுதியில் இருந்து தன்னுடைய உரையின் ஒரு பகுதியை
ஒபாமா உருவாக்கியிருப்பதாக தோன்றுகிறது. "எமது தொழிலாளர்கள் இந்த நெருக்கடி தொடங்கியதில் இருந்து
ஒன்றும் உற்பத்தித் திறனில் குறைந்துவிடவில்லை. எமது மனங்கள் ஒன்றும் குறைந்த கண்டுபிடிப்புத் தன்மைக்கு
சென்றுவிடவில்லை; நம்முடைய பொருட்களும் பணிகளும் கடந்த வாரம் அல்லது கடந்த மாதம் அல்லது கடந்த ஆண்டு
பெற்றிருந்த தேவையைவிடக் குறைந்துவிடவில்லை." ஆனால் கூறப்படாதது, அப்படியானால் ஏன் பொருளாரம் கீழ்ச்
சரிவை கொண்டுள்ளது, அதுவும் கிட்டத்தட்ட 3 மில்லியன் வேலைகள் இழப்பு என்று அமெரிக்காவில் மட்டும் கடந்த
ஆண்டு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பற்கான காரணம்தான்.
இந்த தவிர்ப்பில் இவரை ஆதரித்தவர்கள்மீது இவர் கொண்டுள்ள வெறுப்புணர்வும்,
மெத்தத்தனமும் ஒரு ஆச்சரியப்படும் மட்டத்தில் உள்ளது. அவர்களுக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேண்டிய தேவை
இல்லை என்று இவர் நினைப்பது வெளிப்படை; அதிகம் ஏதும் கூறாவிட்டால் அதுவே நல்லது என்று கருதுகிறார்.
ஒபாமா இன்றைய ''வங்கியாளர்களின்'' பங்கு பற்றிக் கூட குறிப்பிடவில்லை;
அவர்கள்தான் அவருடைய பிரச்சாரத்திற்கான பணத்தில் பெரும் பங்கைக் கொடுத்தவர்கள்; ஆரம்ப உரை விழாவின்
செலவிற்கும் அதிகம் பணம் கொடுத்தவர்கள். "சமத்துவம்" பற்றி தெளிவற்ற அலங்காரச் சொற்றொடர்கள் பல
இருந்தபோதிலும்கூட, அவர்களுடைய நலன்களை அவர் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவின் இழப்பில்
பாதுகாக்க உள்ளார்.
இதுதான் அரசாங்கத்தின் பங்கு, முதலாளித்துவ சந்தை ஆகியவை பற்றிய "கடந்த
கால பயனற்ற அரசியல் வாதங்களை" நாம் கடக்க வேண்டும் என்று அவர் கூறுவதின் உண்மையான முக்கியத்துவம்
ஆகும்; அதேபோல் "கசப்பான முடிவுகளை தள்ளிப் போடும் காலம் முடிந்துவிட்டது" என்ற உறுதி மொழிக்கும்
பொருள் இதுதான்.
"இன்று நாம் கேட்கும் வினா, எமது அரசாங்கம் பெரிதா, சிறியதா இல்லை, அது
செயல்படுகிறதா என்பதுதான்.... விடை செயல்படுகிறது என்றால், நாம் முன்னேறவிழைகிறோம் என்று
பொருள்", "செயற்படவில்லை என்றால், திட்டங்கள் நின்று போகும்" என்றார் அவர். மீண்டும் இங்கு எந்த
திட்டங்கள் நிறுத்தப்படும் என்று குறிப்பு இல்லை; ஆனால் கடந்த வாரம் அவர் அரசாங்கத்தின் நிதிய நெருக்கடியை
குறைப்பதற்காக சமூக நலத் திட்டங்களின் அடிப்படைகள் பலவற்றை குறைக்கும் நோக்கத்தை குறிப்பிட்டார்'
அவற்றில் சமூகப் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு என்பவையும் உள்ளன.
"அதேபோல் நமக்கு முன்னே இருக்கும் வினா சந்தை என்பது நன்மைபயப்பதா,
தீமை கொடுப்பதா என்பது அல்ல. செல்வத்தை அது தோற்றுவித்து, சுதந்திரத்தை அதிகரிக்கும் சக்திக்கு ஈடு
இணை இல்லை." தற்போதைய நெருக்கடி, ஒரு "விழிப்பான மேற்பார்வை" இருந்திருக்க வேண்டும் என்ற
தேவையை காட்டுகிறது என்று கூறிய அவர் அதே நேரத்தில் "செழிப்பின் செல்வாக்கு படர வேண்டும், ஒவ்வொரு
விரும்பும் உள்ளத்திற்கும் சென்று சேர வேண்டும்." என்றார். வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவன அமெரிக்க
சார்பாக கடந்த மூன்று தசாப்தங்களாக ஆளும் மற்றம் வலதுசாரி அரசியல்வாதிகளான ரோனால்ட் ரேகன்
அல்லது மற்றவர்களுடைய உரையில் இருந்து எடுத்த கருத்துக்களை போல்தான் இவை உள்ளன.
நெருக்கடியைக் கடப்பதற்கு முக்கியமானது எனத் தான் கருதும் நடவடிக்கைகளை
விளக்குகையில் ஒபாமா "நண்பர்கள் வேலை இழப்பதைவிட தங்கள் பணி நேரத்தைக் குறைத்துக்கொள்ள தயாராக
இருக்கும் தன்னலமற்ற தொழிலாளர்கள்" பற்றி கூறியது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. நாடு முழுவதும்
தொழிலாளர்கள் வேலையை பாதுகாத்தக்கொள்ளலாம் என்பதன் கீழ் பணி நேரக்காலம் மற்றும் ஊதிய
வெட்டுக்களை எதிர்கொள்ளுகின்றனர். அதே நேரத்தில் பிணை எடுப்பு கொடுக்கப்பட்ட வங்கியாளர்கள் எந்தத்
தியாகத்தையும் செய்யத் தயாராக இல்லை. இந்தப் பின்னணியில்தான் மேற்கூறிய கருத்து வந்துள்ளது.
"பயங்கரவாதத்தின் மீதான போர்' தொடரும்
உரை முழுவதும் ஒரு இரண்டாம் அடிப்படைக் கருத்து இழையோடியது; அது
அமெரிக்காவின் அச்சுறுத்தும் தன்மையும் இராணுவவாதம் தொடரும் என்பதுதான்; ஆனால் இந்த கொள்கை முறை
வெளியுறவுக் கொள்கை அறநெறி, பிறருக்கு உதவுதல் என்ற அலங்காரப் பூச்சு மறைப்பினால் கூடுதல் கவனம்
கொடுக்கப்பட்டது எனலாம்.
உரையின் முதல் முக்கிய கருத்தில் ஒபாமா அறிவித்தார்: "எமது நாடு மிகப் பரந்த
வன்முறை, வெறுப்பு என்ற இணையத்திற்கு எதிராகப் போரில் உள்ளது." இதன் உட்குறிப்பு மறைப்பதற்கு இல்லை.
"பயங்கரவாதத்திற்கு எதிரான உலகம் தழுவிய போர்" என்பது புஷ் நிர்வாகம் இரு ஆக்கிரமிப்புப் போர்கள்,
சித்திரவதை நடத்தியது, சட்டத்திற்குமாறாக கடத்தல் நடத்தியது, சட்டவிரோதக் காவல்களில் வைத்தது,
உள்நாட்டு ஒற்றுவேலை ஆகியவற்றிற்காகப் பயன்பட்டது.
தன்னுடைய நிர்வாகத்தின்கீழ், "ஈராக் பற்றிய பொறுப்பு அதன் மக்களுக்குச்செல்லும்
வழிவகையை துவக்குவோம், ஆப்கானிஸ்தானில் கடுமையாக போராடி வெற்றிகொண்ட சமாதானத்தை அடைவோம்"
என்று ஒபாமா உறுதியளித்தார். ஆனால் இப்போர்கள் ஆரம்பிக்கப்பட்டது பற்றி ஒரு சொல் கூட
குறைகூறப்படவில்லை. உண்மையில் வரவிருக்கும் நிர்வாகம் ஏற்கனவே ஈராக்கை "அதன் மக்களிடத்தில்"
விட்டுவிடுவதற்கு பதிலாக இன்னும் பெரிய பொருளாதார அளவில் ஆக்கிரமிப்பு தொடரும் என்றும் அதே நேரத்தில்
பல ஆயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்க துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிற்கு அங்கு நடக்கும் போரை விரிவாக்க
அனுப்பப்படுவர் என்றும் குறிப்பு காட்டியுள்ளது.
இந்த உரையில் "எமது வாழ்வு முறை பற்றி நாம் மன்னிப்புக் கோரமாட்டோம்,
நாட்டைப் பாதுகாப்பதில் சிறிதும் தளர்வடையமாட்டோம்." என்று அவர் கூறியபோது, அதில் அகந்தை மற்றும்
நாட்டுவெறி என்ற கோரத்தன்மைகள் காணப்பட்டன. வெளிநாட்டுத் தலைவர்களை இவர் சாடியது (ஒருகாலத்தில்
வரலாற்றுரீதியாக அடக்கப்பட்ட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா, இலத்தீன் அமெரிக்க நாடுகளின்
தலைவர்களை பற்றி எனலாம்) "சமுதாயத்தின் தீமைகள் அனைத்திற்கும் மேற்குதான் காரணம் என" இவர்கள்
கூறுகின்றனர் என்றார்.
"தங்கள் நோக்கங்களை பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு நிரபராதிகளை படுகொலை
செய்வதின் மூலம் முன்னேற கருதும் நபர்களை" பற்றி அலங்காரமாகக் குறிப்பிட்டு ஒபாமா "நாங்கள் உங்களை
தோற்கடிப்போம்" என்று உறுதிமொழி கூறினார். அமெரிக்க ஆயுதங்களாலும் மெளனமான ஒபாமாவின்
மறைமுகமான ஆதரவுடன், இஸ்ரேல் மூன்றுவார காலமாக காசாப் பகுதியில் தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான
பாலஸ்தீனிய நிரபராதிகள் கொல்லப்பட்டோ, ஊனமாக்கப்பட்டோ இருக்கும் நிலையில், இச்சொற்கள்
பாசாங்குத்தனத்தைத்தான் பிரதிபலிக்கின்றன.
இறுதியில் ஒபாமா அமெரிக்கத் துருப்புக்களுக்கு "இந்த நேரத்திலும் அவர்கள் தொலைதூரத்தில்
உள்ள பாலைவனங்கள், மலைகளில் ரோந்துப் பணி புரிகின்றனர், அவர்களுடைய ''சேவை உணர்வுதான்'' நாம்
அனைவரிலும் முக்கியமாக, இந்த உணர்வு உள்ளடங்கியிருக்கவேண்டிய ஒன்றாகும்" என்ற விதத்தில் புகழ் சூட்டினார்.
புதிதாகப் பதவி ஏற்ற ஜனாதிபதி இவ்விதத்தில் தற்கால இராணுவவாதம் பற்றி புத்தக
வரையறை ஒன்றை வழங்கினார் -- ஒரு நாட்டிற்கு இராணுவம் என்பது அதன் உளப்பாங்கையும் உயர் இலக்கையும்
காட்டுகிறது என்று கூறிய விதத்தில்; மேலும் அமெரிக்காவிற்கு புத்துயிர் அளிக்க அவர் "பார்வையில்" இது
கொண்டுள்ள இடம் பற்றியும் இது கூறுகிறது.
முதல் ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பின்போது குடி உரிமைகள்
போராட்டம் பற்றி எவ்விதக் குறிப்பும் முழுமையாக இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது ஆகும்; அதே போல்
எவ்வித சமூகப் போராட்டங்கள் பற்றியும் குறிப்பு இல்லை.
இத்தகைய தவிர்த்தலுக்கு இரு காரணங்கள் உண்டு. இன்று அத்தகைய மாபெரும்
சமூகப் போராட்டங்களுக்கு ஒபாமா ஊக்கமளிக்க தயாராக இல்லாததுடன், அதேபோல் தான் அடித்தளமாக
கொண்டுள்ளதும் அவரை இப்பொழுது சூழ்ந்துள்ளதுமான சமூகப் பிற்போக்குத்தன சக்திகளை தாக்கவும் அவர்
தயாராக இல்லை.
அவருடைய விருப்பம் எப்படி இருந்தாலும், அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும்
இப்பொழுது வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் பாரிய பொருளாதார, சமூக நெருக்கடி அத்தகைய போராட்டங்களை
பெரிய அளவில்தான் தோற்றுவிக்கும். ஆரம்ப உரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கொள்கைகள் வெற்றுத்தனம்,
நேர்மையற்றவை ஆகும்; அவை சமூக நலன்கள் மற்றும் பெரும்பாலான அமெரிக்க மக்களின் விருப்புகளுக்கு
எதிரிடையானவை. தாமதித்து என்பதை விட விரைவாகவே, இவை அரசியல் மோதலை உருவாக்கும்; அமெரிக்க
முதாலளித்துவத்தின் அஸ்திவாரங்களை அறைகூவலுக்கு உட்படுத்தும் புதிய வர்க்கப் போராட்டம் வெடிக்கும்.
|