மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்கச் சோசலிச சமத்துவக் கட்சியின் எட்டாவது காங்கிரஸில் உலக சோசலிச வலைத் தளத்தின் அமெரிக்கத் தேசிய இணை ஆசிரியரான ஆண்ட்ரே டேமன் (Andre Damon) வழங்கிய அறிக்கையை நாங்கள் இங்கே வெளியிடுகிறோம். இந்தக் காங்கிரஸானது 2024 ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெற்றது. “2024 அமெரிக்கத் தேர்தல்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்“ மற்றும் “போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்!” என்ற இரண்டு தீர்மானங்களை அது ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
அடுத்த மாதம், மேஹ்ரிங் புத்தக வெளியீட்டகம் (Mehring Books), நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் 2014-ல் தொடங்கப்பட்ட வருடாந்திர மே தினப் பேரணிகளில் டேவிட் நோர்த் ஆற்றிய உரைகளைக் கொண்ட ஒரு புதிய தொகுப்பை வெளியிடவுள்ளது.
எச்சரிக்கை ஒலிக்கிறது: போருக்கு எதிராக சோசலிசம் (Sounding the Alarm: Socialism against War) என்ற இந்தப் புத்தகத்தின் தலைப்பு மிகவும் பொருத்தமானது. ஒரு முழு தசாப்தமும், ஆளும் வர்க்கங்கள் ஒரு புதிய உலகப் போருக்கு எந்த அளவிற்குத் தயாராகி வருகின்றன என்பது குறித்து அமெரிக்க மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு எச்சரிக்கை விடுக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) எவ்வாறு முறைப்படி செயற்பட்டது என்பதை இது ஆவணப்படுத்துகிறது.
2014 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முதல் மே தினப் பேரணியில் டேவிட் நோர்த் உரையாற்றுகையில், பின்வருமாறு எச்சரித்தார்:
சீனா மற்றும் ரஷ்யாவுடனான போர் சாத்தியமற்றது - முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் அணுஆயுத சக்திகளுடன் போர் தொடுக்கும் அபாயத்தை ஏற்க மாட்டார்கள் - என்று நம்புபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். 20 ஆம் நூற்றாண்டின் வரலாறு, அதன் இரண்டு பேரழிவுகரமான உலகப் போர்களும், எண்ணற்ற மிகவும் இரத்தக்களரியான உள்ளூர் மோதல்களும், ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் எடுக்கத் தயாராக உள்ள அபாயங்களுக்குப் போதுமான சான்றுகளை வழங்கியுள்ளன. உண்மையில், அவர்கள் முழு மனித குலத்தின் மற்றும் பூமியின் எதிர்காலத்தையே அபாயத்திற்கு உள்ளாக்கத் தயாராக உள்ளனர். முதல் உலகப் போர் தொடங்கி நூறு ஆண்டுகளுக்கும், இரண்டாம் உலகப் போர் தொடங்கி 75 ஆண்டுகளுக்கும் பிறகு, மூன்றாவது ஏகாதிபத்தியப் பேரழிவின் அபாயத்திற்கு எதிரான போராட்டம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ளது.
இத்தகைய எச்சரிக்கைகளை விடுப்பதில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) நோக்கமானது, உடனடி அழிவை முன்னறிவிப்பது அல்ல. மாறாக, ஒரு நிதானமான மதிப்பீட்டின் அடிப்படையில், ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான எதிர்ப்பை அணிதிரட்டுவதற்காக, நிலவும் பெரும் அபாயங்கள் குறித்து தொழிலாள வர்க்கத்தை விழிப்புணர்வு கொள்ளச் செய்வதே ஆகும்.
முதல் சர்வதேச மே தின பேரணிக்குப் பின்னர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எச்சரிக்கைகள், உக்ரேனில் ரஷ்யாவுடனான அமெரிக்கப் போரின் வெடிப்பு, சீனாவுடனான மோதல் தீவிரமடைதல் மற்றும் காஸா இனப்படுகொலை ஆகியவற்றால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறிக்கையானது, உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) வெளியிடப்பட்ட எழுத்துக்கள் மற்றும் அறிக்கைகளின் மீளாய்வின் மூலம், இக்காலகட்டத்தில் உலகளாவிய போர் தோன்றிய வரலாற்றை முன்வைக்க முயலும்.
இந்தக் காலகட்டமானது ஒபாமா, ட்ரம்ப் மற்றும் பைடென் ஆகிய மூன்று நிர்வாகங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளின் முன்னோடி மதிப்பாய்வு தேவைப்படுகிறது. இந்த நிர்வாகங்கள் அனைத்தும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கியத்துவம் குறித்த கடுமையான கருத்து வேறுபாடுகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளன, முக்கியமாக பசிபிக் மற்றும் ஐரோப்பிய அரங்குகளின் முன்னுரிமை குறித்த விவாதங்களால் ஆகும். எனினும், போரின் மூலம் உலகளாவிய ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கத்தில் குறிப்பிடத்தக்க தொடர்ச்சி இந்த நிர்வாகங்களில் காணப்படுகிறது.
ஏனெனில், இந்த நிர்வாகங்கள் அனைத்தும் அமெரிக்க முதலாளித்துவத்தின் அடிப்படை போக்குகளையும், அமெரிக்க நிதி மூலதனத்தின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான உந்துதலையும் வெளிப்படுத்துகின்றன. இவை அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலும் நம்பிக்கையற்ற நெருக்கடியிலிருந்தும், அடிப்படையில், தேசிய அரசுக்கும் உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திற்கும் இடையிலான முரண்பாட்டிலிருந்தும் எழுகின்றன.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்த காலகட்டத்தில், உலகெங்கிலும் பல தசாப்தங்களாக நிகழ்ந்த அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு உந்து சக்தியாக விளங்கிய அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழமடையும் நெருக்கடி மீது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முதன்மையான கவனம் செலுத்தியது.
2009 ஆம் ஆண்டில் “முதலாளித்துவ நெருக்கடியும் வரலாற்றின் மீள்வருகையும்” என்ற கட்டுரையில், டேவிட் நோர்த் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்:
இதுவரை, டாலரின் உலகளாவிய பாத்திரம் அமெரிக்காவிற்கு ஒரு தனித்துவமான நிதி நன்மையை வழங்கியுள்ளது. உலக இருப்பு நாணயமாகச் (world reserve currency) செயல்படும் ஒரு பணத்தை அச்சிடுவதை அமெரிக்கா கட்டுப்படுத்தி வந்துள்ளது.
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
டாலர் தனது தனித்துவமான உலகளாவிய மதிப்பை இழந்தால், இது அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலைக்கு மட்டுமல்லாமல், அதன் உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளின் செயல்பாடுகளிலும் உடனடி விளைவுகளை ஏற்படுத்தும். பல டிரில்லியன் டாலர் பற்றாக்குறையை உள்ளடக்கிய ஒபாமா நிர்வாகத்தின் முழு ஊக்கத் திட்டமும், அமெரிக்க டாலர்களை வைத்திருக்கும் வெளிநாட்டுக் கடனாளிகளின் விருப்பத்தைப் பொறுத்தே இருந்தது என்பதை மட்டும் சுட்டிக்காட்ட வேண்டும்.
தோழர் நோர்த் அந்த வரிகளை எழுதியபோது, அமெரிக்க மத்திய வங்கியின் (பெடரல் ரிசர்வ்- Federal Reserve) நிதி இருப்புநிலை 2 டிரில்லியன் டாலராகவும், அமெரிக்க கூட்டாட்சி அரசின் கடன் (US federal debt) 12 டிரில்லியன் டாலராகவும் இருந்தது. தற்போது, பெடரல் ரிசர்வின் நிதி இருப்புநிலை நான்கு மடங்கு உயர்ந்து 8 டிரில்லியன் டாலராகவும், கூட்டாட்சி அரசின் கடன் மூன்று மடங்கு அதிகரித்து 36 டிரில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 2008-2009 இல் நெருக்கடி எவ்வளவு தீவிரமாக இருந்ததோ, அதைவிட இப்போது மிகவும் கூர்மையாக உள்ளது. அமெரிக்க டாலரால் வழங்கப்படும் “மிதமிஞ்சிய தனிச்சலுகையை” அமெரிக்க ஆளும் வர்க்கம் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளது. அதன் மோசமான பொருளாதார நிலைமை, உலகளவில் அது அதிகரித்திருக்கும் பொறுப்பற்ற மற்றும் வன்முறைச் செயல்களுக்கு ஒரு முக்கிய உந்து சக்தியாக உள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஒப்பீட்டளவிலான வீழ்ச்சி மற்றும் நெருக்கடியின் மிகத் தெளிவான வெளிப்பாடு, நிகர ஏற்றுமதியின் சரிவில் காணப்படுகிறது. இது நடப்புக் கணக்கு (current account) நிலுவையில் பிரதிபலிக்கிறது. 1990-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 79 பில்லியன் டாலர்களாக இருந்தது. 2000-ஆம் ஆண்டளவில், இந்தப் பற்றாக்குறை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து 416 பில்லியன் டாலர்களை எட்டியது. 2008-ஆம் ஆண்டில், உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, பற்றாக்குறை 676 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. 2022-ஆம் ஆண்டில், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 943 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
1980களின் பிற்பகுதியில் தொடங்கி, ஒவ்வொன்றும் ஒரு பெரிய அளவில் வங்கி பிணையெடுப்பைத் தொடர்ந்து, அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையானது தொடர்ச்சியான ஊக பொருளாதாரக் குமிழிகளின் உருவாக்கத்தாலும் மற்றும் சரிவு ஆகியவற்றாலும் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
1987-ஆம் ஆண்டின் கருப்பு வெள்ளி (Black Friday) சரிவு மற்றும் 1980-களின் பிற்பகுதியில் ஏற்பட்ட சேமிப்பு மற்றும் கடன் நெருக்கடிக்கு பதிலளிக்க நீண்ட காலம் மிகக் குறைந்த வட்டி விகிதங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், 2008-ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியின் போது, பூஜ்ஜியத்திற்கு அருகிலான வட்டி விகிதங்கள் கூட போதுமானதாக இல்லை. இதன் காரணமாக, பெடரல் ரிசர்வ் தனது இருப்பு நிலைக் குறிப்பை பெருமளவில் விரிவுபடுத்திய “அளவு சார் தளர்வு” அதாவது பணத்தை அச்சடித்து பணப்புழக்க விரிவாக்கத்திற்கான (“quantitative easing”) நடவடிக்கை என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியது. கோவிட்-19 பெருந்தொற்று நோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், இந்தப் மாபெரும் பணப்புழக்க விரிவாக்க நடவடிக்கை மேலும் பெரிய அளவில் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. இது அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணவிநியோகத்தை அதிகரித்தது.
பொறுப்புள்ள கூட்டாட்சி வரவு செலவுத் திட்டக் குழுவின் (Committee for a Responsible Federal Budget) பகுப்பாய்வின்படி, 2.3 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள கேர்ஸ் சட்டம் (CARES Act) வணிகங்களுக்கு 1.4 டிரில்லியன் டாலர் அளவிற்கு நேரடி அரசு ஆதரவை வழங்கியது. இதில் பெரும்பாலான தொகை பெரிய மற்றும் நல்ல தொடர்புகள் கொண்ட நிறுவனங்களுக்குச் சென்றது.
ஆனால், அது வெறும் முன்பணம் மட்டுமே. கேர்ஸ் சட்டம் (CARES Act) என்பது பெடரல் ரிசர்வின் மாபெரும் பணவியல் தலையீட்டின் நிதிக் கூறாகும். இதற்கு மேலதிகமாக 4 டிரில்லியன் டாலர் வழங்கப்பட்டதாக டிரம்ப் நிர்வாகம் பெருமிதம் கொண்டது.
பிப்ரவரி 2020 இல், பெடரல் ரிசர்வின் இருப்புநிலை $4.1 டிரில்லியன் டாலர்களாக இருந்தது. இன்று, அது இருமடங்கிற்கும் அதிகமாகி, கிட்டத்தட்ட $8.5 டிரில்லியன் டாலர்களாக உள்ளது.
எனவே, 2020-ஆம் ஆண்டில் மொத்தம் 6.7 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான கூட்டாட்சி அரசின் தலையீட்டில், குடும்பங்களுக்கான நேரடிப் பணப்பலன்கள் மற்றும் வேலையில்லாதோருக்கான உதவித்தொகைகள் ஆகியவை மொத்தத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தன. இதன் விளைவாக, பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து அமெரிக்க பில்லியனர்களின் சொத்து மதிப்பு 2.1 டிரில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
இந்தத் தசாப்தங்களாக வங்கிப் பிணை எடுப்புகள் அமெரிக்க அரசாங்கக் கடனின் அளவு பாரிய அதிகரிப்புக்கு வழிவகுத்தன. 2000 ஆம் ஆண்டில், டாட்-காம் குமிழியைத் தொடர்ந்து, கூட்டாட்சிக் கடன் $5.7 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்தது. பின்னர் 2010ல் இது $12.1 டிரில்லியன் டாலர்களாக இருமடங்காக உயர்ந்தது. 2020 ஆம் ஆண்டின் இறுதியில், அது மீண்டும் இரட்டிப்பாகி, $26 டிரில்லியன் டாலர்களாகவும், தற்போது $34 டிரில்லியன் டாலர்களாகவும் உள்ளது. உண்மையான அடிப்படையில், இப்போது அமெரிக்க கூட்டாட்சிக் கடன் 358.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
2024 மே தின நிகழ்வில் தோழர் நோர்த் கீழ்வருமாறு குறிப்பிட்டார்:
அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார அடித்தளங்கள் சீரழிந்து வருவதன் யதார்த்தம், உலக மேலாதிக்கத்திற்கான உந்துதலை பலவீனப்படுத்துகிறது. விடயத்தை வெளிப்படையாகக் கூறுவதானால், ஒரு சீரழிந்த பொருளாதார அமைப்புமுறை தவிர்க்க முடியாமல் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினையை அது எதிர்கொள்கிறது: அதுதான் அரசின் திவால் நிலையாகும்.
வேறு எந்த நாடும் இந்த அளவில் பணம் அச்சடித்திருந்தால், அது மிகை பணவீக்கம் மற்றும் டாலர் மதிப்பின் விரைவான சரிவுக்கு வழிவகுத்திருக்கும். அமெரிக்க டாலரின் “அதிக சலுகை” மூலம் மட்டுமே அமெரிக்கா இந்தக் கொள்கையைச் செயல்படுத்த முடிந்துள்ளது.
ஆனால், அமெரிக்கப் பொருளாதாரத்தின் அடிப்படை பலவீனம் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டிருந்ததன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 2020 நெருக்கடியின் உச்சத்தில், தங்கத்தின் விலை சுருக்கமாக அவுன்ஸ் ஒன்றுக்கு $2,000 டாலராக எட்டியிருந்தது. இது நவம்பரில் அந்த உயர்வையும் தாண்டியதன் மூலம் அதன் தற்போதைய உச்சமான $2,442 டாலரை எட்டியிருக்கிறது.
2023 சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைக்காலப் பள்ளிக்கான ஆரம்ப அறிக்கையில், டேவிட் நோர்த் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:
பொருளாதாரச் சீரழிவுக்கும் இராணுவத் தீர்வுகளை நாடுவதற்கும் இடையிலான இந்த உறவு, ஒரு வகையில் சமகால புவிசார் அரசியலின் ஒரு விதி போன்ற தன்மையைப் பெற்றுள்ளது. உலகளாவிய புவிசார் அரசியலில் அமெரிக்காவின் முக்கிய பாத்திரத்தைப் பாதுகாப்பது, மேலாதிக்கத்தை அடைவதற்கான அதன் முயற்சி ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலரை மறுக்க முடியாத உலக இருப்பு நாணயமாகப் பராமரிப்பதுடன் முற்றிலும் பிணைக்கப்பட்டுள்ளது. இது உலக விவகாரங்களில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு மட்டுமின்றி, உள்நாட்டு நிதிய திவால்நிலையைத் தடுப்பதற்கும் தேவையான முக்கிய அடித்தளமாகியுள்ளது.
கடந்த தசாப்தத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறை வெடிப்பின் மிகக் கடுமையான வெளிப்பாடாக உக்ரேனில் ரஷ்யாவுடனான போர் அமைந்திருக்கிறது. ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியம் பல தசாப்தங்களாக நேட்டோ கூட்டணியை விரிவுபடுத்தவும், கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தவும் மேற்கொண்ட முயற்சியைத் தெரிந்துகொள்ளாமல் அதற்கு வெளியே இந்தப் போரைப் புரிந்து கொள்ள முடியாது.
1998 ஆம் ஆண்டில், அமெரிக்க செனட் சபையானது (மேல் சபை) போலந்து, ஹங்கேரி மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளை நேட்டோவில் சேர்ப்பதற்கு ஆதரவாக வாக்களித்தது.
1997இல், செனட் வெளியுறவுக் குழுவில் “அமெரிக்கா ஒரு ஐரோப்பிய சக்தி,” என்று சாட்சியமளித்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மடலின் ஆல்பிரைட் (Madeleine Albright), “ஓடர் நதியின் மேற்கே உள்ள பகுதிகளில் மட்டுமல்லாமல், பால்டிக் மற்றும் கருங்கடலுக்கு இடையேயுள்ள நாடுகளில் வாழும் 20 கோடி மக்களின் எதிர்காலத்திலும் எங்களுக்கு அக்கறை உள்ளது” என்று தெரிவித்தார்.
ஜூன் 15, 2001 அன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் (George W. Bush), போலந்தின் வார்சாவில் (Warsaw) ஒரு உரையில், “பால்டிக் முதல் கருங்கடல் வரை” நீண்டிருக்கும் நாடுகளின் வளையத்தை உருவாக்குவதற்காக, “நேட்டோவை விரிவுபடுத்தும் திட்டத்தை” அறிவித்தார்.
பல்கேரியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, எஸ்டோனியா, லாத்வியா மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நேட்டோவின் 2004 ஆம் ஆண்டு விரிவாக்கத்திற்கு பைடென் ஆதரவு அளித்திருந்தார்.
நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தின் அடிப்படை மூலோபாயம், இரு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் போலந்தை நீண்ட காலம் ஆட்சி செய்த வலதுசாரி சர்வாதிகாரி யோசெஃப் பில்சுட்ஸ்கியின் (Józef Piłsudski) கருத்தாக்கங்களிலிருந்து பெரிதும் உருவாக்கப்பட்டது.
அமெரிக்க புவிசார் மூலோபாய வல்லுநர் ரோபர்ட் கப்லான் (Robert Kaplan), 2014 ஆகஸ்டில் “ பில்சுட்ஸ்கியின் ஐரோப்பா” (”Piłsudski’s Europe”) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் வலியுறுத்தியது: “வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய நேட்டோ நாடுகளான போலந்தும் ருமேனியாவும், ரஷ்யாவை எதிர்கொள்ள ஒரு செயல்திறன் மிக்க இன்டர்மேரியம் (Intermarium) உருவாக்குவதற்கு மிகவும் முக்கியமானவை ஆகும். இவை இரண்டும் சேர்ந்து நடைமுறையில் பால்டிக் கடலை கருங்கடலுடன் இணைக்கின்றன.”
[குறிப்பு: பால்டிக், கருங்கடல் மற்றும் அட்ரியாடிக் கடல்களுக்கு இடைப்பட்ட பிரதேசங்களைக் குறிக்கிறது. மேலும், இன்டர்மேரியம் (Intermarium) என்பது கிழக்கு ஐரோப்பா முழுவதும் உள்ள வலதுசாரி தேசியவாத ஆட்சிகளின் ஏகாதிபத்திய ஆதரவு கூட்டணிக்கான புவிசார் அரசியல் கருத்தாக்கம். இது முதன்மையாக சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகவும், பின்னர் ரஷ்யாவுக்கு எதிராகவும் இலக்கு வைக்கப்பட்டது.]
ஆனால், இந்தப் புதிய “இன்டர்மேரியத்தின்” முக்கிய அங்கமாக உக்ரேன் இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.
2008ஆம் ஆண்டில், உக்ரேன் நேட்டோவில் இணைவது அமெரிக்காவின் “நலன்களுக்கு” உகந்தது என்று புஷ் அறிவித்தபோது, பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிற முக்கிய உறுப்பினர்கள் அவருக்கு ஆர்வமுடன் ஆதரவளித்தனர். புஷ்ஷின் வழிகாட்டுதலின் கீழ், நேட்டோ அமைப்பு, உக்ரேனும் ஜோர்ஜியாவும் “நேட்டோவின் உறுப்பினர்களாக மாறும்” என்று அறிவித்தது.
உக்ரேன் நேட்டோவில் உறுப்பினராக வேண்டும் என்ற புஷ்ஷின் அழைப்பை ஒபாமா நிர்வாகம் ஆரவாரமாக ஆதரித்தது.
இந்த நோக்கத்தை நிறைவேற்றும் முயற்சியில், அப்போதைய ஐரோப்பிய மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் (Victoria Nuland), 2013ஆம் ஆண்டில், உக்ரேன் “தனது ஐரோப்பிய இலக்குகளை அடைவதற்கு” உதவ அமெரிக்கா 5 பில்லியன் டாலர்கள் செலவிட்டதாக தெரிவித்தார்.
2014 பிப்ரவரியில், விக்டர் யானுகோவிச் (Viktor Yanukovych) தலைமையிலான அரசாங்கம் தூக்கியெறியப்பட்டது. இது அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் திட்டமிடப்பட்டு நிதியளிக்கப்பட்ட ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு ஆகும். இதன் வெளிப்படையான நோக்கமானது உக்ரேனை நேட்டோவின் செல்வாக்கு வட்டத்திற்குள் கொண்டுவருவதும், எதிர்காலத்தில் ரஷ்யாவுக்கு எதிரான போருக்கான தளமாக அதனை மாற்றுவதுமே ஆகும்.
சில மாதங்களுக்குள், உக்ரேனிய நாடாளுமன்றம் தனது நாட்டின் அணிசேரா நிலையைக் கைவிட்டது. மேலும், “கூட்டணியில் உறுப்பினராவதற்குத் தேவையான தகுதிகளை அடைவதற்காக” நேட்டோவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் திட்டங்களை அறிவித்தது.
2014 ஆம் ஆண்டின் ஆட்சிக் கவிழ்ப்பானது, கிழக்கு உக்ரேனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளின் பிரிவினைக்கு வழிவகுத்தது. மேலும், பெரும்பான்மையாக ரஷ்ய மொழி பேசும் பிராந்தியமான கிரிமியாவில் ஒரு பொது வாக்கெடுப்பு மேற்கொண்டதைத் தொடர்ந்து, ரஷ்யா தன்னுடன் அவைகளை இணைத்துக் கொண்டது.
2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற தனது முதல் சர்வதேச மே தினப் பேரணியில் டேவிட் நோர்த் பின்வருமாறு எச்சரித்தார்:
உக்ரேனிய நெருக்கடியானது, கியேவில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் அமெரிக்காவாலும் ஜேர்மனியாலும் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது. உக்ரேனை அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் ஆட்சியை நிறுவுவதே இந்த ஆட்சிக்கவிழ்ப்பின் நோக்கமாகும். இந்த ஆட்சிக்கவிழ்ப்பு ரஷ்யாவுடன் மோதலுக்கு வழிவகுக்கும் என்பதை வாஷிங்டன் மற்றும் பேர்லினில் உள்ள சதிகாரர்கள் நன்கு அறிந்திருந்தனர். உண்மையில், ஜேர்மனியும் அமெரிக்காவும் மோதலைத் தவிர்க்க முயலவில்லை. மாறாக, தங்களின் விரிவான புவிசார் அரசியல் நலன்களை நிறைவேற்ற ரஷ்யாவுடனான மோதல் அவசியம் என்று அவை கருதுகின்றன.
இந்த மதிப்பீடு உண்மையில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உறுதிப்படுத்தப்பட்டது. 2023 பிப்ரவரியில், நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் (Jens Stoltenberg), தற்போதைய மோதலுக்குத் தயாராவதற்காக நேட்டோ நாடுகள் பல ஆண்டுகளாக எந்த அளவிற்கு இராணுவ ரீதியாக மீள்ஆயுதமயமாக்கப்பட்டிருந்தன என்பதை ஒப்புக்கொண்டார். அவர் பின்வருமாறு அறிவித்தார்:
போர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவில்லை, அது 2014 இல் தொடங்கியது. 2014 முதல், நாம் நமது கூட்டுப் பாதுகாப்பை மிகப்பெரிய அளவில் வலுப்படுத்தியுள்ளோம். இதில் அதிக படைகள், உயர்ந்த தயார்நிலை, கூட்டணியின் கிழக்குப் பகுதியில் இருப்பு, புதிய பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவை அடங்கும். மேலும், பாதுகாப்புச் செலவினங்களையும் அதிகரித்துள்ளோம்.
மைதான் (Maidan) ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் பகுதிகளின் பிரிவினையைத் தொடர்ந்து, ஐரோப்பிய சக்திகள் மின்ஸ்க் ஒப்பந்தங்களை உருவாக்கின. இதன் நோக்கமானது ரஷ்யாவுக்கு எதிரான போர்முனையாக உக்ரேனை மீள்ஆயுதமயமாக்கல் காலத்தை எடுத்துக் கொள்வதற்காகும். இந்த ஒப்பந்தத்தில் போர்நிறுத்தம், கனரக ஆயுதங்களை திரும்பப் பெறுதல், மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் (OSCE) கண்காணிப்பில் பாதுகாப்பு மண்டலம் அமைத்தல் ஆகியவை அடங்கும். அதேவேளை, உக்ரேனிய அரசாங்கம் டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்கிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும், அவற்றிற்கு அதிக சுயாட்சி அளிக்கவும் அரசியலமைப்பைத் திருத்த உறுதியளித்தது.
இருப்பினும், இவையனைத்தும் ஏகாதிபத்திய சக்திகளின் வெறும் தந்திரமே. முன்னாள் ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கெலின் கூற்றுப்படி, மின்ஸ்க் ஒப்பந்தமானது உக்ரேனை மீள்ஆயுதமயமாக்க காலத்தைப் பெறுவதாகும். “2014 ஆம் ஆண்டின் மின்ஸ்க் ஒப்பந்தம் உக்ரேனுக்கு காலத்தைப் வழங்குவதற்கான முயற்சியாகும்,” என்று மெர்க்கெல், வார இதழான Die Zeit இடம் தெரிவித்தார். “இன்று நீங்கள் காண்பது போல, அந்தக் காலத்தில் உக்ரேன் தன்னை வலுப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்தியது... இது ஒரு முடக்கப்பட்ட மோதல், பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பது எங்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், அதுவே உக்ரேனுக்கு மதிப்புமிக்க காலத்தை வழங்கியது.”
2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் உக்ரேனில் ஆயுதங்கள் வெள்ளம்போல் குவிக்கப்பட்டதை அட்லாண்டிக் கவுன்சில் தனது 2018 ஆம் ஆண்டு அறிக்கையில் வெளிப்படையாக விவரித்தது:
2014 ஆம் ஆண்டில், அமெரிக்க காங்கிரஸ் உக்ரேன் சுதந்திர ஆதரவுச் சட்டத்தை (Ukraine Freedom Support Act) நிறைவேற்றியது. இச்சட்டம் உக்ரேன் அரசாங்கத்திற்கு, அதன் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, டாங்கி எதிர்ப்பு மற்றும் கவச எதிர்ப்பு ஆயுதங்கள் உட்பட 350 மில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு உதவியை ஒதுக்கியது. காங்கிரஸின் வலுவான ஆதரவு இருந்தபோதிலும், உக்ரேனுக்கு கொலைக்குரிய ஆயுதங்களை விற்பனை செய்ய அல்லது நிதியளிக்க அமெரிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி பராக் ஒபாமா முடிவு செய்தார். எனினும், இக்கொள்கையானது உக்ரேனுக்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கொலைக்குரிய ஆயுதங்களை தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதைத் தடுக்கவில்லை.
ஒபாமா நிர்வாகத்தின் போது, உக்ரேனுக்கு சிறிய அளவிலான கொலைக்குரிய ஆயுதங்களின் நேரடி வணிக விற்பனை, பாதுகாப்புத் துறையுடன் கலந்தாலோசித்து, வெளியுறவுத் துறையால் தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, உரிமம் வழங்கப்பட்டது. அமெரிக்க அரசாங்கமானது 2016 ஆம் ஆண்டில் உக்ரேனுக்கு சுமார் 27 மில்லியன் டாலர் மதிப்பிலான வணிகப் பாதுகாப்புத் தளவாடங்கள் மற்றும் சேவைகளையும், 2015இல் சுமார் 68 மில்லியன் டாலர் மதிப்பிலானவற்றையும் அங்கீகரித்தது. இவற்றில் ஒரு பகுதி கொலைக்குரிய ஆயுதங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
2017 டிசம்பர் 22 அன்று, ட்ரம்ப் நிர்வாகமானது உக்ரேனுக்கு ஜாவெலின் டாங்கி எதிர்ப்பு (Javelin anti-tank missiles) ஏவுகணைகளை வழங்க ஒப்புதல் அளித்தது. இது ஐரோப்பாவில் ரஷ்யாவின் மேலும் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள அமெரிக்கா கொலைக்குரிய தற்காப்பு ஆயுதங்களை வழங்க வேண்டுமா என்பது குறித்து வாஷிங்டனில் நடந்த சுமார் மூன்றாண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
... 2015 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கொலைக்குரிய ஆயுதங்கள் உக்ரேனில் இருந்தபோதிலும், அமெரிக்க அரசாங்கம் முதன்முறையாக உக்ரேனிய இராணுவத்திற்கு நேரடியாகக் கொலைக்குரிய பாதுகாப்பு தளவாடங்களை வழங்கி வருகிறது.
இக்காலகட்டம் முழுவதும், ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவையும் சீனாவையும் இலக்காகக் கொண்டு ஒரு புதிய உலகப் போருக்கு மீண்டும் ஆயுதபாணியாகின்றன என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) பல முறை எச்சரித்து வந்தது. “கால் நூற்றாண்டுப் போர்: உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் முனைப்பு 1990-2016“ (A Quarter Century of War 1990-2016) என்ற நூலின் முன்னுரையில் டேவிட் நோர்த் பின்வருமாறு எழுதினார்:
கடந்த கால் நூற்றாண்டில் அமெரிக்கா தூண்டிவிட்ட போர்கள் ஒன்றோடொன்று தொடர்புடைய பல நிகழ்வுகளின் தொடராக ஆய்வு செய்யப்பட வேண்டும். உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் முனைப்பின் மூலோபாய தர்க்கம், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் நவகாலனித்துவ நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிராந்தியப் போர்கள், ரஷ்யா மற்றும் சீனாவுடன் அமெரிக்கா மேற்கொண்டு வருகின்ற, வேகமாக விரிவடைந்து வருகின்ற மோதலின் அங்கமாக உள்ளன.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த யூரேசிய நிலப்பரப்பின் மீது ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளின் கோணத்தில் பார்க்கும்போது, 1990-91 நிகழ்வுகளின் அடிப்படை முக்கியத்துவம் வெளிப்படுகிறது. ஆயினும், உலக மேலாதிக்கத்திற்கான தொடர் போராட்டத்தின் இந்தச் சமீபத்திய கட்டம், ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதலின் மையமாக அமைந்துள்ளது...
இன்றைய சூழலுக்கும் 1914 ஆம் ஆண்டிற்கும் இடையே ஒரு ஒற்றுமை என்னவெனில், அமெரிக்காவிற்கும் சீனா மற்றும்/அல்லது ரஷ்யாவிற்கும் இடையே போர் தவிர்க்க முடியாதது என்ற எண்ணம் அரசியல் மற்றும் இராணுவ மூலோபாயவாதிகளிடையே வளர்ந்து வருவதாகும். இந்த விதிவாத முன்னுதாரணம் அரசின் உயர் மட்டத்தில் உள்ள முக்கிய முடிவெடுப்பாளர்களின் தீர்மானங்கள் மற்றும் செயல்களை அதிகமாக வழிநடத்தும்போது, அது உண்மையான போர் வெடிப்பை அதிக சாத்தியமாக்கும் ஒரு இயங்கு சக்தியாக மாறுகிறது. ... இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து இதுவரை இல்லாத அளவிற்கு உலகப் போரின் ஆபத்து இப்போது மிக அதிகமாக உள்ளது.
2014 நிகழ்வுகளுக்கு அமெரிக்காவின் பதிலளிப்பின் முக்கிய அம்சமாக, ஒபாமா நிர்வாகத்தின் கீழ் அணு ஆயுத மீள்ஆயுதமயமாக்கல் திட்டம் தொடங்கப்பட்டது.
பனிப்போர் முடிவுற்ற பின்னர், 2016 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்காவின் அணு ஆயுத படைகளை மிகப் பெரிய அளவில் விரிவுபடுத்தவும் நவீனமயமாக்கவும் முன்னெடுப்புகளைச் செய்தார். இத்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 1.2 டிரில்லியன் டாலர்கள் ஆகும்.
ஒபாமாவின் அணு ஆயுதப் போட்டி, அந்நேரத்தில் கருத்துரையாளர்களால் “இரண்டாம் அணு யுகம்” என அழைக்கப்பட்ட நிலையை உருவாக்கியது. பனிப்போரின் “பரஸ்பர உறுதியான அழிவு” என்ற கோட்பாட்டிற்கு மாறாக, இந்த “இரண்டாம் அணு யுகம்”, மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (Center for Strategic and International Studies) 2016 அறிக்கையின் கூற்றுப்படி, “மோதலின் ஆரம்பக் கட்டத்திலேயே மற்றும் தெளிவான நோக்கத்துடன் அணு ஆயுதத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை போரில் ஈடுபடுபவர்கள் சிந்திக்கும் நிலையை” உருவாக்கியது.
அணு ஆயுதங்களை சிறியதாக, இலேசானதாக, குறைந்த அழிவை விளைவிக்கக்கூடியதாக, மற்றும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாக மாற்றுவதோடு, “பயன்படுத்தக்கூடிய” அணு ஆயுதங்களை உருவாக்குவதன் இணை விளைவாக, குறுகிய தூர ஆயுதங்கள் மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.
2019 ஜனவரியில், டிரம்ப் நிர்வாகம் தனது 2018 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை (National Defense Strategy) வெளியிட்டது. இதில், “பயங்கரவாதம் அல்ல, மாறாக நாடுகளுக்கிடையேயான மூலோபாயப் போட்டியே தற்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பில் முதன்மைக் கவலையாக உள்ளது” என அறிவிக்கப்பட்டது.
“அமெரிக்க இராணுவத்திற்கு போர்க்களத்தில் வெற்றி பெறுவதற்கான முன்நிர்ணயிக்கப்பட்ட உரிமை இல்லாததால்”, இந்த மோதலில் அமெரிக்கா வெற்றி பெற ஒரே வழி “தேசிய வலிமையின் பல்வேறு கூறுகளின் இடையறா ஒருங்கிணைப்பு” மூலமாகும். இதில் “தகவல், பொருளாதாரம், நிதி, புலனாய்வு, சட்ட அமலாக்கம் மற்றும் இராணுவம்” ஆகியவை அடங்கும்.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வரலாற்றாசிரியரான ஆர்தர் எல். ஹெர்மன் (Arthur L. Herman), டிரம்பின் தேசிய பாதுகாப்பு மூலோபாயமானது (National Security Strategy), “1917க்கு முந்தைய உலகிற்கு மீண்டும் திரும்புவதை குறிக்கும் ஒரு ஆழமான மாற்றத்தை முன்னறிவிக்கிறது. அதாவது, ஒரு ஒழுங்கற்ற சர்வதேச அரங்கில், பெரியதோ சிறியதோ, ஒவ்வொரு இறையாண்மை அரசும் தனது பாதுகாப்பிற்காக ஆயுத பலத்தையே நம்பியிருக்க வேண்டிய நிலை” என்று எழுதியது.
“இந்தப் புதிய சகாப்தத்தில், வலிமையே தவிர்க்க முடியாமல் நியாயமாகிவிடுகிறது” அதிகாரம் மட்டுமே முக்கியமானது, மேலும் “பெரும் சக்திகள் தவிர்க்க முடியாமல் சிறிய நாடுகளை ஆதிக்கம் செய்கின்றன” என ஹெர்மன் எழுதுகிறார். மேலும், “இது ஓட்டோ வான் பிஸ்மார்க்கின் (Otto von Bismarck) உலகம். காலத்தின் பெரும் கேள்விகள் உரைகளாலோ பெரும்பான்மை முடிவுகளாலோ தீர்மானிக்கப்படுவதில்லை... மாறாக இரும்பாலும் இரத்தத்தாலும் தீர்மானிக்கப்படுகின்றன” என்று 1862 இல் பிஸ்மார்க் கூறியதை, ஹெர்மன் மேற்கோள் காட்டுகிறார்.
2018 ஆம் ஆண்டில், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence) சீனாவுடனான அமெரிக்காவின் மோதல் குறித்து ஒரு உரையாற்றினார். இந்த உரை, நிக்சனின் 1971 ஆம் ஆண்டு சீனப் பயணத்திலிருந்து தொடர்ந்து வந்த பல தசாப்தகால கொள்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறித்தது.
பென்ஸ் கூறியதாவது, “21ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத்தின் உச்சநிலையை அடைய சீனா முயற்சி செய்கிறது.”
21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மிகுந்த நம்பிக்கையுடன், அமெரிக்காவானது பெய்ஜிங்கிற்கு தனது பொருளாதாரத்தை திறந்துவிடவும், சீனாவை உலக வர்த்தக அமைப்பில் இணைக்கவும் ஒப்புக்கொண்டது. ...
கடந்த 17 ஆண்டுகளில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 9 மடங்கு உயர்ந்துள்ளது; இது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி சீனாவில் அமெரிக்கா செய்த முதலீடுகளால் உந்தப்பட்டது. ... இக்கொள்கைகள் பெய்ஜிங்கின் உற்பத்தித் தளத்தை, குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட அதன் போட்டியாளர்களின் செலவில் வளர்த்துள்ளன.
தற்போது, “சீனாவில் தயாரிப்பு 2025” (Made in China 2025) திட்டத்தின் மூலம், ரோபோட்டிக்ஸ், உயிரித் தொழில்நுட்பம் (biotechnology) மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உலகின் மிக வளர்ச்சியடைந்த தொழிற்துறைகளில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்த கம்யூனிஸ்ட் கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.
பென்ஸின் உரை பொருளாதார “உலகளாவிய ஒருங்கிணைப்பத் துண்டித்தல்“ மற்றும் “பூகோளமயமாக்கல் நீக்கம்” ஆகிய கருத்துக்களை அறிமுகப்படுத்தியது. முதலாளித்துவம் “சுதந்திர வர்த்தகத்தை” ஊக்குவித்த சகாப்தம் முடிவுற்றதாக இது உண்மையில் அறிவித்தது. மாறாக, 21ஆம் நூற்றாண்டின் “ஆதிக்க நிலைகளுக்கான” போராட்டத்தில் தேசியத் தொழில்துறையைப் பாதுகாப்பதே அரசுக் கொள்கையின் வெளிப்படையான நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை இது சுட்டிக்காட்டியது.
ட்ரம்ப்பால் தொடங்கப்பட்டு, பின்னர் பைடெனின் ஆட்சியின் கீழ் தொடர்ந்த வர்த்தகப் போரானது, உலகளாவிய பொருளாதார மேலாதிக்கத்திற்கான இராணுவ மோதலுக்கு முன்னோடியாக அமைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில், ட்ரம்ப் நிர்வாகம், ஒபாமாவின் கீழ் தொடங்கப்பட்ட அணு ஆயுதப் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியது. இடைநிலை அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து (Intermediate Range Nuclear Forces Treaty) ஒருதலைபட்சமாக விலகியதன் மூலம், அமெரிக்காவானது ரஷ்யா மற்றும் சீனாவைச் சுற்றி குறுகிய தூர அணு ஆயுதங்களை நிறுத்த வழிவகுத்தது. இந்த ஆயுதங்கள் சில நிமிடங்களில் அந்நாடுகளின் முக்கிய நகரங்களைத் தாக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. இதனுடன், அமெரிக்காவின் அணு ஆயுத நவீனமயமாக்கல் திட்டம் முறையாக விரிவுபடுத்தப்பட்டது. இதன் விளைவாக, இத்திட்டத்தின் செலவு பின்னர் கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
அமெரிக்க சிந்தனைக் குழுக்களானது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு “இரண்டாவது அணு யுகம்” என்பது, அணு ஆயுதங்களின் பரவல் அல்லது பயன்பாட்டில் எந்தவித வரம்புகளும் கட்டுப்பாடுகளும் இல்லாத ஒரு உலகை நோக்கி நம்மை இட்டுச் செல்கிறது என்று இதனை அறிவித்தது.
ட்ரம்பின் ஆட்சிக் காலமானது, உக்ரேனுக்கு அமெரிக்க ஆயுத அனுப்பீடுகளின் வேகம் குறித்து அரசுக்குள் நிலவிய தொடர் முரண்பாட்டால் சிறப்பாக அடையாளப்படுத்தப்பட்டது.
டொனால்ட் ட்ரம்பின் முதல் பதவி நீக்கக் குற்றச்சாட்டு பின்வரும் விவகாரத்தை மையமாகக் கொண்டிருந்தது: உக்ரேனிய எரிசக்தி நிறுவனமான புரிஸ்மாவின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றதற்காக பைடெனின் மகன் ஹண்டர், ஆண்டுக்கு சுமார் 1 மில்லியன் டாலர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெலென்ஸ்கி விசாரணை நடத்த உத்தரவிடுவதை நிபந்தனையாக வைத்து, உக்ரேனுக்கு அமெரிக்க ஆயுதங்களை வழங்குவதை ட்ரம்ப் நிர்ணயித்தார் என்பதே அக்குற்றச்சாட்டு ஆகும்.
உலக சோசலிச வலைத்தளம் 2019 டிசம்பர் இல் பின்வருமாறு எழுதியது:
உக்ரேனுக்கான பெரும் ஆயுத அனுப்பீட்டைத் தற்காலிகமாகத் தாமதப்படுத்தும் ட்ரம்பின் முடிவைச் சுற்றியே அரசுக்குள் நடக்கும் மோதல் மையம் கொண்டுள்ளது. இந்தத் தாமதத்திற்கு அமெரிக்காவின் முழு தேசியப் பாதுகாப்பு அமைப்பும் காட்டிய கடுமையான எதிர்வினை ஒரு கேள்வியை எழுப்புகிறது: ரஷ்யாவுக்கு எதிரான போரில் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட கால அட்டவணை உள்ளதா?
ரஷ்யாவுடனான போருக்கான அமெரிக்காவின் விரிவான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு முன், மனிதகுலம் 21ஆம் நூற்றாண்டின் முதல் உலகளாவிய பெருந்தொற்றுடன் மோதியது. கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கி ஐந்தாண்டுகள் நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே மாதத்தில், 2019 டிசம்பரில் இறுதியாக மனிதர்களுக்குப் பரவிய வைரஸ், வன விலங்குகளிடையே பரவத் தொடங்கியது. அடுத்த சில மாதங்களில், இந்த விலங்குகள் சேகரிக்கப்பட்டு, சீனாவின் வுஹான் நகரில் உள்ள இறைச்சிச் சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து பின்னர் அவை மனிதர்களுக்குப் பரவின.
2020 மே தினப் பேரணியில், டேவிட் நோர்த் கோவிட்-19 பெருந்தொற்றை “உலக வரலாற்றில் ஒரு தூண்டுதல் நிகழ்வு “ என்று அழைத்தார்:
தற்போதைய உலகளாவிய நெருக்கடி குறித்த பகுப்பாய்வில், உலக சோசலிச வலைத் தளம் இப்பெருந்தொற்றை ஒரு “தூண்டுதல் நிகழ்வு” (trigger event) என வரையறுத்துள்ளது. இதனை 1914 ஜூன் 28 அன்று நடந்த ஆஸ்திரிய இளவரசர் பெர்டினாண்ட் மற்றும் அவரது மனைவியின் படுகொலையுடன் ஒப்பிடலாம். இச்சம்பவம் நடந்து ஐந்து வாரங்களுக்குள், 1914 ஆகஸ்ட் தொடக்கத்தில் முதல் உலகப் போர் வெடிப்பதற்கு விரைவாக வழிவகுத்தது. இப்படுகொலை நடந்திராவிடில், ஆகஸ்டில் போர் வெடித்திருக்குமா என்பது ஐயத்திற்குரியது. எனினும், சற்று முன்னோ பின்னோ, ஒருவேளை 1914 குளிர்காலத்திலோ அல்லது அடுத்த ஆண்டிலோ, ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் முரண்பாடுகள் ஓர் இராணுவ மோதலுக்கு இட்டுச் சென்றிருக்கும். இப்படுகொலை வரலாற்று நிகழ்வுப் போக்கை துரிதப்படுத்தியது. ஆயினும், அது ஏற்கனவே நிலவிய மிக எளிதில் தீப்பற்றக்கூடிய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களின் மீதே செயல்பட்டது. இதே கூற்று பெருந்தொற்றுக்கும் பொருந்தும்.
உண்மையில், இந்த “தூண்டுதல் நிகழ்வின்” மிகப்பெரிய விளைவுகளில் ஒன்று ஏகாதிபத்தியப் போரின் உலகளாவிய வெடிப்பாகும். இந்த “தூண்டுதல் நிகழ்வு” உலகெங்கிலும் போர்களின் வெடிப்பிற்கு வித்திட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய தரைவழிப் போரான உக்ரேன் போர் முதல், பாலஸ்தீன மக்களை திட்டமிட்டு அழித்துவரும் காஸா இனப்படுகொலை வரை இது பரவியுள்ளது. தற்போது இது மத்திய கிழக்கு முழுவதும் போராகப் பரவி வருகிறது.
பெருந்தொற்றுக்கான பதில் நடவடிக்கையாக, கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்படும் தடுக்கக்கூடிய வெகுஜன இறப்புகள் முதல் இனப்படுகொலை மற்றும் அணுஆயுதப் போர் வரை பல்வேறு வகையான சமூகக் கொடூரங்களை “இயல்பாக்குவதாக” அமைந்தது. “முதலாளித்துவம் மரணத்தை இயல்பாக்குகிறது: கோவிட்-19 முதல் அணுஆயுத போர் அச்சுறுத்தல் வரை” என்ற அறிக்கையில் உலக சோசலிச வலைத் தளம் பெருந்தொற்றுக்கும் போருக்கும் இடையிலான தொடர்பை எடுத்துரைத்துள்ளது.
உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது:
1963 ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதிக்கான குடியரசுக் கட்சியின் எதிர்கால வேட்பாளராக இருந்த பேரி கோல்ட்வாட்டர், “ஏன் வெற்றி பெறக்கூடாது?” (Why Not Victory?) என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். அந்நூலில், அமெரிக்க மக்கள் அணுஆயுதப் போரைக் குறித்து அதிகம் அஞ்சுவதால், சோவியத் ஒன்றியத்தை எதிர்கொள்வதில் அமெரிக்கா போதுமான அளவு ஆக்ரோஷமாக இல்லை என்று அவர் வாதிட்டார்.
“மரணத்தைக் குறித்த கோழைத்தனமான பயம் அமெரிக்க மனநிலையில் ஊடுருவி வருகிறது” என்றும், “நிச்சயமாக நாம் உயிர் வாழ விரும்புகிறோம்; ஆனால் அதைவிட, நாம் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம்” என்றும் கோல்ட்வாட்டர் எழுதினார்.
பேரி கோல்ட்வாட்டரின் 1963 ஆம் ஆண்டு அறிவிப்பை எதிரொலிக்கும் வகையில், ஐரோப்பாவில் நேட்டோவின் முன்னாள் உயர்மட்ட கூட்டுப்படைத் தளபதி பிலிப் பிரீட்லவ் (Philip Breedlove) இந்த வாரம் வொய்ஸ் ஆஃப் அமெரிக்காவிடம் கூறியதாவது: “அணு ஆயுதங்கள் மற்றும் மூன்றாம் உலகப் போரைப் பற்றி நாம் மிகவும் கவலைப்பட்டதால், நம்மை நாமே முழுமையாகத் தடுத்து நிறுத்திக் கொண்டுள்ளோம். ஆனால் [புட்டின்] வெளிப்படையாகவே எவ்விதத் தடையுமின்றி செயல்பட்டு வருகிறார்.”
தவிர்க்க முடியாத முடிவு என்னவெனில், மக்கள் அணுஆயுதப் போர் அச்சுறுத்தலை ஏற்றுக்கொண்டு, அதன் “கோழைத்தனமான மரண அச்சத்தை” போக்க வேண்டும் என்பதாகும். முழு அளவிலான அணுஆயுதப் பரிமாற்றமாக உருவெடுக்கக்கூடிய ஒரு போரின் சாத்தியத்தை அமெரிக்க அரசியல் நிறுவனம் முற்றிலும் அலட்சியமாகவும், முழு பொறுப்பற்ற தன்மையுடனும் கையாளும் விதம், பெருந்தொற்றின் போது ஏற்பட்ட வெகுஜன இறப்புகள் குறித்து ஆளும் வர்க்கம் காட்டிய அக்கறையின்மையுடன் ஒத்திசைகிறது.
அமெரிக்காவில் பெருந்தொற்று குறித்த ஊடகக் கருத்துரைகளின் குறிப்பிடத்தக்க ஒரு பண்பு என்னவெனில், சுதந்திரப் பிரகடனத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ள உரிமையான உயிரைப் பாதுகாக்கும் போராட்டம் என்பது “பயம்” என்பதற்கு இணையானது என்ற கூற்றாகும்.
பின்னோக்கிப் பார்க்கும்போது, இந்தக் கருத்துரைக்கு மேலும் ஒரு விளக்கத்தைச் சேர்க்க முடியும். ஸ்டான்லி குப்ரிக்கின் “டாக்டர். விசித்திரகாதல்” (Dr. Strangelove) என்ற திரைப்படத்தின் துணைத் தலைப்பான “நான் எப்படி கவலைப்படுவதை நிறுத்தி வெடிகுண்டை நேசிக்கக் கற்றுக்கொண்டேன்” (“How I learned to stop worrying and love the bomb”) என்பதை, பைடென் நிர்வாகத்தின் கோவிட்-19 கொள்கைக்கும் அதே அளவு எளிதாகப் பொருத்தலாம்: அதாவது “நான் எப்படி கவலைப்படுவதை நிறுத்தி வைரஸை நேசிக்கக் கற்றுக்கொண்டேன்.”
எதிர்கால தலைமுறையினர் கோவிட்-19 பெருந்தொற்றை நினைத்துப் பார்க்கும்போது, ஒன்றுக்கொன்று முரணான இரு கருத்துக்களை ஏறக்குறைய ஒரே நேரத்தில் ஆளும் வர்க்கம் எவ்வாறு முன்னிலைப்படுத்தியது என்பதைப் புரிந்துகொள்ள சிரமப்படுவார்கள். ஒருபுறம் ட்ரம்ப் நிர்வாகம் கோவிட்-19 ஐ “வெறும் சளிக்காய்ச்சல்” என்று குறைத்து மதிப்பிட்டதுடன், திரும்பத் திரும்ப தொற்று ஏற்படுவது கற்பனையான பாதுகாப்பு “கூட்டு நோய் எதிர்ப்பாற்றலை” (“herd immunity”) வழங்குவதன் மூலம் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும் என்றும் கூறியது. மறுபுறம் அதே நேரத்தில், கோவிட்-19 மனிதனால் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுதம் என்றும், செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா மீதான மிகப்பெரிய தாக்குதலாக சீன கம்யூனிஸ்ட் கட்சியால் உருவாக்கப்பட்டது என்றும் கூறியது.
மே மாதம் அளவில், ட்ரம்ப் நிர்வாகம் இந்தச் சதிக் கோட்பாட்டை வெளிப்படையாக ஊக்குவிக்கத் தொடங்கியது. அந்த மாதம், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது:
ட்ரம்ப் நிர்வாகம் தனக்கொரு தப்பிக்கும் வழியை ஏற்படுத்த முயல்கிறது. எது நடந்தாலும் அது சீனாவின் குற்றம் என்று கூற முடியும். தனது திட்டங்கள் உயிரிழப்புகளின் வேகமான மற்றும் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்த வெள்ளை மாளிகை, அதன் பேரழிவுக் கொள்கைகளின் விளைவுகளை வெளிப்படும்போது, சமூக அழுத்தங்களை சீனாவிற்கு எதிராகத் திசைதிருப்ப முடியும் என நம்புகிறது.
அந்த ஆண்டின் இறுதியில், இந்தப் போலி அறிவியல் சதிக் கோட்பாடு ட்ரம்ப்பால் மட்டுமல்லாமல், முழு அமெரிக்க அரசியல் நிறுவனத்தாலும் பிரசாரம் செய்யப்பட்டது. வாஷிங்டன் போஸ்ட் இந்தச் சதிக் கோட்பாட்டை ஊக்குவித்தது குறித்து உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது:
போரை நியாயப்படுத்தப் பயன்படுத்தக்கூடிய ஒரு பொய்யை பரப்புவதன் மூலம், பொதுமக்களின் கருத்தை சீரழிப்பதும், மக்களிடையே வெறுப்பை உருவாக்குவதுமே போஸ்ட்டின் நோக்கமாக உள்ளது.
ட்ரம்பின் பதவிக்காலமானது தடுக்கக்கூடிய பெருந்தொற்றால் நூறாயிரக்கணக்கானோரின் உயிரிழப்புடனும், போலீஸ் வன்முறைக்கு எதிராக இலட்சக்கணக்கான மக்களின் பேரணிகளுடனும் முடிவடைந்தது. இதற்கு ட்ரம்ப், பத்தாயிரக்கணக்கானோரைக் கைது செய்து, சர்வாதிகார முறையில் போலீஸ் வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் பதிலளித்தார்.
ஆனால், பைடெனின் தேர்தல் வெற்றி அமைதி மற்றும் ஜனநாயகத்தின் வெற்றியைக் குறிக்கும் என்ற போலி-இடதுகளின் கூற்றுகளுக்கு எதிராக, வரவிருக்கும் பைடென் நிர்வாகம் உலகளாவிய போரை தீவிரப்படுத்துவதற்கே அர்ப்பணிக்கப்படும் என உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது.
தனது 2019 மே தின அறிக்கையில் தோழர் நோர்த் பின்வருமாறு எச்சரித்தார்:
ஜனநாயகக் கட்சியைப் பிடித்துள்ள ரஷ்யா-எதிர்ப்பு வெறியானது, அக்கட்சி வெள்ளை மாளிகையை மீண்டும் கைப்பற்றினால், உலகப் போரின் அபாயம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று சந்தேகிப்பதை நியாயப்படுத்துகிறது.
உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இந்த எச்சரிக்கைகளை 2020 ஆகஸ்ட் 22 அன்று” பைடென் பிரச்சாரமும் அமெரிக்க மேலாதிக்கத்தை ‘மீட்கும்’ முயற்சியும்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு முன்னோக்குக் கட்டுரையில் விரிவாக விளக்கியது.
பைடென்/ஹாரிஸ் நிர்வாகம் அமெரிக்க மேலாதிக்கத்தின் புதிய காலகட்டத்தைத் தொடங்காது. மாறாக, இந்த மேலாதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சி முன்னெப்போதும் இல்லாத அளவு வன்முறை மூலமாகவே இருக்கும். 21 ஆம் நூற்றாண்டின் மிக மோசமான குற்றங்களுக்குப் பொறுப்பான பிற்போக்குவாதிகளின் கூட்டணியின் ஆதரவுடன் அது ஆட்சிக்கு வந்தால், அது போரின் பெரும் விரிவாக்கத்திற்கு உறுதியளிக்கும். ட்ரம்ப்பும் பாம்பியோவும் சீனாவுடனான மோதலை நோக்கி வேகமாகச் செல்கின்றனர். இந்த அபாயகரமான போக்கு குறித்த பைடெனின் விமர்சனம் என்னவெனில், ரஷ்யா, சீனா, ஆப்கானிஸ்தான், சிரியா அல்லது அவற்றுக்கு இடையிலான எல்லா இடங்களிலும் அமெரிக்கா “கடுமையாக” நடந்துகொள்ள வேண்டும் என்பதாகும்.
2020 டிசம்பரில், பதவியேற்க இருந்த பைடென் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையை உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு விளக்கியது:
அடிப்படைக் கருத்து என்னவெனில், ட்ரம்பின் ஆட்சியின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளாக, மாஸ்கோ தண்டனையின்றி தப்பிக்க அனுமதிக்கப்பட்டது. மேலும், பதவியேற்க இருக்கும் பைடென் நிர்வாகம் இழந்த காலத்தை ஈடுகட்ட, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவவாதத்தை பெருமளவில் தீவிரப்படுத்தி, போரின் விளிம்பு வரையிலும், ஒருவேளை அதற்கு அப்பாலும் கூட செல்லும் .
இதுவே சரியாக நடந்தேறியது. பைடென் 2022 ஆம் ஆண்டில் பின்வருமாறு அறிவித்தார்:
கடந்த ஆண்டு [அதாவது 2021-இல்] உக்ரேனுக்கு நாங்கள் முன்னெப்போதும் வழங்கியதை விட அதிக பாதுகாப்பு உதவியை அனுப்பினோம் - படையெடுப்புக்கு முன்னரே வான் எதிர்ப்பு மற்றும் கவச எதிர்ப்புக் கருவிகள் உட்பட 650 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கினோம். எனவே படையெடுப்பு தொடங்கியபோது, ரஷ்யப் படைகளின் முன்னேற்றத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான வகையிலான ஆயுதங்கள் அவர்களிடம் ஏற்கனவே இருந்தன.
2022 ஜனவரி 17 அன்று, “அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவுடனான மோதலை தீவிரப்படுத்துவது போருக்கு இட்டுச் செல்கிறது” என்ற தலைப்பிலான அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) பின்வருமாறு எச்சரித்தது:
அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும், உக்ரேனைக் காரணமாகக் காட்டி, ரஷ்யாவுடனான தங்களது மோதலை வேண்டுமென்றே மற்றும் பொறுப்பற்ற முறையில் தீவிரப்படுத்தி வருகின்றனர். அவை கூறும் மற்றும் செய்யும் அனைத்தும், அறிவிக்கப்பட்டதாக இருந்தாலும் அறிவிக்கப்படாததாக இருந்தாலும், போரே அவற்றின் இலக்கு என்ற முடிவுக்கு இட்டுச் செல்கிறது.
2022 ஜனவரி 25 அன்று வெளியிடப்பட்ட “அமெரிக்காவும் நேட்டோவும் ஏன் ரஷ்யாவுடன் போரை விரும்புகின்றன” என்ற அறிக்கையில் இந்தக் கருத்துக்களை மேலும் விரிவாக விளக்கியது:
உலக சோசலிச வலைத் தளம் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோவின் அதிகரித்துவரும் தூண்டுதல்களைக் கண்டிக்கிறது. அவர்களின் நோக்கம் போருக்கான ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதாகும்....
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம், 1941-இல் ஹிட்லர் செய்தது போல, ரஷ்யாவை கொள்ளையடிப்பதற்கான ஒரு பெரும் களமாகப் பார்க்கிறது. போர் மற்றும் உள்நாட்டு நிலையற்ற தன்மை ஆகியவற்றின் கலவையின் மூலம், ஏகாதிபத்தியமானது ரஷ்யாவின் சிதைவைத் தூண்ட முயல்கிறது. முக்கிய ஏகாதிபத்திய சக்திகளின் காலனிகளாக இருக்கக்கூடிய பல பொம்மை அரசுகளாக ரஷ்யாவைப் பிளவுபடுத்துவதே அவர்களின் நோக்கமாகும்.
மேலும், சீனாவுடனான போருக்கான தயாரிப்புகளுக்கு ரஷ்யாவை தனது செல்வாக்கு மண்டலத்தில் ஒருங்கிணைப்பது அத்தியாவசியமானது என அமெரிக்கா கருதுகிறது.
“உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் முனைப்பை எதிர்ப்போம்!” என்ற தலைப்பிலான 2022 பிப்ரவரி 14 தேதியிட்ட அறிக்கையில் உலக சோசலிச வலைத் தளம் இக்கருத்துக்களை மீண்டும் எடுத்துரைத்தது.
வாஷிங்டனின் போர் முனைப்பில் ஒரு வெறித்தனமான அவசரம் காணப்படுகிறது. விளைவுகளை எடை போடவோ அல்லது மிக மோசமான சூழ்நிலைகளை வெளிப்படையாக விவாதிக்கவோ அனுமதிக்காத ஒரு கால அட்டவணையின் அடிப்படையில் அது செயல்படுவதாகத் தெரிகிறது. அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு தொடங்கினால், “அது ஒரு உலகப் போராகிவிடும்” என்று பிப்ரவரி 10 அன்று பைடென் ஊடகங்களிடம் தெரிவித்தார். ஆயினும், அத்தகைய பேரழிவைத் தணிக்கவோ தடுக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அமெரிக்கா தனது தூண்டுதல்களையும் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து முன்னெடுக்கிறது. ... பெருநிறுவன-நிதிய உயரடுக்கு மற்றும் உளவு நிறுவனங்களின் வலிமைமிக்க பிரிவுகள், நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டிருந்த ரஷ்யாவுடனான மோதலை இனியும் தள்ளிப்போட முடியாது என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இப்போது பைடென் நிர்வாகம் அதிகாரத்தில் உள்ள நிலையில், அது இழந்த நேரத்தை ஈடுகட்ட முயன்று வருகிறது. அமெரிக்க-நேட்டோ தந்திரம் எவ்வளவு முரட்டுத்தனமானதோ அவ்வளவு வெளிப்படையானதாகவும் உள்ளது. ரஷ்யாவை போருக்குள் கவர்வதற்கான இரையாக உக்ரேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
2022 பிப்ரவரி 22 அன்று, ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்தது. ரஷ்யாவைத் தூண்டுவதில் நேட்டோவின் பங்கு குறித்த எமது விளக்கம் இருந்தபோதிலும், உலக சோசலிச வலைத் தளம் இப்படையெடுப்பைக் கண்டித்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின் தலைப்பு: “புட்டின் அரசாங்கத்தின் உக்ரேன் மீதான படையெடுப்பையும் அமெரிக்க-நேட்டோ போர்வெறிப் பிரச்சாரத்தையும் எதிர்ப்போம்! ரஷ்ய, உக்ரேன் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக நிற்போம்!“
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் உக்ரேனில் ரஷ்யாவின் இராணுவத் தலையீட்டைக் கண்டனம் செய்கின்றன. அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகளின் தூண்டுதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை சோசலிஸ்டுகளும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களும் எதிர்க்க வேண்டும். 1991-இல், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் மூலம் தொடங்கிய பேரழிவை, விளாடிமிர் புட்டின் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்குச் சேவை செய்யும் முற்றிலும் பிற்போக்குத்தனமான சித்தாந்தமான ரஷ்ய தேசியவாதத்தின் அடிப்படையில் தடுக்க முடியாது.
இப்போது தேவைப்படுவது 1917-க்கு முந்தைய ஜார் மன்னரின் வெளியுறவுக் கொள்கைக்குத் திரும்புவதல்ல. மாறாக, 1917-இல் அக்டோபர் புரட்சிக்கு உத்வேகமளித்ததும், ஒரு தொழிலாளர் அரசாக சோவியத் ஒன்றியம் உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்ததுமான சோசலிச சர்வதேசியவாதத்திற்கு, ரஷ்யாவிலும் உலகம் முழுவதிலும் புத்துயிர்ப்பு அளிப்பதாகும். உக்ரேன் மீதான படையெடுப்புக்கு புட்டின் ஆட்சி எத்தகைய நியாயங்களைக் கூறினாலும், அது ரஷ்ய மற்றும் உக்ரேனியத் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கே சேவை செய்யும். மேலும், அது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கே பயன்படும்.
உக்ரேன் மீதான படையெடுப்புக்கு பதிலடியாக அமெரிக்கா, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உக்ரேனை ஆயுதங்களால் நிரப்பியது. 2022 பிப்ரவரி 28 அன்று வெளியிடப்பட்ட “நேட்டோ ரஷ்யாவுக்கு எதிராக போருக்குச் செல்கிறது“ என்ற தலைப்பிலான அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது:
போர்களின் அடிப்படைக் காரணங்களும் நலன்களும் பெரும்பாலும் முதலில் தெளிவாகத் தெரிவதில்லை. அவை பிரச்சார வெள்ளத்தால் மறைக்கப்படுகின்றன. எனினும், உடனடியாகவோ அல்லது சற்று தாமதமாகவோ, அந்த மோதலின் உண்மையான மற்றும் ஆழமான இயக்கு சக்திகளும் முக்கியத்துவமும் வெளிப்படுகின்றன.
உக்ரேன் மோதல் விஷயத்தில், இப்போரின் இயல்பு கணிசமான வேகத்தில் வெளிப்பட்டு வருகிறது. சாராம்சத்திலும் உண்மையிலும், நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒரு போரில் உக்ரேன் தொடக்கக் கட்ட போர்க்களமாக மட்டுமே உள்ளது.
நேட்டோவில் உக்ரேன் உறுப்பினராக இல்லை என்பது, பல ஆண்டுகளாகவே, பெரும்பாலும் ஒரு புனைவாகவே இருந்து வந்துள்ளது. ஏற்கனவே, கணிசமான அளவில் ஆயுதபாணியாக்கப்பட்டு, மேலும் ஆயுதங்கள் பெருமளவில் குவிந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரேனானது, மாஸ்கோவில் ஆட்சி மாற்றத்தையும் ரஷ்யாவை நேட்டோவுக்கு முழுமையாக கீழ்ப்படியச் செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு போரின் முன்னணியில் உள்ளது.
அடுத்த மாதம், 2022 நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்னதாக உக்ரேன் போர் ஒரு “புதிய உலக ஒழுங்கை” உருவாக்க வழிவகுக்கும் என்ற பைடெனின் அறிவிப்பின் முக்கியத்துவத்தை உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு சுட்டிக்காட்டியது:
“நாம் ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும்,” என்று பைடென் கூறினார். “இது ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு தலைமுறைகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. சமீபத்தில் ஒரு இரகசிய கூட்டத்தில் உயர் இராணுவ அதிகாரிகளில் ஒருவர் என்னிடம் கூறியது போல, 1900 மற்றும் 1946-க்கு இடையில் 60 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.” அவர் மேலும் கூறுகையில், “இப்போது விஷயங்கள் மாறிக்கொண்டிருக்கும் நேரம். ... அங்கே ஒரு புதிய உலக ஒழுங்கு உருவாகப் போகிறது, அதை நாம் வழிநடத்த வேண்டும்.” இங்கு “புதிய உலக ஒழுங்கு” என்ற சொற்றொடர் நீண்ட மற்றும் இரத்தக்கறை படிந்த வரலாற்றைக் கொண்டுள்ளது.
பைடெனின் “புதிய உலக ஒழுங்கு” என்பது, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற 30 ஆண்டுகால போர்கள் மற்றும் தலையீடுகளில் இருந்து, ரஷ்யாவையும் சீனாவையும் இலக்காகக் கொண்ட மோதலுக்கு மாறுவதை உள்ளடக்கியது. இது அணு ஆயுதங்களால் நடத்தப்படக்கூடிய மூன்றாம் உலகப் போரின் பேரச்சத்தை எழுப்புகிறது.
உலக சோசலிச வலைத் தளம் (WSWS) “ஏப்ரலின் துப்பாக்கிகள்“ என்ற தலைப்பில் இக்கருத்துக்களை ஒரு முன்னோக்கு கட்டுரையில் விரிவாக விளக்கியது.
போரின் நோக்கங்கள் இப்போது தெளிவாகிவிட்டன. உக்ரேனில் நிகழும் இந்த இரத்தக்களரி, நேட்டோவில் இணைவதற்கான அதன் தொழில்நுட்ப உரிமையைப் பாதுகாப்பதற்காக தூண்டப்படவில்லை. மாறாக, ரஷ்யாவை ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ சக்தியாக இருப்பதிலிருந்து அழிப்பதற்கும், அதன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குமாகவே இது திட்டமிடப்பட்டு, தூண்டிவிடப்பட்டு, பெருமளவில் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த மோதலில் உக்ரேன் வெறும் பொம்மையாகவும், அதன் மக்கள் போர்க்களத் தீனியாகவும் ஆக்கப்பட்டுள்ளனர்.
“முக்கிய வளங்கள், ஏகாதிபத்தியம் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான போர்“ என்ற கட்டுரையில், தோழர் கேப்ரியல் பிளாக், முக்கியமான கனிமங்களின் உலகளாவிய விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சியில் இப்போர் வகிக்கும் முக்கிய பங்கை ஆராய்ந்துள்ளார்:
முக்கியமான கனிமங்களின் தற்போதைய மற்றும் எதிர்கால ஆதாரங்களை கட்டுப்படுத்த வேண்டிய அமெரிக்க நிதி மூலதனத்தின் ஆழமான தேவையும், அவற்றின் மீதான சீனாவின் அளவுக்கதிகமான கட்டுப்பாடும், ரஷ்யாவுக்கு எதிரான போர் முனைப்பின் பின்னணியில் ஒரு முக்கிய பகுதியாக அமைகின்றன.
ரஷ்யா எந்த ஒரு முக்கிய கனிமத்தின் தனிப்பட்ட வழங்குநராக இல்லாவிட்டாலும், உலகளாவிய இருப்புகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ள பல்வேறு முக்கிய கனிமங்களின் உற்பத்தியில் அது எவ்வாறு முன்னணி பங்கு வகிக்கிறது என்பதை கீழே உள்ள பகுப்பாய்வு விவரிக்கிறது. யூரேசியாவை ஆதிக்கம் செய்யவும் ரஷ்யாவை கீழ்ப்படியச் செய்யவும் உள்ள அமெரிக்காவின் விரிவான முயற்சியைப் புரிந்துகொள்வதில், இந்த முக்கிய வளங்களின் பங்கை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது உக்ரேன் போர் வெடித்ததற்கு பதிலளிக்கும் வகையில், ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான புதுப்பிக்கப்பட்ட அழைப்பை விடுத்தது. 2022 மே தினத்திற்கான தனது தொடக்க அறிக்கையில், “நேட்டோ-ரஷ்யா போரும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பணிகளும்“ என்ற தலைப்பில் தோழர் டேவிட் நோர்த் பின்வருமாறு வலியுறுத்தினார்:
2022 மே தினத்தின் சவால் என்னவெனில், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான இந்த நிகழ்வை, நேட்டோ-ரஷ்யா போரை அணு ஆயுதமோதலை நோக்கி குற்றகரமாகவும் பொறுப்பற்ற முறையிலும் தீவிரப்படுத்துவதை நிறுத்துவதற்கும், அதை முடிவுக்குக் கொண்டுவர நிர்ப்பந்திப்பதற்கும், உலகத்தின் பரந்த வெகுஜன மக்களது உலகளாவிய இயக்கத்தின் தொடக்கமாக மாற்றுவதாகும்.
நிகழ்வுகள் எமது எச்சரிக்கைகளை உறுதிப்படுத்தியுள்ளன. ஏகாதிபத்தியப் போர் மற்றும் அதன் விளைவுகளின் கொடூரமான தர்க்கம் விரிவடைவதை, முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தைத் தவிர வேறு எதுவொன்றாலும் தடுத்துநிறுத்த முடியாது. இந்த முன்னோக்கே அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியத்தின் மீதான எமது கண்டனத்திற்கும், உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு குறித்த எமது நிலைப்பாட்டிற்கும் அடிப்படையாக அமைகிறது.
சோசலிசத்தின் மற்றும் அக்டோபர் புரட்சியின் பாரம்பரியத்தின் கடும் எதிரியான புட்டின், உக்ரேனிய தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவொரு உண்மையான ஜனநாயக மற்றும் முற்போக்கான வேண்டுகோளையும் விடுக்கும் திறனற்றவராக இருக்கிறார். மாறாக, அவர் ஜார் மன்னர் காலத்து மற்றும் ஸ்டாலினிச பெரும் ரஷ்ய பேரினவாதத்தின் பிற்போக்குத்தனமான பாரம்பரியத்தை முன்னிறுத்துகிறார்.
2022 ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெற்ற அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் ஏழாவது தேசிய காங்கிரஸ், “ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்!“ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அது பின்வருமாறு அறிவித்தது:
போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தின் ஒரு முக்கிய கூறாக, அமெரிக்காவில் ஒரு வலிமைமிக்க ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராட சோசலிச சமத்துவக் கட்சி உறுதி பூண்டுள்ளது. அமெரிக்காவானது உலக ஏகாதிபத்தியத்தின் மையமாகவும், உருவாகிவரும் உலகளாவிய மோதலின் முக்கிய களமாகவும் இருப்பது, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மீது மிகப்பெரிய அரசியல் பொறுப்புகளைச் சுமத்துகிறது.
அமெரிக்க மக்களிடையே போருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு இருந்தபோதிலும், இந்த எதிர்ப்புக்கு ஒரு வேலைத்திட்டம், முன்னோக்கு மற்றும் தலைமை இல்லை. வெளிநாடுகளில் போர் நடத்துவதற்கும் உள்நாட்டில் சுரண்டலுக்கும் இடையேயான பிரிக்க முடியாத தொடர்பை தொழிலாள வர்க்கத்திலும் அதன் முன்னணிப் பிரிவிலும் புரிய வைப்பதே சோசலிச சமத்துவக் கட்சியின் பணியாகும். இந்த செயல்முறையில், அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக அமெரிக்கப் பொருளாதாரத்தை சோசலிச முறையில் மறுசீரமைப்பதையும் நோக்கமாகக் கொண்ட புரட்சிகரத் தலைமையை தொழிலாள வர்க்கத்தில் உருவாக்க வேண்டும்.
2022 ஜூன் மாதம் மாட்ரிட்டில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில், நேட்டோ உறுப்பு நாடுகள் ஐரோப்பிய கண்டத்தை இராணுவமயமாக்குவதற்கும், ரஷ்யாவுடனான போரை பெருமளவில் தீவிரப்படுத்துவதற்கும், சீனாவுடனான போருக்குத் தயாராவதற்குமான திட்டங்களை வரையறுக்கும் ஒரு மூலோபாய ஆவணத்தை ஏற்றுக்கொண்டன.
அந்த ஆவணம் “அணு ஆயுதம் கொண்ட சக-போட்டியாளர்களுக்கு எதிரான உயர் தீவிரமான, பல்முனைப் போருக்கு” தேவையான “முழு அளவிலான படைகளை வழங்க” உறுதியளிக்கிறது.
நேட்டோ உச்சிமாநாடு மற்றும் பைடெனின் புதிய “முடிவற்ற போர்” பற்றிய அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில், உலக சோசலிச வலைத் தளம் இந்த உலகளாவிய போரின் விளைவுகள் தொழிலாள வர்க்கத்தால் ஏற்க வைக்கப்படும் என்று விளக்கியது:
அனைத்திற்கும் மேலாக, உலகின் மிகப்பெரிய நாட்டின் அரசாங்கத்தைக் தூக்கியெறிவதை நோக்கமாகக் கொண்ட ரஷ்யாவுக்கு எதிரான போரும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவுக்கு எதிரான போரும் இணைந்து, அமெரிக்க மக்களை முற்றிலும் வறுமையில் ஆழ்த்தாமல் நடத்த முடியும் என்று யாராவது கற்பனை கூட செய்ய முடியுமா?
நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் உறுதியளித்த சமுதாயத்தின் இராணுவமயமாக்கலின் சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் கணக்கிட முடியாதவை ஆகும். ஒவ்வொரு நாட்டிலும், போர் முயற்சிகளுக்கு வளங்களை விடுவிக்க, பொது சுகாதாரம் மற்றும் சமூக உள்கட்டமைப்பிற்கான அரசு செலவினங்கள் வெட்டிக் குறைக்கப்படும்.
சமூக நலத் திட்டங்களை அகற்றுவதன் மூலமும், ‘தேசிய நலன்’ என்ற பெயரில் உண்மையான ஊதியக் குறைப்பை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையின் மூலமும் இந்தப் போரின் செலவுகள் தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கப்பட உள்ளன.
தனது முந்தைய அறிக்கையில், தோழர் டேவிட் நோர்த், ராண்ட் (RAND) நிறுவனம் மற்றும் தேசிய இராணுவ மூலோபாயம் (National Defense Strategy) குறித்த காங்கிரஸ் ஆணையம் வெளியிட்ட அறிக்கையிலிருந்து விரிவாக எடுத்துரைத்தார். இந்த அறிக்கையானது பைடென் நிர்வாகத்தின் 2022 தேசிய இராணுவ மூலோபாயம் மற்றும் தேசிய பாதுகாப்பு மூலோபாய (National Security Strategy) ஆவணத்தின் மதிப்பீட்டை வழங்கியது.
2022 அக்டோபரில், உலக சோசலிச வலைத் தளம் பைடனின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் குறித்த தனது சொந்த பகுப்பாய்வை வெளியிட்டது. அதில் பின்வரும் பகுதிகளை நாங்கள் முக்கியமாக எடுத்துக்காட்டினோம்:
“நாம் இப்போது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் தீர்மானகரமான ஒரு தசாப்தத்தின் ஆரம்ப ஆண்டுகளில் இருக்கிறோம்,” என்று ஆவணத்திற்கான பைடெனின் தனிப்பட்ட அறிமுகம் அறிவிக்கிறது. “பெரும் சக்திகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் போட்டியின் விதிமுறைகள் வரையறுக்கப்படும்.”
ஆவணம் “ஒருங்கிணைந்த தடுப்பு” என்ற கருத்தை முன்வைக்கிறது, “எமது மூலோபாய போட்டியாளர்களை விஞ்சுவதற்கு எமது தேசிய வல்லமையின் அனைத்து கூறுகளையும் நாம் பயன்படுத்துவோம்” என்று அறிவிக்கிறது.
அது மேலும் கூறுகிறது, “எமது தேசிய இராணுவ மூலோபாயம் (National Defense Strategy) ஒருங்கிணைந்த தடுப்பை நம்பியுள்ளது: அதாவது சாத்தியமான எதிரிகளுக்கு அவர்களின் விரோத நடவடிக்கைகளின் விளைவுகள், அவற்றின் பலன்களை விட அதிகம் என்று நம்பவைக்கும் திறன்களின் இடைவெளியற்ற கலவை. இது பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது: எமது போட்டியாளர்களின் மூலோபாயங்கள், இராணுவ மற்றும் இராணுவம் அல்லாத (பொருளாதார, தொழில்நுட்ப, மற்றும் தகவல்) துறைகளில் செயல்படுகின்றன என்பதை அங்கீகரித்து, நாமும் அவ்வாறே செய்ய வேண்டும் என்ற துறைகள் முழுவதிலுமான ஒருங்கிணைப்பு ஆகும்.”
ஒருவேளை அதன் மிகவும் அச்சுறுத்தும் பகுதியில், வெள்ளை மாளிகையின் ஆவணம் குறித்த தகவல் குறிப்பு, “’பைடென்-ஹாரிஸ் நிர்வாகமானது உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளுக்கு இடையிலான எல்லைக் கோட்டை உடைத்துள்ளது” என்று அறிவிக்கிறது.
கிட்லரின் மூன்றாம் குடியரசில் இருந்து வெளிப்படையாக உத்வேகம் பெற்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் முன்னோடியாக இருந்த இந்தக் கருத்துக்கள், இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மன் உயர் கட்டளையின் தலைவரான ஆல்ஃப்ரெட் ஜோட்லின் துன்பகரமான “முழுமையான போர்” அறிக்கையை நினைவூட்டுகிறது. அந்த அறிக்கை “அரசு, ஆயுதப் படைகள் மற்றும் மக்களின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மட்டுமே போரில் வெற்றியை உறுதி செய்ய முடியும்” என்று அறிவித்தது.
இந்த வார்த்தைகள் எழுதப்பட்டு இருபத்திரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. ராண்ட் நிறுவனமும் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் (National Defense Strategy) குறித்த காங்கிரஸ் ஆணையமும் இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், அவை பின்வருமாறு அறிவிக்கின்றன:
2022 தேசிய இராணுவ மூலோபாயம் (NDS), பாதுகாப்புத் துறைக்கு (DoD) வழிகாட்டும் நோக்கம் கொண்டது. இது மற்றும் 2022 தேசிய பாதுகாப்பு மூலோபாயம் (NSS) “தீர்மானகரமான தசாப்தம்” என்று குறிப்பிடுவது, பெரும்பாலும் 2018 NDS-ல் விவரிக்கப்பட்ட முன்னுரிமைகள், அணுகுமுறை மற்றும் படை அமைப்பின் தொடர்ச்சியாகும். இரு மூலோபாயங்களும் பெரும் சக்திகளுக்கிடையேயான போட்டிக்கான திட்டமிடல் மற்றும் வளங்களை வலியுறுத்துகின்றன, குறிப்பாக சீனாவையும் அடுத்து ரஷ்யாவையும் முன்னணி போட்டியாளர்களாகப் பெயரிடுகின்றன.
2023 ஆம் ஆண்டின் தொடக்கமானது உக்ரேன் போரில் அமெரிக்காவின் ஈடுபாட்டில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்தது. ராம்ஸ்டீன் விமானத் தளத்தில் நடந்த கூட்டத்தில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் மார்க் மில்லி ஆகியோர் ரஷ்யாவை இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பதற்கு அமெரிக்காவிற்கு உறுதியளித்தனர். ஜனவரி 20 அன்று, உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது:
“ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரேனை விடுவிப்பதற்காக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள” அமெரிக்கா மற்றும் நேட்டோவின் உறுதிப்பாட்டை மில்லி அறிவித்தார். மேலும் “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதற்கான தந்திரோபாய மற்றும் செயல்பாட்டுத் தாக்குதல்களுக்கு” நேட்டோவின் கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகளை உக்ரேன் பயன்படுத்தும் என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த அறிவிப்பின் மூலம், நேட்டோ கூட்டணியின் முழு மதிப்பும் அனைத்து உக்ரேனிய நிலப்பரப்பையும் மீட்பதில் பணயம் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கூற்றுப்படி, இது முழு டொன்பாஸ் மற்றும் கிரிமியத் தீபகற்பம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியுள்ளது.
இந்த அறிக்கைகள், போரின் போக்கை மாற்றும் பெரும் “வசந்தகாலப் படையெடுப்பு” என அமெரிக்க ஊடகங்கள் அறிவித்ததை உறுதிப்படுத்தின.
நியூயார்க் டைம்ஸில் “உக்ரேனுக்கான இறுதிக்கட்டம்” என்று அறிவித்த பிரெட் ஸ்டீபன்ஸ், இது ரஷ்யாவை “நசுக்கும் மற்றும் அதற்கு தெளிவான தோல்வியை” ஏற்படுத்தும் என்றார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் மேக்ஸ் பூட், “உக்ரேனியர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைவார்கள் மற்றும் பெரும்பாலான ஆய்வாளர்கள் கணித்தை விட அதிகமாகச் சாதிப்பார்கள்” என்று எதிர்பார்ப்பதாக ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் கூறியதை மேற்கோள் காட்டினார்.
இந்த அறிக்கைகள் அனைத்தும் மாயையானவை மற்றும் சுய ஏமாற்றம் கொண்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. உண்மையில், ஏப்ரலில், கசிந்த பென்டகன் ஆவணங்கள், அமெரிக்க ஊடகங்களின் வெற்றிகரமான அறிவிப்புகள் இருந்தபோதிலும், உக்ரேனில் எந்த முக்கியமான முன்னேற்றங்களையும் செய்ய படைகள் இல்லை என்பதை தெளிவுபடுத்தின. அதே நேரத்தில், இந்த ஆவணங்கள் நூற்றுக்கணக்கான துருப்புக்கள் தரைக் களத்தில் இருப்பதையும், உக்ரேனுக்கு உள்ளேயும் வெளியேயும் நேட்டோவின் போர் நடவடிக்கைகள் தினசரி ஒருங்கிணைக்கப்படுவதையும் உள்ளடக்கியதுடன், போரில் அமெரிக்க-நேட்டோவின் நேரடி ஈடுபாட்டின் பெரும் அளவை வெளிப்படுத்தின.
ஜூன் மாதம் அதிகாரபூர்வ படையெடுப்பு தொடங்கப்பட்ட சில நாட்களுக்குள், பேரழிவின் அளவு தெளிவானது. உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது:
பத்து நாட்களில், இந்தப் படையெடுப்பு உக்ரேனிய சிப்பாய்களுக்கு ஓர் இரத்தக்களரியாக மாறியது. அவர்களில் பலர் சிறிதளவு பயிற்சியோ அல்லது முழுமையான பயிற்சியே இல்லாமலோ புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் ஆவர். ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து, ஒரு வாரத்தில் வெறும் 40 சதுர மைல் நிலப்பரப்பை மட்டுமே கைப்பற்றியதாக உக்ரேனிய அரசாங்கம் கூறுகிறது. ஒரு சிறிய, முக்கியத்துவமற்ற கிராமத்தை சில மணி நேரங்களுக்குப் பிடித்து வைத்திருக்கும் உக்ரேனியப் படைகளின் திறனை, அமெரிக்க ஊடகங்கள் ஒரு மாபெரும் வெற்றியாக வர்ணிக்கும் நிலைக்கு இது வந்துவிட்டது.
வில்னியஸில் (Vilnius) நடைபெற்ற 2023 நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்னதாக “வசந்தகாலப் படையெடுப்பு” தொடங்கப்பட்டது. இது, சில வாரங்களுக்கு முன்பு உக்ரேனால் தொடங்கப்பட்ட வெற்றிகரமான “வசந்தகாலப் படையெடுப்பை” கொண்டாடும் “வெற்றியாளர்களின் உச்சிமாநாடாக” இருக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்தப் படையெடுப்பு இரத்தக்களரியான பேரழிவாக மாறியது. வான்வழிப் பாதுகாப்பு இல்லாமல் உக்ரேனியத் துருப்புகள் ரஷ்ய பாதுகாப்பு அரண்களுக்கு எதிராக சண்டையிட்டு ஆயிரக்கணக்கானோர் கொன்றொழிக்கப்பட்டனர்.
“பைடெனின் கோட்பாடு: ‘எவ்வளவு காலம் எடுத்தாலும் சரி’ அல்லது ‘எத்தனை பேர் இறந்தாலும் பரவாயில்லை’“ என்ற முன்னோக்குக் கட்டுரையில், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) பின்வருமாறு எழுதியது:
ரஷ்யாவைத் தோற்கடிக்க “எவ்வளவு காலம் ஆனாலும்” தனது நிர்வாகமும் நேட்டோவும் பணமும் ஆயுதங்களும் வழங்கும் என பைடென் மீண்டும் அறிவிக்கும்போது, அவர் உண்மையில் கூறுவது என்னவென்றால், மனித உயிர்களின் விலையைப் பொருட்படுத்தாமல் இந்தப் போர் தொடரும் என்பதேயாகும். இதுவே பைடென் கோட்பாடு என அழைக்கப்படக்கூடியதன் கொடூரமான சாராம்சமாகும்: “அதாவது எவ்வளவு காலம் ஆனாலும் அல்லது எத்தனை பேர் இறந்தாலும் பரவாயில்லை.”
2023 செப்டம்பர் 20 அன்று, ஏகாதிபத்திய சக்திகளுக்காகப் பேசிய உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐ.நா. பொதுச் சபையில் தொடர்ச்சியான கருத்துரைகளை வழங்கினார். அதில் அவர் போரைக் குறித்த “அச்சத்திற்காக” ஐ.நா.வைக் கண்டித்தார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அமர்விற்காகப் பயணம் மேற்கொண்டார். மேலும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுடன் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பையும் நடத்தினார்.
இந்தக் கட்டத்தில், இஸ்ரேல் அரசாங்கமும், சாத்தியமாக அமெரிக்க அரசாங்கமும், இஸ்ரேல் எல்லையைக் கடந்து ஹமாஸ் ஒரு தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருப்பது பற்றி அறிந்திருந்தது தெளிவாகியது. சில வாரங்களுக்குள், இஸ்ரேல், அமெரிக்காவின் முழு ஆதரவுடன், காஸாவில் இனப்படுகொலையைத் தொடங்கியது. இது ஒரு ஆண்டுக்கும் குறைவான காலத்தில் 200,000 அல்லது அதற்கும் மேற்பட்ட மக்களின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது.
அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் ‘அல்-அக்ஸா வெள்ளம்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கியது. இது காஸா எல்லையில் எந்த குறிப்பிடத்தக்க எதிர்ப்பையும் சந்திக்கவில்லை. “அக்டோபர் 7 தாக்குதலை எளிதாக்க இஸ்ரேலின் சதித்திட்டத்தை ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன“ என்ற எமது முன்னோக்குக் கட்டுரையில் நாம் விளக்கியதுபோல:
ஹமாஸ் எங்கு, எப்படித் தாக்கும் என்பதை நன்கு அறிந்திருந்த இஸ்ரேல் அதிகாரிகள், அந்தத் தாக்குதலை எளிதாக்குவதற்காக வேண்டுமென்றே விலகி நிற்கும் முடிவை எடுத்தனர்.
இஸ்ரேல் அரசாங்கம் தனது சொந்தக் குடிமக்களின் கொலைக்கு அனுமதியளித்து, அதற்கு உடந்தையாக இருந்தது என்பதையும், அன்றைய தினம் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு இஸ்ரேல் அரசாங்கமே பொறுப்பு என்பதையும் இது குறிக்கிறது. இந்தக் குற்றகரமான சதி, காஸா மக்களுக்கு எதிராக நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கான சாக்குப்போக்கை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இஸ்ரேலின் நடவடிக்கையின்மை “உளவுத்துறைத் தோல்வி” என்ற டைம்ஸின் கூற்று அர்த்தமற்றது, ஏனெனில் அது முழுக்க முழுக்க பொய்யானது. இல்லை, அக்டோபர் 7 நிகழ்வுகள் உளவுத்துறைத் தோல்வி அல்ல: ஹமாஸின் இராணுவ நடவடிக்கையை துல்லியமாகக் கணிப்பதில் இஸ்ரேல் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றது. இந்த உளவுத் தகவலின் அடிப்படையில் செயல்படுவதற்குப் பதிலாக, தாக்குதல் நடந்த சரியான தருணத்தில் படைகளையும் உளவுத் தகவல் சேகரிப்பையும் நிறுத்த இஸ்ரேல் திட்டமிட்டு செயல்படுத்தியது.
இந்த வெளிப்பாடுகள், காஸா இனப்படுகொலையை நெதன்யாகு ஆட்சியும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் செய்த குற்றவியல் சதி என்பதை அம்பலப்படுத்துகின்றன. இதன் பாதிப்புக்குள்ளானவர்கள் படுகொலை செய்யப்பட்ட 20,000 பாலஸ்தீனியர்கள் மட்டுமல்ல, இஸ்ரேலிய மக்களும் ஆவர்.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலக சோசலிச வலைத் தளம் 2023 அக்டோபர் 9 அன்று “நெதன்யாகு அரசை வீழ்த்து! காஸா மீதான ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற சியோனிசத் தாக்குதலை நிறுத்து!“ என்ற அறிக்கையுடன் பதிலளித்தது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக காஸாவில் எழுந்த கிளர்ச்சியைத் தொடர்ந்து, பாலஸ்தீன மக்கள் மீதான நெதன்யாகு அரசாங்கத்தின் போர்ப் பிரகடனத்தை தெளிவாகக் கண்டிக்கிறது. நாஜிக்களை நினைவூட்டும் வகையில், இஸ்ரேல் ஆட்சியின் வெறித்தனமான கோபம், காஸா மக்கள்தொகையில் பெரும் பகுதியினரை அழிப்பதற்கான அழைப்பைத் தவிர வேறொன்றுமில்லை என்றே புரிந்துகொள்ள முடியும்.
நாங்கள் தொடர்ந்தோம்:
தற்போது இஸ்ரேல் ஆயுதப் படைகளால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் இனப்படுகொலை பிரச்சாரத்திற்கு பைடென் நிர்வாகமும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களும் வழங்கிவரும் முழு ஆதரவு அறிக்கைகளை ICFI ஆனது அதே அளவு வன்மையாகக் கண்டிக்கிறது. இப்பகுதிக்கு ஒரு அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலை அனுப்பியது, பாலஸ்தீன மக்கள் மீதான பாரிய தாக்குதலுக்கு ஏகாதிபத்திய ஒற்றுமையின் இழிவான வெளிப்பாடாகும்.
10 நாட்களுக்குள், ஏகாதிபத்திய சக்திகள் காஸா இனப்படுகொலையைப் பயன்படுத்தி மத்திய கிழக்கு முழுவதும் தீவிரமடையும் போருக்குத் தயாராகின்றன என்று உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது:
காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேல் இராணுவத்தின் இனப்படுகொலைக்கு மத்தியில், ஈரானை இலக்காக வைத்து மத்திய கிழக்கு முழுவதும் ஒரு போரைக் கட்டவிழ்த்துவிடப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்துகிறது.
காஸா மீதான இஸ்ரேலின் போருடன் இணைந்து, பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவப் பிரசன்னம் பெருமளவில் விரிவடைந்துள்ளது. இரண்டு விமானந்தாங்கிக் கப்பல்களும் அவற்றுடன் தொடர்புடைய போர்க் அணிகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மத்திய கிழக்கிற்கு பன்னிரண்டுக்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களை அனுப்புவது வெறுமனே கடற்படை இல்லாத ஹமாஸை அச்சுறுத்துவதற்காக அல்ல. ஈரானுடனான போர் உட்பட மத்திய கிழக்கில் ஒரு விரிவான மோதலுக்கு அமெரிக்கா தயாராகிறது.
ரஷ்யாவுடனான அமெரிக்காவின் போரில் மத்திய கிழக்கு ஒரு போர் முனையாகவும், சீனாவிற்கு எதிரான போர்த் திட்டங்களின் ஒரு பகுதியாகவும், ஈரானுடன் ஒரு போருக்கான நீண்டகால திட்டங்களை செயல்படுத்த அமெரிக்கா தற்போதைய நெருக்கடியைப் பயன்படுத்துகிறது.
ஈரானுக்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்கா பல தசாப்தங்களாகத் திட்டமிட்டு வருகிறது. 2001 செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, 2002 ஜனவரியில், அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ், ஈரானை ஒரு “தீய அச்சின்” பகுதியாக அழைத்தார். இதில் ஈராக்கையும் அதற்குள் உள்ளடக்கினார். அமெரிக்கா அடுத்த ஆண்டு ஈராக்கை படையெடுத்து ஆக்கிரமித்தது. வெள்ளை மாளிகைக்குள், புஷ் நிர்வாக அதிகாரிகள், “பையன்கள் பாக்தாத் செல்கிறார்கள், ஆனால் உண்மையான ஆண்கள் தெஹ்ரானுக்குச் செல்கிறார்கள்” என்ற சொற்றொடரை விரும்பினர்.
2024 புத்தாண்டு அறிக்கையில், “தொழிலாள வர்க்கம், முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புதல்“ என்று உலக சோசலிச வலைத் தளம் அறிவித்தது:
நாகரிகத்தை காட்டுமிராண்டித்தனத்திலிருந்து வேறுபடுத்தும் அனைத்து “சிவப்புக் கோடுகளும்” அழிக்கப்பட்டு வருகின்றன. முதலாளித்துவ அரசாங்கங்களின் குறிக்கோள் இதுதான்: அதாவது “குற்றகரமான எதுவும் நமக்கு அந்நியமானது அல்ல.” அணுஆயுதப் போர் “இயல்பாக்கப்படுகிறது”; இனப்படுகொலை “இயல்பாக்கப்படுகிறது”; பெருந்தொற்றுகளும் நோயுற்றோர் மற்றும் முதியோரை வேண்டுமென்றே அழிப்பதும் “இயல்பாக்கப்பட்டுள்ளன”; அளவிட முடியாத செல்வக் குவிப்பும் சமூக ஏற்றத்தாழ்வும் “இயல்பாக்கப்பட்டுள்ளன”; ஜனநாயகத்தை ஒடுக்குவதும், எதேச்சதிகாரம் மற்றும் பாசிசத்தை நாடுவதும் “இயல்பாக்கப்படுகின்றன.”
ஒட்டுமொத்தமாக, சமூகக் காட்டுமிராண்டித்தனத்தின் பல்வேறு வடிவங்களை இயல்பாக்குவது, முதலாளித்துவ வர்க்கம் ஒரு முட்டுச்சந்துக்கு வந்துவிட்டதைக் குறிக்கிறது. பல்வேறு வகையான சமூகக் கொலைக் கொள்கைகளைக் கொண்ட ஒரு வர்க்கம் அதன் வரலாற்று, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சட்டபூர்வத் தன்மையை தெளிவாக இழந்துவிட்டது.
உலகப் போரின் இந்த தசாப்தத்தின் மதிப்பாய்வில் இருந்து எடுக்கப்பட வேண்டிய மைய முடிவு இதுவேயாகும். ரஷ்யாவுடன் போரைத் தூண்டும் முயற்சியில் உக்ரேனில் உள்ள பாசிச சக்திகளுடன் அமெரிக்கா வெளிப்படையாகக் கூட்டணி வைத்ததுடன் இக்காலம் தொடங்கியது. காஸா இனப்படுகொலையில் 200,000 பேர் கொல்லப்பட்டதோடும், ரஷ்யா மற்றும் சீனா இரண்டையும் இலக்காகக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மேலும் பொறுப்பற்ற தீவிரமாக்கலுக்கான தயாரிப்புகளுடனும் இது முடிவடைகிறது.
குடியரசுக் கட்சி வேட்பாளரான ட்ரம்ப், சீனப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிப்பதாக உறுதியளித்துள்ளார். இது சீனாவுடனான அமெரிக்க மோதலை ஒரு புதிய உச்சகட்டத்திற்கு கொண்டு செல்லும். கமலா ஹாரிஸ் தலைமையிலான ஜனநாயகக் கட்சி நிர்வாகம் ரஷ்யாவுடனான போரை பெருமளவில் தீவிரப்படுத்தவும், காஸாவின் முடிக்கப்படாத இனப்படுகொலையை நிறைவு செய்யவும் முயற்சிக்கும். இரு சாத்தியமான ஆட்சிகளும் மத்திய கிழக்கு முழுவதும் போருக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளன, மேலும் காஸா இனப்படுகொலைக்கு ஆதரவாக உள்ளன.
ஆனால், இந்த தசாப்த காலப் போர் வீணாகவில்லை. இது நான்காம் அகிலத்தின் சர்வதேசக் குழுவின் வளர்ச்சி மற்றும் வலுப்படுத்தலையும், போர் மற்றும் அனைத்து வகையான முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனம் மற்றும் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் நனவு மிக்க முன்னணிப் படையாக அது இருப்பதையும் கண்டுள்ளது.
முடிவின் இறுதிக் குறிப்பைச் சேர்க்கிறேன். பேராசிரியர் கெல்லியால் (Kelly) நாங்கள் “அடக்கமற்றவர்கள் மற்றும் திமிர்பிடித்தவர்கள்” என்று குற்றம் சாட்டப்படுகிறோம்.
இதில், கெல்லி குட்டிமுதலாளித்துவ தன்முனைப்புவாதியின் (solipsist) உலகக் கண்ணோட்டத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார். அதாவது புறநிலை உண்மை இல்லாத உலகில், உண்மை அல்லது புனைவை நிர்ணயிக்க எந்த யதார்த்தமும் இல்லாத, இருளில் அனைத்துப் பூனைகளும் சாம்பல் நிறமாக இருக்கும் நிலையில், “ட்ரொட்ஸ்கிசம் 21 ஆம் நூற்றாண்டின் மார்க்சிசம்” என்று கூறுவது உண்மையில் அகந்தையின் வெளிப்பாடே தவிர வேறொன்றுமில்லை.
ஆனால் நாங்கள் சடவாதிகளாக (materialists) இருப்பதால், தன்முனைப்புவாதிகளும் (solipsists) அகநிலை பகுத்தறிவுவாதிகளும் (subjective rationalists) அல்ல, எங்களால் கேள்விகளைக் கேட்கவும் முடிவுகளை எட்டவும் முடியும்.
நான் கேட்கிறேன்: தோழர் கிஷோர் தனது அறிக்கையிலோ அல்லது இந்த அறிக்கையிலோ முன்வைத்ததைப் போன்ற பதிவு வேறெங்கேயாவது உள்ளதா? யார், அல்லது என்ன, போட்டி? “21 ஆம் நூற்றாண்டின் மார்க்சிசத்தை” பிரதிநிதித்துவப்படுத்த எங்கள் எதிராளி யார்? இன்று முன்வைக்கப்பட்டதற்கு இணையான அரசியல் பகுப்பாய்வு மற்றும் முன்னோக்கின் பதிவுடன் அந்தக் கூற்றை நிரூபிக்கக்கூடிய ஒருவரைக் காட்டுங்கள்?
கேள்வியைக் கேட்பதே அதற்கான விடையாகும். உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைப் (ICFI) போன்ற வேறு எந்தப் பதிவும் இன்று இல்லை. இந்தப் பதிவும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழு வரலாறும் சேர்ந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை “21 ஆம் நூற்றாண்டின் மார்க்சிசம்” ஆக்குகின்றன.
இது சோசலிசப் புரட்சியின் தசாப்தம் என்றும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் கட்டமைப்பில் ஏற்படும் ஆழமான மாற்றங்கள் தொழிலாள வர்க்கத்தின் நனவில் பெரும் மாற்றங்களை உருவாக்கும் என்றும் அனைத்துலகக் குழு மதிப்பிட்டுள்ளது. வரும் காலத்தில், மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்தப் பதிவை ஆய்வு செய்து, இந்த இயக்கத்தில் இணைந்து, அதனைக் கட்டியெழுப்ப தங்கள் சொந்த முடிவுகளை எடுப்பார்கள்.