இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
உலகளாவிய போருக்கான தயாரிப்பில் பாரியளவில் இராணுவச் செலவினங்களை விரிவாக்க சூளுரைத்து, நேட்டோ உச்சி மாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை, அமெரிக்க அதிபர் ஜோ பைடென் வில்னியஸில் வெளிநாட்டவர் விரோத லிதுவேனிய தேசியவாதிகளின் ஓர் ஆரவார கும்பல் மத்தியில் உரையாற்றினார்.
கடந்த ஆண்டு போலந்தின் வார்சாவில் அவர் ஆற்றிய உரையின் அதே கருப்பொருள்களைப் பைடெனின் இந்த வசைமொழியும் கொண்டிருந்தது. அதில் அவர் “வரவிருக்கும் ஆண்டுகள் மற்றும் தசாப்தங்களில்” “சண்டையிட” சூளுரைத்திருந்தார். மீண்டும் 2022 இல், எழுதி வைக்காமல் பேசிய அவருடைய உளறல், அமெரிக்க அதிபரின் கருத்துக்களை வெள்ளை மாளிகை அதிகாரிகள் பகிரங்கமாகத் திரும்பப் பெற நிர்பந்தித்தது. ஆனால் இப்போதோ, பைடெனின் ஆலோசகர்கள் அவருடைய இந்த வெறித்தனமான அறிக்கைகளின் அர்த்தத்தை மாற்றிப் பொருள் விளக்கம் கூறவோ மற்றும் அதை மாற்றுவதற்கோ இனி அவசியமில்லை என்பதாக பார்க்கிறார்கள். அமெரிக்க போர் நோக்கங்கள் குறித்து அவர் என்ன கூறுகிறாரோ, அவை வார்த்தை பிழைகள் இல்லை, மாறாக அவை நிர்வாக கொள்கைகளின் உண்மையான பிரகடனங்கள் ஆகும்.
வில்னியஸில் உரையாற்றுகையில், “உக்ரேனுக்கான எங்கள் பொறுப்புறுதி பலவீனம் அடையாது. நாங்கள் இன்றும், நாளையும், எவ்வளவு காலம் ஆகிறதோ அது வரையில், சுதந்திரத்திற்காகவும், விடுதலைக்காகவும் நிற்போம்,” என்று பைடென் அறிவித்தார்.
ஒரு போர் எவ்வளவு நீள்கிறதோ, அது மாற்றமின்றி மனித உயிர்களின் எண்ணிக்கையோடும் சம்பந்தப்பட்டுள்ளது. ஒரு போர் எவ்வளவு காலத்திற்குத் தொடர்கிறதோ, அந்தளவுக்கு அதிக எண்ணிக்கையில் சிப்பாய்கள் தரப்பிலும் மற்றும் அப்பாவி மக்கள் தரப்பிலும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்படுத்தும்.
ஆகவே, ரஷ்யாவைத் தோற்கடிக்க “எவ்வளவு காலம் ஆகுமோ அதுவரை” அவர் நிர்வாகமும் நேட்டோவும் பணம் மற்றும் ஆயுதங்களை வழங்கும் என்று பைடென் மீண்டுமொருமுறை அறிவிக்கும் போது, உண்மையில் என்ன கூறுகிறார் என்றால், மனித உயிர்களைப் பொருட்படுத்தாமல் என்ன விலை கொடுத்தாவது இந்தப் போர் தொடரும் என்கிறார்.
“எவ்வளவு காலம் ஆனாலும் பரவாயில்லை அல்லது எத்தனை உயிர் போனாலும் கவலையில்லை,” என்பதே பைடென் கோட்பாடு என்று அழைக்கக் கூடியதன் காட்டுமிராண்டித்தனமான சாராம்சமாக உள்ளது.
பைடெனின் பேச்சு, அது வழங்கப்பட்ட முறையிலும் மற்றும் அதன் உள்ளடக்கத்திலும், எந்த மாதிரியான ஒரு மனிதரை முன்நிறுத்துகிறது என்றால், சிந்தனையற்ற, தவறாக தகவல் பெற்ற, முற்றிலும் அர்த்தமற்ற மற்றும் இலக்கண குழப்பமான ஒரு மனிதரை முன்நிறுத்துகிறது. அது ஆகக் குறைந்த புத்திஜீவித மட்டத்தையும் மற்றும் ஆகக் குறைந்த அடிப்படை உள்ளுணர்வுகளையும் வெளிப்படுத்தியது.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததில் இருந்து தொடர்ந்து மற்ற நாடுகளைச் சீர்குலைத்துள்ளதும், அவற்றின் மீது குண்டுகளை வீசி உள்ளதும், படையெடுத்துள்ளதுமான அமெரிக்கா, ஜனநாயகத்திற்கான மற்றும் சமாதானத்திற்கான ஒரு சக்தி என்று கூறி, பைடென் பொய்க்கு மேல் பொய்யை, அபத்தத்திற்கு மேல் அபத்தமாக பேசுகிறார்.
தார்மீகக் கொள்கைகளுக்கு சிடுமூஞ்சித்தனமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிஜமான அணுகுமுறையை ஒருமுறை தொகுத்துக் கூறியது வேறு யாருமல்ல, மிகப் பழமையான இப்போதும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க போர் குற்றவாளியான ஹென்றி கிஸ்சிங்கரே கூறி இருந்தார்.
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய ஒவ்வொரு குற்றத்தின் காட்சியிலும், பைடெனின் சொந்த கைரேகைகளைக் காணலாம் என்கின்ற நிலையில், பைடென் “இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நாம் அனைவரும் கையெழுத்திட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தை” குறித்து பேசுகிறார். “நாடுகளுக்கு இடையே சமாதானமான உறவுகளுக்கு இவை இரண்டு தூண்களாகும். ஒரு நாடு அதன் அண்டை நாட்டு பிரதேசத்தைப் பலத்தைக் கொண்டு கைப்பற்ற அனுமதிக்க முடியாது,” என்றார்.
என்னவொரு இழிவான பாசாங்குத்தனம்! “படை பலத்தைப் பயன்படுத்துவதற்கு” தடைவிதிக்கும் ஐ.நா. சாசனத்தை அப்பட்டமாகவும், மீண்டும் மீண்டும் அமெரிக்கா மீறியளவுக்கு வேறெந்தவொரு நாடும் மீறியதில்லை. அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் கொலின் பாவெல் ஒருமுறை கூறுகையில், அமெரிக்காவை “இந்த அணியில் மிகப் பெரிய பலசாலியாக” மாற்றுவதே அவரின் நோக்கம் என்று அறிவித்தார்.
பைடென் செனட்டில் இருந்த போதும் பின்னர் துணை ஜனாதிபதியாக இருந்த போதும், 1991 இல் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு முன்னணி ஆதரவாளராக மற்றும் அதை அறிவுறுத்தியவராக இருந்தார், அதற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1997 இல் யுகோஸ்லேவியா மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது. அவர் 2001 இல் ஆப்கானிஸ்தான் படையெடுப்பை ஆதரித்தார், 2003 இல் மற்றொரு ஈராக் படையெடுப்பை ஆதரித்தார். லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்தை முடுக்கி விடுவதற்கான முயற்சிகளையும் அமெரிக்க குண்டுவீச்சு நடவடிக்கைகளையும் பைடென் அறிவுறுத்தினார்.
இந்த நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாகவும் வெளிப்படையாகவும் மீறி நடத்தப்பட்டன. அமெரிக்கா, 2002 இல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவிய ரோம் சட்ட சாசனத்தில் இருந்து வெளியேறியதுடன், அமெரிக்க அதிகாரிகள் வழமையாக அத்துமீறி செய்யும் போர் குற்றங்களுக்காக அவர்கள் வழக்கில் இழுக்கப்படாமல் இருக்க, எந்தவொரு சர்வதேச அமைப்பின் சட்டப்பூர்வத் தன்மையையும் அது அங்கீகரிக்கவில்லை.
உக்ரேனுக்கு கிளஸ்டர் கொத்து குண்டுகளை அவர் வழங்க இருப்பதாக பைடென் கடந்த வாரம் தான் அறிவித்தார். இந்தக் கிளஸ்டர் கொத்து குண்டுகள் மோதல்கள் முடிந்தப் பின்னரும் பல தசாப்தங்களுக்கு அப்பாவி மக்களை ஊனப்படுத்தும் மற்றும் உயிர்களைப் பறிக்கும் என்பதால், இவை 100 இக்கும் அதிகமான நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ளன.
கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம் என்று கட்டுக்கதை அடிப்படையிலான லிதுவேனியாவின் வாய்வீச்சை பைடென் தெளிவின்றி சுட்டிக் காட்டியதுடன், அதன் சுதந்திரத்திற்கு அமெரிக்கா பொறுப்பேற்றிருப்பதாக அவர் பெருமை பீற்றினார். ஆனால் நாஜி ஜேர்மனியுடன் லிதுவேனிய தேசியவாதிகள் ஆழமாக ஒத்துழைத்ததையும் மற்றும் அந்நாட்டின் ஏறக்குறைய ஒட்டுமொத்த யூத மக்கள் மீது நடத்தப்பட்ட வெகுஜன படுகொலைகளில் அவர்கள் நேரடியாக பங்கெடுத்ததையும் பற்றி பைடென் அவரது நீண்ட நெடிய வரலாற்று சொற்பொழிவில் குறிப்பிடவில்லை.
லிதுவேனியாவின் மூன்றாண்டு கால நாஜி ஆக்கிரமிப்பின் போது, அந்நாட்டின் 95 சதவீத யூத மக்கள் கொல்லப்பட்டனர் — அதாவது, 195,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் முறையாக திட்டமிட்டு கொல்லப்பட்டனர்.
இந்த யதார்த்தமானது, லிதுவேனியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடந்து வந்திருந்தவர்களைப் புகழும் விதமாக, “லிதுவேனிய மக்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் இடையிலான பிணைப்பு ஒருபோதும் தளரவில்லை” என்ற பைடெனின் அறிவிப்புக்கு ஓர் அச்சுறுத்தும் தொனியை வழங்கியது.
ஆனால், அமெரிக்கா வரவேற்றிருந்த லித்துவேனிய புலம்பெயர்ந்தோரில் இரண்டு பேர், அந்நாட்டின் யூத இனப்படுகொலைக்கு மிகவும் பொறுப்பானவர்களாக இருந்தார்கள்.
லிதுவேனியா மீதான நாஜி ஆக்கிரமிப்பின் போது வில்னியஸில் லிதுவேனிய பாதுகாப்பு பொலிஸ் படைத் தலைவராக இருந்தவரும் மற்றும் யூத இனப்படுகொலையின் குற்றவாளியுமான அலெக்சாண்ட்ராஸ் லிலெகிஸ் அமெரிக்காவுக்குப் பாதுகாப்பாக வந்தடைய வழிகோலப்பட்டதுடன், அவர் சிஐஏ இல் பணியில் அமர்த்தப்பட்டார். அவரது துணை அதிகாரி Kazys Gimžauskas உம், அத்துடன் அவருக்கு கீழ் பணிபுரிந்த மூன்று பேரும் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தனர்.
அவ்விருவருமே யூத இனப்படுகொலையில் அவர்கள் பங்கு வகித்ததற்காக ஒரேயொரு நாள் கூட சிறைவாசம் அனுபவிக்கவில்லை.
இந்த மோதலை நிறுத்த எந்தவொரு “இராஜாங்கத் தீர்வையும்” ரஷ்யா ஏற்கவில்லை என்று பைடென் குறைகூறிய நிலையிலும், அவர் நேட்டோ விரிவாக்கத்தில் அவர் வகித்த பாத்திரத்தைக் குறித்து பெருமைபீற்றினார். “லிதுவேனியாவும் மற்ற பால்டிக் நாடுகளும் 2004 இல் நேட்டோவில் இணைய அமெரிக்க செனட்டராக இருந்து நான் உதவியதில் எனக்கு பெரும் கவுரவம் உண்டு. அதை நான் சிறப்பாக செய்தேன், இல்லையா?” என்றவர் அறிவித்தார்.
1998 இல் நேட்டோவை விரிவாக்க வாக்களித்து பைடென் பேசுகையில், “மற்றொரு 50 ஆண்டு கால சமாதானம் தொடங்குகிறது,” என்று அறிவித்தார். யதார்த்தத்தில், ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகே நடக்கும் போர்களுக்குள் ரஷ்யாவை உள்ளீர்த்து, அதை வாட்டி வதைக்கும் நோக்கில், உக்ரேனில் வெடித்துள்ள சகோதரத்துவ போர் போன்ற ஒன்றுக்கு அமெரிக்கா வேண்டுமென்றே களம் அமைத்துள்ளது.
உக்ரேன் போருக்கு ஒரு “இராஜாங்க தீர்வை” ஆதரிப்பவராக காட்டிக்கொள்ளும் அவர் முயற்சியே, பைடெனின் மிக அபத்தமான பொய்களில் ஒன்றாக உள்ளது. “துரதிருஷ்டவசமாக, இராஜாங்க தீர்வுகளைக் காண இதுவரை ரஷ்யா எந்த ஆர்வமும காட்டவில்லை,” என்று பைடென் கூறினார்.
“உக்ரேனில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெற்று, இந்த சர்வதேச எல்லைகளை அங்கீகரிப்பதன் மூலம் நாளையே கூட ரஷ்யா இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.” ஆனால் ரஷ்யாவின் முழுமையான அடிபணிவுடன் நேட்டோவின் போர் நோக்கங்கள் அனைத்தையும் அடைவதற்கான “இராஜாங்க தீர்வாக” இதை அவர் வரையறுக்கிறார்.
அமெரிக்க அதிபரின் இந்த ஆத்திரமூட்டும் அறிக்கைகள், இந்த மோதலில் எந்த பேச்சுவார்த்தை தீர்வும் எட்டப்படுவதைத் தடுக்கும் நோக்கில் உள்ளது. ரஷ்யா மற்றும் சீனாவை அடிபணிய செய்வதற்கான அதன் முனைவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த மோதலை ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கிறது.
போர் தீவிரமடையும், ஆயிரக் கணக்கில் எண்ணற்றோர் உயிரிழப்பார்கள், உலகம் அணுஆயுத மோதலின் விளிம்புக்குக் கொண்டு வரப்படும் என்பதையே “எத்தனை பேர் இறந்தாலும் பரவாயில்லை” என்ற பைடெனின் கோட்பாடு அர்த்தப்படுத்துகிறது. தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தின் அபிவிருத்தியைத் தவிர வேறெதுவும் இதை தடுத்து நிறுத்த முடியாது.