மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
2024 ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் எட்டாவது தேசிய காங்கிரசில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்தை நாங்கள் இங்கே வெளியிடுகிறோம். பிரதான தீர்மானமான “2024 அமெரிக்கத் தேர்தல்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்” என்பதையும் காண்க.
1. பாசிசவாத ஜெலென்ஸ்கி ஆட்சிக்கும், நேட்டோவால் தூண்டிவிடப்பட்ட உக்ரேன்-ரஷ்யா போருக்கும் எதிரான 25 வயதான சோசலிஸ்ட்டான போக்டன் சிரோட்டியுக் உக்ரேனிய பாதுகாப்பு சேவையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதை சோசலிச சமத்துவக் கட்சி கண்டனம் செய்வதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் அழைப்பு விடுக்கிறது. போக்டன், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) தனது அரசியல் ஐக்கியத்தை அறிவித்துள்ள ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் (YGBL) ஸ்தாபகரும் தலைவரும் ஆவார்.
2. போக்டன் மீதான துன்புறுத்தல் “இராணுவச் சட்டத்தின் கீழ் உயர்ந்த தேசத்துரோகம்” என்ற மோசடியான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டது. உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், ரஷ்ய அரசின் நலன்களுக்கு சேவை செய்வதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு 15 ஆண்டுகள் முதல் ஆயுள்காலம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். போக்டனின் உயிருக்கு ஆபத்து உள்ளது. மூன்று மாதங்களுக்கும் மேலாக, மோசமான உடல்நிலையில் உள்ள போக்டன், நிகோலேவ் சிறையில் கொடூரமான நிலைமைகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். சித்திரவதை, தன்னிச்சையான கைதுகள் மற்றும் “கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான சிறை நிலைமைகள்” உட்பட உக்ரேனிய ஆட்சியின் கடுமையான மனித உரிமை மீறல்களை அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகம் கூட ஆவணப்படுத்தியுள்ளது.
3. “ரஷ்ய பிரச்சார மற்றும் தகவல் முகமை” என்று அவதூறு செய்யப்படும் உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) வெளியான கட்டுரைகளும் அறிக்கைகளுமே போக்டனுக்கு எதிராக அரசு தரப்பு மேற்கோளிட்ட பிரதான ஆதாரமாகும். ஆனால் இதே கட்டுரைகள், சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியில் இருந்து எழுந்த உக்ரேன் மற்றும் ரஷ்யா இரண்டினதும் செல்வந்த தட்டுக்களின் முதலாளித்துவ அரசாங்கங்களை போக்டனும் உலக சோசலிச வலைத் தளமும் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. உக்ரேனிய போருக்கு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் எதிர்ப்பானது, போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு கூட்டுப் போராட்டத்தில் உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்களை ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
4. இந்த சோஷலிச கருத்துக்கள் மற்றும் கோட்பாடுகளுக்காக போக்டன் கைது செய்யப்பட்டார். போருக்கு அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பை முகங்கொடுத்துள்ள ஜெலென்ஸ்கி ஆட்சியும் அதன் நேட்டோ ஆதரவாளர்களும், இந்த அரசியல் கோட்பாடுகள் உக்ரேனிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரந்த செவிமடுப்பைக் காண்கின்றன என்று அஞ்சுகின்றன.
5. மிக அடிப்படையான ஜனநாயக மற்றும் மனித உரிமை மீறலே போக்டன் மீதான துன்புறுத்தல் ஆகும். ரஷ்யாவுக்கு எதிரான போர் என்பது “ஜனநாயகத்தை” பாதுகாப்பதற்காக தொடுக்கப்படும் ஒரு போர் என்ற நேட்டோவின் போர் பிரச்சாரத்தின் மோசடியை இது அம்பலப்படுத்துகிறது. அதன்படி, உக்ரேனில் இருப்பது ஜனநாயகம் அல்ல, மாறாக குற்றகரமான தன்னலக் குழுக்கள் மற்றும் பாசிஸ்டுகளால் நடத்தப்படும் ஒரு சர்வாதிகாரமாகும். தங்கள் சொந்த பிற்போக்குத்தனமான நலன்களைப் பாதுகாப்பதற்காக, அவர்கள் நாட்டின் தொழிலாள வர்க்கத்தையும் ஆதாரவளங்களையும் ஏகாதிபத்தியத்தின் பொறுப்பில் வைத்துள்ளனர். போக்டானின் கைது கியேவ் ஆட்சியால் மட்டுமல்ல, மாறாக அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களாலும் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்க முடியாது. குறிப்பாக, ஜெலென்ஸ்கியின் சர்வாதிகாரத்திற்கு பில்லியன் கணக்கான இராணுவ உதவிகளை வழங்கிவரும் அமெரிக்க அரசாங்கம், SBU உடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வருவதுடன், போக்டனின் கைதுக்கான முழு அரசியல் பொறுப்பையும் ஏற்கிறது.
6. ஜனநாயக உரிமைகள் மீதான பாதுகாப்பு என்பது ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதில் இருந்து பிரிக்கவியலாதது என்பதையே போக்டன் சிரோட்டியுக்கின் துன்புறுத்தல் எடுத்துக்காட்டுகிறது. உலகத் தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் இந்த தொடர்பையும், காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கும், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கும் இடையிலான உறவையும் உணர்ந்திருக்க வேண்டும். இரண்டுமே உலகின் மேலெழுந்து வரும் ஏகாதிபத்திய மறுபங்கீட்டில் ஒன்றோடொன்று தொடர்புபட்ட போர்க் களங்களாகும். போக்டானின் விடுதலைக்கான போராட்டமானது, அபிவிருத்தி அடைந்து வரும் உலகப் போர் மற்றும் அதன் மூல காரணமான முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஒரு உலகளாவிய சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் ஒரு இன்றியமையாத கூறுபாடாகும்.
7. இதனால்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ஏப்ரல் 30 அன்று, போக்டன் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர், அவரைப் பாதுகாப்பதற்காக ஒரு உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கியது. அது ஏற்கனவே ஆயிரக் கணக்கானவர்களால் கையெழுத்திடப்பட்ட ஒரு மனுவைத் தொடங்கியதோடு, உக்ரேனிய அரசாங்கத்திற்கு ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டது. மேலும், வாஷிங்டன் டிசி உட்பட உக்ரேனிய தூதரகங்களில் பேரணிகளை நடத்தியது, அவை கடிதத்தைக் கூட பெற மறுத்தன. உலகெங்கிலுமான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கலைஞர்களும் போக்டன் விடுதலைக்கு அவர்களின் ஆதரவை அறிவித்துள்ளனர்.
8. அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி இப்பிரச்சாரத்துடன் தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொள்கிறது. அது:
- ஜெலென்ஸ்கி ஆட்சியால் சிறையில் இருந்து போக்டன் சிரோட்டியுக் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோருகிறது.
- போக்டனின் கைதை நியாயப்படுத்த SBU இன் மோசடி குற்றச்சாட்டுக்களையும், அத்துடன் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொடூரமான நிலைமைகளையும் கண்டனம் செய்கிறது.
- சர்வதேச தொழிலாள வர்க்கம், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளின் அனைத்து ஆதரவாளர்களும் போக்டானை பாதுகாக்க அணிதிரளுமாறும், அவரது அவலநிலை குறித்த விழிப்புணர்வைப் பரப்புமாறும் மற்றும் அவரது விடுதலையைக் கோருமாறும் அழைப்பு விடுக்கிறது.
- சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் இந்த தீர்மானம் பரவலாக பரவுவதை அது ஆதரித்து ஊக்குவித்து வருகிறது, போக்டானின் விடுதலைக்கு அழைப்பு விடுக்கும் மனுவில் கையெழுத்திடுமாறும் மற்றும் இந்த முக்கியமான பிரச்சாரத்தில் அவர்களின் சமூகங்களை ஈடுபடுத்துமாறும் தனிநபர்களையும் அமைப்புகளையும் வலியுறுத்துகிறது.
- உக்ரேனிய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், ஏகாதிபத்தியம், பாசிசம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்திவரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, YGBL மற்றும் WSWS இன் முயற்சிகளில் அவற்றுடனான அதன் ஐக்கியத்தை மறுஉறுதிப்படுத்துகிறது.