சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் மிச்சிகன் ஜனாதிபதி வாக்குச்சீட்டில் இடம்பெற 20,000 கையெழுத்துக்களை சமர்ப்பிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) வேட்பாளர்களான ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட், மிச்சிகனில் வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்கு அவசியமான கையெழுத்துக்களை விட, தங்களின் பிரச்சாரம் 'மிக அதிகமானதை' சமர்ப்பித்திருப்பதாக வியாழனன்று அறிவித்தனர்.

அமெரிக்காவில் மூன்றாவது கட்சி வேட்பாளர்களுக்கான வாக்குச்சீட்டு அணுகல் சட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபட்டவை. இது நாடு தழுவிய பிரச்சாரத்தை நடத்துவதில் உள்ள சிரமத்தை அதிகரிக்கிறது. மிச்சிகனை பொறுத்தவரை, சோசலிச பிரச்சாரம் 12 காங்கிரஸ் மாவட்டங்களில் ஏழு மாவட்டங்களில் இருந்து குறைந்தபட்சம் 100 கையெழுத்துக்களை சேகரிக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் மொத்தம் 12,000 கையெழுத்துக்களை சேகரிக்க வேண்டும். கிஷோர்/வைட்டின் பிரச்சார மேலாளர் ஒருவர் இந்த நிருபரிடம் குறைந்தபட்சம் 11 காங்கிரஸ் மாவட்டங்களில் பிரச்சாரம் அந்த எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததாகவும், ஒட்டுமொத்தமாக பிரச்சாரம் 20,000 கையெழுத்துக்களை சமர்ப்பித்ததாகவும் கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளர் கிஷோர் ஒரு செய்திக் குறிப்புடன் இணைந்த ஒரு காணொளியில், கையெழுத்துக்களை சேகரித்தது ஒரு 'மகத்தான சாதனை' என்றும், 'மாநிலம் முழுவதிலும் மற்றும் உண்மையில் நாடெங்கிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர்களின் சுய-தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது' என்றும் தெரிவித்தார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜெர்ரி வைட் பின்வருமாறு தெரிவித்தார்:

'இந்த பிரச்சாரத்தின் போது, நாங்கள் நூறாயிரக்கணக்கான மக்களுடன் பேசினோம். காஸாவில் இனப்படுகொலை, தீவிரமடைந்து வரும் உலகளாவிய போர், சமூக சமத்துவமின்மையின் அதீத மட்டங்கள் மற்றும் சர்வாதிகாரம் மற்றும் பாசிசவாதத்தை நோக்கி ஆளும் வர்க்கம் திரும்புவதற்கு அங்கே பாரிய எதிர்ப்பு உள்ளது...

நாங்கள் இந்த மனுக்களை வழங்கிய நேரத்தில், குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது, அது ஒரு பாசிசவாத பிற்போக்குத்தனத்தின் களியாட்டமாக இருந்தது. ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சிக்குப் பின்னர், காஸா இனப்படுகொலையில் இருந்து இரத்தத்தில் சொட்டச் சொட்ட, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பைடெனிடம் இருந்து வரும் நிலைப்பாடு 'ஐக்கியம்' என்பதாகும்—இதன் அர்த்தம் வெளிநாட்டுப் போர் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போரில் ஆளும் வர்க்கத்தின் ஐக்கியம் என்பதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் இலக்கை விளக்குகையில், கிஷோர் கூறுகையில், அது 'அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்துகிறது' என்றார்.

அவர் தொடர்ந்தார்:

முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலமாக மட்டுமே, அதாவது, தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமாக, செல்வந்தர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, போர் மற்றும் சுரண்டலில் இருந்து சுதந்திரமான ஒரு சமூகத்தை, சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதன் மூலமாக மட்டுமே நமது நலன்கள் யதார்த்தமாக்கப்பட முடியும் என்ற புரிதலை தொழிலாள வர்க்கத்திற்குள் நாம் அபிவிருத்தி செய்கிறோம்.

குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு தரப்பினராலும் மிச்சிகன் 'கட்டாயம் வெல்ல வேண்டிய' மாநிலமாகக் கருதப்படுகிறது. இது மத்திய மேற்கில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும், இங்கு 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மற்றும் 15 தேர்தல் கல்லூரி வாக்குகள் உள்ளன. ஜனாதிபதி ஜோ பைடன் 2020 இல் சுமார் 155,000 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மாநிலத்தில் வெற்றி பெற்றார். அதே நேரத்தில் டொனால்ட் டிரம்ப் 2016 இல் மாநிலத்தில் ஹிலாரி கிளிண்டனை விட 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது.

மாநில் அளவில், மிச்சிகனில் இன்னும் 1.1 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரியும் வாகனத் துறைக்கு கூடுதலாக, கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களிலும், ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகம், டெட்ராய்டில் உள்ள மருத்துவ மையம் மற்றும் ஹென்றி ஃபோர்ட் சுகாதார அமைப்பு (the Detroit Medical Center and Henry Ford Health System) மற்றும் சமீபத்தில் முழு மாநிலத்தையும் உள்ளடக்கி இணைக்கப்பட்ட அமைப்பான கோர்வெல் சுகாதார நிறுவனம் ஆகிய முக்கிய நிறுவனங்களில் பல பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

இக்கட்டுரை எழுதப்படும் நேரத்தில், சோசலிச சமத்துவக் கட்சியின் கிஷோர் மற்றும் ஒயிட் ஆகியோர் பசுமைக் கட்சியின் ஜில் ஸ்டெய்ன் மற்றும் வலதுசாரி தடுப்பூசி எதிர்ப்பு வெறியர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியருடன் மிச்சிகன் வாக்குச்சீட்டில் இணைவார்கள். டாக்டர் கார்னல் வெஸ்ட்டிற்கான பிரச்சாரம் இன்னும் மாநில சான்றிதழுக்காக காத்திருக்கிறது என்று அதன் பிரச்சார வலைத்தளம் தெரிவித்துள்ளது.

முதலாளித்துவ இருகட்சி ஆட்சிமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு சுயாதீனமான இடதுசாரி இயக்கம் எழுச்சி பெறுவதை தடுக்கும் முயற்சியில், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் வாக்குச் சீட்டுக்களுக்கு அனுமதி மறுக்க நீதிமன்றங்கள், சட்டமன்றம் மற்றும் தேர்தல் ஆணையங்களைப் பயன்படுத்தினர். இந்த வாரம்தான், வடக்கு கரோலினா மாநில தேர்தல் வாரியத்தில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் வெஸ்ட்டை வாக்குச்சீட்டில் இருந்து விலக்கி வைக்க வாக்களித்தனர், வெஸ்ட்டின் பிரச்சாரம் குறைந்தபட்ச வரம்பிற்கு மேல் 3,200 சரிபார்க்கப்பட்ட கையெழுத்துக்களை சமர்ப்பித்திருந்த போதிலும், வாக்குச்சீட்டில் இடம்பெறுவதை தடுக்க வாக்களித்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சார மேலாளரின் கருத்துப்படி, பெரும்பாலான கையெழுத்துக்கள் டெட்ரோயிட் அமைந்துள்ள மக்கள் நிறைந்த வேய்ன் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்டன, அங்கு 1.7 மில்லியனுக்கும் மேலான மக்கள் உள்ளனர். கிஷோர்/வைட்டின் பிரச்சாரம் மாவட்டம் முழுவதும் அன்புடன் வரவேற்கப்பட்டுள்ளது, இதில் டியர்போர்ன் உட்பட, அமெரிக்காவில் தனிநபர் விகிதத்தில் மிகப்பெரிய முஸ்லீம் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.

டியர்போர்ன் மற்றும் மாநிலம் எங்கிலும், காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியின் அசைக்க முடியாத ஆதரவு மீது சீற்றம் பரவலாக உள்ளது. இது காசாவில் 186,000 க்கும் அதிகமானவர்களின் உயிர்களைப் பறித்துள்ளதாக சமீபத்திய லான்செட் ஆய்வு கண்டறிந்துள்ளது. கிஷோர்/வைட்டின் மனுதாரர்கள் ஹலால் மளிகைக் கடைகள், மசூதிகள் மற்றும் சமூக நிகழ்வுகளில் வழமையாக பிரச்சாரம் செய்துள்ளனர், அங்கு அவர்கள் சியோனிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுடன் முறித்துக் கொள்வதும் மற்றும் அவர்கள் இருவரும் பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டமும் அவசியப்படுவதாக விளக்கினர்.

வேய்ன் மாவட்டத்தில் மட்டும் 11,000 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டாலும், பிரச்சாரம் பெரிய டெட்ரோயிட்-ஆன் ஆர்பர் பெருநகரப் பகுதியில் உள்ள மற்ற மூன்று மாவட்டங்களான ஓக்லாந்து, மாகோம்ப் மற்றும் வாஷ்டெனாவ் ஆகியவற்றில் 6,000 க்கும் மேற்பட்ட மொத்த கையெழுத்துக்களை சேகரித்தது. பிளின்ட்டில் அமைந்துள்ள ஜெனீசி மாவட்டம் மற்றும் கிராண்ட் ராபிட்ஸ் அமைந்துள்ள கென்ட் மாவட்டத்தில் 650 க்கும் மேற்பட்டோர் மனுவில் கையெழுத்திட்டனர். ஒட்டாவா, கலாமசூ, இங்காம் மற்றும் செயின்ட் கிளேர் மாவட்டங்களிலும் மூன்று இலக்க கையொப்பம் மொத்தமாக சேகரிக்கப்பட்டன. மொத்தத்தில், மிச்சிகனின் 83 மாவட்டங்களில் 74 இல் பிரச்சாரத்திற்கூடாக கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன.

மிச்சிகனில் சோசலிச பிரச்சாரத்திற்கான பரந்த ஆதரவானது, விரக்தியுற்ற மத்தியதர வர்க்க கூறுபாடுகள் முன்வைக்கும் கருத்துக்களான அமெரிக்காவில் தொழிலாளர்களும் மாணவர்களும் நம்பிக்கையற்ற வகையில் பின்தங்கியவர்கள், ஒரு சோசலிச முன்னோக்கின் சாத்தியக்கூறை மகிழ்விக்கும் திறனற்றவர்கள் என்பதை நிராகரிக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு முன்னர், சுமார் 5,000 வாகனத்துறை தொழிலாளர்கள் UAW தலைவர் பதவிக்கான தேர்தலில் சோசலிஸ்ட் வில் லேமனுக்கு வாக்களித்தனர். அவர்களில் பலர் மிச்சிகனில் இருந்தனர். இது, UAW தொழிற்சங்க எந்திரத்திற்கு பெருகிய தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வெளிப்பாடு மற்றும் ஒரு சர்வதேச, சோசலிச முன்னோக்கிற்கான ஆதரவின் வெளிப்பாடு ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி, இதர மாநிலங்களில வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்கு தொடர்ந்து கையெழுத்துக்களை சேகரித்து வருகிறது.

Loading