மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் எல்லையைத் தாக்கும் திட்டங்களைப் பற்றி, இஸ்ரேலுக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், நியூயார்க் டைம்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹமாஸ் எங்கு, எப்படித் தாக்கும் என்பதை நன்கு அறிந்திருந்த இஸ்ரேலிய அதிகாரிகள், அதன் தாக்குதலை எளிதாக்குவதற்காக, வேண்டுமென்றே விலகி நிற்கும் முடிவை எடுத்துள்ளனர் என்பதை, வெளியிடப்பட்ட தகவல்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
இதுபற்றி வெளிவந்த தகவல்கள், இஸ்ரேலிய அரசாங்கம் தனது சொந்த குடிமக்களைக் கொல்ல அனுமதித்து ஊக்குவித்ததையும், அன்றையநாள் நிகழ்ந்த மரணங்களுக்கு இஸ்ரேலிய அரசாங்கமே பொறுப்பு என்பதையும் குறிக்கிறது. இந்த குற்றவியல் சதியானது, காஸா மக்களுக்கு எதிராக நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கான சாக்குப்போக்கை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
மேலும், இஸ்ரேலிய உளவுத்துறை மட்டுமல்ல, எகிப்தும் இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஹமாஸின் திட்டங்கள் குறித்து அமெரிக்காவுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்பதை நம்ப முடியாது. இவை எல்லாமே, இஸ்ரேல், பைடென் நிர்வாகம், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு சதியை சுட்டிக்காட்டுகிறது.
ஆண்டனி பிளிங்கனின் வருகையின் போது காஸா மீது, இஸ்ரேல் ஒரு புதிய அலை தாக்குதல்களை நடத்தியதை திங்களன்று டைம்ஸ் வெளியிட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் பிரசன்னம், இந்த புதிய தாக்குதலுக்கு அமெரிக்க ஆதரவை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்த சதியை வெளிப்படுத்தியதற்கான பதிலை நிர்வகிப்பதையும் நோக்கமாக இருந்தது.
டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஏறத்தாழ 40 பக்க ஆவணத்துக்கு இஸ்ரேலிய அதிகாரிகள் “ஜெரிகோ சுவர்” என்று குறியீட்டுப் பெயரிட்டுள்ளனர். சுமார் 1,200 பேரின் மரணத்திற்கு வழிவகுத்த பேரழிவுகரமான படையெடுப்பின் வகையைச் சரியாக, புள்ளிக்கு புள்ளியாக அதில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய உளவுத்துறையால் பெறப்பட்ட இந்த ஆவணம் “தாக்குதல் முறையை உன்னிப்பாக விவரிக்கிறது, இது உண்மையான நிகழ்வுகளை பிரதிபலிக்கிறது” என்று டைம்ஸ் தெரிவித்துள்ளது. “காஸா பகுதியை சுற்றியுள்ள கோட்டை போன்ற பாதுகாப்பு அரண்களை உடைத்து, இஸ்ரேலிய நகரங்களைக் கைப்பற்றி, முக்கிய இராணுவத் தளங்களைக் குறிவைக்கும் நோக்கில் தீவிரமான தாக்குதலை இது கோடிட்டுக் காட்டியது. ராக்கெட்டுகள், ட்ரோன்கள் மற்றும் தரைப்படைகளின் ஒருங்கிணைந்த பயன்பாட்டை உள்ளடக்கிய இந்த திட்டம் ஆபத்தான துல்லியத்துடன் செயல்படுத்தப்பட்டது” என்று டைம்ஸ் தெரிவித்துள்ளது.
டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஹமாஸ் அதிர்ச்சியூட்டும் துல்லியத்துடன் வரைபடத்தைப் பின்பற்றியது. தாக்குதலின் தொடக்கத்தில் ராக்கெட்டுகளை சரமாரியாக வீசவும், எல்லையில் இருந்த பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகளைத் தகர்க்க ட்ரோன்கள், மற்றும் சிறப்பு பாராசூட் விமானங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கால் நடைகளில் துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் இஸ்ரேலுக்குள் பெருமளவில் குவிக்கப்பட்டனர் - இவை அனைத்தும் அக்டோபர் 7 அன்று நடந்தது என்று ஆவணம் தெரிவிக்கிறது.
தாக்குதலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திட்டத்தை விரிவாக நடைமுறைப்படுத்த ஒரு முழுமையான நாள் முழுவதும் பயிற்சிப் பணியை ஹமாஸ் மேற்கொண்டதை, இஸ்ரேலிய இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அறிந்திருந்தனர் என்று டைம்ஸ் கூறுகிறது:
இந்த பயிற்சியில் இஸ்ரேலிய விமானங்களை சுட்டு வீழ்த்துவது மற்றும் ஒரு கிபுட்ஸ் இராணுவ பயிற்சி தளத்தை கைப்பற்றுவது மற்றும் அனைத்து கடெட் படைகளையும் கொல்வது ஆகியவை அடங்கும். இந்த பயிற்சியின் போது, ஹமாஸ் போராளிகள் ஜெரிகோ சுவர் தாக்குதல் திட்டத்தின் மேல் பகுதியில் தோன்றிய குர்ஆனில் இருந்து அதே சொற்றொடரைப் பயன்படுத்தினர்.
ஹமாஸின் திட்டங்கள் பற்றி இஸ்ரேலுக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை டைம்ஸ் ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், எந்த ஆதாரமும் இல்லாமல் இஸ்ரேலிய அதிகாரிகள் வெறுமனே தவறு செய்துவிட்டார்கள் என்று, இந்த வெளிப்படுத்தல்களை ஒரு மோசடியுடன் டைம்ஸ் தொகுக்க முயல்கிறது. டைம்ஸ் மேலும் எழுதுகிறது:
இந்தத் தோல்விகள் அனைத்திற்கும் அடிப்படையானது, ஹமாஸுக்குத் தாக்கும் திறன் இல்லை, அதைச் செய்யத் துணியாது என்ற ஒற்றை, அபாயகரமான தவறான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை இஸ்ரேலிய அரசாங்கத்திற்குள் மிகவும் வேரூன்றியிருந்தது, அதற்கு மாறாக பெருகிவரும் ஆதாரங்களை அவர்கள் புறக்கணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், அல்கொய்தா பயங்கரவாதக் குழு தாக்குதலைத் திட்டமிடுவதாக அமெரிக்க அதிகாரிகளும் பல அறிகுறிகளைக் அறிந்து கொண்டிருந்தபோது, தொடர்புகளை இணைப்பதில் ஏற்பட்ட இந்த தோல்விகள் மற்றொரு பகுப்பாய்வு தோல்வியை எதிரொலிக்கின்றன.
இல்லை, அக்டோபர் 7 அன்று இஸ்ரேலின் நிலைப்பாடு “தொடர்புகளை இணைப்பதில்” தோல்வி இல்லை, இஸ்ரேலிய உளவுப் படைகள் அக்டோபர் 7 தாக்குதலின் முழு செயல்பாட்டுத் திட்டத்தையும் பெற்றிருந்தன. பின்னர் அந்தத் திட்டத்திற்காக ஹமாஸ் ஒரு பெரிய, உயர்மட்ட பயிற்சிப் பயிற்சியை மேற்கொண்டு வருவதை கண்டனர். என்ன திட்டமிடப்படுகிறது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர் மற்றும் அதைத் தொடர அனுமதிக்க முடிவு செய்தனர்.
டைம்ஸ் எழுதுகிறது: “இஸ்ரேலிய இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், ஹமாஸ் இதனை செயல்படுத்துவது மிகவும் கடினம் எனக் கருதி, இந்த திட்டத்தை” நிராகரித்தனர். “பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அல்லது மற்ற மூத்த அரசியல் தலைவர்கள் இந்த ஆவணத்தைப் பார்த்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை” என்று டைம்ஸ் மேலும் கூறுகிறது.
இந்த விளக்கக்காட்சி அபத்தமானது. மிக ஆழமான பகுப்பாய்வைத் தூண்டாமல் இந்த வகையான தகவல்கள் உளவுத்துறை சேவைகளை சென்றடையும் என்று நம்ப முடியாது. 9/11க்குப் பிறகு, இதுபோன்ற உயர்மட்ட திட்டங்கள் பிரதமரிடம் இருந்து காப்பாற்றப்படும் என்பது நம்பும்படியாக இல்லை.
அத்தகைய ஆவணம் ஹமாஸின் மிக உயர்ந்த மட்டத்தில் இருந்து வந்திருக்கும். இந்த மதிப்புமிக்க தகவல் கிடைத்தவுடன், இஸ்ரேல் இந்த தகவலை வைத்திருக்கவில்லை என்று ஹமாஸை நம்ப வைப்பதற்கான எதிர் நடவடிக்கைகள் உட்பட மூலத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது இன்றியமையாததாக இருந்திருக்கும். ஹமாஸின் திட்டம் அம்பலப்படுத்தப்படவில்லை என்பதற்கான சமிக்ஞையை அனுப்புவதற்கு இந்த நிலைப்பாடு ஒரு வழிமுறையாக இருந்திருக்கலாம்.
இறுதியில், காஸா மீதான பாரிய, நீண்டகாலத் திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு ஒரு சாக்குப்போக்கை வழங்குவதற்காக, ஹமாஸ் தனது நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கும் வகையில் இது தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. நெதன்யாகுவால் மட்டுமே அத்தகைய முடிவை எடுக்க முடியும். இதற்கிடையில், அமெரிக்கா உடனடியாக அப்பகுதிக்கு ஒரு பாரிய இராணுவப் படையை அனுப்பியது, தாக்குதல் நடந்த 24 மணி நேரத்திற்குள் தனது மிகப்பெரிய விமானம் தாங்கி மற்றும் துணைக் கப்பலை அப்பகுதிக்கு அனுப்புவதாக அறிவித்தது.
இஸ்ரேலின் விட்டுக்கொடுப்பு, “உளவுத்துறையின் தோல்வி” என்று டைம்ஸின் கூற்று அர்த்தமற்றது. ஏனெனில், அது ஆரம்பம் முதல் இறுதி வரை பொய் கூறுகிறது. இல்லை, அக்டோபர் 7 நிகழ்வுகள் உளவுத்துறை தோல்வி அல்ல: ஹமாஸின் இராணுவ நடவடிக்கையை சரியாக கணிப்பதில் இஸ்ரேல் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றது. இது உளவுத்துறையை செயல்படுத்துவதற்கு பதிலாக, தாக்குதல் நடந்த துல்லியமான தருணத்தில் துருப்புக்கள் மற்றும் உளவுத்துறை சேகரிப்பை நிறுத்த இஸ்ரேல் திட்டமிட்டது.
அக்டோபர் 7 தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, மூத்த பத்திரிகையாளர் சீமோர் ஹெர்ஷ், தாக்குதலுக்கு முந்தைய நாட்களில், “உள்ளூர் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள், நெதன்யாகுவின் ஒப்புதலுடன், ஒவ்வொன்றும் சுமார் 800 படையினர்களைக் கொண்ட இராணுவத்தின் மூன்று பட்டாலியன்களில் இரண்டிற்கு, மேற்குக் கரைக்கு அருகில் நடைபெறும் சுக்கோட் திருவிழாவில் கவனம் செலுத்துவதற்காக காஸாவின் எல்லையிலிருந்து இடமாற்றுவதற்கு உத்தரவிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹெர்ஷ் தன்னிடம் கூறப்பட்ட ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டினார், “காஸா பகுதிக்கும் தெற்கு இஸ்ரேலுக்கும் இடையிலான 51-கிலோமீட்டர் எல்லையைக் காக்கும் பொறுப்பில் வெறும் எண்ணூறு படையினர்கள் மட்டுமே இருந்தனர். அதாவது தெற்கில் உள்ள இஸ்ரேலிய குடிமக்கள் பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம் இஸ்ரேலிய இராணுவ பிரசன்னம் இல்லாமல் இருந்தனர். அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள விடப்பட்டனர்”.
இந்த விட்டுக்கொடுப்பானது, எல்லையைத் தாக்குவதற்கு இடமளிப்பது மட்டுமன்றி, சிவிலியன் பகுதிகளில் தாக்குதல் நடத்தும் ஹமாசினரை இடைமறிக்க இராணுவப் படைகளை மாற்ற வேண்டிய சூழ்நிலைமையை உருவாக்கியது. இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் ஹெலிகாப்டர் படைகள் கண்மூடித்தனமாக பொதுமக்கள் பகுதிகளுக்குள் சுடும் நிலைமைகளை உருவாக்கியது. இது, இஸ்ரேலிய இறப்பு எண்ணிக்கையை மேலும் அதிகரித்தது.
இராணுவ விட்டுக்கொடுப்புக்கு கூடுதலாக, இஸ்ரேல் தனது 8200 சமிக்ஞைகளை வழங்கும் புலனாய்வுப் பிரிவை வார இறுதி நாட்களில் கடமையிலிருந்து விலக்க முடிவு செய்தது. அதாவது மூன்று மாதங்களுக்கு முன்பே பயிற்சியைக் கண்டறிந்து சமிக்ஞைகளை வழங்கும் புலனாய்வுப் பிரிவு அக்டோபர் 7 சனிக்கிழமை தாக்குதலின் போது பணியில் இல்லை.
தாக்குதலைப் பற்றி இஸ்ரேலுக்குத் தெரியும் என்ற வெளிப்படுத்தல்கள், அமெரிக்க ஊடகம் மற்றும் அரசியல் ஸ்தாபனத்தை அம்பலப்படுத்துகிறது. இவை, தாக்குதலால் வியப்புக்குள்ளாகியதாக இஸ்ரேலின் கூற்றுக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டன. மேலும், அக்டோபர் 7 நிகழ்வுகள் காஸாவில் இப்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை நியாயப்படுத்துகின்றன.
இந்த வெளிப்படுத்தல்கள், காஸா இனப்படுகொலையை நெதன்யாகு ஆட்சி மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் ஒரு குற்றவியல் சதி என்பதை அம்பலப்படுத்துகிறது. படுகொலை செய்யப்பட்டவர்கள் 20,000ம் பாலஸ்தீனியர்கள் மட்டுமல்ல, இதில் இஸ்ரேலிய மக்களும் அடங்குவர்.