மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும், உக்ரேனைச் சாக்குபோக்காக பயன்படுத்தி, ரஷ்யாவுடனான அவற்றின் மோதலை வேண்டுமென்றே அடாவடித்தனமாக தீவிரப்படுத்தி வருகின்றன. அவை கூறும் ஒவ்வொன்றும், அவற்றின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும், அறிவிக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்படாத போரே அவற்றின் நோக்கம் என்ற தீர்மானத்திற்கு இட்டுச் செல்கிறது.
போர் ஏற்படலாம் என்ற பேச்சுக்கள் அனைத்தும் வாஷிங்டன், ஐரோப்பிய தலைநகரங்கள் மற்றும் அட்லாண்டிக்கின் இரண்டு தரப்புகளிலும் உள்ள அருவருக்கத்தக்க ஏகாதிபத்திய-சார்பு ஊடகங்களில் இருந்து வெளியிடப்பட்டு வருகின்றன. ரஷ்யா படையெடுக்கக்கூடும் என்ற வாதங்களுடன் சேர்ந்து, மாஸ்கோ 'பழியை எதிர்தரப்பு மீதும்' போட திட்டமிடுவதாகவும், அதைப் பின்னர் படையெடுப்பை நியாயப்படுத்த பயன்படுத்தும் என்றும் தீவிரமான எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன, ஆனால் இதற்காக எந்த ஆதாரமும் கூறப்படுவதில்லை.
தற்போதைய சூழலில் பார்த்தால், உக்ரேனுக்குள் செயல்பட்டு வரும் அமெரிக்க இராணுவ ஆலோசகர்களால் பயிற்றுவிக்கப்பட்ட உக்ரேனிய சிறப்புப்படைகளின் துல்லியமான அதுபோன்றவொரு நடவடிக்கையை மூடிமறைக்கவே இந்த வாதம் இட்டுக் கட்டப்பட்டு வருகிறது என்பது மிகவும் வெளிப்படையாக உள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களாக அமெரிக்கா தொடுத்த எல்லா போர்களுக்கும் செய்ததைப் போலவே, ஊடகங்களோ நம்பகத்தன்மை சரிபார்க்காத குற்றச்சாட்டுக்களையும் வெளிப்படையான பொய்களையும் உண்மையென முன்வைக்கின்றன. மீண்டுமொருமுறை, நியூ யோர்க் டைம்ஸூம் வாஷிங்டன் போஸ்டும் இந்த தவறான செய்தி பரப்பும் பிரச்சாரத்தில் முன்னணியில் உள்ளன, பொது மக்களின் கருத்தை நோக்குநிலைப் பிறழச் செய்வதும் குழப்புவதுமே இதன் நோக்கமாகும்.
சதாம் ஹூசைனின் “அலுமினிய குழாய் குண்டுகள்” மற்றும் பாரிய பேரழிவுகரமான ஆயுதங்களைக் குறித்து 2003 இல் அவை பொய்களைப் பரப்பிய போது, டைம்ஸூம் மற்றும் போஸ்டும் ஈராக்கின் தொலைதூர கிழக்கிலிருந்து மேற்கை நோக்கி இராணுவத் தளவாடங்கள் நகர்த்தப்படுவதைக் காட்டுவதாக கூறிய பெயர் தெரியாத ரஷ்யர்களின் டிக்டாக் மற்றும் ட்வீட்டர் சமூக ஊடகங்களில் முதன்முதலில் பதிவிடப்பட்ட செயற்கைக் கோள் மற்றும் காணொளி காட்சிகளை 'ஆதாரமாக' மேற்கோளிட்டன.
ரஷ்ய படையெடுப்பு நடத்தப்பட இருப்பதற்குக் கூடுதல் 'ஆதாரமாக' பின்வரும் அர்த்தமற்ற படங்கள் வெளியிடப்பட்டன, 1) பைகல் ஆற்றுக்கு அருகே இராணுவ போக்குவரத்து வாகனங்களின் எடையால் பனியில் டயர் தடங்கள் ஏற்பட்டிருந்ததாக குறைகூறப்பட்டது; 2) 'பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் இஸ்காண்டர்-எம் (Iskander-M) ஏவுகள வாகனங்கள் தார்பாயிட்டு மூடப்பட்டிருந்தன;” 3) பிரமோர்ஸ்கி க்ராய் இரயில் நிலையத்திற்கு அருகே “முழுமையாக வாகனங்கள் ஏற்றப்பட்ட, அனேகமாக இவை இராணுவ வாகனங்களாக இருக்கலாம் என்று தெரிகிறது,' ஒரு இரயில் நிறுத்தப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.” இவை அனைத்தும் ஒன்றுக்கும் பிரயோஜனமற்றவை.
உண்மையைத் தலைகீழாக காட்டி, வாஷிங்டன் போஸ்ட் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16 இல்) பிரசுரித்த ஒரு தலையங்கத்தில் பின்வருமாறு அறிவித்தது: “இந்த ஒட்டுமொத்த நெருக்கடியும் திரு. புட்டினால் உருவாக்கப்படுகின்றன … இதற்கும் நேட்டோவின் விரிவாக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இதன் ஸ்தாபக உடன்படிக்கை தற்காப்பு இராணுவ நடவடிக்கையை மட்டுமே அங்கீகரிக்கிறது,” என்றது.
ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்கப் போகிறது என்பது உண்மையாகவே இருந்தாலும் கூட, அத்தகைய ஒரு இராணுவ நடவடிக்கைக்கும் 'நேட்டோவின் விரிவாக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று உறுதியாக எப்படி வாதிட முடியும்?, நேட்டோ 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து கிழக்கில் 800 மைல்களுக்கு அதன் எல்லைகளை விரிவாக்கி உள்ளது. உக்ரேனை அதன் இராணுவக் கூட்டணிக்குக் கொண்டு வருவதற்கான நேட்டோவின் வெளிப்படையான நோக்கத்தை ரஷ்யா எப்படி கண்டு கொள்ளாமல் இருக்க முடியும்? மேலும், உக்ரேனிய பிரச்சினையானது புட்டினின் அதிகார வெறியை மூடிமறைப்பதற்காக அவரால் பயன்படுத்தப்படும் வெறும் சாக்குபோக்கு என்றாலும், உக்ரேனை எதிர்வரும் காலத்தில் நேட்டோவில் இணைத்துக் கொள்வதை அமெரிக்காவும் நேட்டோவும் கைவிடப் போவதில்லை என்று ஏன் வலியுறுத்துகின்றன?
நேட்டோவின் 'ஸ்தாபக உடன்படிக்கை தற்காப்பு இராணுவ நடவடிக்கையை மட்டுமே அங்கீகரிக்கிறது,” என்ற போஸ்டின் பயபக்தியான உத்தரவாதத்தைப் பொறுத்த வரையில், கடந்த 30 ஆண்டுகளாக நேட்டோ ஆக்ரோஷமான ஏகாதிபத்திய நடவடிக்கைகளின் மையத்தில் இருந்துள்ளது என்பதை அதன் தலையங்க ஆசிரியர்கள் மறந்து விட்டதாக தெரிகிறது. அது பங்கு பற்றியிருந்ததில், 1990-91 ஈராக் படையெடுப்பு, 1992 இல் பொஸ்னியா தலையீடு, 1999 இல் சேர்பியா மீதான குண்டுவீச்சு, 2001 இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போர், 2009 இல் சோமாலியாவில் ஆபரேஷன் ஓஷியன் ஷீல்டு (Operation Ocean Shield), 2011 இல் லிபிய அரசாங்கத்தைத் தூக்கிவீசியமை ஆகியவை உள்ளடங்கும்.
மேற்குறிப்பிடப்பட்ட இந்த பட்டியல் அமெரிக்காவும் நேட்டோவும் பிற நாடுகளின் தேசிய இறையாண்மையை மீறியதற்கான வெறும் பகுதியளவிலான வரலாறு தான். இருந்தாலும் போஸ்ட் பாசாங்குத்தனமாக பின்வருமாறு அறிவிக்கிறது, “உக்ரேனை நோக்கிய ரஷ்யாவின் தோரணை ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் ஷரத்து 2 இன் கீழ் தடை செய்யப்பட்டதற்கு நிகராக உள்ளது, அது குறிப்பாக 'எந்தவொரு அரசின் எல்லை ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக படை பலத்தைப் பிரயோகிப்பதை அல்லது அச்சுறுத்தலை' தடுக்கிறது.”
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் இறையாண்மை நாடுகளின் உள்நாட்டு போரில் வல்லரசுகள் தலையிட்டு அவற்றின் அரசாங்கங்களைக் கவிழ்ப்பதையும் தான் தடுக்கிறது, இந்தவொரு கட்டுப்பாட்டை கடந்த 75 ஆண்டுகளில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் எத்தனையோ முறை மீறியுள்ளன. உண்மையில் சொல்லப் போனால், கியேவில் உள்ள இப்போதைய அரசாங்கமே அமெரிக்கா மற்றும் ஜேர்மனி நிதியுதவி அளித்து ஒழுங்கமைத்த ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் விளைவாகும்.
ஞாயிற்றுக்கிழமை கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவுடன் உரையாற்றுகையில், CNN இன் பரீத் சக்காரியா ரஷ்யாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் மிக்கெல் மெக்ஃபாலின் சமீபத்திய ட்வீட் சேதிகளை எடுத்துக் காட்டினார். இங்கே இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட, ஒபாமா நிர்வாகத்தின் கீழ் பணியாற்றியிருந்தவர் அறிவிக்கையில், தற்போதைய மோதலுக்கு புட்டின் ஒரு தீர்வுக் காண விரும்பி இருந்தால், அவர் அமெரிக்காவின் 'கோரிக்கைகளுக்கு' செவி கொடுத்திருப்பார் என்றார்.
மெக்ஃபாலின் கருத்துப்படி, அப்காசியா மற்றும் தெற்கு ஓஸ்செடியா, அத்துடன், குறிப்பாக கலினென்கிராடின் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் இருந்து ரஷ்ய துருப்புகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதும் இவற்றில் உள்ளடங்கும். கலினென்கிராட், சர்வதேச அளவில் ரஷ்ய இறையாண்மை எல்லையாக அங்கீகரிக்கப்பட்டதாகும். ரஷ்யாவின் எல்லைகளுக்குள் துருப்புகள் எங்கே நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதை அமெரிக்கா/நேட்டோ தீர்மானிக்க வேண்டும் என்ற அதன் கோரிக்கையானது, ரஷ்யா அதன் இறையாண்மையை இழக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. ஜெயித்து கைப்பற்றப்பட்ட ஒரு நாட்டின் மீது இந்த மாதிரியான கோரிக்கை தான் திணிக்கப்படும்.
இந்த உள்ளடக்கத்தில், ஜேர்மனியின் ஆக்ரோஷமான நிலைப்பாடு குறிப்பாக ரஷ்யாவுக்கு அதிர்வூட்டுகிறது, அது 1941 இல் சோவியத் ஒன்றியத்தில் சுமார் 30 மில்லியன் உயிர்களை விலை கொடுத்த படையெடுப்பை மறந்துவிடவில்லை. ஜேர்மனியில் மிகவும் பரவலாக வாசிக்கப்படும் செய்தி பத்திரிகை Der Spiegel அதன் சமீபத்திய பதிப்பில், “நேட்டோ முடிவாக உக்ரேனுக்கு உயிர்பறிக்கும் ஆயுதங்களை வழங்க வேண்டும்,” என்று அறிவிக்கிறது.
இந்த மொழி, ஒரு நெருக்கடியின் தீவிரத்தைக் குறைக்க முயற்சி செய்யப்படும் போது பயன்படுத்தப்படும் மொழியல்ல. வாஷிங்டன் போஸ்டோ, ரஷ்யாவுடனான கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறு முடிந்துவிட்டதாக சூசகமாக அறிவிக்கும் அளவுக்குச் செல்கிறது.
அது எழுதுகிறது: “உக்ரேனின் தரைப்பகுதிகள் குளிர்காலத்தில் உறைந்த-பூமியாக மாறி ரஷ்ய டாங்கிகள் வேகமாக நகர்வதற்குரியதாக ஆகிவிடும் என்பதால், ஓர் இராஜாங்க தீர்வுக்கான வாய்ப்பு வழி —உண்மையிலேயே அது திறந்திருந்தது என்றால்— வேகமாக மூடி வருகிறது.”
பேச்சுவார்த்தைகளுக்கான நேரம் முடிவடைந்து வருவதாக கூறும் வாதம், ஒரு போரைத் தவிர்க்க விரும்புபவர்களால் அல்ல, ஒரு போரைத் தொடங்க திட்டமிடுபவர்களால் பயன்படுத்தப்படும் தந்திரமாகும்.
இரண்டாம் உலக போர் முடிந்து 75 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர் முன்னாள் சோவியத் ஒன்றிய மக்கள் மீண்டுமொருமுறை ஒரு பேரழிவை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை முப்பதாண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றிய அரசுகள் கலைக்கப்பட்டதன் துயரமான விளைவாகும், ஏகாதிபத்தியம் ஒரு வித பழங்கதை ஆகி விட்டது என்றும் ரஷ்யாவை முதலாளித்துவ பொருளாதாரத்துடன் மீண்டும் ஒருங்கிணைப்பது சமாதானம் மற்றும் பாதுகாப்பின் ஒரு புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் இந்த வாதங்களின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி nomenklatura ஆல் அந்த கலைப்பு முடுக்கி விடப்பட்டது, இது இப்போது துயரகரமாக பொய்யென நிரூபணமாகி உள்ளது.
நேட்டோ துருப்புகளும் போர் எந்திரங்களும் ரஷ்யாவின் எல்லைகளிலேயே நிறுத்தப்பட்டு, நேட்டோ வழமையாக அதன் மேற்கு பக்கவாட்டில் மிகப்பெரிய இராணுவ ஒத்திகைகளை நடத்துகின்ற ஒரு சூழலை இப்போது ரஷ்யா முகங்கொடுக்கிறது.
ரஷ்யாவுடன் —சீனாவையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்— ஒரு மோதலைத் தூண்டுவதில் பிரதான தூண்டுதல்தாரியாக விளங்கும் அமெரிக்கா ஏன் பேரிடருக்கு மட்டுமே இட்டுச் செல்லும் ஒரு விசித்திரமான பொறுப்பற்ற கொள்கையைப் பின்தொடர்கிறது என்ற கேள்வி எழுகிறது.
இதற்கான பதிலை அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்திய நெருக்கடியின் உள்ளடக்கத்தில் மட்டுமே காண முடியும். 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து, அமெரிக்கா அதன் உலகளாவிய பொருளாதார மேலாதிக்கத்தின் நீண்டகால வீழ்ச்சியைச் சரிக்கட்ட மீண்டும் மீண்டும் போரைச் சார்ந்திருந்துள்ளது. ஆனால் இராணுவ தலையீடுகள் அனைத்தும் அமெரிக்கா என்ன உத்தேசித்ததோ அதற்கு முற்றிலும் நேரெதிரான விளைவுகளை உருவாக்கி உள்ளன. பாலைவன புயல் (Desert Storm) தாக்குதலில் இருந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வரையில், அதன் இராணுவ நடவடிக்கைகளின் முன்வரலாறு காட்டுமிராண்டித்தனமான, இரத்தந்தோய்ந்த பேரிடர்களின் பரிதாபகரமான சாகசங்களாக இருந்துள்ளன.
ஆனால் அமெரிக்காவால் 'அதன் தவறுகளில் இருந்து படிப்பினைகளைப்' பெற முடியாது. முதல் புஷ் நிர்வாகம் 'ஒருதுருவ தருணத்தை' பிரகடனப்படுத்தி ஒரு புதிய அமெரிக்க நூற்றாண்டு தொடங்கி இருப்பதை அறிவித்து முப்பதாண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கா சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முரண்பாடுகளின் சிக்கலான விஷயங்களை எதிர்கொண்டுள்ளது, இதற்கு அதனிடம் எந்த முற்போக்கான தீர்வுகளும் இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், முற்றிலும் பகுத்தறிவார்ந்த தீர்வுகளும் கூட இல்லை.
இந்த ஒட்டுமொத்த பொருளாதார அமைப்புமுறையும் படுமோசமாக தாங்கொணா கடன் சுமையைச் சுமந்து கொண்டிருக்கிறது, இது கடந்த 14 ஆண்டுகளாக, குறிப்பாக 2008 பொறிவை அடுத்து வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்புக்குப் பின்னர் இருந்து மிகப் பெரியளவில் அதிகரித்துள்ளது.
நிதிய ஒட்டுண்ணித்தனத்தால் எரியூட்டப்பட்டு, சமூக சமத்துவமின்மையோ அதிர்ச்சியூட்டும் மட்டங்களுக்கு அதிகரித்துள்ளது. கேடுகெட்ட அரசியல் அமைப்போ அதிகரித்து வரும் கட்டுப்படுத்தவியலா சமூக பதட்டங்களின் விளைவாகும்.
இப்போது அதன் மூன்றாம் ஆண்டில் நுழைந்து வரும் இந்த பெருந்தொற்று, அமெரிக்க சமூகத்திற்குள் நிலவும் பதட்டங்களை உடையும் புள்ளிக்குக் கொண்டு வந்துள்ளது.
அமெரிக்க ஊடங்களின் இடைவிடாத போர்-சார்பு பிரச்சாரம், வெளிநாடுகளில் ஒரு மிகப் பெரிய இராணுவ மோதலானது மிகப்பெரிய உள்நாட்டு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்பும் என்ற மாயநம்பிக்கையால் உந்தப்படுகிறது.
ஆனால் அமெரிக்க நெருக்கடி அதற்கு மட்டுமே உரிய பிரத்யேகமானதில்லை. அது ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் ஓர் உலகளாவிய நெருக்கடியின் குவிமையமாகும்.
வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகள் பின்பற்றி வரும் கொலைபாதக வெளிநாட்டுக் கொள்கை அவர்களின் கொலைகார உள்நாட்டு கொள்கையின் மறுபக்கமாகும். இதுவரையில் கோவிட்-19 ஆல் எண்ணூற்றி ஐம்பது ஆயிரம் அமெரிக்கர்கள் இறந்துள்ளனர். கூடிய விரைவிலேயே இது ஒரு மில்லியனுக்கும் அதிகமாக சென்றுவிடும். இந்த சடலங்களின் எண்ணிக்கையுடன், 152,000 பிரிட்டிஷ் பிரஜைகள், 124,000 பிரெஞ்சு, மற்றும் 116,000 ஜேர்மனியர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அமெரிக்க குடும்பங்கள் இரண்டொரு வாரங்களில் அரசு வலைத் தளத்தில் இருந்து கோவிட் பரிசோதனைக்கான வீட்டு கருவிகளைக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று அவர்களுக்கு உத்தரவாதம் அளிப்பதே ஒமிக்ரோன் வகைக்கு பைடென் நிர்வாகத்தின் விடையிறுப்பாக உள்ளது.
பள்ளிகள், மருத்துவமனைகள், இன்றியமையா உள்கட்டமைப்பு, உற்பத்தி — இவை அனைத்தும் இத்தகைய அரசாங்கங்கள் பின்பற்றும் பாரிய நோய்தொற்று வேலைதிட்டங்களது சுமையின் கீழ் உடைந்து வருகின்றன. ஆனால் பங்குச் சந்தைகளோ தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன, ஆகவே இந்த பங்குச் சந்தை குமிழியைத் தக்க வைக்க அவசியப்படும் மதிப்பைத் தொழிலாளர்களிடம் இருந்து உறிஞ்சுவதற்காக அவர்களை வேலையிடங்களில் கட்டிப் போட வேண்டியுள்ளது.
சமூக கோபம் அதிகரித்து வருகிறது, உலகளாவிய பரிமாணங்களில் ஒரு வேலைநிறுத்த அலை பலமடைந்து வருகிறது. ஆசிரியர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், மருத்துவக் கவனிப்பு பணியாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளின் வெளிநடப்புகள் உலகெங்கிலுமான தொழில்துறைகளைப் பாதித்து வருகின்றன. ஆனால் உலகளாவிய முதலாளித்துவத்தின் மையங்களில் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த செயல்பட்டுள்ள அரசியல் அமைப்புகள் மிகவும் சீரழிந்த நிலையில் உள்ளன. பாசிசவாதிகள் ஒவ்வொரு படியாக முன்னேறி வருகிறார்கள். அமெரிக்காவில் அவர்கள் தலைமைச் செயலகத்தின் சுவர்களில் ஏறி விட்டார்கள். ஜேர்மனியில் அவர்கள் அதிகார அரங்கிலேயே அமர்ந்திருக்கிறார்கள்.
முதலாளித்துவ சமூகத்திற்குள் கட்டமைந்து வரும் அழுத்தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல், ஆளும் வர்க்கம் சமூக கோபத்தை, போரை நோக்கி திரும்புவதன் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று சிந்தித்து, அல்லது தீவிரமாக நம்பி, அந்த முயற்சியில் இறங்கி உள்ளது. ஆனால் மக்களின் பரந்த பிரிவுகளால் இந்த கொள்கை ஆதரிக்கப்படுவதாக நம்புவதே எல்லாவற்றையும் மிகப் பெரிய பிரமையாக இருக்கக்கூடும்.
அதன் தொலைநோக்கு போர் திட்டங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் நடைமுறைக்குக் கொண்டு வருவதை அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் அனுமதிக்க முடியாது. உள்நாட்டில் ஆளும் வர்க்கத்தின் மரணக் கொள்கைக்கு எதிரான போராட்டமானது, வெளிநாடுகளில் அதன் மரணக் கொள்கைக்கு எதிரான ஒரு போராட்டத்தைக் கோருகிறது. அமெரிக்கா மற்றும் ஜேர்மனி தலைமையில், முண்டியடித்துக் கொண்டு ரஷ்யாவை ஓர் இரத்தந்தோய்ந்த மோதலுக்குள் கொண்டு வருவதற்கான இந்த பாய்ச்சலை, முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தில் ஒன்றுபட்ட, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும்.