முன்னோக்கு

இனப்படுகொலைக்கு இஸ்ரேலுக்கு பச்சைக்கொடி காட்டும் அமெரிக்கா, ஈரானுக்கு எதிரான போருக்கு தயாராகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்த படம் 2020 ஆம் ஆண்டில் தென் சீனக் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி தாக்குதல் கப்பல்களைக் காட்டுகிறது. [AP Photo]

காசா மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவத்தின் இனப்படுகொலைக்கு மத்தியில், ஈரானை குறிவைத்து மத்திய கிழக்கு முழுவதும் ஒரு போரை கட்டவிழ்த்துவிடப்போவதாக அமெரிக்கா அச்சுறுத்தி வருகிறது.

கடந்த வார இறுதியில், காசாவில் தொடர்ந்து குண்டு மழை பெய்ததில், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இரண்டு மில்லியன் மக்கள் பட்டினி மற்றும் தாகத்தால் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள், அதே நேரத்தில் வடக்கு காசாவில் ஒரு மில்லியன் மக்கள் வரவிருக்கும் தரைவழி படையெடுப்புக்கு முன்னதாக ஒரு மரண அணிவகுப்பிற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

இந்த இனப்படுகொலைக்கு பைடென் நிர்வாகத்தின் முழு ஆதரவு உள்ளது, இது இஸ்ரேல், போர்க்குற்றங்களை மேற்கொள்ள ஒரு வெற்று காசோலையை வழங்கியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து வருகிறது. வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் கடந்த வாரம் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தனர், பிளிங்கன் இந்த வாரம் நாடு திரும்ப உள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் போருடன் சேர்ந்து பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ பிரசன்னம் பிரமாண்டமாக விரிவடைந்துள்ளதுடன், இரண்டு போர் விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய போர்க் குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மத்திய கிழக்கிற்கு ஒரு டசினுக்கும் அதிகமான போர்க்கப்பல்களை அனுப்புவது வெறுமனே கடற்படை இல்லாத ஹமாஸை அச்சுறுத்துவதற்காக அல்ல. ஈரானுடனான போர் உட்பட மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதலுக்கு அமெரிக்கா தயாராகி வருகிறது என்பதைக் குறிக்கிறது.

ரஷ்யாவுடனான அமெரிக்காவின் போரின் மத்திய கிழக்கு முன்புறமாகவும், மற்றும் சீனாவிற்கு எதிரான போர்த் திட்டங்களுடன் ஈரானுடன் ஒரு போருக்கான நீண்டகால திட்டங்களை செயல்படுத்தவும் அமெரிக்கா தற்போதைய நெருக்கடியைப் பயன்படுத்துகிறது. சனிக்கிழமையன்று, மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அதன் இராணுவ வளங்களை அமெரிக்கா இரட்டிப்பாக்கும் என்று ஆஸ்டின் அறிவித்துள்ளார். மேலும் USS Dwight D. Eisenhower தலைமையில் இரண்டாவது விமானம் தாங்கி தாக்குதல் கப்பலை இப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.

இந்த தாக்குதல் அணியில், 'வழிகாட்டும் ஏவுகணை கப்பல் USS Philippine Sea, வழிகாட்டும் ஏவுகணை நாசகாரி அழிப்பு கப்பல்களான USS Gravely மற்றும் USS Mason, மற்றும் Air Wing 3 போர்க்கப்பல் அதனுடன் சேர்ந்து ஒன்பது விமான போர்க் கப்பல் அணி உள்ளன' என்று ஒஸ்டின் கூறினார், இந்தப்பிராந்தியத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள USS Gerald R. Ford விமானம் தாங்கி கப்பலுடன் Eisenhower சேர்ந்து கொள்ளும். Ford CSG இல் USS Normandy, USS Thomas Hudner, USS Ramage, USS Carney, மற்றும் USS Roosevelt ஆகியவை கப்பல்களும் அடங்கும்' என்று ஒஸ்டின் குறிப்பிட்டார். இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க விமானப்படை F-15, F-16 மற்றும் A-10 போர் விமானங்களை கொண்டுள்ள கப்பல் அணியையும் இப்பிராந்தியத்தில் நிறுத்துவது குறித்து அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் வரைபடத்தில், பச்சை நிறத்தில் பாலஸ்தீனப் பகுதிகள் மற்றும் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகள் [AP Photo]

அணுசக்தியால் இயங்கும் ஒவ்வொரு விமானத் தாங்கிக் கப்பலின் தாக்குதல் குழுவிலும் மொத்தம் 8,000 மாலுமிகள் உள்ளனர் அதில் விமானப்படையினர் மற்றும் கடற்படையினர் உள்ளனர், அதாவது ஒரு வார காலத்திற்குள் 15,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் மத்திய கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் டசின் கணக்கான இதர விமானங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவு பணியாளர்களும் அதில் உள்ளனர்.

இந்தத் திட்டங்களை ஒரு தொப்பியை தூக்கிவீசுவது போல் செயல்படுத்தியிருக்க முடியாது. நெதன்யாகு அரசாங்கமும் அமெரிக்க உளவு அமைப்புகளும் ஹமாஸின் தாக்குதல் குறித்து ஓரளவு மேம்பட்ட அறிவைக் கொண்டிருந்தன என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. இருப்பினும் அதன் எழுச்சியின் பரிமாணத்தைக் கண்டு அவை அதிர்ச்சி அடைந்தன. எவ்வாறெனினும், தீவிரமடைந்து வரும் உள்நாட்டு சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை திசைதிருப்புவதற்காக, இஸ்ரேலிய ஆட்சி பாலஸ்தீனியர்களுக்கு எதிராக ஒரு முழுமையான போருக்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது.

அமெரிக்கா தனது பங்கிற்கு, ஈரானுக்கு எதிரான விரிவாக்கத்திற்கான தனது சொந்த திட்டங்களை செயல்படுத்த இந்த நெருக்கடியைப் பயன்படுத்தியுள்ளது.

விமானம் தாங்கி கப்பல்கள் ஈரானை குறிவைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். வெள்ளியன்று, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், 'இந்த மோதல் தீவிரமடையும் அபாயம் உள்ளது, அது நிச்சயமாக ஈரானின் தலையீட்டுடன் இஸ்ரேலின் வடக்கில் ஒரு இரண்டாவது போர் முன்னரங்கு திறக்கப்படுகிறது. அதனால்தான் மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதிக்கு ஒரு விமானம் தாங்கிக் கப்பலை ஜனாதிபதி மிகவும் விரைவாகவும் தீர்க்கமாகவும் நகர்த்தினார். வளைகுடாவிற்குள் விமானங்களை தடுத்து நிறுத்தல் பற்றிய மிகத் தெளிவான செய்தியை அவர் அனுப்ப விரும்புகிறார்' என்று குறிப்பிட்டார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஞாயிறன்று இரவு ஒரு தலையங்கத்தில், 'தெஹ்ரானில் உள்ள அயதுல்லாக்கள் தங்கள் பயங்கரவாத பினாமிகளை விட அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் அணுசக்தி தளங்கள் மற்றும் எண்ணெய் வயல்களும் இலக்கு பட்டியலில் உள்ளன என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.” இந்த கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில், செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஈரானுக்கு எதிராக ஒரு போர் பிரகடனம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை எழுப்பினார், அதை அவர் வெள்ளை மாளிகையுடன் விவாதித்ததாகக் கூறினார்.

'ஈரானை எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து வெளியேற்ற இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும் தீர்மானத்தை அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்வேன். ஈரான், நீங்கள் இந்த போரை தீவிரப்படுத்தினால், நாங்கள் உங்களிடம் வருகிறோம்' என்று அவர் கூறினார்.

60 நிமிடங்கள் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், போரில் இரண்டாவது போர் முன்னரங்கை திறப்பதற்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அரசியல் கட்சியைத் தாக்குவதற்குமான ஆதரவை ஜோ பைடென் குறிப்பிடுகின்றார். 'உள்ளே சென்று தீவிரவாதிகளை ஒழிப்பது, ஹிஸ்புல்லாஹ் வடக்கே இருந்தாலும் தெற்கே ஹமாஸ் என்பது அவசியமான நிபந்தனையாக இருக்கிறது, ஈரான் தொடர்ந்து ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை ஆதரிக்கிறது' என்று பைடென், கூறினார்.

இந்த சூழலில், ஈரானுக்கு எதிரான போரை நியாயப்படுத்த அமெரிக்கா ஒருவித ஆத்திரமூட்டலை அரங்கேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, ஹமாஸ் வசம் உள்ளதாக கருதப்படும் பணயக்கைதிகளை காப்பாற்றுவதற்காக, தற்போதைய நெருக்கடியில் அமெரிக்க துருப்புக்களை போரில் ஈடுபடுத்துவதை நிராகரிக்க முடியாது என்று கூறினார்.

அமெரிக்க துருப்புக்களை தரையில் நிலைநிறுத்துவது என்பது, பணயக் கைதிகளைக் காப்பாற்றுவது பற்றிய விடயம் அல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவர்களின் உயிர்கள் முக்கியமல்ல, மாறாக ஈரானுடன் வளர்ந்து வரும் மோதலில் அமெரிக்க இராணுவத்தை நேரடியாக ஈடுபடுத்துவதை நோக்கமாக கொண்டுருக்கிறது.

ஈரானுக்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்கா பல தசாப்தங்களாக திட்டமிட்டு வருகிறது. செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜனவரி 2002 இல், ஈரானை ஒரு 'தீய அச்சின்' ஒரு பகுதியாக அழைத்த அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ், ஈராக்கையும் அதற்குள் உள்ளடக்கினார். ஈராக்கை அடுத்த ஆண்டு அமெரிக்கா படையெடுத்து ஆக்கிரமித்தது. வெள்ளை மாளிகைக்குள், புஷ் நிர்வாக அதிகாரிகள், 'பையன்கள் பாக்தாத் செல்கிறார்கள், ஆனால் உண்மையான ஆண்கள் தெஹ்ரானுக்குச் செல்கிறார்கள்' என்று கூறுவதை விரும்பினார்கள்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் ஈரானுடனான அமெரிக்க மோதல் மோசமாக உக்கிரமடைந்தது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து, ஈரான் ஜூன் 2019 இல் ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அந்த மாதம், அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானிய இலக்குகள் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார், விமானங்கள் ஏற்கனவே வானில் இருக்கும்போது கடைசி நேரத்தில் அதை அவர் நிறுத்தினார்.

ஜனவரி 2020 இல், ஈரானின் குட்ஸ் படையின் தளபதியும் ஈரானிய இராணுவ ஸ்தாபகத்தின் முக்கிய நபருமான காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றது.

மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போரின் வளர்ச்சியானது, உக்ரேனில், ரஷ்யாவிற்கு எதிரான நீண்ட மற்றும் தீவிரமடைந்து வரும் அமெரிக்க-நேட்டோ போருக்கு இட்டுச் சென்ற அதே கொள்கைகளின் தொடர்ச்சியாகும். ரஷ்யாவை இராணுவரீதியில் தோற்கடிக்கும் நோக்கத்துடனும், ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஒழுங்கமைக்கும் நோக்கத்துடனும் அமெரிக்கா இந்த மோதலைத் தூண்டியது. ரஷ்யாவுக்கு எதிரான போர் சீனாவுடனான ஒரு இராணுவ மோதலுக்கான முன்தயாரிப்பாக பார்க்கப்படுகிறது.

காஸா மக்களுக்கு எதிராக மூர்க்கமான படுகொலைகளைச் செய்வதற்கு இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம், மற்றும் உக்கிரமடைந்து வரும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர்த் திட்டங்கள் என்பன, நடைமுறையில், ஒரு மூன்றாம் உலகப் போரின் ஆரம்ப கட்டங்களை கொண்ட வெடிப்பின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த போர்த் திட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தால் சீர்குலைக்கப்பட்டு வருகின்றன. இது ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு பூகோளரீதியான போராட்ட இயக்கத்துடன் குறுக்கிடுகிறது. கடந்த வார இறுதியில், காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் அணிவகுத்தனர்.

தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலின் விரிவாக்கத்தின் மூலம் பாரியளவிலான பணம் போருக்கு செலுத்தப்படும். இது, ஏற்கனவே அமெரிக்காவிலும் அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும் வளர்ந்து வரும் வேலைநிறுத்த அலையைத் தூண்டியுள்ளது.

இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பின் வெடிப்பு சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிராக வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கு தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச தலைமையைக் கட்டியெழுப்புவது அவசியமாகும், போருக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தோடு இணைக்க வேண்டும்.

Loading