மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
2024 ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) எட்டாவது தேசிய காங்கிரஸில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதன்மையான தீர்மானத்தை இங்கு வெளியிடுகிறோம். காங்கிரஸிற்கு முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள், அறிக்கைகள் மற்றும் பங்களிப்புகள் வருகின்ற வாரங்களில் உலக சோசலிச வலைத்தளத்தில் (WSWS) வெளியிடப்படும்.
1. சோசலிச சமத்துவக் கட்சியும் அதனுடைய வேட்பாளர்களான ஜோசப் கிஷோர் மற்றும் ஜெரி வைட்டும் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சோசலிச, சர்வதேசியவாத மற்றும் புரட்சிகர முன்னோக்கை முன்னெடுப்பதற்காக 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் தலையீடு செய்கின்றனர். சோசலிச சமத்துவக் கட்சிக்கு ஒரு தனியான தேர்தல் வேலைத்திட்டம் கிடையாது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) முன்னோக்கில் வேரூன்றி, அந்த முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட கட்சியினது வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கும், பிரபலப்படுத்துவதற்கும் தேர்தல் பிரச்சாரத்தை அது பயன்படுத்துகிறது.
2. பெப்ரவரியில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை அறிவித்து, அதன் தலைவர் டேவிட் நோர்த் கூறுகையில், இதனுடைய நோக்கமானது “தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை உயர்த்துவதும், முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டுவந்து சோசலிசத்தால் பிரதியீடு செய்யாமல், உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்ற புரிதலை அபிவிருத்தி செய்வதும் ஆகும். இந்த மாபெரும் வரலாற்றுப் பணியை நிறைவேற்ற, உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஐக்கியப்பட்ட போராட்டத்தில் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சக்தியை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்ட, ஒரு பூகோள மூலோபாயத்தை பின்பற்றுவது அவசியம்” என்று தெரிவித்தார்.
3. தற்போதைய உலக நிலைமையில், நிரந்தரப் புரட்சிக் கோட்பாடானது புரட்சிகர மூலோபாயத்தின் இன்றியமையாத தத்துவார்த்த அடித்தளமாக உள்ளது. நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு என்பது ஆரம்பத்தில் ரஷ்யாவில் 1905 புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியால் சூத்திரப்படுத்தப்பட்டதாகும். ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் மார்க்சிச சர்வதேசியவாதத்தை அதன் தேசியவாத மறுதலிப்புக்கும் எதிராக 1923-24 இல் தொடங்கப்பட்ட போராட்டத்தின் போக்கில் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது. லியோன் ட்ரொட்ஸ்கி வலியுறுத்துகையில் 1) அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்திற்கான மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்குமான போராட்டம், தொழிலாளர்களின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில் இருந்தும் சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் இருந்தும் பிரிக்கப்பட முடியாது; மற்றும் 2) சோசலிசத்திற்கான போராட்டமானது, உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை பூகோளரீதியில் அணிதிரட்டுவதை நோக்கிய நோக்குநிலை கொண்ட ஒரு சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது.
4. முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் எவ்வளவுதான் தீவிரமாக ஏதாவதொரு நெருக்கடியில் அவற்றை வெளிப்படுத்திக் கொண்டாலும், தேசிய சூழலில் கட்சிப் பணியின் அழுத்தங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், புரட்சிகரக் கட்சியின் பணியானது, நிரந்தரப் புரட்சி கோட்பாட்டில் விரிவுபடுத்தப்பட்ட சர்வதேசியவாத மூலோபாயத்தில் வேரூன்றியிருக்கும் மட்டத்திற்கு மட்டுமே சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.
5. 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் இணையற்ற பூகோள மற்றும் உள்நாட்டில் தொடரும் நெருக்கடிக்கு மத்தியில் கட்டவிழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடியின் அடிப்படைக் கூறுகள், 2024 ஜனவரி 3 மற்றும் ஜனவரி 6 க்கு இடையில் பிரசுரிக்கப்பட்ட “தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புதல்“ என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. சோசலிச சமத்துவக் கட்சி அதன் தேர்தல் பிரச்சாரத்தின் தீர்க்கமான அரசியல் அடித்தளமாக இந்த அறிக்கையை வழிமொழிகிறது.
6. 1945 இல் இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற பின்னர், ஒரு பேரழிவுகரமான மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல் இன்று இருப்பதைப் போல இந்தளவுக்கு உடனடியாக ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் இருந்ததில்லை. அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரை ஆக்ரோஷமாக தீவிரப்படுத்தி வருகின்றன, இப்போது அது மூன்றாவது ஆண்டில் உள்ளது. வெள்ளை மாளிகை மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளின் முழு ஆதரவுடன், பாசிசவாத இஸ்ரேலிய ஆட்சி, காஸா மக்கள் மீதான அதன் இடைவிடாத படுகொலையைத் தொடர்கிறது, இது ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் சூழ்ந்துகொண்டு ஒரு பிராந்திய போராக அபிவிருத்தி அடைய அச்சுறுத்துகிறது. இப்போது ஐந்தாவது ஆண்டாக பரவிக்கொண்டிருக்கும் COVID-19 பெருந்தொற்று நோய், 1.4 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களையும் உலகளவில் 27 மில்லியன் மக்களினதும் உயிர்களைக் கொன்றுள்ளது. அதீத சமூக சமத்துவமின்மை மற்றும் ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கு மத்தியில், முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள் உலகளவில் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி கூர்மையாக நகர்ந்து வருகின்றன.
7. உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி அதன் மிக ஒருமுகப்பட்ட வெளிப்பாட்டை அமெரிக்காவில் காண்கிறது. அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயகம் அதன் கடைசிக் கால்களில் நிற்கிறது. ஆளும் வர்க்கத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான குடியரசுக் கட்சி, நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு முன்பாக ஜனாதிபதி தேர்தல் முடிவையும் ஒட்டுமொத்த அரசியலமைப்பு ஒழுங்கமைப்பையும் தூக்கியெறியும் நோக்கில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தூண்டிவிட்ட முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில், அதிகரித்தளவில் வெளிப்படையான ஒரு பாசிசவாத குணாம்சத்தைப் பெற்றுள்ளது. ஏகாதிபத்திய போரின் பரந்த விரிவாக்கத்திற்கு இருகட்சி ஆதரவைப் பெறுவதற்காக குடியரசுக் கட்சியினரின் இந்த அரசியல் மாற்றத்தை மூடிமறைப்பதற்கே ஜனநாயகக் கட்சி மைய முன்னுரிமை கொடுத்துள்ளது.
8. அதேநேரத்தில், அமெரிக்காவில் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் நெருக்கடி உலகளாவிய விளைவுகளைக் கொண்டுள்ளது. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்பட்ட 2018 மே தினப் பேரணியில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு குறிப்பிட்டது:
ஆளும் உயரடுக்குகள் அவற்றின் அனைத்து செல்வவளம் மற்றும் அதிகாரம் இருந்தாலும், ஒரு நெருக்கடியில் இருந்து அடுத்த நெருக்கடிக்கு ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் ட்ரம்பின் எழுச்சியானது, முதலாளித்துவ வர்க்கத்தின் உலகளாவிய சீரழிவின் மிகவும் வெளிப்படையாகத் தெரிகின்ற கொடூரமான வெளிப்பாடாகும். ஆனால் ட்ரம்பின் எழுச்சி வெறுமனே அடையாள முக்கியத்துவமுடையது மட்டுமல்ல. இருபதாம் நூற்றாண்டு முழுவதிலும், குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், அமெரிக்காவானது உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஸ்திரப்பாடு மற்றும் உயிர்பிழைப்புக்கு இறுதி உத்தரவாதமளிக்கும் பாத்திரத்தை வகித்தது. அவர்களால் இனியும் அந்தப் பாத்திரத்தை வகிக்க முடியாது.
பைடென் நிர்வாகத்தின் நான்காண்டுகள் உட்பட கடந்த ஆறு ஆண்டுகள், அமெரிக்காவில் வர்க்க ஆட்சியின் நெருக்கடியை ஆழப்படுத்த மட்டுமே செய்துள்ளன.
9. ஏகாதிபத்திய போர் மற்றும் எதேச்சாதிகாரத்தை உருவாக்கும் அதே நெருக்கடி தான் சமூகப் புரட்சிக்கான உந்துதலையும் உருவாக்குகிறது. காஸா இனப்படுகொலைக்கு எதிரான பூகோள ஆர்ப்பாட்டங்கள் உட்பட ஏகாதிபத்திய போருக்கு எதிரான பல வெகுஜன எதிர்ப்புகளையும், வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான வேலை நிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கடந்த இரண்டு ஆண்டுகள் கண்டுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் பரந்த பெருந்திரளில், சமூக கோபமும் அதிருப்தியும் அதிகரித்து வருகிறது. எவ்வாறிருப்பினும், இந்த புறநிலை நிகழ்ச்சிப்போக்கை சோசலிசத்திற்கான ஒரு நனவான இயக்கமாக மாற்றுவது தானாக நடந்து முடிந்துவிடாது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதே மனிதயினத்தின் தலைவிதி தங்கியுள்ள தீர்மானகரமான மூலோபாய பிரச்சினையாகும்.
10. ஆகவே தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் இன்றியமையாத அரசியல் பிரச்சினைகளை விளக்குவதற்கும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) அபிவிருத்தி செய்வதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஒழுங்கமைப்பை ஊக்குவிப்பதற்கும், கல்லூரி வளாகங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பைக் கட்டியெழுப்புவதற்கும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சிக்குள் இணைப்பதற்கும் சோசலிச சமத்துவக் கட்சியானது தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய வெடிப்பு
11. முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய நெருக்கடி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உந்தப்பட்ட ஏகாதிபத்தியப் போரின் வெடிப்பில் குவிந்துள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோவில் உள்ள அதன் நட்பு நாடுகளின் முழு ஆதரவுடன், இஸ்ரேல் 10 மாதங்களாக காஸாவில் பாலஸ்தீனிய மக்களை கொடூரமான இனப்படுகொலை மற்றும் நிர்மூலமாக்கல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 40,000 ஐ நெருங்கி வருகிறது, அதே அதேவேளையில் உண்மையான எண்ணிக்கையானது, மருத்துவ இதழான தி லான்செட்டின் படி, 186,000 அல்லது அதற்கும் அதிகமாகும்.
12. காஸா இனப்படுகொலை ஒரு பரந்த பிராந்திய மற்றும் உலகளாவிய போரின் ஒரு கூறுபாடாகும். கடந்த ஜூலை கடைசியில் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட இராணுவத் தலைவரையும், தெஹ்ரானில் இருக்கும்போது ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் ஒருவரையும் இஸ்ரேல் படுகொலை செய்தமையானது ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய நேரடிப் போர் ஆபத்தை ஒரு புதிய மட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இனப்படுகொலையின் ஆரம்பத்தில் இருந்தே, அமெரிக்க இராணுவ மற்றும் அரசியல் அதிகாரிகள், இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கான தங்கள் ஆதரவு மத்திய கிழக்கில் ரஷ்யா மற்றும் சீனாவின் பிரதான நட்பு நாடான ஈரானுடன் மோதலுக்கான முன்னேறிய தயாரிப்புக்களுடன் இணைந்துள்ளது என்பதை தெளிவுபடுத்தினர்.
13. ஜனவரி 3 ஆசிரியர் குழு அறிக்கை விளக்குவதைப் போல, “காஸா இனப்படுகொலையானது ஒரு தனித்துவமான அத்தியாயம் அல்ல. அது இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுடன் தொடர்புடைய விதிவிலக்கான நிலைமைகளின் விளைவு எனவும், சியோனிச திட்டத்தின் உள்ளார்ந்த பிற்போக்கு தன்மையினதும் அதன் இனவாத மற்றும் வெளிநாட்டவர் விரோத-தேசியவாத நம்பிக்கைகளில் மூழ்கியுள்ள அதன் சித்தாந்தத்தின் விளைவு எனவும் மிகவும் நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது. பிந்தைய கூறுகள் நிச்சயமாக, இஸ்ரேலிய ஆட்சியின் நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கின்றன. ஆனால், அதன் ஏகாதிபத்திய நிதியாளர்கள் மற்றும் ஆயுத விநியோகஸ்தர்களின் முழு ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் தற்போதைய போரின் கட்டுப்பாடற்ற மூர்க்கத்தனத்தை, உலக ஏகாதிபத்திய மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையின் முறிவின் பின்னணியில் மட்டுமே புரிந்து கொள்ளவும் தெளிவுபடுத்தவும் முடியும்.”
14. காஸா இனப்படுகொலையானது ரஷ்யாவுக்கு எதிரான இரத்தம் தோய்ந்த அமெரிக்க-நேட்டோ பினாமிப் போருக்கு மத்தியில் கட்டவிழ்ந்து வருகிறது. காஸாவில் நடைபெறும் போரானது இனப்படுகொலையை ஏகாதிபத்தியக் கொள்கையின் ஒரு ஏற்கத்தக்க கருவியாக இயல்பாக்கியுள்ள நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் ஆழமடைந்து வருவதானது, இந்த மோதல் தந்திரோபாய மற்றும் மூலோபாய அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதற்கான உயர்ந்த மட்ட சாத்தியக்கூறையும், ஏன் மெய்பிக்கக்கூடிய தன்மையும் கூட நடைமுறையளவில் ஏற்றுக்கொள்வதுடன் கைகோர்த்துள்ளது. 2022 பெப்ரவரியில் போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் ரஷ்யாவை குறிவைத்து, உக்ரேனுக்கு நீண்ட தூர ஆயுதங்களை வழங்குவது மற்றும் நேட்டோ துருப்புகளை நேரடியாக களத்தில் இறக்குவது குறித்து முன்னேறிய விவாதங்களை நடத்துவது உட்பட தொடர்ச்சியாக போரை விரிவாக்கி வருகின்றன. உக்ரேனில் பினாமிப் போருக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தூண்டுதல், அமெரிக்காவின் பிரதான புவிசார் அரசியல் போட்டியாளராக கருதப்படும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கான தயாரிப்புகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது.
15. தற்போதைய நெருக்கடியானது சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து வந்த மூன்று தசாப்த கால முடிவில்லா போரின் விளைபொருளாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பனிப்போர் போட்டியாளர் கலைக்கப்பட்டதை, அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்ட-கால வீழ்ச்சியை எதிர்கொள்ள தனது போட்டியற்ற இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக விளக்கியது. 1990-1991 இல் ஈராக்கிற்கு எதிரான முதல் போர், அதனைத் தொடர்ந்து 1999 இல் சேர்பியாவுக்கு எதிரான போர், மற்றும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்” பாகமாக, 2001 இல் ஆப்கானிஸ்தான் படையெடுப்பு, 2003 இல் ஈராக் மீதான இரண்டாவது படையெடுப்பு, லிபியா மீதான குண்டுவீச்சு மற்றும் 2011 இல் சிஐஏ ஆல் கட்டவிழ்த்து விடப்பட்ட சிரியாவில் உள்நாட்டு போர் ஆகியவை நடந்தன. ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு முன்னதாக, 2014 இல், ஒரு ரஷ்ய-ஆதரவு அரசாங்கத்தைத் தூக்கியெறிவதற்கான நடவடிக்கையால், கியேவில் அமெரிக்காவின் ஆதரவுடனும் பாசிசவாத சக்திகளின் தலைமையிலும் ஆட்சி மாற்றம் நடந்தேறியிருந்தது.
16. ஜூலை 2016 இல் வெளியிடப்பட்ட ஒரு கால் நூற்றாண்டு போர்: உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதல் 1990-2016 நூலுக்கான முன்னுரை குறிப்பிடுகிறது: “உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முனைவின் மூலோபாய தர்க்கம், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலான நவகாலனித்துவ நடவடிக்கைகளுக்கும் அப்பால் விரிவடைகிறது. நடந்து வரும் பிராந்திய போர்கள், ரஷ்யா மற்றும் சீனாவுடன் அமெரிக்காவின் துரிதமாக தீவிரமடைந்து வரும் மோதலின் கூறுபாடுகளாக உள்ளன.” இது தற்போது நடைபெற்று வருகிறது.
17. காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டமானது, ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்கப்பட முடியாது. சோசலிச சமத்துவக் கட்சி ஜூலை 24, 2024 அன்று வாஷிங்டன் டி.சி.யில் நடந்த அதன் பேரணியில் அடிப்படையாக கோடிட்டுக் காட்டப்பட்ட கோட்பாடுகளை உறுதிப்படுத்துகிறது:
- போருக்கான இன்றியமையாத காரணமானது முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையிலும், இராட்சத பெருநிறுவனங்களின் உலகளாவிய நிதியியல் நலன்களிலும், மற்றும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஈவிரக்கமற்ற முனைப்பிலும் தங்கியுள்ளது.
- போருக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் அளப்பரிய சக்தியை அணிதிரட்டுவதும், ஏகாதிபத்தியப் போரின் ஆளும் வர்க்கக் கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் சுயாதீனமாக்குவதும் அவசியமாகும்.
- இனப்படுகொலைக்கும், போருக்கும் எதிரான இயக்கம் சர்வதேச இயக்கமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களை, அவர்களின் பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் உலகளவில் ஐக்கியப்படுத்த வேண்டும்.
18. இந்தப் பேரணியில் டேவிட் நோர்த் கூறிய அவரின் கருத்துக்களில் குறிப்பிட்டதைப் போல, “முதலாளித்துவத்தின் முடிவு பற்றி பேசாமல் யுத்தத்தின் முடிவு பற்றி பேச விரும்புபவர்கள், அமைதியாக இருந்து, உலகின் ஏனைய பகுதிகளுக்கு தமது அறியாமையை பரப்பாமல் இருப்பதுவே சிறந்ததாகும்.”
ட்ரம்ப், பாசிசம் மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி
19. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஜனநாயக ஆட்சி வடிவங்களது முன்னொருபோதும் இல்லாத நெருக்கடிக்கு மத்தியில் 2024 தேர்தல் பிரச்சாரம் கட்டவிழ்ந்து வருகிறது. ஆளும் வர்க்கம் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி திரும்புவதற்கான அடிப்படை புறநிலை காரணங்களாவன: 1) விரிவடைந்துவரும் வரும் உலகளாவிய ஏகாதிபத்திய போர்; மற்றும் 2) சமூக சமத்துவமின்மையின் தீவிர வளர்ச்சி.
20. தற்போதைய தேர்தல்கள் ஜனவரி 6, 2021 இன் பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் நிழலில் கட்டவிழ்கின்றன. இதன் போது தனது தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப், பைடெனிடம் தோற்றதை காங்கிரஸ் உறுதிப்படுத்துவதை நிறுத்தவும், அரசியலமைப்பை ஒழிக்கவும் மற்றும் ஒரு தனிநபர் சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கவும் முனைந்தார். டிரம்ப் கடந்த மூன்றரை ஆண்டுகளை குடியரசுக் கட்சி மீதான தனது “MAGA” (Make America Great Again, அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக ஆக்குவோம்) இயக்கத்தின் மேலாதிக்கத்தை வலுப்படுத்த பயன்படுத்தி வந்துள்ளார்.
21. ஜூலை 21 அன்று உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு, “பைடென் பிரச்சாரத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்,” என்ற அதன் அறிக்கையில் பின்வருமாறு எழுதியது:
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அரசியலமைப்பை தூக்கியெறிந்து, பைடென் மற்றும் ஹாரிஸுக்கு அதிகாரம் மாற்றப்படுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததால், ட்ரம்ப் அவமானத்துடன் பதவியை விட்டு வெளியேறினார். ஆனால் இன்று, எலோன் மஸ்க் போன்ற பில்லியனர்கள் உட்பட, அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் கணிசமான பகுதியினரின் ஆதரவை ட்ரம்ப் பெற்றுள்ளார். ஒரு பாசிச ஆட்சிக்கான சாத்தியம், என்பது வெகுதூரத்தில் இருப்பதாக ஊகிக்கக்கூடிய விஷயம் அல்ல. இது ஒரு அரசியல் யதார்த்தம் ஆகும்.
22. தான் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால், “முதல் நாளில்” ஒரு சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்றும், அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், “நீங்கள் இனி [வாக்களிக்க] வேண்டியதில்லை” என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். புலம்பெயர்ந்தவர்கள் மீதான ஒரு பாசிசவாத தாக்குதலை அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையத்தில் வைத்துள்ளார். புலம்பெயர்ந்தவர்கள் “நமது நாட்டின் இரத்தத்தில் நஞ்சூட்டிக் கொண்டிருக்கிறார்கள்,” என்ற பாசிசவாத சொற்றொடர் ஹிட்லரின் எனது போராட்டம் (Mein Kampf) என்ற புத்தகத்தில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்டது. பெருந்திரளான கைதுகளை நடத்த தேசிய பாதுகாப்புப் படையை அணிதிரட்டவும், மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை அடைத்து வைக்க “பரந்த தடுப்பு மையங்களை” கட்டியெழுப்பவும், அமெரிக்காவில் பிறக்கும் பல பத்தாயிரக் கணக்கான குழந்தைகளை நாடற்ற மக்களாக்கும் வகையில் பிறப்பால் வரும் உரிமையான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரவும் அவர் சூளுரைத்துள்ளார்.
23. ட்ரம்பின் எதேச்சாதிகாரவாதம் மற்றும் போலி-ஜனரஞ்சகவாதத்தின் கலவையை ஒரு பாரிய சமூக எதிர்புரட்சியைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு கருவியாக பார்க்கும் பெருநிறுவன மற்றும் நிதியியல் தன்னலக்குழுக்களின் நலன்களை குடியரசுக் கட்சியின் வேலைத்திட்டம் வெளிப்படுத்துகிறது. அதேநேரத்தில், அரசியல் ஸ்தாபகத்திற்குள் எந்த வெளிப்பாட்டையும் காணாத பரந்த-அடிப்படையிலான அதிருப்தியை ட்ரம்பால் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முடிகிறது.
24. ஜூலை 21 அன்று உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு அறிக்கை விளக்கியவாறு, “உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை முன்னேற்றுவிக்கக் கூடிய சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுடன் எந்தவிதமான குறிப்பிடத்தக்க தொடர்பையும் ஜனநாயகக் கட்சி நீண்டகாலத்திற்கு முன்னரே கைவிட்டுவிட்டது. அது வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை முகமைகளின் ஒரு கட்சியாகும். அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இது, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட பிரிவுகளின் நலன்களை முன்னெடுக்கும் நோக்கம் கொண்ட அடையாள அரசியலை ஊக்குவிப்பதுடன் இணைந்துள்ளது.”
25. பதவிக்கு வந்த பின்னர் ஜனநாயகக் கட்சி மற்றும் பைடென் நிர்வாகத்தின் மைய முன்னுரிமை ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தூண்டுவதும் பின்னர் தொடருவதும் ஆகும். போரைத் தொடர்வதற்காகவே ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியுடன் ஒரு இரு கட்சி உடன்பாட்டை நாடி வருவதுடன், தொடர்ந்தும் முயன்று வருகின்றனர். ஜனவரி 6, 2021 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து தனது முதல் உரையில், பைடென் ஒரு “வலுவான” குடியரசுக் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். புலம்பெயர்ந்தோர்-விரோத சட்ட மசோதாவை நிறைவேற்ற நிர்வாகம் ட்ரம்புடன் ஐக்கியப்பட முனைந்துள்ளதுடன், அத்துடன் காங்கிரஸின் ஜனநாயகக் கட்சியினர் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு பத்து பில்லியன் கணக்கான நிதியைப் பெறுவதற்கு, பிரதிநிதிகள் அவையின் அதிதீவிர வலதுசாரி சபாநாயகர் மைக் ஜோன்சனை ஆதரித்தனர்.
26. உள்நாட்டில் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் கொள்கைக்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்வதற்கும் ஜனநாயகக் கட்சி முன்னெப்போதையும் விட அதிகமாக நேரடியாக தொழிற்சங்க இயந்திரத்துடன் ஒரு பெருநிறுவன கூட்டணியைச் சார்ந்துள்ளது. AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவத்தை தனது “உள்நாட்டு நேட்டோ” என்று பைடென் குறிப்பிட்டபோது இதைத்தான் அவர் அர்த்தப்படுத்தினார். அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் மற்றும் பிற போலி-இடது அமைப்புகளால் ஊக்குவிக்கப்படும் ஷான் ஃபெயின் தலைமையிலான ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்க (UAW) இயந்திரம் ஒரு மையப் பாத்திரம் வகித்து வருகிறது. ஃபெயினின் கீழ், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கமானது (UAW) பைடெனையும் பின்னர் ஹாரிஸையும் ஆதரித்து வருகிறது. ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கமானது (UAW) தொழிற்சங்கங்களை “ஜனநாயகத்தின் ஆயுதக்கிடங்காக” ஊக்குவித்துள்ளது. இதன் உண்மையான அர்த்தம், இது ஏகாதிபத்தியம் மற்றும் போரின் ஆயுதக் களஞ்சியம் என்பதாகும்.
27. ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பதன் மூலம் அதி தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சியை எதிர்கொள்ள முடியும் என்ற கூற்றை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது. நவம்பர் தேர்தலில் ட்ரம்ப் தோற்கடிக்கப்பட்டாலும் —இன்னுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்த அவர் தவறினாலும் கூட— அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புறநிலை பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகள், ட்ரம்ப்பாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், ஆளும் உயரடுக்கை ஒரு சர்வாதிகாரத்தை நோக்கித் தள்ளுகின்றன. ட்ரம்ப்பிசம் என்பது முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் ஜனநாயகரீதியில் தீர்க்கப்பட முடியாத ஒரு அமைப்புரீதியான நெருக்கடியின் ஒரு அறிகுறியாகும். லெனின் 1916 அக்டோபரில், முதலாம் உலகப் போரின் மத்தியில், பெப்பிரவரி புரட்சி வெடிப்பதற்கு வெறும் நான்கு மாதங்களுக்கு முன்னர் எழுதியதைப் போல: “எல்லா வழிகளிலும் அரசியல் பிற்போக்குத்தனம் என்பது ஏகாதிபத்தியத்தின் ஒரு சிறப்பியல்பான குணாம்சமாகும்.” [ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும், தொகுப்பு நூல்கள், தொகுதி 23]
28. தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டாமல் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவது சாத்தியமற்றது என்று சோசலிச சமத்துவக் கட்சி எமது தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும் எச்சரிக்கும். அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் மற்றும் பேர்ணி சாண்டர்ஸ் போன்ற பிரமுகர்கள் உட்பட ஜனநாயகக் கட்சியின் போலி-இடது ஆதரவாளர்கள், குறிப்பாக இருகட்சி அமைப்புமுறையின் இரும்புப்பிடியைப் பேணுவதிலும் அவ்விதத்தில் பாசிச வலதைப் பலப்படுத்துவதிலும் ஒரு மோசமான பாத்திரம் வகித்து வருகின்றனர்.
29. ட்ரம்ப்பிசத்தின் தோற்றமானது ஒரு நீடித்த அரசியல் நிகழ்ச்சிப்போக்கின் விளைபொருளாகும். 2000ம் ஆண்டு தேர்தல் திருடப்பட்ட நேரத்தில், ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிற்கு தேர்தலை ஒப்படைத்த உச்ச நீதிமன்றத்தின் முடிவும், இந்த முடிவை ஜனநாயகக் கட்சி ஏற்றுக்கொண்டதும், ஆளும் வர்க்கத்தில் பூர்ஷ்வா ஜனநாயகத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க ஆதரவு அடித்தளம் இல்லை என்பதை நிரூபித்துள்ளது என்று சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியது.
30. ஜூலை 1 அன்று, ட்ரம்ப் எதிர் அமெரிக்கா வழக்கில், அரசியலமைப்பை மீறுவதற்கும் எந்தவொரு சட்டத்தையும் மீறுவதற்கும் ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரங்கள் இருப்பதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜனாதிபதி பதவியில் அதிகாரக் குவிப்பின் வரலாற்று வேர்களைப் பகுப்பாய்வு செய்கையில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது (”உச்ச நீதிமன்றமும் ஜூலை 1, 2024 தினத்தின் எதிர்ப்புரட்சியும்“):
ஈரான்-கொன்ட்ரா ஊழலுக்காக ஜனாதிபதி றேகன் எந்த தண்டனையையும் எதிர்கொள்ளவில்லை, அதில் காங்கிரஸ், சட்டத்திற்கு முரணாக ஒரு இரகசிய நிதி நடவடிக்கையின் மூலம் மத்திய அமெரிக்க கொலைப் படைகளை வெள்ளை மாளிகையில் இருந்து செயற்படுத்தியது. ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் பயங்கரவாதத்தின் மீதான போர் என்றழைக்கப்படுவதை நடத்த “நிறைவேற்று அதிகாரக் கோட்பாட்டைக்” கையிலெடுத்தார். அது, ஈராக்கில் அபு கிரைப் மற்றும் கியூபாவில் குவாண்டநாமோ வளைகுடா உட்பட சர்வதேச சித்திரவதைச் சிறை முகாம்களில் சந்தேகத்திற்குரியவர்களை பலவந்தமாக காணாமல் ஆக்குவதற்கு ஒழுங்கமைக்க அனுமதித்ததாக அவரது நிர்வாகம் கூறியது. ஜனாதிபதி ஒபாமா 2010 இல், எதிரி போராளிகள் என்று அவர் அறிவிக்கும் குடிமக்களைப் படுகொலை செய்வதற்கான தலைமை நிர்வாகியின் தனியுரிமையை வலியுறுத்தினார் (ட்ரம்ப் மீதான தனது இணக்கமான கருத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆமி கோனி பாரெட்டால் சாதகமாக மேற்கோள் காட்டப்பட்ட ஒரு முன்னுதாரணம்). ஜனாதிபதி ட்ரம்ப், 2020 இல், வாஷிங்டன் மாநிலத்தில் ஒரு அமெரிக்க எதிர்ப்பாளரான மைக்கேல் ரெய்னோஹலை படுகொலை செய்ய உத்தரவிட்டதாக வெளிப்படையாக பெருமைபீற்றிக் கொண்டார்.
31. “சுதந்திரம் மற்றும் ஜனநாயகம்” குறித்த அனைத்து அரசியல் வாய்வீச்சுக்களுக்கும் அப்பால், அமெரிக்க அரசியல் அமைப்புமுறையானது, நிதியியல் மற்றும் பெருநிறுவன தன்னலக்குழு தட்டுக்களின் இரும்புப்பிடியை உறுதிப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாரியளவில் கட்டுப்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு அணுகல் சட்டங்கள்; மறைமுக தேர்தல் வாக்குப் பொறிமுறை (தேர்தல் காலேஜ்) போன்ற ஜனநாயகமற்ற நிறுவனங்கள்; அமெரிக்க செனட்டில் சிறிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட விகிதாசாரமற்ற அதிகாரம்; தேர்தல் அமைப்பில் பணத்தின் ஆதிக்கம், தேர்தலுக்கு நிதி சேகரிக்கும் பிரச்சாரக் குழுக்களுக்கு (super-PACS) வரம்பற்ற நிதியளிப்பு உட்பட; வெகுஜன வாக்கெடுப்பு இல்லாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு வாழ்நாள் நியமனம் வழங்குதல்—இவைகள் அனைத்தும் பரந்த பெரும்பான்மை மக்களின் நலன்களை அரசியல் வெளிப்பாட்டில் இருந்து விலக்கி வைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
32. பெருநிறுவன மற்றும் நிதியியல் தன்னலக்குழு தட்டுக்களின் செல்வவளம் மற்றும் தனிச்சலுகைகள் மீதான ஒரு நேரடித் தாக்குதல் நடத்தாமல் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. அமெரிக்காவில் விரல்விட்டு எண்ணக்கூடிய பில்லியனர்கள் சாதனையளவுக்கு 5.2 ட்ரில்லியன் டாலர்கள் செல்வவளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். உயர்மட்ட 10 சதவீதத்தினர் மொத்த செல்வ வளத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டிருக்கின்றன அதேவேளையில், கீழ் உள்ள பாதிப்பேர் வெறும் 2.6 சதவீதத்தை மட்டுமே சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர்.
33. ஜனவரி 5 அன்று உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் அறிக்கை விளக்குவதைப் போல, “தனிநபர் செல்வக் குவிப்பானது, அதன் சொந்த உரிமையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கிற்குச் சொந்தமான ஒரு சிறிய எண்ணிக்கையிலான மாபெரும் குழுமங்களில் (mega conglomerates) பிரமாண்டமான அளவு பொருளாதார அதிகாரம் குவிந்திருப்பதற்கு அது இரண்டாம் நிலையானதும், அதனுடன் பின்னிப்பிணைந்துள்ளதுமாகும்.” இராட்சத வங்கிகள், தனியார் முதலீட்டு நிதிகள் மற்றும் தனியார் பங்கு நிறுவனங்களும் டிரில்லியன் கணக்கான டாலர்களைக் கட்டுப்படுத்துகின்ற அதே நேரத்தில், பெரிய நிறுவனங்கள் முழுப் பொருளாதாரத்தின் மீதும் ஏகபோகக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன.
34. சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி ஜனநாயகத்துடன் பொருத்தமற்றதாகும்:
வர்க்கம் மற்றும் பொருளாதார அதிகாரத்தின் அடிப்படை கேள்வியைப் புறக்கணித்து —அதாவது, முதலாளித்துவத்தைத் தூக்கிவீசுவதற்காக உலகளவில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான அவசியத்தை அங்கீகரிப்பதைப் புறக்கணித்து— ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மற்றும் பாசிசத்திற்கு எதிராக போராடுவது குறித்த அனைத்து பேச்சுக்களும் சிடுமூஞ்சித்தனமான மற்றும் அரசியல்ரீதியில் பயனற்ற வாய்வீச்சுக்களாகும்.
2024 தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம்
35. கிஷோர் மற்றும் வைட்டின் தேர்தல் பிரச்சாரம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர முன்னோக்கை முன்னெடுக்கிறது. 2010 இல் சோசலிச சமத்துவக் கட்சியின் முதல் தேசிய காங்கிரஸில் ஏற்றுக்கொள்ளப்பட்ட “உலக முதலாளித்துவத்தின் நிலைமுறிவும் அமெரிக்காவில் சோசலிசத்திற்கான போராட்டமும்” என்ற ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ள அடிப்படை நிலைப்பாடுகளை இந்த காங்கிரஸ் மீள்உறுதிப்படுத்துகிறது. இதில் அடங்குபவை:
36. தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக உரிமைகள். ஒரு சிக்கலான நவீன சமூகத்தில் வாழ்வதற்கு இன்றியமையாத சமூக உரிமைகள் இருக்கின்றன, ஆகவே அவைகள் “பறிக்க முடியாதவை” என்ற கருத்தை தொழிலாள வர்க்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிகிறது. இந்த உரிமைகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: வேலைக்கான உரிமை, வாழத்தக்க வருமானத்திற்கான உரிமை, ஓய்வுக்கான உரிமை, கண்ணியமான மற்றும் கட்டுப்படியாகும் வீட்டு வசதிக்கான உரிமை, அடிப்படை பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் போக்குவரத்துக்கான உரிமை, உயர்தர சுகாதாரப் பராமரிப்புக்கான உரிமை, பாதுகாப்பான ஓய்வூதியத்திற்கான உரிமை, கல்விக்கான உரிமை, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலுக்கான உரிமை மற்றும் கலாச்சாரத்திற்கான உரிமை ஆகும்.
நவீன வாழ்க்கைக்கு இன்றியமையாத இந்த உரிமைகள், பொருளாதார சக்தியின் ஒரு அடிப்படை மறுஒழுங்கமைப்பு மற்றும் அமெரிக்காவிற்குள் செல்வ வளத்தை மறுபகிர்வு செய்வதன் மூலமாக மட்டுமே அடையப்பட முடியும்.
பல தலைமுறை தொழிலாளர்களின் உழைப்பால் தோற்றுவிக்கப்பட்ட பரந்த செல்வம் ஒரு சில சலுகை படைத்தவர்களின் கரங்களில் இருந்து பறித்தெடுக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக மக்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
37. வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல். வங்கிகளும் ஏனைய பெரும் நிதிய நிறுவனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, சிறு சேமிப்பாளர்களுக்கு முழு பாதுகாப்பளிக்கப்பட்டு, பொது உடைமையின் கீழ் கொண்டுவரப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டும். இது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வறுமையை அகற்றுவதற்கும் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பொதுப்பணித் திட்டத்திற்கு மாபெரும் இருப்புக்களை கிடைக்கப் பெறச் செய்யும்.
38. பெருநிறுவனங்கள் தேசியமயமாக்கப்படுதல். விரல்விட்டு எண்ணக்கூடிய பிரம்மாண்டமான பெருநிறுவனங்கள் பொருளாதாரத்தின் பெரும் பிரிவுகளைக் கட்டுப்படுத்துகின்றன. அவைகள் தனியார் இலாபத்திற்கும் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களின் கோரிக்கைகளுக்கும் அடிபணியச் செய்யப்படுகின்றன. 10 பில்லியன் டாலர்கள் அல்லது அதற்கு மேலான மதிப்புள்ள தனியாருக்கு சொந்தமான தொழில்துறை, உற்பத்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் அனைத்தும் பொது உடைமை நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும், சிறிய பங்குதாரர்களுக்கு முழு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும் அனைத்து ஓய்வூதிய மற்றும் சுகாதார நிதி முதலீடுகளுக்கும் உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும். தொலைத்தொடர்பு, சமூக ஊடகங்கள், விவசாயம், கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து உட்பட சமூகத்தின் அடிப்படை செயல்பாட்டிற்கு இன்றியமையாத தொழில்துறைகளும் பொது உடைமை மற்றும் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
இதன் அர்த்தமானது அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பதல்ல. மில்லியன் கணக்கான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு நம்பத்தகுந்த கடன் ஆதாரங்களும் பெருநிறுவனங்களின் நியாயமற்ற ஏகபோக நடைமுறைகளில் இருந்து நிவாரணமும் அவசரமாக தேவைப்படுகின்றன.
39. தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிற்காக. வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது, உற்பத்தி மீது உண்மையான ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிறுவுவதுடன் இணைக்கப்பட வேண்டும். முதலாளித்துவ சந்தையின் அராஜகத்தை பிரதியீடு செய்வதற்கும், சமூகத் தேவையின் அடிப்படையில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுதை உறுதிப்படுத்துவதற்கும், பூகோள உற்பத்தி மற்றும் விநியோகத்தின் ஒரு பகுத்தறிவார்ந்த திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு இது அவசியமான அடிப்படையாகும். வேலை நிலைமைகள், பாதுகாப்பு, ஊதியங்கள், பணியமர்த்தல் மற்றும் வேலை நேரங்களையும் பாதிக்கும் முடிவுகளும் தொழிலாளர்களின் ஜனநாயக கருத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள் மற்றும் புதிய, பெருகிய முறையில் வளர்ச்சியடைந்த தகவல்தொடர்புகள் உட்பட புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகம், அனைவருக்கும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான மாபெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தத் தொழில்நுட்பங்கள் தொழிலாளர்களால், தொழிலாளர்களுக்காக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டால் மட்டுமே அந்த ஆற்றலைப் பயன்படுத்துவது சாத்தியமாகும். உற்பத்தியில் முன்னேற்றம் என்பது, பெருநிறுவன இலாபத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படாமல், வேலை வாரத்தை ஊதிய இழப்பு இல்லாமல் குறைக்கப் பயன்படுத்த வேண்டும்.
40. சமூக சமத்துவத்திற்காக. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் சமத்துவமின்மை அதிர்ச்சியூட்டும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2008-2009 மற்றும் பெருந்தொற்று நோயின் முதல் ஆண்டான 2020 இல், வங்கிகள் பிணையெடுக்கப்பட்ட போது வோல் ஸ்ட்ரீட் மற்றும் செல்வந்தர்களுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது, தசாப்த கால ஒருதலைப்பட்சமான வர்க்கப் போருடன் சேர்ந்து, அடிமட்ட 50 சதவீதத்தினர், 3.78 ட்ரில்லியன் டாலர்கள், அல்லது வெறும் 2.5 சதவீதம் சொந்தமாக வைத்திருக்கும் செல்வவளத்துடன் ஒப்பிடுகையில், உயர்மட்ட 10 சதவீதத்தினரின் செல்வவளம் இப்போது 101.62 ட்ரில்லியன் டாலர்கள், அல்லது தேசிய மொத்தத்தில் 67 சதவீத செல்வவளத்தைக் கொண்டுள்ளனர்.
முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள், சமத்துவமின்மை பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடையது அல்ல என்று வாதிட்டு வருகின்றனர். ஏதோ டிரில்லியன் கணக்கான டாலர்களை உற்பத்தி பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறுவது எந்த பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது போல வாதிடுகின்றனர். நிதியப் பிரபுத்துவத்தின் தொடர்ந்த, தணியாத உந்துதல் இன்னும் கூடுதலான பணத்திற்கான உந்துதல் நாட்டை திவாலாக்கி ஒன்றன்பின் ஒன்றாக ஊக வணிகத்திற்கு எரியூட்டியுள்ளது. நியாயமான ஊதியங்கள் கொடுக்க தங்களிடம் பணம் இல்லை என்று கூறும் அதே பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள், பாரிய வேலை வெட்டுக்களைச் செய்பவர்கள், எல்லாவகையிலும் தங்களுக்கும் தங்கள் உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் மில்லியன் கணக்கான அல்லது பல மில்லியன் டாலர்களை ஒவ்வொரு ஆண்டும் ஊதியங்களாக கொடுக்கிறார்கள்.
சமூக சமத்துவத்தை வளர்ப்பதற்கும், செல்வத்தின் ஒரு தீவிரமான மறுபங்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதில் செல்வந்தர்கள் மீது வரிச்சுமையை சுமத்தும் அதேவேளையில் பரந்த பெரும்பான்மை மக்கள் மீது வரிகளைக் குறைக்கும் ஒரு முற்போக்கான வருமான வரி விதிக்கப்பட வேண்டும். அனைத்து பிரதான பெருநிறுவனங்களின் இலாபங்கள் மீதான வரிகளும் தீவிரமாக அதிகரிக்கப்பட வேண்டும். முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் செல்வவளம் பறிமுதல் செய்யப்பட வேண்டும், அதேவேளையில் குடும்பக் கடன்கள் மற்றும் மாணவர் கடன்களை இரத்து செய்வது உட்பட தொழிலாளர்கள் மீதான நசுக்கும் கடன் சுமையைத் தணிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
சமூக சமத்துவத்திற்கான போராட்டம் என்பது இனம், பாலினம், இனக்குழு, மதம், தேசியரீதியான பிறப்பிடம் அல்லது பாலியல் நோக்குநிலை ஆகியவற்றின் அடிப்படையிலான அனைத்து வகையான பாகுபாடுகளையும் எதிர்ப்பதை உள்ளடக்கியுள்ளது. எவ்வாறிருப்பினும், உண்மையான சமத்துவம் என்பது இனம் அல்லது பிற வகைகளின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை பங்கீடு செய்வதை அர்த்தப்படுத்தாது. முதலாளித்துவ அமைப்புமுறைக்குள்ளும் அரசுக்குள்ளும் அதிகாரம் மற்றும் தனிச்சலுகை பதவிகளுக்கு அதிக அணுகலை நாடும் உயர் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட, இனவாத மற்றும் பாலின அடையாள அரசியலை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது.
41. இராணுவவாதம் மற்றும் போரை எதிர். மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் இருந்து அனைத்து அமெரிக்க துருப்புக்களும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கப்பட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. இஸ்ரேலுக்கான அனைத்து இராணுவ மற்றும் நிதி உதவிகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், அனைத்து ஆயுத ஏற்றுமதிகளும் நிறுத்தப்பட வேண்டும். பரந்த அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை இயந்திரம் மற்றும் அணுஆயுத கையிருப்பு உட்பட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாரிய ஆயுத தளவாடங்கள் அழிக்கப்பட வேண்டும். அத்துடன் நூற்றுக்கணக்கான அமெரிக்க வெளிநாட்டு இராணுவத் தளங்கள் மூடப்பட வேண்டும் மற்றும் நிரந்தர இராணுவம் கலைக்கப்பட வேண்டும். இது அமெரிக்க இராணுவவாதத்தால் சூறையாடப்பட்ட நாடுகளுக்கு இழப்பீடுகளை வழங்கவும் மற்றும் உள்நாட்டில் இன்றியமையாத சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அளப்பரிய ஆதாரவளங்களை விடுவிக்கும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்களில் போரிட்டு உயிரிழக்க, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இழுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக, கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் முன்கூட்டிய திட்டங்களை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது.
42. ஜனநாயக உரிமைகளைப் பாதுகார். சோசலிச சமத்துவக் கட்சியானது ஜனநாயக கோரிக்கைகளை முன்னெடுக்கிறது, இதில் மறைமுக தேர்தல் வாக்குப் பொறிமுறை (தேர்தல் காலேஜ்) அகற்றுதல், மூன்றாவது கட்சிகள் மீதான நியாயமற்ற மற்றும் ஜனநாயகமற்ற வாக்குப்பதிவு அனுமதி கட்டுப்பாடுகளை அகற்றுதல்; சிறிய மாநிலங்களுக்கு விகிதாசாரமற்ற பிரதிநிதித்துவத்தை ஒதுக்கும் செனட் சபையை அகற்றுதல்; மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட மாநிலத்திற்குள் அனைத்து பதவிகளுக்கும் தேர்தல்கள் நடத்துதல் உட்பட ஜனநாயக கோரிக்கைகளை முன்னெடுக்கிறது. கருக்கலைப்புக்கான உரிமை மற்றும் இனம், பாலினம் அல்லது பாலியல் சார்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து தனிநபர்களுக்கும் சமத்துவம் உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் நாங்கள் பாதுகாக்கிறோம்.
தற்போதுள்ள அரச நிறுவனங்களுக்குள் உண்மையான ஜனநாயகத்தை அடைய முடியாது. சமூக மற்றும் பொருளாதார உறவுகள் முழுமையாக மறுசீரமைக்கப்படாமல் இது சாத்தியமில்லை. முதலாளித்துவ அரசின் ஜனநாயக-விரோத அமைப்புகள் மற்றும் ஒடுக்குமுறை அங்கங்கள் (தொழில்முறை இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகள்) ஒழிக்கப்பட்டு, உலகளவில் ஒரு ஜனநாயகபூர்வமான மற்றும் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்காக, தொழிலாளர்களின் கட்டுப்பாடு மற்றும் அதிகாரம் கொண்ட அமைப்புகளால் பிரதியீடு செய்யப்பட வேண்டும்.
43. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகார். பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகள் புலம்பெயர்ந்தோரை பலிகடாவாக்குவதோடு இனவாத மற்றும் பேரினவாத உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன. தொழிலாள வர்க்கத்தின் இந்த ஒடுக்கப்பட்ட பிரிவினரே, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, வீழ்ச்சி அடைந்து வரும் ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்குக் காரணம் என்ற இழிவான பொய்யை அவர்கள் ஊக்குவித்து வருகின்றனர். இது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீது பெருநிறுவன உந்துதலால் மேற்கொள்ளப்படும் தாக்குதலின் விளைவாகும். அவர்களின் நோக்கம் அதிகரித்து வரும் வெகுஜன கோபம் மற்றும் விரக்தியை முதலாளித்துவ அமைப்புமுறையிலிருந்து திசைதிருப்புவதும், ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி பலவீனப்படுத்துவதும் ஆகும்.
அனைத்து புலம்பெயர்ந்தோர்-விரோத சட்டங்களையும் நீக்குவதற்கும், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க ஆணையம் மற்றும் அமெரிக்க எல்லை ரோந்து படை கலைக்கப்படுவதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. அனைத்து ஆவணமற்ற தொழிலாளர்களுக்கும் முழு சட்டபூர்வ உரிமைகள் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று அது கோருகிறது. இதில் வேலை செய்யும் உரிமை மற்றும் நாடு திரும்புவதற்கான தடையில்லாமலும் அவர்களின் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்படுவதற்கான அச்சுறுத்தல் இல்லாமலும் அவர்களின் பிறந்த நாடுகளுக்கு பயணிக்கும் உரிமைகளும் அளிக்கப்பட வேண்டும். அமெரிக்காவில் மட்டுமல்ல மாறாக உலகெங்கிலும், எல்லைகளை இராணுவமயமாக்குவதற்கும் புலம்பெயர்ந்தவர்களைத் துன்புறுத்துவதற்குமான முயற்சிக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் திறந்த எல்லைகள் என்ற கோட்பாட்டை — அதாவது தொழிலாளர்கள் தாங்கள் விரும்பும் நாட்டில் முழு குடியுரிமை உரிமைகளுடன் வாழ்வதற்கும் வேலை செய்வதற்குமான உரிமை— நிலைநிறுத்தப்பட வேண்டும்.
44. கோவிட்-19 மற்றும் பிற நோய்க்கிருமிகளை உலகளவில் ஒழிப்பதற்கான ஒரு சோசலிச பொது சுகாதார திட்டத்திற்காக. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் இந்த பெருந்தொற்று நோய்க்கான ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பானது, முடிவில்லாத வெகுஜன மறுதொற்று, நெடும் கோவிட் ஆல் பலவீனமடைதல் மற்றும் மரணம் ஆகியவற்றின் “என்றென்றும் கோவிட்” கொள்கையாக உருவெடுத்துள்ளது. இந்தக் கொள்கையானது, பொது சுகாதாரத்தை தனியார் இலாபத்திற்கு அடிபணியச் செய்வதையும், உயிராபத்தான நோய்க்கிருமிகள் பரவுவதைத் தடுக்கத் தேவையான அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க மறுப்பதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சியின் 2022 இல் நடைபெற்ற ஏழாவது தேசிய காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட அதன் தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, அது கூறியதாவது:
மனிதகுலத்தின் முன் முன்வைக்கப்படும் இரண்டு மாற்றீடுகள், ஒன்று முடிவில்லாத வெகுஜனத் தொற்று, பலவீனம் மற்றும் மரணம், அல்லது முதலாளித்துவத்தை புரட்சிகரமாக தூக்கியெறிந்து SARS-CoV-2 வைரசை மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுவதை முடிவுக்குக் கொண்டுவர உலகளாவிய ஒழிப்புக் கொள்கையை அமல்படுத்துவது. பாரிய தடுப்பூசி போடுதல், பரிசோதனை செய்தல், தனிமைப்படுத்துதல் மற்றும் தொடர்புத் தடமறிதல் உட்பட வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளின் ஆயுதக்கிடங்கில் உள்ள ஒவ்வொரு ஆயுதத்தையும் உலகளவில் நிலைநிறுத்துவதும், அத்துடன் பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமல்லாத உற்பத்தியையும் தற்காலிகமாக மூடுவதும், தொழிலாளர்களுக்கு முழு வருமானமும் மற்றும் சிறு வணிகங்களுக்கான ஆதரவும் வழங்குவதும் அவசியமாகும்.
கோவிட்-19 பெருந்தொற்று நோய் மற்றும் பரந்த சுகாதார நெருக்கடிக்கு ஒரு பகுத்தறிவார்ந்த விடையிறுப்புக்கு அனைவருக்குமான, சமூகமயப்பட்ட மருத்துவத்தை ஸ்தாபிப்பது அவசியமாகும். மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனங்களின் இரும்புப்பிடி முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும், இலாப நோக்கம் ஒட்டுமொத்த சுகாதார அமைப்புமுறையில் இருந்தும் அகற்றப்பட்டு, அனைவருக்கும் இலவசமாகவும் கிடைக்கக்கூடியதாகவுமான உயர்தரமான சுகாதாரப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
45. காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உலகப் பொருளாதாரத்தை பகுத்தறிவார்ந்த முறையில் திட்டமிட்டு மறுஒழுங்கமைப்பு செய்வதற்காக. மனிதகுலம் எதிர்கொள்ளும் பல சுற்றுச்சூழல் பேரழிவுகளில், அநேகமாக மிகவும் அபாயகரமானது புவி வெப்பமயமாதலால் ஏற்படும் காலநிலை மாற்றம் ஆகும், இது தனியார் இலாபத்தின் அடிப்படையில் புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் பிற இயற்கை வளங்களை முதலாளித்துவம் சுரண்டுவதால் உந்தப்படுகிறது. காலநிலை மாற்றத்தின் யதார்த்தமானது உயரும் பெருங்கடல்கள், மிகவும் கடுமையான புயல்கள் மற்றும் விவசாய உற்பத்தியின் மீதான தாக்கம் ஆகியவற்றின் மூலம் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல், இது கோவிட்-19 போன்ற கொடிய நோய்க்கிருமிகளின் தோற்றம் மற்றும் பரவலுக்கான நிலைமைகளையும் உருவாக்குகிறது.
தேசிய-அரசு அமைப்புமுறையில் வேரூன்றிய முதலாளித்துவம், உலகளாவிய சுற்றுச்சூழல் நெருக்கடியை தீர்க்க இலாயக்கற்றது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலையீடு ஒன்றுதான், கொள்கை ரீதியான விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களின் ஒத்துழைப்புடன், வரவிருக்கும் உலகளாவிய பேரழிவில் இருந்து மனிதகுலத்தை பாதுகாக்க தேவையான தொழில்நுட்ப வழிமுறைகள் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பை அபிவிருத்தி செய்ய முடியும்.
46. சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஒழுங்கமைப்பும் அனைத்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கான இயங்குமுறைகளிலிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஒழுங்கமைப்பும் அரசியல் சுயாதீனமும் அவசியமாகும். ஆகவே, சோசலிச சமத்துவக் கட்சி பின்வருவனவற்றுக்கு அழைப்பு விடுக்கிறது:
47. சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியைக் கட்டியெழுப்பு (IWA-RFC)! தொழிலாள வர்க்கம் அதன் நலன்களை முன்னெடுக்க, தொழிற்சங்க இயந்திரத்தில் இருந்து சுயாதீனமான உண்மையான பாரிய அமைப்புகளை வேலையிடங்கள், ஆலைகள் மற்றும் அண்டை அயல்பகுதிகளில் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்த அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தின் தேவைகளில் இருந்து தொடங்குவதோடு, தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். வெவ்வேறு தொழில்துறைகள் மற்றும் வேலையிடங்களைக் கடந்து வேலையில் இருப்பவர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்றவர்கள், திறமையானவர்கள் மற்றும் திறனற்றவர்கள், உள்நாட்டில் பிறந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் என தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கும், அமெரிக்காவிலும் உலகெங்கிலும், முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக அவர்களின் பொதுவான போராட்டங்களை ஒழுங்கமைப்பதற்கும் அவர்கள் முன்பினும் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும்.
2021 இல் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) உருவாக்குவதற்கு தொடங்குகையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பின்வருமாறு குறிப்பிட்டது:
சர்வதேச அளவில் தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் வேலையிடங்களில் தொழிலாளர்களின் சுயாதீனமான, ஜனநாயக மற்றும் போர்க்குணமிக்க சாமானிய தொழிலாளர் அமைப்புகளின் புதிய வடிவங்களுக்கான கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய IWA-RFC வேலை செய்யும். தொழிலாள வர்க்கம் போராட தயாராக உள்ளது. ஆனால், எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் நசுக்குகின்ற பிற்போக்குத்தன அதிகாரத்துவ அமைப்புக்களால் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது...
முதலாளித்துவ அரசாங்கங்களும் எண்ணற்ற தேசிய, மத மற்றும் பேரினவாதம் மற்றும் அடையாள அரசியலின் பிற்போக்கு ஆதரவாளர்களும் தொழிலாள வர்க்கத்தை சண்டையிடும் கன்னைகளாக பிளவுபடுத்துவதற்கு மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் எதிர்த்து, ஒரு பொதுவான உலகளாவிய போராட்டத்திலும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி, நான்காம் அகிலம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிகளின் அரசியல் உதவியுடன் பாடுபடும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதில் AFL-CIO இன் மத்திய பாத்திரமானது, தொழிற்சங்க இயந்திரத்திற்கு எதிரான சாமானிய தொழிலாளர்களின் ஒரு சுயாதீனமான இயக்கத்தின் அபிவிருத்திக்கும் போருக்கு எதிரான போராட்டத்திற்கும் இடையிலான உறவை வெளிப்படுத்துகிறது. பைடென் நிர்வாகத்தின் போர் திட்டநிரலில் UAW மற்றும் அதன் தலைவர் ஷான் ஃபெயினின் மைய நிலைப்பாடு, சாமானிய தொழிலாளர்களின் கைகளுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கும் IWA-RFC ஐ கட்டியெழுப்பவும் அழைப்பு விடுத்து, ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில், UAW தலைவருக்கான 2022 தேர்தலில், வில் லெஹ்மன் மேற்கொண்ட பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அரசுடன் கூட்டுச் சேர்ந்து, தொழிற்சங்க இயந்திரம் திட்டமிட்டு முன்னெடுத்த வாக்காளர்களை ஒடுக்கும் பிரச்சாரத்திற்கு மத்தியில், லெஹ்மன் 5,000 வாக்குகளைப் பெற்றார். இது தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிரான கிளர்ச்சிக்கும் சோசலிசக் கொள்கைகளுக்கும் தொழிலாள வர்க்கத்திற்குள் காணப்படும் பரந்த ஆதரவுத் தளத்தை வெளிப்படுத்தியது.
48. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக. தொழிலாள வர்க்கத்தின் சமூகத் தேவைகளுக்காகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும், இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டமானது, ஒவ்வொரு புள்ளியிலும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் ஒழுங்கமைப்பின் அவசியத்தை எழுப்புகிறது. ஜனநாயகக் கட்சி மற்றும் அமெரிக்காவின் முதலாளித்துவ இருகட்சி முறையின் வடிவமைப்பிற்குள் தொழிலாள வர்க்கம் தன்னுடைய நலன்களை முன்னெடுத்துச் செல்வது என்பது இயலாத காரியமாகும்.
தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வை தடுக்க வேலை செய்யும் அனைத்து அரசியல் போக்குகளையும் சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது. பாரிய அழுத்தத்தின் மூலமாக ஜனநாயகக் கட்சியை இடதிற்கு தள்ள முடியும் என்று வாதிடும் பெயரளவிலிருக்கும் “சோசலிஸ்ட்” குழுக்கள் உட்பட, நடுத்தர வர்க்க அமைப்புகள் அனைத்தையும் சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது. இந்த நிலைப்பாடு தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான அரசியல் கட்சியை ஸ்தாபிப்பதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜில் ஸ்ரைன் (பசுமைக் கட்சி) மற்றும் கோர்னெல் வெஸ்ட்டின் தேர்தல் பிரச்சாரங்கள், போர் மற்றும் சமத்துவமின்மைக்கான எதிர்ப்பை முதலாளித்துவத்தை எதிர்க்காமல் முன்னெடுக்க முடியும் என்ற கட்டுக்கதையை ஊக்குவிக்கின்றன. அவர்கள் முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் ஏகாதிபத்தியத்துடன் பிணைந்துள்ள உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளுக்காக பேசுகின்றனர்.
49. ஒரு தொழிலாளர் அரசுக்காக. சோசலிச சமத்துவக் கட்சியின் நோக்கம் தற்போதுள்ள முதலாளித்துவ அரசின் நிறுவனங்களை சீர்திருத்துவது அல்ல, மாறாக அதை ஒழித்துவிட்டு, புதிய அரசியல் கட்டமைப்புகளையும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தையும் ஸ்தாபிப்பதாகும் -அதாவது, தொழிலாள வர்க்கத்தின், தொழிலாள வர்க்கத்தால், தொழிலாள வர்க்கத்திற்காக, தொழிலாள வர்க்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுவதே சோசலிச சமத்துவக் கட்சியின் நோக்கமாகும். ஒரு தொழிலாளர் அரசானது, மக்கள்தொகையின் பரந்த பெரும்பான்மையினரான தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களின் பாதையில் எழுகின்ற, பங்கேற்பு ஜனநாயகத்தின் புதிய வடிவங்கள் மற்றும் கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காகவும் உலக சோசலிசப் புரட்சிக்காகவும்!
50. அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.
51. அமெரிக்காவில் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள், சாராம்சத்தில், உலகின் ஏனைய ஒவ்வொரு பகுதியிலும் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைப் போன்றதேயாகும். தீவிரமடைந்து வரும் உலகளாவிய போர், நடந்து வரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய், காலநிலை மாற்றம், சமத்துவமின்மை மற்றும் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தின் வளர்ச்சி - இவை வெறுமனே அமெரிக்க பிரச்சினைகள் அல்ல. இவைகள் உலகப் பிரச்சினைகள், இதற்கு உலகளாவிய தீர்வுகள் தேவைப்படுகின்றன.
52. முதலாளித்துவம் ஒரு உலகளாவிய பொருளாதார அமைப்பு முறையாகும். பரந்த நாடுகடந்த பெருநிறுவனங்கள் உலகச் சந்தைக்காக உற்பத்தி செய்யும் மலிவு உழைப்பு மற்றும் மூலப்பொருட்களுக்காக உலகம் முழுவதும் அலைந்து திரிகின்றன. இதே வங்கிகளும் நிதியியல் சந்தைகளும்தான் ஒவ்வொரு நாட்டிலும் கொள்கைகளை ஆணையிடுகின்றன. உற்பத்தி பூகோளரீதியில் நடைபெறுகிறது என்பதால், வெகுஜன சமூகத்தின் பிரச்சினைகளை ஒரு சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்க்க முடியும்.
53. அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியானது, சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்டுள்ளது. ரஷ்யப் புரட்சியை ஸ்ராலினிசம் காட்டிக் கொடுத்ததற்கு எதிராக 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் சர்வதேச முன்னோக்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச தலைமையை தொழிலாள வர்க்கத்திற்குள் அபிவிருத்தி செய்வதே அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் பணியாகும்.
54. 2024 இல் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்திற்கு முன்னோக்கிய ஒரே பாதையான இந்த முன்னோக்கிற்காக போராடும்.