மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
போர்களின் இன்றியமையா காரணங்களும் நலன்களும் பொதுவாக முதலில் வெளிப்படையாக இருப்பதில்லை. அவை ஒரு பிரச்சாரப் பொழிவால் மறைக்கப்படுகின்றன. ஆனால், உடனடியாகவோ அல்லது சற்று தாமதமாகவோ, அந்த மோதலுக்கான மிகவும் ஆழமான உந்துச் சக்திகளும் முக்கியத்துவமும் வெளிப்படுகின்றன.
உக்ரேன் மோதல் விஷயத்தில், இந்த போரின் தன்மை கணிசமான வேகத்தில் வெளிப்பட்டு வருகிறது. சாராம்சத்திலும் உண்மையிலும், நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒரு போரில் உக்ரேன் சரீரரீதியில் ஆரம்பப் போர்க்களம் மட்டுமே.
நேட்டோவில் உக்ரேன் உறுப்பு நாடு இல்லை என்பது, பல ஆண்டுகளாகவே, பெரிதும் ஒரு கட்டுக்கதையாகும். ஏற்கனவே கணிசமான அளவில் ஆயுதமயப்படுத்தப்பட்டு ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்கோவில் ஆட்சி மாற்றத்தையும் மற்றும் நேட்டோவுக்கு ரஷ்யாவை முழுவதுமாக அடிபணிய செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு போரில் உக்ரேன் முன்னணியில் உள்ளது.
கடந்த சில நாட்களில் ஏற்பட்டு வரும் அபிவிருத்திகள் இதை தெளிவுபடுத்துகின்றன. இதில் உள்ளடங்குபவை:
முதலாவதாக, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் விதித்த பாரிய பொருளாதார தடைகள் ஒட்டுமொத்த ரஷ்ய பொருளாதாரத்தையும் முடக்க நோக்கம் கொண்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், முக்கிய ரஷ்ய வங்கிகள் SWIFT சர்வதேச பணப் பரிவர்த்தனை முறையில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்கள் திறம்பட முடக்கப்பட்டுள்ளன.
ரஷ்ய மத்திய வங்கிக்கு எதிரான நகர்வுகள் ஒட்டுமொத்த ரஷ்ய பொருளாதாரத்தின் மீதும் குறிப்பாக நாசகரமாகவும் மற்றும் உடனடி தாக்கத்தையும் ஏற்படுத்தும். பைடென் நிர்வாகத்தின் ஒரு மூத்த அதிகாரி திங்கட்கிழமை கூறுகையில், இந்த நடவடிக்கை 'நூறு பில்லியன் டாலர்' சொத்துக்களை அது அணுகுவதைத் தடுக்கும் என்றார். 'ரூபிள் கட்டுக்கடங்காமல் வீழ்ச்சியில் உள்ளது,” 'மேலும் விரைவில் நீங்கள் பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கை சுருங்குவதைக் காண்பீர்கள்' என்று அவர் சுயதிருப்தியுடன் கூறினார். ரஷ்யாவுக்கு எதிராக 'மிகப் பெரும் பலத்தை வழங்குவதற்கான நம் கடமைப்பாடாக' அவர் இந்த பொருளாதாரத் தடைகளைக் குறிப்பிட்டார்.
ரஷ்ய பொருளாதாரம் மற்றும் ரூபிளை அழிப்பது ரஷ்ய தன்னலக் குழுவுக்குள் பிளவுகளை ஆழமாக்கி, சமூக அதிருப்தியை எரியூட்டி, ஆட்சி மாற்றம் மற்றும் நாட்டின் உடைவுக்கான நிலைமைகளையே கூட உருவாக்கும் என்பது ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு கணக்கீடாக உள்ளது. 'மக்கள் செலாவணியை நம்புவதில் தான், நாடு இருக்கிறது' என்று நியூ யோர்க் டைம்ஸ் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஹூவர் பயிலக ஆராய்ச்சியாளர் மைக்கேல் எஸ். பேர்ன்ஸ்டாம் கூறியதை மேற்கோள் காட்டியது. 'அவை இல்லை என்றால், அது புகை போல கலைந்து விடும்.'
இரண்டாவதாக, நேட்டோ நாடுகள் நேரடியாக உக்ரேனுக்கு அதிநவீன ஆயுத அமைப்புகளை வழங்குகின்றன. ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென் உறுதியளித்த மிக சமீபத்திய 350 மில்லியன் டாலர்கள் சமீபத்திய நிலுவைத் தொகையுடன் சேர்ந்து, கடந்த ஆண்டு உக்ரேனுக்கு அமெரிக்கா 1 பில்லியன் டாலர்கள் இராணுவ உதவியை அனுப்பியுள்ளது. வாஷிங்டன் நேரடியாக உக்ரேனுக்கு தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஸ்டிங்கர் ஏவுகணைகள் மற்றும் ஜவெலின் டாங்கி-தகர்ப்பு ஏவுகணைகளைக் கொடுத்து ஆயுதமயப்படுத்தி வருகிறது. உக்ரேனியப் படைகள் ஏற்கனவே ரஷ்ய டாங்கிகளுக்கு எதிராக அதிநவீன 'fire-and-forget' ஜவெலின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன, இது இந்த படையெடுப்புக்கு முன்னரே ஜனவரியில் அமெரிக்காவால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
ஜேர்மனிய சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கையில், ஜேர்மன் இராணுவத்திற்கு கூடுதலாக 110 பில்லியன் டாலர்கள் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார், இது அதன் வருடாந்திர வரவு-செலவுத் திட்டத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும், அத்துடன் ஜேர்மனியும் உக்ரேனுக்கு நேரடி இராணுவ உதவியை வழங்கும். இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அணிதிரட்டப்பட்ட ஜேர்மன் ஏகாதிபத்திய எந்திரம், உக்ரேன் களங்களின் வழியாக மீண்டும் ரஷ்யாவை நோக்கி நகர்ந்து வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் முதன்முறையாக ஆயுதங்களை வாங்குவதற்கும் மற்றும் வழங்குவதற்கும் உக்ரேனுக்கு நிதியுதவி செய்கிறது.
மூன்றாவதாக, அரசாங்கங்கள் துணை போக, நேட்டோ நாடுகளில் இருந்து உக்ரேனுக்கு தனியார் போர்ப் படைகள் அனுப்பப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிரான அதன் போருக்காக உக்ரேன் ஒரு சர்வதேச படையை நிறுவும் என்று அறிவித்ததுடன், 'உக்ரேன், ஐரோப்பா மற்றும் உலக பாதுகாப்புக்காக இணைய விரும்புபவர்கள் யார் வேண்டுமானாலும் பக்கவாட்டில் உக்ரேனியர்களுடன் இணைந்து ரஷ்ய போர் குற்றவாளிகளுக்கு எதிராக போராடலாம்,” என்றார்.
பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலர் லிஸ் ட்ரூஸ் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், உக்ரேனுக்குப் போர் வீரர்களாகச் சேவையாற்ற பயணிக்கும் பிரிட்டிஷ் குடிமக்களை அவர் 'முற்றிலும்' ஆதரிப்பதாக தெரிவித்தார்.
தற்செயல் வாய்ப்பாக இத்தகைய வீரர்களை நிலைநிறுத்துவதற்கான வலையமைப்புகள் 2014 இல் இருந்தே இருந்து வருகின்றன. அவை அதிவலது கூறுகளை உக்ரேனுக்கும் பின்னர் அவற்றின் சொந்த நாடுகளுக்கும் அனுப்பியுள்ளன, அங்கே அவர்கள் சில சந்தர்ப்பங்களில் வெள்ளையின மேலாதிக்க பயங்கரவாதத்தின் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். உக்ரேனில், இந்த படைகள் அசோவ் (Azov) படைப்பிரிவு மற்றும் ஜோர்ஜிய தேசிய படையணியுடன் இணைந்து செயல்பட்டன. இந்த வலையமைப்புகள் இப்போது பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசாங்கங்களிடம் இருந்து வெளிப்படையான உதவியைப் பெறுகின்றன. 60 க்கும் மேற்பட்ட இது போன்றவர்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறப்பு நடவடிக்கை படைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்ற நிலையில், கடந்த வாரத்தில் இங்கிலாந்தில் இருந்தும், குறைந்தது ஆறு பேர் அமெரிக்காவில் இருந்தும் சென்றுள்ளனர்.
நான்காவதாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் ரஷ்யாவுடன் அவர்கள் நேரடிப் போருக்குத் திட்டமிடுவதாக அதிகரித்தளவில் போர்நாடும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். கிழக்கு ஐரோப்பாவுக்கு இன்னும் கூடுதலாக 7,000 அமெரிக்கத் துருப்புகளை இணைப்பதைக் கடந்த வாரம் பைடென் நிர்வாகம் அறிவித்த நிலையில், அக்கண்டத்தில் மொத்த அமெரிக்க நிலைநிறுத்தல் 100,000 க்கும் அதிகமாக உள்ளது.
வெள்ளிக்கிழமை செயல்படுத்தப்பட்ட நேட்டோ 'அதிரடி எதிர்வினைப் படையில்' இந்த கூடுதல் துருப்புக்கள் இணைக்கப்படுமா என்று திங்கட்கிழமை கேட்கப்பட்ட போது, பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, 'அது செயல்படுத்தப்பட வேண்டுமா, நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்,' என்றார்.
நேட்டோவும் உக்ரேனும் உக்ரேன் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலம் ஏற்படுத்தலாமா என்று ஆலோசித்து வருகின்றன, இதில் அமெரிக்க இராணுவப் படைகள் நேரடியாக ரஷ்ய விமானங்களைச் சந்திக்கும். 'மேற்கு நாடுகள் உக்ரேனின் கணிசமான பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலத்தை விதிக்க வேண்டும்' என்று உக்ரேன் ஜனாதிபதி செலென்ஸ்கி கூறினார். அமெரிக்க குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் சபை உறுப்பினர் ஆடம் கிஞ்சிங்கர் உட்பட அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர்களும், அதே போல் இங்கிலாந்து அரசியல்வாதிகளும் அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேன் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலத்தை ஏற்படுத்த கோரியுள்ளனர்.
ஐந்தாவதாக, ஊடகங்களில் ஒருங்கிணைந்த மற்றும் மூர்க்கமான ரஷ்ய-விரோத பிரச்சாரம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெருநிறுவன ஊடகங்களில் இருந்து சமூக ஊடகங்கள் வரை, சரமாரியான போர் பிரச்சாரம் ஆர்ப்பரிக்கிறது. CNN, ரஷ்ய அட்டூழியங்கள் என்று குற்றஞ்சாட்டி மூச்சுவிடாமல் ஆதாரமற்ற தகவல்களை வழங்குகிறது, மேலும் நியூ யோர்க் டைம்ஸ் இவற்றை அச்சில் கொண்டு அதன் பெரும்பாலான பக்கங்களை அர்ப்பணிக்கிறது. 'ரஷ்யாவுக்கு எதிராக நேரடி ஈடுபடுவதை' அர்த்தப்படுத்தினாலும் கூட, அமெரிக்காவும் நேட்டோவும் கியேவுக்கு வெளியில் உள்ள ஒரு ரஷ்ய படைப்பிரிவை அழிக்குமா என்று திங்கட்கிழமை NBC நிருபர் ரிச்சார்ட் ஏங்கல் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.
எளிதில் கவரக்கூடிய மற்றும் நேர்மையற்ற கல்வித்துறை மேதாவிகள் புட்டின் மற்றும் ரஷ்யாவைக் குறிவைத்து ட்வீட்டரில் பொங்கி வழிகின்றனர், அதேவேளையில் உக்ரேனிய இராணுவம் அதிவலது மற்றும் பாசிச சக்திகளால் நிரம்பி வழிகிறது என்ற உண்மையை உதறிவிடுகிறார்கள்.
கேள்வி வரைமுறையின்றி ஊடக தட்டிக்கழிப்புகள் ரஷ்யா மற்றும் ரஷ்யர்கள் நோக்கி வெறுப்பு சூழலை உருவாக்க நோக்கம் கொண்டுள்ளன. அமெரிக்கா ரஷ்ய மக்களை இலக்கில் வைக்கவில்லை என்ற வாதங்கள், ரஷ்ய இசைக்கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களைச் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்று போட்டியிடுவதைத் தடுக்கும் நடவடிக்கையால் பொய்யாக்கப்படுகின்றன. ரஷ்ய பொருட்கள் அலமாரிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இது சேர்ந்துள்ளது.
இந்த பிரச்சாரத் தாக்குதலின் மைய நோக்கமே, சமூக நெருக்கடி, விலைவாசி உயர்வு மற்றும் இந்த பெருந்தொற்றால் மலைப்பூட்டும் அளவுக்கு ஏற்பட்டுள்ள இறப்பு மட்டங்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைத்திருப்பி, அந்த பாரிய கோபத்தை ஏகாதிபத்திய போர் முனைவுக்குப் பின்னால் திருப்பி விடுவதற்கான முயற்சியாகும்.
இவற்றில் எதுவமே உக்ரேன் மீதான ரஷ்ய அரசாங்க படையெடுப்புக்கு உலக சோசலிச வலைத் தளத்தின் எதிர்ப்பை எந்த விதத்திலும் மாற்றாது. ரஷ்ய தன்னலக் குழுவின் ஓர் அணியினது நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் புட்டின் ஆட்சி, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துடன் ஏதோவிதத்ததில் உடன்பாட்டை ஜோடிப்பதற்கான பெரும்பிரயத்தன முயற்சியோடு, பிற்போக்குத்தனமான ரஷ்ய தேசியவாதத்தை ஊக்குவித்தும், அத்துடன் அபாயகரமான அணுஆயுத இராஜதந்திரம் மற்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை இணைத்தும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பேரழிவுகரமான விளைவுகளுக்கு விடையிறுத்து வருகிறது.
உக்ரேனின் படையெடுப்பு ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த மட்டுமே உதவியுள்ளது, அதேவேளையில் ஏகாதிபத்திய நாடுகளில் மக்களிடையே குழப்பத்தையும் நோக்குநிலை பிறழ்வையும் உருவாக்கி வருகிறது, இவை அமெரிக்கா மற்றும் நேட்டோவால் அவற்றின் போர் திட்டங்களை முன்னெடுக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ரஷ்யாவைத் துண்டாடுவதற்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் நீண்டகால நோக்கங்கள், இப்போது போர் வெறித்தனத்தின் பின்னணியில் உள்ள மைய உந்துசக்தியுடன் குறுக்கிடுகின்றன: அதாவது, வாஷிங்டன் மற்றும் பிற தலைநகரங்களில் உள்ள அளப்பரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியில் குறுக்கிடுகின்றன.
இந்தப் போர் தீவிரமடைவது மனிதகுலத்தைப் பேரழிவுடன் அச்சுறுத்துகிறது. இத்தகைய நிலைமைகளின் கீழ், உணர்ச்சிகளால் உந்தப்படாமல், முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்களின் பிரச்சாரத்தில் மூழ்கிவிடாமல், என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து, அதன் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான நோக்குநிலையை வழங்குவது அவசியமாகும்.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு புதிய பாரிய போர்-எதிர்ப்பு இயக்கம் இருக்க வேண்டும். ஆனால் இந்த எதிர்ப்பு சோசலிசத்திற்கான ஒரு நனவுபூர்வமான அரசியல் இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் அதனுடன் இணைப்பு கொண்ட சோசலிச சமத்துவக் கட்சிகளைக் கட்டமைப்பதே இதன் அர்த்தமாகும்.
மேலும் படிக்க
- உக்ரேன் தொடர்பாக அமெரிக்கா-நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான மோதல் அணுஆயுதப் போருக்கு அச்சுறுத்துகிறது
- ரஷ்ய இசைக்குழுநடத்துனர் வலேரி கெர்கீயேவுக்கு எதிரான பிரச்சாரம்: போருக்கான சேவையில் நடுத்தர வர்க்க வெறித்தனம்
- இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷ்யாவிற்கு எதிராக வான்வழிப் போருக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் நேட்டோ படைகளை திரட்டுகிறது