முன்னோக்கு

அமெரிக்காவும் நேட்டோவும் ஏன் ரஷ்யாவுடன் போரை விரும்புகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளம் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோவின் அதிகரித்துவரும் ஆத்திரமூட்டல்களைக் கண்டிக்கிறது. போருக்கான போலிக்காரணத்தை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக உள்ளது. இந்த பொறுப்பற்ற செயல்கள், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களின் உயிர்களை இழக்கவைக்கும் ஒரு உலகளாவிய மோதலைத் தூண்டும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன.

ரஷ்யாவின் எல்லையில் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கு அனுப்புவதற்காக 8,500 துருப்புக்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக பைடென் நிர்வாகம் நேற்று அறிவித்தது. இது அமெரிக்க அரசாங்கம் 50,000 துருப்புக்களை அந்த பகுதிக்கு அனுப்பும் திட்டங்களை உருவாக்கி வருகிறது என்ற நியூ யோர்க் டைம்ஸ் இன் ஒரு செய்தியைத் தொடர்ந்து வந்துள்ளது.

உக்ரேனின் டொனெட்ஸ்க் அருகே ஒரு உக்ரேனிய சிப்பாய், ஏப்ரல் 12, 2021 திங்கட்கிழமை, (AP Photo)

உக்ரேனிய ஆட்சியுடன் அமெரிக்க உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க தளபதி அலெக்சாண்டர் விண்ட்மான் பின்வருமாறு அறிவித்தார்: அவர், “இது ஏன் அமெரிக்க மக்களுக்கு முக்கியமானது? இது முக்கியமானது, ஏனென்றால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை நாம் சந்திக்கவுள்ளோம் என்று கூறினார். வான் பலம், நீண்ட தூர பீரங்கிகள், கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் போன்ற 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய நிலப்பரப்பில் வெளிப்படாத விஷயங்கள் நிகழவுள்ளன. இது ஒரு சுத்தமான அல்லது மாசற்ற சூழலாக இருக்கப் போவதில்லை” என்றார்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பேரழிவுகரமான தலையீடுகளைப் போலவே, ரஷ்யாவுடனான போருக்கான பாதையும் பொய்களால் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் இராணுவக் குவிப்பு, உக்ரேனிய அரசாங்கம் கூட கேள்விக்குள்ளாக்கியுள்ள உக்ரேன் மீதான உடனடி படையெடுப்பு என்று ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட கூற்றுக்கள் மூலம் நியாயப்படுத்தப்படுகிறது. எந்த உண்மையான அடிப்படையும் இல்லாமல் ரஷ்யா ஒரு 'தவறான கொடியின்' கீழ் நடவடிக்கையை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளது என்ற எச்சரிக்கைகள் இதற்கு துணைபோகின்றது. அத்தகைய செயல்பாடு நடந்தால், அதன் காரணகர்த்தாக்கள் வாஷிங்டனில் இருப்பார்களே தவிர மாஸ்கோவில் இல்லை என்று உறுதியாக நம்பலாம்.

உக்ரேனில் ஒரு கைப்பாவை ஆட்சியை வலுக்கட்டாயமாக நிறுவுவதை ரஷ்யா இலக்காகக் கொண்டுள்ளது என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட கூற்று சமீபத்திய பொய்யாகும். இதைத்தான் துல்லியமாக வாஷிங்டன், பேர்லின் மற்றும் நேட்டோ கூட்டணி 2014 இல் செய்து, கியேவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தீவிர வலதுசாரி ஆட்சியை ஆதரித்தது. இந்தப் பொய் ஏற்கனவே இலண்டனின் முகத்தில் வெடித்துவிட்டது. உக்ரேனில், ஒரு ரஷ்ய கைப்பாவை ஆட்சியின் தலைவராக இருக்கக்கூடியவராக அடையாளம் காட்டப்பட்ட நபரான தொழிலதிபரும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான யெவன் முராயேவ் உண்மையில் ரஷ்யாவில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது சொத்துக்களையும் அது கைப்பற்றியுள்ளது.

அமெரிக்காவும் நேட்டோவும் 'ஜனநாயகம்' மற்றும் 'வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு' எதிராகப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளன என்பது எல்லாவற்றிலும் மிகப் பெரிய பொய்யாகும். உக்ரேனிய அரசாங்கமும் அரசு அமைப்பும் 2014 ஆட்சியதிகாரத்தில் முக்கிய பங்கு வகித்த நவ-நாஜி துணை இராணுவப் படைகளால் நிரம்பியுள்ளது. இந்த அரசாங்கத்தில் ஐரோப்பிய பாராளுமன்றம் 'இனவாதம், யூத-விரோத மற்றும் இனவெறி நோக்கங்களுக்காக' உத்தியோகபூர்வமாக கண்டனம் செய்த ஸ்வோபோடா கட்சியும் மற்றும் நவ-நாஜி Right Sector மற்றும் அஷோவ் படைப்பிரிவு ஆகியவையும் அடங்கும்.

'வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு' எதிராக உக்ரேனின் தேசிய இறையாண்மையின் புனிதத்தை பாதுகாப்பதாக பைடென் நிர்வாகத்தின் கூற்றுகளைப் பொறுத்தவரை, இதற்காக கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்காவால் படையெடுக்கப்பட்ட மற்றும்/அல்லது குண்டுவீச்சிற்கு உட்பட்ட நாடுகளின் பட்டியலில் பனாமா, ஈராக், குவைத், ஹைட்டி, சோமாலியா, பொஸ்னியா, சூடான், ஆப்கானிஸ்தான், யூகோஸ்லாவியா, யேமன், ஈராக், பாகிஸ்தான், லிபியா மற்றும் சிரியா அடங்கும்.

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து, போலந்து, ஹங்கேரி, செஸ்கியா, பல்கேரியா, எஸ்தோனியா, லட்வியா, லித்துவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா, சுலோவேனியா, குரோஷியா, வடக்கு மாசிடோனியா மற்றும் மொன்டநேக்ரோ ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நேட்டோ இராணுவக் கூட்டமைப்பு அதன் எல்லைகளை கிழக்கே 800 மைல்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டில், நேட்டோ உக்ரேனை ஒர் இணைய 'ஆர்வமுள்ள உறுப்பினராக' உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது. மேலும் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகியவை ரஷ்யாவிற்கு எதிரான கூட்டணியில் சேர பரிசீலித்து வருகின்றன. பின்லாந்து மற்றும் எஸ்தோனியா இரண்டும் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிலிருந்து 200 கிலோமீட்டர் (125 மைல்கள்) தொலைவில் உள்ளன. மேலும் உக்ரேனின் கிழக்கு எல்லை மாஸ்கோவில் இருந்து 750 கிலோமீட்டருக்கும் (465 மைல்கள்) குறைவாக உள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள், ரஷ்யாவை அதன் சொந்த எல்லைகளுக்குள் துருப்புக்கள் நடமாடுவதாகக் கூறப்படுவதைக் கண்டிக்கும் அதேவேளையில், எஸ்தோனியா, லித்துவேனியா மற்றும் லாட்வியா ஆகிய பால்டிக் அரசாங்கங்களுக்கு அமெரிக்காவால் பில்லியன் கணக்கான டாலர்கள் பெறுமதியான ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை இப்போது உக்ரேனுக்கு அனுப்பப்படுகின்றன. பிரித்தானியா, கனடா, லித்துவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் ஆலோசகர்களுடன் இணைந்து, சிறப்பு நடவடிக்கைப் படைகள் உட்பட, உக்ரேனில் ஏற்கனவே 150க்கும் மேற்பட்ட இராணுவ ஆலோசகர்களை அமெரிக்கா கொண்டுள்ளது. இந்த நிலைமையில், ரஷ்யா தான் ஒரு இராணுவத் தாக்குதலுக்கு இலக்காக இருக்கின்றது என்று எப்படி நம்பாமல் இருக்க முடியும்?

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் பொய்கள் ஈராக்கிய 'பேரழிவுகரமான ஆயுதங்கள்' என்ற கூற்றுக்களை விட நம்பகரமானவை அல்ல என்றாலும், பழைய பொய்களைப் போலவே புதிய பொய்களும் ஊடகங்களால் முழுமையாக உண்மையானவை என முன்வைக்கப்படுகின்றன.

பைடென் நிர்வாகமோ அல்லது அதன் நேட்டோ நட்பு நாடுகளோ, தீவிர மோதலின் விளைவு என்னவாக இருக்கும் என்று தாங்கள் நம்புவதை விளக்கவில்லை. அவர்களின் மோசமான சூழ்நிலை என்னவாக இருக்கும்?

ரஷ்யாவுடனான இராணுவ மோதலில் நேரடியாக ஈடுபடமாட்டோம் என்று அமெரிக்கா கூறுகிறது. இது ஒரு பொய். அமெரிக்கா, உக்ரேனில் ஆயுதங்களை வாரி இறைத்து, அந்நாட்டில் அமெரிக்க இராணுவ ஆலோசகர்களை நிலைநிறுத்திவைத்து சட்டரீதியாகவும் நடைமுறையிலும் ஏற்கனவே ரஷ்யாவிற்கு எதிரான விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தமது நடவடிக்கைகளினால் உக்ரேனிய கைப்பாவைகளுக்கு எதிராக மட்டுமல்ல, அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய கைப்பாவை எஜமானர்களுக்கும் எதிராகவும் ரஷ்யா இராணுவ நடவடிக்கை எடுக்க உந்தப்பட்டால் அமெரிக்காவும் நேட்டோவும் என்ன செய்யத் திட்டமிடுகின்றன? ரஷ்யாவுடனான போர் ஒரு சிறிய மற்றும் எளிதில் கட்டுப்படுத்தப்பட்ட பிராந்திய அளவிலான மோதலாக இருக்கும் என்று பைடென் நிர்வாகமும் சிஐஏ யும் உண்மையில் நம்புகிறதா? அப்படியானால், அவர்கள் மீண்டும் சிந்திக்க வேண்டும்.

ரஷ்யாவுடனான ஒரு போர், தவிர்க்க முடியாமல் சீனாவையும், அந்த விஷயத்தில், உலகின் ஒவ்வொரு நாட்டையும் உள்ளடக்கிய உலகளாவிய தீயாக வேகமாகப் பெருகும். அமெரிக்க-நேட்டோ ஆத்திரமூட்டல்கள், அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே பனிப்போர் மோதல் உச்சத்தில் இருந்ததில் இருந்து அணு ஆயுதப் போரின் ஆபத்தை எந்தக் கட்டத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமாக்கியுள்ளன.

பைத்தியம் பிடித்தவர்கள் மட்டுமே இத்தகைய பேரழிவுகரமான விளைவுகளுடன் போரைத் தூண்டுவார்கள் என்று தோன்றலாம். இருப்பினும், இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு ஒரு தர்க்கம் உள்ளது.

முதலில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோளஅரசியல் கணிப்பீடுகள் உள்ளன. பைடென் தனது சமீபத்திய செய்தியாளர் கூட்டத்தில் ரஷ்யாவின் எட்டு நேர மண்டலங்கள் மற்றும் மகத்தான மூலவளங்கள் பற்றிய குறிப்பு அமெரிக்க இராணுவ திட்டமிடலை ஊக்குவிக்கும் குற்றவியல் கணிப்பீடுகளை சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் 1941 இல் ஹிட்லர் செய்தது போல் ரஷ்யாவை கொள்ளையடிப்பதற்கான ஒரு பரந்த களமாக பார்க்கிறது. போர் மற்றும் உள் ஸ்திரமின்மை ஆகியவற்றின் மூலம், ஏகாதிபத்தியம் ரஷ்யாவின் உடைவைத் தூண்ட முற்படுகிறது. பெரிய ஏகாதிபத்திய சக்திகளின் காலனிகளாக இருக்கக்கூடிய பல கைப்பாவை அரசுகளாக ரஷ்யாவை பிரிப்பதே அவர்களின் நோக்கமாகும்.

மேலும், ரஷ்யாவை அதன் செல்வாக்கு மண்டலத்தில் ஒருங்கிணைப்பதை சீனாவுடனான போருக்கான தயாரிப்புகளுக்கு இன்றியமையாததாக அமெரிக்கா கருதுகிறது.

ஆனால் இவை அனைத்தும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பால் உருவாக்கப்பட்ட ஒரு பேரழிவின் கட்டமைப்பிற்குள் நடைபெறுகிறது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கிட்டத்தட்ட 900,000 அமெரிக்கர்கள் கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர். ஓமிக்ரோன் மாறுபாடு கட்டுப்பாடு இல்லாமல் பரவி வருவதால், ஆளும் வர்க்கம் வைரஸைக் கட்டுப்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும், அதைக் கட்டுப்படுத்தும் பாசாங்குகள் எதையுமே கைவிட்டது. பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் திறந்த நிலையில் வைக்கப்படுகின்றன. இது முழு தொற்றுநோய் காலம் முழுவதும் காணப்படாத அளவில் பாரிய தொற்றுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

இங்கிலாந்தில், ரஷ்யாவிற்கு எதிரான போர் உந்துதலில் அமெரிக்காவுடன் முக்கிய கூட்டுச் சதிகாரரான போரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் ஒரு நூலில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் 'உடல்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்' என்று இழிவான முறையில் அறிவித்த அரசியல் மற்றும் சமூகக் கீழ்த்தரமான ஜோன்சன் ஒட்டுமொத்த ஐரோப்பிய முதலாளித்துவ அரசியலின் சீரழிவையே எடுத்துக்காட்டுகிறார்.

தொற்றுநோய் முழு முதலாளித்துவ ஒழுங்கின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியைத் தூண்டியுள்ளது. கடந்த வாரத்தில், வோல் ஸ்ட்ரீட் மார்ச் 2020 சரிவுக்குப் பின்னர் செங்குத்தான சரிவைக் கண்டுள்ளது. உயரும் பணவீக்கம், நிதிச் சந்தைகளுக்கு வரம்பற்ற பணத்தை வழங்கும் பெடரல் ரிசர்வ் கொள்கையைக் குறைக்க அச்சுறுத்துகிறது. இது பெரும் மந்தநிலைக்கு முன்பு இருந்ததற்கு பின்னர் காணப்படாத அளவிலான ஒரு ஊகவாணிப வெறியினால் எரியூட்டப்படுகின்றது.

பைடென் நிர்வாகம் ஒரு வருடத்திற்கு முன்பு அது அதிகாரத்தை எடுப்பதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பாசிச ஆட்சிக் கவிழ்ப்பில் இருந்து மயிரிழையில் தப்பிப்பிழைத்தது. ஆட்சிக்கவிழ்ப்பை தூண்டிய டொனால்ட் ட்ரம்ப், குடியரசுக் கட்சியின் நடைமுறைத் தலைவராக நீடிக்கிறார். மேலும் அரசியலமைப்பை கவிழ்த்து சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான சதி தொடர்கிறது.

கடந்த ஆண்டு, பைடென் நிர்வாகத்தின் வெறித்தனமாக கவனம் செலுத்துவது 'ஐக்கியம்' பற்றி ஆகும். ஆளும் வர்க்கத்திற்குள் உள்ள பிளவுகளைப் பொறுத்தவரை, பைடென் ரஷ்யாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்களைப் பயன்படுத்தி குடியரசுக் கட்சியின் மிக வலதுசாரிப் பிரிவுகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்குகிறார். அதாவது வெளிநாட்டில் இராணுவ ஆக்கிரமிப்பின் அடிப்படையில் ஆளும் வர்க்கத்தின் ஐக்கியம்.

எவ்வாறாயினும், ஆளும் வர்க்கத்தின் மிகப்பெரிய அச்சம், கீழிருந்து வரும் சமூக எதிர்ப்பின் வளர்ச்சியாகும். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் ஒரு வர்க்கப் போராட்டத்தின் வடிவத்தை எடுக்கத் தொடங்கியுள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வெளிநடப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினரிடையே அதிகரித்து வரும் கோபத்தில் வெளிப்படுகிறது. இந்த மாதத்தில்தான், சிகாகோ மற்றும் பிரான்ஸ் முழுவதும் ஆசிரியர் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதைத் தொடர்ந்து நியூயோர்க், சான் பிரான்சிஸ்கோ, ஓக்லாண்ட், பாஸ்டன் மற்றும் ஆஸ்திரியா மற்றும் கிரீஸில் மாணவர் எதிர்ப்புகள் மற்றும் வெளிநடப்புக்கள் நடந்தன. தொழிற்சங்கங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட காட்டிக்கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிரான தன்னிச்சையான வேலைநிறுத்தங்களின் அலை துருக்கி முழுவதும் நிலக்கரிசுரங்கங்கள் மற்றும் உலோக தொழிற்சாலைகளில் வெடித்துள்ளது.

ஒரு வெகுஜன தொழிலாள வர்க்க இயக்கம் தோன்றிவிடுமோ என்ற அச்சம்தான் ரஷ்யாவிற்கு எதிரான பிரச்சாரத்திற்கு அதன் வெறித்தனமான மற்றும் கொலைவெறித் தன்மையை அளிக்கிறது. ஒரு தவறான 'தேசிய ஐக்கியத்தை' நிறுவுவதற்கான அவநம்பிக்கையான முயற்சியில் போர் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை அல்ல.

வரலாற்றுரீதியாக இயலாமையான ஆளும் வர்க்கங்கள் கடந்த காலங்களில் தங்கள் வர்க்க ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில் போரின் தற்கொலைக் கொள்கைகளுக்கு அடிக்கடி திரும்பியுள்ளன. 'ஐரோப்பாவின் போரின் உள்காரணங்கள் மற்றும் நோக்கங்கள், 1870-1956' என்ற தலைப்பில் அவர் செய்த ஆய்வில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் ஆர்னோ மேயர் பின்வருமாறு குறிப்பிட்டார். 'அதிக உள் கட்டுப்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில், சிக்கலில் உள்ள அரசாங்கங்கள் போர் இல்லாத சர்வதேச பதட்டங்கள் உள்நாட்டு இணைப்பை வளர்க்க உதவும் என்ற கணிப்பீட்டில் வெளிப்புற ஆபத்துகளின் அச்சுறுத்தலை வெளிப்படுத்த முனைகின்றன”.

இத்தகைய பரிசீலனைகளே 'பயங்கரவாதத்தின் மீதான போருக்கு' மையமாக இருந்தன. இது வெளிநாட்டில் போரை நடத்துவதற்கும் உள்நாட்டில் உள்நாட்டு அடக்குமுறைக்கும் பயன்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறுவதில் உச்சக்கட்டத்தை அடைந்த ஆப்கானிஸ்தானில் போரின் தோல்விக்குப் பின்னர், ஆளும் வர்க்கத்தின் தூண்டுதலாக இருப்பது இன்னும் பேரழிவுகரமான இராணுவக் கொந்தளிப்பின் மூலம் ஒரு வழியைக் கண்டுபிடிப்பதாகும்.

தொற்றுநோய்களின் போது மில்லியன் கணக்கான உயிர்களை தேவையில்லாமல் பலிகொடுக்கத் தயாராக இருக்கும் ஒரு ஆளும் வர்க்கம் இறுதியில் ஒரு போரில் பல்லாயிரக்கணக்கான அல்லது நூற்றுக்கணக்கான மில்லியன் அல்லது பில்லியன்களை தியாகம் செய்யத் தயாராக இருக்கும்.

1991இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பேரழிவு விளைவுகளை ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கிறது. இந்த குற்றச் செயல், தாராளமான உலக முதலாளித்துவத்துடன் அமைதியான முறையில் ஒருங்கிணைவதன் மூலம் ரஷ்யா வளப்படுத்தப்படும் என்ற கூற்றுடன் நியாயப்படுத்தப்பட்டது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் சாத்தியமான ஆபத்தைப் பொறுத்தவரை, கோர்பச்சேவ் மற்றும் யெல்ட்சின் மற்றும் முதலாளித்துவ மறுசீரமைப்பின் ஸ்ராலினிச தத்துவார்த்தவாதிகள் இதை ஒரு வினோதமான மார்க்சிச கற்பனை என்று நிராகரித்தனர். 'ஏகாதிபத்தியம்' என்பது, 1917 அக்டோபர் புரட்சி மற்றும் சோசலிசத்தை நியாயப்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு லெனினிச அல்லது இன்னும் மோசமான ட்ரொட்ஸ்கிசக் கருத்து எனக்கூறப்பட்டது. இந்த 'கண்டுபிடிப்பு' இப்போது முற்றாக ஆயுதமயமாக்கப்பட்டு, ரஷ்யாவை வன்முறையில் சிதைப்பதற்கும் மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் காலனியாக மாற்றுவதற்கும் தயாராக உள்ளது.

நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் சார்பாக ஆளும் புட்டின் ஆட்சி, அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்க முற்போக்கானது என்பது ஒருபுறமிருக்க, இயலாமலும் உள்ளது. இது தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமாக உள்ளதுடன், அது ஏகாதிபத்திய சக்திகளுடனான பேரம் பேசும் முயற்சிகளுக்கும் ரஷ்யாவின் இராணுவ வலிமையைக் கொண்டு அவர்களை அச்சுறுத்துவதற்கும் இடையில் ஊசலாடுகிறது. ரஷ்ய தொழிலாள வர்க்கத்தால் புட்டின் ஆட்சிக்கு எந்த அரசியல் ஆதரவையும் வழங்க முடியாது.

இந்த நிலைமை அவசரமானது. தொழிலாள வர்க்கத்திற்கு போர் ஆபத்தைப் பற்றியும், அதைத் தடுத்து நிறுத்த அரசியல்ரீதியாக தலையிட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்த வேண்டும்.

போருக்கு எதிரான போராட்டம் ஆளும் வர்க்கக் கொள்கையான பாரிய தொற்று, முன்னோடியில்லாத அளவு சமூக சமத்துவமின்மை மற்றும் தீவிர வலதுசாரி மற்றும் பாசிச சர்வாதிகாரத்தின் அதிகரித்துவரும் ஆபத்து ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும். அதாவது, போருக்கு எதிரான போராட்டம் ஆளும் வர்க்கம் மற்றும் முழு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

Loading