கோவிட்-19 பெருந்தொற்று: உலக வரலாற்றில் ஒரு தூண்டுதல் நிகழ்வு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 2 அன்று உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திய 2020 சர்வதேச மே தின இணையவழிபேரணியில் டேவிட் நோர்த் வழங்கிய தொடக்க அறிக்கையை நாங்கள் இங்கு வெளியிடுகிறோம். நோர்த்,WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமாவர்.

தோழர்களே நண்பர்களே,

ஆழ்ந்த துக்கம் சூழ்ந்த நிலைமைகளின் கீழ் நாம் 2020 ஆம் ஆண்டு மே தினத்தை அனுசரித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டத்தில் பங்குபெற்றிருக்கும் அனைவருமே உலகெங்கும் கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் துன்பியலை அறிந்திருக்கிறோம், அதனால் ஆழமான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறோம். ஜனவரியில் தொடங்கிய Covid-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்று துரிதமாகப் பரவி வருகிறது. நேற்றுவரையில் 3,388,012 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ அறிக்கைகளின் படி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 238,877 ஆக உள்ளது. உண்மையான எண்ணிக்கை இன்னும் கணிசமாய் அதிகமானதாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த படுபயங்கர பலி எண்ணிக்கையும், வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து துரிதமாய் அதிகரித்துச் செல்ல இருக்கிறது என்ற நிச்சயமான நிலையும் துயரத்தை உண்டாக்குபவையாக உள்ளன. அன்றாடம், ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. வாழ்வதற்கு இன்னும் கொஞ்ச காலம்தான் இருக்கிறது என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இன்றி, வருங்காலத்தின் மீதான நம்பிக்கையுடன் சமீபத்தில்தான் புத்தாண்டைக் கொண்டாடிய நமது சக மனிதர்களில் பலரும் திடீரென நோய் தொற்றி, பலசமயங்களில் அடுத்த சில நாட்களில் எல்லாம் மறைந்து விட்டார்கள்.

சர்வதேச மேதின இணையவழி பேரணி 2020 – நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு.

ஆனால் துயரத்துடன் சேர்த்து, கோபமும் பெருகிக் கொண்டிருக்கிறது. இந்த பாரிய எண்ணிக்கையிலான உயிரிழப்பானது வெறுமனே உயிரியல் நிகழ்வுப்போக்கின் தவிர்க்கவியலாதவொரு விளைபொருளாக மட்டும் இருக்கவில்லை என்கிற உணர்வு உலகெங்கிலும் உண்டாகியுள்ளது. அரசாங்கங்களின் பதிலிறுப்பானது -அவற்றின் தயாரிப்பின்மை, தட்டுத்தடுமாறுகின்ற திறனற்றதன்மை, மற்றும் உழைக்கும் மக்களின் உயிர்களுக்கு அவர்கள் காட்டும் அப்பட்டமான அலட்சியம் ஆகியவை மனிதத் தேவைகள் முதலாளித்துவ இலாபங்களுக்கும் தனிமனித செல்வக்குவிப்பிற்கும் கீழ்ப்படியச் செய்யப்பட்டதன் விளைபொருளாக உலகெங்கும் பார்க்கப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு முன்பாகத் தான், ஏப்ரல் 1 அன்று, உலகெங்கிலும் உயிரிழப்புகளின் ஊர்ஜிதமான மொத்த எண்ணிக்கை 42,540 ஆக இருந்தது. அமெரிக்காவில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,079 ஆக இருந்தது. மே 1 க்குள்ளாக, உலகளாவிய உயிரிழப்பு எண்ணிக்கை 238,877 ஐ எட்டியிருந்தது. அமெரிக்காவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, நேற்றைய நிலவரப்படி, 63,006 ஆக அதிகரித்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தின் 30 நாட்களுக்குள்ளாக, சுமார் 200,000 பேர் இந்த வைரஸால் மடிந்து போயிருக்கின்றனர். அவர்களில் 60,000 பேர் அமெரிக்கர்கள். ஆனால் அதே 30 நாட்களின் சமயத்தில், மரணம் மற்றும் துயரத்தின் அந்த கொடுமையான காட்சிகளுக்கு மத்தியில், டோவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரி 30 சதவீதத்திற்கும் அதிகமாய் உயர்ந்திருக்கிறது. இது 30 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்தின் மிகவும் வெடிப்பான அதிகரிப்பாகும்! வோல் ஸ்ட்ரீட் மரணங்களைக் கொண்டாடுவதன் முக்கியத்துவம் என்ன?

அதற்கான பதில் என்னவென்றால்:

இந்த பெருந்தொற்றானது முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் அறநெறி திவால்நிலையை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு வரலாற்று நிகழ்வாக உள்ளது. முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கைகளைக் கட்டுப்படுத்துகின்ற மற்றும் தீர்மானிக்கின்ற பெருநிறுவன-நிதியியல் சிலவராட்சியினருக்கும் தொழிலாள வர்க்கத்தின் தேவைகள் மற்றும் நலன்களுக்கும் இடையில் நிலவுகின்ற இணைக்கப்பட முடியாத பெரும்பிளவை இது அம்பலப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது.

இப்போதைய உலகளாவிய நெருக்கடி மீதான பகுப்பாய்வில், உலகசோசலிசவலைத்தளம் இந்தப் பெருந்தொற்றை, ஒரு “தூண்டுதல் நிகழ்வு” (trigger event) என்று வரையறை செய்திருக்கிறது. 1914 ஜூன் 28 இல் ஆஸ்திரிய இளவரசர் பெர்ணாண்ட் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டதுடன் இதனை ஒப்பிட முடியும். அந்த சம்பவமானது ஐந்து வார காலத்திற்குப் பின்னர் 1914 ஆகஸ்டின் ஆரம்பத்தில் முதலாம் உலகப் போரின் வெடிப்புக்கு துரிதமாக இட்டுச்சென்றது. அந்தப் படுகொலை நடக்காமல் இருந்திருந்தால், ஆகஸ்டில் அந்தப் போர் வந்திருக்குமா என்பதே சந்தேகத்திற்குரியது. ஆனால் சற்று கூடிய அல்லது குறைந்த காலத்தில், அநேகமாக 1914 இன் குளிர்காலத்திலோ அல்லது அடுத்த ஆண்டிலோ, ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் புவியரசியல் முரண்பாடுகள் ஒரு இராணுவ வெடிப்பிற்கு கொண்டுசென்றிருக்கும். அந்தப் படுகொலையானது வரலாற்று நிகழ்ச்சிப்போக்கை துரிதப்படுத்தியது, என்றாலும் அதற்கு முன்பே நிலவிய மிகவும் எளிதில் தீப்பற்றத்தக்க சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளை அதனை தீர்மானித்தது.

எதிர்வரவிருக்கும் ஆண்டுகளில், வரலாற்றாசிரியர்கள் 2020 ஆம் ஆண்டின் மிகப்பெரும் தொற்றுநோயை திரும்பிப் பார்க்கையில், இந்த நிகழ்வு எவ்வாறு முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கிவீச இட்டுச்சென்ற புரட்சிகர எழுச்சிகளைத் தூண்டியது என்ற கேள்வியை தவிர்க்கவியலாது கேட்டுக் கொள்வார்கள். அறிஞர்கள் இந்த நிகழ்வுகளைத் திறனாய்வு செய்கையில், ஒரு பெருந்தொற்று மிக அண்மையில் தாக்கவிருப்பது குறித்து முந்தைய இரண்டு தசாப்தங்களின் போது விஞ்ஞானிகள் கொடுத்த எச்சரிக்கைகள் தொடர்பாக உயரடுக்கினர் செயல்படத் தவறியமை பற்றி தமது கவனத்தை ஈர்ப்பார்கள். அமெரிக்காவை அதன் குடிமக்களுக்கு போதுமான மருத்துவப் பராமரிப்பு கொடுக்கவியலாத நிலையில் விட்டிருந்த, முற்றிலும் முதலாளித்துவமயமான ஒரு நாட்டின் சமூக உள்கட்டமைப்பின் அவலமான நிலையை அவர்கள் குறித்துக் கொள்வார்கள். சிலவராட்சியினரின் கொள்ளைப் பேராசை, தேசிய ஆதாரவளங்களை அவர்கள் சூறையாடியமை, வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்களுக்கும் மற்றும் கையறுநிலையில் இருந்த சிறு வணிகங்களுக்கும் பொருளாதார நிவாரணம் வழங்க அவர்கள் மறுத்தமை, மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் வேலைக்குத் திரும்புவதற்கு கொடூரமான விதத்தில் அவர்கள் பலவந்தப்படுத்தியமை ஆகியவற்றுக்கு வரலாற்றாசிரியர்கள் நிச்சயமாக முக்கியத்துவமளித்து எடுத்துரைப்பார்கள். அத்துடன், அதிதீவிரமான ஒரு நெருக்கடியின் தருணத்தில், வெள்ளை மாளிகையானது சமூகப் பொறுப்பு சற்றுமில்லாத மனநோயுற்ற ஒருவரால் எவ்வாறு ஏன் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது என்பதையும் விளக்குவதற்கு வரலாற்றாசிரியர்கள் முனைவார்கள்.

இந்தக் கேள்விகளுக்கு, அங்கு நிச்சயமான எண்ணிக்கையில் கூடியளவில் இருக்கும் மார்க்சிஸ்டுகள், முதலாளித்துவ வர்க்கம், முதலாளித்துவ அமைப்புமுறையின் அமைப்புமுறைரீதியான நெருக்கடியை எதிர்கொள்ள பிரயோகித்த அதே ஒட்டுண்ணித்தனமான பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளை தொடர்வதையும் தீவிரப்படுத்துவதையுமே பெருந்தொற்றுக்கான பதிலிறுப்பாக முன்வைத்தது என்பதை விளக்குவார்கள். இந்த நெருக்கடியானது நிதிமயமாக்கம் அதாவது, கடன் விரிவாக்கம் மூலமாக செல்வ உருவாக்கத்தை உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் இருந்து முன்னெப்போதினும் அதீதமாக பிரித்து விட்டமை என்ற ஒட்டுண்ணித்தனமான நிகழ்ச்சிப்போக்கில் நச்சுத்தனமான வெளிப்பாட்டைக் கண்டிருக்கிறது. குறிப்பாக, 2008-2009 பொறிவுக்குப் பிந்தைய காலத்தில், அமெரிக்காவில் பெடரல் ரிசர்வும் ஐரோப்பாவில் மத்திய வங்கிகளும், வங்கிகளை, பெருநிறுவனங்களை மற்றும் ஒட்டுமொத்தமாக வோல் ஸ்ட்ரீட்டினை அவை முன்செய்திருந்த பொறுப்பற்ற ஊகவணிகத்தின் பின்விளைவுகளில் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சி மீட்கத் தலையிட்டன. பணத்தை அச்சடித்து இறைப்பது (Quantitative Easing) என்று அழைக்கப்பட்ட 2008-2009 மீட்பு நடவடிக்கைகள், தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலைத் தீவிரப்படுத்திய அதேநேரத்தில் அமெரிக்க மற்றும் உலகளாவிய பங்குச்சந்தைகளை புதிய உச்சங்களுக்கு கொண்டுசென்ற கட்டுப்பாடற்ற ஊகவணிகத்தின் ஒரு தசாப்தம் சூழ்வதற்கான நிலைமைகளை உருவாக்கித் தந்தன.

கடனை எரிபொருளாய் கொண்டு உந்தப்பட்ட அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தின் ஆபத்தான நிலை, பெருந்தொற்று வெடிப்பதற்கு முன்பேயும் மிகத் தெளிவானதாய் வெளிப்பட்டிருந்தது. 2018 இன் பிற்பகுதியில், அமெரிக்க பெடரல் ரிசர்வ், வோல் ஸ்ட்ரீட்டின் பங்கு மதிப்புகளிலான திடீர் வீழ்ச்சியை வட்டி விகிதங்களிலான மேலதிக வெட்டுக்களைக் கொண்டு ஈடுசெய்ய விழைந்தது. 2020 இன் தொடக்கத்திற்குள்ளாக, பங்கு மதிப்புகள் முன்கண்டிராத உச்சங்களைத் தொட்டிருந்தன.

பெருந்தொற்றின் வெடிப்பு, உற்பத்தியின் ஒரு திடீர் நிறுத்தத்திற்கு தள்ளி, மார்ச் மாதத்தில் வோல் ஸ்ட்ரீட்டின் பாரிய பங்கு விற்றுத்தள்ளலுக்கு இட்டுச்சென்றது. தொழிலாள வர்க்கத்தின் உழைப்புசக்தியை சுரண்டுவதன் மூலமாக அடையப்படுகின்ற இலாப பாய்ச்சல் திடீரென தடைப்பட்டது. வோல் ஸ்ட்ரீட் மதிப்புகளின் கற்பனைத்தன்மையை அம்பலப்படுத்துகின்ற விதமாக, நவீன வரலாற்றில் வேறெந்த வீழ்ச்சியினும் துரித வேகத்தில் ஒரு சில நாட்களில் எல்லாம் பங்கு மதிப்புகளில் டிரில்லியன் கணக்கில் காணாமல் போனது. இந்த பொறிவின் வேகமானது பங்கு மதிப்புகளிலான முந்தைய உயர்வின் உண்மையற்ற தன்மையால் தீர்மானிக்கப்பட்டதாய் இருந்தது.

நாசத்திற்கு முகம்கொடுத்த நிலையில், நிதிய-பெருநிறுவன சிலவராட்சியானது தங்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மீண்டும் பெடரல் ரிசர்வை நோக்கித் திரும்பியது. ஆனால் இந்த முறை அதற்குத் தேவைப்பட்டது வெறும் பில்லியன் கணக்கான டாலர்கள் அல்ல, மாறாக டிரில்லியன் கணக்கான டாலர்கள் ஆகும். பணத்தை அச்சடித்து இறைப்பதன் (Quantitative Easing) ஒரு புதிய பதிப்பு உருவாக்கப்பட்டது. 2008 பொறிவுக்கு பதிலிறுப்பாக உருவாக்கப்பட்டிருந்த மூலப் பதிப்பில், பெடரல் ரிசர்வ், பெருநிறுவன வரவு-செலவு அறிக்கைகளில் இடம்பெற்றிருந்த பெறுமதியற்ற சொத்துக்களை வாங்குவதில் மாதத்திற்கு சுமார் 80 பில்லியன் டாலர்களை செலவிட்டிருந்தது.

பணத்தை அச்சடித்து இறைப்பதன் புதிய பதிப்பில், சொத்துக்களை வாங்குவதற்கான பெடரல் ரிசர்வின் ஒதுக்கீட்டுத் தொகை நாளுக்கு 80 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

பெடரல் ரிசர்வின் பரந்தளவிலான கடன் விரிவாக்கத்திற்கு சேவையாற்றத் தேவைப்படும் வருவாய், தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலை அதிதீவிரப்படுத்தக் கோருகிறது. இந்தத் தேவைதான், தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் அமைந்திருக்கும் நிலைமைகளின் கீழும் கூட அவர்களை வேலைக்குத் திரும்பக் கோருகின்ற, ஊடகங்களால் தூண்டப்படுகின்ற, ஒரு பிரச்சாரத்தை உண்டாக்கியிருக்கிறது.

ஆளும் உயரடுக்கிற்கு டிரில்லியன் கணக்கான டாலர்களை கையளித்திருப்பது பரவலான வெறுப்பையும் கோபத்தையும் தூண்டியதுடன் மட்டும் நிற்கவில்லை. முதலாளித்துவ அமைப்புமுறைக்கான அங்கீகரிப்பு எதன் மீது தங்கியிருக்கிறதோ அந்த ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் சித்தாந்த அடித்தளத்தையும் பலவீனப்படுத்தியிருக்கிறது. முதலாளி பணத்தை முதலீடு செய்கின்றார் அதனால் உருவாகும் ஆபத்திற்கும் முகம்கொடுக்கின்றார் என்பதுதான் ஓயாமல் பிரகடனம் செய்யப்பட்டு வந்திருப்பதாகும். ஆனால் இந்த கூற்றுக்களில் ஒன்றும் தாக்குப்பிடிப்பதாயில்லை. நிதி ஆதாரங்கள் சமூகத்தால் வழங்கப்படுகின்றன மற்றும் முடிவற்ற பிணையெடுப்புகளின் வாக்குறுதி மூலமாக ஆபத்து என்பதே இல்லாமல் செய்யப்படுகிறது.

பெருந்தொற்றுக்குப் பதிலிறுப்பாக ஆளும் வர்க்கத்தினால் பின்பற்றப்பட்டு வருகின்ற கொடூரமான கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தை தீவிரமயப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆயினும் இந்த தீவிரமயமாதல் பெருந்தொற்றின் வெடிப்புக்கு முன்பாகவே முன்னேறிக் கொண்டிருந்ததாகும். கடந்த பல ஆண்டுகள் வர்க்க மோதலில் ஒரு பெரும் அதிகரிப்பைக் கண்ணுற்றிருக்கின்றன. மார்ச்சில், பெருந்தொற்று அதன் ஆரம்ப தோற்றத்தை முன்நிறுத்திக் கொண்டிருந்த அந்த வேளையில், ஒரு முக்கியமான ஏகாதிபத்திய சிந்தனைக் குழாமான மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS) ஆல் வெளியிடப்பட்டிருந்த சமூக மோதல் குறித்த ஒரு பகுப்பாய்வு எச்சரித்தது என்னவென்றால்:

வரலாற்றில் முன்கண்டிராத எண்ணிக்கை, வீச்சு மற்றும் அளவைக் கொண்ட உலகளாவிய பாரிய போராட்டங்களின் ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். …

2019 இன் முதல் நான்கு மாதங்களில் மட்டும், பெய்ரூட்டில் இருந்து பார்சிலோனா வரை, ஹாங்காங் முதல் ஹராரே வரை, 37 க்கும் அதிகமான நாடுகள் பாரிய அரசாங்க எதிர்ப்பு இயக்கங்களைக் கண்டன. 2019 முழுமையிலும், 114 நாடுகளில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. இது ஒரு தசாப்தத்திற்கு முன்பிருந்ததை விடவும் 31 சதவீதம் அதிகமானதாகும். …

குறிப்பிடத்தக்கதாய், முன்னேறிய பொருளாதாரங்கள் இந்த எழுச்சி அலைக்கு தப்ப முடிந்திருக்கவில்லை. உண்மையில், சாமானியக் குடிமக்களது அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் உலக சராசரியை விடவும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் துரித வேகத்தில் வளர்ச்சி கண்டன. 2017 ஜனவரி 20 அன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதலாக 2020 ஜனவரி 1 வரையான காலத்தில், அனைத்து அமெரிக்க மாநிலங்களிலுமான 16,000 ஆர்ப்பாட்டங்களில் கிட்டத்தட்ட 11.5 மில்லியன் அமெரிக்கர்கள் பங்குபெற்றிருந்தனர். அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரியதாய் அமைந்த ஐந்து ஆர்ப்பாட்டங்களும் இதில் அடங்கும்.

CSIS மனக்கலக்கத்துத்துடனான பின்வரும் முன்கணிப்பை முன்வைக்கின்றது:

வரலாற்றின் ஒரு பெருந் திருப்பத்தில், அநேகமாய் புதிய கொரோனா வைரஸ் தொற்று வெடிப்பின் காரணத்தால், சமீப வாரங்களில் ஆர்ப்பாட்டங்கள் ஓசையிழக்கச் செய்யப்பட்டிருக்கின்றன. நகர்ப்புறப் பகுதிகளில் அரசாங்கத் தடைகள் மற்றும் பெரும் கூட்டங்களில் பங்குபற்றி நோயாபத்துக்கு முகம்கொடுக்க குடிமக்கள் காட்டுகின்ற தயக்கம் ஆகிய இரண்டு காரணங்களினாலும் குறுகிய காலத்திற்கு இந்த போராட்டங்களை அநேகமாக கொரோனா வைரஸால் அடக்கி வைக்க முடியலாம். ஆயினும், அநேகமாக இந்த பெருந்தொற்றின் வருங்காலப் பாதையைப் பொறுத்து, அரசாங்க பதிலிறுப்புகளே கூட பாரிய அரசியல் ஆர்ப்பாட்டங்களது இன்னொரு தூண்டுபொறியாகலாம்.

வெகுஜன ஆர்ப்பாட்டங்களது இந்த எழுச்சியின் இன்னுமொரு முக்கியமான அம்சத்திற்கு CSIS கவனம் ஈர்க்கிறது:

வெகுஜனப் போராட்டங்களது இந்த சகாப்தத்தின் இன்னுமொரு கவலைக்குரிய அடையாளமாக இருப்பது அவற்றின் தலைமையற்ற தன்மைக்கிடையிலான பொதுவான தொடர்பாகும். மக்கள் தற்போதைய தலைவர்கள், உயரடுக்கினர் மற்றும் ஸ்தாபனங்களில் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதுடன் விரக்தியிலும் பலசமயங்களில் வெறுப்பிலும் வீதிகளில் இறங்குகின்றனர்.

பரந்துபட்ட தொழிலாளர்களது தலைமையில் இன்னும் ஒரு புரட்சிகர மார்க்சிசக் கட்சி இல்லை என்பது உண்மையே. ஆயினும், மார்க்சிச அதாவது, ட்ரொட்ஸ்கிச இயக்கம் வெகுஜனங்களின் தலைமையை வென்றெடுக்கும் நிகழ்ச்சிப்போக்கானது துரிதமாக முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. உலகசோசலிசவலைத்தளத்தின் வாசகர் எண்ணிக்கையிலான வளர்ச்சி மாதத்திற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாசகர்களைக் கொண்ட ஒரு சர்வதேசரீதியாக வாசிக்கபடுவதாக இருக்கிறது. இது தொழிலாள வர்க்கத்தின் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான பிரிவுகளுக்குள்ளாக ஒரு புரட்சிகர சோசலிச நோக்குநிலை அபிவிருத்தி காண்பதை சுட்டிக்காட்டுகிறது.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலையில், முதலாளித்துவ நெருக்கடியில் இருந்து எழுகின்ற புறநிலைமை காரணிகள் தீர்மானகரமானதாக இருக்கின்றன என்று நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான லியோன் ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். முதலாளித்துவ வரலாற்றின் மிகப்பெரும் நெருக்கடியில் இருந்து எழுகின்ற, வர்க்கப் போராட்டத்தின் தர்க்கவியலானது, புரட்சிகர முடிவுகளுக்கு வருவதை நோக்கி தொழிலாள வர்க்கத்தை உந்துகிறது. ஆளும் வர்க்கம் சமூகத்தை எவ்வாறு சூறையாடுகிறது, இலவசமாகக் கொடுக்கப்படுகின்ற டிரில்லியன் கணக்கான பணத்தைக் கொண்டு எவ்வாறு தன் வங்கிக் கணக்குகளை நிரப்பிக் கொள்கிறது என்பதைக் கண்ணுறுகின்றபோது, முதலாளித்துவ சொத்து உரிமைகள் மீது தொழிலாளர்கள் வைத்திருந்த மரியாதை இல்லாதொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எதிரான பழைய தப்பெண்ணங்கள் சிதறிக் கொண்டிருக்கின்றன.

இறுதியாக, தொழிலாள வர்க்கமானது, இந்த நெருக்கடியின் ஊடாக அது பயணிக்கின்ற வேளையில், உலகெங்கிலும் உழைக்கும் பரந்த மக்களின் பொதுவான போராட்டம் மற்றும் தலைவிதி குறித்து கண்டுகொள்ளாமல் கடந்துசெல்ல முடியாது. பெருந்தொற்றானது ஒரு உலக அனுபவமாய் இருக்கிறது, ஒரு உலகளாவிய தீர்வை அவசியமாக்குகிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், இனம், நிறம், தேசியம் மற்றும் பாலினப் பிரச்சினைகள் எல்லாம் முக்கியத்துவமற்றவையாகிக் கலைகின்றன. பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டமானது மனிதகுலத்தின் உற்பத்தி ரீதியான மற்றும் முற்போக்கான கூட்டுழைப்புக்கு தடுக்கும் அனைத்து தேசியத் தடைகளையும் தாண்டிச்செல்லக் கோருகிறது.

Loading