முன்னோக்கு

அமெரிக்க நிர்வாகத்தின் தோல்விகளுக்கு சீனாவை பலிக்கடா ஆக்குதல்

ட்ரம்ப் மற்றும் பொம்பியோவின் "பெரும் பொய்"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

“பெரும் பொய்யின்" ஒரு நவீனகால வடிவத்தில், ட்ரம்ப் நிர்வாகம் இந்த கோவிட்-19 தொற்றுநோய் சீன அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கைகளின் விளைபொருள் என்று வாதிட்டு வருகிறது.

ஞாயிறன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஃபாக்ஸ் நியூஸ் உடனான "Town Hall” நிகழ்ச்சியில், மில்லியன் கணக்கான ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களை தொற்றுக்கு உட்படுத்துவதற்கான பிரத்யேகமான நோக்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சீனாவைக் குற்றஞ்சாட்டினார்.

வூஹானின் ஓர் ஆய்வகத்தில் தான் இந்த புதிய கொரோனா வைரஸ் தோன்றியது என்ற பொய்யான வாதத்தை மீண்டும் மீண்டும் கூறிய பின்னர், இதை சீனா மூடிமறைக்க முயன்றது என்றும் கூறிய ட்ரம்ப் அறிவிக்கையில், “மக்கள் அமெரிக்காவுக்கும் உலகின் வேறு இடங்களுக்கும் செல்வதை அவர்கள் தடுக்கவில்லை. … அவர்கள் கூறினார்கள், பாருங்கள், சீனாவில் இது மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்த இருக்கிறது, உலகின் ஏனைய பகுதிகளிலும் அதேபோல் தொற்றுவதற்கு விடுவோம், என்றவர்கள் கூறினார்கள்" என்றார்.

Secretary of State Mike Pompeo and President Donald Trump at Osan Air Base, Korea in 2019. (Image Credit: Official White House Photo by Shealah Craighead)

“நம் நாட்டில் அது நுழைவதை அவர்கள் அனுமதித்தார்கள், அது மற்ற நாடுகளுக்குச் செல்வதையும் அவர்கள் அனுமதித்தார்கள்,” ட்ரம்ப் கூறினார்.

இதுபோன்ற வாதங்கள் உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளால் சமீபத்திய நாட்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஞாயிறன்று காலை, வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ அறிவிக்கையில், இந்த வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் தான் தோன்றியது என்பதற்கு அங்கே "நிறைய ஆதாரம்" உள்ளது என்றார், தொடர்ந்து கூறுகையில், “நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உலகில் தொற்றுநோயை ஏற்படுத்தும் வரலாறு சீனாவுக்கு உண்டு,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஞாயிறன்று ஒரு பிரத்யேக நேர்காணலில், வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவார்ரோ அறிவிக்கையில், சீனா "உலகில் தொற்றுநோயை விதித்துள்ளது" என்றார். அவர் தொடர்ந்து கூறினார், நான் “வரவிருக்கும் சீன போர்கள் என்ற புத்தகம் ஒன்றை 2006 இல் எழுதினேன். அதில் பக்கம் 150 இல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வைரஸ் தொற்றுநோயை உண்டாக்கும், அது உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லும் என்று முன்கணித்தேன். சீனா இப்போது உலகில் என்ன நோய் தொற்றை ஏற்படுத்தி உள்ளதோ அது இப்போது எனது மிகக் கொடூரமான கற்பனைக்கும் அப்பாற்பட்டுள்ளது,” என்றார்.

இவை ஆதாரமற்ற ஆணவமான பொய்கள். ட்ரம்ப், பொம்பியோ, நவார்ரோ அல்லது வேறு எவருமே அவர்களின் வாதங்களுக்கு ஆதாரமாக எந்தவொரு துண்டு ஆதாரத்தையும் வழங்கவில்லை.

இந்த அணுகுமுறை 75 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதம் பொறிந்து போன நாஜி ஜேர்மனியின் அணுகுமுறைகளை நினைவூட்டுகின்றன. மூன்றாம் குடியரசு சிதைந்ததற்கு மத்தியில், ஏப்ரல் 30, 1945 இல் தற்கொலை செய்து கொண்ட ஹிட்லர் போலாந்து மற்றும் செக்கோவேஸ்கியா மீது படையெடுத்ததையும் ஏனைய குற்றங்களை நியாயப்படுத்தவும் இதே போன்ற முறையைத்தை தான் பயன்படுத்தினார்.

இந்த "பெரிய பொய்யின்" நோக்கம் அதன் படுமோசமான அடாவடித்தனத்தைக் கொண்டு பயமுறுத்துவதற்காகும். விக்கிப்பீடியா தகவலின்படி, அது "ஒரு பிரச்சார உத்தி, தர்க்கரீதியில் போலிவாதமாகும். ஒருவருக்கு 'இந்தளவுக்கு இழிவாக உண்மையை திரித்துகூறும் முரட்டுத்தனமான வீம்பு இருக்கும்' என்று யாருமே நம்பமுடியாத அளவுக்கு 'மிகப்பெரிய' பொய்யைப் பயன்படுத்துவது குறித்து, அடோல்ஃப் ஹிட்லர் 1925 இல் அவரின் Mein Kampf நூலில் ஆணைகளை வரையறுத்தபோது, இதே வெளிப்பாட்டைத் தான் காட்டினார்.”

இந்த அணுகுமுறையை ட்ரம்ப் பயன்படுத்துவதானது, நடைமுறையளவில் மக்கள் தொகையின் அதிக பிரிவுகள் தொற்றுநோய்க்கு உள்ளாகும் விதத்தில் இந்த தொற்றுநோய் பரவலை மெதுவாக்க எந்தவித திட்டமிட்ட முயற்சியையும் அமெரிக்க அரசாங்கம் கைவிட்டுள்ளது என்ற தருணத்தில் வருகிறது.

ட்ரம்ப் நிர்வாகம் அதன் மீதான பழியிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வழி காண முயன்று வருகிறது. என்ன நடந்தாலும், அது சீனாவின் தவறு. அதன் வேலைத்திட்டம் வேகமாகவும் கணிசமானளவுக்கும் உயிரிழப்புகளை அதிகரிக்கும் என்று தெரிந்துமே கூட, வெள்ளை மாளிகையின் நாசகரமான கொள்கைகள் எண்ணிக்கையின்றி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் போது, சமூக பதட்டங்களை சீனாவுக்கு எதிராக திருப்பி விட முடியுமென வெள்ளை மாளிகை நம்புகிறது.

இத்தகைய குற்றச்சாட்டுக்கள் ஒரு தீர்க்ககரமான தர்க்கத்தைக் கொண்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைச் சீன அரசாங்கம் வேண்டுமென்றே அனுமதித்தது மற்றும் ஊக்குவித்தது என்றால், இது செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களை விட பெரியளவில் நுண்ணுயிரி போர்முறை நடவடிக்கையாக இருக்கும். சீனா அமெரிக்காவுக்கு எதிராக போர் நடவடிக்கை எடுத்தது என்பதே இதன் அர்த்தமாக இருக்கும்.

மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை மீது அதன் சொந்த குற்றகரமான அலட்சியைத்தை நியாயப்படுத்துவதற்காக, கடிவாளமின்றி அடாவடித்தனத்துடன், ட்ரம்ப் நிர்வாகம் சீனா உடனான இராணுவ மோதலைத் தவிர்க்க முடியாததாக ஆக்கும் ஒரு நிலைமையை உருவாக்கி கொண்டிருக்கிறது.

இந்த வாதங்கள் ட்ரம்பின் சொந்த உளவுத்துறை அமைப்புகளின் கண்டுபிடிப்புகளாலேயே கூட கீழறுக்கப்படுகின்றன. நியூ யோர்க் டைம்ஸ் ஏப்ரல் 30 இல் பிரசுரித்த ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது, “ஓர் ஆய்வகத்துடன் தொடர்புடைய முடிவான ஆதாரம் கிடைக்கும் என்பதன் மீது பெரும்பாலான உளவுத்துறை அமைப்புகள் ஐயுறவு கொண்டுள்ளன, இந்த கொரோனா வைரஸ் மரபணுக்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், எச்.ஐ.வி., இபொலா மற்றும் சார்ஸ் வைரஸ்கள் விடயத்தைப் போலவே, இதுவும் ஆய்வகம் அல்லாத இடத்தில் விலங்கிலிருந்து மனிதருக்கு தொற்றி இருப்பதற்கே அதிகரித்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.”

ஆனாலும் நிர்வாகத்தின் பொய்களுக்கு ஊடங்களும் அரசியல் ஸ்தாபகமும் ஒட்டுமொத்தமாக ஒத்துழைக்கின்றன, அவை அந்த பொய்களை இட்டுக்கட்டப்பட்டவையாக அம்பலப்படுத்தவில்லை மாறாக நியாயமான நிலைப்பாடுகளாக அவற்றை முன்நிறுத்துகின்றன. அவர்களுக்குள் என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும், சீன-விரோத பிரச்சாரம் என்பது ஒட்டுமொத்த ஆளும் வர்க்க ஆதரவுடன் தீர்க்கமான புவிசார் மூலோபாய நலன்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் நிர்பந்தங்களுக்குச் சேவையாற்றுகிறது.

ஞாயிறன்று தலையங்கத்தில், ஜனநாயகக் கட்சியுடன் அணிசேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், “ஓர் உலகளாவிய பிரச்சார நடவடிக்கை மூலமாக இந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான பொறுப்பைத் தவிர்ப்பதற்கான சீனாவின் முயற்சி" என்று கண்டித்தது. அது அறிவித்தது, “இதுபோன்ற விரோத மனோபாவத்ததிற்கான விடையிறுப்பு, சமாதானப்படுத்தலாக இருக்க முடியாது,” என்றது. கொரோனா வைரஸ் சம்பந்தமாக சீன அரசாங்கத்திடம் "சுருண்டு வருவதாக" ட்ரம்பைத் தாக்கி, கடந்த மாதம், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் ஒரு விளம்பரம் வெளியிட்டார்.

இந்த சீன-விரோத கதையாடலின் அனைத்து வகைப்பாடுகளான சீனா இந்த வைரஸை ஒரு நுண்ணுயிரி-ஆயுதமாக வேண்டுமென்றே உருவாக்கியது என்ற தத்துவம், இந்த வைரஸ் ஓர் ஆய்வகத்திலிருந்து வெளியேறியது என்ற வாதம், இந்த நோயைக் குறித்த விபரங்களை சீனா உலகிடமிருந்து மூடிமறைத்தது என்ற குற்றச்சாட்டுக்கள் பகிரங்கமாக கிடைக்கும் தகவல்களுடன் முரண்படுகின்றன.

வூஹான் நகராட்சி சுகாதார ஆணையம் டிசம்பர் 31, 2019 இல் நிமோனியா நோயாளிகள் பலரைக் குறித்து பகிரங்கமாக அறிவித்தார். கோவிட்-19 ஐ உண்டாக்கும் இந்த வைரஸைச் சீனா ஜனவரி 7 இல் கண்டறிந்து, இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக் கூடியது என்று சீன விஞ்ஞானிகள் எச்சரித்தனர்.

ஆனால் சீன சுகாதார அதிகாரிகளின் முதல் பொது அறிக்கைகளுக்கு அண்மித்து எட்டு வாரங்களுக்குப் பின்னரும் கூட அமெரிக்காவில் கோவிட்-19 மீது திட்டமிட்ட பரிசோதனைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. சீன அதிகாரிகள் முதலில் எச்சரித்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மார்ச் 4 இல் மட்டுந்தான் அமெரிக்கா 1,000 கோவிட்-19 பரிசோதனைகளை நடத்தியது. சீனா, தென் கொரியா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளும் அண்மித்து பெப்ரவரி வரையில் மில்லியன் கணக்கான பரிசோதனைகளை நடத்தி இருந்தன.

அந்த வைரஸ் அமெரிக்கா எங்கிலும் பரவிய போதும் கூட, ட்ரம்பும், ஊடகங்களும், காங்கிரஸூம் திட்டமிட்டு அந்த நோயின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டினர். ஏறத்தாழ பெப்ரவரி 28 இக்குப் பின்னர் இருந்து, ட்ரம்ப் அந்த கொரோனா வைரஸ் "ஓர் அதிசயத்தை" போல "காணாமல் போய்விடும்" என்று வாதிட்டு வந்தார். கோவிட்-19 நாடெங்கிலும் வேகமாக பரவி வருகிறது என்று கூறியவர்களை, “இது அவர்களின் புதிய புரளி,” என்று கூறி கண்டித்தார்.

நிதியியல் செல்வந்த தட்டுக்களின் பிரதிநிதியாக செயல்பட்டு வரும் ட்ரம்ப் நிர்வாகம், இந்த தொற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக எதையும் செய்யவில்லை. வோல் ஸ்ட்ரீட்டுக்கு ஒரு பாரிய கையளிப்பை முடுக்கிவிடுவதற்காக இந்த நெருக்கடியைச் சாதகமாக்கிக் கொண்ட பின்னர், ஆளும் வர்க்கம் பத்து அல்லது நூறாயிரக் கணக்கான உயிர்களை விலையாக எடுக்கும் வேலைக்குத் திரும்புவதற்கான ஒரு பாரிய பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.

சீனாவுக்கு எதிரான இந்த "பெரிய பொய்" அவர்களின் சொந்த குற்றகரமான அலட்சியத்திலிருந்து தப்பித்துக் கொள்வது மற்றும் அவர்கள் இப்போது நடைமுறைப்படுத்தி வருகின்ற குற்றகரமான கொள்கைகளை மூடிமறைப்பதற்கான ஒரு முயற்சி ஆகிய இரண்டுக்குமானதாகும்.

Loading