line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 2: ஏகாதிபத்திய சகாப்தத்தில் மூலோபாயமும் தந்திரோபாயங்களும

 

Print part 2 on single page

9.புரட்சிகர மூலோபாயத்தின் மறைத்திட்டமிடல் பண்பு

முதலில் பார்த்தால் போல்ஷிவிக்கின் மூலோபாயத்தின் ''மறைத்திட்டமிடல்'', ("Maneuvering") "வளைந்து கொடுக்கும் தன்மை" ஆகியவை வரைவு வேலைத்திட்டத்தில் முழு மௌனத்துடன் கடக்கப்பட்டு விட்டதுபோல் தோன்றும். இந்தப் பரந்த பிரச்சினை முழுவதிலிருந்தும் காலனித்துவ முதலாளித்துவ வர்க்கத்துடன் உடன்பாட்டினைக் கொண்டுள்ள ஒரே ஒரு கருத்துத்தான் எடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும்கூட, சமீப காலத்திய சந்தர்ப்பவாதம், இன்னும் ஆழ்ந்த முறையில் வலதிற்கு ஊசலாடி செல்லுகையில், முக்கியமாக மறைத்திட்ட மூலோபாயத்தின் (Maneuver Strategy) பதாகையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. கோட்பாடற்ற சமரசம் என்பதால் நடைமுறையில் தீமை பயக்கக் கூடியவற்றுடன் உடன்பாடுகள் காண மறுப்பது "வளைந்து கொடுக்கும் தன்மை" இல்லாத நிலை என்று கூறப்பட்டது. பெரும்பான்மை தன்னுடைய அடிப்படைக் கோட்பாட்டை மறைத்திட்டம் என்று அறிவித்தது. ராடிக் மற்றும் லாபொலெட் உடன் 1925லேயே சினோவியேவ் மறைத்திட்டமிட்டார். அதற்குப் பின் சியாங் கேய்-ஷேக், புர்செல் மற்றும் குலாக்குகளுடன் ஸ்ராலினும் புக்காரினும் பின்னர் மறைத்திட்டமிட்டனர். இவ்வமைப்பு தொடர்ந்து கட்சியுடன் மறைத்திட்டமிட்டது. இப்பொழுது இவ்வமைப்புடன் சினோவியேவும் ராமனேவும் மறைத்திட்டமிடுகின்றனர்.

அதிகாரத்துவ தேவைக்கான மறைத்திட்டங்களில் (Maneuvers) தேர்ச்சிபெற்ற ஒரு வல்லுனர்களின் மொத்த படையினரில், புரட்சிகர போராளிகளாக ஒருபோதும் இருந்த்திராதவர்கள் மற்றும் இப்பொழுது புரட்சி அதிகாரத்தை ஏற்கனவே வென்ற பின்னர் அதன் முன் பெரும் ஆர்வத்துடன் தலைவணங்கிநின்றவர்கள் ஆகியோரைக் கொண்டிருந்தது. கன்டோனில், போரோடின் மறைத்திட்டமிடுகிறார். றாபஸ் பெய்ஜிங்கில் செய்கிறார்; டி.பெட்ரோவ்ஸ்கி அதையே ஆங்கில கால்வாயில் செய்கிறார்; பெப்பர் அமெரிக்காவில் மறைத்திட்டமிடுகிறார்; பொலினிசியாவிலும் பெப்பர் அதைச் செய்ய முடிகிறது; சற்று ஒதுங்கி இருந்து மார்டிநோவ் மறைத்திட்டமிடுகிறார்; ஆனால் அதற்கு ஈடு செய்யும் வகையில் உலகின் ஒவ்வொரு மூலையிலும் மறைத்திட்டமிடுகிறார். தங்களுடைய முதுகுத் தண்டுகள் முக்கியமாக வளைந்து கொடுக்கும் தன்மையை கொண்டிருப்பதால் ஏராளமான இளைய கல்வியாளர்களும் போல்ஷிவிக் வளைந்து கொடுக்கும் தன்மையை அணுகுவதற்கு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த மூலோபாய கூடத்தின் பணி மறைத்திட்டமிடல் மூலம் புரட்சிகர வர்க்க சக்திகள் மட்டுமே சாதிக்கக்கூடியதை அடைய முற்படுகின்றனர். மற்றைய பித்தளையை தங்கமாக மாற்றுபவர்கள் தோல்வியடைவதை பார்த்த பின்பும் மத்திய காலத்தில் இரசவாதிகள் நம்பி வந்தது போல், தற்காலத்திய மூலோபாயவல்லுநர்களும் தத்தம் வழியில் மறைத்திட்டமிடல்களில் வரலாற்றை ஏமாற்ற முற்படுகின்றனர். நிலைமையின் இயல்பில் அவர்கள் மூலோபாயவல்லுநர்கள் அல்ல; மிகப் பெரிய நபர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் பலவித அதிகாரத்துவ கூட்டுக்குணங்களை கொண்டவர்கள்தாம். அவர்களில் சிலர், எஜமானர் எப்படி சிறு பிரச்சினைகளை தீர்க்கின்றனர் என கண்டு, தாங்கள் மூலோபாயத்தின் இரகசியங்களை முழுமையாக பெற்று விட்டதாக நினைக்கின்றனர். இதுதான் இழிபாசாங்குவாதத்தின் துல்லியமான சாராம்சம் ஆகும். இப்படிக் கூட்டுமுறையின் இரகசியங்களை சிலர் இரண்டாம், மூன்றம் ஆதாரத்தில் இருந்து பெற்று சிறு விஷயங்களில் சில நேரம் பெற்ற சாதனைகளால் வியப்படைந்து இந்த வழிவகைகள் மிகப் பெரிய விஷயங்களுக்கும் பொருத்தப்படலாம் என்ற முடிவிற்கு வருகின்றனர். ஆயினும்கூட, அதிகாரத்துவ கூட்டுவழிவகைகளை பெரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புரட்சிகர போராட்டங்களுடன் ஒப்பிடும்போது "இன்னும் சிக்கனம்" என்று பொருத்த முற்படுவதில், இவர்கள் தவிர்க்க முடியாமல் இழிந்த தோல்வியை சந்திக்கின்றனர்; இதைத் தவிர, கூட்டு வழிவகை கட்சியினதும் அரசாங்க அமைப்பினதும் ஆதரவை கொண்டுள்ளதால், ஒவ்வொரு தடவையும் இளம் கட்சிகளினதும் மற்றும் இளம் புரட்சிகளினதும் முதுகுகெலும்பை முறித்தது. சியாங் கேய்-ஷேக், வாங் சிங்-வே, புர்செல், குலாக்குகள் அனைவரும் இப்பொழுது பிரச்சினைகளை தீர்ப்பதில் "மறைத்திட்டத்தை" கடைப்பிடிக்கும் முயற்சிகளில் வெற்றியாளர்களாக வெளிப்பட்டுள்ளனர்.

இந்த மறைத்திட்டமிடல்கள் பொதுவாக அனுமதிக்கப்பட மாட்டாதவை என்ற பொருளை இயல்பாக தராது; அதாவது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர மூலோபாயத்துடன் பொருந்தாது என்பதற்கில்லை. ஆனால் அவை புரட்சிகரப் போராட்டத்தின் அடிப்படை வழிவகைகளுடன் ஒப்பீட்டளவில் ஒரு கீழ்ப்படிந்த, துணையான, காலத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் உகந்த தன்மையைத்தான் கொண்டிருக்க முடியும் என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும். மிகப் பெரிய விஷயங்களில் மறைத்திட்டமிடல் ஒருபோதும் எதையும் தீர்மானிக்க முடியாது என்பது இறுதியாய் அறியப்பட வேண்டும். சிறு விஷயங்களில் இரண்டினதும் சேர்க்கை வெற்றி பெற்றது போல் தோற்றம் அளித்தால், அது எப்பொழுதும் பெரிய விஷயங்களில் இழப்பை ஒட்டித்தான் இருக்கும். ஒரு சரியான மறைத்திட்டமிடல் என்பது நேரத்தைப் பெறுவதற்கு அல்லது சிறு சக்திகளுடன் பெரிய விளைவுகளை அடைவதற்கான வாய்ப்புக்களை எளிமைப்படுத்துவதற்குத்தான் பயன்படும். ஒரு மறைத்திட்டமிடல் மூலம் அடிப்படை இடர்பாடுகளில் இருந்து தப்புவது என்பது இயலாததாகும்.

பாட்டாளிகளுக்கும் முதலாளித்துவத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு ஒரு அடிப்படையான ஒன்றாகும். எனவேதான் சீன பூர்ஷ்வாவை அமைப்புரீதியான மற்றும் தனிநபர் மறைத்திட்டங்களை கொண்டு கடிவாளமிட்டு அதை கூட்டு வழிவகைத் திட்டத்திற்கு அடிபணியுமாறு கட்டாயப்படுத்துவது என்பது அது மிக மிகப் பரந்த தன்மையை கொண்டிருந்தாலும் ஒரு மறைத்திட்டமிடல் ஆகாது, மாறாக இழிவான சுயஏமாற்று விஷயமாகும். வர்க்கங்கள் ஒருபோதும் ஏமாற்றப்பட முடியாதது. இது வரலாற்றுரீதியாக ஆராய்ந்தால் அனைத்து வர்க்கங்களுக்கும் பொருந்தும்; அதிலும் உடனடியாக, குறிப்பாக, ஆளும், சொத்துக்கள் இருக்கும், சுரண்டும் மற்றும் கல்வியறிவுடைய வர்க்கங்களுக்கு முற்றிலும் உண்மையாகும். பிந்தையதின் உலக அனுபவம் மகத்தானது ஆகும், அவர்களின் வர்க்க உள்ளுணர்வு மிகவும் நயமானது, அவர்களுடைய வேவுபார்க்கும் உறுப்புகள் பலவிதமானவை என்ற முறையில் அவர்களை தன்னை வேறு எவரோ என காண்பித்து ஏமாற்ற முற்படுவது உண்மையில் விரோதிகளை அல்லாது நண்பர்களையே பொறியில் சிக்க வைத்துவிடுவது போல் ஆகும்.

சோவியத் ஒன்றியத்திற்கும் உலக முதலாளித்துவத்திற்கும் இடையேயான முரண்பாடு அடிப்படையானதாகும். மறைத்திட்டமிடல்கள் மூலம் இதில் இருந்து தப்பிக்க முயல்வது என்பதற்கு இடமில்லை. மூலதனத்திற்கு தெளிவாக, வெளிப்படையாக கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் மூலம், அதன் பல பிரிவுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை பயன்படுத்திக் கொள்வதின் மூலம், மூச்சு விடுவதற்கான கால அவகாசம் அடையப்பட்டாலும்; ஆனால் இதுகூட ஒரு சில வரலாற்று சூழ்நிலையில்தான் முடியுமே அன்றி எந்த அல்லது அனைத்துச் சூழலிலும் முடியும் என்பதற்கில்லை. சோசலிசம் கட்டமைக்கப்படும் வரை சர்வதேச முதலாளித்துவம் ''நடுநிலையில் தடுத்துவைக்கப்படலாம்" என்று நம்புவது மிகப் பெரிய வகையில் தன்னையே ஏமாற்றிக் கொள்ளுவது ஆகும்; அதாவது, அடிப்படை முரண்பாடுகள் மறைத்திட்டமிடலின் உதவியின் மூலம் கடக்கப்பட முடியாது. இத்தகைய தன்னேயே ஏமாற்றிக் கொள்ளும் முறை சோவியத் குடியரசிற்கு அதன் தலைமை இடத்தை இழக்க வைக்கக்கூடும். ஒரு சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி ஒன்றுதான் நம்மை இந்த அடிப்படை முரண்பாடுகளில் இருந்து வெற்றியை அடையச் செய்ய முடியும்.

ஒரு மறைத்திட்டமிடல் என்பது விரோதிக்கு ஒரு சலுகை அல்லது ஒரு தற்காலிக உடன்பாடு என்ற வகையில் இருக்கும்; அதன் காரணமாய் எப்பொழுதும் சந்தேகத்திற்கு உரிய கூட்டாளியுடன்; அல்லது விரோதி நம்மை கழுத்தை நெரிப்பதில் இருந்து கால அவகாசம் பெற சரியான நேரத்தில் பின்வாங்குவது அல்லது இறுதியாக விரோதிகளின் முகாமில் பிளவு ஏற்படுத்துவதற்கு தொடர்ச்சியாக பகுதியளவிலான கோரிக்கைகள் கோஷங்கள் ஆகியவற்றை முன்வைத்தல் போன்றவை ஆகும். இவை அனைத்தும் மறைத்திட்டமிடல்களின் முக்கிய வகைகள் ஆகும். ஏனயைவையும் இரண்டாம் பட்சமானவையாக குறிக்கப்படலாம். ஆனால் ஒவ்வொரு மறைத்திட்டமிடலும் இதன் இயல்பில் போராட்டத்தின் அடிப்படை மூலோபாய நிலைப்பாட்டைப் பொறுத்த வரையில் ஒரு காலகட்டத்திற்குரியதாகும். கோமின்டாங் மற்றும் ஆங்கிலோ-ரஷ்ய குழுவுடன் மறைத்திட்டமிடல் செய்ததில் இவை ஒரு மென்ஷிவிச மறைத்திட்டமிடலுக்கு சிறந்த உதாரணங்கள் என்று கொள்ளப்பட வேண்டுமே அன்றி, ஒரு போல்ஷவிச மறைத்திட்டமிடல் அல்ல என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும். ஆனால் இதற்கு முற்றிலும் மாறான விதத்தில் நடந்தது வேறுவிதமாயிற்று. ஒரு தந்திரோபாய காலகட்டமாக மட்டுமே இருந்திருக்கவேண்டியது ஒரு மூலோபாய நிலைப்பாடாக அபிவிருத்திசெய்யப்பட்டு, உண்மையான மூலோபாயப் பணி (முதலாளித்துவ வர்க்கத்திற்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் எதிரான போராட்டம்) மேலும் அலங்காரமான குணாம்சம் மட்டும் உடைய சிறுசிறு தொடர்ச்சியான இரண்டாம் தர, அற்பத்தனமான தந்திரோபாய காலகட்டங்களாக மாற்றப்பட்டது.

எதிரிக்கு அல்லது நம்பகத்தன்மை இல்லாத நண்பருடன் உடன்பாட்டை பெறுவதற்காக கொடுக்கப்படும் சலுகைகளை, ஒருவர் ஒரு மறைத்திட்டமிடலில் எப்பொழுதும் அக்கூட்டிற்குபோவோரின் மிக மோசமான நிலைப்பாட்டிலுள்ள முற்கருத்துகளிலிருந்து தொடங்க வேண்டுமே அன்றி, மிகச் சிறந்த முன்கருத்துக்களில் இருந்து தொடங்கக்கூடாது. நண்பர் நாளை விரோதியாகக் கூடும் என்பதை இடைவிடாமல் மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது விவசாயி போன்ற நண்பருக்கும் பொருந்தும்.

"விவசாயி தம்மை பிற்போக்காக இருப்பதாக அல்லது பாட்டாளி வர்க்க விரோதி எனக் காட்டிக் கொள்ளும் வரை விவசாயிபால் ஐயுறவு கொண்டு, அதனிடம் இருந்து நம்மை தனியாக ஒழுங்கமைத்துக் கொண்டு, அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தவும் கட்டாயம் தயாராக இருக்க வேண்டும். [32]

லெனின் முதல் தடவையாக தத்துவார்த்த அளவிலும், நடைமுறையிலும் சிறப்பான ஆழ்ந்த தன்மையுடன் வறிய, சுரண்டப்பட்ட விவசாயிகள் பிரிவை பூர்ஷ்வாவின் செல்வாக்கில் இருந்து தனியே பிரித்து அவர்களை நாம் வழிநடத்திய பாதையில் பின்னே வருமாறு செய்திருந்த பணியை செயல்படுத்திய விதத்தில், பாட்டாளி வர்க்கத்தின் மிகப் பெரிய மூலோபாயப் பணிக்கு இது முரண்பாடானது என்று கருதிவிடக்கூடாது. ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே இருந்த உடன்பாடு வரலாற்றினால் தயார்நிலையில் கொடுக்கப்பட்ட ஒன்றல்ல; அதேபோல் அது வழுவழுப்பான மறைத்திட்டமிடல்களாலோ, நல்ல பேச்சுக்கள் மூலம் ஈர்ப்பதின் மூலமோ, பரிதாபத்திற்குரிய உரைகளினாலோ தோற்றுவிக்கப்படவும் முடியாதது ஆகும். பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயிகள் பிரிவுக்கும் இடையே உடன்பாடு என்பது அரசியல் சக்திகளின் உறவுகள் பற்றிய பிரச்சினை ஆகும்; இதையொட்டி அனைத்து பிற வர்க்கங்களில் இருந்தும் முற்றிலும் பாட்டாளி வர்க்கம் சுயாதீனமாக இருக்க வேண்டும். கூட்டாளி முதலில் கற்பிக்கப்பட்டாக வேண்டும். ஒருபுறம் அதன் முற்போக்கான, வரலாற்றுத் தேவைகளுக்கு பெரும் கவனம் கொடுப்பதின் மூலமும், மறுபுறத்தில் கூட்டாளியிடம் ஒழுங்கமைக்கப்பட்ட நம்பிக்கையற்ற தன்மையை காட்டுவதின் மூலமும், அதன் ஒவ்வொரு பாட்டாளி வர்க்க-எதிர்ப்பு போக்கு, வழக்கங்களுக்கு எதிராக இடைவிடாமல், ஊக்கத்துடன் போராடுவதின் மூலம்தான் இது அடையப்பட முடியும்.

ஒரு மறைத்திட்டமிடலின் நோக்கம் மற்றும் வரம்புகள் மிகத் தெளிவாக பரிசீலிக்கப்பட்டு எல்லையிடப்பட வேண்டும். ஒரு சலுகை என்பது சலுகையாக கூறப்பட வேண்டும் ஒரு பின்வாங்குதல் என்பது பின்வாங்குதல் என்று அறிவிக்கப்பட வேண்டும். ஒருவர் கொடுக்கும் சலுகைகளை மிகைப்படுத்தி, பின் வாங்குதல் என்பது பின்னர் அவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை விட குறைவான ஆபத்தைத்தான் கொடுக்கும். வர்க்கம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் எமது சொந்தக் கட்சியின் ஒழுங்கமைக்கப்பட்ட அவநம்பிக்கைத் தன்மை தக்க வைக்கப்பட வேண்டுமே அன்றி, மயங்கிவிட வகை செய்துவிடக் கூடாது.

பொதுவாக தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு வரலாற்று செயலில் இருப்பது போல் ஒரு மறைத்திட்டமிடலின் அடிப்படைக் கருவி கட்சியாகும். ஆனால் கட்சி என்பது மறைத்திட்டமிடலில் "கைதேர்ந்தவர்கள்" கையில் ஒரு சந்தேகத்திற்குரிய கருவியாக இல்லாமல் ஒரு நனவுடன், தானே செயல்படும் கருவியாக, பொதுவாக பாட்டாளி வர்க்கத்தின் சுய நடவடிக்கையின் மிக உயர்ந்த வெளிப்பாடாக இருக்கும். எனவே, ஒவ்வொரு மறைத்திட்டமிடலும் கட்சியினாலேயே அது செயல்படுத்தப்படுவதற்கு முன்பு தெளிவாக உய்த்து உணரப்பட வேண்டும். இங்கு இராஜதந்திர, இராணுவ அல்லது சதித்திட்ட இரகசியங்கள் என்பது பிரச்சினை அல்ல; அதாவது பாட்டாளி வர்க்க அரசு அல்லது பாட்டாளி வர்க்க கட்சி முதலாளித்துவ சூழலில் போராட்டத்தில் கடைபிடிக்கும் தொழில்நுணுக்க உத்தி அல்ல. இங்கு பிரச்சினை என்பது மறைத்திட்டமிடலின் அரசியல் உள்ளடக்கமாகும். எனவேதான் 1924 முதல் 1928 வரையிலான குலாக்குகள் தொடர்பான போக்கு பற்றி இரகசியமான விளக்கங்களாக கொடுக்கப்படும்போது அவை அபத்தமானவை மட்டுமல்லாமல் குற்றத் தன்மையை உடையனவும் ஆகும். குலாக்குகளை ஏமாற்ற முடியாது. அவர் சொற்களை ஒட்டி தீர்மானிக்காமல் செயல்களை வைத்து, வரிகள், விலைவாசி, நிகர இலாபம் இவற்றைக் கொண்டு தீர்மானிக்கிறார். ஆனால் ஒருவருடைய சொந்தக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் வறிய விவசாயிகளின் கட்சி நன்கு ஏமாற்றப்பட முடியும். பாட்டாளி வர்க்க கட்சியின் புரட்சிகர உணர்வை சிதறடிப்பதில் அதன் முதுகுக்குப்பின் கோட்பாடற்ற மறைத்திட்டமிடல் மற்றும் இணைவுவாதத்தில் ஈடுபடுவது போல் திட்டமிட்டு நடப்பது வேறு ஏதும் இல்லை.

மிக முக்கியமானதும், சிறந்த முறையில் நிறுவப்பட்டதும், ஒவ்வொரு மறைத்திட்டமிடலும் கடைபிடிக்கப்பட வேண்டிய மிக மாறுதலுக்கு இடமில்லாத விதி கூறுகிறது: உன் கட்சி அமைப்பை விரோதியின் அமைப்புடன் ஒன்றிணைய, கலக்க, இணைய ஒரு பொழுதும் துணிவுகொள்ளாதே; இன்று பிந்தைய அமைப்பு மிகவும் "பரிவுணர்வு" காட்டினாலும்கூட அவ்வாறு துணிவுகொள்ளாதே. நேரடியாகவோ, மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ, முகத்தை மறைத்துக் கொண்டோ, மற்ற கட்சிகள், மற்ற வர்க்கங்களின் அமைப்புக்கள் ஆகியவற்றிற்கு உன்னுடைய கட்சியை தாழ்ந்து அடிபணிய விடாதே; அல்லது உன்னுடைய சொந்தப் போராட்டத்தின் சுதந்திரத்தையோ உன் பொறுப்பையோ தடைக்கு உட்படுத்திவிடாதே; பிற கட்சிகளுடைய அரசியல் வழிக்காகச் சிறிதும் அது போல் செய்துவிடாதே. மற்றொரு பதாகையின் முன் மண்டியிடுவது என்ற பேச்சுக்கு இடம் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, பதாகைகளை ஒன்றாக இணைத்துவிடாதே.

ஒரு மறைத்திட்டமிடல் ஒருவரின் சொந்த கட்சியின் அபிவிருத்தியைக் கடந்துசெல்வதற்கு ஒரு பொறுமையற்ற சந்தர்ப்பவாத முயற்சியிலிருந்து எழுமானால், அல்லது அந்த வளர்ச்சியின் தேவையான கட்டங்களை தாண்டிப் பாய்ந்து கடக்கும் வகையில் நடந்து கொண்டால் (இங்குதான் துல்லியமாக எந்தக் கட்டங்களும் பாய்ந்து கடக்கப்படக்கூடாது), எதிர்த்திசைகளில் செல்ல முயலும் பிரிவுகளையும் அமைப்புக்களையும் தந்திரம் மூலம், மேம்போக்காக, மோசடித்தனமாக, இராஜதந்திரமுறையினால் பிணைப்பது, இணைப்பது அல்லது ஒன்றுபடுத்துவது என்பது மிகவும் மோசமானதும் ஆபத்தானதும் ஆகும். அத்தகைய பரிசோதனைகள் எப்பொழுதும் ஆபத்தை தருபவை என்பதோடு இளைய, வலுவற்ற கட்சிகளுக்கு அழிவைத் தருவனவாகும்.

ஒரு போர்க்களத்தில் இருப்பது போல், ஒரு மறைத்திட்டமிடலில் தீர்மானிப்பது மூலோபாய அறிவு மட்டும் அல்ல (ஒன்றிணைப்பவர்களின் தந்திரம் இன்னும் குறைவானதே); மாறாக சக்திகளின் உறவுதான். சரியாக திட்டமிடப்பட்டு தோற்றுவிக்கப்படும் மறைத்திட்டமிடல்கூட, ஒரு புரட்சிகர கட்சிக்கு பொதுவாக இன்னும் கூடுதலான முறையில் அது இளைய கட்சியாகவும் வலுவற்றதாகவும் இருந்தால், அதன் விரோதிகள், நண்பர்கள், பகுதி நண்பர்களை பொறுத்த வரை கூடுதலான ஆபத்து ஆகும். எனவேதான். இங்கு நாம் கொமின்டேர்னுக்கு மிக முக்கியத்துவம் உடைய ஒரு புள்ளிக்கு வருகிறோம். அதாவது போல்ஷிவிக் கட்சி மறைத்திட்டமிடலை அனைத்து இன்னல்களையும் போக்கும் ஒரு வழிமுறையாக தொடங்கவில்லை; மாறாக அதனிடம் வந்து, தொழிலாள வர்க்கத்திற்குள் அதன் ஆழ்ந்த வேர்களைக் கொள்ளும் நடவடிக்கையில், அரசியல் ரீதியாக பலமாகவும் கருத்தியலளவில் பக்குவமுடையதாகவும் அதற்குள் வளர்கிறது.

இந்த துரதிருஷ்டம் போல்ஷிவிக் மூலோபாயத்தினை இழிபாசாங்கினர்கள் மறைத்திட்டமிடல்கள், வளைந்து கொடுத்தல் ஆகியவற்றை இளைய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான மூலாபாயத்தின் சாரம் என்று வானளாவப் பாரட்டியதில்தான் உள்ளது; அதன்மூலமாய் அவை வரலாற்று அச்சு மற்றும் கோட்பாட்டுரீதியான அடித்தளத்தில் இருந்து பிரிக்கப்பட்டு அக்கட்சிகள் கோட்பாடற்ற இணைப்புக்களாக மாற்றப்படுகின்றன; பல நேரமும் இது ஒரு அணில் கூண்டிற்குள் சுற்றிச் சுற்றி வருவதைப் போல்தான் உள்ளது. போல்ஷிவிசத்திற்கு வளைந்து கொடுக்கும் தன்மை ஒன்றும் அடிப்படை குணநலனாக சேவைசெய்யவில்லை (இன்று அப்படிச் செயல்படக்கூடுவதும் இல்லை); மாறாக கருங்கல்லைப் போன்ற உறுதிதான் அடித்தளமாக இருந்தது. இந்தக் காரணத்தினால்தான் அதன் விரோதிகளும் எதிரிகளும் போல்ஷிவிசம் எப்பொழுதும் நியாயமாய் கர்வத்துடன் இருந்தது என்று அதைக் குறை கூறினர். அதிர்ஷ்டம்தரும் "நம்பிக்கைத்தன்மை" என்று இல்லாமல், வளைந்து கொடுக்காத தன்மை, விழிப்புணர்வு, புரட்சிகர ஐயுறவு, சுதந்திர மூச்சிற்காக ஒவ்வொரு கணமும் போராடுதல் ஆகியவை போல்ஷிவிசத்தின் இன்றியமையாத குணநலன்களாக இருந்தன. இந்தவிதத்தில்தான் மேற்கிலும், கிழக்கிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடங்கப்பட வேண்டும். அரசியல், சடத்துவ வாய்ப்புக்களை அடைவதற்காக அரசியல் மற்றும் சடரீதியான சாத்தியப்பாடுகளை தயார் செய்வதன் மூலம், அதாவது தங்களின் சொந்த அமைப்பின் வலிமை, திண்மை, உறுதிப்பாடு மூலம், பெரிய மறைத்திட்டமிடல்களை மேற்கொள்வதற்கான உரிமையை முதலில் கட்டாயம் அடையவேண்டும்.

கோமின்டாங்குடனும் பொதுச் சபையுடனுமான மென்ஷிவிக் வகை மறைத்திட்டமிடல்கள் பத்து மடங்கு கூடுதலான குற்றம் சார்ந்தவை; ஏனெனில் அவை சீனா, இங்கிலாந்தில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வலுவற்ற தோள்களில் ஏற்றி வைக்கப்பட்டன. இந்த மறைத்திட்டமிடல்கள் புரட்சிக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் பெருந்தோல்வியை மட்டும் கொடுக்கவில்லை; அவை வருங்காலப் போராட்டத்திற்கான அடிப்படை கருவியான இளம் கம்யூனிஸ்ட் கட்சிகளை நசுக்கியது, பலவீனப்படுத்தியது மற்றும் இல்லாதொழித்தது. அதேவேளை, அவை கம்யூனிச அகிலத்தின் பழம்பெரும் கட்சியான சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவுகளுக்குள் அரசியல் சோர்வுறலின் கூறுகளையும் கூட அறிமுகப்படுத்தியது.

வரைவு வேலைத்திட்டத்தில் மூலோபாயத்தை பற்றி கூறும் அத்தியாயம் பிடிவாதமான முறையில் மறைத்திட்டமிடலை பற்றி மௌனமாக இருக்கிறது; இது வயதான பொழுதுபோக்கு குதிரையின் இறுதிக்காலத்தில் வாயில் நீர் நிறைந்தது போல் உள்ளது. பெருந்தன்மை உடைய குறைகூறுபவர்கள் சொல்லுகின்றனர், அமைதியாக இருப்பதே சிறந்தது என்று. ஆனால் இத்தகைய விதத்தில் நியாயப்படுத்துவது மிகவும் தவறாகிவிடும். நாம் பல உதாரணங்களில் காட்டியுள்ளது போல், பின்னர் காட்டவும் இருப்பது போல் வரைவு வேலைத்திட்டமே ஒரு மோசமான மறைத்திட்டமிடல் தன்மையை கொண்டிருப்பதுதான் துரதிருஷ்டம், அதாவது இந்தச் சொல்லின் இணைப்பு பொருளில் அப்படி இருக்கிறது. வரைவுத் திட்டம் தன்னுடைய சொந்த கட்சியுடனேயே மறைத்திட்டமிடுகிறது. இதன் நலிந்த பகுதிகள் சில "லெனின் கூறியபடி" என்ற சூத்திரத்தில் மறைக்கப்பட்டுள்ளன; மற்றவை மௌனமாக இருப்பதின் மூலம் பலவற்றை தவிர்க்கின்றன. இன்று மூலோபாய மறைத்திட்டமிடல்களை அது நடத்தும் விதம் இப்படித்தான் உள்ளது. சீனா மற்றும் இங்கிலாந்தின் புதிய அனுபவங்களைப் பற்றிப் பேசாமல் இந்த பொருளைப் பற்றிப் பேசுவது கடினமாகும். ஆனால் மறைத்திட்டமிடல்கள் என்று கூறினாலே சியாங் கேய்-ஷேக், புர்செல் ஆகியோரின் உருவங்கள்தான் வெளிப்பட்டு நிற்கின்றன. வரைவு வேலைத்திட்டத்தை எழுதியவர்கள் இதை விரும்பவில்லை. தமக்கு பிடித்த ஆய்வுப்பொருள் பற்றி அவர்கள் மௌனமாக இருக்க விரும்புகின்றனர்; கம்யூனிச அகிலத்தின் தலைமைக்கு தடையற்ற சுதந்திரத்தைக் கொடுக்கின்றனர். இதுதான் துல்லியமாக அனுமதிக்கப்படக் கூடாதது ஆகும். கூட்டு நாடுபவர்கள் அவர்களுடைய வேட்பாளர்களின் கரங்களை கட்டுதல் தேவையாகும். அந்த நோக்கத்திற்குத்தான் துல்லியமாக வேலைத்திட்டம் உதவியாக இருக்க வேண்டும். இல்லாவிடில் அது தேவைக்கு அதிகமானதாகும்.

வாழ்வா, சாவா என்ற போராட்டமாக மட்டும் இருக்கக்கூடிய வர்க்க விரோதிக்கு எதிரான புரட்சிகர போராட்டத்தில் அது ஒரு துணை வழிவகை என்று மறைத்திட்டமிடல் பற்றிக் கூறி அதன் அடிப்படை விதிகளை நிர்ணயித்து வரம்பிற்கு உட்படுத்தும் மூலோபாயம் பற்றி இந்த அத்தியாயத்தில் ஒரு இடம் கட்டாயம் காணப்பட வேண்டும். மேலே கூறப்பட்ட, மார்க்ஸ் மற்றும் லெனினுடைய போதனைகளை அடிப்படையாகக் கொண்ட விதிகள் இன்னும் சுருக்கமான வகையில், தெளிவான வகையில் அளிக்கப்படலாம். ஆனால் அவை அனைத்தும் எல்லா வகையிலும் கம்யூனிச அகிலத்தின் வேலைத்திட்டத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.