கீழை நாடுகள், மற்றும் கொமின்டேர்ன் முழுவதற்குமான இதன்
படிப்பினைகள்
போல்ஷிவிசமும்,
மென்ஷிவிசமும், ஜேர்மனிய மற்றும் சர்வதேச சமூக ஜனநாயகத்தின் இடது
பிரிவும் 1905 புரட்சியின் அனுபவங்கள், தவறுகள், போக்குகள் ஆகியவற்றின்
பகுப்பாய்வில் இருந்து உறுதியான வடிவமைப்பை எடுத்தன. இன்று சீனப்புரட்சியை
பற்றிய அனுபவங்களின் பகுப்பாய்வும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அதிக
முக்கியத்துவத்தைத்தான் கொண்டுள்ளது.
ஆனால் இந்தப் பகுப்பாய்வு இன்னும் தொடக்கப்படக்கூடவில்லை; இது தடைசெய்யப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ வெளியீடுகள் கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு (E.C.C.I.)
இன் தீர்மானங்களுக்கு பொருந்தும் வகையில் உண்மை நிகழ்வுகளை அவசரம்
அவசரமாக தேர்வு செய்வதில் ஈடுபட்டிருப்பது அதன் முழு வெற்றுத் தன்மையை
நன்கு அம்பலப்படுத்தியுள்ளது. எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் வரைவுத்
திட்டம் சீனப் புரட்சி பற்றிய மிகமுக்கிய கருத்துக்களை மழுங்கடித்துள்ளது;
சீனப் பிரச்சினையில் கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு கொண்டுள்ள
பெருந்தவறான அடிப்படை கருத்துக்களுக்குத்தான் தன்னுடைய ஒப்புதல்
முத்திரையை அளிக்கிறது. மாபெரும் வரலாற்று வழிவகை பற்றிய பகுப்பாய்வு,
ஒரு திவால் தன்மையுடைய திட்டங்களை நயமான முறையில் பாதுகாத்தலால்
பதிலீடு செய்யப்படுகிறது. |