7. அதீத-இடது கொள்கையின் வலதுசாரி நொதியம்
1923ல் கொந்தளிக்கும்
உயர் அலையின் காலகட்டத்திற்கு பின்னர், நீடிக்கக் கூடிய ஒரு
வீழ்ச்சி காலகட்டம் தொடங்கியது. மூலோபாய மொழியில் இதன் பொருளானது
ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட பின்வாங்கல், சமூக சக்திகளை அணிதிரட்டும்
போராட்டம், வெகுஜன அமைப்புகளிடையே நமது நிலையை வலுப்படுத்தல்,
நமது சொந்த அணியினை மறு ஆய்வு, மற்றும் நமது தத்துவார்த்த மற்றும்
அரசியல் ஆயுதங்களை சுத்தப்படுத்துவது மற்றும் கூர்மைப்படுத்துவது
என்பதாகும். இந்த நிலைப்பாடு கலைப்புவாதம் என்று முத்திரைகுத்தப்பட்டது.
கலைப்புவாதமும்,
பிந்தைய வருடங்களில் போல்ஷிவிக் அகராதியின் பிற கருத்துகளும்
ஒட்டுமொத்தமான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின: அங்கே அதற்குப்
பின்னர் எந்த வித போதனைகளோ பயிற்சிகளோ இருக்கவில்லை மாறாக குழப்பத்தையும்
தவறுகளையும் விதைப்பதே இருந்தது. கலைப்புவாதம் என்பது புரட்சியை
கைவிடல், புரட்சியின் பாதைகள் மற்றும் வழிமுறைகளை சீர்திருத்தவாதத்தின்
பாதைகளாலும் வழிமுறைகளாலும் பதிலீடு செய்ய முயல்வதாகும்.
லெனினிச
கொள்கையானது கலைப்புவாதத்துடன் எந்தவித பொது அம்சத்தையும்
கொண்டிருக்கவில்லை; ஆனால், புறநிலைமைகளில் மாற்றங்களை அலட்சியம்
செய்வது குறித்தோ, மற்றும் புரட்சி ஏற்கனவே நமக்கு முதுகைக்
காட்டி திரும்பிச் சென்று விட்ட நிலையில், மற்றும் கட்சியை எதிர்வரும்
ஒரு புதிய புரட்சிக்கு தயார்படுத்தும் வண்ணம் மக்களிடையே
நீண்ட, விடாப்பிடியான, அமைப்புரீதியான, மற்றும் வருந்தி உழைக்கும்
பணியின் பாதையைத் தொடர்வதற்கு அவசியமாக இருக்கும் வேளையில், ஆயுதமேந்திய
எழுச்சியை நோக்கிய பாதையை வார்த்தைரீதியாக பராமரிப்பதுடனும் இது
அதிகம் தொடர்பற்றதாகும்.
ஏற்றத்தில் ஏறும்போது, இறக்கத்தில் இறங்குவதற்கு தேவையானதை போலல்லாத
ஒரு வேறுபட்ட வகை இயக்கம் அவசியப்படுகிறது. விளக்குகள் அணைந்துள்ள
ஒரு நிலையில், ஒரு மனிதன் அவனுக்கு முன் இருக்கும் படிகள் கீழ்
நோக்கிய இருக்கும் நிலையில் ஏற்றத்தில் ஏறுவதுபோல் தனது பாதத்தை
உயர்த்துவது என்பது மிக அபாயகரமானதாகும். கீழே விழுவது, காயங்கள்,
மற்றும் மூட்டு நழுவுவது இவை எல்லாம் தவிர்க்க முடியாததாகி
விடும். கம்யூனிச அகிலத்தின் தலைமையானது 1924ல் ஜேர்மன் அக்டோபர்
அனுபவங்களின் மீதான விமர்சனங்கள் மற்றும் பொதுப்பட அனைத்து விமர்சனங்களையும்
அடக்குவதற்கு, தன் அதிகாரத்தில் இருந்த அனைத்தையும் செய்தது.
மற்றும் இது விடாப்பிடியாக தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தது:
தொழிலாளர்கள் நேரடியாக புரட்சியை நோக்கிப் பயணித்துக்
கொண்டிருக்கிறார்கள் - படிக்கட்டுகள் மேல் நோக்கி செல்கின்றன.
புரட்சியின் வீழ்ச்சி சமயத்தில் பயன்படுத்தப்பட்ட ஐந்தாவது பேரவையின்
வழிகாட்டல்களானது, கோரமான அரசியல் வீழ்ச்சிகளுக்கும் மற்றும்
உறுப்புகள் இடம்பெயர்வுக்கும் இட்டுச் சென்றதில் பெரிய ஆச்சரியம்
இல்லை!
மார்ச் 1, 1927 ஜேர்மனிய எதிர்ப்பின் தகவல் அறிக்கை, எண் 5-6
கூறியது:
"இந்த கட்சி பேரவையில் இடதுகளின் மிகப்பெரும் தவறுகளானது [அவர்கள்
தலைமையேற்றபோதான 1924ன் பிராங்க்பேர்ட் பேரவை], 1923
தோல்வியின் ஈர்ப்புவிசை குறித்து கட்சியிடம் மூச்சுவிடாது பேசாமல்
இருந்ததிலும், அவசியமான முடிவுகளுக்கு அவர்கள் வர முடியாமல் இருந்ததிலும்,
முதலாளித்துவத்தின் ஒப்பீட்டளவிலான ஸ்திரப்படுதல் குறித்த
போக்குகளை கட்சிக்கு மிகையெழுச்சியின்றி அலங்காரமின்றி விளக்காமல்
இருந்ததிலும், இருக்கும் காலத்திற்கு தனது போராட்டங்கள் மற்றும்
முழக்கங்களால் ஒரு பொருத்தமான வேலைத்திட்டத்தினை சூத்திரப்படுத்தாததிலும்
அடங்கியுள்ளது. இதனை மேற்கொள்வதும், வேலைத்திட்டத்தின் ஆய்வறிக்கைகளை,
சரியானதும் முழுக்கவும் அவசியமானதுமாக கூர்மையாக அடிக்கோடிட்டுக்
காட்டுவதும் முழுவதுமாய் சாத்தியமாக இருந்தது."
குற்றம்சாட்டப்படும் எமது "கலைப்புவாதத்திற்கு" எதிரான ஐந்தாவது
பேரவையின் போராட்டத்தில் பங்கேற்ற ஜேர்மன் இடதின் ஒரு பிரிவு,
1924-25 இன் படிப்பினைகளை தீவிரமாக புரிந்து கொண்டிருந்தது என்பதற்கான
அடையாளமாக அந்த சமயத்தில் இந்த வரிகள் எங்களுக்கு இருந்தன. இது
கோட்பாட்டு அடிப்படையில் எங்களை இன்னும் நெருக்கமாகக் கொண்டுவந்தது.
நிலைமையின் கூர்மையான திருப்பத்திற்கான முக்கிய ஆண்டாக 1924 இருந்தது.
ஆனாலும் இந்த கூரிய திருப்பம் ("ஸ்திரப்படல்") நிகழ்ந்து விட்டது
என்பதனை அங்கீகரித்தது ஒன்றரை வருடம் கழித்தே நிகழ்ந்தது. எனவே,
1924-1925 இடதுகளின் தவறுகள் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்புவாத பரிசோதனைகளின்
ஆண்டுகளாக இருந்தன என்பதில் திகைப்பிற்கு எதுவுமில்லை. பல்கேரிய
பயங்கரவாத துணிச்சலானது, டிசம்பர் 1924ன் எஸ்தோனிய ஆயுதமேந்திய
எழுச்சியின் துயர வரலாற்றைப் போலவே, ஒரு பிழையான
நோக்குநிலையினால் விளைந்த விரக்தியின் வெளிப்பாடு ஆகும். வரலாற்று
நிகழ்போக்கினை ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு மூலமாக மானபங்கப்படுத்தும்
இந்த முயற்சிகள் ஒரு தீவிரமான விசாரணையின்றி விடப்பட்டன எனும்
உண்மையானது 1927 இறுதிவாக்கில் கன்டோனில் மீண்டும் பழைய
நிலைக்கு இட்டுச் சென்றது. அரசியலில் சின்னஞ்சிறு தவறுகள் கூட
தண்டிக்கப்படாமல் விடுவதில்லை, பெரியதாக இருந்தால் அதற்கான
வாய்ப்புகள் இன்னமும் குறைவு. தவறுகளை மறைக்க முயலுவதும், விமர்சனங்களையும்,
தவறுகளின் சரியானதொரு மார்க்சிச மதிப்பீடுகளையும் எந்திரரீதியாக
அடக்கி வைப்பதற்கு முயற்சிப்பது அதிலும் மிகப் பெரும் தவறு.
நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான கம்யூனிச அகிலத்தின் வரலாற்றை
எழுதிக் கொண்டிருக்கவில்லை. இந்த காலகட்டத்தின் அடிப்படை
நிலைகளின் இரண்டு மூலோபாய வழிகளின் உண்மையான விளக்கத்தையும்,
அதே சமயத்தில் இந்த அனைத்து கேள்விகளின் இருப்பும் கூட
இல்லாதிருக்கும் வரைவு வேலைத்திட்டத்தின் உயிரற்ற தன்மையின்
விளக்கத்தையும் மட்டுமே இங்கே கொணர்கிறோம். எனவே, ஒரு
பக்கத்தில் ஐந்தாவது பேரவையின் வழிகாட்டல்களுக்கும்
மறுபக்கத்தில் அரசியல் யதார்த்தத்திற்கும் இடையிலான, கம்யூனிச
அகிலத்தின் கட்சிகளை வீழ்த்திய, விலக்கவியலா முரண்பாடுகளின்
விவரிப்பை, அவை எவ்வளவு பொதுவானவையாக இருந்தாலும், நாங்கள்
இங்கே அளிக்க முடியாது.
உண்மை தான்,
ஒவ்வொரு இடத்திலும் பல்கேரியா மற்றும் எஸ்தோனியாவில் 1924ல்
நடந்ததைப் போல உயிரபாயம் கொண்ட இழுப்புகளால் முரண்பாடுகள்
தீர்க்கப்படவில்லை. ஆனால் எப்போதும் ஒவ்வொரு இடத்திலும்
கட்சிகள் தாங்கள் கட்டப்பட்டுள்ளதையும், மக்களின்
இலட்சியங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தோற்று, கண்
சிமிட்டிகளுடன் தடுமாறிய நிலையில் இருந்ததை உணர்ந்தன.
தூய கட்சி பிரச்சாரங்கள்
மற்றும் கிளர்ச்சிகளில், தொழிற்சங்கங்களின் பணியில், நாடாளுமன்ற
மேடைகளில் என ஒவ்வொரு இடத்திலும் கம்யூனிஸ்டுகள் ஐந்தாம் பேரவையின்
தவறான நிலைப்பாட்டின் கனமான பந்தையும் சங்கிலியையும் இழுக்க
வேண்டியிருந்தது. ஒவ்வொரு கட்சியும், குறைவான அல்லது அதிகமான
அளவில், தவறான ஆரம்ப புள்ளிகளுக்கு பலியாயின.
ஒவ்வொன்றும்
மாயத்தோற்றங்களை துரத்திசென்று, உண்மையான வழிமுறைகளை புறக்கணித்து,
புரட்சிகர கோஷங்களை வெறும் சத்தம்மிக்க வீண்வாக்கியங்களாக்கி,
மக்களின் பார்வையில் தங்களை சமரசப்படுத்திக் கொண்டு மற்றும்
தனது காலின் கீழ் பூமியை நழுவ விட்டன. இவை எல்லாவற்றிற்கும் மகுடமாய்,
கம்யூனிச அகிலத்தின் பத்திரிகைப் பிரிவு, இப்போது போலவே அப்போதும்,
சமீப வருடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பணிகள் குறித்த உண்மைகளையும்
புள்ளி விவரங்களையும் ஒன்றுசேர்க்கும், ஒழுங்குபடுத்தும் மற்றும்
வெளியிடும் சாத்தியக்கூறு இல்லாதிருந்தது. தோல்விகள், தவறுகள்
மற்றும் இழப்புகளுக்கு பிறகு அரிதாரத் தலைமை பின்வாங்கலை
மேற்கொள்ளவும் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்ட நிலையில் எதிரிகளுடன்
ஒப்பந்தம் செய்து கொள்ளவும் முடிவு செய்கிறது.
உண்மையான காரணிகளுடன் மோசமான மற்றும் தொடர்ந்து வளர்ச்சியுறும்
முரண்பாடான நிலையில் தான் இருப்பதை கண்டுகொண்டு, தலைமையானது எப்போதையும்
விட கற்பனையான காரணிகளை பிடித்துத் தொங்க வேண்டியதாயிற்று.
தான் காலுக்குக் கீழ் பூமியை நழுவ விட்டு விட்டு, கம்யூனிச அகிலத்தின்
நிறைவேற்றுக் குழு, புரட்சிகர சக்திகள் மற்றும் அறிகுறிகளை அவற்றிற்கான
எந்த அடையாளங்களும் இல்லாத இடங்களில் இருந்து கண்டுபிடிக்க
வேண்டியதாயிற்று. அதன் சமநிலையை காப்பாற்ற, அது இத்துப்போன கயிறுகளை
பிடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
இதேபோல், பாட்டாளி வர்க்கத்திடையே வெளிப்படையாகவும் மற்றும் அதிகரித்தளவிலும்
வலது பக்கம் செல்லும் மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கையில், விவசாயிகளை
இலட்சியமயமாக சித்தரிக்கும், பூர்சுவா சமூகத்துடன் அதன் "உடைவின்"
ஒவ்வொரு அறிகுறியையும் முழுமையானதொரு விமர்சனமற்ற மிகைப்படுத்தலுடன்,
ஒவ்வொரு குறுகிய காலத்தைய விவசாய அமைப்பினை புகழ்ந்துபாடி மற்றும்
"விவசாய" வார்த்தையாடிகளை முழுமையாக ஆராதிக்கும் ஒரு காலகட்டம்
கம்யூனிச அகிலத்தில் தொடங்கியது.
பூர்சுவா மற்றும் போலி-விவசாய வார்த்தைஜாலங்களுக்கு எதிரான
பாட்டாளி வர்க்க முன்னணிப் படையின் நீண்ட உறுதியான
போராட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகளின் மிகவும் உரிமைகளற்ற
பிரிவின் மீது ஆதிக்கம் செலுத்தும் பணியானது கொஞ்சம் கொஞ்சமாய்
விவசாய வர்க்கமானது தேசிய மற்றும் சர்வதேச அளவில் நேரடியான
மற்றும் சுதந்திரமான புரட்சிகர பங்கினை ஆற்றும் என்னும்
நம்பிக்கையால் இடம் பெயர்க்கப்பட்டுக் கொண்டே வந்தது.
அதாவது "ஸ்திரப்படுத்தலின்" முக்கிய ஆண்டாக இருந்த 1924களில்,
கம்யூனிச பத்திரிகையானது சமீபத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட
விவசாயிகள் அகிலத்தின் மீதான முழுக்க அற்புதமான
புள்ளிவிவரங்களை கொண்டிருந்தது. ஆரம்பித்து ஆறு மாதங்களில்
விவசாயிகள் அகிலத்தில் பல லட்சம் உறுப்பினர்கள்
சேர்ந்திருப்பதாக அதன் பிரதிநிதியான டோம்பால் தகவல்
தெரிவித்தார்.
அப்போது தான், பச்சை சாக்ரெப்பில் இருந்து வரும் வழியில்,
வெள்ளை பெல்கிரேடில் தான் அமைச்சராவதற்கான வாய்ப்புகளை
வலிமைப்படுத்துவதற்கு சிவப்பு மாஸ்கோவில் தான் தலையை காட்டி
விட்டு வருவது உசிதம் என்று நினைத்த குரோஷிய விவசாயிகள்
கட்சியின் தலைவரான ராடிக்குடனான அவதூறுக்குரிய சம்பவம்
நிகழ்த்தப்பட்டது. ஜூலை 9, 1924ல் சினோவியேவ் ஐந்தாவது
அகல்பேரவையின் விளைவுகள் குறித்த தனது லெனின்கிராட் கட்சி
தொழிலாளர்களுக்கான அறிக்கையில், தனது புதிய "வெற்றி" குறித்து
தெரிவித்தார்:
"இந்த தருணத்தில் விவசாய வர்க்கத்துக்குள் முக்கியமான
நகர்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் அனைவருமே
அநேகமாக ராடிக்கின் குரோஷிய விவசாயிகள் கட்சி குறித்துக்
கேள்விப்பட்டிருப்பீர்கள். ராடிக் இப்போது மாஸ்கோவில்
இருக்கிறார். அவர் ஒரு உண்மையான மக்கள் தலைவர் ... ராடிக்கின்
பின்னால் குரோஷியாவின் ஒட்டுமொத்த ஏழை மற்றும் நடுத்தர விவசாய
வர்க்கம் ஒன்றுபட்டு நிற்கிறது ... ராடிக் இப்போது தனது
கட்சியின் பெயரால் விவசாயிகள் அகிலத்தில் இணைய முடிவு
செய்துள்ளார். இது ஒரு மிக முக்கிய நிகழ்வென நாங்கள்
கருதுகிறோம் ... விவசாயிகள் அகிலத்தின் உருவாக்கம் மிகப்பெரும்
முக்கியத்துவம் கொண்ட ஒரு நிகழ்வாகும். இதிலிருந்து ஒரு பெரும்
அமைப்பு வளரும் என்பதை சில தோழர்கள் நம்பாதிருந்தனர் ...
இப்போது நமக்கு ஒரு மிகப்பெரும் துணைக் கூட்டம்
கிடைத்திருக்கிறது - அது விவசாயிகள்..." [24]
இன்னோரன்ன பிற மற்றும் கூடுதலாக ஆகும்.!
பெருங்கடலின் மறுமுனையில் இருந்து தலைவர் லாஃபொலெட்,
"தனித்துவமான மக்கள் தலைவர்" ராடிக் என கூறினார். கம்யூனிச
அகிலத்தின் பிரதிநிதியான பெப்பர் "துணைக் கூட்டத்தை" -
அமெரிக்க விவசாயிகள் - கூடுதல் உத்வேகத்துடன் இயக்கத்தில்
செலுத்தும் நோக்கத்தோடு, வலிமையற்ற இளம் அமெரிக்க கம்யூனிஸ்ட்
கட்சியை, அமெரிக்க முதலாளித்துவத்தை துரிதமாகத் தூக்கியெறிய
லாஃபொலெட்டை சுற்றி ஒரு "விவசாயி-தொழிலாளர் கட்சி"யை
உருவாக்கும் அர்த்தமற்ற இழுக்கு தேடித்தரத்தக்க
துணிச்சல்வாதத்தில் இழுத்து விட்டார்.
விவசாயிகளின் அடிப்படையில் அமெரிக்காவில் புரட்சி, அருகில்
வந்து விட்ட நற்செய்தி அந்த நேரத்தில் கம்யூனிச அகிலத்தின்
நிறைவேற்றுக் குழுவின் அதிகாரபூர்வ தலைவர்களின் உரைகளிலும்
கட்டுரைகளிலும் நிரம்பியிருந்தது. ஐந்தாவது பேரவையின் அமர்வு
ஒன்றில், கோலரோவ் தெரிவிக்கிறார்:
"அமெரிக்காவில் சிறு விவசாயிகள் விவசாயி-தொழிலாளர் கட்சி
ஒன்றினைக் கண்டுள்ளனர், இது எப்போதையும் விட தீவிரமானதாகி
வருகின்றதுடன், கம்யூனிஸ்டுகளுக்கு மிக நெருங்கி வந்து
விட்டது, மற்றும் அமெரிக்காவில் தொழிலாளர்கள் மற்றும்
விவசாயிகள் அரசை உருவாக்குவது குறித்த சிந்தனையால்
ஊடுருவப்பட்டு இருக்கிறது." [25]
இதற்கு மேலும் இல்லை, முன்னிலும் குறைந்ததும் இல்லை!.
நெப்ராஸ்காவில் இருந்து லாஃபாலெட்டின் அமைப்பின் தலைவர்களில்
ஒருவரான கிரீன் மாஸ்கோவில் விவசாயிகள் பேரவைக்கு வந்தார்.
கிரீனும் ஏதோ ஒன்று போன்று இதில் "இணைந்து கொண்டார்". அதன்பின்
வழக்கம்போல, கவுண்ட் கரோலியிக்கு ஆலோசகராக இருந்த, மூன்றாவது
பேரவையின் தீவிர இடதுசாரிக் குழுவை சேர்ந்தவரான, மார்க்சிச
சீர்திருத்தவாதியான, ஹங்கேரியில் புரட்சியின் குரல்வளையை
நசித்தவர்களில் ஒருவரான, தனது பெரும் திட்டங்களை நனவாக்க
திராணியில்லாமல் முயற்சித்துக் கொண்டிருந்த அதே பெப்பருக்கு
கம்யூனிஸ்ட் கட்சியை நசுக்குவதற்கு செயின்ட் போல் மாநாட்டில்
உதவியாக இருந்தார்.
ஆகஸ்ட் 29, 1929 பிரதியில், பிராவ்தா புகார் கூறுகிறது:
"அமெரிக்க பாட்டாளி வர்க்கமானது ஒரு ஒட்டுமொத்தமாக,
இங்கிலாந்து தொழிற் கட்சியை போன்ற ஒரு கூட்டுழைப்புவாத
கட்சிக்குரிய தேவைக்கான உணர்மை நிலைக்கு கூட எழவில்லை."
சுமார் ஒன்றரை மாதம் முந்தையதாக, லெனின்கிராட் கட்சி
தொழிலாளர்களிடம் சினோவியேவ் கூறினார்:
"பல மில்லியன்கணக்கான விவசாயிகள், விவசாய நெருக்கடியின்
காரணமாக விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஒட்டுமொத்தமாய் ஒரே
சமயத்தில் [!] தொழிலாள வர்க்கத்தின் பக்கம் தள்ளப்பட்டுக்
கொண்டிருக்கிறார்கள்." [26]
"மற்றும் ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்
அரசாங்கத்திற்கு!" என்பதை கோலரோவ் உடனடியாக சேர்ந்துக்கொண்டார்
.
ஒரு விவசாயி-தொழிலாளி கட்சி அமெரிக்காவில் விரைவில்
உருவாக்கப்படும், "ஒரு தூய்மையான பாட்டாளி வர்க்கத்தினது அல்ல,
ஆனால் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கான ஒரு வர்க்கரீதியான
விவசாயி-தொழிலாளி கட்சி என்று பத்திரிகை பிரிவு தொடர்ந்து
சொல்லிக் கொண்டிருந்தது. "பாட்டாளி வர்க்கம் அல்ல, ஆனால்
வர்க்க" குணாதிசயம் உள்ளது என்றால் என்ன பொருள் என்பதை
பெருங்கடலின் இரண¢டு முனையில் இருப்பவர்களாலும் சரியாக
விளக்கிச் சொல்ல முடியவில்லை. போகப் போக இது "இரண்டு-வர்க்க
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி" சிந்தனையின் பெப்பர்
வகை பதிப்பே என்றாகியது, சீனப் புரட்சியின் படிப்பினைகள்
தொடர்பாக பார்க்கும்போது இதனைக் குறித்து நாம் இன்னும் ஆழமாகக்
காண்போம்.
தனது காலின்
கீழிருந்த பூமியை நழுவ விட்டு விட்டு, ராடிக், லாஃபாலெட், மற்றும்
விவசாயிகள் அகிலத்தின் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ஜீவன்களை
பிடித்துக் கொண்டிருந்த 1924ன் போலி-"இடது" கொள்கையில் இருந்து
தான் பாட்டாளி வர்க்கமில்லாத ஆனால் வர்க்க குணாதிசயம் கொண்ட கட்சிகள்
குறித்த இந்த பிற்போக்குவாத சிந்தனையே முழுக்கவும் தோன்றியது
என்று குறிப்பிடுவதே இங்கு போதுமானது.
ஒரு தகமையுமற்ற கல்வியியலாளர் மிலியுடின் சொல்கிறார், "நாம் இப்போது
பார்த்துக் கொண்டிருப்பது, விவசாயிகள் கூட்டத்தை பூர்சுவாக்களிடம்
இருந்து பிரிப்பதான, பூர்சுவாக்களுக்கு எதிராக விவசாய வர்க்கம்
நடைபோடுவதான, மற்றும் முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவ அமைப்புக்கு
எதிரான போராட்டத்தில் விவசாய வர்க்கம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு
இடையிலான ஐக்கிய முன்னணியின் அதிகரித்து வரும் வலிமைப்படுதல்
குறித்தான ஒரு அசாதாரணமான முக்கியத்துவம் வாய்ந்த மற்றும்
குறிப்பிடத்தக்க நிகழ்போக்காகும்." [27]
1924ம் ஆண்டு முழுவதும், கம்யூனிச அகிலத்தின் பத்திரிகைப்
பிரிவானது உலகளாவிய "விவசாய மக்கள் தீவிரமயமாதல்" குறித்து அலுப்பின்றி
சொல்லிக் கொண்டேயிருந்தது, ஏதோ சுதந்திரமான ஒன்றை இதிலிருந்து
எதிர்பார்க்கலாம் என்பதைப் போல, ஆனால் தொழிலாளர்கள் வலதின் பக்கமாக
வெளிப்படையாக நகர்ந்து கொண்டிருந்த, சமூக ஜனநாயகம் வலுப்பெற்றுக்கொண்டிருந்த
மற்றும் பூர்சுவாக்கள் தனது நிலையை உறுதிப்படுத்தியிருந்த ஒரு
காலகட்டத்தில் இது விவசாயிகளின் ஒரு கற்பனையான தீவிரமயமாதல் மட்டுமே!
இதே அரசியல் நோக்கின் தோல்வியையே 1927 இறுதியிலும் மற்றும்
1928 ஆரம்பத்திலும் சீனாவின் விஷயத்திலும் நாம் சந்திக்கிறோம்.
தீர்மானமான, நீடித்திருக்கக் கூடிய தோல்வியை பாட்டாளி வர்க்கம்
சந்திக்கிற ஒவ்வொரு பெரிய மற்றும் ஆழமான புரட்சிகர நெருக்கடிக்கு
பின்னரும், அரை-பாட்டாளி வர்க்க நகர்ப்புற மற்றும் கிராம மக்களிடையே
அமைதியின்மை, கல்லெறிந்த நீரில் பரவும் சுழல் வட்டங்களைப் போல
நீடித்திருக்கின்றது. எப்போது ஒரு தலைமை தொழிலாள வர்க்கத்திற்குள்
இருக்கும் நிகழ்போக்குகளுக்கு இல்லாமல் மாறாக இந்த சுழல்வட்டங்களுக்கு
சுதந்திரமான முக்கியத்துவத்தை அளிக்கிறதோ, அவற்றை நெருங்கி வரும்
புரட்சியின் அறிகுறிகளாக பொருள் கொள்கிறதோ, நன்றாக நினைவில்
கொள்ளுங்கள், இது 1924ல் எஸ்தோனியாவில், அல்லது பல்கேரியாவில்
அல்லது 1927ல் கன்டோனில் செய்ததைப் போன்ற சாகசங்களை நோக்கி தலைமை
போய்க் கொண்டிருக்கிறது என்பதன் சரியான அறிகுறியாகும்.
அதீத-இடதுவாதத்தின் இதே காலகட்டத்தில் தான், சீன கம்யூனிஸ்ட்
கட்சியானது பல ஆண்டுகளுக்கு, ஐந்தாவது அகல்பேரவையால் "அனுதாபம்
கொண்ட கட்சி" [28],
எனச் சித்தரிக்கப்பட்ட கோமின்டாங்கிற்குள் அதன் வர்க்க குணாதிசயத்தை
வரையறுப்பதற்கான எந்த வித தீவிர முயற்சியுமே இன்றி,
செலுத்தப்பட்டது. தொடர்ந்து பார்க்கும்போது, "இந்த தேசிய
புரட்சிகர பூர்சுவாக்களை" இலட்சியமயப்படுத்துவது என்பது
கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகிக் கொண்டே போவதை நாம் காண்கிறோம்.
இவ்வாறாக, கிழக்கில், கண்கள் மூடப்பட்டு பொறுமையின்மையால்
கனன்று கொண்டிருந்த போலியான இடது பாதையானது அடுத்து வரும்
சந்தர்ப்பவாதத்திற்கான அடிக்கல்லை நாட்டியது. சந்தர்ப்பவாத
நிலையை சூத்திரப்படுத்துவதற்கு மார்ட்டினோவே அழைக்கப்பட்டார்.
மூன்று ரஷ்ய புரட்சிகளின் போதும் குட்டி முதலாளித்துவ
வாதிகளின் பின்னே வாலாட்டிக் கொண்டிருந்தவர் என்னும் வகையில்
சீனப் பாட்டாளி வர்க்கத்திற்கு மார்ட்டினோவே கூட மிகவும்
பொருத்தமான நம்பிக்கையானதொரு ஆலோசகர் தான்.
காலகட்டங்களின் செயற்கையானதொரு வேகப்படுத்தலுக்கு பின்னரான
வேட்டையில், ராடிக்கை, லாஃபொலட், மில்லியன்கணக்கான விவசாயிகள்
டோம்பால் மட்டுமல்லாது பெப்பரையும் பற்றிக் கொண்டிருந்தது
மட்டுமல்ல, அடிப்படையில் தவறு கொண்ட ஒரு கண்ணோட்டமும்
இங்கிலாந்துக்கு கட்டமைக்கப்பட்டது.
இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பலவீனங்களும் அந்த
நேரத்தில் அதனை வெகு துரிதமாக தோற்றத்திற்கு முக்கியத்துவம்
கொடுக்கும் காரணியால் இடம்பெயர்க்கும் தேவைக்கு வித்திட்டு
விட்டன. துல்லியமாக இங்கு தான் இங்கிலாந்து தொழிற்சங்கத்தின்
போக்குகள் குறித்த தவறான மதிப்பீடு பிறந்தது. சினோவியேவ்,
புரட்சியானது தனது நுழைவுப்பாதையை பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்
கட்சியின் குறுகிய வாசலின் ஊடாக அல்லாமல் தொழிற்சங்கங்களின்
அகன்ற வாசல்களின் வழியாகவே காணும், என்று தாம் கணக்கிடுவதாகவே
நமக்கு விளங்கப்படுத்தினார். கம்யூனிஸ்ட் கட்சியின் மூலம்
தொழிற்சங்கங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்களை வெல்வதற்கான
போராட்டமானது, ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள தொழிற்சங்க
அமைப்புகளை புரட்சியின் நோக்கங்களுக்காக விரைவாக
பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையின் மூலம் பிரதியீடு
செய்யப்பட்டது. இந்த போலியான நிலைப்பாட்டில் இருந்து தான்
சோவியத் ஒன்றியத்துக்கும் ஆங்கில தொழிலாள வர்க்கத்துக்கும் அடி
கொடுத்த ஆங்கிலோ-ரஷ்யன் கமிட்டியின் பிந்தைய கொள்கையானது
பிறந்தது; சீனாவின் தோல்வியால் மட்டுமே இந்த அடி
அத்துமீறிச்சென்றது.
1929 கோடையிலேயே எழுதப்பட்டு விட்ட அக்டோபர் படிப்பினைகளில்
வேகமூட்டப்பட்டுவிட்ட பாதையின் சிந்தனையானது (பம்மெல்ட்
மற்றும் குக் உடனான நட்பு மூலமாக வேகமாக்கப்பட்ட இந்த
சிந்தனையின் மேலதிக அபிவிருத்தி காட்டுவதுபோல்) பின்வருமாறு
மறுக்கப்படுகிறது:
"கட்சி இல்லாமல், கட்சியிலிருந்து சுயாதீனமாக, கட்சியை விலக்கி
விட்டு, கட்சிக்கு பதிலாக வேறு ஒன்றினால், பாட்டாளி வர்க்க
புரட்சியானது ஒருபோதும் வெற்றி பெற முடியாது. அது தான் கடந்த
பத்தாண்டு படிப்பினைகளின் முதன்மைப் பாடமாகும். உறுதியாகச்
சொல்ல வேண்டுமென்றால், இங்கிலாந்தின் தொழிற்சங்கங்கள் பாட்டாளி
வர்க்க புரட்சியின் சக்திமிகுந்த நெம்புகோலாக முடியும். அவை,
உதாரணமாக, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் மற்றும் ஒரு
குறிப்பிட்ட காலத்திற்கு, தொழிலாளர்களின் சோவியத்துகளை கூட
பதிலீடு செய்துகொள்ள முடியும். ஆனால் அவை இத்தகையதொரு பங்கினை
கம்யூனிஸ்ட் கட்சி இன்றியோ மற்றும் நிச்சயமாக அதற்கு
எதிரானதாகவோ ஆற்ற முடியாது, ஆனால் இது தொழிற்சங்கங்களில்
கம்யூனிஸ்ட் ஆதிக்கமானது தீர்மானகரமானதாக இருக்கும்போது
மட்டுமே அவ்வாறான பங்கு வகிக்கமுடியும். பாட்டாளி வர்க்க
புரட்சியில் கட்சியின் பங்கு மற்றும் முக்கியத்துவம், அதனை
இலேசாகத் துறந்தாலும், அல்லது அதனை பலவீனமடையச் செய்தாலும்
என்னவாகும் என்பது பற்றிய முடிவிற்கு வருவதற்கு நாம் பாரிய
விலையினைக் கொடுத்திருக்கிறோம்." [29]
இதே பிரச்சினை, இங்கிலாந்து எங்கே செல்கின்றது? என்னும் எனது
புத்தகத்தில் விரிவான அளவில் முன்வைக்கப்படுகிறது. இந்த
புத்தகமானது, ஆரம்பம் முதல் இறுதி வரை, இங்கிலாந்து
புரட்சியும் கூட கம்யூனிசத்தின் வழிப்பாதைகளை தவிர்க்க
முடியாது மற்றும் அதன் வழித்தடங்கள் குறித்த எந்த மாயைகளையும்
தெளிவுபடுத்துகின்ற ஒரு சரியான, துணிச்சலான மற்றும் சமரசமற்ற
கொள்கையின் துணையுடன், இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியானது
பாய்ச்சலுடன் வளர முடியும், தனக்கு முன் இருக்கும் பணிகளுக்கு
ஏற்ற சரிசமமான அளவுக்கு சில வருட காலத்திலேயே முதிர்ச்சி பெற
முடியும் என்கின்ற சிந்தனையை நிரூபிப்பதற்கென்றே
அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
1924ன் இடதுசாரி மாயைகள் வலதுசாரி நொதியத்தின் காரணமாக
எழுந்தன. 1923 தவறுகள் மற்றும் தோல்விகளின் முக்கியத்துவத்தை
மற்றவர்களிடமிருந்தும் தன்னிடமிருந்துமே கூட மறைக்கும்
பொருட்டு, பாட்டாளி வர்க்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த
வலதுக்கு மாறும் நடைமுறையானது மறுக்கப்பட வேண்டியிருந்தது
மற்றும் பிற வர்க்கங்களுக்குள்ளான புரட்சிகர நடைமுறைகள்
நம்பிக்கையூட்டும் வகையில் மிகைப்படுத்தப்பட வேண்டியிருந்தது.
அதுதான் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் இருந்து மையவாத,
அதாவது, குட்டிமுதலாளித்துவத்திற்கான நிலைப்பாட்டுக்கான
சறுக்கல், இது தன் அதிகரிக்கும் ஸ்தாபிப்பு பாதையில், தன்னை
தனது அதி-இடது கூட்டிலிருந்து விடுவித்துக் கொண்டு தன்னை ஒரு
அடிப்படை கூட்டிணைவுவாத நிலைப்பாட்டில் சோவியத் ஒன்றியத்தில்,
சீனாவில், இங்கிலாந்தில், ஜேர்மனியில், இன்னும் வேறு ஒவ்வொரு
இடத்திலும் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. |