line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 2: ஏகாதிபத்திய சகாப்தத்தில் மூலோபாயமும் தந்திரோபாயங்களும

 

Print part 2 on single page

8. வலது-மத்தியவாத சறுக்கலின் காலகட்டம்

ஐந்தாம் அகல்பேரவைக்கு இசைந்து கொடுத்த மிக முக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கையானது வெகுவிரைவில் அதனது முழுப்பயனில்லாமையையும் வெளிக்காட்டி விட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் வளர்ச்சியை தடுப்பதாக அமைந்த போலி- "இடதுவாதத்தின்" தவறுகள் பின்னர் வலது நோக்கிய விரைவான சறுக்கலாக புதிய அனுபவவாத வளைவுநெளிவுகளுக்கு உத்வேகம் அளித்தது. சுடுபாலால் சூடுபட்ட பூனை குளிர்ந்த நீரைக் கண்டால் ஓட்டம் பிடிக்கிறது. ஏராளமான கட்சிகளின் "இடது" மத்திய கமிட்டிகள் ஐந்தாம் பேரவைக்கு முன்னதாக எவ்வளவு வன்மையாக அமைக்கப்பட்டதோ அவ்வளவு வன்மையாக அகற்றப்பட்டது. சாகசவாத இடதுவாதமானது வலது-மத்தியவாத வகைப்பட்ட பகிரங்க சந்தர்ப்பவாதத்திற்கு வழிவிட்டது. வலதை நோக்கிய இந்த அமைப்புரீதியான திருப்பத்தின் குணாதிசயத்தையும் உத்வேகத்தையும் புரிந்து கொள்ள, இந்த திருப்பத்தின் இயக்குனரான ஸ்ராலின், 1924 செப்டம்பரில் கட்சித் தலைமை மாஸ்லோ, ருத் பிஸ்ஸர், ட்ரெயின்ட், சூஸான் கிரல்ட் மற்றும் பிறருக்கு மாற்றப்படுவதை கட்சிகளின் போல்ஷிவிசமயமாக்கத்தின் வெளிப்பாடு என்றும் புரட்சியை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கும் மற்றும் "புரட்சிகர தலைவர்கள் வேண்டும்" என்ற போல்ஷிவிக் தொழிலாளர்களின் வேண்டுகோளுக்கான ஒரு பதிலாகவும் மதிப்பிட்டார் என்பது கட்டாயம் நினைவு கூரப்படவேண்டும்.

ஸ்ராலின், "மேற்கத்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாழ்க்கையில் ஒரு தீவிர திருப்புமுனையை இது வழங்குகிறது என்ற அர்த்தத்தில் கடந்த அரை வருடம் குறிப்பிடத்தகுந்தது, சமூக ஜனநாயக எஞ்சியுள்ளவைகள் தீர்மானமாக கலைக்கப்பட்டு விட்டன, கட்சி காரியாளர்கள் போல்ஷ்விசமயமாக்கப்பட்டார்கள், மற்றும் சந்தர்ப்பவாத கூறுகள் தனிமைப்படுத்தப்பட்டன" என்று எழுதினார். [30]

ஆனால் பத்து மாதங்களுக்குப் பின்னர் உண்மையான "போல்ஷ்விக்குகள்" மற்றும் "புரட்சிகர தலைவர்கள்", சமூக ஜனநாயகவாதிகள் என்றும் விட்டோடிகள் என்றும் அறிவிக்கப்பட்டு, தலைமையில் இருந்து நீக்கப்பட்டார்கள் மற்றும் கட்சியை விட்டுத் துரத்தப்பட்டார்கள்.

அமைப்பில் கண்ணியமற்ற விசுவாசமற்ற எந்திரத்தனமான நடவடிக்கைகளின் மூலம் அடிக்கடி நிகழ்வித்த தலைவர்களை மாற்றும் இந்த பீதியூட்டும் குணாதிசயம் இருப்பினும், அதிதீவிர-இடது கொள்கை காலகட்டத்திற்கும் மற்றும் அதனை தொடர்ந்த சந்தர்ப்பவாத சறுக்கலின் காலகட்டத்திற்கும் இடையில் எந்த ஒரு கடுமையான கருத்தியல் ரீதியான கோட்டையும் வரையறுப்பது என்பது சாத்தியமில்லாததாகும்.

சோவியத் ஒன்றியத்தில் தொழில்துறை மற்றும் விவசாயிகள் குறித்த, காலனித்துவ முதலாளித்துவ வர்க்கம் குறித்த, முதலாளித்துவ நாடுகளில் "விவசாய" கட்சிகள் குறித்த, தனியொரு நாட்டில் சோசலிசம் குறித்த, பாட்டாளி வர்க்க புரட்சியில் கட்சியின் பங்கு குறித்த பிரச்சினைகளில், திருத்தல்வாத போக்குகளானது "ட்ரொட்ஸ்கிசத்திற்கு" எதிரான போராட்டம் என்ற மூடுதிரையின் கீழ் 1924-25களில் முழு வீச்சுடன் ஏற்கனவே தோன்றியிருந்தன. இவை தங்களின் மிகவும் தெளிவான சந்தர்ப்பவாத வெளிப்பாட்டினை ஏப்ரல் 1925ல் நடந்த சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு தீர்மானத்தில் கண்டார்கள்.

ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், வலதினை நோக்கிய பாதையானது 1923 தோல்வியினால் விளைந்த புரட்சிகர வளர்ச்சியின் பின்னடைவிற்கு அரைப்பார்வையுடன், சுத்தமான அனுபவவாத மற்றும் தாமதமாக ஏற்கும் ஒரு முயற்சியாகும். ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதைப் போல, புக்காரினின் ஆரம்ப சூத்திரப்படுத்தலானது, வார்த்தைகளின் மிக எழுத்தடிப்படையிலான மற்றும் மிக எந்திரத்தனமான பொருளில் புரட்சியின் "நிரந்தர" வளர்ச்சியினை அடிப்படையாக கொண்டிருந்தது. மற்றும் எந்த "சுவாச இடைவெளியையும்", குறுக்கீடுகளையும், அல்லது எந்த விதமான பின்வாங்கல்களையும் புக்காரின் அனுமதிக்கவில்லை; அனைத்து சூழ்நிலைகளிலும் "தாக்குதலை" தொடர்வதை அவர் ஒரு புரட்சிகர கடமையாக கருதினார்.

வேலைத்திட்ட வகையிலான ஒன்றான, சர்வதேசப் பிரச்சினைகளில் ஸ்ராலினின் முதல் முயற்சியை அடையாளப்படுத்தும் மேலே குறிப்பிட்ட கட்டுரையான சர்வதேச நிலைமைகள் பற்றி என்பது, வரைவு வேலைத்திட்டத்தின் இரண்டாவது ஆசிரியரும் "ட்ரொட்ஸ்கிசத்திற்கு" எதிரான போராட்டத்தின் ஆரம்ப காலத்திற்குரிய முற்றிலும் எந்திரத்தனமான அதே "இடதுசாரி" கருத்தாக்கத்தில் கைதேர்ந்திருப்பதை விளக்கிக் காட்டுகிறது. இந்தக் கருத்தாக்கத்திற்கு எப்போதும் மாற்றவியலாத வண்ணம் சமூக ஜனநாயகம் "வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும்", "தீவிரமயமாக்கப்பட்டு"க் கொண்டிருக்கும் தொழிலாளர்கள், "வளர்ந்து கொண்டிருக்கும்" கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் "நெருங்கிக் கொண்டிருக்கும்" புரட்சி இவை மட்டுமே இருந்தன. யாரேனும் சுற்றியிருக்கும் நிலையை பார்த்து விஷயங்களை பிரித்தறிய முற்பட்டால் அவர் ஒரு "கலைப்புவாதியாக" இருந்தார் மற்றும் இருப்பார்.

1923ல் ஐரோப்பிய சூழலில் ஒரு உடைவுக்குப் பின்னர், தன்னையே, பீதி கொண்ட, அதன் எதிரிடையாக உருமாற்றிக்கொள்ளும் வகையில் ஏதோ புதிய ஒன்றை உணர்ந்து கொள்வதற்கு இப் "போக்கிற்கு" ஒன்றரை ஆண்டுகாலம் தேவைப்பட்டது. நமது சகாப்தம் மற்றும் அதன் உள்முகப் போக்குகளின் எந்தவித தொகுத்து நோக்கும் புரிதலும் இன்றி, தட்டித்தடவிக்கொண்டும் (ஸ்ராலின்) மற்றும் இவ்வாறு பெற்ற துண்டு துண்டான முடிவுகளுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் புதுப்பிக்கப்படும் பண்டிதத்தனமான திட்டங்களுடன் இவ்வாறு பெறப்பட்ட துண்டுகளாகிவிட்ட முடிவுகளை (புக்காரின்) செம்மைப்படுத்துவதன் மூலமே தலைமையானது தன்னை நோக்குநிலைப்படுத்தியது. எனவே ஒட்டுமொத்தமாக அரசியல் நிலைப்பாடு, ஒரு வளைவு நெளிவான சங்கிலியைப் போல் இருந்தது. கருத்தியல் நிலைப்பாடானது ஸ்ராலினிச வளைவுநெளிவுகளின் ஒவ்வொரு துண்டுகளையும் அர்த்தமற்ற நிலைக்கு இட்டுச்செல்லும் போக்குடைய பல்வண்ணக் காட்சிக் கருவியின் நிலையற்ற தன்மையுடையதாக இருந்தது.

புக்காரினால் உருவாக்கப்பட்ட, மற்றும் அவரால், உதாரணமாக, ஆங்கிலோ-ரஷ்யன் குழுவின் அனைத்து நிலைகளுக்கும், அடிப்படையாக செயல்படும் நோக்கத்தோடு கொண்டிருந்த அனைத்து தத்துவங்களையும் தொகுப்பதற்கு ஒரு சிறப்பு குழுவை தேர்ந்தெடுக்க முடிவு செய்திருந்தால் ஆறாம் பேரவை சரியாகச் செயல்பட்டதாய் இருந்திருக்கும். இந்த தத்துவங்கள் காலக்கிரம அடிப்படையில் தொகுக்கப்பட்டு திட்டமிட்டபடி ஒழுங்கமைக்கப்பட்டு அவற்றில் இருக்கும் சிந்தனைகள் ஒரு புள்ளிவிவரப்படமாக வரையப்பட வேண்டியதாயிருந்தது. இது ஒரு மிகவும் தகவலளிக்கத்தக்க மூலோபாய வரைபடமாக இருந்திருக்கும். சீனப் புரட்சி, சோவியத் ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி, மற்றும் அனைத்து பிற முக்கியத்துவம் குறைந்த கேள்விகளுக்கும் இது பொருந்துகிறது. குருட்டுத்தனமான அனுபவவாதத்தை புலமைவாதத்தால் பெருக்குவது போன்றதொரு பாதை இரக்கமற்ற கண்டனத்திற்கு இன்னமும் தகுதியுடையதாயிருக்கிறது.

இந்தப் பாதையின் விளைவுகள் சோவியத் ஒன்றியத்தின் உள்நாட்டு கொள்கையில், சீன புரட்சியில் மற்றும் ஆங்கிலோ-ரஷ்யன் குழு என்ற மூன்று முக்கிய கேள்விகளில் தங்களை மிகவும் அபாயகரமாக வெளிக்காட்டின. விளைவுகள் அதே திசையில் இருந்தன, ஆனால் பொதுவாக கம்யூனிச அகிலத்தின் கொள்கைகள் குறித்த அனைத்து பிற கேள்விகளில் உடனடி விளைவில், தெளிவற்றதாகவும் அபாயம் குறைந்ததாகவும் இருந்தன.

சோவியத் ஒன்றியத்தின் உள்நாட்டுக் கேள்விகளை பொறுத்தவரை, சறுக்கல் கொள்கை குறித்த போதுமான நீண்ட குணாதிசயப்படுத்தல் போல்ஷ்விக்-லெனினிஸ்டுகள் (எதிர்ப்பின்) மேடையில் Platform of the Bolshevik-Leninists (Opposition) கொடுக்கப்பட்டிருக்கிறது. இங்கே மேடையினை வெறுமனே சுட்டிக்காட்டலுடன் நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். 1923 முதல் 1928 வரையிலான வருடங்களின் கொள்கையின் விளைவுகளில் இருந்து தப்பிப்பதற்கான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய தலைமையின் அத்தனை முயற்சிகளும் மேடையினால் ஏறக்குறைய எழுத்துவடிவமான மேற்கோள்களை, அதன் ஆசிரியர்களும் பின்பற்றுபவர்களும் சிறைகளிலும் நாடு கடத்தப்பட்டும் சிதறியிருக்கும் நிலையில், அடிப்படையாக கொண்டவையாக இருக்கின்றன எனும் உண்மையில் அணி இப்போது வெளிப்படையான மிகவும் எதிர்பாராதவொரு உறுதிப்படுத்தலைப் பெறுகிறது. இருந்தாலும், ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கூட கூட்டாது, தற்போதைய தலைவர்கள் அணியினரில் கருத்துக்களை நோக்கி பகுதி பகுதியாகவும் துண்டுகளாகவும் தமக்கு சாதகமாக மீண்டும் திரும்பும் உண்மையானது புதிய இடது திருப்பத்தை நிலையற்றதாகவும் உறுதியற்றதாகவும் ஆக்குகிறது; ஆனால் அதே சமயத்தில் இது மேடைக்கு ஒரு உண்மையான லெனினிச பாதையின் பொதுவான வெளிப்பாடாக முன்னெப்போதையும் விட அதிக மதிப்பை கொடுக்கின்றது.

மேடையில், சீனப் புரட்சி குறித்த கேள்வி மிகவும் போதுமானதாக இல்லாமல், முழுமையின்றி, ஒரு பகுதியில் தவறானதாக காட்சியளிக்கும் வண்ணமும் சினோவியேவினால் கையாளப்படுகிறது. கம்யூனிச அகிலத்திற்கு இந்த கேள்வியின் தீர்மானிக்கும் முக்கியத்துவம் காரணமாக, இதனை ஒரு தனி அத்தியாயத்தில் மிகவும் விரிவானதொரு விசாரணைக்குட்படுத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம். (பார்க்கவும் Section III.)

சமீப வருடங்களில் கம்யூனிச அகிலத்தின் மூலோபாய அனுபவங்களில் இருந்துவரும் மூன்றாவது முக்கிய கேள்வியான ஆங்கிலோ-ரஷ்யன் குழுவைப் பொறுத்தவரை, எதிர்ப்பாளர்களால் ஏற்கனவே தொடர்ச்சியான கட்டுரைகள், பேச்சுகள், மற்றும் ஆய்வுக் கட்டுரைகளில் கூறப்பட்டதற்கு பின்னர், ஒரு சிறிய சுருக்கம் மட்டுமே நமக்கு எஞ்சியதாயிருக்கிறது.

ஆங்கிலோ-ரஷ்யன் குழுவின் ஆரம்பப் புள்ளியானது, நாம் ஏற்கனவே கண்டிருப்பதைப் போல, இளம் மற்றும் மிக மெதுவாக வளர்ந்து கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியினை தாண்டிப் பாய முயலும் பொறுமையற்ற உத்வேகமாகும். இது பொதுவேலைநிறுத்தத்திற்கு முன்பே கூட முழு அனுபவத்திற்கும் பிழையான குணாதிசயத்தை கொடுத்தது.

ஆங்கிலோ-ரஷ்யன் குழுவானது உடைக்கப்பட வேண்டிய மற்றும் பொதுச்சபையுடன் சமரசம் செய்யும்பொருட்டு முதலாவது தீவிர பரிசோதனையலேயே தவிர்க்க இயலாமலும் விளக்கப்படுத்தும் வகையிலும் உடைக்கப்பட வேண்டிய, உயர் நிலைகளில் ஒரு நிகழ்விற்குரிய கூட்டாக பார்க்கப்படவில்லை. ஸ்ராலின், புக்காரின், ரோம்ஸ்கி, மற்றும் மற்றவர்கள் மட்டுமல்ல, சினோவியேவும் கூடத் தான் இதில் ஒரு நீடித்திருக்கும் "இணை-கூட்டுறவை"க் கண்டார். இங்கிலாந்து உழைக்கும் மக்களின் படிப்படியான புரட்சிமயமாக்கத்திற்கான ஒரு கருவியாக, இங்கிலாந்தின் பாட்டாளி வர்க்க புரட்சி பயணிப்பதற்கான நுழைவாயிலாக, நுழைவாயிலாக இல்லையென்றால் குறைந்தபட்சம் அந்த நுழைவாயிலை அணுகுவதற்கான ஒன்றாக கண்டனர். அது இன்னும் நீடித்திருக்க, ஆங்கிலோ ரஷ்யன் குழுவானது கூடுதலாக ஒரு காலகட்டத்திற்கான கூட்டணி என்ற நிலையில் இருந்து உண்மையான வர்க்கப் போராட்டத்திற்கு மேல் நிற்கும் மீறத்தகாத கொள்கையாக உருமாற்றம் கொண்டது. இது பொது வேலைநிறுத்த சமயத்தில் வெளிப்பட்டது.

திறந்த புரட்சிகர நிலைக்கான மக்கள் இயக்கத்தின் மாற்றம், சற்று இடதுசாரியாக மாறி விட்டிருந்த தாராளவாத தொழிலாளர் அரசியல்வாதிகளை மீண்டும் பூர்சுவா பிற்போக்கு முகாமுக்குள் தூக்கி எறிந்தது. அவர்கள் பொது வேலைநிறுத்தத்தை வெளிப்படையாகவும் திட்டமிட்டும் ஏமாற்றினார்கள்; அதன் பிறகு அவர்கள் சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை கீழறுத்ததோடு அதனையும் காட்டிக்கொடுத்தார்கள். சீர்திருத்தவாதத்தில் எப்போதுமே காட்டிக்கொடுப்பிற்கான சாத்தியம் அடங்கியுள்ளது. ஆனால், ஒவ்வொரு தருணத்திலும் சீர்திருத்தவாதமும் காட்டிக்கொடுப்பும் ஒன்றேவாகத் தான் இருக்கும் என்பது இதன் பொருளல்ல. முழுக்கவும் அப்படிச் சொல்லி விட முடியாது. சீர்திருத்தவாதிகள் எப்போது முன்னோக்கிய ஒரு அடி எடுத்து வைத்தாலும் அவர்களுடன் தற்காலிக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படலாம். ஒரு இயக்கத்தின் வளர்ச்சியால் அச்சமுற்று அவர்கள் நம்பிக்கைத்துரோகம் செய்யும்போது அவர்களுடன் கூட்டைப் பராமரிப்பது என்பது துரோகிகளின் குற்றகரமான சகிப்புத்தன்மைக்கும் காட்டிக்கொடுப்பை திரையிட்டுமறைப்பதற்கும் ஒப்பானதாகும்.

பொதுவேலைநிறுத்தம், நிலக்கரி சுரங்கத் தொழில்துறையின் அரச கொள்கையின் மிக முக்கியமான கேள்வியாக மாறிவிட்டபோது, முதலாளிகள் மற்றும் அரசு மீது ஐந்து மில்லியன் தொழிலாளர்களின் சக்தி மூலம் ஒன்றிணைந்த அழுத்தத்தை கடுமையாய் அளிக்கும் பணியை கொண்டிருந்திருக்கவேண்டும். தலைமை காட்டிக்கொடுத்ததன் காரணமாக, வேலைநிறுத்தமானது அதன் முதல் கட்டத்திலேயே உடைக்கப்பட்டது. பொது வேலைநிறுத்தம் சாதிக்க முடியாத ஒன்றை சுரங்கத் தொழிலாளர்களின் தனிமைப்பட்ட பொருளாதார வேலைநிறுத்தம் தனியாகச் சாதித்து விடும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்தது ஒரு பெரிய பிரமை ஆகும். இங்கு தான் துல்லியமாக பொதுச் சபையின் பலம் அடங்கியுள்ளது. தொழிலாளர்களின் பெரும் பிரிவை பொதுச் சபையின் காட்டிக்கொடுப்பாளரின் வழிகாட்டல்களின் "சரியான தன்மை" மற்றும் "ஒப்புக்கொள்ளத்தக்க தன்மை" குறித்து நம்பச் செய்ய முடியும் என்பதன் காரணமாக இது சுரங்கத் தொழிலாளர்களின் தோல்வியில் மோசமான கணக்கிடுதலை இலக்காகக் கொண்டிருந்தது.

இந்த கனமான சோதனையில் இருந்து சாத்தியமுள்ள மிகக் குறைந்த இழப்புகளுடன் தொழிற் சங்கங்களின் தலைவர்கள் வெளிவர வேண்டுமென்றால், பொதுச் சபையுடன் சுமுகமான கூட்டை பராமரிப்பதும், மற்றும் பொதுச் சபைக்கு எதிராக இருந்த, சுரங்கத் தொழிலாளர்களின் நீட்டிக்கப்பட்ட மற்றும் தனிமைப்பட்ட பொருளாதார வேலைநிறுத்தத்திற்கு அதே சமயத்தில் ஆதரவளிப்பதும் முன்னதாக கணக்கிடப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.

புரட்சிகர நிலைப்பாட்டிலிருந்து, ரஷ்ய தொழிற்சங்கங்களின் பங்கானது மிகவும் பாதகமானதாகவும் பரிதாபத்திற்குரியதாகவும் ஆகிவிட்டது. நிச்சயமாக, ஒரு பொருளாதார வேலைநிறுத்தத்திற்கான ஆதரவு, அது தனிமைப்பட்டதாய் இருந்தாலும், முழுக்கவும் அவசியமாய் இருந்தது. புரட்சியாளர்களிடையே அதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால் இந்த ஆதரவு, நிதிரீதியாக மட்டுமல்லாது புரட்சிகர அரசியல் பண்புகளையும் கொண்டதாய் இருந்திருக்க வேண்டும். தனது விடாப்பிடியானதன்மை, உறுதி மற்றும் அதன் செயற்பரப்பெல்லை மூலம் பொது வேலை நிறுத்தத்திற்கான ஒரு புதிய வெடிப்புக்கு வழி தயார்செய்வதன் மூலம் மட்டுமே சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தமானது வெற்றிக்கு தீவிரமாக துணை நிற்க முடியும் என்பதை அனைத்து ரஷ்ய தொழிற்சங்கங்களின் மத்திய குழுவானது இங்கிலாந்து சுரங்கத் தொழிலாளர்களின் சங்கத்திடமும் மற்றும் ஒட்டுமொத்த இங்கிலாந்து தொழிலாள வர்க்கத்திடமும் வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும். இது, அரசு மற்றும் சுரங்க முதலாளிகளின் ஏஜென்சியான பொதுச் சபைக்கு எதிரான வெளிப்படையான மற்றும் நேரடியான போராட்டம் மூலம் மட்டுமே சாதிக்கப்பட்டிருக்க முடியும். இவ்வாறானதாக, பொருளாதார வேலைநிறுத்தத்தை ஒரு அரசியல் வேலைநிறுத்தமாக மாற்றுவதற்கான ஒரு போராட்டம், பொதுச் சபைக்கு எதிரான ஒரு ஆவேசமான அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான போராட்டத்தை குறிப்பிடுவதாய் இருந்திருக்கும். இத்தகையதொரு போராட்டத்திற்கான முதல் படியானது, ஒரு பிற்போக்குவாத தடைக்கல்லாக, தொழிலாள வர்க்கத்தின் காலிலிடப்பட்ட சங்கிலியாக மாறி விட்ட ஆங்கிலோ-ரஷ்யன் குழுவுடனான உடைவாக இருந்திருக்க வேண்டும்.

இந்த பாதையில் செல்வதன்மூலமே வெற்றி உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கும் என்று தனது வார்த்தைகளை சீர்த்தூக்கிப் பார்க்கும் எந்த புரட்சியாளரும் வாதாட மாட்டார். ஆனால் இந்த பாதையில் மட்டுமே ஒரு வெற்றி சாத்தியமாய் இருந்தது. இந்த பாதையில் ஒரு தோல்வியானது பின்னர் வெற்றிக்கு இட்டுச் செல்லத்தக்க ஒரு பாதையின் தோல்வியாகும். இத்தகையதொரு தோல்வி தொழிலாள வர்க்கத்தில் உள்ள புரட்சிகர சிந்தனைகளை கற்பிக்கிறது, அதாவது, வலிமைப்படுத்துகிறது. இதனிடையே, நீண்டு கொண்டேயிருக்கும் நம்பிக்கையிழந்த தொழிற்சங்க வேலை நிறுத்தத்திற்கான (அதன் வழிமுறைகளில் தொழிற்சங்க வேலைநிறுத்தம்; அதன் இலக்குகளில் புரட்சிகர-அரசியல்) வெறும் நிதிரீதியான ஆதரவானது, வேலை நிறுத்தம் பசியால் சுருண்டு வீழும் வரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்து, பின் இதன் மூலம் தனது சொந்த "சரியான தன்மை"யை நிரூபிக்க எண்ணும் பொதுச் சபையின் வாய்க்கு அவல் இட்டதாகவே அர்த்தமளிக்கும். உண்மை தான், வெளிப்படையான வேலைநிறுத்த-உடைப்பாளராக தனது பங்கில் சரியான தருணத்திற்காக பொதுச் சபை பல மாதங்கள் எளிதாகக் காத்திருக்க முடியாது. துல்லியமாக நெருக்கடியான இந்த முக்கிய காலகட்டத்தில் தான் மக்களை நோக்கிய தனது அரசியல் திரைக்கு பொதுச் சபைக்கு ஆங்கிலோ-ரஷ்யன் கமிட்டி அவசியப்பட்டது. இவ்வாறாக, இங்கிலாந்து மூலதனம் மற்றும் பாட்டாளி வர்க்கத்திற்கு இடையிலான, பொதுச் சபை மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் இடையிலான உயிராபத்தான வர்க்க போராட்டம் குறித்த கேள்விகளானது, தோற்றமளிப்பதைப் போல, ஒரே திரளணியில் உள்ள இங்கிலாந்தின் பொதுச் சபை மற்றும் அனைத்து ரஷ்ய தொழிற்சங்கங்களின் மத்திய சபை என்ற கூட்டணிக் கட்சிகளிடையிலான, இரண்டு பாதைகளில் எது அந்த தருணத்தில் சிறப்பானது என்கிற விஷயத்தின் மீதான நட்புரீதியான விவாதம் குறித்த கேள்விகளாக உருமாற்றம் செய்யப்பட்டது: ஒரு ஒப்பந்தத்திற்கான பாதை அல்லது தனிமைப்பட்டதொரு பொருளாதார போராட்டத்திற்கான பாதை. வேலைநிறுத்தத்தின் விளைவானது ஒப்பந்தத்திற்கு இட்டுச் சென்றது, அதாவது, துன்பகரமாக நட்புரீதியான "விவாதத்தில்" பொதுச் சபைக்கு சாதகமாக தீர்த்து விட்டது.

ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை, ஆங்கிலோ-ரஷ்ய குழுவின் ஒட்டுமொத்தக் கொள்கையானது, அதன் தவறான நிலைப்பாட்டின் காரணமாக, பொதுச் சபைக்கு உதவ மட்டுமே செய்தது. வேலைநிறுத்தமானது நீண்ட நாள்களுக்கு பொருளாதார ரீதியில் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் பங்கிலான பெரும் சுய-தியாகத்தின் மூலம் தான் வைத்திருக்கப்பட்டது என்கிற உண்மையும் கூட சுரங்கத் தொழிலாளர்களுக்கோ அல்லது இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கோ உதவுவதாய் அமையவில்லை, மாறாக அதே பொதுச் சபைக்கு தான் உதவியது. இங்கிலாந்தில் (சார்ட்டிச) பேருரிமைக் கிளர்ச்சி இயக்க நாட்களுக்கு பின்னர், மாபெரும் புரட்சிகர இயக்கத்தின் விளைவாக, இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியானது சொல்லிக் கொள்ளும் வளர்ச்சியை பெற முடியவில்லை அதே சமயத்தில் பொதுக் குழுவானது பொது வேலைநிறுத்தத்திற்கு முன்பிருந்ததை விடவும் உறுதியுடன் இருக்கையில் அமர்ந்துள்ளது.

இவை தான் இந்த தனித்துவ "மூலோபாய மறைமுக கையாளலின்" விளைவுகளாகும்.

பொதுச் சபையுடன் கூட்டைப் பராமரிப்பதில் காட்டப்பட்ட பிடிவாதம் - இது ஏப்ரல் 1927ல் அவமதிப்பை கொணர்ந்த பேர்லின் அமர்வில் அப்பட்டமான அடிமைத்தனத்திற்கு இட்டுச் சென்றது - எப்போதும் நிகழ்வது போல அதே "ஸ்திரப்படுத்துதலை" சுட்டிக் காட்டப்பட்டு விளக்கமளிக்கப்படுகிறது. புரட்சியின் வளர்ச்சியில் ஒரு பின்னடைவு இருக்குமானால், பின் நீங்கள் ஒருவர் புர்செல் (றிuக்ஷீநீமீறீறீ)-ஐ பிடித்துத் தொங்குவதற்கு தள்ளப்படுவதை பார்க்கலாம். இந்த வாதமானது, ஒரு சோவியத் நிர்வாக அலுவலருக்கோ அல்லது மெல்னிசான்ஸ்கி வகைப்பட்ட ஒரு தொழிற்சங்கவாதிக்கோ ரொம்பவும் ஆழமானதாக தோன்றினாலும், உண்மையில் குருட்டு அனுபவவாதம் பண்டித நுணுக்கத்தால் மட்டரகமாக்கப்படுவதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும். இங்கிலாந்தின் பொருளாதாரத்திற்கும் மற்றும் அரசியலுக்கும் "ஸ்திரப்படலினால்" ஆவது என்ன, அதிலும் 1926-1927ம் ஆண்டுகளில்? இது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை குறிப்பிட்டதா? இல்லை பொருளாதார சூழலின் முன்னேற்றத்தையா? வருங்காலத்திற்கான சிறந்த நம்பிக்கைகளையா? எதுவுமில்லை. இங்கிலாந்து முதலாளித்துவத்தின் ஸ்திரப்படுத்தல் என்று கூறப்படுவதன் ஒட்டுமொத்தமும், இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பலவீனத்தின் மற்றும் திடசித்தமின்மையின் முன்னதான தங்களின் போக்குகள் மற்றும் சாயல்களுடன் கூடிய பழைய தொழிலாளர் அமைப்புகளின் பழமைவாத சக்திகளின் மீது தான் பராமரிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் பொருளாதார மற்றும் சமூக உறவுகள் களத்தில், புரட்சி ஏற்கனவே முழுவதுமாய் முதிர்ந்து விட்டது. கேள்வி முற்றிலும் அரசியல் ரீதியான ஒன்றாக நிற்கிறது. இங்கிலாந்தின் ஸ்திரப்படுத்தலின் அடிப்படைத் தூண்களான தொழிற் கட்சியினதும் மற்றும் தொழிற்சங்கங்களினதும் தலைவர்கள் தங்களுக்குள் தொழிற்பங்கீட்டை கொண்டிருந்தாலும் இவர்கள் ஒரே அமைப்பாகவே இயங்குகின்றனர்.

பொது வேலைநிறுத்தத்தால் வெளிப்பட்டது போன்ற உழைக்கும் மக்களின் இத்தகையதொரு சூழலால், முதலாளித்துவ ஸ்திரப்படலின் இயங்குமுறையில் தலைமைப் பதவியானது அதற்கு பின்னரும் மக்டொனால்ட் மற்றும் தோமஸால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கவில்லை, மாறாக புக், புர்செல், குக் மற்றும் குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்கள் வேலையைச் செய்து முடித்தார்கள், தோமாஸ் இறுதிபணியை செய்தார். புர்செல் இல்லாமல் தோமாஸ் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்திருப்பார், இங்கிலாந்து புரட்சியின் மீதான தலைமை தடையானது புர்செலின் போலியான, சம்பிரதாயபூர்வமான, வேஷமிடும் "இடதுவாதம்" ஆகும், இது சுழற்சி முறையில் இணைந்து கொள்கிறது, சில சமயங்களில் தேவாலய நபர்களுடனும் போல்ஷ்விக்குகளுடனும் ஒரே சமயத்தில் சேர்ந்து கொள்கிறது. இது பின்வாங்கலுக்கு மட்டுமல்ல ஏமாற்றுவதற்கும் எப்போதும் தயாரான ஒன்றாக இருக்கிறது. ஸ்திரப்படுத்தல் என்பது புர்செலிசம். புர்செலுடன் அரசியல் கூட்டை நியாயப்படுத்துவதற்காக "ஸ்திரப்படுத்தலுக்கான" குறிப்பில் எவ்வளவு ஆழமாக தத்துவார்த்த முட்டாள்தனமும் குருட்டு சந்தர்ப்பவாதமும் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை இதிலிருந்து நாம் காண்கிறோம். இருப்பினும், துல்லியமாக "ஸ்திரப்படுத்தலை" சீர்குலைக்க வேண்டுமென்றால், புர்செலிசம் முதலில் அழிக்கப்பட வேண்டும். இது போன்றதொரு சூழலில், பொதுக் குழுவுடன் ஒற்றுமையாக இருப்பதாகத் தோன்றும் ஒரு சாயல் கூட உழைக்கும் மக்களுக்கு எதிரான மிகப்பெரும் குற்றம் மற்றும் பெரும்பழிச்செயலாகும்.

மிகச் சரியானதொரு மூலோபாயமாக இருந்தாலும் கூட, அதுமட்டுமே, எப்போதும் வெற்றிக்கு இட்டுச் சென்று விட முடியாது. ஒரு மூலோபாயத் திட்டத்தின் சரியான தன்மையானது அது வர்க்க சக்திகளின் உண்மை வளர்ச்சிப் பாதையை பின்பற்றுகிறதா மற்றும் இந்த வளர்ச்சியின் பிரிவுகளை யதார்த்தமான முறையில் மதிப்பிடுகிறதா என்பதன் மூலம் தான் சரிபார்க்கப்படுகிறது. மிகப் பயங்கரமானதும் மற்றும் மிகவும் அவமரியாதையளிப்பதும், இயக்கத்திற்கு மிகவும் அபாயகரமான பின்விளைவுகளை கொண்டு வருவதுமான தோல்வியானது என்றுமே, வர்க்கங்களின் தவறான மதிப்பீடு, புரட்சிகரக் காரணிகளை குறைத்து மதிப்பிடுவது, மற்றும் எதிர் சக்திகளை உயர்வாக மதிப்பீடு செய்வதால் விளையும் ஒரு மென்ஷிவிச தோல்வியே ஆகும். இதுபோன்ற தோல்விகள் தான் நமக்கு சீனா மற்றும் இங்கிலாந்தில் கிடைத்தவை.

சோவியத் ஒன்றியத்திற்கு ஆங்கிலோ-ரஷ்யன் குழுவில் இருந்து என்ன எதிர்பார்க்கப்பட்டது?

ஜூலை 1926ல், மத்திய குழு மற்றும் மத்திய கட்டுப்பாட்டு குழுவின் இணைந்த நிறை பேரவையில் ஸ்ராலின் நம்மிடம் பின்வருமாறு உரையாற்றினார்:

"இந்த கூட்டின் பணியானது [ஆங்கிலோ-ரஷ்யன் குழு], புதிய ஏகாதிபத்திய போர்களுக்கு எதிராக மற்றும் ஐரோப்பாவின் வலிமை மிகுந்த ஏகாதிபத்திய சக்திகள், அதிலும் குறிப்பாக இங்கிலாந்து, பொதுவாக நமது நாட்டில் [விசேடமாக] தலையிடுவதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் அடங்கியிருக்கிறது."

"உலகின் முதலாவது தொழிலாளர் குடியரசினை, தலையீட்டுக்கு எதிராக பாதுகாப்பதில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்" (இயல்பாகவே, நாம், இதெல்லாம் அறியாமல் தான் இருந்தோம்) என்று தொனிக்கும் வகையில் நமக்கு, எதிர்ப்பாளர்களுக்கு, கட்டளையிடுகையில் ஸ்ராலின் சேர்த்துக் கொண்டார்:

"இங்கிலாந்தின் பிற்போக்கு தொழிற்சங்கங்கள் தங்கள் சொந்த நாட்டின் எதிர்ப்புரட்சிகர ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக நமது நாட்டின் புரட்சிகர தொழிற்சங்கங்களுடன் ஒரு கூட்டை அமைக்கத் தயாராக இருந்தால், பின் ஏன் நாம் இத்தகையதொரு கூட்டை பாராட்டக் கூடாது?"

"பிற்போக்கு தொழிற்சங்கங்கள்" தங்களது சொந்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் திறன் பெற்றிருந்தால், அவர்கள் பிற்போக்காளர்களாக இருக்க மாட்டார்கள். ஸ்ராலின் அதற்குப் பின்னரும் பிற்போக்கு மற்றும் புரட்சிகர ஆகிய கருத்தாக்கங்களுக்கு இடையில் வேறுபடுத்தியறியும் திறனைப் பெற்றிருக்கவில்லை. வழமையான முறையில் இங்கிலாந்தின் தொழிற்சங்கங்களை பிற்போக்கானவை என்று சித்தரிக்கும் அவர், உண்மையில் அவர்களது "புரட்சிகர உணர்வு" குறித்து துயரமளிக்கும் பிரமைகளை ஊக்கப்படுத்துகிறார்.

ஸ்ராலினுக்கு பின்னர், எமது கட்சியின் மாஸ்கோ குழு, மாஸ்கோ தொழிலாளர்களிடம் உரையாற்றியது:

"சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக திசை திருப்பப்படும் அனைத்து சாத்தியமுள்ள தலையீடுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஆங்கிலோ-ரஷ்யன் கமிட்டியானது சந்தேகத்திற்கிடமில்லாமல் மிகப்பெரும் பங்கினை ஆற்ற முடியும், ஆற்ற வேண்டும், ஆற்றும். புதியதொரு போரைத் தூண்டுவதற்கான சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிரான போராட்டத்திற்கு பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச சக்திகளின் ஒருங்கிணைப்பு மையமாக இது ஆகும்." [31]

எதிர்ப்பாளர்கள் என்ன பதில் கொடுத்தார்கள்? நாங்கள் கூறினோம்:

"சர்வதேச சூழலானது மிகவும் கூர்மையடைய, ஆங்கிலோ-ரஷ்யன் குழுவானது அதே அளவுக்கு பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச ஏகாதிபத்தியத்தின் ஆயுதமாக மாறிக் கொண்டே செல்லும்."

தொழிலாளர் அரசுக்கான பாதுகாப்பு தேவதையென்ற புர்செல் மீதான ஸ்ராலினிச நம்பிக்கைகளின் மேலான இந்த விமர்சனம் இதே நிறை பேரவையிலேயே "லெனினிசத்திலிருந்து ட்ரொட்ஸ்கிசத்திற்கான" விலகலாக ஸ்ராலினால் சித்தரிக்கப்பட்டது.

வோரோஷிலோவ்: "சரி."

ஒரு குரல்: "வோரோஷிலோவ் அதற்கு தன் முத்திரையை அளித்திருக்கிறார்."

ட்ரொட்ஸ்கி: "அதிர்ஷ்டவசமாக இவை அனைத்தும் குறிப்புகளுக்குள் இருக்கும்."

ஆம், இவை அனைத்துமே குருட்டுத்தனமான, முரட்டுத்தனமான, மற்றும் விசுவாசமற்ற சந்தர்ப்பவாத எதிர்ப்பாளர்களை "தோல்விவாதம்" என்று குற்றஞ்சாட்ட துணிந்த ஜூலை நிறை பேரவையின் குறிப்புகளில் காணக் கூடியவை.

எனது முந்தைய கட்டுரையான ''என்ன கொடுத்தோம் என்ன பெற்றோம்'' என்பதில் இருந்து சுருக்கமாக மேற்கோள் காட்ட என்னை நிர்ப்பந்திக்கப்பட்ட இந்த உரையாடலானது, வரைவு வேலைத்திட்டத்திலுள்ள மூலோபாயம் மீதான ஒட்டுமொத்த முதிர்ச்சியற்ற அத்தியாயத்தை விடவும் மிகுந்த பயனுள்ளதொரு மூலோபாய பாடமாக இருக்கிறது. நாம் என்ன கொடுத்தோம் (மற்றும் எதிர்பார்த்தோம்) மற்றும் என்ன பெற்றோம்? - என்கிற கேள்வியானது பொதுவில் மூலோபாயத்தின் முதன்மை அடிப்படைத் தத்துவமாகும். இது சமீப வருடங்களின் திட்டநிரலில் இருக்கும் அனைத்து கேள்விகள் தொடர்பாக ஆறாவது பேரவைக்கும் கட்டாயம் பயன்படுத்தப்படவேண்டும். கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் மூலோபாயமானது, அதிலும் குறிப்பாக 1926ம் ஆண்டு முதல், கற்பனையான கூட்டல்கள், தவறான கணக்கீடுகள், எதிரியைப் பற்றிய பிரமைகள், மற்றும் மிகவும் நம்பிக்கைக்குகந்த மற்றும் மனந்தளராத போராளிகள் மீதான அடக்குமுறைகள் தான் என்பதை இது தீர்மானமாக வெளிப்படுத்தப்படும். ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், இது வலது-மத்தியவாதத்தின் உளுத்துப் போன மூலோபாயம் ஆகும்.