line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 2: ஏகாதிபத்திய சகாப்தத்தில் மூலோபாயமும் தந்திரோபாயங்களும

 

Print part 2 on single page

6. "ஜனநாயக-அமைதிப்படுத்தல் சகாப்தமும்" பாசிசமும்
 

1923ம் ஆண்டு இலையுதிர்காலத்தில் குறைந்தபட்ச உள்நாட்டு யுத்தத்துடன் அச்சமூட்டிக்கொண்டிருந்த பாட்டாளி வர்க்க அபாயத்தை அகற்றிய ஜேர்மன் கம்யூனிசத்தின் சரணாகதியானது, தவிர்க்க இயலாத வண்ணம் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய நிலையை மட்டும் பலவீனப்படுத்த இருந்தது மட்டுமல்லாமல் பாசிசத்தின் நிலைப்பாட்டையும் பலவீனமுறச் செய்தது. பூர்சுவாக்கள் வெற்றி பெறும் ஒரு உள்நாட்டு யுத்தம் கூட முதலாளித்துவ சுரண்டலுக்கான நிலைமைகளை இல்லாது செய்து விடுகிறது. ஏற்கனவே அந்த நேரத்தில், அதாவது 1923ன் இறுதியில், ஜேர்மன் பாசிசத்தின் வலிமை மற்றும் அபாயம் குறித்த மிகைப்படுத்தலை எதிர்த்து நாம் போரிட்டுக் கொண்டிருந்தோம். ஒட்டுமொத்த ஐரோப்பாவில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிரான்சின் இடது கூட்டு, இங்கிலாந்தின் தொழிற் கட்சி போன்ற ஜனநாயக மற்றும் அமைதிப்படுத்தல் குழுவாக்கங்களால் அரசியல் மேடை ஆக்கிரமித்துக் கொள்ளப்படும்போது பாசிசம் பின்னணிக்கு தள்ளப்படும் என்று நாம் வலியுறுத்தினோம். மற்றும் இந்த குழுவாக்கங்களின் பலப்படுத்தலானது மறுபக்கத்தில் ஜேர்மன் சமூக ஜனநாயகத்தின் ஒரு புதிய வளர்ச்சிக்கு தேவையான உந்துசக்தியை அளிக்கும். இந்த தவிர்க்க இயலாத நிகழ்வுப்போக்கை புரிந்து கொண்டு அதற்கு எதிராக ஒரு புதிய முன்னணியை ஒழுங்கமைப்பதற்கு பதிலாக, உத்தியோகபூர்வ தலைமையானது சமூக ஜனநாயகத்தை பாசிசத்துடன் இணைத்து அடையாளம் காண்பதையும், நெருங்கி விட்ட உள்நாட்டு யுத்தத்தில் அவை இரண்டுமே இணைந்து வீழ்ச்சி காண்பதன் தீர்க்கதரிசனத்தையும் தொடர்ந்தது.

அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான பரஸ்பரஉறவுகளின் பிரச்சினை பாசிசம் மற்றும் சமூக ஜனநாயகம் குறித்த கேள்வியின் மீது நெருக்கமாக பிணைந்திருக்கிறது. 1923ல் ஜேர்மன் புரட்சியின் தோல்விதான், அமெரிக்க மூலதனம் ஐரோப்பாவை (அப்போதைக்கு) "அமைதிவழியில்" கீழ்ப்படுத்தும் தனது திட்டம் நனவாக தொடங்கியதாக உணர்ந்ததை சாத்தியமாக்கியது. இந்த சூழ்நிலைகளின் கீழ், அமெரிக்க பிரச்சினையானது அதன் முழு பரிமாணத்திலும் சிந்திக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு பதிலாக, ஐந்தாம் அகல்பேரவையின் தலைமை அதனை வெறுமனே கடந்து சென்று விட்டது. ஐரோப்பிய புரட்சியின் நீண்ட காலதாமதமானது சர்வதேச உறவுகளின் அச்சை உடனடியாக ஐரோப்பாவின் மீதான அமெரிக்க தாக்குதலின் பக்கம் திருப்பி விட்டது என்பதைக் கூட கவனிக்காமல் அது முழுக்கவும் ஐரோப்பாவின் உள்நிலைமைகளில் இருந்தே முற்றுமுழுதாக தொடர்ந்தது.

இந்த தாக்குதலானது ஐரோப்பாவின் பொருளாதார "உறுதிப்படுத்தல்", ஐரோப்பாவை வழமைக்கு திரும்பச்செய்தல் மற்றும் அமைதிப்படுத்தல் மற்றும் ஜனநாயக அடிப்படை கொள்கைகளுக்கு "மீள்தல்" ஆகியவற்றின் வடிவத்தை மேற்கொள்ளவைத்தது. சிதைவுற்ற குட்டி முதலாளித்துவ வர்க்கம் மட்டுமல்லாது ஒரு சராசரி தொழிலாளியையும் கம்யூனிஸ்ட் கட்சியானது வெற்றிபெறத் தவறிவிட்டதால், சமூக ஜனநாயகமானது நமக்கு வெற்றியைக் கொண்டு வராவிட்டாலும் (அதனிடம் இருந்து அதனை யாரும் எதிர்பார்க்கவுமில்லை), அமெரிக்க தங்கத்தின் உதவியுடன் தொழிற்துறையின் புத்துயிர்ப்பு ஒரு ரொட்டித் துண்டினைக் கொண்டு வர முடியும் என எண்ண வைத்தது. ஜேர்மன் புரட்சியின் தோல்விக்கு பின்னர் டாலர் பூச்சுடனான அமெரிக்க அமைதிவாதத்தின் கறைபடிந்த கற்பனையானது ஐரோப்பாவின் வாழ்க்கையில் அதி முக்கிய காரணியாகலாம் என்பதை புரிந்து கொள்வது அவசியமாகும். இந்த நொதியத்தின் உதவியால், மீண்டும் எழுச்சியுற்றது ஜேர்மன் சமூக ஜனநாயகம் மட்டுமல்ல, ஒரு பெரும் அளவில் பிரெஞ்சு தீவிரப் போக்கினரும் இங்கிலாந்து தொழிற் கட்சியும் கூடத்தான்.

இந்த புதிய எதிரிகளின் முன்னணியை சம ஆற்றலுடன் எதிர்ப்பதற்கு, பூர்சுவா ஐரோப்பாவானது அமெரிக்காவின் நிதிய அடிமையாக இருப்பதாலேயே உயிர்வாழவும் பராமரித்துக் கொள்ளவும் முடிந்தது என்பதையும் மற்றும் அமெரிக்காவின் அமைதிப்படுத்தல் ஐரோப்பாவை பட்டினி பங்கீட்டு உதவிக்கு காத்திருக்கும் முயற்சிக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டிருக்க வேண்டும். சமூக ஜனநாயகத்திற்கும் அதனது புதிய மதமான அமெரிக்கவாதத்திற்கும் எதிரான புதிய போராட்டத்திற்கான ஆரம்ப புள்ளியாக இந்த முக்கிய முன்னோக்கை கொள்வதற்கு பதிலாக, கம்யூனிச அகிலத்தின் தலைமையானது தனது தாக்குதலை நேரெதிர் திசையில் திருப்பியது. இது போர்களும் புரட்சிகளும் இல்லாமல் அமெரிக்காவின் உதவியில் தங்கியிருக்கும் ஒரு இயல்பாக்கப்பட்ட ஏகாதிபத்தியம் குறித்த ஒரு முட்டாள்தனமான தத்துவத்தை நமக்கு சுட்டிக் காட்டியது.

கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் தலைமை அகல்பேரவைக்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாக- ஆயுதமேந்திய எழுச்சி ஜேர்மனியின் அன்றாட நிகழ்வின் ஒரு பணியாக "உறுதியாகவும் அவசியமாகவும் நிற்கிறது" என்று அறிவித்த அதே பெப்ரவரி அமர்வுகளின் போது, அந்த சமயத்தில் "இடது" பாராளுமன்ற தேர்தலை நெருங்கிக் கொண்டிருந்த பிரான்சின் நிலைமை குறித்து பின்வரும் மதிப்பீட்டினை அளித்தது:

"இந்த தேர்தலுக்கு முந்தைய காய்ச்சலானது மிகவும் முக்கியத்துவமற்ற மற்றும் பலவீனமான கட்சிகளையும் மற்றும் செத்துப் போன அரசியல் குழுவாக்கங்களையும் கூடப் பாதித்து விடுகிறது. சோசலிஸ்ட் கட்சியானது நெருங்கும் தேர்தல்களின் கதிர்களில் தூண்டப்பெற்று மீண்டும் உயிர் பெறும் நிலை கொண்டது ..." [19]

பிரான்சில் குட்டி முதலாளித்துவ அமைதிவாத இடதுவாத ஒரு அலையானது வெளிப்படையாக அதிகரித்துக் கொண்டு, தொழிலாளர்களின் பரந்த பிரிவுகளை அபகரித்துச் சென்று கொண்டு, பாட்டாளி வர்க்க கட்சி மற்றும் மூலதனத்தின் பாசிச பிரிவுகளையும் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிற ஒரு சமயத்தில்; "இடது கூட்டணி" வெற்றியை எதிர்நோக்கும் சமயத்தில், கம்யூனிச அகிலத்தின் தலைமையானது நேரெதிர் முன்னோக்கில் இருந்து தொடர்ந்தது. இது அமைதிவாத கட்டத்தை உறுதியாய் மறுத்தது, மற்றும் 1924 மே தேர்தலையொட்டி, குட்டி முதலாளித்துவ அமைதிவாத இடது பதாகையை சுமக்கும் கட்சியான பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியை ஏற்கனவே "இறந்து விட்ட அரசியல் குழுவாக்கம்" என்று வரையறுத்தது. அந்த சமயத்தில் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எழுதிய ஒரு சிறப்பு கடிதத்தில் சமூக-தேசப்பற்றுவாத கட்சியின் மீதான இந்த அலட்சிய மதிப்பீட்டிற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் எல்லாம் வீணானது.

கம்யூனிச அகிலத்தின் தலைமை சமீப வருடங்களில் எப்போதும் போல, கம்யூனிச அகிலக் கட்சிகளுக்குள் பெரும் குழப்பத்தைக் கொண்டுவந்த ஜனநாயக அமைதிவாதம் மீதான திரிக்கப்பட்டு விட்ட மற்றும் பரிதாபத்திற்குரிய விமர்சனங்கள் மூலம் இக்கருத்துக்களை கவனத்திற்கெடுக்காது "இடதுவாதத்தை" புகழுவதை விடாப்பிடியாக தொடர்ந்தது. இதனால், பிரச்சினை தோன்றியது. எதிர்ப்பாளர்கள் கம்யூனிச அகிலத்தின் தப்பெண்ணங்களை பகிர்ந்து கொள்ளாததாலும் மற்றும் ஒரு போராட்டம் கூட இல்லாமல் ஜேர்மன் பாட்டாளி வர்க்கம் சந்தித்த தோல்வி (பாசிச போக்குகள் சற்று வலிமையுற்றதன் பின்னர்) தவிர்க்க இயலாமல் குட்டி முதலாளித்துவ கட்சிகளை முன்னிலைக்கு கொண்டு வரும் மற்றும் சமூக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதை சரியான சமயத்தில் முன்கணித்ததால் மட்டுமே எதிர்ப்பின் பேச்சாளர்கள் அமைதிவாத முன்னனுமானத்தை கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

நாங்கள் ஏற்கனவே மேலே குறிப்பிட்டிருந்ததைப் போல, சினோவியேவ், சர்வதேச சிவப்பு உதவி அமைப்பின் ஒரு மாநாட்டில், இங்கிலாந்தில் தொழிற்கட்சியும் பிரான்சில் இடது கூட்டும் வெற்றி பெறுவதற்கு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்னதாக, எனக்கு எதிரான ஒரு வெளிப்படையான வாதத்தில் பின்வருமாறு அறிவித்தார்:

"ஏறத்தாழ ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் சூழ்நிலை எப்படி இருக்கிறதென்றால் வெளிப்புற அமைதிவாத அல்லது எந்த வகையான சமாதானப்படுத்தலுக்கான எந்த காலகட்டத்தையும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், நாம் எதிர்பார்க்க அவசியமில்லை ... ஐரோப்பா தீர்மானகரமான நிகழ்வுகளின் ஒரு கட்டத்திற்குள் நுழைகிறது ... வெளிப்படையாக ஜேர்மனி ஒரு மூர்க்கமான உள்நாட்டு யுத்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது ..." [20]

சினோவியேவ், முந்தைய 1922 நான்காம் அகல்பேரவையில், இதே சினோவியேவ் மற்றும் புக்காரினின் பிடிவாதமான எதிர்ப்புகள் இருந்தும், ஆணைக்குழுவின் முன் அகல்பேரவைத் தீர்மானத்தில் ஒரு திருத்தம் (குறிப்பிடத்தகுந்த அளவில் மாற்றப்பட்டது, இது உண்மை) கொண்டு வருவதில் நான் வெற்றி பெற்றேன் என்பதை முழுக்கவும் மறந்து விட்டிருந்தார் போல் தெரிகின்றது. இந்த திருத்தம், எதிர்வரும் இந்த "அமைதிவாத-ஜனநாயக" காலகட்டம் தொடர்பான அணுகுமுறை பூர்சுவா அரசின் அரசியல் வீழ்ச்சிப் பாதையில் அநேகமான ஒரு மேடையாக மற்றும் கம்யூனிச ஆட்சி அல்லது - பாசிசத்தின் ஒரு முதல் படியாக இருப்பது குறித்து பேசுகிறது.

இங்கிலாந்து மற்றும் பிரான்சில் "இடது" அரசாங்கங்கள் ஏற்கனவே எழுச்சி கண்டிருந்த பின்னர் கூட்டப்பட்ட ஐந்தாவது அகல்பேரவையில், சினோவியேவ் எனது இந்த திருத்தத்தை மிகவும் சரியான சமயத்தில் நினைவு கூர்ந்து பின்வருமாறு உரக்க பிரகடனப்படுத்தினார்:

"தற்போதைய காலகட்டத்தில் சர்வதேச நிலைமையானது பாசிசத்தால், இராணுவச் சட்டத்தால், மற்றும் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான வெள்ளை பயங்கரவாதத்தின் எழுச்சி அலையால் பண்பிடப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இது மிகவும் அண்மைக்காலத்தில் பூர்சுவாக்களின் வெளிப்படையான பிற்போக்கானது மிக முக்கியமான நாடுகளில் ஒரு 'ஜனநாயக-அமைதிவாத காலகட்டத்தால் பதிலீடு செய்யப்படும் என்பதற்கான சாத்தியக்கூற்றினை இல்லாமல் செய்துவிடவில்லை."

சினோவியேவ் திருப்தியுடன் மேலும் கூறினார்:
"இது 1922ல் கூறப்பட்டது. இவ்வாறு கம்யூனிச அகிலம், ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாக, உறுதியாக ஒரு ஜனநாயக-அமைதிவாத காலகட்டத்தை முன்கணித்திருந்தது." [21]

இது தான் உண்மை. ஒரு "அமைதிவாத" வழிவிலகல் (வளர்ச்சியின் வரலாற்றுப் நிகழ்போக்கினுடையதாக இல்லாது, எனது வழிவிலகலாக) எனக்கெதிராக நீண்ட காலமாக வைக்கப்பட்டிருக்கும் முன்கணிப்பானது ஐந்தாவது அகல்பேரவையில் மக்டொனால்ட் மற்றும் ஹெரியோட் அமைச்சரவைகளின் தேனிலவு வாரங்களின் போது ரொம்பவும் உதவிக்கரமாக வந்தது. இப்படித் தான், துரதிர்ஷ்டவசமாக, முன்கணிப்பு விவகாரங்கள் பொதுவாகவே இருக்கின்றன.

இங்கே நான் இன்னொன்றையும் கூற வேண்டியிருக்கிறது, சினோவியேவும் மற்றும் ஐந்தாம் அகல்பேரவையின் பெரும்பான்மையினரும் "ஜனநாயக-அமைதிவாத காலகட்டம்" முதலாளித்துவ சிதைவின் பாதையின் ஒரு கட்டம் என்ற பழைய முன்னோக்கை சொல்லுக்குச்சொல் பொருத்தமாக எடுத்துக்கொண்டனர். இவ்வாறாக சினோவியேவ் ஐந்தாம் அகல்பேரவையில் "ஜனநாயக-அமைதிவாத காலகட்டம் என்பது முதலாளித்துவ சிதைவின் ஒரு அறிகுறி."என அறிவித்தார்.

மற்றும் முடிவுரையில் அவர் மீண்டும் சொன்னார்: "நான் மீண்டும் சொல்கிறேன் துல்லியமாக ஜனநாயக-அமைதிவாத காலகட்டம் என்பது சிதைவு மற்றும் குணப்படுத்த முடியாத நெருக்கடியின் ஒரு அறிகுறி." ([22]

ரூர் நெருக்கடி எதுவும் இல்லாமல் இருந்திருந்தாலோ அல்லது இதுபோன்றதொரு வரலாற்று "பாய்ச்சல்" இன்றி புரட்சி சுமூகமாகச் சென்றிருந்தாலோ இது சரியாக இருந்திருக்க முடியும். ஜேர்மன் பாட்டாளி வர்க்கம் 1923ல் வெற்றியை சாதித்திருக்குமானால் இது இருமடங்கு மற்றும் மும்மடங்கு சரியாக இருந்திருக்க முடியும். அவ்வாறிருந்திருந்தால், மக்டொனால்ட் மற்றும் ஹெரியோட்டின் ஆட்சிகள் ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சு "கெரென்ஸ்கி காலகட்டத்தை" தான் அடையாளப்படுத்தியிருக்க முடியும். ஆனால் ரூர் நெருக்கடி வெளித்தோன்றி வீட்டின் தலைவராக இருக்க வேண்டியவர் யார் என்ற கேள்வியை மிகவும் தெளிவாக ஒளிவுமறைவின்றி முன்வைத்தது. ஜேர்மன் பாட்டாளி வர்க்கமானது வெற்றியை அடையாததுடன், மாறாக ஜேர்மன் பூர்சுவாக்களை உயர் மட்டத்திற்கு உற்சாகப்படுத்துவதற்கும்

உறுதிப்படுத்துவதற்கும் வழிவகுத்த வகையில் ஒரு தீர்மானகரமான தோல்வியை சந்தித்தது. புரட்சியில் உள்ள நம்பிக்கை பல வருடங்களுக்கு ஐரோப்பாவில் சிதறடிக்கப்பட்டது. இதுபோன்ற சூழல்களில் மக்டொனால்ட் மற்றும் ஹெரியோட் அரசாங்கங்கள் எந்த வகையிலும் ஒரு கெரென்ஸ்கி காலகட்டத்தையோ அல்லது பொதுவாக பூர்சுவாக்களின் சிதைவையோ காட்டவில்லை. அதற்கு மாறாக, கூடுதல் தீவிரமான, கூடுதல் உறுதியான, மற்றும் கூடுதல் தன்னுறுதி கொண்ட பூர்சுவா அரசுகளுக்கான தற்காலிக முன்னுதாரணங்களாக மட்டுமே அவை ஆகும், ஆகவும் முடியும். ஐந்தாம் அகல்பேரவை இதனை புரிந்து கொள்ளத் தவறியது ஏனென்றால் ஜேர்மன் துயரத்தின் விரிவை மதிப்பீடு செய்ய தவறுவதன் மூலமும் மற்றும் அதனை வெறுமனே சாக்ஸோன் மாநில பாராளுமன்றத்தின் இன்பியல் நாடகம் குறித்த ஒரு பிரச்சினையாக மட்டுமே குறைத்து விடுவதன் மூலமும், ஐரோப்பாவின் பாட்டாளி வர்க்கம் முன்னணியின் அனைத்து பக்கங்களிலும் அரசியல் பின்வாங்கும் நிலையில் இருந்தது என்பதையும், மற்றும் நமது பணியானது ஆயுதமேந்திய கிளர்ச்சியில் இல்லாமல் மாறாக ஒரு புதிய நோக்குநிலையில், பின்னணிப் பாதுகாவற்படை ஏற்பாடுகளில், மற்றும் கட்சியின் அமைப்பு நிலைகளை வலிமைப்படுத்துவதில், எல்லாவற்றிற்கும் மேல் தொழிற்சங்கங்களில் அடங்கியிருக்கிறது என்கிறதான உண்மையைத் தெரிந்து கொள்ளாமலேயே தொடர்ந்து கொண்டிருந்தது.

"சகாப்தம்" குறித்த கேள்வி தொடர்பாக, கொள்கையற்ற மற்றும் திரிப்புக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசிசம் மீதான ஒரு கேள்வி எழுந்தது. உடனடியான புரட்சிகர அபாயம் அதன் ஆட்சியின் அடித்தளங்களை அச்சுறுத்தும்போதும் பூர்சுவாக்களின் அரசின் இயல்பான அமைப்புகள் போதுமானவையாக இல்லை என்பதை நிரூபிக்கும்போதுமான தருணத்தில் மட்டுமே பூர்சுவா தனது பாசிச தோளை முன்கொண்டு வருகிறது என்று எதிர்ப்பாளர்கள் கூறி வந்தனர். இந்த பொருளில், செயலூக்கமான பாசிசம் என்பது கிளர்ச்சி செய்யும் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவ சமூகம் செய்யும் உள்நாட்டு யுத்தத்தின் ஒரு நிலையையே குறிப்பிடுகிறது. மாறானதொரு வகையில், பாட்டாளி வர்க்கத்தை ஏமாற்றும் வகையிலும் சமாதானப்படுத்தும் வகையிலும் மற்றும் தைரியத்தை இழக்கச்செய்யும் வகையில் உள்நாட்டு யுத்தத்திற்கு முந்தையதான காலகட்டத்திலோ அல்லது பாட்டாளி வர்க்கத்தின் மீதான முக்கியமான மற்றும் நீடித்திருக்கக் கூடியதொரு வெற்றியை தொடர்ந்த காலகட்டத்திலோ, இயல்பான ஆட்சியை மறுநிர்மாணம் செய்யும்பொருட்டு, அதாவது புரட்சியால் ஏமாற்றமுற்ற தொழிலாளர்கள் உள்ளடங்கலான மக்களின் பரந்துபட்ட மக்களை பாராளுமன்ற ரீதியாக பிடிக்குள் வைத்திருக்க நிர்பந்திக்கப்படும் பொழுது, பூர்சுவா தனது இடதுசாரி, சமூக ஜனநாயக தோளை முன்கொண்டுவர நிர்ப்பந்திக்கப்படுகிறது. தத்துவார்த்த ரீதியாக முழுக்க முழுக்க மறுக்கவியலாததும் போராட்டத்தின் முழுப் போக்கினாலும் உறுதிப்படுத்தப்பட்டதுமான இந்த ஆய்வுக்கு எதிராக, கம்யூனிச அகிலத்தின் தலைமையானது சமூக ஜனநாயகத்தை பாசிசத்துடனான அர்த்தமற்ற, அளவின்றி எளிமைப்படுத்தப்பட்டவிதத்தில் அடையாளப்படுத்தியது.

பூர்சுவா சமூகத்தின் அடித்தளங்கள் தொடர்பாக சமூக ஜனநாயகமானது பாசிசத்தை விட தனது அடிபணிந்த தன்மையை காட்டுவதில் குறைந்தது இல்லை மற்றும் இது அபாயத்திற்கான தருணத்தில் தனது நொஸ்கேயை தன்னார்வமாக அளிக்க எப்போதும் தயாராக இருக்கிறது என்னும் மறுக்கவியலா உண்மை இருந்தபோதிலும், கம்யூனிச அகிலத்தின் தலைமையானது சமூக ஜனநாயகம் மற்றும் பாசிசம் இடையிலான அரசியல் வேறுபாட்டையும், மற்றும் அத்துடன் சேர்த்து வெளிப்படையான உள்நாட்டு யுத்தத்திற்கான ஒரு காலகட்டத்திற்கும் வர்க்க போராட்டத்தின் "இயல்பாக்கல்" காலகட்டத்திற்கும் இடையிலான வேறுபாட்டையும் கூட முற்றுமுழுதாக அகற்றிவிட்டது. எளிமையாக சொல்வதென்றால், உள்நாட்டு யுத்தத்தின் உடனடியான வளர்ச்சி குறித்த ஒரு நோக்குநிலை மீதான போலியான மேல்பூச்சை காப்பாற்றுவதற்காக ஒவ்வொன்றும் அதன் தலைகீழாக்கப்பட்டு, சிக்கலாக்கப்பட்டு, குழப்பப்பட்டது. ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் 1923 இலையுதிர் காலத்தில் வழக்கத்திற்கு மாறான எதுவும் நடந்து விடவில்லை என்பதைப் போல; ஒரு காலகட்டம் - அது அவ்வளவு தான்!

இந்த தாக்குதலின் பாதை மற்றும் நிலையை காட்டுவதற்கு சர்வதேச சூழ்நிலை பற்றி என்னும் ஸ்ராலினின் கட்டுரையிலிருந்து நாம் மேற்கோள் காட்ட வேண்டும் [23]:

ஸ்ராலின் கூறினார், ''எனக்கெதிராக வாதிக்கும் வகையில் பலர் நம்புகிறார்கள், பூர்சுவா 'அமைதிவாதமும்' மற்றும் 'ஜனநாயகமும்' தேவையின் அடித்தளத்தில் வரவில்லை மாறாக அதன் சொந்த விருப்பத்தால், தனது சொந்த தேர்வினாலும் வந்தது என்று, ஏதோ அவ்வாறு ஒன்றாகத்தான் என்பதைப் போல."

கருத்தூன்றிக் கவனிப்பதற்கும் சங்கடமளிக்கக் கூடிய இந்த அடிப்படை வரலாற்று-மெய்யியல் ரீதியான ஆய்வறிக்கையானது இரண்டு முக்கியமான முடிவுகளில் இருந்து வருகின்றது.
"முதலாவதாக, பாசிசம் என்பது பூர்சுவாவின் ஒரு தாக்குதல் செய்யும் அமைப்பு மட்டுமே என்பது தவறாகும். பாசிசம் என்பது வெறுமனே இராணுவ-தொழில்நுட்ப வகைப்பட்டது அல்ல [?!]."

பூர்சுவா சமூகத்தின் தாக்குதல் செய்யும் அமைப்பானது ஏன் ஒரு அரசியல் "வகையினமாக" கருதப்படாமல் தொழில்நுட்ப வகைப்பட்டதாக கருதப்பட வேண்டும் என்பது புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆனால் பாசிசம் என்பது என்ன? ஸ்ராலினின் மறைமுகமான பதில் கூறுவது: "சமூக ஜனநாயகம் என்பது புறநிலைரீதியாக பாசிசத்தின் ஒரு மிதவாதமான பிரிவே."

சமூக ஜனநாயகம், பூர்சுவா சமூகத்தின் இடதுசாரிப் பகுதி என்று ஒருவர் கூறலாம். இந்த வரையறைகூட எப்போது சரியாக இருக்குமென்றால், ஒருவர் இதனை அதீத எளிமைப்படுத்த முயற்சித்து, அதனால் சமூக ஜனநாயகமானது இன்னமும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை தனக்குப் பின்னால் கொண்டிருப்பதையும் மற்றும் சில வரம்புகளுக்குள்ளாக இது தனது பூர்சுவா எஜமானரை மட்டுமல்லாமல் அதன் ஏமாற்றப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் பகுதியினரின் நலன்களையும் கருதிச் செயல்படும் நிர்ப்பந்தத்தில் உள்ளது என்பதையும் மறந்து விடாதிருக்கும்போது மட்டுமே. ஆனால் சமூக ஜனநாயகத்தை "பாசிசத்தின் மிதவாத பிரிவாக" சித்தரிப்பது முழுக்கவும் அர்த்தமற்றது. அவ்வாறிருந்தால் பூர்சுவா சமுதாயகம் என்ன ஆகிறது? அரசியலில் மிகவும் அடிப்படையானரீதியில் தன்னை நோக்குநிலைப்படுத்திக்கொள்ள முயலும் ஒருவர் எல்லாவற்றையும் ஒரே குவியலில் தூக்கி எறியக் கூடாது, மாறாக இதற்கு பதிலாக பூர்சுவா முன்னணியின் இரண்டு துருவங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அபாயத்தின் தருணத்தில் ஒன்றிணைந்திருக்கும் ஆனால் எப்படியிருந்தாலும் இரண்டு துருவங்களான சமூக ஜனநாயகத்தையும் பாசிசத்தையும் வேறுபடுத்தி அறிய வேண்டும். பாசிசத்தின் வீழ்ச்சி மற்றும் சமூக ஜனநாயகத்தின் வளர்ச்சி இரண்டையும் ஒரே சமயத்தில் மற்றும் அதே சமயத்தில் குணாதிசயப்படுத்தப்பட்ட காலத்தில் சந்தர்ப்பவசமாக இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியும் கூட தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கிய முன்னணியை முன்மொழிந்திருந்ததை மே 1928 தேர்தலுக்கு பின்னரும் வலியுறுத்த வேண்டிய அவசியம் இன்னும் இருக்கிறதா?

கட்டுரை தொடர்கிறது: "இரண்டாவதாக, தீர்மானிக்கும் யுத்தங்கள் ஏற்கனவே நிகழ்ந்து விட்டது என்பதும்; பாட்டாளி வர்க்கம் இந்த யுத்தங்களில் தோல்வியைக் கண்டிருக்கிறது என்பது; மற்றும் இதன் விளைவாக பூர்சுவா உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பவை கூடுதலாகத் தவறானவை. தீர்மானிக்கும் யுத்தங்கள் இன்னமும் நடைபெறவே இல்லை, ஏனெனில் இன்னமும் உண்மையான போல்ஷிவிக் வெகுஜன கட்சிகள் இல்லை என்பதனால் கூடவும் மட்டுமே [?]."

எனவே, பூர்சுவா தன்னையே உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது ஏனென்றால் அவ்வாறானதொரு போராட்டங்கள் எதுவும் இன்னமும் இல்லை மற்றும் இன்னமும் ஒரு போல்ஷ்விக் கட்சி இல்லை "என்பதனால் கூடவும்" அங்கே எந்த போராட்டங்களும் இல்லை. எனவே பூர்சுவா தன்னை கெட்டிப்படுத்திக் கொள்வதை எது தடுக்கிறது என்றால் ... ஒரு போல்ஷிவிக் கட்சி இல்லாமல் இருப்பதாகும். எவ்வாறிருப்பினும், உண்மையில், துல்லியமாக இந்த இல்லாமலிருப்பது என்னவெனில் கட்சி என்பதை விடவும் போல்ஷிவிக் தலைமையிலான ஒரு கட்சி இல்லாமலிருப்பதுதான் பூர்சுவா தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள உதவியது. ஒரு நெருக்கடியான சூழலில் ஒரு இராணுவம் எந்த யுத்தமும் இல்லாமல் எதிரியிடம் சரணடையுமானால், போரைப் போலவே அரசியலிலும், இந்த சரணாகதியானது ஒரு "தீர்மானிக்கும் யுத்தத்தின்" இடத்தை முழுமையாக பிடித்துக் கொள்கிறது. புரட்சிகர நிலைமையை தவறவிடும் ஒரு கட்சி காட்சியிலிருந்து நீண்ட நாட்களுக்கு காணாமல் போய் விடுகிறது என்று முன்னர் 1850ல் ஏங்கெல்ஸ் கற்பித்தார். ஆனால் "ஏகாதிபத்தியத்திற்கு முன்னர்" வாழ்ந்த ஏங்கெல்ஸ் இன்று காலத்திற்கு பொருந்தாது போய் விட்டார் என்பதை உணராது இங்கு யாரும் இருக்கிறார்களா? எனவே, ஸ்ராலின் "இத்தகைய [போல்ஷ்விக்] கட்சிகள் இல்லாமல் ஏகாதிபத்திய நிலைமைகளின் கீழ் சர்வாதிகாரத்திற்கான எந்த போராட்டங்களும் சாத்தியமில்லை" என எழுதுகிறார்:

எனவே, இது போன்ற போராட்டங்கள், சமச்சீரற்ற வளர்ச்சியின் விதியானது இன்னமும் கண்டுபிடிக்கப்படாதிருந்த ஏங்கெல்சின் சகாப்தத்தின்போது சாத்தியமாகவே இருந்தது என்று அனுமானிக்க ஒருவர் நிர்ப்பந்திக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது.

இந்த ஒட்டுமொத்த சிந்தனைகளுக்கும் பொருத்தமான மகுடம் வைத்தாற் போல் பின்வரும் ஒரு அரசியல் முன்னாய்வு உள்ளது:
"இறுதியாக, இந்த "அமைதிவாதத்தில்" இருந்து பூர்சுவா அதிகாரத்தின் உறுதிப்படுத்துதலும் மற்றும் ஒரு காலத்தை குறிப்பிடமுடியாத அளவிற்கு புரட்சி பின்போடப்படவேண்டும் என்பதுவும் தவறே ஆகும்."

எப்படியாயிருப்பினும் அத்தகையதொரு காலதாமதம் ஸ்ராலின் கூற்றுப் படி அல்லாது ஏங்கெல்சின் கூற்றுப்படி உருவாகியது. ஒரு வருடத்திற்கு பின்னர், பூர்சுவாக்களின் நிலை உறுதியாகி விட்டது, புரட்சி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது என்பது குருடருக்கும் தெளிவாகத் தெரியும் நிலை ஆகிவிட்ட பின்னர், இந்த ஸ்திரப்படுதலை நாங்கள் அங்கீகரிக்க மறுப்பதான குற்றச்சாட்டினை நம் மீது சுமத்துவதில் ஸ்ராலின் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

புதிய புரட்சிகர அலையானது இங்கிலாந்தையும் சீனாவையும் நெருங்கி விட்டபோது, இந்த "ஸ்திரப்படுதலானது" ஏற்கனவே புதிய வெடிப்புகளை காணத் தொடங்கிய அந்த காலகட்டத்தில், இந்தக் குற்றச்சாட்டானது மீண்டும் மீண்டும் வந்தது. இந்த ஒட்டுமொத்த நம்பிக்கையற்ற குழப்பமும் ஒரு முன்னணி வரிசையின் செயல்பாடுகளை திருப்திப்படுத்த பயன்பட்டது! பாசிசம் மற்றும் சமூக ஜனநாயகத்துடனான அதன் உறவுகள் குறித்த வரைவில் உள்ள வரையறையானது (அத்தியாயம் 2), திட்டமிட்டே அறிமுகப்படுத்தப்பட்டிருந்த குழப்பங்கள் இருந்த போதிலும் (கடந்த காலத்தை சேர்த்துக் கட்டும் வகையிலானவை), மேலே கூறிய ஸ்ராலினின் திட்டவகையினை விட, இது அடிப்படையில் ஐந்தாம் அகல்பேரவையின் திட்டவகையில் பன்மடங்கு பொருத்தமாகவும் சரியானதாகவும் உள்ளது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் இந்த முக்கியத்துவமற்ற முன்னோக்கிய அடியெடுப்பு பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை.

கடந்த பத்தாண்டுகளின் அனுபவத்திற்கு பின்னர் கம்யூனிச அகிலத்தின் ஒரு வரைவு வேலைத் திட்டமானது, புரட்சிகர நிலைமை, அதன் தோற்றம் மற்றும் மறைவின் குணாதிசயப்படுத்தல் இல்லாமல், இத்தகையதொரு நிலைமையை மதிப்பீடு செய்வதில் செய்யப்படும் வழமையான தவறுகளை சுட்டிக் காட்டாமல், வளைபாதையில் ஒரு இரயில் பொறியியல் வல்லுநர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்காமல், சர்வதேச புரட்சியின் வெற்றியானது இரண்டு அல்லது மூன்று நாட்கள் போராட்டத்தில் தங்கியிருக்கலாம் என்பதையும் கணக்கெடுக்கவேண்டும் என்னும் உண்மையை கட்சிகளுக்கு புகட்டாமல் விட முடியாது.