line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 
கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

அடிப்படைகளை பற்றிய விமர்சனம்

வரைவு வேலைத்திட்டம், அதாவது இனிவரப் போகும் பல ஆண்டுகளுக்கு கம்யூனிச அகிலத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் தீர்மானிக்க இருக்கும் ஒரு அடிப்படை ஆவணமானது, ஐந்தாவது பேரவை மாநாட்டிற்கு நான்கு வருடங்களுக்கு பின் நடைபெறும் பேரவை மாநாட்டிற்கு, சில வாரங்களுக்கு முன்னதாகத்தான் வெளியிடப்பட்டது. முதலாவது வரைவு வேலைத்திட்டமும் ஐந்தாவது பேரவை மாநாட்டிற்கு முன்னதாகத்தான் பல வருடங்கள் கடந்த நிலையில் வெளியிடப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டி இந்த தாமதத்தை நியாயப்படுத்த முடியாது. இரண்டாவது வரைவானது முதலாவதிலும் பார்க்க (வெளியிடப்பட்டதில் இருந்து) தனது முழு கட்டமைப்பிலும் வேறுபட்டுள்ளதுடன், இது சென்ற சில வருடங்களின் வளர்ச்சியையும் சுருக்கமாக தொகுத்துரைக்க பெருமுயற்சி செய்கிறது. அவசர கோலம் மற்றும் அரைகுறை வேலைகளின் சுவடுகளைக் கொண்ட ஒரு வரைவை, பத்திரிகையில் எந்த விதமான அக்கறையுடனான மற்றும் விஞ்ஞானபூர்வமான ஆரம்ப நிலை விமர்சனத்துக்கோ அல்லது கொமின்டேர்னின் [கம்யூனிச அகிலத்தின்] அனைத்து தரப்புகளிலும் ஒரு விரிவான கலந்துரையாடலுக்கு இடமளிக்காமல் ஆறாவது பேரவை மாநாட்டில் தீர்மானமாகக் கொண்டு வருவது என்பது அவசரமானதும் முன்பின் ஆராயாததுமான செயலாகுமே அன்றி வேறொன்றுமாக இருக்க முடியாது.
இந்த வரைவை பெற்றதற்கும் இந்த கடிதத்தை நாம் வெளியிட்டதற்கும் இடையில் நமக்கிருந்த சில நாட்களில், இந்த வேலைத்திட்டத்தில் கட்டாயம் கையாளப்பட வேண்டிய அதி முக்கிய விஷயங்கள் சிலவற்றை சுற்றி மட்டுமே நம்மால் கருத்தூன்றிக் கவனிக்க முடிந்தது.
நேரமில்லாத காரணத்தால், இந்த வரைவு வேலைத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள இன்று பற்றியெரியக் கூடிய பிரச்சினையாக இல்லை என்றாலும் நாளை அதீத முக்கியத்துவம் பெற்றதாக உருவெடுக்கக் கூடிய ஏராளமான அதி முக்கிய பிரச்சினைகளை ஆய்வு செய்ய முடியாமல் அப்படியே விட்டு விட்டுச் செல்ல நேரிட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிகள், தற்போதைய வேலை ஒதுக்கப்பட்டுள்ள வரைவின் அப்பகுதிகளைவிடவும் குறைவாகவே விமர்சிப்பதற்கான தகுதிகளை கொண்டுள்ளன என பொருள்கொள்ளாது.
மேலும் மிகஅத்தியாவசிய தகவல்களை பெறுவதை சாத்தியமில்லாததாக்கும் நிபந்தனைகளின் கீழ் தான் நாங்கள் இந்த புதிய வரைவு வேலைத்திட்டத்தின் மீது பணியாற்ற நேரிட்டது என்பதையும் நாங்கள் குறிப்பிட்டாக வேண்டும். எங்களால் திட்டத்தின் முதல் வரைவைக் கூடப் பெற முடியவில்லை என்பதையும், அப்போது மற்றும் மேலும் ஒன்றிரண்டு சமயங்களில், நாங்கள் எங்களது ஞாபக சக்தியைத் தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது என்பதையும் குறிப்பிட்டாலே போதுமானது. எல்லா மேற்கோள்களும் உண்மை மூலங்களில் இருந்து எடுக்கப்பட்டு கவனமாக சரிபார்க்கப்பட்டவை என்பதை கூறாமலே புரியும்.