line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 2: ஏகாதிபத்திய சகாப்தத்தில் மூலோபாயமும் தந்திரோபாயங்களும்
 

Print part 2 on single page

2. புரட்சிகர சகாப்தத்தின் மூலோபாயத்தில் உள்ளார்ந்திருக்கும் அடிப்படை பிரத்தியேக தன்மைகளும் மற்றும் கட்சியின் பங்கும்

 மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள அத்தியாயமானது, ஏகாதிபத்திய சகாப்தமானது பாட்டாளி வர்க்க புரட்சிகளின் சகாப்தம் என்ற வகையில் அதாவது போருக்கு-முந்தைய சகாப்தத்திலிருந்து தனிச்சிறப்பாய் வேறுபடுத்திக்காட்டும் வகையில், எந்த அளவுக்கும் ஒத்திசைவானதாக, ஒரு "மூலோபாய'' குணாதிசயத்தை வழங்கவில்லை.

உறுதியாகச் சொல்வதென்றால், தொழில்துறை முதலாளித்துவ காலகட்டமானது ஒட்டுமொத்தமாக, வரைவு வேலைத்திட்டத்தின் முதலாவது அத்தியாயத்தில் "இன்னும் ஆக்கிரமிக்கப்படாதிருந்த காலனிகளை பங்கிடல் மற்றும் அவற்றை ஆயுதம் மூலம் கைப்பற்றல் மூலம் மொத்த உலகநிலப்பரப்பும் முதலாளித்துவத்தின் ஒப்பீட்டளவில் தொடர்ச்சியான பரிணாமம் மற்றும் பரவலுக்கான காலகட்டமாக" குணாதிசயப்படுத்தப்படுகின்றது.

இந்த குணாதிசயப்படுத்தலானது நிச்சயமாக சற்று முரண்பட்டதாகவே உள்ளது மற்றும் இது போர்கள் மற்றும் புரட்சிகள் மற்றும் மிகப்பிரம்மாண்டமான கிளர்ச்சிகளின் சகாப்தமான தொழில்துறை முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த சகாப்தத்தை, இந்த கோளத்தில் ஒட்டுமொத்தமாக மனித இனத்தின் முந்தைய வரலாற்றைவிட இவ்விடயத்தில் மேம்பட்டதாக வெளிப்படையாகவே சிந்தனைப்படுத்துகின்றது. இந்த வசீகரமான பண்பிடலானது வெளிப்படையாகவே அவர்களுக்கு அவசியமாக இருக்கிறது, இதன் மூலம் தான், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் காலத்தில் சமச்சீரற்ற வளர்ச்சி விதி குறித்த "எந்த பேச்சும் அதுவரையிலும் இருந்திருக்க முடியாது" என்னும் வரைவு வேலைத்திட்டத்தின் ஆசிரியர்களின் சமீபத்திய அர்த்தமற்ற வாதத்திற்கு குறைந்தபட்சம் ஒரு சிறுபகுதி நியாயப்படுத்தலாவது அளிக்க முடியும். ஆனால், தொழில்துறை முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த வரலாற்றை ஒரு "தொடர்ச்சியான பரிணாமம்" என்று குணாதிசயப்படுத்துவது பிழையானது என்கின்ற அதே சமயத்தில், 1871 முதல் 1914 வரை, அல்லது குறைந்தபட்சம் 1905 வரையிலான வருடங்களை கொண்ட ஒரு சிறப்பு ஐரோப்பிய சகாப்தத்தை முக்கியமானதாக உயர்த்தி வைப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது, ஐரோப்பாவின் உள்ளார்ந்த வர்க்க உறவுகளைப் பொறுத்தவரை ஏறக்குறைய எப்போதும் சட்டபூர்வ போராட்டத்தின் வரம்பு எல்லைகளை மீறாததும், சர்வதேச உறவுகளை பொறுத்தவரை, ஒரு ஆயுதமயமாக்கப்பட்ட அமைதியின் கட்டமைப்புக்குள் தங்களை பொருந்தசெய்து கொண்ட, முரண்பாடுகளின் அமைப்பியல் ரீதியான திரளலின் சகாப்தமாக இருந்தது. இது இரண்டாம் அகிலத்தின் தோற்றம், வளர்ச்சி, மற்றும் உறுதிப்படல் ஆகியவற்றின் சகாப்தமாக இருந்ததுடன், இதன் முற்போக்கான வரலாற்று பங்களிப்பானது ஏகாதிபத்திய யுத்தம் வெடித்ததுடன் முழுமையாக முடிவுற்றது.

பாரிய வரலாற்று சக்தியாக கருதப்படும் அரசியல் எப்போதும் பொருளாதாரத்திற்கு பின்தங்கிதான் இருக்கிறது. இவ்வாறாக, நிதி மூலதனமும் டிரஸ்ட் ஏகபோகங்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் ஆட்சி செய்ய தொடங்கியதென்றால், இந்த உண்மையைப் பிரதிபலிக்கும் சர்வதேச அரசியலின் புதிய சகாப்தமானது உலக அரசியலில் முதலில் ஏகாதிபத்திய யுத்தத்துடனும், அக்டோபர் புரட்சியுடனும், மற்றும் மூன்றாம் அகிலத்தின் ஸ்தாபிதத்துடனும் தொடங்குகிறது.

அரசியல் எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் திடீர் மாற்றங்களுடனும், பாசிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடையிலான அதன் தொடர்ச்சியான விட்டுவிட்டுநிகழ்கிற வர்க்கப் போராட்டத்துடனும் கூடிய இந்த புதிய சகாப்தத்தின் வெடிக்கும் தன்மையானது, சர்வதேச முதலாளித்துவ அமைப்பானது ஏற்கனவே தன்னை இழந்துவிட்டது, இனி ஒட்டுமொத்தமாக முற்போக்கானதாக இருக்க அதற்கு சக்தியில்லை என்கிற உண்மையில் உறைவிடம் கொண்டுள்ளது என்பதை காட்டுகின்றது. தொழில்துறையின் தனித்தனி கிளைகள் அல்லது தனித்தனி நாடுகள் வளர்ச்சியுறும் சக்தி இல்லாதவை, முன்னெப்போதும் இருந்திராத வகையிலான உத்வேகத்துடன் அவை இனி மேல் வளர மாட்டா என்று இது அர்த்தப்படாது. எப்படியாயிருப்பினும், இந்த வளர்ச்சி தொடர்கிறது, தொழிற்துறையின் பிற கிளைகளின் அல்லது பிற நாடுகளின் வளர்ச்சியை சேதப்படுத்தும் வண்ணம் இந்த வளர்ச்சி தொடர்வதாகவே இருக்கும். உலக முதலாளித்துவத்தின் உற்பத்தி அமைப்பு ஏற்படுத்தும் செலவுகள் அதன் சர்வதேச வருவாயை விழுங்கி விடுவது தொடர்ந்து அதிகமான அளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக மேலாதிக்கத்திற்கு பழக்கப்படுத்திக் கொண்ட ஐரோப்பாவை பார்க்கின்ற மட்டில், தனது அதிவேக, ஏறக்குறைய எந்த குறுக்கீடுமற்ற போருக்கு முந்தைய கால வளர்ச்சியால் பெற்ற உந்துவேகத்துடன், இப்போது சக்திகளுடனான புதிய உறவுகளுடன், உலக சந்தையின் புதிய பிரிவுடன், மற்றும் போரினால் ஆழப்படுத்தப்பட்டுள்ள முரண்பாடுகளுடன் மற்ற கண்டங்களை விடவும் அதிக கூர்மையாக மோதுகிறது. ஐரோப்பாவில் தான் துல்லியமாக ''அமைப்பியல்சார்ந்த'' சகாப்தத்தில் இருந்து புரட்சிகர சகாப்தத்திற்கான மாற்றம் குறிப்பாக செங்குத்தானதாய் இருக்கிறது.

தத்துவார்த்த ரீதியாக, உறுதியாகச் சொல்ல வேண்டுமென்றால், மிகவும் சக்தி வாய்ந்த, அதிகாரத்திலுள்ள, மற்றும் முன்னணி நாடுகளில் உள்ள பொதுவான முதலாளித்துவ வளர்ச்சி பற்றிய ஒரு புதிய அத்தியாயம் கூட விலக்கப்படவில்லை. இது இல்லாமல், முதலாளித்துவம் முதலில் ஒரு வர்க்கத்தின் மற்றும் இதே போல் அரசுகள் இடையிலான தன்மையின் மிகப்பெரும் தடைகளை கடந்தாக வேண்டும். பாட்டாளி வர்க்க புரட்சியின் கழுத்தை இது நீண்ட காலம் நெரித்து வைத்திருக்க வேண்டியதாக ஆகியிருக்கும்; சீனாவை முழுமையாக அடிமைப்படுத்த வேண்டியதாய் ஆகியிருக்கும், சோவியத் குடியரசை தூக்கி எறிய வேண்டியதாய் ஆகியிருக்கும், இன்ன பிறவும். நாம் இவை எல்லாவற்றிலிருந்தும் அகற்றப்படுவதற்கு இன்னமும் வெகு தூரத்தில் இருக்கிறோம். தத்துவார்த்த முடிவில் விளையக்கூடியவை அரசியல் சாத்தியக்கூறுகளுக்கு எல்லாவற்றையும் விடக் குறைவாகவே பொருந்துகிறது. இயல்பாகவே, ஒரு பெரும் ஒப்பந்தம் கூட நம்மைச் சார்ந்து, அதாவது, கம்யூனிச அகிலத்தின் புரட்சிகர மூலோபாயத்தை சார்ந்து தான் இருக்கிறது. இறுதி ஆய்வில், இந்த பிரச்சினையானது சர்வதேச சக்திகளின் போராட்டத்தில் தீர்க்கப்படும். இருப்பினும், இந்த வேலைத்திட்டம் உருவாக்கப்பட்ட தற்போதைய சகாப்தத்தில், முதலாளித்துவ வளர்ச்சி ஒட்டுமொத்தமாக ஏறி கடக்க முடியாத தடைகளையும் மற்றும் முரண்பாடுகளையும் அவற்றிற்கு எதிரான வெறி கொண்ட துடிப்புகளையும் எதிர்கெண்டிருக்கிறது. துல்லியமாக இது தான் நமது சகாப்தத்திற்கு அதனது புரட்சிகரத் தன்மையையும், புரட்சிக்கு நிரந்தரத்தன்மையையும் அணிவிக்கின்றது.

சகாப்தத்தின் புரட்சிகர தன்மையானது இது புரட்சியை நிறைவேற்ற அனுமதிப்பதில், அதாவது, கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கணத்திலும் அதிகாரக் கைப்பற்றலை அனுமதிக்கிறது என்பதில் இல்லை. அதன் புரட்சிகர குணாதிசயமானது ஆழமான மற்றும் கூர்மையான ஏற்ற இறக்கங்களிலும் மற்றும் ஒரு உடனடியான புரட்சிகர சூழலில் இருந்து அடிக்கடி நிகழும் திடீர் மாற்றங்களிலும் அடங்கியிருக்கிறது; வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இது போன்றவை கம்யூனிஸ்ட் கட்சியினை அதிகாரத்துக்காக போ£ராட இயலச்செய்யலாம், பாசிச அல்லது அரைப் பாசிச எதிர்-புரட்சிகளின் வெற்றிக்கு இயலச்செய்யலாம், எதிர்ப்புரட்சியில் இருந்து தங்கமான வழிமுறையால் ("இடது கூட்டு", கூட்டணிக்குள் சமூக ஜனநாயகத்தை உட்சேர்ப்பது, மக்டொனால்ட் கட்சிக்கு அதிகாரத்துக்கான பாதை, மற்றும் இன்னபிறவும்) ஒரு தற்காலிகமான ஆட்சிக்கு இயலச்செய்யலாம், உடனடியாக அதன்பின் முரண்பாடுகளை மீண்டும் தீவிரமடையச்செய்ய நிர்ப்பந்தித்து, அதிகாரம் பற்றிய பிரச்சினையை தீவிரத்துடன் எழுப்ப வழிசெய்யலாம்.

கடந்த பத்தாண்டுகளின் பாதையில் போருக்கு முன் ஐரோப்பாவில் நாம் என்ன கொண்டிருந்தோம்? பொருளாதார துறையில் - சந்திப்பில் "வழக்கமான" ஏற்ற இறக்கங்களுடன் உற்பத்தி சக்திகளின் ஒரு பாரிய முன்னேற்றத்தையும், அரசியலில் - ''தாராளவாதம்'' மற்றும் நிறையவே முக்கியத்துவமற்ற ஏற்ற இறக்கங்களுடனான "ஜனநாயக"த்தின் இழப்பில் சமூக ஜனநாயகத்தின் வளர்ச்சி காணப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளின் முறையான உக்கிரப்படுத்தலின் வழிமுறை, இந்த உணர்வின் வழியில், பாட்டாளி வர்க்க புரட்சிக்கான முன்னவசியங்களை உருவாக்குவது.

போருக்கு பிந்தைய காலத்தில் நாம் ஐரோப்பாவில் என்ன கொண்டிருக்கிறோம்? பொருளாதாரத்தில் - உற்பத்தியின் ஒழுங்கற்ற, விட்டுவிட்டுநிகழ்கின்ற சுருக்குதல்கள் மற்றும் விரிவாக்கங்களுடன், தொழில்துறையின் சில குறிப்பிட்ட பிரிவுகளில் பெரும் தொழில்நுட்ப வெற்றிகளுக்கு பின்னர் இது பொதுவாக போருக்கு முந்தைய நிலையைச் சுற்றியே இருந்தது. அரசியலில் - இடதினை நோக்கி பின் வலதினை நோக்கிய அரசியல் சூழலின் மோசமான ஊசலாட்டங்கள் காணப்பட்டன. ஒன்று, இரண்டு, அல்லது மூன்று ஆண்டுகள் காலத்தில் அரசியல் சூழலில் கூர்மையான மாற்றங்களானவை அடிப்படை பொருளாதார காரணிகளால் கொண்டுவரப்பட்டவை அல்ல, ஆனால் ஒரு முழுக்கவும் மேற்கட்டுமானத்தின் குணாதிசயத்தின் காரணங்கள் மற்றும் உந்துதல்களால் வந்தவை. இதன்மூலம், அதன் கட்டுமானது சமரசத்திற்கப்பாற்பட்ட முரண்பாடுகளால் அரிக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த அமைப்பின் அதீத நிலையற்ற தன்மையை சுட்டிக்காட்டுகின்றது என்பது மிகவும் வெளிப்படையாகின்றது.

தந்திரோபாயங்களுடன் வேறுபடுத்திக்காட்டும் தனிச் சிறப்பாக இந்த ஆதாரத்தில் இருந்து தான் புரட்சிகர மூலோபாயத்தின் முழு முக்கியத்துவமும் ஊற்றெடுக்கிறது. இவ்வாறாக அதிலிருந்து தான் கட்சி மற்றும் கட்சித் தலைமையின் புதிய முக்கியத்துவமும் ஊற்றெடுக்கிறது.

போருக்கு முன்னதான இடது சமூக ஜனநாயக வேலைத்திட்டத்தில் இவ்வளவு மோசமாக சித்தரிக்கப்பட்டிருக்கக் கூடாத வகையில், கட்சி குறித்த முழுமையான சம்பிரதாய வரையறைகளுக்குள் (முன்னணிப்படை, மார்க்சிச தத்துவம், அனுபவங்களின் கூட்டு, மற்றும் இது போன்றவை) வரைவு தன்னை கட்டுப்படுத்திக் கொள்கிறது. இன்று இது முழுக்க முழுக்க போதுமற்றதாய் இருக்கிறது.

முதலாளித்துவம் வளர்ந்து வரும் ஒரு காலகட்டத்தில், மிகச்சிறந்த கட்சித் தலைமை கூட, தொழிலாளர்களின் கட்சி உருவாக்கத்தை துரிதப்படுத்துவது மட்டும் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. மாறாக, தலைமையின் தவறுகள் இந்த வழிமுறையை மந்தப்படுத்துவதாய் அமையக் கூடும். ஒரு பாட்டளி வர்க்க புரட்சியின் புறநிலை முன்னவசியங்கள் மெதுவாகத் தான் முதிர்ச்சியுறுகின்றன ஆனால் கட்சியின் பணியானது ஒரு தயாரிப்பு குணாதிசயத்தை தக்க வைத்துக் கொண்டது.

இன்று, இதற்கு மாறாக, அரசியல் சூழலில் ஒவ்வொரு கூர்மையான மாற்றமும் இடதுபக்கம் திரும்புவதுடன் புரட்சிகர கட்சியின் கைகளில் முடிவை வைக்கிறது. அந்த நெருக்கடி சூழ்நிலையைத் தவறவிட்டால், புரட்சிகர கட்சி தனது எதிர்திசைக்கு திரும்பி விடுகிறது. இந்த சூழ்நிலைகளின் கீழ் கட்சித் தலைமையின் பங்கானது அதீத முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இரண்டு அல்லது மூன்று தினங்கள் சர்வதேச புரட்சியின் தலைவிதியைத் தீர்மானிக்க முடியும் என்கிற வகையான லெனினின் வார்த்தைகள் இரண்டாவது அகிலத்தின் சகாப்தத்தில் ஏறக்குறைய புரிந்து கொள்ள முடியாததாய் இருந்திருக்கும். நமது சகாப்தத்தில், மாறாக, இந்த வார்த்தைகள் மிக அடிக்கடி உறுதிபடுத்தப்பட்டதாய் இருப்பதுடன், அக்டோபர் புரட்சி தவிர்த்து எப்போதும் எதிர்மறையானதாக இருக்கின்றது. நடப்பு வரலாற்று சகாப்தத்தை பொறுத்தவரை கம்யூனிச அகிலம் மற்றும் அதன் தலைமை ஆக்கிரமிக்கும் இந்த பொதுவான சூழல்களில் இருந்து அந்த அசாதாரணமான நிலைப்பாடு புரிந்து கொள்ளத்தக்கதாய் ஆகிறது.

ஆரம்ப மற்றும் அடிப்படை காரணமான -"ஸ்திரமாக்குதல்" என்பதானது- ஒரு பக்கத்தில் முதலாளித்துவ ஐரோப்பாவின் பொருளாதார மற்றும் சமூக நிலைப்பாட்டின் பொதுவான ஒழுங்கின்மைக்கும் மற்றும் காலனி ஆதிக்க கிழக்குக்கும் இடையிலான முரண்பாட்டிலும், மறு பக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பலவீனங்கள், தயார்நிலையின்மை, திடசித்தமின்மை மற்றும் அவற்றின் தலைமைகளின் கொடிய தவறுகளிலும் இருக்கிறது என்பதை ஒருவர் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

1918-1919 இன், அல்லது சமீப ஆண்டுகளின் புரட்சிகர சூழலின் வளர்ச்சியை தடுப்பது எங்கிருந்தோ வந்த ஸ்திரப்படுதல் அல்ல, இதற்கு மாறாக, பயன்படுத்தப்படாத புரட்சிகர சூழலானது அதன் எதிராக உருமாற்றம் செய்யப்பட்டு பூர்சுவாக்களுக்கு ஸ்திரப்படுத்தலுக்காக போராடுவதற்கு ஓரளவு வெற்றியுடன் வாய்ப்பினை உறுதிப்படுத்திவிட்டது. "ஸ்திரப்படுதலுக்கான" இந்த போராட்டத்தில் அல்லது மேலும் முதலாளித்துவத்தின் நீடித்த இருப்புக்கும் மற்றும் வளர்ச்சிக்கான போராட்டத்தின் கூர்மையடையும் முரண்பாடுகள் புதிய அகிலத்திற்கான மற்றும் வர்க்க எழுச்சிகளுக்கான, அதாவது, இந்த வளர்ச்சி முழுக்கவும் பாட்டாளி வர்க்க கட்சியை சார்ந்துள்ள புதிய புரட்சிகர சூழல்களுக்கான முன்னவசியங்களை ஒவ்வொரு புதிய கட்டத்திலும் தயாரிக்கிறது.

ஒரு மெதுவான, அமைப்பியல் சார்ந்த வளர்ச்சியின் காலகட்டத்தில் அகநிலைக் காரணியின் பங்கு தொடர்ந்து இரண்டாம்தரமான ஒன்றாக இருக்க முடியும். "கட்டங்களை தாண்டிப் பாய்வதை" வெறுக்கும் ஒரு அமைப்பியல் சார்ந்த சகாப்தத்தின் அத்தனை தந்திரோபாய நுண்ணறிவும் பின்னர் படிப்படியாகத்தான் மாற வேண்டும் என்றவாறான வெவ்வேறு பழமொழிகளும், "பதறாத காரியம் சிதறாது", "ஈட்டி முனைகளை ஒருவர் கட்டாயம் எட்டி உதைக்கக் கூடாது" மற்றும் இன்னும் பலவாறாக எழும். ஆனால் புறநிலை முன்னவசியங்கள் முதிர்ச்சியுற்ற உடனேயே, ஒட்டுமொத்த வரலாற்று நடைமுறைக்கான திறவுகோல்கள் அகநிலைக் காரணியின் கரங்களுக்கு, அதாவது, கட்சிக்கு தாவி விடுகிறது. நனவுடனோ அல்லது நனவற்ற நிலையிலோ கடந்த சகாப்தத்தின் மீது இலட்சிய ஆசையில் திகழும் சந்தர்ப்பவாதமானது எப்போதுமே அகநிலைரீதியிலான காரணியின் பங்கை, அதாவது, கட்சியின் முக்கியத்துவத்தை மற்றும் புரட்சிகர தலைமையின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடவே தலைப்படுகிறது. ஜேர்மன் அக்டோபர், ஆங்கிலோ-ரஷ்யன் குழு மற்றும் சீனப் புரட்சிகளின் பாடங்கள் மீதான விவாதங்களின் போது இவை அனைத்தும் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டன. இந்த அனைத்து விவகாரங்களிலுமே, இன்னும் குறைந்த முக்கியத்துவம் பெற்ற பிறவற்றிலும், முழுக்கவே "மக்கள்" எண்ணம் சார்ந்ததேயாகவான மற்றும் இதன் மூலம் புரட்சிகர தலைமையின் "மேன்மை" குறித்த கேள்வியை முழுக்கவே அலட்சியப்படுத்துகிறதுமான ஒரு பாதையை கைக்கொள்வதன் மூலம் சந்தர்ப்பவாத போக்கானது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. பொதுவாக போலியான இது போன்றதொரு மனப்போக்கானது ஏகாதிபத்திய யுகத்தில் நேர்மறை மரண விளைவுடன் செயல்படுகிறது.

அக்டோபர் புரட்சியானது, ரஷ்யாவிலும் மற்றும் ஒட்டுமொத்த உலகிலும் உள்ள வர்க்க சக்திகளுக்கும் மற்றும் ஏகாதிபத்திய யுத்தத்தின் நிகழ்வுப்போக்கில் அவற்றின் குறிப்பிட்ட வளர்ச்சிக்குமான ஒரு குறிப்பிட்ட உறவின் விளைவாக இருந்தது. இந்த பொதுவான முன்மொழிவானது மார்க்சிஸ்டுகளுக்கு ஒரு அரிச்சுவடி போன்றதாகும். எப்படியாயிருந்தாலும், ரஷ்யாவிற்கு லெனின் சரியான காலத்தே வராமல் இருந்திருந்தால் அக்டோபரில் நாம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்க முடியுமா? என்பது போன்றதொரு கேள்விக்கும் மார்க்சிசத்திற்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை. நம்மால் அதிகாரத்தை கைப்பற்ற இயலாது போயிருக்கலாம் என்று சுட்டிக் காட்டுவதற்கு ஏராளமாக உள்ளன. கட்சித் தலைகளின் எதிர்ப்பானது -பெரும் பகுதிகளில், சந்தர்ப்பவசமாக, அவர்கள் தான் இன்று கொள்கைகளை தீர்மானிக்கும் மனிதர்களாக இருக்கிறார்கள்- லெனினின் கீழும் மிகவும் பலமானதாக இருந்தது. லெனின் இல்லாமல் அது கணக்கிட முடியாத அளவுக்கு பலமானதாகவே இருந்திருக்கும். கட்சி அவசியமான பாதையை காலத்தே எடுப்பதில் தோல்வியுற்றிருக்கலாம், அப்போது நாம் முடிவெடுக்க வெகுகுறைந்த கால அவகாசமே இருந்தது. இது போன்ற காலகட்டங்களில், சிலசமயம் ஒரு சில தினங்கள் கூட தீர்மானிப்பதாய் இருக்கும். உழைக்கும் மக்கள் கீழிருந்து மேல் பெரும் தீரத்துடன் அழுத்தத்தை கொடுத்திருக்கலாம். ஆனால், தன் மீது உறுதி கொண்ட, இலக்கினை நோக்கி உணர்வுடன் இட்டுச் செல்லாத ஒரு தலைமை இன்றி, வெற்றி என்பதன் சாத்தியக்கூறு குறைவாகவே இருந்திருக்கும். இருந்தாலும், இதனிடையே, பூர்சுவாக்கள் பெட்ரோகிராடை ஜேர்மானியர்களிடம் ஒப்படைத்திருக்க கூடும் மற்றும் பின்னர் பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியை அடக்கி வைப்பதானது அநேகமாக பொனபார்ட்டிசத்தின் வடிவில், ஜேர்மனியுடன் ஒரு தனி அமைதி ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலமும் பிற நடவடிக்கைகள் மூலமும், மறுஸ்தாபிதம் செய்து கொண்டிருக்கலாம்.

1918 ஜேர்மானிய புரட்சியில், 1919 ஹங்கேரி புரட்சியில், இத்தாலி பாட்டாளி வர்க்கத்தின் 1920ம் ஆண்டு செப்டம்பர் இயக்கத்தில், 1926 ஆங்கிலேய பொது வேலை நிறுத்தத்தில், 1927 வியன்னா எழுச்சியில், 1925-1927 சீனப் புரட்சியில் -ஒவ்வொரு இடத்திலுமே, ஒட்டுமொத்தமாக கடந்த பத்தாண்டுகளின் ஒரே அதே அரசியல் முரண்பாடு தான், அது மாறுபட்ட காலகட்டங்களில் மாறுபட்ட வடிவங்களில் இருந்தாலும் கூட, உருவெடுத்தது. புலனறியும் அளவில் முதிர்ச்சியுற்ற புரட்சிகர சூழலில், முதிர்ச்சி என்றால் அதன் சமூக அடிப்படைகளை பொறுத்து மட்டுமல்லாமல் பல சமயங்களில் மக்களின் போராட்டத்திற்கான மனநிலையையும் பொறுத்தும், அகநிலைக் காரணியையும், அதாவது ஒரு புரட்சிகர மக்கள் கட்சியானது பின்தங்கியிருந்தது அல்லது இந்த கட்சி ஒரு தொலைநோக்கான துணிவான தலைமை இல்லாதிருந்தது என்பது சம்பந்தமாகவும் ஆகும்.

நிச்சயமாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைமைகளின் பலவீனங்களானது வானத்தில் இருந்து விழுந்தவை அல்ல, மாறாக ஐரோப்பாவின் ஒட்டுமொத்த கடந்த காலத்தின் விளைபொருளே ஆகும். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறநிலைரீதியான புரட்சிகர முரண்பாடுகளின் தற்போதைய முதிர்ச்சியால் ஒரு துரிதமான வேகத்தில் வளர்ச்சியுற முடியும். ஆம், கம்யூனிச அகிலத்தின் பங்காக இந்த வளர்ச்சி செயல்முறையை மந்தப்படுத்துவதற்கு பதிலாக துரிதப்படுத்துகின்ற சரியானதொரு தலைமை இருக்கிற பட்சத்தில் மட்டுமே இதுமுடியும். பொதுவாக முரண்பாடுகள் தான் வளர்ச்சியின் அதி முக்கிய உந்துசக்தியாக இருக்கின்ற பட்சத்தில், புறநிலை சூழலின் ஒரு பொதுவான புரட்சிகர முதிர்ச்சிக்கும் (வீழ்ச்சிகளும் பாய்ச்சல்களும் இருந்தாலும்) மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச கட்சியின் முதிர்ச்சியின்மைக்கும் இடையிலான முரண்பாடுகளை தெளிவாக விளங்கிக்கொள்வதுதான் இப்போது கம்யூனிச அகிலத்தின், குறைந்தபட்சம் அதன் ஐரோப்பிய பிரிவின், முன்நோக்கிய நகர்வுக்கான முக்கிய உந்துசக்தியாக இருக்க வேண்டும்.

தற்போதைய சகாப்தத்தினை திடீர் மாற்றங்களுக்கான ஒரு சகாப்தமாக நீண்ட பொதுமைப்படுத்தப்பட்ட இயங்கியல் ரீதியானதாக புரிந்து கொள்ளுதல் இல்லாமல், இளம் கட்சிகளுக்கான ஒரு உண்மையான கல்வி என்பது, வர்க்க போராட்டத்துக்கான சரியான மூலோபாய தலைமை என்பது, தந்திரோபாயங்களின் ஒரு சரியான சேர்க்கை என்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு அடுத்தடுத்த மாற்றப் புள்ளியிலும் கூர்மையான, துணிச்சலான, மற்றும் தீர்மானிக்கின்ற மறுதயார் செய்வதல் என்பது சாத்தியமில்லை. இது போன்ற ஒரு திடீரென்ற உடைவுப் புள்ளியில் தான் சில சமயங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அடுத்து வரும் பல ஆண்டுகளின் சர்வதேச புரட்சியின் தலைவிதியை தீர்மானிப்பவையாய் இருக்கின்றன.

மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள வரைவு வேலைத்திட்டத்தின் அத்தியாயமானது பொதுவில் பாட்டாளி வர்க்கத்திற்கான கட்சியின் போராட்டம் பற்றி, பொதுவான வேலைநிறுத்தம் பற்றி, பொதுவில் ஆயுதமேந்திய கிளர்ச்சி பற்றி பேசுகிறது. ஆனால், நடப்பு சகாப்தத்தின் தனித்தன்மையான குணாதிசயம் குறித்தும் அதன் உள்துடிப்பு குறித்தும் அது கொஞ்சமும் பிரித்தாராயவில்லை. இவற்றை தத்துவார்த்த ரீதியாகப் புரிந்து கொள்ளாமல், அரசியல் ரீதியாக அவற்றை "உணராமல்", ஒரு உண்மையான புரட்சிகர தலைமை சாத்தியமில்லை.

அதனால் தான் இந்த அத்தியாயம் மிகவும் பகட்டு நூலறிவாக, மிகவும் பலவீனமானதாக, மிகவும் திவாலானதுமாக தொடக்கத்தில் இருந்து இறுதி வரை இருக்கிறது.