line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 2: ஏகாதிபத்திய சகாப்தத்தில் மூலோபாயமும் தந்திரோபாயங்களும

 

Print part 2 on single page

11. உட்கட்சி ஆட்சி பற்றிய பிரச்சினை

போல்ஷிவிசத்தின் அமைப்பு முறை பற்றிய பிரச்சினைகள், அதன் வேலைத்திட்டம் மற்றும் தந்திரோபாயங்களுடன் தவிர்க்க முடியாமல் பிணைந்துள்ளன. "ஜனநாயக மத்தியத்துவத்தின் கடுமையான புரட்சிகர ஒழுங்கை தொடர்ந்து பராமரித்துக் கொண்டிருக்கும்", தேவை பற்றி குறிப்பிடாது விட்டுவிடுவதில் மட்டுமே வரைவு வேலைத்திட்டம் இந்த விஷயத்தை தொடுகிறது. கட்சியின் உள்கட்சி ஆட்சி முறையை வரையறுக்கும் ஒரே அளவுகோலாக இது உள்ளது; இதைத்தவிர இது ஒரு புதிய சூத்திரமாகவும் உள்ளது. கட்சியின் உட்கட்சி ஆட்சிமுறை ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடுகளை தளமாகக் கொண்டுள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் அகற்றப்படக்கூடிய வழிநடத்தும் உறுப்புக்களின் முழு அதிகாரம் உள்ள தலைமையின் கீழான நடவடிக்கையில் இரும்பு போன்ற உறுதியில் அது சம்பந்தப்படுவது போல், ஜனநாயக மத்தியத்துவம் கட்சிக்குள் விவாதிக்க, விமர்சிக்க, அதிருப்தியைத் தெரிவிக்க, தேர்ந்தெடுக்க, பதவியில் இருந்து அகற்ற என கட்சிக்கு முழுவாய்ப்பை கொடுக்கிறது என்பதை உட்குறிப்பாய் கொள்கிறது என்பது (நடைமுறையிலும் இது செயல்படுத்தப்பட்டது) தத்துவத்தில் முன்நிபந்தனையாகிறது. அதன் அனைத்து உறுப்புகள் மீதும் கட்சியின் இறைமை என ஜனநாயகம் புரிந்துகொள்ளப்படுமானால், மத்தியத்துவம் என்பதும், ஒரு சரியான முறையில் நிறுவப்பட்டுள்ள, கட்சியின் போராடும் திறனை உறுதி செய்யும் நனவான ஒழுங்குமுறை என்று பொருள்படும். ஆயினும், கடந்த காலம் முழுவதும் சோதனைகளில் புடம்போட்டு நின்ற இந்தக் கட்சி ஆட்சி முறையின் இந்த சூத்திரத்திற்கு இப்பொழுது "மிகக் கடுமையான புரட்சிகர ஒழுங்கு" எனப்படும் முற்றிலும் புதிய அளவு கோல் சேர்க்கப்பட்டுள்ளது. வெறும் ஜனநாயக மத்தியத்துவம் மட்டும் இனியும் போதாது, மாறாக அதற்கு ஜனநாயக மத்தியத்துவத்தின் ஒரு குறிப்பிட்ட புரட்சிகர ஒழுங்கும் தேவைப்படுகிறது என இப்பொழுது தோன்றுகிறது. இச்சூத்திரம் ஜனநாயக மத்தியத்துவம், அதாவது கட்சிக்கும் மேலாக "புரட்சிகர ஒழுங்கு" என்ற தன்னிறைவு உடைய புதிய கருத்தை தெளிவாய் முன்வைக்கிறது.

ஜனநாயகம், மத்தியத்துவம் ஆகிய கருத்துக்களுக்கு மேலாக நிற்கும் "புரட்சிகர ஒழுங்கு", "மிகக்கடுமையான" ஒழுங்கு என்ற கருத்தின் அர்த்தம் என்ன? கட்சியில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக இருக்கும் ஒரு கட்சிக் கருவியை இது உட்குறிப்பாக உணர்த்துகிறது அல்லது கட்சி ஜனங்களிடத்தில் இருந்து சுயாதீனமாக "ஒழுங்கை" பேணுவதாகக் கூறப்படும் தன்னிறைவு கொண்ட அதிகாரத்துவம் ஒன்றின், அத்தகைய சுதந்திரத்தை அடைவதற்கு விரும்பும் மற்றும் கட்சியின் விருப்பத்தை தடை செய்யக்கூடிய அல்லது மீறக்கூடிய கருவி என்ற உட்குறிப்பு உள்ளது; கட்சியின் விதிகளை காலடியில் மிதித்துத் துவைத்து, கட்சி மாநாடுகளை ஒத்தி வைத்தல் அல்லது "ஒழுங்கின்" தேவைக்கு ஏற்ப அவற்றை வெற்றுக் கூட்டங்களாக மாற்றும் கருவியாக அது இருக்கும் என்பதும் உட்குறிப்பு ஆகும்.

இந்த கருவி நீண்ட காலமாகவே "புரட்சிகர ஒழுங்கு" போன்ற சூத்திரத்தை ஜனநாயகம், மற்றும் மத்தியத்துவம் ஆகியவற்றைவிட உயர்நிலையில் இருத்துவதற்கு தவறான வழிகளை இலக்காக கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சித் தலைமையின் மிகப் பொறுப்பான பிரதிநிதிகள் மூலம் கட்சி ஜனநாயகம் பற்றி தொடர்ச்சியாக பல அறிவுரைகளை பெற்றுள்ளோம்; அவற்றின் சாராம்சம் ஜனநாயகமும் மத்தியத்துவமும், உயர் கருவிகளுக்கு தாழ்ந்து, அடிபணிந்து நிற்க வேண்டும் என்பதாகும். நடைமுறைச் செயற்பாடுகள் அனைத்தும் இவ்விதத்தில்தான் செய்யப்பட்டன. ஆனால், நெரிக்கபட்ட, வெற்றுத்தனமான ஜனநாயகத்துடன் தொடர்ந்து வரும் மத்தியத்துவம், அதிகாரத்துவ மத்தியத்துவம் ஆகும். இத்தகைய "ஒழுங்கு", ஜனநாயக வடிவங்கள், சடங்குகள் ஆகியவற்றால் கட்டாயம் மூடிமறைக்கப்பட்டு இருக்கும். மேலிடத்தில் இருந்து வெளிவரும் சுற்றறிக்கை கடிதங்களின் வழியாக அதி கட்டாயம் துடைத்துக் கட்டப்படும், 58வது விதி பாயும் என்ற அச்சுறுத்தலின் கீழ் "சுயவிமர்சனத்தை" மேற்கொள்ள ஆணையிடும், ஜனநாயக மீறல்கள் தலைமை தாங்கும் மையத்தில் இருந்து வெளிவராமல் "நிறைவேற்றுநர்கள்" என்று அழைக்கப்படுபவர் மூலம் நடக்கின்றன எனத் தொடர்ச்சியாக கட்டாயம் நிரூபிக்க வேண்டும்; ஆனால் பிந்தையவர்களுக்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட மாட்டாது; ஏனெனில் ஒவ்வொரு "நிறைவேற்றுநரும்"(?), அவருக்குத் தாழ்ந்து இருக்கும் அனைவர்களுக்கும் தலைவராக மாறி இருப்பார்.

இவ்விதத்தில் புதிய சூத்திரம் முற்றிலும் அபத்தம் ஆகும். சில முதிர்ந்த விருப்பங்களை திருப்திப்படுத்துவதற்காகவே இது ஊக்குவிக்கப்பட்டது என்பதை அதன், புதுமை, அபத்தங்களால் விளக்கிக்காட்டுகின்றன. அதைத் தோற்றுவித்த அதிகாரத்துவ கருவிகளை அது புனிதப்படுத்துகிறது.

இந்தப் பிரச்சினை கன்னைகள் மற்றும் குழுக்கூடல்கள் என்ற பிரச்சினைகளுடன் கரைக்க முடியாத் தன்மையுடன் பிணைந்துள்ளது. விவாதத்திற்குரிய பிரச்சினைகள், மாறுபட்ட கருத்துக்கள் வரக்கூடிய பிரச்சினைகள் அனைத்திலும் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் அல்லாமல் உத்தியோகபூர்வ பத்திரிகை, கொமின்டேர்ன் மற்றும் மற்றும் அவற்றின் அனைத்துப் பிரிவுகளிலும் விவாதத்தை கன்னைகள் குழுகூடல்கள் என்று உடனடியாகத் திருப்பி விடுகின்றன. ஒரு தற்காலிக சிந்தனைக் குழுக்கள் இல்லாமல் கட்சியின் சிந்தனை வாழ்வு என்பதை நினைத்தும் பார்க்க முடியாது. எவரும் இதுவரை மாற்றுவழிவகையை கண்டுபிடிக்கவில்லை. கண்டு பிடிக்க முயற்சி செய்தவர்களும் கட்சியின் சிந்தனை வாழ்வு, உயிர்ப்பை நெரிக்கும் வகையில்தான் தங்களுடைய தீர்க்கும் முறை உள்ளது என்பதை நிரூபித்துள்ளனர்.

எனவே குழுக்களும், கருத்து வேறுபாடுகளும், "தீமை" என்று கூறப்படுகின்றன. ஆனால் இந்தத் தீமைதான் மனித உடல் வளர்ச்சியில் நஞ்சின் தேவை இருப்பது போல், கட்சி வளர்ச்சியின் இயங்கியலின் ஒருங்கிணைந்த ஒரு தேவையான பகுதியாக இருக்கும்.

குழுக்களை ஒழுங்கமைக்கப்பட்ட, நெருக்கமான பிரிவுகளாக மாற்றுவது என்பது இன்னும் அதிகமான தீமையாகும். கட்சித் தலைமையின் கலையே துல்லியமாக இத்தகைய வளர்ச்சியை தடுப்பதில்தான் இருக்கிறது. இதை ஒரு வெறும் தடை மூலம் செய்துவிட முடியாது. சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவம் அதற்குச் சிறப்புச் சான்றாக உள்ளது.

Kronstadt எழுச்சி, மற்றும் குலாக் கலகங்களின் எதிரொலிப் பின்னணியில் நடந்த பத்தாம் அகல்பேரவையில் கன்னைகள், குழுக்களை தடை செய்யும் வகையில் தீர்மானம் ஒன்று ஏற்கப்படுவதற்கு லெனின் வகை செய்தார். குழுக்கள் என்பவற்றின் பொருள் கட்சியின் உயிர்ப்பில் தவிர்க்க முடியாமல் வரும் வழிவகை, தற்காலிக போக்குகள் என்று உணரப்படவில்லை; ஆனால் அதே கன்னைகள் குழுக்கள் என்று தம்மை மறைத்துக் கொண்டன. கட்சியின் வெகுஜன காரியாளர்கள் இத்தகைய நேரத்தில் இருந்த அறநெறி ஆபத்தை நன்கு உணர்ந்தனர்; தீர்மானத்தை, அதன் கடுமையான வளைந்து கொடுக்காத வடிவத்தில் ஏற்ற விதத்தில், தங்கள் தலைவருக்கு அவர்கள் ஆதரவைக் கொடுத்தனர்; அதாவது கன்னைகள் மற்றும் கன்னைவாதம் ஆகியவை தடைசெய்யப்பட வேண்டும் என்பதற்கு. ஆனால், இச்சூத்திரம் மத்தியகுழு லெனின் தலைமையில் விசுவாசமற்ற முறையில் விளக்கம் கொடுக்காது என்பதையும் நன்கு அறிந்திருந்தனர். (பார்க்க: லெனின் "மரணசாசனம்") ஓராண்டிற்கு பின்னர் அல்லது மூன்றில் ஒரு பகுதியினர் கோரினால் ஒரு மாதத்திற்குள் ஒரு புதிய கட்சி மாநாட்டில் அனுபவங்கள் பரிசீலிக்கப்படலாம், தேவையானால் விதிகள் திருத்தப்படலாம் என்பதை கட்சியினர் அறிந்திருந்தனர். பத்தாம் அகல்பேரவையின் முடிவு போர்க்கம்யூனிசத்தில் இருந்து புதிய பொருளாதாரக் கொள்கைக்கு (NEP) மாறிய மிக ஆபத்தான திருப்பத்தில் ஆளும் கட்சியின் முக்கியமான நிலைப்பாட்டால் தூண்டப்பட்ட ஒரு கடுமையான நடவடிக்கை ஆகும். இது ஒரு சரியான, தொலைநோக்குடைய கொள்கைக்கு துணையாக இருந்ததால் இக்கடுமையான நடவடிக்கை முற்றிலும் நியாயமானதாக நிரூபிக்கப்பட இருந்தது மற்றும் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு மாறுதலுக்கு முன் தோன்றியிருந்த குழுக்களின் கீழிருந்த அடித்தளத்தை வெட்டியது.

ஆனால், கன்னைகள், குழுக்கள் பற்றிய கட்சியின் பத்தாம் அகல்பேரவை, கவனமான விளக்கம், பயன்படுத்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டிய தேவையைப் பெற்று இருந்தாலும் கூட, இது ஒன்றும் கட்சி வளர்ச்சியின் ஏனைய தேவைகள், நாட்டின் சுதந்திரம், நிலைமை, நேரம் ஆகிய அனைத்திற்கும் மேலாக இருத்தப்பட்ட முற்றுமுழுதான கோட்பாடாக விளங்கவில்லை.

லெனின் மறைவிற்கு பின்னர் அனைத்து விமர்சனங்களில் இருந்தும் கட்சித் தலைமை தன்னை காப்பாற்றிக் கொள்ளும்பொருட்டு, கன்னைகள், குழுக்கள் ஆகியவை பற்றிய பத்தாம் அகல்பேரவையின் முடிவுகளை சம்பிரதாயமாக தனக்கு தளமாக அமைத்துக் கொண்டது; இதற்கு காரணம் கட்சி ஜனநாயகத்தை என்றுமில்லா வகையில் கூடுதலாக நெரிப்பதற்குத்தான். அதே நேரத்தில் அதன் உண்மை நோக்கத்தில் அதாவது கன்னைவாதத்தை முற்றிலும் அழிப்பதில் அது அதிகமாக ஏதும் செய்யவில்லை. ஏனெனில் கன்னைகளை தடுக்கும் விதத்தில் ஒன்றும் பணி இல்லை; ஆனால் அவற்றை அகற்றிவிடுவதுதான் அதன் பணியாகும். இதற்கிடையில் தலைமையில் இருந்து லெனின் அகன்றபின் புதிய கன்னைகள் கட்சியை பெரிதும் அழிவிற்கு உட்படுத்தி ஐக்கியத்தையும் சீர்குலைத்தன. அதே நேரத்தில் கட்சியில் இதுபோல் முற்றிலும் மோசடித்தனமான, ஒரு நூறு சதவிகித ஒற்றை அதிகாரக் குவிப்பு முறையும் இருந்ததில்லை; கட்சியின் உயிர்ப்பை நெரிக்கும் வழிவகைகளை மூடி மறைக்கவே அது பயன்பட்டது.

கட்சியில் இருந்து இரகசியமாக வைக்கப்பட்ட கருவி, கன்னை ஒன்றும் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியில் 12வது கட்சி அகல்பேரவைக்கு முன்பே வெளிப்பட்டிருந்தது. பின்னர் இது அதன் சொந்த சட்டவிரோத, மத்திய குழுவாக, ஒரு சதியமைப்பு தன்மைகளை கொண்டு ("எழுவர் குழு") என வந்தது; அது சுற்றுக்கடிதங்கள், முகவர்கள், இரகசியக் குழுக்கள் போன்றவற்றையும் பெற்றிருந்தது. கட்சி எந்திரம் தன்னுடைய உறுப்பினர்கள் சிலரை நெருக்கமான முறையில் தேர்ந்தெடுத்தது; அது கட்டுப்படுத்த முடியாதிருந்தது மற்றும் அது கட்சியினது மட்டுமல்லாமல் அரசு சாதனத்தின் அசாதாரண வளங்களை அழிக்கவும் செய்தது, கட்சி ஜனங்களையே தம் கூட்டு சூழ்ச்சிகளுக்கான ஒரு மூடுதிரையாகவும் துணைக் கருவியாகவும் உருமாற்றியது.

ஆனால், இந்த இரகசிய உட்கருவி கன்னையானது கட்சி வெகுஜனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து, தைரியமாக தன்னை விடுவித்துக் கொண்டு, அனைத்துவித "உந்துதல்களினாலும்" மிகவும் நீர்த்துப் போனது, இன்னும் ஆழ்ந்த விதத்தில் கன்னை நிகழ்வுப் போக்கினை தீவிரமாகப் பெருக்கின; கட்சியின் கீழ்மட்டத்தில் மட்டும் அல்லாமல் கட்சி கருவியிலும் இது ஏற்பட்டது. கருவியானது கட்சியின் மீது முழுமையான மற்றும் வரையற்ற மேலாதிக்கத்தை கொண்டிருந்த நிலையில், பதின்மூன்றாம் கட்சி மாநாடு நடத்தப்பட்டபோதே பூர்த்தியாகியிருந்த இந்த நிலையிமையில், கருவிக்குள்ளேயே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் வெளிவருவதற்கு இடம் இல்லாமல் போயிற்று. உண்மையான முடிவிற்கு கட்சிக்கு முறையீடு செய்வது கட்சியை மீண்டும் அதற்கு கீழ்ப்படுத்துவதாய் அர்த்தப்படுத்தும். முன்கூட்டியே பெரும்பான்மை கிடைத்துவிடும் என்ற உறுதி கொண்டிருந்த கருவிக் குழுதான் கருவி ஜனநாயகத்தின் வழிவகைகளை நாடுவதன் மூலம் சர்ச்சைக்குரிய பிரச்சினையை. தீர்மானிக்க விருப்பம் கொள்ளும், அதாவது, இரகசியப் பிரிவின் உறுப்பினர்களுடைய வாக்கெடுப்பிற்கு விடும். இதன் விளைவாக ஆளும் கருவி கன்னைக்குள் விரோதப் போக்குடைய சிறு குழுக்கள் தோன்றினாலும், பொதுப் பிரிவிற்குள் பெரும்பான்மையை கைப்பற்றுவதற்கு அவை முயற்சி செய்யா; அரசு கருவியில் இருக்கும் அமைப்புக்களின் ஆதரவை நாடுவது போல் இங்கு நாடப்படமாட்டாது. கட்சி அகல்பேரவையில் பெரும்பான்மையை பொறுத்த வரையில், அதற்கு இயல்பாகவே அது கிடைத்துவிடும்; ஏனெனில் தனக்கு ஏற்ற வசதியான நேரத்தில்தான் கருவியானது அகல் பேரவையைக் கூட்டும். இந்த விதத்தில்தால் கருவியானது அதிகாரத்தை கைப்பற்றி, வளர்ச்சி அடைகிறது. இது கட்சிக்கும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கும் மிக அதிகமான ஆபத்தை விளைவிப்பது ஆகும்.

1923-1924 ல் கருவி கன்னையின் உதவியால் மேற்கொள்ளப்பட்ட முதல் "ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு" பிரச்சாரத்தின் பின்னர், செப்டம்விரேட் எனப்படும் எழுவர் குழுவின் தலைமையில், தலைமறைவு கன்னைக்குள்ளே ஆழ்ந்த பிளவு ஏற்பட்டது. இதற்கு அடிப்படை காரணம் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கை பிரச்சினைகளில் அது முதிராத வகையில் சரிந்து நின்றதுடன் லெனின்கிராட் பாட்டாளி வர்க்க முன்னணி, வர்க்க முறையில் அதிருப்தி அடைந்தது ஆகும். 1923ல் மாஸ்கோவின் முன்னேறிய தொழிலாளர்கள் தொடங்கியதைத்தான் 1925ல் லெனின்கிராட்டின் முன்னேற்றம் அடைந்த தொழிலாளர்கள் தொடர்ந்தனர். ஆனால் இந்த ஆழ்ந்த வர்க்கப் போக்குகள் கட்சியில் தங்களை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியவில்லை. அவை கருவிக் கன்னைக்குள்ளே நடந்த சலசலப்புக் குறைவான போராட்டத்தில் வெளிப்பட்டன.

ஏப்ரல் 1925ல், மத்திய குழு, கட்சி முழுவதற்கும் ஒரு சுற்றறிக்கை கடிதத்தை அனுப்பியது; செப்டம்விரேட் கன்னைக்குள் லெனினிஸ்ட்டுக்களின் உட்கருக் குழுவிற்குள் விவசாயிகள் பற்றி கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று "ட்ரொட்ஸ்கிஸ்டுகளால்" பரப்பப்பட்ட வதந்திகளை இக்கடிதம் மறுத்தது. இக்கடிதத்தில் இருந்துதான் கருத்து வேறுபாடுகள் உண்மையிலேயே இருந்தன என்று கட்சி உறுப்பினர்களுக்கு தெரிய வந்தது. "லெனினிச காவலரின்" ஒற்றை அதிகாரத் தன்மையை "எதிர்ப்பு" சீர்குலைக்கிறது என்று கூறப்படும் குற்றச் சாட்டை உறுதியாகக் கூறியவிதத்தில் கட்சி உறுப்பினர்களை தொடர்ந்து ஏமாற்றுவது இதனால் நிறுத்தப்பட்டுவிடவில்லை. இந்தப் பிரச்சாரம் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தபோது, பதினான்காம் கட்சி அகல் பேரவை ஆளும் பிரிவிற்குள் தத்தளித்த முறையில் குழப்பமான வேறுபாடுகள் இரு பிரிவினரிடையே இருந்தன என்று காட்டியது; ஆனால் இந்த வேறுபாடுகள் ஆழ்ந்த முறையில் தங்கள் வர்க்க ஆதாரங்களை கொண்டிருந்தன. கட்சி அகல்பேரவை தொடங்குவதற்கு முன்பு கட்சியின் இரு அரண்களான மாஸ்கோ மற்றும் லெனின்கிராட் அமைப்புக்கள் தங்கள் மாவட்ட மாநாடுகளில் முற்றிலும் எதிர்த்தன்மை உடைய தீர்மானங்களை இயற்றின. இரு தீர்மானங்களும் ஒருமனதாக இயற்றப்பட்டன என்று கூறத் தேவையில்லை. இந்தப் "புரட்சிகர ஒழுங்கு" என்ற அதிசயத்தை லெனின்கிராடில் இருக்கும் கருவி தன் வலிமையை பயன்படுத்திக் கொண்டுவந்தது என்று மாஸ்கோ விளக்கியது. இதே குற்றச்சாட்டை லெனின்கிராட் மாஸ்கோ மீது சுமத்தியது. இரண்டிலுமே எப்பொழுதும் கட்சி கருவிதான் முடிவு எடுக்கும் என்பது நூறுசதவிகித ஒற்றை அதிகார நிலைப்பாட்டை நிரூபிக்கும் வகையில் கட்சி வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்திலும் கட்சிக்கு இடமில்லை என்று காட்டப்பட்டது.

பல அடிப்படைப் பிரச்சினைகளில் புதிய கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதிலும், கலந்து ஆலோசிக்கப்படாத கட்சிக்கு பின்புலத்தே புதிய தலைமை ஒன்றை தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திலும் பதினான்காம் அகல்பேரவை இருந்தது. கட்சிச் செயலாளர்கள் அதிகாரப் படிநிலையில் இருந்து மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவர்களிடம் இந்த முடிவை விடுவது தவிர வேறு மாற்று இல்லை என்ற நிலைக்கு அகல் பேரவை தள்ளப்பட்டது. "ஒழுங்கின்" வழிமுறைகள் மூலம், அதாவது, முகமூடியணிந்த கருவி கன்னையின் ஒருதலைப்பட்ச அதிகாரத்தை செலுத்துவதன் மூலம் கட்சி ஜனநாயகத்தை அழிப்பதற்கான பாதையில் பதினான்காம் கட்சி மாநாடு ஒரு மைல் கல்லாக அமைந்தது; போராட்டத்தின் அடுத்த கட்டம் சற்று முன்னர்தான் நடந்தது. ஆளும் கன்னையின் தந்திரம் எப்பொழுதும் ஏற்கனவே ஏற்கப்பட்டுவிட்ட முடிவுடன், சீர்படுத்தவியலாத நிலையுடன், நிறைவேற்றப்பட்ட உண்மையுடன் கட்சியை எதிர்கொள்வதைக் கொண்டிருந்தது.

இந்த "புரட்சிகர ஒழுங்கின்" புதிய, உயர் கட்டம் பிரிவுகளையும் குழுக்களையும் அழித்துவிடுவதை ஒன்றும் குறிப்பிடுவது இல்லை. மாறாக, அவை தீவிர வளர்ச்சி மற்றும் உறுதிப்பாட்டை கட்சி வெகுஜனத்திற்குள்ளேயும் கட்சிக் கருவிக்குள்ளும் கொண்டிருந்தன. கட்சியைப் பொறுத்த வரையில், குழுக்களை அதிகாரத்துவ திருத்துதல் என்பது என்றும் கூர்மையானதாக ஆனது மற்றும் இங்கு பிரபுக்குல அதிகாரியின் அபகீர்த்தி மற்றும் 58வது சட்டவிதிக்கு கீழிறங்கியது அதன் திராணியின்மையை விளக்கிக்காட்டியது. அதே நேரத்தில் ஆளும் பிரிவிற்குள்ளேயே ஒரு புதிய பிளவிற்கான வழிவகை ஏற்பட்டது; இது இப்பொழுது இன்னும் கூடுதலாக வளர்ந்து வருகிறது. ஆனாலும் இப்பொழுதும் கூட உயர்மட்டத்தில் ஐக்கியம் இருப்பது போல் சான்று கூறும் ஒற்றை அதிகாரக் குவிப்பின் பொய்யான விளக்கிக்காட்டல்கள் ஒன்றும் குறைந்து விடவில்லை. உண்மையில், கிடைக்கும் குறிப்புக்கள் அனைத்தும் மூடிய கதவுகளுக்குப் பின் கருவிக் கன்னைக்குள்ளே இரகசியப் போராட்டங்கள் நடக்கின்றன, கடக்கப்படாத நிலையில் வன்முறை ஏற்படுகிறது என்பது, தீவிர பதட்டப் பண்பை வலிந்து ஏற்க வைத்துள்ளது மற்றும் கட்சியை புதிய வெடிப்பிற்கு உட்படுத்தக்கூடிய உந்துதலை கொடுக்கிறது.

இந்த விதத்தில்தான் "புரட்சிகர ஒழுங்கின்" தத்துவமும் நடைமுறையும் உள்ளன; இது தவிர்க்க முடியாமல் அதிகாரத்தை நெறியின்றிக் கைப்பற்றும் தத்துவம் மற்றும் நடைமுறை என தவிர்க்க முடியாமல் மாற்றப்பட்டு வருகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் சோவியத் ஒன்றியத்துடன் எல்லைக்குட்படுத்தப்படவில்லை. 1923ம் ஆண்டு கன்னைவாதத்திற்கு எதிரான பிரச்சாரம், கன்னைகள், புதிய கட்சிகள் தோன்றுவதற்கான கருத்துக்களை பிரதிபலிப்பவை; மற்றும் அபரிமிதமான விவசாயிகள் பெரும்பான்மை இருக்கும் நாட்டில், முதலாளித்துவத்தினால் முற்றிலும் சூழப்பட்டுள்ள நாட்டில், பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் கட்சிகளுக்கான சுதந்திரத்தை கொடுக்க முடியாது என்ற வாதத்தில் இருந்து வெளிவந்தது ஆகும். அதன் இயல்பில் பார்த்தால் இந்த முன்கருத்து முற்றிலும் சரியாகத்தான் உள்ளது. ஆனால் இதற்கு ஒரு சரியான ஆட்சியும் சரியான கொள்கையும் தேவைப்படும். ஆயினும், பிரச்சினையை இவ்விதத்தில் சூத்திரப்படுத்துதல் என்பது ஆளும் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தாம் அகல்பேரவையில் ஏற்கப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள கருத்தான முதலாளித்தவ நாடுகளில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் விரிவுபடுத்தல் என்பது கைவிடப்படுவதை குறிக்கிறது. ஆனால் ஒரு அதிகாரத்துவ ஆட்சி அதன் சொந்தத் தர்க்கத்தையே விழுங்கிவிடும் தன்மையையும் கொண்டுள்ளது ஆகும். சோவியத் கட்சிக்குள் எந்த ஜனநாயகக் கட்டுப்பாட்டையும் அது பொறுத்துக் கொள்ள முடியாது என்றால், முறையாக சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியை விட உயர்ந்த கொமின்டேர்னுக்குள் இருக்கும் அமைப்புக்களிலும் பொறுத்துக் கொள்ளுவது குறைவாகத்தான் இருக்கும். எனவேதான் தலைமையானது பத்தாம் கட்சி அகல்பேரவையின் தீர்மானத்தில் இருந்து நயமற்ற, விசுவாசமற்ற விளக்கம், பயன்படுத்தல் ஆகியவற்றிலிருந்து, அனைவருக்கும் பொருந்தும் கோட்பாட்டை செய்துள்ளது-- அது அந்த நேரத்தில் சோவியத் ஒன்றியத்தில் குறிப்பிட்ட தேவைகளை நிறைவு செய்தது --அதை புவியில் இருக்கும் அனைத்து கம்யூனிச அமைப்புக்களுக்கும் நீட்டித்துள்ளது.

அமைப்பு வடிவங்களை அவற்றின் வரலாற்று ஸ்தூலத்தன்மையில் விரிவாக்குவதில் போல்ஷிவிசம் எப்பொழுதும் வலிமையாக இருந்தது. இதில் வறண்ட திட்டங்கள் ஏதும் கிடையாது. ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு மாறும்போது, போல்ஷிவிக்குகள் தங்கள் அமைப்பு வடிவங்களையும் தீவிரமாக மாற்றினர். ஆயினும், இன்று "புரட்சிகர ஒழுங்கு" என்னும் ஒரே கோட்பாடுதான் சக்தி வாய்ந்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கும், அரசியலில் ஒரு தீவிர சக்தியை வெளிப்படுத்தும் ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், புரட்சிகர போராட்டங்களில் திடீரென உயர்ந்த கட்டங்களுக்கு இழுக்கப்படும் இளம் சீனக் கட்சிக்கும், ஒரு சிறு பிரச்சாரக் குழுவாக இருக்கும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொருத்தப்படுகிறது. பிந்தையதில் அந்த நேரத்தில் தலைமையில் இருந்த, ஒரு பெப்பரால் சூழ்ச்சியால் ஏமாற்றி சுமத்தப்பட்ட வழிமுறைகளின் சரியான தன்மைகள் பற்றி சந்தேகம் எழுந்தவுடனேயே, "சந்தேகப்படுகிறவர்கள்" அவர்களுடைய கன்னைவாதத்தை ஒட்டி தண்டிக்கப்பட்டனர். முற்றிலும் கரு நிலையில் இருக்கும் அரசியல் அமைப்பு முறையை பிரதிபலிக்கும் ஒரு இளைய கட்சி, பொதுமக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு கட்சி, ஒரு புரட்சிகர தலைமையின் அனுபவத்தை கொண்டிராத ஒரு கட்சி, ஏற்கனவே உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை "புரட்சிகர ஒழுங்கு" என்பதின் அனைத்துக் கூறுபாடுகள் கொண்ட ஆயுதத்தை பெற்றுள்ளது; இது ஆறுவயதுச் சிறுவன் ஒருவனுக்கு அவனுடைய தந்தையின் சீருடைகளை பொருத்தி வைத்துப் பார்க்கும் முயற்சியைத்தான் ஒப்புமையாகக் கொண்டுள்ளது.

சிந்தனை மற்றும் புரட்சிகர செயற்களத்தில் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான அனுபவங்கள் என்ற ஒரு செல்வக் குவிப்பை பெற்றுள்ளது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகள் காட்டியது போல், அது தன் மூலதனத்தின் பலாபலனில் மட்டும் எந்த இடையூறும் இல்லாமல் ஒரு நாள் கூட வாழமுடியவில்லை எனினும் கூட, தன்னை இடைவிடாமல் புதுப்பித்துக் கொண்டு, விரிவாக்கம் செய்யவும் வேண்டியுள்ளது; இது கட்சியின் கூட்டு மனத் திண்மையின் மூலம்தான் முடியும். அப்படியானால் வேறு நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை பற்றி, சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கட்சிகள் பற்றி என்ன கூறமுடியும்? அதுவும் அவை இப்பொழுதுதான் தத்தவார்த்த அறிவையும் அரசியல் திறமையையும் சேகரித்து வரும் ஆரம்ப கட்டத்தை கடக்கும் நிலையில்? உண்மையான கட்சி வாழ்வு, விவாதிக்கும் உரிமை, தங்கள் போக்கைக் கூட்டாக நிறுவும் உரிமை, குழுக்களாக செயல்படும் உரிமை ஆகியவை இல்லாவிட்டால், இக்கட்சிகள் ஒரு உறுதியான புரட்சிகர சக்திகளாக ஒருபோதும் மாற முடியாது.

கன்னைகளை தடைக்கு உட்படுத்திய பத்தாவது கட்சி அகல்பேரவைக்கு முன்பு இத்தகைய தடை ஏதும் இல்லாமல் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி இருதசாப்தங்களாக செயல்பட்டு வந்துள்ளது. துல்லியமாக இந்த இரு தசாப்தங்களிலும் அது சிறப்பாக பயிற்சி, தயாரிப்பு ஆகியவற்றை பெற்று இருந்ததால்தான் ஒரு கடினமான திருப்பத்தின்போது பத்தாம் அகல்பேரவையின் கடுமையான முடிவுகளை பொறுத்துக் கொண்டு, ஏற்க முடிந்தது. ஆனால் மேலை நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆரம்பத்தில் இருந்தே இந்தப் புள்ளியில் இருந்து தொடர்ந்து செயல்படுகின்றன.

சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி அரசின் மகத்தான வளங்களைக் கொண்டு, அப்பொழுதுதான் அமைக்கப்பட்டு வந்த இளைய மேலைநாட்டு கட்சிகள் மீது, மிக அதிகமான நசுக்கும் செல்வாக்கை செலுத்தக்கூடும் என்று நாங்கள் லெனினுடன் சேர்ந்து மிகவும் கவலைப்பட்டோம். மத்தியத்துவம் நிலைப்பாட்டிற்கு பக்குவம் அடையாத நிலையில் விரைந்து செல்லுதல், கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு மற்றும் நிறை பேரவையின் மிகையான போக்குகளுக்கு எதிராக செல்லுதல், குறிப்பாக மேல் முறையீடு இல்லாத வகையில் நேரடி ஆணைகளுக்கு தங்களை மாற்றிக்கொள்ளும் வகையில் அத்தகைய வடிவங்கள், உதவி வழிமுறைகள் ஆகியவற்றிற்கு எதிராக லெனின் இடைவிடாமல் எச்சரித்திருந்தார்.

இந்த மாறுதல் 1924ல் "போல்ஷிவிசமயமாக்குதல்" என்ற பெயரில் தொடங்கியது. விரோதக் கூறுபாடுகள், பழக்கங்கள், தங்கள் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சமூக ஜனநாயக செயல்வீரர்கள், மறைமுகமாய் பணிபுரியும் கட்சி உறுப்பினர்கள், சமாதானம் நாடும் ஜனநாயக வாதிகள், கருத்துவாத குழப்பவாதிகள் ஆகியோர் அனைவரையும் களையெடுப்பதுதான் "போல்ஷிவிசமயமாக்குதல்" என்பதின் பொருள் என்றால், இந்தப் பணி கொமின்டேர்ன் நடைமுறைக்கு வந்த தினத்தில் இருந்தே செயல்படுத்தப்பட்டது. நான்காம் அகல்பேரவையில் பிரெஞ்சுக் கட்சியை பொறுத்தவரையில் இந்த பணி மிகத் தீவிர பூசல் வடிவங்களை கொண்டது. ஆனால் முன்பு இந்த உண்மையான போல்ஷிவிசமயமாக்குதல் கொமின்டேர்னின் தேசிய பிரிவுகளின் தனிப்பட்ட அனுபவங்களுடன் தவிர்க்க முடியாமல் தொடர்பைக் கொண்டிருந்தது. இந்த அனுபவங்களில் இருந்து வளர்ந்து, தேசிய கொள்கை பிரச்சினைகளுக்கு உரைகல்லாக ஆயிற்று; சர்வதேச பணிகளுக்கும் உகந்த உரைகல்லாக மாறியது. 1924ல் ஏற்பட்ட "போல்ஷிவிசமயமாக்குதல்" முற்றிலும் ஒரு கேலிச்சித்திர வடிவம்தான். முக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய முன்னணி உறுப்புகளின் நெற்றியில் துப்பாக்கிமுனை அழுத்தப்பட்டு, அவை உடனடியாக சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்பூசல்களில், எந்த தகவலையும் பெறாமல், விவாதம் ஏதும் இல்லாமல், இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும் அவை கொமின்டேர்னில் இருக்க முடியுமா, முடியாதா என்பது இந்த முடிவை ஒட்டி இருக்கும் என்றும் அவற்றிற்கு முன்கூட்டியே கூறப்பட்டது. ஆயினும்கூட 1924ல் ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகள் ரஷ்யாவில் விவாதத்தில் இருக்கும் பிரச்சினைகளை பற்றி வெகுவிரைவில் முடிவிற்கு வர போதுமான ஆதாரங்களைக் கொண்டிருக்கவில்லை. ரஷ்யாவில் அப்பொழுது இரு கோட்பாடுவழிப்பட்ட போக்குகள் ஆரம்பக் கட்டத்தில் இருந்தன; இரண்டுமே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் புதிய கட்டத்தில் இருந்து தோன்றியவை ஆகும். 1924க்கு பின்னரும் அகற்றும் பணி என்பது தேவைப்பட்டதுதான்; பல பகுதிகளில் இருந்து எதிரிக் கூறுபாடுகள் சரியாகத்தான் அகற்றப்பட்டு இருந்தன. ஆனால், ஒட்டுமொத்தத்தில் "போல்ஷிவிச மயமாக்குதல்" என்பது இதைத்தான் கொண்டிருந்தது: மேலே இருந்த அரச கருவியின் சுத்தியல் அடித் தாக்குதல்களால் உந்தப்பட்டு, மேலை கம்யூனிஸ்ட்டுக்கள் மேலும் மேலும் சீர்குலைந்துபோன நிலையில், ரஷ்ய பூசல்களின் பிளவுகளால் பாதிக்கப்பட்ட வகையில், தலைமைகள் அங்கு அமைக்கப்பட்டன. இவை அனைத்தும் கன்னைவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்டன.

நீண்ட காலம் அதன் போராடும் திறனை முடக்கக்கூடிய அச்சுறுத்தலை கொடுக்கும் ஒரு கன்னை பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையின் கட்சிக்குள்ளே ஒரு படிமம் ஆக உருப்பெற்று விட்டது என்றால், கட்சி ஒரு துணை மறு ஆய்விற்காக கூடுதல் நேரம் ஒதுக்கப்பட வேண்டுமா அல்லது பிளவு தவிர்க்கப்பட முடியாதது என்பதை உணர்வதை உடனடியாக முடிவெடுக்க வேண்டிய தேவையுடன் இயல்பாகவே முரண்கொள்ள நேரிடும். எதிரெதிர்த் திசைகளில் இழுத்துச் செல்லும் கன்னைகளின் கூட்டாக ஒரு போராடும் கட்சி இருக்க முடியாது. இது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் பிளவு என்பதைப் பயன்படுத்தி கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது, அல்லது விமர்சனக்குரல் எழுப்பும் ஒவ்வொரு பிரிவையும் தனியே தகர்ப்பது என்றால், கட்சியின் உள்வாழ்வு என்பது அமைப்புரீதியான கருச்சிதைவுகள் என்ற சங்கிலிக்கு ஒப்பாக மாற்றப்படுவது என்று போகும். இத்தகைய வழிவகைகள் வகையினத்தின் தொடர்ச்சி மற்றும் வளர்ச்சியைப் பெருக்க உதவுவதில்லை. ஆனால் தாய் உயிரின், அதாவது, கட்சியை கலைப்பிற்கு உட்படுத்திவிடும். கன்னைவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது கன்னைகளை ஏற்படுத்துவதை விட முடிவற்ற ஆபத்துக்களாய் ஆகிவிடும்.

கிட்டத்தட்ட உலகிலுள்ள அனைத்து கம்யூனிஸ்ட் கட்சியையும் தோற்றுவித்தவர்கள், நிறுவனர்கள் ஆகியோர் இப்பொழுது அகிலத்திற்கு வெளியே அனுப்பப்பட்டு விட்டனர். இதன் முன்னாள் தலைவர் ஒருவரும் இதற்கு விதிவிலக்கல்ல. கட்சி வளர்ச்சியின் இரு தொடர்ச்சியான கட்டங்களில் இருந்த முன்னணிக் குழுக்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர், அல்லது அனைத்து கட்சிகளிலும் தலைமையில் இருந்து அகற்றப்பட்டு விட்டனர். ஜேர்மனியில் பிராண்ட்லரின் குழு இன்னும் கூட கட்சியில் முழு உறுப்பினர் தன்மையை பெறாமல் உள்ளது. மாஸ்லோ குழு கட்சிக்கு வெளியே இருக்கிறது. பிரான்சில்  Rosmer, Monatte, Loriot, Souvine ஆகியோருடைய பழைய குழுக்கள் வெளியேற்றப்பட்டதுடன், பிந்தைய காலத்தில் முக்கிய குழுவான Givault-Treint ம் வெளியேற்றப்பட்டு விட்டது. இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய போர்டிகா குழுப் பகுதி வெளியேற்றப்பட்டுள்ளது என்றால் அதற்குக் காரணம் பாசிச ஆட்சியின் நிலைமைதான். செக்கோஸ்லோவாக்கியா, ஸ்வீடன், நோர்வே, அமெரிக்கா ஆகியவற்றில், சுருங்கக் கூறின், உலகிலுள்ள கட்சிகள் அனைத்திலும் இத்தகைய நிகழ்வுகளைத்தான் லெனினுக்கு பிந்தைய காலத்தில் காண்கிறோம்.

வெளியேற்றப்பட்டவர்களில் பலர் மிகப் பெரிய தவறுகளைச் செய்தனர் என்பது மறுக்கப்பட முடியாது. நாம் ஒன்றும் அவற்றைப் பற்றி மறைவாகச் சுட்டிக் காட்டவும் இல்லை. கொமின்டேர்னில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அவர்களில் பலர் அனுப்பப்படுவதற்கு முன்பு கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு பெரிதும் திரும்பினர்; அதாவது, சமூக ஜனநாயகத்திற்கு இடது புறமோ அல்லது சிண்டிகலிசத்திற்கோ திரும்பினர். ஆனால் தேசியக் கட்சியில் இளந்தலைமை வகித்தவர்களை ஒவ்வொரு முறையும் முன்னேற்றம் இல்லாப் பாதையில் அனுப்புவதும் கொமின்டேர்னுடைய வேலை அல்ல; இதையொட்டி அவற்றின் தனிப்பட்ட பிரதிநிதிகளை சிந்தனை ரீதியான சீரழிவிற்கு தள்ளுகின்றனர். அதிகாரத்துவ தலைமையின் "புரட்சிகர ஒழுங்கு", கம்யூனிச அகிலத்தின் அனைத்துக் கட்சிகளின் வழியிலும் ஒரு பெரும் தடையாக நிற்கிறது.

அமைப்பு பற்றிய பிரச்சினைகள், வேலைதிட்டம், தந்திரோபாய பிரச்சினையில் இருந்து பிரிக்க முடியாதவை ஆகும். கொமின்டேர்னில் சந்தர்ப்பவாதத்தின் முக்கியமான ஆதாரங்களில் ஒன்று கொமின்டேர்ன் மற்றும் அதன் முக்கிய கட்சிகளுக்கு உள்ளேயே கருவியின் அதிகாரத்துவ ஆட்சி உள்ளது என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். 1923-1928 ஆண்டுகளின் அனுபவத்திற்கு பின்னர் சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்துவவாதம் என்பது பாட்டாளி வர்க்கத்தின்மீது பாட்டாளி வர்க்கம் இல்லாத வர்க்கங்களால் செலுத்தப்படும் அழுத்தத்தின் வெளிப்பாடு, மற்றும் ஒரு கருவி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கொமின்டேர்னின் வரைவு வேலைத்திட்டத்தில் அதிகாரத்துவச் சிதைவுகள், "மக்களுடைய கலாச்சாரத்தரம் என்ற மண் போதுமான திறனைக் கொண்டிராவிட்டாலும், பாட்டாளி வர்க்கத்தின் மீது விரோதப் போக்குகள் உடைய வர்க்கங்களின் செல்வாக்கினாலும்" எழுகின்றன என்று கூறப்படும்போது, இத்தகைய அமைப்பு முறையைப் பற்றி சரியான சூத்திரப்படுத்தலை கொள்கிறது. பொதுவாக அதிகாரத்துவத்தை பற்றி அறிந்து கொள்ளுவதற்கான திறவுகோலை நாம் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் இல்லாமல், கடந்த ஐந்து ஆண்டுகளில் அது பெற்றுள்ள அசாதாரணமான வளர்ச்சியையும் பார்க்கிறோம். பொதுமக்களின் கலாச்சார மட்டம் போதுமானதாக இல்லை என்றாலும், இக்காலக்கட்டத்தில் அது தொடர்ச்சியாக எழுச்சி கொண்டுள்ளது (இதை மறுப்பதற்கில்லை); எனவே அதிகாரத்துவத்தின் வளர்ச்சிக்கான காரணம் பாட்டாளி வர்க்கத்தின் விரோத வர்க்க செல்வாக்கின் வளர்ச்சியில்தான் காணப்பட முடியும். ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் விகிதத்திற்கு ஏற்ப, அதாவது அவற்றின் இயக்கும் குழுக்கள், அமைப்பு முறையில் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் கருவியின் மாறுதல்கள், மறுசீர் குழுக்கள் ஆகியவற்றுடன் தங்களை இணைத்துக் கொண்ட வரையில், வெளியே இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிகாரத்துவம் பெரும்பாலும் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியினுள் இருக்கும் அதிகாரத்துவத்தின் பிரதிபலிப்பாகவும், துணையாகவும்தான் இருக்கும்.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் இருக்கும் முன்னணி கூறுபாடுகளை தேர்ந்தெடுத்தல் தொடங்கியது; இன்னமும் கூட சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் சமீபத்திய கருவிக் குழுவை எந்த அளவிற்கு ஏற்று ஒப்புதல் கொடுக்கத் தயாராக உள்ளனவோ அந்த அளவிற்குத்தான் அது தொடர்கிறது. வெளி நாடுகளில் இருக்கும் கட்சிகளின் தலைமையில் உள்ள சுதந்திரமான, பொறுப்பான கூறுபாடுகள் முற்றிலும் நிர்வாக வகையில் இருக்கும் மாறுதல்களுக்கு உடன்படாவிட்டால், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர், அல்லது வலதிற்கு விரட்டப்பட்டனர் (பல நேரமும் போலி வலதிற்கு); அல்லது இறுதியில் இடது எதிர்ப்பு அணிகளில் சேர்ந்தனர். இவ்விதத்தில் புரட்சிகர காரியாளர்களை தேர்ந்தெடுத்து ஒன்றாக அமைத்தல், கொமின்டேர்னின் தலைமையின்கீழ் தொழிலாள வர்க்கப் போராட்டத்திற்காக என்ற அடிப்படையில் சேர்த்தல் என்பது குறைக்கப்பட்டு விட்டது, மாற்றப்பட்டது, சிதைக்கப்பட்டது; ஓரளவு மேலிடம், நிர்வாக, அதிகாரச் சல்லடை போடுவதால் பிறருக்கு இடம் கொடுக்கவும் நேர்ந்தது. இயல்பாகவே தயாரிக்கப்பட்ட முடிவுகளை விரைவில் ஏற்கத் தயாராக இருந்த முக்கிய கம்யூனிஸ்ட்டுக்கள், எவ்வித அல்லது தீர்மானங்களுக்கும் ஒப்புதல் கையெழுத்துப் போட தயாராக இருந்தவர்கள், புரட்சிகர பொறுப்பில் தோய்ந்திருந்த, உணர்வு நிரம்பிய கட்சிக் கூறுபாட்டினரை விட அதிகமான அளவில் செல்வாக்கைப் பெறத் தலைப்பட்டனர். சோதிக்கப்பட்ட, உறுதியான, புரட்சியாளர்களை தேர்ந்தெடுக்கப்படும் வகைக்குப் பதிலாக மிகவும் மாற்றி அமைத்துக் கொள்ளும் அதிகாரத்துவவாதிகள்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

உள்நாட்டு, மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் தவிர்க்க முடியாமல் நம்மை மீண்டும் உட்கட்சி ஆட்சிப் பிரச்சினைக்கு திருப்பிவிடும். சீனப்புரட்சி மற்றும் இங்கிலாந்தின் தொழிலாளர் இயக்கப் பிரச்சினைகளில் உள்ள வர்க்கப் போக்கில் இருந்தும், சோவியத் பொருளாதாரத்தில் ஊதியங்கள், வரிகள் போன்றவற்றில் இருந்தும் வர்க்க நிலைப்பாட்டிலிருந்து விலகிச்செல்லுதல், உறுதியாக அவைதாமே பெரும் ஆபத்தைக் கொண்டுள்ளன. ஆனால் கட்சியின் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டுவிட்டு சாதாரண வழிவகையில் கட்சியின் முக்கிய தலைமையின் போக்கைச் சரி செய்வதற்கான எந்த வாய்ப்பையும் இல்லாது செய்து விட்டால், இந்த ஆபத்து பத்து மடங்கு அதிகரிக்கும். இது கொமின்டேர்னுக்கும் பொருந்தும். கொமின்டேர்னில் இன்னும் ஜனநாயகக் கூட்டுமுறையிலான தலைமை தேவை என்பது பற்றிய சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் பதினான்காம் கட்சி அகல்பேரவை கொண்டுவந்திருந்த தீர்மானம் நடைமுறையில் அதன் எதிர்த்தன்மைக்குத்தான் மாற்றப்பட்டுள்ளது. கொமின்டேர்னின் உள்ளாட்சியில் மாற்றம் என்பது சர்வதேசப் புரட்சி இயக்கத்திற்கு வாழ்வா, சாவா என்ற பிரச்சினையாக உருவெடுக்கிறது. இந்த மாற்றம் இரண்டு விதங்களில் சாதிக்கப்படலாம்: சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சியுடன் கைகோர்த்த முறையில் கொண்டுவரப்படும் மாறுதல்; அல்லது கொமின்டேர்னில் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணிப் பாத்திரத்திற்கு எதிரான போராட்டம். முதல் வழியை ஏற்க உறுதியளிக்கும் வகையில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளாட்சி மாற்றத்திற்கான போராட்டம் கொமின்டேர்ன் ஆட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் போராட்டம் ஆகும்; எமது கட்சி கொமின்டேர்னில் முன்னணி கருத்தியல் பாத்திரத்தை தக்கவைத்துக் கொள்ளுவதற்கான போராட்டமும் ஆகும்.

இந்த காரணத்திற்காக, துடிப்புடன், தீவிரமாகச் செயல்படும் கட்சிகள் அகற்றப்பட முடியாத அரசாங்க கட்சி அதிகாரத்துவத்தின் "புரட்சிகர ஒழுங்கு"க்கு கீழ்ப்படிந்து செயல்பட முடியும் என்ற கருத்தை, வேலைத்திட்டத்திலிருந்து இரக்கமற்ற முறையில் துடைத்தழித்தல் அவசியமாகும். கட்சிதாமே அதன் உரிமைகளைக் கட்டாயம் மீட்டெடுக்க வேண்டும். கட்சி மீண்டும் ஒரு கட்சியாக கட்டாயம் விளங்க வேண்டும். அதிகாரத்துவ வாதத்தை தத்துவார்த்த வகையில் நியாயப்படுத்துதல், அதன் அதிகாரத்தை தகாவழியில் பறித்தெடுக்கும் போக்குகளை நியாயப்படுத்துதல் என்பவற்றிற்கு வேலைத்திட்டத்தில் சிறிதும் இடம் கொடுக்காத வகையில், உறுதியான சொற்களில் கட்டாயம் இது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.