line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 2: ஏகாதிபத்திய சகாப்தத்தில் மூலோபாயமும் தந்திரோபாயங்களும்
 

Print part 2 on single page

5. ஐந்தாவது அகல்பேரவையின் அடிப்படை மூலோபாயத் தவறு

1923 இறுதியில் இருந்து, 1923 இலையுதிர் காலத்தில் செய்யப்பட்ட "நடைவேகத்தில் பிழை" பற்றிய கம்யூனிச அகிலத்தின் ஒரு தொடர்ச்சியான ஆவணங்களையும், அதன் தலைவர்களின் பிரகடனங்களையும் கிடைக்கபெற்றோம். அவை அனைத்தும் அவரின் காலத்தில் பிழையாக கணிப்பிட்டிருந்த மார்க்ஸ் குறித்த தவிர்க்கமுடியாத குறிப்புகளாலும் உடன் செல்லப்படுகின்றதை நீங்கள் காண்பீர்கள். அதே சமயத்தில், கம்யூனிச அகிலத்தின் "நடைவேகத்தில் பிழை"யானது அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றிய நெருக்கடியான தருணத்தின் காலஅருகாமையை குறைத்து மதிப்பிடலையா அல்லது அதற்கு மாறாக, மிகை மதிப்பிடலையா கொண்டிருக்கிறது என்கிற பிரச்சினையின் மீது அவர்கள் வேண்டுமென்றே அமைதி காக்கின்றனர். சமீப வருடங்களில் தலைமைக்கு மரபாகி விட்ட இரட்டை கணக்குப் புத்தக ஆட்சிக்கு இயைந்த வகையில், ஒன்றில் முந்தைய அல்லது பிந்தைய அனுகூலத்திற்காக ஒரு காலி இடம் விடப்பட்டது.

இருப்பினும், இந்த காலகட்டத்தில் கம்யூனிச அகிலத்தின் ஒட்டுமொத்த கொள்கையில் இருந்து, 1924 முழுவதிலும் மற்றும் 1925 இன் பெரும்பான்மையான பகுதியிலும் கம்யூனிச அகிலத்தின் தலைமையானது ஜேர்மன் நெருக்கடியின் உச்சநிலை இன்னமும் இருக்கிறது என்ற கருத்துக் கொண்டிருந்தது என்னும் முடிவுக்கு வருவதில் சிரமம் ஏதும் இல்லை. இதனால், மார்க்சை சுட்டிக் காட்டியிருப்பது, கொஞ்சமும் பொருத்தமாக இல்லை. மார்க்ஸ், தன்னுடைய தொலைநோக்கின் காரணமாக, அவ்வப்போதான சமயங்களில் வரவிருக்கும் புரட்சியை அதன் உண்மை தூரத்தை விட மிக அருகில் கண்டார், அவர் ஒரு தருணத்திலும் புரட்சி அவர் முன் நேரெதிரே நிற்கும்போது அதன் சிறப்புக்கூறுகளை அறியத்தவறவோ அல்லது புரட்சி ஏற்கனவே பின்நோக்கி சென்று விட்ட நிலையில், அதைத் தொடர்ந்து விடாப்பிடியாக அதன் பின்பக்கத்தை புரட்சியின் முன்னே பிடித்திருக்கவுமில்லை.

சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சியின் பதின்மூன்றாவது மாநாட்டில், சினோவியேவ், "நடைவேகத்தில் பிழை" மீதான தெளிவற்ற சூத்திரத்தை சுற்றுக்கு முன்வைத்து அறிவித்தார்:

"இதேபோன்ற நிகழ்வுகள் தொடருமானால், இதேபோன்றதொரு சூழலில் இதையே தான் நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்பதை கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவானது உங்களுக்குக் கூற வேண்டும்." [4]
இந்த வாக்குறுதியானது ஒரு அச்சுறுத்தல் போல் ஒலித்தது.

ஒட்டுமொத்த ஐரோப்பாவில் சூழல் எப்படி இருக்கிறதென்றால் "இப்போது நாம் அது எவ்வளவு சுருக்கமான காலகட்டமாக இருந்தாலும் அங்கு வெளியிலிருந்தான அமைதிப்படுத்தல், எந்த வகையான சமாதானப்படுத்தலுக்குமான காலகட்டத்தையும் கூட எதிர்பார்க்கக் கூடாது .... தீர்மானகரமான நிகழ்வுகளின் கட்டத்திற்குள் ஐரோப்பா பிரவேசித்துக் கொண்டிருக்கிறது. வெளிப்படையாக ஜேர்மனி கூர்மைப்படுத்தப்பட்ட உள்நாட்டு யுத்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது..." என்று 1924 பெப்ரவரி 20ல், சர்வதேச சிவப்பு உதவி மாநாட்டில் சினோவியேவ் அறிவித்தார். [5]

1924 பெப்ரவரி ஆரம்பத்தில், கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் ஜேர்மன் நிகழ்வுகளின் பாடங்கள் மீதான தனது தீர்மானத்தில் கூறியது:

"ஜேர்மனியின் கம்யூனிஸ்ட் கட்சியானது தனது நிகழ்ச்சிநிரலில் இருந்து எழுச்சி மற்றும் அதிகாரத்தை கைப்பற்றுவதான கேள்வியை நீக்கக் கூடாது. மாறாக [!] இந்த கேள்வி தனது அனைத்து உறுதியுடன் மற்றும் அவசரத்துடனும் நமக்கு முன்னர் நிறுத்தப்பட வேண்டும் ..." [6]

மார்ச் 26, 1924ல், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு எழுதியது:

"நிகழ்வுகளின் உத்வேகத்தை மதிப்பிடுவதில் அக்டோபர் 1923ல் செய்யப்பட்ட பிழையானது [எந்த மாதிரியான பிழை? - L.T.] கட்சிக்கு கடும் சவால்களை கொண்டு வந்தது. எப்படியாயிருந்தாலும், இது ஒரு நிகழ்வு தான். அடிப்படையான மதிப்பீடு முன்போல அப்படியே இருக்கின்றது." [7]

இவை எல்லாவற்றிலும் இருந்து கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு பின்வரும் முடிவுக்கு வந்தது:

"ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியானது இப்போதிருப்பதை போலவே தொழிலாள வர்க்கத்தினை தயார்படுத்துவதில் தனது அனைத்து சக்திகளையும் பயன்படுத்த வேண்டும் ... ." [8]

1923ம் ஆண்டின் மிகப்பெரும் வரலாற்றுத் துன்பியல் நிகழ்வான, எந்த வித போராட்டமும் இன்றி மிகப்பெரும் புரட்சிகர நிலையின் சரணாகதி ஆறுமாதங்கள் கழித்து ஒரு நிகழ்வு தான் என்கிற அளவில் மதிப்பிடப்படுகிறது. "ஒரு நிகழ்வு மட்டுமே!" ஐரோப்பா இன்றும் கூட இந்த "நிகழ்வின்" கடும் விளைவுகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கம்யூனிச அகிலமானது பேரவையை நான்கு வருடங்களுக்கு கூட்டுவதற்கு அவசியமில்லாமல் போனது என்கிற நிகழ்வானது, கம்யூனிச அகிலத்தின் ஒவ்வொரு கட்சியிலும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக இடது பிரிவானது நசுக்கப்பட்டுக் கொண்டே வந்தது என்கிற நிகழ்வும் இந்த 1923இன் "நிகழ்வின்" விளைவாகும்.

ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தின் தோல்விக்கு எட்டு மாதங்களுக்கு பின்னர், இந்த துயரத்தின் எல்லா விளைவுகளும் ஏற்கனவே தெரிய வந்திருந்த நிலையில், ஐந்தாம் அகல்பேரவை கூடியது. இங்கே வரப் போகும் ஒன்றை முன்கூட்டிகூற வேண்டியது கூட இருக்கவில்லை மாறாக நிகழ்ந்தது என்னவென்பதை காண்பதாகத்தான் இருந்தது. ஐந்தாம் அகல்பேரவையின் அடிப்படை பணிகளாவன: முதலாவது, இந்த தோல்வியை தெளிவாகவும் கடுமைகுறையாமலும் அதன் பெயரால் அழைப்பது, மற்றும் அதன் "அகநிலை" அளவிலான காரணத்தை வெளிப்படையாக முன்வைத்து அதன் மூலம் புறநிலை நிலைமைகள் என்கிற சாக்குப்போக்கின் பின்னால் யாரும் ஒளிந்து கொள்ள அனுமதிக்காமல் இருப்பது; இரண்டாவதாக, ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தை ஸ்தாபிப்பது. இதன்போது மக்கள் தற்காலிகமாக தொடர்பற்று சென்று விடலாம், சமூக ஜனநாயகம் வளரும், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதிக்கத்தை இழக்கும்; மூன்றாவதாக, எதிர்பாராத வகையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இது அனைத்திற்கும் கம்யூனிச அகிலத்தை தயார்படுத்துவது மற்றும் அதனை சூழலில் ஒரு புதிய மாற்றம் வரும் வரை தற்காப்பு போராட்டத்தின் அவசியமான வழிமுறைகளாலும் மற்றும் அமைப்புரீதியான உறுதிப்படுத்தலாலும் தயார்படுத்தி வைத்திருப்பது, என்பனவாகும்.

ஆனால் இந்த அனைத்து பிரச்சினைகளிலுமே அகல்பேரவை நேர் எதிரான மனோபாவத்தை மேற்கொண்டது.

ஜேர்மன் நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை அகல்பேரவையில் பின்வரும் வகையில் சினோவியேவ் விவரித்தார்: "நாங்கள் ஜேர்மன் புரட்சியை எதிர்பார்த்தோம் ஆனால் அது வரவில்லை." [9]

இருப்பினும், யதார்த்தத்தில் புரட்சிக்கு பதிலளிக்கும் உரிமை இருந்தது: "நான் வந்தேன், ஆனால் நீங்கள் தான் கனவான்களே சந்திக்குமிடத்திற்கு மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தீர்கள்" என்பதாகும்.

அகல்பேரவையின் தலைவர்கள் பிரான்ட்லருடன் சேர்ந்து கொண்டு நாம் நிலைமையை "மிகைப்படுத்தி மதிப்பிட்டு விட்டதாக" கணக்கிட்டனர், உண்மையில் "நாம்" அதனை மிகவும் குறைத்தும் மிகவும் தாமதமாகவும் மதிப்பிட்டிருந்தோம். "மிகைப்படுத்திய மதிப்பீடு" எனும் இதன் மூலம் சினோவியேவ் தன்னைத் தானே எளிதில் சமாதானப்படுத்திக் கொண்டார். முதன்மையான தீங்கினை அவர் வேறெங்கோ கண்டிருந்திருக்கிறார்.

"சூழ்நிலைமையை மிகைப்படுத்தி மதிப்பிடுவது என்பது அதி மோசமான விஷயமன்று. அதனை விட மோசமானது என்னவென்றால், சாக்ஸோனியின் உதாரணம் காட்டியது போல, கட்சியின் அணிகளில் இன்னமும் பல சமூக ஜனநாயக மிச்சசொச்சங்கள் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்கிற உண்மை தான்." [10]

சினோவியேவ் பேரழிவை காணவில்லை, அவர் மட்டும் தனியாகவும் அவ்வாறிருக்கவில்லை. அவருடன் சேர்த்து ஒட்டுமொத்த ஐந்தாம் அகல்பேரவையுமே உலகப் புரட்சியின் இந்த பெரும் தோல்வியை வெறுமனே புறக்கணித்து விட்டு சென்று விட்டது. ஜேர்மன் நிகழ்வுகள் முக்கியமாக ஸாக்ஸன் மாநில சட்ட மன்றத்தில் கம்யூனிஸ்டுகளின் கொள்கைகளின் கோணத்தில் இருந்து ஆராயப்பட்டன. இதன் தீர்மானத்தில், பேரவை, கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவை பின்வருமாறு பாராட்டியது.

"...ஜேர்மன் மத்திய குழுவின் சந்தர்ப்பவாத நடத்தையையும், எல்லாவற்றிற்கும் மேலாக, சாக்ஸன் அரசாங்க பரிசோதனையின் போது ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தை முறைதவறிப் பயன்படுத்தியதையும் கண்டிக்கின்றது." [11]

இது எப்படியென்றால், ஒரு கொலைகாரனை "எல்லாவற்றிற்கும் மேலே" அவனால் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் நுழையும்போது தொப்பியை கழற்றாமல் சென்றதற்காக கண்டிப்பதை போன்றதாகும்.

சினோவியேவ் "சாக்ஸன் அனுபவம்" "ஒரு புதிய சூழலை உருவாக்கியது என வலியுறுத்துகிறார். கம்யூனிச அகிலத்தின் புரட்சிகர தந்திரோபாயத்தை இல்லாதொழிக்கும் ஆரம்பத்தின் அபாயத்தை இது கொண்டிருந்தது." [12]

"சாக்ஸன் அனுபவத்தை" கண்டித்தாகி விட்டது, பிரான்ட்லரை அகற்றியாகி விட்டது, அதன்பின் நிகழ்ச்சிநிரலின் அடுத்த வேலைக்கு தாவுவதை தவிரவும் வேறொன்றும் இருக்கவில்லை.

சினோவியேவ், அவருடன் பேரவையும் சேர்ந்து "பொதுவான அரசியல் முன்னோக்குகள் அடிப்படையில் முன் இருந்துபோலவே இருக்கின்றது. சூழலானது புரட்சியை தன் கர்ப்பத்தில் சுமந்து கொண்டிருக்கிறது. புதிய வர்க்கப் போராட்டங்கள் ஏற்கனவே மீண்டும் வெளிப்படத் தொடங்கி விட்டன. ஒரு பிரம்மாண்டமான போராட்டம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது ..." இன்னும் பல என குறிப்பிடுகின்றது. [13]

ஒரு சிறு பூச்சியை கஷ்டப்பட்டு காண்பதும் ஒரு ஒட்டகத்தை அனாயசமாக விழுங்குவதுமான இந்த "இடதுவாதம்" எவ்வளவு பலவீனமானதாகவும் நம்பிக்கைக்கு ஒவ்வாததாகவும் இருக்கிறது.

நிலைமை பற்றி மிகவும் விழிப்புடன் இருந்தவர்களும், அக்டோபர் தோல்வியின் முக்கியத்துவத்தை முன்னணிக்கு தள்ளியவர்களும், தவிர்க்க இயலாமல் அதனைத் தொடர்ந்து வருவதான புரட்சியின் வீழ்ச்சி மற்றும் முதலாளித்துவத்தின் (அதன் தொடர்ச்சியான அரசியல் விளைவுகளுடன்) தற்காலிக ஸ்திரப்படுத்தலுக்கான காலகட்டத்தை சுட்டிக் காட்டியவர்களை எல்லாம் ஐந்தாம் அகல்பேரவையின் தலைமையானது சந்தர்ப்பவாதிகள் என்றும் புரட்சியை கலைப்பவர்கள் என்றும் முத்திரையிட முயற்சித்தது. இதைத்தான் சினோவியேவ் மற்றும் புக்காரின் தங்கள் முக்கிய பணியாக அமைத்துக் கொண்டனர். ரூத் ஃபிஸ்சர், இவர்களுடன் சேர்ந்து கொண்டு முந்தைய ஆண்டின் தோல்வியை குறைத்து மதிப்பிட்டு, ரஷ்ய எதிர்ப்பினரில் "உலகப் புரட்சி முன்னோக்கின் இழப்பையும், ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய புரட்சியின் நெருங்கிவரும் தன்மையில் நம்பிக்கையின்மையையும், ஒரு ஐரோப்பிய புரட்சியின் கலைப்பையும், அதுபற்றிய உபயோகமற்ற அவநம்பிக்கை வாதத்தினையும், இன்னும் பலவற்றையும்" கண்டார்." [14]

தோல்விக்கு நேரடிக் காரணமாக குற்றம்சாட்டப்பட வேண்டியவர்கள் எல்லாம் தோல்விகளை வெற்றிகள் என்று காட்டுவதற்கு மறுத்த "கலைப்புவாதிகளுக்கு" எதிராக சத்தம் போட்டு கூக்குரலிட்டார்கள் என்பதை விளக்க வேண்டிய அவசியமேயில்லை. இவ்வாறு தான், பல்கேரிய கட்சியின் தோல்வியை ஒரு தீர்மானகரமானதான ஒன்றாகக் கருதும் தைரியம்மிக்க ராடெக்குக்கு எதிராக கோலரவ் பின்வருமாறு கர்ஜித்தார்:

"கட்சியின் தோல்விகள் ஜூனிலும் சரி அல்லது செப்டம்பரிலும் சரி தீர்மானகரமானதாக இருக்கவில்லை. பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியானது உறுதியாக நிற்கிறது, புதிய போராட்டங்களுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது." [15]

தோல்விகளுக்கான மார்க்சிச பகுப்பாய்வுகளுக்கு பதிலாக - பொறுப்பற்ற அதிகாரத்துவ வீண் ஆரவாரம்தான் எல்லா நிலைகளிலும் வெற்றி நடை போடுகிறது. இருப்பினும் போல்ஷ்விக் மூலோபாயம், அற்பமான தன்னைதானே திருப்திப்படுத்துகின்ற மற்றும் உயிரற்ற கோலாரோவியத்திற்கு பொருத்தமற்றது.

ஐந்தாம் உலக அகல்பேரவையின் பணிகளில் அநேகமானவை சரியானதும் அவசியமானவையுமாய் இருக்கின்றன. தலைதூக்க முயற்சித்த வலதுசாரி போக்குகளுக்கு எதிரான போராட்டம் முழுக்கவும் அவசரத்தேவையானவை. ஆனால் இந்தப் போராட்டம் நிலைமையின் அதீத தவறான ஒரு மதிப்பீட்டினால் பக்கவாட்டில் தள்ளப்பட்டது, குழப்பப்பட்டது மற்றும் திரிக்கப்பட்டது, இதன் விளைவாக எல்லாமே இடம் மாறி விட்டது, தெளிவாகப் பார்க்கக் கூடியவர்களும் நேற்று, இன்று, மற்றும் நாளைய நிகழ்வுகளை சரியாகக் காணக் கூடியவர்களும் வலது முகாமில் வகைப்படுத்தப்பட்டார்கள். மூன்றாம் உலக அகல்பேரவையில் அந்த நேரத்தின் இடதுகள் வெற்றி பெற்றிருப்பார்களானால், லெனினும் லெவி, க்ளாரா ஸெட்கின், மற்றும் வலதுசாரி குழுவின் பிறருடன் இதே காரணங்களுக்காக ஒன்றாக வகைப்படுத்தப்பட்டிருப்பார். ஐந்தாம் அகல்பேரவையின் தவறான அரசியல் நோக்குநிலையினால் உற்பத்தி செய்யப்பட்ட தத்துவார்த்த குழப்பமானது தொடர்ந்த புதிய பெரும் துரதிர்ஷ்டங்களுக்கு மூலமாக அமைந்து விட்டது.

அரசியல் துறையில் அகல்பேரவையால் கைக்கொள்ளப்பட்ட மதிப்பீடானது இதேபோன்று பொருளாதார தளத்திற்கும் முழுக்கவும் எடுத்துச் செல்லப்பட்டு விட்டது. ஜேர்மன் பூர்சுவாக்களின் பொருளாதார பலப்படுத்தலின் அறிகுறிகள், அவை ஏற்கனவே வெளிப்படையாக தெரிந்து விட்டிருந்த நிலையிலும், ஒன்று மறுக்கப்பட்டது அல்லது அலட்சியப்படுத்தப்பட்டு விட்டது. நடப்பில் ஆதிக்கம் செலுத்தம் அரசியல் போக்குகளை உறுதிப்படுத்தும் பொருளாதார உண்மைகளை வழங்கக் கூடிய வர்கா இந்த முறையும் ஒரு அறிக்கையில் "...முதலாளித்துவம் மீள்வதற்கான எந்த முன்னோக்குகளும்'' இல்லை எனக் கூறினார். [16]

ஆனால் ஒரு வருடத்திற்கு பின்னர், இந்த "மீட்சியானது" மிகத் தாமதமாக "ஸ்திரப்படுத்தல்" என்று நாமகரணம் சூட்டப் பெற்ற பின்னர், வர்கா கஷ்டப்பட்டு நிகழ்வுக்கு பின்னர் இந்த கண்டுபிடிப்பை செய்தார். அந்த நேரத்தில், எதிர்ப்பாளர்கள் ஏற்கனவே ஸ்திரப்படுத்தலை அங்கீகரிக்காத குற்றச்சாட்டின் கீழ் பொறுத்திருக்க வேண்டியதாகி விட்டது. ஏனென்றால் 1925ல் அவர்கள் ஏற்கனவே ஸ்திரப்படுத்தலை கீழறுக்கும் போக்குகளை தெளிவாய் உய்த்துணர்ந்ததால், அதன் ஆரம்பத்தை ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாக ஸ்தாபிக்கும் துணிச்சலை அது கொண்டிருந்தது. [17]

ஐந்தாம் அகல்பேரவையானது அரசியல் நிகழ்போக்குகளையும் தத்துவார்த்த அணிதிரளல்களையும், அவையெல்லாம் சிதைவுற்ற ஒரு கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்ட ஒரு போலியான நோக்குநிலையாக உணர்ந்து கொண்டு இது ரஷ்ய எதிர்ப்பினை "குட்டி முதலாளித்துவ விலகல்" என்று வகைப்படுத்திய தீர்மானம் நிறைவேற்ற வழிவகுத்தது. 1923ல் எதிர்ப்பின் மைய மூலக்கரு அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளிலும் சரியான நிலைப்பாடுகளுடனேயே இருந்திருந்தது என்பதை ஐந்தாம் அகல்பேரவையில் அரசு தரப்பு தலைமை வழக்கறிஞராக இருந்த சினோவியேவ் இரண்டு வருடங்கள் கழித்து ''பொதுவில்" ஒப்புக் கொள்ளும்படி செய்ததன் மூலம் இந்த தவறினை வரலாறு தனக்கே உரிய பாணியில் திருத்திக் கொண்டது.

ஐந்தாம் அகல்பேரவையின் அடிப்படையான மூலோபாய தவறில் இருந்துதான் ஜேர்மன் மற்றும் சர்வதேச சமூக ஜனநாயகத்திற்குள்ளே நிகழ்ந்து வந்த நடைமுறைகளை புரிந்து கொள்வதிலான பின்தங்கிய நிலையும் எழ வேண்டியதாயிற்று. அகல்பேரவையில் அதன் சிதைவு, சிதறல் மற்றும் வீழ்ச்சிக்கான பேச்சுக்கள் மட்டுமே இருந்தன. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி 3,700,000 வாக்குகளை பெற்ற கடைசி ரைஷ்ராக் (பாராளுமன்ற) தேர்தல் குறித்து சினோவியேவ் பின்வருமாறு கூறினார்:

"ஜேர்மனியின் பாராளுமன்ற களத்தில், 100 சமூக ஜனநாயகவாதிகளுக்கு 62 கம்யூனிஸ்டுகள் என்கிற விகிதத்தை நாம் கொண்டிருப்போமேயானால், இதுவே ஜேர்மனியின் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மையை வெல்வதில் நாம் எவ்வளவு நெருங்கி வந்திருக்கிறோம் என்பதை ஒவ்வொருவருக்கும் காட்டும் ஆதாரமாக இருக்கும்." [18]

நிகழ்வுப்போக்கின் இயக்கவியல் குறித்து சினோவியேவ் கொஞ்சம் கூடப் புரிந்து கொள்ளவில்லை; ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கமானது அந்த வருடமும் அதனைத் தொடர்ந்த வருடங்களிலும் வளர்ச்சியடையவில்லை மாறாக சரிந்திருந்தது. 3,700,000 வாக்குகளானது, 1923 இறுதிவாக்கில் ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்திடையே கட்சி கொண்டிருந்த தீர்மானகரமான செல்வாக்கின் ஒரு மனதைக் கவரும் எச்சத்தையே காட்டியது. வரவிருக்கும் தேர்தல்களிலும் சந்தேகத்திற்கிடமின்றி இந்த எண்ணிக்கை குறையவே செய்யும்.

இதனிடையே, 1923ல் கிழிந்த கோரைப் பாயைப் போல துண்டு துண்டாக சிதறவிருந்த சமூக ஜனநாயகமானது, 1923ன் இறுதியில் புரட்சியின் தோல்விக்கு பின்னர் திட்டமிட்டபடி மீண்டௌத்தொடங்கியது, முக்கியமாக கம்யூனிசத்தின் இழப்பின் மூலம் முளை விடவும், வளரவும் தொடங்கியது. நாம் இதனை முன்னரே தீர்க்கதரிசனமாய் கணித்திருந்தோம் எனும்போது - இதனைக் கணிப்பதில் ஒருவர் எவ்வாறு தவறியிருக்க முடியும்? - எமது கணிப்பினை நமது "அவநம்பிக்கையால்" விளைந்ததாக கூறினார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சமூக ஜனநாயகத்தின் மறுமலர்ச்சி என்பது தவிர்க்க இயலாமல் பின்தொடரும், சமூக ஜனநாயகத்திற்கு ஏற்கனவே கல்லறை கீதம் பாடிக் கொண்டிருந்த "நம்பிக்கைவாதிகள்" ஒட்டுமொத்தமாக தவறிழைக்கிறார்கள் என்று 1924 இன் தொடக்கத்தில் நாங்கள் பேசி வந்ததும் எழுதி வந்ததும் சரியே என்பதை நிரூபிப்பது, கடைசியாக 1928 மே மாதம் நடந்த தேர்தலில் சமூக ஜனநாயகவாதிகள் 9,000,000 இற்கு மேலான வாக்குகளைப் பெற்ற பின்னரும், இப்போதும் அவசியமாகவாபடுகிறது? எல்லாவற்றிற்கும் மேலே, கம்யூனிச அகிலத்தின் ஐந்தாம் அகல்பேரவை ஒட்டுமொத்தமாக தவறாகப் புரிந்து கொண்டிருந்தது.

முதுமையின் தளர்ச்சியால் ஏற்படும் பலவீனத்தின் அனைத்துக் கூறுகளிலும் காட்டப்படும், சமூக ஜனநாயகத்தின் இரண்டாவது இளமையானது, இயல்பாகவே நீடித்திருக்கவில்லை. சமூக ஜனநாயகத்தின் மறைவானது தவிர்க்க இயலாதது. ஆனால் மரிப்பதற்கு முன்னர் அது எவ்வளவு நாள் இருக்கும் என்பது எங்குமே ஸ்தாபிக்கப்படவில்லை. இதுவும் எங்களை சார்ந்தே உள்ளது. இன்னும் நெருக்கமாக காண்போமேயானால், உண்மைகளை எதிர்கொள்ள, அரசியல் சூழலின் திருப்புமுனைகளை சரியான சமயத்தில் அடையாளம் காண, தோல்வியை தோல்வி என்று அழைக்க, எதிர்வரும் நாளை குறித்து கணிக்க கற்றுக் கொள்ள நம்மால் முடியவேண்டும்.

ஜேர்மன் சமூக ஜனநாயகமானது இன்னமும் அதுவும் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக பல மில்லியன் கணக்கானவர்களை இன்றும் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு இரண்டு உடனடி காரணங்கள் உள்ளன. ஒன்று, 1923 இலையுதிர் காலத்தில் சரணாகதியுற்ற ஜேர்மன் கட்சியின் தோல்வி, மற்றும் இரண்டாவதாக, ஐந்தாம் அகல்பேரவையின் தவறான மூலோபாய நோக்குநிலை.

ஜனவரி 1924ல், கம்யூனிஸ்டுகளுக்கும் சமூக ஜனநாயக வாக்காளர்களுக்குமான விகிதம் ஏறக்குறைய 2 க்கு 3 என இருந்தது ஆனால் நான்கு மாதங்களுக்கு பின்னர் இந்த விகிதம் 1 க்கு 3 ஐ விட சற்று அதிகம் என்கிற நிலைக்கு மோசமாக சரிந்தது, வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மையை வெல்வதில் நாம் நெருங்கிச் செல்லவில்லை, மாறாக இன்னமும் விலகியே சென்றிருக்கிறோம். அதுவும், சந்தேகத்திற்கப்பாற்பட்ட வலிமையை நமது கட்சி கடந்த வருடத்தில் கண்டிருந்த போதிலும் சரியான கொள்கையுடன் பெரும்பான்மையை உண்மையாக வெல்வதற்கான ஒரு ஆரம்ப புள்ளியாக மாறத்தக்க, மற்றும் கட்டாயம் மாற வேண்டிய நிலையில் இருந்தபோதிலும் ஆகும்.

ஐந்தாம் அகல்பேரவையால் கைக்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டின் அரசியல் விளைவுகளை பின்னொரு சந்தர்ப்பத்தில் நாம் கருத்தூன்றி கவனிக்கலாம். ஆனால், நமது சகாப்தத்தின் அடிப்படை வளைகோட்டினை ஒட்டுமொத்தமானதாகவும் மற்றும் ஒவ்வொரு தருணத்திலும் வளைகோட்டின் தனித்தனி பகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கமுடியாத கட்சித் தலைமைக்கு, ரயில் பொறியாளருக்கு ரயில்பாதையின் வளைவுகள் போல், போல்ஷ்விக் மூலோபாயம் பற்றிய தீவிரமான பேச்சு இருக்க முடியாது என்பது ஏற்கனவே தெளிவாகி விடவில்லையா? வளைவான பாதையில் எரிபாருள் குழாயை அகலத் திறந்து விடுவது என்பது நிச்சயமாக ரயிலை வரப்புப் பாதையில் கொண்டு மோதுவதற்கான வழியேயாகும்.

இருந்தாலும், சில மாதங்களுக்கு முன்புதான் பிராவ்தா 1923ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே நாங்கள் செய்த மதிப்பீட்டின் ஏறக்குறைய தனித்துவமான மெய்த்தன்மையை ஒப்புக் கொள்ள வேண்டி வந்தது. ஜனவரி 28, 1928ல் பிராவ்தா எழுதியது:

"1923 தோல்விக்கு பின்னர் ஒரு குறிப்பிட்ட [!] அக்கறையின்மை மற்றும் சோர்வும் மற்றும் ஜேர்மன் மூலதனத்தை அதனது இடங்களில் உறுதிப்படுத்திக் கொள்ள அனுமதித்ததுமான வளர்ச்சிநிலை கடக்க தொடங்குகிறது."

1923 இலையுதிர் காலத்தில் உள்நுழைந்த "குறிப்பிட்ட" நெருக்கடிநிலையானது முதலில் 1928ல் தான் கடக்கத் தொடங்குகிறது. நான்கு வருடங்கள் தாமதித்து வெளியான இந்த வார்த்தைகள், ஐந்தாம் அகல்பேரவையால் ஸ்தாபிக்கப்பட்ட தவறான நோக்குநிலையின் மீதும், செய்த தவறுகளை வெளிப்படையாக காண்பிக்கவும் விளக்கவும் செய்யாமல், மாறாக அவற்றை மறைத்து அதன்மூலம் தத்துவார்த்த குழப்பத்தின் ஆரத்தை விரியச் செய்த தலைமை அமைப்பின் மீதுமான இரக்கமற்ற கண்டனமாகும்.

1923ன் நிகழ்வுகளையோ அல்லது ஐந்தாம் அகல்பேரவையின் அடிப்படை தவறையோ மதிப்பீடு செய்யாமல் கடந்து செல்லும் ஒரு வரைவு வேலைத்திட்டமானது ஏகாதிபத்திய சகாப்தத்தில் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர மூலோபாயத்தின் மீதான உண்மையான கேள்விகளுக்கு வெறுமனே முதுகைக் காட்டி விட்டுச் சென்று விடுகிறது.