line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 1: சர்வதேச புரட்சி வேலைத்திட்டமா அல்லது தனி ஒரு நாட்டில் சோசலிசத்திற்கான வேலைத்திட்டமா?

Print part 1on single page

9. இந்த பிரச்சனை உலகப் புரட்சிக்கான களத்தில் மட்டுமே தீர்க்கப்பட முடியும்


புதிய கொள்கை நெறியானது தலையீடு ஏதும் இல்லாமல் இருந்தால் மட்டுமே சோசலிச கட்டுமானம் தேசிய அரசின் அடிப்படையில் செய்யப்பட முடியும் என்று பிரகடனப்படுத்துகிறது. இதிலிருந்து, அந்நிய தலையீட்டை தவிர்க்கும் நோக்கத்தோடு அந்நிய பூர்சுவாக்களை நோக்கிய ஒரு ஒத்துழைப்புக் கொள்கையானது (வரைவு வேலைத்திட்டத்தின் அத்தனை பகட்டான அறிவிப்புகளும் எப்படியிருந்தாலும்) அங்கே பின்தொடர முடியும், கட்டாயம் பின்தொடரும். இது சோசலிசக் கட்டுமானத்திற்கு உறுதியளிப்பதால், அதாவது முக்கிய வரலாற்றுப் பிரச்சினையை தீர்க்கும். ஆகையால், கம்யூனிச அகிலத்தின் கட்சிகளின் பணியானது, ஒரு துணைப் பண்பை ஏற்றுக் கொள்கிறது; அவற்றின் இலக்கு, சோவியத் ரஷ்யாவை தலையீடுகளில் இருந்து பாதுகாப்பதே தவிர அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக போராடுவது அல்ல. உண்மையில், இது அகநிலை நோக்கங்கள் குறித்த கேள்வி அல்ல, மாறாக அரசியல் சிந்தனையின் புறநிலையான தர்க்கத்தின் விளைவு பற்றியதாகும்.
"இந்தப் பார்வைகளில் உள்ள வேறுபாடானது," ஸ்ராலின் கூறுகிறார், "இந்த [உள்] முரண்பாடுகள் மற்றும் சாத்தியமுள்ள மோதல்கள் எமது புரட்சியின் உள்ளார்ந்த சக்திகளின் அடிப்படையில் முழுக்கவும் வெல்லப்பட முடியும் என்று கட்சி கருதும் அதேவேளையில், தோழர் ட்ரொட்ஸ்கியும் மற்றும் பிற எதிர்ப்பினரும் இந்த முரண்பாடுகளும் மோதல்களும் 'சர்வதேச அளவில், உலகளாவிய பாட்டாளி வர்க்க புரட்சியின் களத்தில் மட்டுமே' வெல்லப்பட முடியும் என்று எண்ணுகின்றார்கள் என்னும் உண்மையில் தான் அமைந்திருக்கிறது". [39]
ஆம், துல்லியமாக இது தான் வேறுபாடு. தேசிய சீர்திருத்தவாதம் மற்றும் புரட்சிகர சர்வதேசியவாதத்திற்கு இடையிலான வேறுபாட்டை இதை விட மேம்பட்ட வகையிலும் சரியாகவும் ஒருவர் வெளிப்படுத்தி விட முடியாது. நமது உள் பிரச்சினைகள், தடைகள், மற்றும் முரண்பாடுகள் -இவையெல்லாம் அடிப்படையில் உலக முரண்பாடுகளின் பிரதிபலிப்புகள்- எல்லாம் "உலகளாவிய பாட்டாளி வர்க்க புரட்சியின் தளத்திற்குள்" நுழையாமலேயே "நமது புரட்சியின் உள்ளார்ந்த சக்திகளால்" வெறுமனே தீர்க்கப்பட முடியுமென்றால், பின்னர் அகிலமானது ஒரு பகுதியில் துணை அமைப்பாகவும், ஒரு பகுதியில் அலங்கார ஸ்தாபனமாகவும் இருக்கும், அதன் பேரவை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டப்படலாம், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்படலாம், அல்லது உண்மையில் கூட்டப்படாமலே கூடப் போகலாம். பிற நாடுகளின் பாட்டாளி வர்க்கமானது நமது கட்டுமானத்தை இராணுவத் தலையீடுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று நாம் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் கூட, இந்த திட்டத்தின்படி அகிலமானது ஒரு அமைதிவாத அமைப்பின் பங்கினை கட்டாயம் ஆற்றும். அதன்பின் அதன் முக்கிய பங்கு, அதாவது உலக புரட்சியின் ஒரு அமைப்பு என்ற பங்கு தவிர்க்க இயலாமல் பின்னணிக்கு தள்ளப்படும். திரும்பவும் சொல்கிறோம், இது யாருடைய திட்டமிட்ட நோக்கங்களினால் விளைந்ததல்ல (மாறாக, இந்த வேலைத்திட்டத்தின் ஏராளமான விஷயங்கள், அதன் ஆசிரியர்களின் மிகச் சிறந்த நோக்கங்களுக்கு கட்டியம் கூறுகிறது), ஆனால் இது மோசமான அகநிலைரீதியான உள்நோக்கங்களை விடவும் ஆயிரம் மடங்கு ஆபத்தான புதிய தத்துவார்த்த நிலைப்பாட்டின் உள்ளார்ந்த தர்க்கவியலில் இருந்து விளைவதாகும்.
உண்மையைச் சொல்லப் போனால், கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் ஏழாவது நிறை பேரவை கூட்டத்தில், ஸ்ராலின் பின்வரும் கருத்தை அபிவிருத்தி செய்து அதைப் பாதுகாக்கும் அளவுக்கு துணிச்சல் கொண்டார்:
"எமது கட்சிக்கு தொழிலாள வர்க்கத்தை முட்டாளாக்கும் [!] எந்த உரிமையும் கிடையாது; நமது நாட்டில் சோசலிசத்தை கட்டுமானம் செய்வதன் சாத்தியத்தில் உறுதியற்று இருப்பது [!], அதிகாரத் துறப்புக்கும், எமது கட்சியின் நிலையை ஒரு ஆளும் கட்சி என்பதில் இருந்து எதிர்க்கட்சி என்ற நிலைக்கு நகர்த்துவதற்கும் இட்டுச் செல்கிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்." [40]
இதன் பொருளானது, தேசிய பொருளாதாரத்தின் சொற்ப வளங்கள் மீது உறுதியை கொண்டிருக்க மட்டுமே நமக்கு உரிமை உள்ளது, மாறாக சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் வற்றாத வளங்களின் மீது எந்த உறுதியையும் கொண்டிருக்க நாம் துணியக் கூடாது என்பதாகும். ஒரு சர்வதேசப் புரட்சி இல்லாமல் நம்மால் நகர முடியாது என்றால், நமது அதிகாரத்தை விட்டு விட வேண்டியது தான், சர்வதேச புரட்சியின் நலன்களுக்காக நாம் வென்ற அக்டோபர் அதிகாரத்தை நாம் விட்டு விட வேண்டியது தான். முழுமுதல் தவறானதொரு சூத்திரப்படுத்தலில் இருந்து ஆரம்பித்தால் நாம் வந்து சேரக் கூடிய கருத்தியல் ரீதியான வீழ்ச்சியின் வகை தான் இது!
சோவியத் ரஷ்யாவின் பொருளாதார வெற்றிகளானது உலகளாவிய பாட்டாளி வர்க்க புரட்சியின் பிரிக்கவியலா ஒரு அங்கமாகிறது என்று கூறும்போது வரைவு வேலைத்திட்டமானது ஒரு கேள்விக்கப்பாற்பட்ட சிந்தனையை வெளிப்படுத்துகிறது. ஆனால் புதிய கருத்தாக்கத்தின் அரசியல் ஆபத்தானது அதன் உலக சோசலிசத்தின் இரண்டு நெம்புகோல்களான நமது பொருளாதார சாதனைகளுக்கான நெம்புகோல் மற்றும் உலகளாவிய பாட்டாளி வர்க்க புரட்சிக்கான நெம்புகோல் பற்றிய ஒரு தவறான ஒப்பீட்டு மதிப்பீட்டில் இருக்கிறது. ஒரு வெற்றிகரமான பாட்டாளி வர்க்க புரட்சி இல்லாமல், நம்மால் சோசலிசத்தை கட்ட முடியாது. ஐரோப்பிய தொழிலாளர்களும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பிற தொழிலாளர்களும் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார கட்டுமானத்திற்கான நெம்புகோல் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு சரியான தலைமை இல்லாமல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பலவீனமாகி விடும்; அதன் வீழ்ச்சியானது சர்வதேசப் புரட்சிக்கு பலத்த அடியாகி விடும், அதிலிருந்து பல வருடங்களுக்கு மீள்வது அதற்கு கடினமாகி விடும். ஆனால், சோசலிச உலகத்திற்கும் முதலாளித்துவ உலகத்திற்கும் இடையிலான முக்கிய வரலாற்று போராட்டமானது இரண்டாவது நெம்புகோலை, அதாவது உலக பாட்டாளி வர்க்க புரட்சியைச் சார்ந்து உள்ளது. சோவியத் யூனியனின் மலை போன்ற முக்கியத்துவம் அது உலகப்புரட்சியின் மோதலுக்கான அடித்தளமாக இருப்பதில் இருக்கிறதே தவிர, உலக புரட்சியில்லாமல் சுயாதீனமாக இது சோசலிசத்தை கட்டமைக்க முடியும் என்கிற அனுமானத்தில் இல்லை.
முழுக்கவும் எந்த சிந்தனையற்ற விதத்திலும், ஆதிக்க மனப்பான்மையின் உச்ச தொனியில், புக்காரின் ஒருமுறைக்கும் மேலாக நம்மைக் கேட்கிறார்:
"சோசலிசத்தை கட்டமைக்கும் பணியில், முன்நிபந்தனைகள், ஆரம்பப் புள்ளிகள், போதுமான அடித்தளம், இன்னும் குறிப்பிட்ட வெற்றிகள் கூட ஏற்கனவே இருக்கிறதென்றால், பின்னர் எல்லாமே 'தலைகீழாய் திரும்பும்' அந்த எல்லை எங்கு இருக்கிறது? அப்படி எந்த எல்லையும் இல்லை." [41]
இது தவறான கேத்திர கணிதமே தவிர, வரலாற்று இயங்கியல் அல்ல. அவ்வாறானதொரு "எல்லை" இருக்க முடியும். உள் மற்றும் சர்வதேச, அரசியல் மற்றும் பொருளாதார மற்றும் இராணுவ என்று இத்தகைய பல எல்லைகள் இருக்க முடியும். மிகவும் முக்கியமானதும் அச்சமூட்டக்கூடியதுமான "எல்லை" உலக முதலாளித்துவத்தின் தீவிர மற்றும் மிக நீண்ட ஸ்திரப்படுதலாகவும் மற்றும் ஒரு புதிய எழுச்சியாகவும் மாறலாம். இதன் விளைவாக, கேள்வி அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உலக தளத்துக்கு மாறுகிறது. பூர்சுவாக்கள் தங்களுக்கு ஒரு முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் அதிகாரத்தின் ஒரு புதிய சகாப்தத்தினை பாதுகாத்துக் கொள்ள முடியுமா? முதலாளித்துவம் இருக்கும் "நம்பிக்கையற்ற நிலையை' மனதில் கொண்டு, இத்தகையதொரு சாத்தியக் கூறினை வெறுமனே மறுப்பது, வெறுமனே புரட்சிகர வார்த்தைகளின் சொல்லாடலாகத் தான் இருக்கும். "முழுக்கவும் நம்பிக்கையற்ற சூழல்கள் எதுவும் இல்லை" (லெனின்). ஐரோப்பிய நாடுகளில் தற்போது இருக்கும் உறுதியற்ற வர்க்க சமபலநிலை இந்த முக்கியமான துல்லியமான நிலையற்ற தன்மையின் காரணமாக காலவரையின்றி தொடர முடியாது.
ஏனைய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் "அரசு" உதவியின்றி, அதாவது, பூர்சுவாக்கள் மீதான அதன் வெற்றியின்றி, சோவியத் ரஷ்யா நிலைக்கமுடியும், ஏனென்றால் தொழிலாள வர்க்கத்தின் தற்போதைய தீவிரமான அனுதாபம் நம்மை தலையீட்டில் இருந்து பாதுகாக்கிறது என்று ஸ்ராலினும் புக்காரினும் தொடர்ந்து சொல்லும்போது, அவர்களது முக்கிய தவறின் ஒட்டுமொத்த சிக்கல்களில் வெளிப்படுவதை போன்றதொரு அதே அறியாமைக்கு அவர்கள் தவறாக வழிகாட்டுகிறார்கள்.
பூர்சுவாக்களுக்கு எதிரான ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் போருக்கு பிந்தைய எழுச்சிகளை சமூக ஜனநாயகமானது நாசம் செய்த பின்னர், உழைக்கும் மக்கள் திரளின் செயலூக்கமான அனுதாபம் தான் சோவியத் குடியரசை காப்பாற்றியது என்பது முற்றிலும் மறுக்கமுடியாததாகும். இந்த வருடங்களின் போது, ஐரோப்பிய பூர்சுவாக்கள் தொழிலாளர் அரசுக்கு எதிராக மிகப்பெரும் அளவில் போர் நடத்த இயலாததை நிரூபித்தனர். ஆனால் சக்திகளின் சமநிலையானது பல ஆண்டுகளுக்கு, ஒரு பேச்சுக்கு சோவியத் ரஷ்யாவில் சோசலிச கட்டுமானம் செய்யப்படும் வரை என்று வைத்துக் கொள்ளலாம், நீடிக்கும் என்று எண்ணுவது, வளர்ச்சியின் ஒட்டுமொத்த நீண்ட வளைவையும் அதன் மிகச் சிறுபிரிவுகளின் மூலம் கணக்கிடுவதான முழுமுதல் குறுகிய கண்ணோட்டத்தை ஒத்ததாகும். தங்களது சொந்த வீட்டிற்கு தாம்தான் எஜமானர் என்று பூர்சுவாக்கள் உறுதியாக நம்பாதிருக்கும் வரை, பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்ற உறுதியற்ற ஒரு சூழ்நிலையானது உடனடியாகவோ அல்லது சில காலம் கழித்தோ திடீரென்று ஒருவழியிலோ அல்லது மற்றொரு வழியிலோ தீர்வு காணப்பட்டாக வேண்டும். அதாவது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு ஆதரவாகவோ அல்லது பொதுமக்கள் முதுகின் மீது, காலனித்துவ மக்களின் முதுகின் மீது மற்றும் நமது சொந்த முதுகுகளின் மீதே கூட, சுமத்தப்படக் கூடிய ஒரு தீவிரமான நீண்ட முதலாளித்துவ ஸ்திரப்படுத்தலூடாகவே தீர்மானிக்கப்படும். "முழுக்கவும் நம்பிக்கையற்ற சூழல்கள் எதுவும் இல்லை!" பாட்டாளி வர்க்கத்தின் தோல்விகள் மற்றும் புரட்சிகர தலைமைகளின் தவறுகள் இவற்றின் வழி மட்டும் தான் ஐரோப்பிய பூர்சுவாக்கள் தனது ஆழமான முரண்பாடுகளில் இருந்து தப்பிப்பதற்கான நீடித்திருக்கும் வழியைக் காண முடியும். அதேசமயம் இதற்கு மாறான கூற்றும் சம அளவு உண்மையாகவே இருக்கிறது. புரட்சிகர பாதையில் தற்போதைய நிலையற்ற சமபலநிலையில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியை பாட்டாளி வர்க்கம் கண்டறிய முடியும் நிலையில் மட்டுமே உலக முதலாளித்துவத்தின் புதிய செழுமை (நிச்சயமாக, பெரும் எழுச்சிகளின் ஒரு புதியதொரு சகாப்தத்திற்கான வாய்ப்பு வளத்துடன்) எதுவும் இருக்காது.
ஜூலை 19, 1920ல் இரண்டாம் உலகப் பேரவை மாநாட்டில் லெனின் கூறுகிறார், "புரட்சிகர கட்சிகளின் நடைமுறைப் பணிகள் மூலம், அவர்கள் போதுமான அளவு விழிப்புணர்வுடனும் ஒருங்கிணைப்புடனும் இருக்கிறார்கள், அவர்களுக்கு சுரண்டப்படும் மக்களுடன் போதுமான அளவு தொடர்பும், இந்த நெருக்கடியை ஒரு வெற்றிகரமான மற்றும் வாகை சூடும் புரட்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும் உறுதியும் திறனும் இருக்கிறது என்று 'நிரூபிப்பது' இப்போது அவசியமாகிறது." [42]
இருப்பினும், ஐரோப்பிய மற்றும் உலகப் போராட்டங்களை நேரடியாக சார்ந்திருக்கும் நமது உள்முரண்பாடுகளானது, மார்க்சிச தூரதிருஷ்டியின் அடிப்படையிலான ஒரு சரியான உள்ளார்ந்த கொள்கையின் மூலமாக நியாயமான முறையில் கட்டுப்படுத்தப்படவும் தணிக்கப்படவும் இயலக்கூடும். ஆனால் இவை வர்க்க முரண்பாடுகள் வெல்லப்படும்போது மட்டுமே இறுதியாக வெல்லப்பட முடியும், ஐரோப்பாவில் ஒரு வெற்றிகரமான புரட்சியின்றி இது கேள்விக்கப்பாற்பட்டது. ஸ்ராலின் கூறியது சரியே. வித்தியாசம் துல்லியமாக இந்த விஷயத்தில் தான் அடங்கியிருக்கிறது மற்றும் இது தான் தேசிய சீர்திருத்தவாதம் மற்றும் புரட்சிகர சர்வதேசியவாதத்திற்கு இடையிலான அடிப்படை வேறுபாடாகும்.