line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 
கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 1: சர்வதேச புரட்சி வேலைத்திட்டமா அல்லது தனி ஒரு நாட்டில் சோசலிசத்திற்கான வேலைத்திட்டமா?

Print part 1on single page

5. கட்சியின் தத்துவார்த்த மரபு


ரைவு வேலைத்திட்டமானது, அதன் முகப்பு மேற்கோளில், தனி ஒரு நாட்டில் ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டமைப்பது குறித்த பிரச்சினையின் மீதான விவாதத்தின் போது, "தனி ஒரு நாட்டில் சோசலிசத்தின் வெற்றி" எனும் பதத்தை வேண்டுமென்றே பயன்படுத்துகிறது, இதன் மூலம் அதன் உரைக்கும், 1915ம் ஆண்டின் லெனின் கட்டுரைக்கும் (இது கிரிமினலாக என்று கூறாவிட்டாலும் ஈவிரக்கமில்லாமல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது) இடையேயான ஒரு வெளிப்புறமான மற்றும் முழுக்க வார்த்தைகள் அடிப்படையிலான ஒற்றுமையை பாதுகாக்க முயல்கிறது. லெனினின் வார்த்தைகளை உறுதிச்சான்றாக குறிப்பிடுவதன் மூலம் வரைவானது இதே முறையை வேறு பல இடங்களிலும் பின்பற்ற முயல்கிறது. இந்த லட்சணத்தில் தான் விஞ்ஞானபூர்வமான "வரைவின் வழிமுறைகள்" இருக்கின்றன.
மார்க்சிச இலக்கியம் எனும் பெரும் சொத்து மற்றும் லெனின் படைப்புகள் எனும் புதையல் இவற்றில் இருந்து --லெனின் பேசிய மற்றும் எழுதிய அனைத்தையும் மற்றும் அவர் செய்த அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, கட்சி வேலைத்திட்டம் மற்றும் இளம் கம்யூனிஸ்ட் லீக்கின் வேலைத்திட்டம் இவற்றைப் புறக்கணித்துவிட்டு, பிரச்சினை திட்டவட்டமாக முன்வைக்கப்பட்டபோது, விதிவிலக்கில்லாமல் அனைத்துக் கட்சி தலைவர்களாலும் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை புறக்கணித்து விட்டு (அதுவும் எவ்வளவு திட்டவட்டமாக!), வேலைத்திட்டத்தின் ஆசிரியர்களான, ஸ்ராலின் மற்றும் புக்காரினே கூட, 1924ம் ஆண்டு வரை அந்த ஆண்டும் சேர்த்து, என்ன கூறினார்கள் என்பதைப் புறக்கணித்து விட்டு-- இரண்டு மேற்கோள்கள், இரண்டுமே லெனின் கூறியது, ஒன்று 1915ல் ஐக்கிய ஐரோப்பிய ஐக்கிய குடியரசு குறித்து அவர் எழுதிய கட்டுரையில் இருந்தும், மற்றொன்று 1923ல் எழுதப்பட்ட மரணத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட கூட்டுறவு மீதான அவரது நிறைவு பெறாத படைப்பில் இருந்தும் எடுக்கப்பட்டு, தேசியவாத சோசலிச தத்துவத்திற்கு ஆதரவாக, இது 1924ம் ஆண்டின் இறுதியில் அல்லது 1925ம் ஆண்டின் ஆரம்பத்தில் "ட்ரொஸ்கிசம்" என்று சொல்லப்படுவதற்கு எதிரான போராட்ட அவசரத் தேவைகளை எதிர்கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டடு, பயன்படுத்தப்பட்டுள்ளது. மார்க்சிசம் மற்றும் லெனினிசத்துடனும் மற்றும் ஒரு சில வரிகளை கொண்ட இந்த இரண்டு மேற்கோள்களுடன் முரண்படும் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இந்த இரண்டு செயற்கையாக அர்த்தம் கொள்ளப்பட்ட மற்றும் ஒட்டுமொத்தமாக இரண்டாம்தரமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மேற்கோள்கள் தான், தனது அரசியல் விளைவுகளின் பார்வையில் வரையறையற்றதாக இருக்கும் புதிய மற்றும் முழுமையான மறுபார்வை கருத்தாக்கத்திற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. புலமைவாதம் மற்றும் சொற்புரட்டு ஆகிய வழிமுறைகள் மூலம் மார்க்சிச அடிமரத்ததிற்கு முற்றிலும் ஒரு அந்நியமான கிளையினை ஒட்டவைப்பதற்கான முயற்சிகளைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு ஒட்ட வைக்கப்பட்டால், அது தவிர்க்கமுடியாமல் நச்சூட்டப்பட்டு முழு மரத்தையும் அழித்து விடும்.
கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் ஏழாவது நிறை பேரவை மாநாட்டில், ஸ்ராலின் அறிவித்தார் (முதன்முறையாக அல்ல): "தனி ஒரு நாட்டில் சோசலிச பொருளாதாரத்தை கட்டமைப்பது குறித்த கேள்வி கட்சியில் முதன்முறையாக 1915ம் ஆண்டிலேயே லெனினால் முன்வைக்கப்பட்டது." [15]
இவ்வாறாக, தனி ஒரு நாட்டில் சோசலிசம் பற்றிய கேள்வி குறித்து 1915 க்கு முன்னதாக எங்கும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்று ஒரு ஒப்புதல் இங்கு மேற்கொள்ளப்பட்டு விட்டது. எர்கோ, ஸ்ராலின் மற்றும் புக்காரின் பாட்டாளி வர்க்க புரட்சியின் சர்வதேசத் தன்மை குறித்த கேள்வியில் மார்க்சிசம் மற்றும் கட்சியின் முழுப் பாரம்பரியத்திற்குள்ளும் உட்புக முயற்சி செய்யவில்லை. இதனை நாம் மனதில் கொள்வது அவசியம்.
எவ்வாறாயினும், "முதன்முறையாக" 1915ம் ஆண்டில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், மற்றும் லெனினே கூட முன்னர் கூறியிருந்ததற்கு முரணாக லெனின் என்ன கூறினார் என்பதை பார்க்கலாம்.
1915ல் லெனின் கூறினார்: "சமச்சீரற்ற பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியானது முதலாளித்துவத்தின் ஒரு நிபந்தனையற்ற விதியாகும். எனவே, சோசலிசத்தின் வெற்றியானது, ஒரு சில அல்லது தனி ஒரு முதலாளித்துவ நாட்டிலும் கூட தொடக்கநிலையாய் சாத்தியம் என்று அது தொடர்கிறது. அந்த நாட்டின் வெற்றிகரமான பாட்டாளி வர்க்கமானது, முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து, சொந்த நாட்டில் சோசலிச உற்பத்தியை ஒழுங்கமைக்கும், பிற முதலாளித்துவ உலகத்திற்கு எதிராக, பிற நாடுகளின் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு, அந்த நாடுகளில் முதலாளிகளுக்கு எதிராக கிளர்ச்சிகளை உருவாக்கும், தேவைப்பட்டால், சுரண்டும் வர்க்கங்கள் மற்றும் அவர்களது அரசாங்கங்களுக்கு எதிராக இராணுவ சக்தியுடன் செயல்படும்." [16]
லெனினுக்கு மனதில் என்ன இருந்தது? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கட்டமைப்பது என்கிற பொருளில் மட்டுமே முதலில் தனி ஒரு நாட்டில் மட்டும் சோசலிசத்தின் வெற்றியானது சாத்தியம், இக்காரணத்தினால் மட்டும் அது முதலாளித்துவ உலகுக்கு எதிராக நிற்கமுடியும் என்பது தான். பாட்டாளி வர்க்க தேசமானது, தாக்குதலை எதிர்க்கும் திறன் பெறவும் தன்னை ஒரு புரட்சிகர எதிர்ப்புக்கு தயார்ப்படுத்திக்கொள்ளவும், முதலில் "சொந்த நாட்டில் சோசலிச உற்பத்தியை ஒழுங்கமைக்க வேண்டும்," அதாவது, முதலாளிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆலைகளின் செயல்பாட்டை ஒழுங்கமைக்கவேண்டும். அவ்வளவு தான். இது போன்றதொரு "சோசலிசத்தின் வெற்றியானது", நாம் காண்பது போல், முதலில் ரஷ்யாவில் சாதிக்கப்பட்டது, மற்றும் முதலாவது தொழிலாளர்களின் தேசமானது, உலக தலையீட்டில் இருந்து தன்னைக் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், எல்லாவற்றிற்கும் முதலில் "உள் நாட்டில் சோசலிச உற்பத்தியை ஒருங்கிணைக்க வேண்டும்," அல்லது "ஒரு சோசலிச தன்மையை" மட்டும் கொண்ட அமைப்புகளை (Trust) உருவாக்க வேண்டும்." தனி ஒரு நாட்டில் சோசலிசத்தின் வெற்றியின் மூலம், லெனின் ஒரு தன்னிறைவு பெற்ற சோசலிச சமுதாயம் பற்றி, அதிலும் ஒரு பின்தங்கிய நாட்டில், கற்பனைகளை உருவாக்கவில்லை, மாறாக இன்னும் யதார்த்தமானதான, அக்டோபர் புரட்சியானது நமது நாட்டில் அதன் இருப்பின் முதல் காலத்தில் சாதித்ததைப் போன்ற ஒன்றினைத் தான் அவர் சிந்தித்தார்.
இதற்கு சான்று அவசியப்படுகிறதா? ஏராளமான சான்றுகளை முன்வைக்க முடியும், அதில் சிறந்ததை தேர்வு செய்வது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம்.
போரும் சமாதானமும் (ஜனவரி 7, 1918) குறித்த அவரது ஆராய்ச்சி அறிக்கையில் லெனின் "ரஷ்யாவில் சோசலிசத்தின் வெற்றிக்கு, குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுவது, குறைந்த பட்சம் சில மாதங்களாவது" பேசுகிறார்[17]
அதே ஆண்டின் ஆரம்பத்தில், அதாவது 1918 இல், லெனின் புக்காரினுக்கு எதிராக எழுதப்பட்ட "இடதுசாரி இளம்பருவகோளாறும் குட்டிமுதலாளித்துவ போக்குகளும்," என்னும் கட்டுரையில் பின்வருமாறு எழுதினார்: "உதாரணமாக, அரச முதலாளித்துவமானது நமது நாட்டில் ஆறுமாதங்களுக்குள் கட்டமைக்கப்பட முடியுமென்றால், அது ஒரு மிகப் பெரும் சாதனையாக அமையும் என்பதோடு, ஒரு ஆண்டிற்குள் சோசலிசத்தை நிச்சயமாகக் கட்டமைக்கப்படும் மற்றும் வெல்லப்படமுடியாததாகவும் ஆகும் என்பதற்கான உறுதியான அத்தாட்சியாகவும் அமையும்." [18]
"சோசலிசத்தின் உறுதியான கட்டமைப்பிற்கு" இவ்வளவு ஒரு குறைந்த கால அவகாசத்தை லெனின் எவ்வாறு நிர்ணயித்தார்? இந்த வார்த்தைளில் அவர் பொதித்த சடத்துவரீதியான உற்பத்தி மற்றும் சமுதாய ரீதியான உள்ளடக்கம் என்ன?
1918, ஏப்ரல் 29ல் சோவியத் அரசின் அனைத்து-ரஷ்ய மத்திய நிர்வாக கமிட்டிக்கு அளித்த அறிக்கையில் லெனின் கூறியிருந்ததை நினைவு கூர்ந்தால், இதே கேள்வி உடனே ஒரு மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளிக்கும். "நமது அடுத்த தலைமுறையானது, அது மிகவும் வளர்ச்சியடைந்ததாக இருக்கும், சோசலிசத்திற்கான ஒரு முழுமையான மாற்றத்தை தோற்றுவிக்கும் என்று எதிர்பார்ப்பது அரிதாய் இருக்கும்." [19]
டிசம்பர் 3, 1919ல், தன்னாட்சி நகர்மன்றங்கள் மற்றும் ரஷ்ய தொழிலாளர் கழகங்களின் மாநாட்டில் லெனின் இன்னும் வெளிப்படையாக கூறினார்: "நடப்புக் காலத்தில் ஒரு சோசலிச ஒழுங்கினை கட்டமைக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். நமது குழந்தைகள் மற்றும் இன்னும் சொல்லப் போனால் நமது பேரக் குழந்தைகள் அதனைக் கட்டமைக்க முடியும் என்றால் மிகநன்றாக இருக்கும்." [20]
இந்த இரண்டு வாதங்களில் லெனின் சரியாகக் கூறியது எது? பன்னிரண்டு மாதங்களுக்குள் "சோசலிசத்தின் உறுதியான கட்டமைப்பு" குறித்து அவர் பேசிய பொழுதா, அல்லது "சோசலிச ஒழுங்கினை கட்டமைக்கும் பணி" யினை நமது குழந்தைகளிடம் கூட அல்ல நமது பேரக் குழந்தைகளிடம் அவர் விட்டு விட்ட பொழுதா?
இரண்டு சந்தர்ப்பங்களிலுமே லெனின் சரியாகத் தான் பேசினார், சோசலிசக் கட்டமைப்பின் ஒப்பிட முடியாத முற்றிலும் மாறுபட்ட இரண்டு வெவ்வேறு நிலைகளை அவர் மனதில் கொண்டிருந்தார்.
முதல் தரப்பில் அவர் "சோசலிசத்தின் ஒரு நிச்சயமான கட்டமைப்பு" என்று கூறியபோது, ஒரு ஆண்டு காலத்திற்குள்ளாகவோ அல்லது "பல மாதங்களுக்குள்ளோ" ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டமைக்கும் பொருளில் அவர் கூறவில்லை, அதாவது வர்க்கங்கள் இல்லாமல் போய் விடும், நகரத்திற்கும் கிராமங்களுக்குமான முரண்பாடுகள் காணாமல் போய் விடும் என்றெல்லாம் அவர் பொருள் கொள்ளவில்லை, அவர் கூறிய பொருளானது பாட்டாளி வர்க்க அரசாங்கத்தின் கரங்களில் ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை மீளமைப்பது, அதன்மூலம் நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான உற்பத்திப் பொருட்கள் பரிமாற்ற வாய்ப்பினை உறுதி செய்வது ஆகியவை தான். அவர் கொடுத்திருக்கும் மிகக் குறுகிய கால அவகாசமே அவர் கூறியதன் முழு முன்னோக்கினையும் புரிந்து கொள்வதற்கான ஒரு திறவுகோலாக இருக்கிறது.
இந்த அடிப்படையான பணிக்கே கூட, 1918ன் ஆரம்பத்தில் வெகு குறுகிய கால அவகாசமே வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மை தான். நடைமுறைரீதியில் இந்த முழுக்க முழுக்க "தவறான கணக்கையே" சர்வதேச அகிலத்தின் நான்காவது பேரவையில் "நாம் இப்போது இருப்பதை விடவும் முன்பு மிகவும் முட்டாள்தனத்துடன் இருந்தோம்" என்று லெனின் கேலி செய்தார். ஆனால் "பொதுவான முன்னோக்கில் நமக்கு சரியானதொரு பார்வை இருந்தது, அத்தோடு பன்னிரண்டு மாதங்களுக்குள்ளாக ஒரு முழுமையான 'சோசலிச ஒழுங்கை' நிறுவுவதற்கான சாத்தியம் குறித்து, அதிலும் ஒரு பின்தங்கிய நாட்டில், ஒரு கணம் கூட நாங்கள் நம்பவில்லை." ஒரு 'சோசலிச சமுதாயத்தை கட்டமைக்கும் இந்த முதன்மையான மற்றும் இறுதியான இலக்கினை அடைவதை லெனின் முழுமையாக மூன்று தலைமுறைகளிடம் --நாம், நமது குழந்தைகள், மற்றும் நமது பேரக் குழந்தைகள்-- விட்டு விட்டார்.
1915ம் ஆண்டின் தனது கட்டுரையில், "'சோசலிச உற்பத்தி" ஒருங்கிணைப்பு என்று லெனின் குறிப்பிட்டது, ஒரு 'சோசலிச சமுதாயத்தின் உருவாக்கம் குறித்து அல்ல, மாறாக இன்னும் அளவிடமுடியாத அளவு அடிப்படையான, ஏற்கனவே சோவியத் ரஷ்யாவில் நனவான ஒரு பணியைத் தான் என்பது தெளிவாகத் தெரியவில்லையா? அப்படி இல்லையென்றால், லெனினை பொறுத்தவரை, பாட்டாளி வர்க்க கட்சியானது, அதிகாரத்தைக் கைப்பற்றிய நிலையில், மூன்றாவது தலைமுறை வரை புரட்சி யுத்தத்தை "ஒத்திப் போடுகிறது" என்றொரு அசட்டுத்தனமானதொரு எண்ணத்தைத் தான் ஒருவர் கொள்ள வேண்டியிருக்கும்.
1915 மேற்கோளைப் பொறுத்த வரை, புதிய தத்துவத்தின் முக்கிய அம்சமானது இவ்வளவு பரிதாபத்திற்குரிய நிலையில் தான் இருக்கிறது. இருந்தாலும், இன்னும் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், ரஷ்யாவில் பயன்படுத்தும் நோக்கில் இந்த பத்தியை லெனின் எழுதவில்லை என்பது தான். ரஷ்யாவிற்கு மாறாக அவர் ஐரோப்பா குறித்து பேசுகிறார். இது, ஐரோப்பிய ஐக்கிய குடியரசு குறித்த கேள்விக்கு அர்ப்பணிக்கப்பட்ட மேற்கோளிடப்பட்ட கட்டுரை என்பது உள்ளடக்கத்தில் இருந்து மட்டுமல்லாமல், அந்த சமயத்தில் லெனின் எடுத்த முழுமையான நிலையில் இருந்தும், அறியப்படுகிறது. சில மாதங்கள் கழித்து, நவம்பர் 20, 1915ல், லெனின் குறிப்பாக ரஷ்யாவை குறித்து இவ்வாறு எழுதுகிறார்:
"பாட்டாளி வர்க்க பணியானது இந்த உண்மையான நிலைமையில் இருந்து தான் தொடர்கிறது என்பது வெளிப்படை. இந்தப் பணியானது அரசராட்சிக்கு எதிரான ஒரு தைரியமான, வீரமிக்க ஒரு புரட்சிகரப் போராட்டம் ஆகும் (1912 ஜனவரி மாநாட்டின் கோஷங்கள் - 'மூன்று திமிங்கலங்கள் பற்றியது), அனைத்து ஜனநாயக மக்களையும் கவர்ந்திழுத்து, அதாவது முதலாவதும் முதன்மையானதுமாக விவசாயிகளை ஈர்க்கக் கூடிய ஒரு போராட்டமாகும். அதே சமயத்தில், சோவனிசத்திற்கு எதிராக ஐரோப்பாவில் அதன் பாட்டாளி வர்க்கத்துடன் கூட்டணி வைத்து ஒரு சோசலிசப் புரட்சிக்கான ஒரு தடுமாற்றமற்ற போராட்டமானது நடத்தப்பட வேண்டும். விவசாயிகள் உள்ளிட்ட குட்டி முதலாளித்துவ தட்டுக்களை இடதுசாரிகள் நோக்கி உந்தக் கூடிய பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளை போர் நெருக்கடி வலுப்படுத்தியிருக்கிறது. இங்கு தான் ரஷ்யாவில் ஜனநாயக புரட்சியின் வெற்றிக்கான முழுமுதல் சாத்தியத்தின் புறநிலையான அடித்தளம் இருக்கிறது. மேற்கு ஐரோப்பாவில் ஒரு சோசலிச புரட்சிக்கான புறநிலை நிலைமைகள் முழுமையாக முதிர்ச்சியடைந்திருக்கிறது என்பது, போருக்கு முன் அனைத்து முன்னேறிய நாடுகளின் ஆளுமைமிக்க சோசலிஸ்டுகளால் உணரப்பட்டிருந்தது." [21]
இவ்வாறாக, 1915ம் ஆண்டில், ரஷ்யாவின் ஜனநாயகப் புரட்சி குறித்தும் மேற்கு ஐரோப்பாவில் ஒரு சோசலிச புரட்சி குறித்தும் லெனின் தெளிவாகப் பேசினார். அவ்வாறு பேசுகையில், பட்டவர்த்தனமான ஒன்றினைப் போல அவர், மேற்கு ஐரோப்பாவில் ரஷ்யாவில் இருந்து வேறுபட்டு, ரஷ்யாவிற்கு மாறாக ஒரு சோசலிச புரட்சிக்கான சூழல்கள் "முழு முதிர்ச்சி" பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் புதிய தத்துவத்தின் படைப்பாளிகளான வரைவுத் வேலைத்திட்டத்தின் ஆசிரியர்களோ ரஷ்யாவை வெளிப்படையாகவும் நேரடியாகவும் குறிப்பிடும் இந்த மேற்கோளை --பலவற்றில் இதுவும் ஒன்று-- நூற்றுக்கணக்கான பிற பத்திகளை புறக்கணித்ததைப் போல, லெனினின் அனைத்து படைப்புகளையும் புறக்கணித்ததைப் போல வெறுமனே புறக்கணித்து விட்டனர். இதனைக் கவனிப்பதற்குப் பதிலாக இவர்கள், நாம் ஏற்கனவே கண்டதைப் போல, மேற்கு ஐரோப்பாவை குறிப்பிடும் மற்றொரு பத்தியில் இருந்து எடுத்துக் கொண்டு, அதற்கு அது கொண்டிருக்க முடியாத மற்றும் கொண்டிராத அர்த்தத்தைப் புனைந்து கொண்டு, அந்த புனைவு அர்த்தத்தை ரஷ்யாவுக்கு அதாவது பத்தி எந்த குறிப்பும் கொண்டிராத ஒரு நாட்டிற்கு இணைத்து, அந்த "அடித்தளத்தின்" மேலாக அவர்களது புதிய தத்துவத்தை உருவாக்குகின்றனர்.
அக்டோபர் காலத்திற்கு உடனடி முன்னதாக இந்த கேள்வியின் மீது லெனினின் நிலை என்னவாக இருந்தது? பெப்ரவரி 1917 புரட்சிக்கு பின்னர், சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறும் போது, சுவிஸ் தொழிலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் லெனின் இவ்வாறு அறிவிக்கிறார்:
"ரஷ்யா ஒரு விவசாய நாடு, ஐரோப்பாவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்று. அங்கே சோசலிசம் உடனடியாக வெற்றி பெற்று விட முடியாது, ஆனால் இந்த நாட்டின் விவசாய தன்மை காரணமாகவும், ஏராளமான விவசாய நிலங்கள் நிலப்பிரபுத்துவ மேற்குடியினரிடமும், நிலச்சுவாந்தர்களிடமும் அகப்பட்டிருக்கும் நிலையில், 1905ம் ஆண்டின் அனுபவத்தில் பார்க்கும்போது, ரஷ்யாவின் முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக்கு ஒரு சக்திவாய்ந்த உந்துவேகத்தை அளிக்க முடியும் என்பதோடு, நமது புரட்சியை உலக சோசலிசப் புரட்சிக்கான ஒரு முன்நிகழ்வாகவும் அதனை நோக்கிய ஒரு படியாகவும் ஆக்க முடியும்... ரஷ்ய பாட்டாளி வர்க்கமானது அதன் சொந்த சக்திகளின் மூலம் சோசலிச புரட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட முடியாது. ஆனால் இது ரஷ்ய புரட்சிக்கு பரிமாணங்கள் அளிக்க முடியும், இவை புரட்சிக்கான மிகவும் சாதகமான சூழல்களை உருவாக்குவதோடு, ஒரு அர்த்தத்தில் பார்த்தால் உண்மையில் புரட்சியை ஆரம்பிக்கிறது. அதன் முக்கிய மற்றும் மிகவும் நம்பிக்கைக்குகந்த கூட்டாளியான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சோசலிச பாட்டாளி வர்க்கத்தின் சார்பாக, ஒரு தீர்மானகரமான யுத்தத்திற்குள் நுழைவதற்கு இது விஷயங்களுக்கு துணைபுரிய முடியும்." [22]
கேள்வியின் அனைத்து அம்சங்களும் இந்த சில வரிகளில் அடங்கியிருக்கின்றன. இப்போது இவர்கள் நம்மிடம் சமாதானம் சொல்வது போல், 1915ம் ஆண்டு, போர் மற்றும் பிற்போக்கு காலகட்டத்தில், ரஷ்ய பாட்டாளி வர்க்கமானது சோசலிசத்தை தானே கட்டமைத்துக் கொள்ள முடியும், இந்தப் பணியை அது நிறைவு செய்த பின், பூர்சுவா அரசுகளின் மீது போர் அறிவிப்பு செய்ய இயலும் என்று லெனின் நம்பியிருந்தார் என்றால், 1917ம் ஆண்டின் தொடக்கத்தில், பிப்ரவரி புரட்சி முடிந்த பின்னர், பின்தங்கிய விவசாய நாடான ரஷ்யா தனது சொந்த சக்திகளால் சோசலிசத்தை கட்டமைப்பதன் சாத்தியமின்மை குறித்து எவ்வாறு திட்டவட்டமாகக் கூறியிருப்பார்? பேசுபவர்களிடம் கொஞ்சமாவது தர்க்க ரீதியான பொருத்தம் கட்டாயம் இருக்க வேண்டாமா, இன்னும் வெளிப்படையாக கூறுவதென்றால், லெனினுக்கு கொஞ்சமாவது மரியாதை அளிக்க வேண்டாமா.
இன்னும் மேற்கோள்களை சேர்ப்பது அதிகமானதாகத் தோன்றும். சோசலிசப் புரட்சியின் சர்வதேச தன்மையால் பக்குவப்படுத்தப்பட்ட லெனினின் பொருளாதார மற்றும் அரசியல் பார்வைகள் குறித்து ஒட்டுமொத்தமான சுருக்கம் கொடுக்க வேண்டுமென்றால், அதற்கு பல துறைவிஷயங்களிலும் தனி ஆராய்ச்சி தேவைப்படும், ஆனால் தனியொரு நாட்டில் ஒரு தன்னிறைவு சோசலிச சமுதாயம் அமைப்பது அதில் இருக்காது, காரணம் இந்த விஷயம் பற்றி லெனின் அறிந்திருக்கவில்லை.
எவ்வாறிருப்பினும், இங்கே லெனினின் மற்றொரு கட்டுரையான --கூட்டுறவு பற்றி-- என்பதில் கொஞ்சம் பேச வேண்டியது நம் கடமை என்று கருதுகிறோம், ஏனெனில் வரைவு வேலைத்திட்டமானது மரணத்திற்குப் பின்னர் வெளியான இந்த கட்டுரையினை விரிவாக குறிப்பிடுகிறது, அதாவது கட்டுரைக்கு முழுக்க சம்பந்தமில்லாத ஒரு நோக்கத்திற்காக அதன் சில வெளிப்பாடுகளை பயன்படுத்துகிறது. சோவியத் குடியரசின் தொழிலாளர்கள் "சோசலிசத்தின் முழுமையான கட்டமைப்பிற்கு... தேவையான மற்றும் போதுமான அனைத்து சடத்துவரீதியான முன்நிபந்தனைகளையும் கொண்டுள்ளனர்" என்று வரைவுத் திட்டத்தின் ஐந்தாவது அத்தியாயம் குறிப்பிடுவது எங்கள் மனதில் இருக்கிறது.
லெனின் உடல்நலம் குன்றியிருந்தபோது அவர் சொல்ல எழுதப்பட்டு அவர் மறைவுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கட்டுரையில் உண்மையாகவே லெனின், சோவியத் நாடு தேவையான மற்றும் சடத்துவரீதியான, அதாவது முதன்மையாக, ஒரு சுதந்திரமான முழுமையான சோசலிச கட்டமைப்பிற்கு முன்நிபந்தனையான உற்பத்திரீதியான அனைத்தையும் கொண்டிருப்பதாக கூறியிருந்தது உண்மையென்றால், லெனின் சொல்லும்போது வாய்தவறியிருக்க வேண்டும் அல்லது தட்டெழுத்தாளர் தனது குறிப்புகளை அச்சுவடிவாக்கும்போது தவறிழைத்திருக்க வேண்டும் என்று தான் ஊகிக்கத் தோன்றுகிறது. லெனின் மார்க்சிசத்தையும் மற்றும் காலமெல்லாம் தான் போதித்து வந்தவற்றையும் இரண்டு அவசர வார்த்தைகளில் மறந்து விட்டார் என்பதை விட இந்த ஊகங்களில் ஒன்றே அதிகமான சாத்தியமுள்ளதாகத் தோன்றுகிறது. இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக, இவ்வாறானதொரு விளக்கத்திற்கு சிறிதளவும் தேவை இருக்கவில்லை. நிறைவு பெறாததாயினும் குறிப்பிடத்தகுந்ததான இந்த கட்டுரை கூட்டுறவு பற்றி, இது அவரின் முந்தைய காலத்தின் குறிப்பிடத்தகுந்த கட்டுரைகளுடன் சிந்தனை ஒற்றுமையில் பிணைப்பு கொண்டதாய் இருந்தது, மேற்கிலும் கிழக்கிலும் நிகழ்ந்த சங்கிலித் தொடர் புரட்சிகளில் அக்டோபர் புரட்சி ஆக்கிரமித்த இடம் குறித்த ஒரு நிறைவடையாத புத்தகத்தின் ஒரு அத்தியாயமாகவே இடம் பெற்றிருந்தது, லெனினிச மறுபார்வையாளர்கள் எளிதாகக் காரணம் காட்டும் விஷயங்கள் எதனைக் குறித்தும் துளிக்கூட பேசவில்லை.
இந்தக் கட்டுரையில் லெனின் "வர்த்தக" கூட்டுறவு அமைப்புக்கள் தொழிலாளர்கள் அரசில் தங்களின் சமூக பங்கினை முழுக்கவும் மாற்றிக் கொள்ள முடியும், மாற்றிக் கொள்ள வேண்டும், மற்றும் ஒரு சரியான கொள்கையின் மூலமாக அவர்கள் சோசலிச வழிமுறைகளுடன் சேர்த்து தனி விவசாய நலன்களை பொதுவான அரச நலன்களுடன் இணைப்பதையும் வழிநடத்தலாம் என்று விளக்குகிறார். இந்த மறுக்க இயலாத சிந்தனைக்கு லெனின் பின்வருமாறு வலுவூட்டுகிறார்:
"உண்மையை சொல்லப் போனால், அனைத்து பெரிய அளவிலான உற்பத்தி வழிமுறைகள் மீதான அரசு அதிகாரம், பாட்டாளி வர்க்கத்தின் கையில் அரசு அதிகாரம், சிறிய மற்றும் சில்லறை நில உடைமை கொண்டிருக்கும் பல மில்லியன் விவசாயிகளுடனான அந்த பாட்டாளி வர்க்கத்தின் கூட்டு, விவசாயிகளுடனான தொடர்பில் பாட்டாளி வர்க்க தலைமைக்கான பாதுகாப்பு - இவை எல்லாம் தானே கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையானவை, கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டும், இவற்றை நாம் முன்பு வெறுமனே வர்த்தக அமைப்புகளாக கருதி வந்தோம், ஒரு குறிப்பிட்ட பார்வையில் NEP க்கு கீழ் அவ்வாறு கருதுவதற்கான உரிமை இன்னமும் நமக்கு உள்ளது, இவை தானே ஒரு முழுமையான சோசலிச சமுதாய கட்டமைப்பிற்கு தேவையானவை? இவை சோசலிச சமுதாய கட்டமைப்பு என்று சொல்லி விட முடியாது ஆனால் இவை அனைத்தும் இதன் கட்டமைப்பிற்கு அவசியமானவையும் மற்றும் தேவையானவையும் ஆகும்." [23]
ஒரு நிறைவு பெறாத வாக்கிய பிரயோகத்தை ["கூட்டுறவு அமைப்புக்கள் மட்டும்"(?)] உள்ளடக்கிய பத்தியின் இந்த உரையானது நமக்கு முன் இருப்பது சொல்லச் சொல்ல எழுதப்பட்ட ஒரு திருத்தப்படாத வரைவு என்பதை மறுக்கவியலா வண்ணம் நிரூபணம் செய்கிறது. அதைப் போல கட்டுரையின் ஒரு ஒட்டுமொத்த பொது கருத்தாக்கத்தை உணர முயலாமல் இந்த உரையின் சில தனித்தனி வார்த்தைகளை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது அனுமதிக்க இயலாதது. இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக, குறிப்பிடப்பட்ட பத்தியின் கடிதமும், அதன் நோக்கத்தைப் போலவே, யாரையும் துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்கவில்லை, வரைவுவேலைத்திட்டத்தின் ஆசிரியர்கள் துஷ்பிரயோகம் செய்திருப்பதைப் போல. "அவசியமான மற்றும் தேவையான" முன்நிபந்தனைகள் பற்றி பேசும் லெனின், இந்தக் கட்டுரையில் இவ்விடயத்தின் எல்லையை கட்டுப்படுத்துகிறார். அப்போது அவர், எந்தவித புதிய வர்க்க எழுச்சியும் இன்றி, சோவியத் ஆட்சியின் முன்நிபந்தனைகளை ஒரு அடிப்படையாகக் கொண்டு, தனித்தனியான மற்றும் சிதறுண்ட விவசாய நிறுவனங்கள் மூலம் சோசலிசத்தை அடைவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்த பிரச்சனையை மட்டுமே எடுத்துக் கொள்கிறார். கட்டுரை, சிறு தனியார் பண்ட உற்பத்தி பொருளாதாரத்தில் இருந்து கூட்டு பொருளாதாரத்திற்கான மாற்றத்தின் சமூக-அமைப்புரீதியான வடிவங்களுக்கு முழுக்கவும் அர்ப்பணிக்கப்பட்டதே தவிர, அந்த மாற்றத்தின் பொருள்-உற்பத்தி நிலைமைகளுக்கு அல்ல. ஐரோப்பிய பாட்டாளி வர்க்கமானது இன்று வெற்றி பெற்றதாக நிரூபணம் செய்ய வேண்டுமென்றால், அதன் தொழில்நுட்பத்தால் நமக்கு உதவ வர வேண்டும் என்றால், தனியார் மற்றும் சமுதாய நலன்களை ஒருங்கிணைக்கும் ஒரு சமூக-அமைப்புரீதி வழிமுறையான கூட்டுறவு குறித்து லெனினால் எழுப்பப்பட்ட கேள்வி அதன் முக்கியத்துவத்தை முழு அளவில் இன்னமும் கொண்டிருக்க வேண்டும். சோவியத் அரசாங்கம் வந்த உடன், மின்சாரம் உள்ளிட்ட முன்னேறிய தொழில்நுட்பமானது மில்லியன்களில் இருக்கும் விவசாய நிறுவன அமைப்புகளை மறுசீரமைப்பதற்கும் ஒன்றிணைப்பதற்குமான வழியை கூட்டுறவுதான் காட்டுகிறது. ஆனால் கூட்டுறவை தொழில்நுட்பத்திற்கு மாற்றானதாக பதிலிட முடியாது அல்லது அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கக் கூடியது அல்ல. லெனின் அவசியமான மற்றும் தேவையான முன்நிபந்தனைகள் குறித்து பொதுவாக பேசுவதுடன் நின்று விடவில்லை, நாம் கண்டிருப்பது போல், அவற்றை அவர் திட்டவட்டமாக எண்ணிக்கையுமிடுகிறார்.
அவை : (1) "அனைத்து பெரிய அளவிலான உற்பத்தி வழிமுறைகள் மீதான அரசு அதிகாரம்" (ஒரு திருத்தப்படாத வாக்கியப் பிரயோகம்); (2) "பாட்டாளி வர்க்கத்தின் கையில் அரசு அதிகாரம்"; (3) "அந்த பாட்டாளி வர்க்கத்திற்கு பல மில்லியன் கணக்கான விவசாயிகளுடனான கூட்டு"; (4) "விவசாயிகள் தொடர்பாக பாட்டாளி வர்க்க தலைமையின் பாதுகாப்பு." இந்த முழுக்க முழுக்க அரசியல் நிலைகளை எண்ணிக்கையிட்ட பின்னர்தான் - இங்கே சடத்துவரீதியான நிலைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை - லெனின் அவரது தீர்மானமான "இவை" (அதாவது மேற்கூறிய அனைத்தும்) அனைத்தும் ஒரு சோசலிச சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கு ''அவசியமான மற்றும் தேவையான" என்பதற்கு வருகிறார். அரசியல் மட்டத்தில் "அவசியமான மற்றும் தேவையான" இது தான்", ஆனால் அதற்கு மேலல்ல. ஆனால், அங்கே மிகச் சரியாக சேர்க்கும் லெனின், பின்னர் "இது இன்னமும் ஒரு சோசலிச சமுதாயக் கட்டமைப்பு இல்லை" என்கிறார். ஏன் இல்லை? ஏனென்றால் அரசியல் நிலைகள் மட்டுமே, அவை போதுமானவை என்றாலும், பிரச்சினையை தீர்த்து விடுவதில்லை. கலாச்சார பிரச்சினையானது தொடர்ந்து இருக்கவே செய்கிறது. இது "மட்டுமே", என்று சொல்லும் லெனின், நம்மிடம் இல்லாத முன்நிபந்தனைகளின் அதீத முக்கியத்துவத்தை காட்டவே "மட்டும்" என்பதில் அவர் அழுத்தம் கொடுக்கின்றார். கலாச்சாரம் தொழில்நுட்பத்துடன் இணைந்தது என்பதை லெனின் அறிந்து வைத்திருந்தார், நாமும் தான். "கலாச்சாரத்துடன் திகழ" - அவர் திருத்தல்வாதிகளை பூமிக்கு மீண்டும் இழுத்து வருகிறார் -"ஒரு குறிப்பிட்ட சடத்துவ அடிப்படை அவசியம்." [24] மின்சார வசதி அளிக்கும் பிரச்சினையை லெனின், சந்தர்ப்பவசமாக, குறிப்பாக, சர்வதேச சோசலிச புரட்சி குறித்த கேள்வியுடன் இணைத்ததை குறிப்பிட்டாலே போதுமானது. கலாச்சாரத்திற்கான போராட்டமானது, கொடுக்கப்பட்ட ''அவசியமான மற்றும் தேவையான" அரசியல் (பொருளியல்) முன்நிபந்தனைகளை கருத்தில் கொண்டால், வீழ்ச்சிநிலையில் இருந்தாலும் தொழில்நுட்பரீதியாக சக்தி மிகுந்ததாக இருக்கும் உலக முதலாளித்துவத்திற்கு எதிராக பின்தங்கிய அடித்தளத்தில் ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் தடையில்லாத மற்றும் சமரசமற்ற பொருளாதார, அரசியல், இராணுவ, மற்றும் கலாச்சார போராட்டம் குறித்த கேள்வியாக இல்லாது போனால், நமது அனைத்து முயற்சிகளையும் விழுங்கி விடும்.
"எங்களது நிலைப்பாட்டுக்காக சர்வதேச அளவில் போரிடுவது எங்கள் கடமையாக இல்லாதிருந்தால் எங்களின் ஈர்ப்பு மையம் கலாச்சாரப் பணிக்கு மாற்றப்பட்டிருக்கும், என்று கூற நான் தயாராக இருக்கிறேன்" [இந்த கட்டுரையின் இறுதியில் லெனின் குறிப்பிடத்தகுந்த அழுத்தத்துடன் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்]. [25]
அவரது பிற படைப்புகளை கவனத்திற்கு எடுக்காவிட்டாலும் கூட, கூட்டுறவு மீதான கட்டுரையை ஆய்வு செய்தால் இது போன்றது தான் லெனினின் உண்மையான சிந்தனையாகக் கிடைக்கிறது. இவ்வாறு இருக்கையில், ''தேவையான" மற்றும் போதுமான" முன்நிபந்தனைகளின் எமது உடைமை பற்றிய லெனினின் வார்த்தைகளை வேண்டுமென்றே எடுத்துக் கொண்டு, அவற்றுடன் அடிப்படை சடத்துவ முன்நிபந்தனைகளை சேர்ப்பதை - லெனின் சடத்துவ முன்நிபந்தனைகளை பற்றி அடைப்புக்குறிக்குள், இது தான் நாம் கொண்டிராதது மற்றும் "சர்வதேச அளவில் நமது நிலைப்பாட்டிற்கான" போராட்டத்திற்கு, அதாவது சர்வதேச பாட்டாளி வர்க்க புரட்சியுடனான தொடர்பில், நாம் இன்னும் பெற வேண்டியது என்று உறுதியாகப் பேசியிருந்தபோதிலும் - வரைவுவேலைத் திட்டத்தின் ஆசிரியர்களின் சூத்திரத்தை, பொய்மைப்படுத்தல் என்று கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும்? இப்படித்தான் இத்தத்துவத்தின் இரண்டாம் மற்றும் கடைசிக் கோட்டையுடன் விஷயங்கள் தாங்கிநிற்கின்றன.
1905 முதல் 1923 வரையான கணக்கிலடங்கா கட்டுரைகள் மற்றும் பேச்சுக்களை நாங்கள் நோக்கத்துடனேயே கையாளவில்லை, ஒரு வெற்றிகரமான உலகப் புரட்சியில்லை என்றால் நாம் தோல்விக்கே தள்ளப்படுவோம், முதலாளித்துவத்தை பொருளாதாரரீதியாக தனி ஒரு நாட்டில், அதிலும் குறிப்பாக ஒரு பின்தங்கிய நாட்டில், வீழ்த்துவது என்பது சாத்தியமில்லாதது, ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டமைக்கும் பணியானது அதன் அடிப்படைக் கூறிலேயே ஒரு சர்வதேசப் பணி என்பதையெல்லாம் இவற்றில் லெனின் உறுதிபடவும் மீண்டும் மீண்டும் திட்டவட்டமாகவும் தெரிவிக்கிறார், இவற்றில் இருந்து தான், புதிய தேசிய பிற்போக்குவாத கற்பனாவாத பிரகடனவாதிகளுக்கு "எதிர்மறை நம்பிக்கை கொண்டவையாக" தோன்றக் கூடிய அதே சமயத்தில் புரட்சிகர சர்வதேசவாதத்தின் பார்வையில் போதுமான நேர்மறை நம்பிக்கை கொண்டவையான முடிவுகளை லெனின் தருவித்தார். இங்கே நாங்கள் எங்களது வாதத்தை, வரைவின் ஆசிரியர்களே கூட தங்களது கனவுலகத்திற்கு ''அவசியமான மற்றும் தேவையான" முன்நிபந்தனைகளை உருவாக்குவதற்கு தேர்வு செய்திருப்பதான பத்திகளின் மீதே முன்னிலைப்படுத்துகிறோம். அவர்களின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் தொட்டவுடன் உதிர்வதை நாம் காண்கிறோம்.
இருப்பினும், சர்ச்சைக்குரிய கேள்வி மீதான, எந்த வித கருத்துக்களும் அவசியப்படாதவை மற்றும் எந்த போலியான புரிதல்களுக்கும் இடம் கொடாதவையுமான லெனினின் நேரடி கூற்றுக்களில் ஒன்றினையேனும் வழங்குவது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம்.
"நமது படைப்புகள் பலவற்றிலும் நமது அனைத்து உரைகளிலும், நமது முழு பத்திரிகை அறிக்கைகளிலும், ரஷ்யாவின் சூழல் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ளதைப் போன்ற அதே நிலையில் இல்லை, ரஷ்யாவில் நாம் சிறுபான்மையான ஆலைத் தொழிலாளர்களையும் மிக பெரும்பான்மையான சிறு விவசாயிகளையும் கொண்டிருக்கிறோம் என்று நாம் வலியுறுத்தியிருக்கிறோம். . இத்தகைய ஒரு நாட்டில் சோசலிசப் புரட்சியானது இரண்டு நிபந்தனைகளின் மீது தான் நிறைவில் வெற்றிகரமாக முடியும்: முதலாவது, ஒன்று அல்லது மேற்பட்ட முன்னேறிய நாடுகளின் சோசலிச புரட்சியால் இதற்கு சரியான காலத்தில் ஆதரவு கிடைக்கும் நிபந்தனையில்..., இரண்டாவதாக, சர்வாதிகாரம் கட்டமைக்கும் அல்லது தனது கரங்களில் அரச அதிகாரத்தை வைத்திருக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாய மக்கள் தொகையின் பெரும்பான்மையினருக்கும் இடையில் ஒரு உடன்பாடு இருக்கும் நிபந்தனையில். ...
"பிற நாடுகளில் புரட்சி நடைபெறாத வரை, விவசாயிகளுடனான உடன்பாடு மட்டுமே ரஷ்யாவில் சோசலிசத்தை காப்பாற்ற முடியும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்." [26]
இந்த பத்தி போதுமான அளவு விளக்கமளிப்பதாக உள்ளதென்று நாங்கள் நம்புகிறோம். முதலில், தன்னால் முன்நிறுத்தப்படும் யோசனைகள் "நமது பல படைப்புகள், நமது அனைத்து உரைகள், மற்றும் நமது முழு பத்திரிகை அறிக்கைகளில்" இருந்து பரிணாமம் பெற்றவை என்று லெனினே இதில் அழுத்தத்துடன் தெரிவிக்கிறார்; இரண்டாவதாக, இந்தப் பார்வை லெனினால் 1915ம் ஆண்டு அதாவது அக்டோபர் புரட்சிக்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாக கொள்ளப்பட்டதல்ல, மாறாக 1921 இல், அக்டோபர் புரட்சிக்கு பிந்தைய நான்காவது ஆண்டில் சிந்திக்கப்பட்டது.
லெனினைப் பொறுத்தவரை, கேள்வி போதுமான அளவுக்கு தெளிவாக இருப்பதாகவே நாங்கள் சிந்திக்க தலைப்படுகிறோம். ஆராய வேண்டியது என்னவென்றால்: இன்று நம் முன்னர் இருக்கும் அடிப்படை பிரச்சினையின் மீது வரைவுவேலைத் திட்டத்தின் ஆசிரியர்கள் முன்னதாக என்ன கருத்து கொண்டிருந்தனர் என்பது தான்?
இந்த விஷயத்தின் மீது ஸ்ராலின் நவம்பர் 1926ல் கூறினார்: "தனி ஒரு நாட்டில் சோசலிசத்தின் வெற்றி என்பது அந்த நாட்டில் சோசலிசத்தை கட்டமைப்பதற்கான சாத்தியக்கூறு என்பதாகும், மற்றும் இந்தப் பணி அந்த ஒற்றை நாட்டின் சக்திகளாலேயே சாதிக்கப்பட முடியும் என்கின்ற சிந்தனையையே கட்சி தனது ஆரம்பப் புள்ளியாக எடுத்துக் கொண்டுள்ளது." [27]
கட்சி இதனை ஒருபோதும் தனது ஆரம்பப் புள்ளியாக எடுத்துக் கொண்டதில்லை என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். மாறாக, "நமது பல படைப்புகளில், நமது அனைத்து உரைகள், மற்றும் நமது முழு பத்திரிகை அறிக்கைகளில்", லெனின் குறிப்பிட்டது போல, கட்சியானது எதிர் நிலையில் இருந்து முன்சென்றது, அதன் உச்சகட்ட வெளிப்பாடு சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோக்கில் காணப்பட்டது. ஆனால், குறைந்தது ஸ்ராலினே கூட "எப்போதும்" இந்த "சோசலிசத்தை ஒற்றை நாட்டின் சக்திகளாலேயே கட்டமைக்க முடியும்" என்கின்ற தவறான கருத்தில் இருந்து தான் தொடர்ந்து கொண்டிருந்தார் என்று தான் ஒருவர் சிந்திக்க வேண்டியிருக்கும். இதனை பார்க்கலாம்.
இந்த கேள்வியின் மீது ஸ்ராலின் பார்வை 1905 அல்லது 1915ல் என்னவாக இருந்தது என்பதை நாம் அறிவதற்கு எந்த வழியும் இல்லை ஏனென்றால் இந்த விஷயத்தில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லை. ஆனால் 1924ல், சோசலிசத்தை கட்டமைப்பதான லெனினின் சிந்தனைகளை ஸ்ராலின் பின்வருமாறு சுருக்கமாகக் கூறுகிறார்:
"முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகாரத்தை தூக்கியெறிவதும் மற்றும் ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க அரசை கட்டமைப்பதும் சோசலிசத்தின் முழுமையான வெற்றிக்கு உத்தரவாதமாக அமையாது. சோசலிசத்தின் பிரதான பணி --சோசலிச உற்பத்தியின் ஒழுங்கமைப்பு-- இன்னமும் செய்யவேண்டி இருக்கிறது. பல்வேறு முன்னேறிய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் இணைந்த முயற்சிகள் இல்லாமல் இந்தப் பணி சாதிக்கப்பட முடியுமா, ஒரு நாட்டில் சோசலிசத்தின் இறுதி வெற்றியானது பெறப்பட முடியுமா? இல்லை, அது சாத்தியமில்லை. முதலாளித்துவ வர்க்க அதிகாரத்தை தூக்கியெறிய, ஒரு நாட்டின் முயற்சிகள் போதுமானது -எமது புரட்சி வரலாறு இதனைத் தாங்கி நிற்கிறது. சோசலிசத்தின் இறுதி வெற்றிக்கு, சோசலிச உற்பத்தியின் ஒழுங்கமைப்புக்கு, ஒரு நாட்டின், அதிலும் குறிப்பாக ரஷ்யா போன்றதொரு விவசாய நாட்டின் முயற்சிகள் போதுமானவை அல்ல. இதற்கு பல்வேறு முன்னேறிய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் முயற்சிகள் அவசியமானவை ஆகும் ...
"இவையே, ஒட்டுமொத்தமாக, பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய லெனின் தத்துவத்தின் சிறப்பியல்புகளாகும்." [28]
"லெனினிச தத்துவத்தின் சிறப்பியல்புகள்" இங்கே சரியாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளதை ஒருவர் ஒப்புக்கொள்ள வேண்டும். ஸ்ராலினது புத்தகத்தின் பிந்தைய பதிப்புகளில் இந்த பத்தியானது எதிர் திசையில் படிக்கப்படும் வண்ணம் மாற்றப்பட்டது, மற்றும் "லெனினிச தத்துவத்தின் சிறப்பியல்புகள்" ஒரு வருடத்திற்குள்ளாக .....ட்ரொட்ஸ்கிசம் என்று பிரகடனப்படுத்தப்பட்டு விட்டன. கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் ஏழாவது நிறை பேரவை தனது தீர்மானத்தை நிறைவேற்றியது, 1924 பதிப்பின் அடிப்படையில் அல்ல மாறாக 1926 பதிப்பின் அடிப்படையிலாகும்.
ஸ்ராலினை பொறுத்தவரை இந்த விஷயம் இவ்வாறான நிலையிலேயே உள்ளது. இதனை விடவும் சோகமானதொரு விஷயம் இருக்க முடியாது. கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் ஏழாவது நிறை பேரவையை பொறுத்த விஷயங்களும் இவ்வளவு சோகமயமானதாக இல்லாதிருந்திருந்தால், நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டிருக்கலாம்.
இங்கே ஒரு நம்பிக்கை மட்டும் உள்ளது. அது என்னவென்றால், வரைவுவேலைத் திட்டத்தின் உண்மையான ஆசிரியரான புக்காரின் மட்டும் குறைந்தபட்சம், தனி ஒரு நாட்டில் சோசலிசம் நனவாகும் சாத்தியத்தில் இருந்தே, "எப்போதுமே ஆரம்பித்திருந்தார்". இதனையும் ஆய்வு செய்யலாம்.
இந்த விஷயத்தில் புக்காரின் 1917ல் இவ்வாறு எழுதுகிறார்:
"புரட்சிகள் வரலாற்றின் இரயில் என்ஜின்கள். பின்தங்கிய ரஷ்யாவிலும் கூட, அந்த இரயில் என்ஜினின் தன்நிகரில்லாத பொறியியலாளராக இருப்பது பாட்டாளி வர்க்கம் மட்டுமே. ஆனால் பாட்டாளி வர்க்கமானது முதலாளித்துவ வர்க்க சமுதாயத்தின் சொத்துடைமை உறவுகளுக்குள் இனிமேலும் தொடர முடியாது. இது அதிகாரத்தை நோக்கி நடைபோடுகிறது மற்றும் சோசலிசத்தை நோக்கியும். இருப்பினும், ரஷ்யாவில் 'நாளின் மிகவும் அத்தியாவசியப் பணியாக' வைக்கப்படும் இந்தப் பணியானது, 'தேசிய எல்லைகளுக்குள்' நிறைவேற்றப்பட முடியாது. இங்கு தொழிலாள வர்க்கமானது தாண்டமுடியாத [கவனிக்க: "தாண்டமுடியாத சுவர்." – லி.ரொ], சர்வதேச தொழிலாளர் புரட்சி எனும் மதிற்சுவர் தகர்க்கும் பீரங்கியால் மட்டுமே உடைக்கப்பட கூடிய ஒரு சுவரை எதிர்கொள்கிறது ." [29]
அவர் தன் நிலையை இதற்கு மேலும் தெளிவாக உரைத்திருக்க முடியாது. 1915ல் லெனினிது மாற்றம் என குற்றம் சாட்டப்படும் மாற்றத்தின் பின் இரு ஆண்டுகளில் 1917ம் ஆண்டில் புகாரினால் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருந்த கண்ணோட்டங்கள் அத்தகையனவாகும். ஆனால் ஒருவேளை அக்டோபர் புரட்சி புக்காரினுக்கு வேறுவிதமாகக் கற்பித்ததோ? மறுபடியும், இதனையும் ஆய்வு செய்யலாம்.
1919ல், புக்காரின் கம்யூனிஸ்ட் அகிலத்தின் தத்துவார்த்த ஏட்டில் ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் உலகப் புரட்சி என்பது குறித்து எழுதுகையில் கூறுகிறார்:
"நடப்பு உலக பொருளாதாரம் மற்றும் அதன் உறுப்புகளுக்கு இடையிலான தொடர்பின் கீழ், பல்வேறு தேசிய முதலாளித்துவ குழுக்களும் பரஸ்பர சார்பு கொண்டுள்ள நிலையில், ஒரு நாட்டில் போராட்டமானது பல்வேறு நாகரீகமடைந்த நாடுகளில் ஒருபக்க அல்லது மறுபக்கத்தின் தீர்மானமான வெற்றியைக் காணாமல் முடிவுற முடியாது என்பது வெளிப்படை உண்மையாகவே இருக்கிறது."
அந்த சமயத்தில் இது "வெளிப்படை உண்மையாகவே" கூட இருந்தது. அவர் இன்னும் தொடர்கிறார்.
போருக்கு முந்தைய மார்க்சியர் மற்றும் மார்க்சியர் போன்றோரது பிற இலக்கியத்தில் தனி ஒரு நாட்டில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமா என்னும் கேள்வி பல முறை எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு அநேக எழுத்தாளர்கள் எதிர்மறையாகவே பதிலளித்தனர் [1915ல் லெனினின் நிலை என்ன? - L.T.] அவற்றில் இருந்து எவர் ஒருவரும் தனி ஒரு நாட்டில் புரட்சியை ஆரம்பிப்பதோ அல்லது அதிகாரத்தை கைப்பற்றுவதோ சாத்தியமற்றது அல்லது அனுமதிக்கப்படாதது என்ற முடிவுக்கு வரவே முடியாது."
மிகச்சரி! இதே கட்டுரையில் நாம் படிக்கிறோம்:
"உற்பத்தி சக்திகளின் எழுச்சிக் காலமானது பல முக்கிய பெரிய நாடுகளில் பாட்டாளி வர்க்க வெற்றியுடன் தான் தொடங்க முடியும். இதிலிருந்து அறியப்படுவது என்னவென்றால், உலகப் புரட்சியின் அனைத்து தரப்பு வளர்ச்சியும் மற்றும் சோவியத் ரஷ்யாவுடன் தொழிற்துறை நாடுகளின் உறுதியான பொருளாதார கூட்டினை உருவாக்குவதும் அவசியமாகும்." [30]
ஐரோப்பாவின் முன்னேறிய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கு பின்னர்தான் உற்பத்தி சக்திகளின் எழுச்சி, அதாவது உண்மையான சோசலிசத்தின் வளர்ச்சி என்பது நமது நாட்டில் தொடங்க முடியும் என்னும் புக்காரினது உறுதிப்படுத்தல் தான், உண்மையில் அச்சு அசலாக இதே வார்த்தைகள் தான், கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் ஏழாவது நிறை பேரவை மாநாட்டில் குற்றம்சாட்டப்பட்டது உள்ளிட்ட, "ட்ரொட்கிசத்திற்கு'' எதிரான அனைத்து குற்றச்சாட்டு நடவடிக்கைகளுக்கும், அடிப்படையாக பயன்படுத்தப்பட்டது. இதில் விநோதமான ஒரே விஷயம் என்னவென்றால், தனது குறைந்த ஞாபக சக்தியையே பாவவிமோசனமாக கொண்டிருக்கும் புக்காரின், குற்றம் சாட்டும் பாத்திரத்திற்கு முன்வந்தது தான். இந்த விநோதமான சூழல்களுடனே, மற்றொரு துன்பகரமான ஒன்றும் கூட, அதாவது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராக, இதே அடிப்படை விஷயத்தை ஏராளமான முறை வெளிப்படுத்திய லெனினும் இருப்பதுதான்.
இறுதியாக, 1921ல், லெனினின் மாற்றம் என கூறப்படுவது நிகழ்ந்த 1915க்கு ஆறு வருடத்திற்கு பின்னர், அக்டோபர் புரட்சிக்கு நான்கு வருடங்களுக்கும் பின்னர், லெனின் தலைமையிலான மத்திய கமிட்டி இளம் கம்யூனிஸ்ட் லீக்கின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது, இது புக்காரினால் வழிநடத்தப்பட்ட ஒரு ஆணைக்குழுவால் வரையப்பட்டதாகும். இந்தத் திட்டத்தின் பத்தி 4 சொல்கிறது:
"சோவியத் யூனியனில் அரச அதிகாரம் ஏற்கனவே தொழிலாள வர்க்கத்தின் கரங்களில் தான் உள்ளது. மூன்று வருட காலத்தில் உலக முதலாளித்துவத்திற்கு எதிரான தீரமான போராட்டத்தில், பாட்டாளி வர்க்கம் தனது சோவியத் அரசாங்கத்தை பராமரித்தும் வலுப்படுத்தியும் வந்துள்ளது. ரஷ்யா, ஏராளமான இயற்கை வளங்களை கொண்டுள்ளது என்றாலும் கூட, தொழில்துறையின் பார்வையில், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பின்தங்கிய நாடே ஆகும். உலகப் பாட்டாளி வர்க்க புரட்சி, அதாவது நாம் இப்போது நுழைந்திருக்கும் யுகத்தின் மூலமாக மட்டுமே இது சோசலிசத்திற்கு சென்று சேர முடியும்."
இளம் கம்யூனிஸ்ட் லீக்கின் வேலைத்திட்டத்தில் (இது ஒரு எதேச்சையான கட்டுரை அல்ல, மாறாக ஒரு வேலைத்திட்டம்!) இருக்கும் இந்த ஒற்றைப் பத்தி, கட்சி "எப்போதுமே" ஒரு நாட்டில், அதுவும் குறிப்பாக ரஷ்யாவில் ஒரு சோசலிச சமுதாயத்தைக் கட்டமைப்பது சாத்தியம் என்ற நிலை கொண்டிருந்தது என்று நிரூபிப்பதற்கு வரைவின் ஆசிரியர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளை கேலிக்குரியதாகவும் மற்றும் மிகுந்த அவமதிப்புக்குரியதாகவும் ஆக்கிவிடுகிறது. "எப்போதுமே" இப்படித்தான் இருந்திருக்குமேயானால், இளம் கம்யூனிஸ்ட் லீக் திட்டத்தில் இப்படி ஒரு திட்டத்தை புக்காரின் ஏன் வடிவமைக்க வேண்டும்? அப்போது ஸ்ராலின் எங்கு பார்த்துக் கொண்டிருந்தார்? லெனினும் மற்றும் மொத்த மத்திய கமிட்டியும் இப்படி ஒரு விரோதக் கொள்கைக்கு எவ்வாறு ஒப்புதல் அளித்தனர்? கட்சியில் இருந்த ஒருவரும் இந்த "அற்பமான" விஷயத்தினைக் கவனிக்காமலும் அதற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியாமலும் போனது எப்படி? இது கட்சி, அதன் வரலாறு, மற்றும் கம்யூனிச அகிலத்தை கேலிக்குரியதாக ஆக்கும் ஒரு கொடூரமான நகைச்சுவையாக தெரியவில்லையா? இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க இது சரியான தருணமில்லையா? லெனினுக்கும் கட்சியின் தத்துவார்த்த மரபுக்கும் பின்னால் ஒளிந்து கொள்ளும் தைரியமா உங்களுக்கு!? என்று திருத்தல்வாதிகளுக்கு கூறுவதற்கான சரியான தருணமில்லையா இது.
கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் ஏழாவது நிறை பேரவையில், "ட்ரொட்ஸ்கிசத்தை" கண்டிக்கும் தீர்மானத்திற்கு அடிப்படை அளிக்கும் வண்ணம், தனது பாதுகாப்பை தனது ஞாபக சக்தி குறைவிலேயே வைத்திருக்கக் கூடிய புக்காரின், பின்வரும் உறுதியை மேற்கொண்டார்:
"தோழர் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் – தோழர் ட்ரொட்ஸ்கி இன்றளவும் கூட இந்த தத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார்-- நமது பொருளாதார பின்தங்கிய நிலை காரணமாக, உலக புரட்சியின்றி நாம் தவிர்க்க இயலாவண்ணம் அழிந்துவிட வேண்டியது தான் என்கின்ற உறுதியையும் காண வேண்டியிருக்கிறது." [31]
ஏழாவது நிறை பேரவையில் நான் 1905-1906 இல் வடிவமைத்தபோது நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் இருந்த இடைவெளிகள் குறித்து பேசினேன். ஆனால் அடிப்படையான, லெனினுக்கு அருகில் என்னை அழைத்துச் சென்ற மற்றும் அழைத்துச் செல்ல எத்தனித்த, மற்றும் லெனினிசத்தின் இன்றைய நாள் மறுபார்வையை எனக்கு முற்றிலும் உடன்பாடற்றதாகச் செய்கின்ற வகை விஷயம் எதனையும் இந்த தத்துவத்தில் துறக்கும் எந்த ஒரு எண்ணமும் இயல்பாகவே என் மனதில் ஒருபோதும் தோன்றியதே இல்லை.
நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் இரண்டு அடிப்படை முன்மொழிவுகள் இருந்தன. முதலாவதாக, ரஷ்யாவின் வரலாற்றுப் பின்தங்கிய நிலையிலும், முன்னேறிய நாடுகளின் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை அடையும் முன்னதாகவே புரட்சியானது ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் கரங்களில் அதிகாரத்தை மாற்றித்தர முடியும். இரண்டாவதாக, முதலாளித்துவ பகைவர்கள் உலகத்தினால் சூழப்பட்ட, ஒரு பின்தங்கிய நாட்டின் பாட்டாளி வர்க்கத்திற்கு நேரிடுகின்ற இந்த முரண்பாடுகளில் இருந்து மீள்வதற்கான வழி, உலகப் புரட்சிக் களத்தில் காணப்படும். முதலாவது முன்மொழிவானது சமசீரற்ற வளர்ச்சி விதியை சரியாகப் புரிந்து கொள்வதன் அடிப்படையிலானது. இரண்டாவதானது முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் கரைந்து போகாமல் இருப்பதைக் குறித்த ஒரு சரியான புரிதலை சார்ந்தது. நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் இந்த இரண்டு அடிப்படை முன்மொழிவுகளை நான் இன்று கூட கொண்டிருப்பதாக புக்காரின் கூறியது சரியே. இன்று, முன்பு எப்போதையும் விட அதிகமாகவே. காரணம், என்னைப் பொறுத்த வரை, அவை முழுக்கவும் தத்துவத்தில், மார்க்ஸ் மற்றும் லெனினது படைப்புகளாலும், நடைமுறையில் அக்டோபர்
புரட்சி அனுபவத்தாலும் சரிபார்க்கப்பட்டவை மற்றும் நிரூபிக்கப்பட்டவை.