line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 
கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்
பகுதி 1: சர்வதேச புரட்சி வேலைத்திட்டமா அல்லது தனி ஒரு நாட்டில் சோசலிசத்திற்கான வேலைத்திட்டமா?

3. ஐக்கிய ஐரோப்பிய சோவியத் அரசுகள் பற்றிய முழக்கம்

புதிய வரைவு வேலைத்திட்டத்தில் இருந்து ஐக்கிய ஐரோப்பிய சோவியத் அரசுகள் என்ற முழக்கம் விடுபட்டிருப்பதற்கான எந்த ஒரு நியாயப்படுத்தலும் இருக்க முடியாது. இந்த முழக்கம், 1923ம் ஆண்டிலேயே, நீண்ட நீடித்த உள்போராட்டத்திற்கு பின்னர், கம்யூனிச அகிலத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். அல்லது ஒருவேளை, வேலைத்திட்டத்தின் ஆசிரியர்கள் இந்த கேள்விக்கு 1915ம் ஆண்டில் லெனின் எடுத்த நிலைக்கு "திரும்ப" விரும்புகிறார்களோ என்னவோ? அவ்வாறாயின், அவர்கள் முதலில் அதனைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
லெனின், எல்லோரும் அறிந்ததைப் போல, போரின் ஆரம்பத்தில் ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் முழக்கம் குறித்து தயக்கம் காட்டி வந்தார். முதலில் இந்த முழக்கம் சோசியால் டெமாக்கிராட் (அந்த சமயத்தில் கட்சியின் முக்கிய ஏடு) ஆய்வுக் கட்டுரைகளில் இடம் பெற்றிருந்து பின் லெனினால் நிராகரிக்கப்பட்ட ஒன்று. இதிலிருந்தே நமக்குத் தெரிவது என்னவென்றால், இங்கே சம்பந்தப்பட்ட கேள்வி கொள்கையின் அடிப்படையில் இந்த முழக்கத்தின் பொதுவான ஏற்றுக்கொள்வதல்ல, மாறாக கொடுக்கப்பட்ட சூழ் நிலையில் இருந்து முழக்கத்தின் சாதக மற்றும் பாதகங்களை எடை போடுவதான கேள்வியே, முழக்கத்தின் தந்திரோபாயரீதியான ஒரு மதிப்பீடு மட்டும் தான். ஒரு முதலாளித்துவ ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் சாத்தியப்படும் தன்மையை லெனின் நிராகரித்தார் என்பதைக் கூற வேண்டியதில்லை. ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் முழக்கத்தை முழுக்கவும் எதிர்கால ஐரோப்பாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான ஒரு அரச வடிவத்திற்கான ஒரு முன்னோக்காக நான் முன்வைத்தபோது இந்த கேள்வி பற்றிய எனது அணுகுமுறையும் அவ்வாறே இருந்தது.
அந்த சமயத்தில் நான் எழுதினேன்: "முதலாளித்துவ அரசுகளுக்கு இடையேயான உடன்பாட்டின் மூலம் மேலிருந்து உருவாக்கப்படும் ஏறக்குறைய ஒரு முழுமையான ஐரோப்பிய பொருளாதார ஒன்றிணைப்பு என்பது ஒரு கற்பனைதான்". இந்தப் பாதையில் பாதி சமரசங்கள் மற்றும் அரைகுறை நடவடிக்கைகளை தாண்டி சம்பவங்கள் முன்னேற முடியாது. ஆனால் ஐரோப்பாவின் பொருளாதார ஒன்றிணைப்பு மட்டுமே, உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் இருவருக்குமே பெரும் அனுகூலங்களை வழங்கக் கூடியது மற்றும் பொதுவாக கலாச்சார மேம்பாட்டிற்கு வழிதரக் கூடியதாகையால், ஏகாதிபத்திய பாதுகாப்புவாதம் மற்றும் அதன் கருவியான இராணுவவாதம் ஆகியவற்றுக்கெதிரான போராட்டத்தில் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் ஒரு புரட்சிகர பணியாகின்றது. [3]
மேலும்: "ஐக்கிய ஐரோப்பிய அரசுகளானது முதன்மையாக ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை -எண்ணிப்பார்க்கத்தக்க ஒரே வடிவத்தை- பிரதிநிதித்துவப்படுத்துகிறது." [4]
ஆனால் கேள்வியின் இந்த சூத்திரப்படுத்தலிலும் கூட லெனின் அச்சமயத்தில் ஒரு குறிப்பிட்ட அபாயத்தைக் கண்டார். ஒரு நாட்டில் கூட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறித்த அனுபவமோ, அந்த நேரத்தில் சமூக ஜனநாயகத்தின் இடதுசாரிகள் பிரிவில் கூட இந்த கேள்விக்கு சித்தாந்த அடிப்படையிலான தெளிவோ இல்லாத நிலையில், ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் முழக்கமானது, பாட்டாளி வர்க்க புரட்சியானது ஒரே சமயத்தில் தொடங்க வேண்டும், குறைந்த பட்சம் முழுமையான ஐரோப்பிய கண்டத்திலாவது ஆரம்பிக்கவேண்டும் என்னும் சிந்தனை தோன்றக் காரணமாக இருந்துவிடலாம். இந்த அபாயம் குறித்தே லெனினும் எச்சரித்தார், ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரை லெனினுக்கும் எனக்கும் எந்தவிதமான வேறுபாட்டுக்கான சாயல் கூட இருக்கவில்லை. அந்த சமயத்தில் நான் எழுதினேன்: "எந்த ஒரு நாடும் தனது போராட்டத்திற்கு பிறநாடுகளுக்காக 'காத்திருக்கக்' கூடாது. இந்த அடிப்படை விஷயத்தினை மீண்டும் மீண்டும் கூறுவது பயனுள்ளதாகவும் தேவையானதாகவும் இருக்கும் ஏனெனில் அப்போது இணையான சர்வதேச செயல்பாடுகளுக்கு மாற்றாக காத்திருக்கும் சர்வதேச செயல்பாடற்ற தன்மையானது பதிலிடப்படாது. மற்றவர்களுக்காக காத்திராமல், தேசிய அடிப்படைகளில் முழு உறுதியுடன் நாம் போராட்டத்தை தொடங்கி தொடர வேண்டும், நமது முன்முயற்சி பிற நாடுகளில் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருக்கும்.[5]
இதனைத் தொடர்ந்து தான், கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் ஏழாவது நிறை பேரவையில் ஸ்ராலின் முன்வைத்த "ட்ரொட்ஸ்கிசம்" என்று மிகக் கடுமையாகக் கூறிய என்னுடைய வார்த்தைகள் வருகின்றன. அதாவது புரட்சியின் உள் சக்திகளில் "நம்பிக்கை இன்மை" மற்றும் வெளியில் இருந்தான உதவிக்கான நம்பிக்கை. "மற்றும் இது நடக்காமல் போனால் [பிற நாடுகளில் புரட்சியின் அபிவிருத்தி - லி.ஜி.], ஒரு புரட்சிகர ரஷ்யா, பழமைவாத ஐரோப்பாவை எதிர்நோக்குகையில் அல்லது ஒரு சோசலிச ஜேர்மனி ஒரு முதலாளித்துவ உலகில் தனித்து நீடிக்க முடியும் என்றோ சிந்திப்பது நம்பிக்கை இல்லாதது (இது வரலாற்று அனுபவத்திலிருந்தும் மற்றும் தத்துவார்த்த கருதிப்பார்த்தல்களிலிருந்தும் பிறந்தது). [6]
இதனதும் மற்றும் இரண்டு அல்லது மூன்று ஒத்த மேற்கோள்களின் அடிப்படையிலேயே, இந்த "அடிப்படைக் கேள்வி"யில் "லெனினிசத்துடன் எந்த வித பொதுத்தன்மையும் இல்லாத" ஒரு நிலையைக் கொண்டிருந்ததாக, "ட்ரொஸ்கிசத்துக்கு" எதிராக ஏழாவது நிறை பேரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனவே, சற்று நேரம் நிதானித்து லெனினே என்ன சொல்லியிருக்கிறார் என்று கேட்போம்.
மார்ச் 7, 1918 இல், அவர் ப்ரெஸ்ட்-லிடோவ்ஸ்க் சமாதானம் குறித்து கூறினார்: "இது எமக்கு ஒரு படிப்பினையாகும். ஏனென்றால் ஜேர்மனியில் புரட்சி இல்லையென்றால், நாம் அழிந்துவிடுவோம் என்பது முற்றுமுழுதான உண்மை". [7]
ஒரு வாரம் கழித்து அவர் கூறினார்: "உலக ஏகாதிபத்தியமானது ஒரு வெற்றி பெற்று முன்னேறிக் கொண்டிருக்கும் சோசலிச புரட்சியுடன் அருகருகே நீடித்திருக்க முடியாது." [8]
சில வாரங்கள் கழித்து, ஏப்ரல் 23 அன்று, லெனின் கூறுகிறார்: "நமது பின்தங்கியதன்மை தான் நம்மை முன்னே உந்தித் தள்ளியிருக்கிறது மற்றும் பிற நாடுகளின் கிளர்ச்சி தொழிலாளர்களின் வலிமையான ஆதரவு நமக்குக் கிடைக்கும் வரை எம்மால் பாதுகாத்துக்கொண்டு இருக்க முடியவில்லை என்றால் நாம் அழிந்துவிடுவோம்." (நமது அழுத்தம்) [9]
ஆனால் உண்மையில் இவையெல்லாம் ப்ரெஸ்ட்-லிடோவ்ஸ்க் நெருக்கடியின் சிறப்பு பாதிப்பால் கூறப்பட்டதா? இல்லை! மார்ச் 1919ல், லெனின் மீண்டும் சொல்கிறார்: "நாம் வெறுமனே ஒரு நாட்டில் வசிக்கவில்லை மாறாக நாடுகள் கொண்ட ஒரு அமைப்பில் வசிக்கிறோம் மற்றும் சோவியத் குடியரசு மற்றும் ஏகாதிபத்திய நாடுகள் அருகருகே நீண்டகாலம் நீடித்திருப்பது என்பது சிந்திக்க முடியாதது. இறுதியில் ஒன்று அல்லது மற்றொன்று வெற்றி பெற்றே தீரும்." [10]
ஒரு வருடம் கழித்து, ஏப்ரல் 7, 1920ல், லெனின் மறுபடியும் கூறுகிறார்: "முதலாளித்துவத்தை சர்வதேச அளவில் எடுத்தோமானால், இன்றும் கூட இராணுவரீதியில் மட்டுமல்லாது பொருளாதாரரீதியிலும், சோவியத் சக்தியை விட வலிமையானதாகவே உள்ளது. இந்த அடிப்படையான விஷயத்தில் இருந்து நாம் தொடர வேண்டும் மற்றும் இதனை எப்போதும் மறக்கக் கூடாது." [11]
நவம்பர் 27, 1920 இல், லெனின், விட்டுக்கொடுப்புகள் குறித்த கேள்வி ஒன்றினை எதிர்கொள்ளும்போது கூறினார்: "நாம் இப்போது போர் தளத்தில் இருந்து அமைதித் தளத்திற்கு சென்று சேர்ந்திருக்கிறோம் மற்றும் போர் மீண்டும் வரும் என்பதை நாம் மறந்து விடவில்லை. முதலாளித்துவமும் சோசலிசமும் அருகருகே இருக்கும் வரைக்கும் நாம் அமைதியாக வாழ முடியாது - ஒன்று அல்லது மற்றொன்று இறுதியில் வெற்றி பெறும். உலக முதலாளித்துவத்தின் சாவின் மீதோ அல்லது சோவியத் குடியரசின் சாவின் மீதோ மரணச்செய்தி பாடப்பட்டே தீரும். இப்போதைக்கு நமக்கு போரில் சிறு இடைவேளையே கிடைத்திருக்கிறது." [12]
மாறாக ஒருவேளை சோவியத் குடியரசு தொடர்ந்து நீடித்தமை லெனினை "தன்னுடைய தவறை உணரச் செய்து" அக்டோபர் புரட்சி குறித்த தனது "உள் சக்தியில் நம்பிக்கை இன்மை"யை துறக்கச் செய்ததோ?
ஜுலை 1921ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச அகிலத்தின் மூன்றாம் மாநாட்டில், லெனின் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தந்திரோபாயங்கள் குறித்த ஆய்வறிக்கையில் சமர்ப்பித்தார்: "ஒரு சமபலநிலை உருவாக்கப்பட்டுள்ளது, இது அதீத அபாயகரமானதாகவும் மற்றும் உறுதியற்றதாகவும் இருந்தாலும் கூட எப்படியாயினும் முதலாளித்துவ சூழலுக்கு இடையே சோசலிச குடியரசானது தனது இருப்பை நீடிப்பதற்கு வழிவகை செய்கிறது, நீண்டகாலத்திற்கு இவ்வாறு இருக்க முடியாது என்றாலும் கூட."
மீண்டும் ஜூலை 5, 1921ல், லெனின் மாநாட்டு அமர்வு ஒன்றில் பட்டவர்த்தனமாகக் கூறினார்: 'சர்வதேச உலகப்புரட்சியின் உதவி இல்லாமல், பாட்டாளி வர்க்க புரட்சியின் வெற்றி என்பது சாத்தியமில்லை என்பது நமக்குத் தெளிவாகி இருந்தது. புரட்சிக்கு முன்பே கூட, அதேபோல் அதற்கு பின்னரும், நாங்கள் எண்ணியது என்னவென்றால் பிற பின்தங்கிய நாடுகளில் மற்றும் மிக உயர்ந்த வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளிலும் புரட்சி உடனடியாகவோ அல்லது வெகு சீக்கிரத்திலோ தோன்றும், இல்லாவிட்டால் நாம் அழிந்து விடுவோம். இந்த உறுதிப்பாடு இருந்தாலும் கூட, நாங்கள் சோவியத் அமைப்பை எந்த சூழலிலும் எந்த நிலைமையிலும் பாதுகாப்பதற்கு எங்களால் இயன்ற அனைத்தையும் செய்தோம், ஏனென்றால் நாங்கள் உழைப்பது எங்களுக்காக மட்டுமல்ல சர்வதேச புரட்சிக்காகவும் தான் என்பது எங்களுக்கு தெரிந்திருந்தது." [13]
எளிமையான அழகுடையதும் சர்வதேச சிந்தனை ஊடுருவியதுமான இந்த வார்த்தைகள், இழிபாசாங்கினர்களது அற்பத்தனமான நடப்பு புனைவுகளில் இருந்து எந்த அளவு நிரந்தரமாக நீக்கப்பட்டு விட்டன!
எப்படி இருந்தாலும், நமக்கு கேட்பதற்கான உரிமை உள்ளது: லெனினின் இந்த அனைத்து கூற்றுகளும், வரவிருக்கும் ரஷ்ய புரட்சி அல்லது வரவிருக்கும் சோசலிச ஜேர்மனி இவையெல்லாம் "முதலாளித்துவ உலகத்தில் தனிமைப்படுத்தப்பட்டால்" தனியாக நீடிக்க முடியாது என்று 1915 ஆம் ஆண்டு எனக்கிருந்த உறுதியில் இருந்து எங்கே வேறுபடுகின்றன? என்னால் கொள்ளப்பட்டது மட்டுமல்லாமல் லெனினின் கணிப்புகளிலும் கொள்ளப்பட்ட காலகாரணி வேண்டுமானால் மாறுபட்டு இருக்கலாம்; ஆனால் அதில் பொதிந்திருக்கும் சிந்தனையானது இன்றளவும் கூட முழு வீச்சில் சக்தியைக் கொண்டுள்ளதே - தற்போதைய தருணத்தில் உண்மையில் முன்னெப்போதையும் விட அதிகமாகவே. கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் ஏழாவது நிறை பேரவை ஒரு தரமற்ற மற்றும் கொள்கையற்ற பேச்சின் அடிப்படையில் செய்ததைப் போல், இந்த சிந்தனையை கண்டனம் செய்யாமல், இது கம்யூனிச அகிலத்தின் வேலைத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
ஐக்கிய ஐரோப்பிய சோவியத் குடியரசு கோஷத்தை ஆதரித்து 1915ல் நாம் குறிப்பிட்டது என்னவென்றால், சமச்சீரற்ற வளர்ச்சி குறித்த விதி இந்த கோஷத்திற்கு எதிரான வாதமாக இருக்க முடியாது, ஏனென்றால் வெவ்வேறு நாடுகள் மற்றும் கண்டங்களின் வரலாற்று வளர்ச்சியின் சமச்சீரற்ற தன்மையே கூட சமசீரற்றே இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று சமசீரற்ற நிலையிலேயே வளர்ச்சி அடைகின்றன. இருந்தாலும் முழுமையான வரலாற்று உறுதியுடன் நாம் ஒன்றைக் கூற முடியும், குறைந்தபட்சம் ஆய்வுக்குட்படுத்தப்படும் வரலாற்று யுகத்தில், இதுநாள்வரை அமெரிக்கா, ஐரோப்பாவை கடந்து பாய¢ந¢து சென்றது போல, இந்த நாடுகளில் ஒன்றேனும், பிற நாடுகள் தொடர்பானதில் கடந்து பாய்ந்தோடவில்லை. அமெரிக்காவுக்கு என்று ஒரு சமச்சீரற்ற தன்மைக்கான அளவுகோல் இருக்கிறது, ஐரோப்பாவுக்கு வேறொன்று உள்ளது. புவியியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும், சூழல்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே அவை அதிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியில் வர முடியாத வண்ணம் அப்படி ஒரு உயிரார்ந்த பந்தத்தை தீர்மானித்திருந்தன. ஐரோப்பாவின் நவீன பூர்சுவா அரசாங்கங்கள் எல்லாம் ஒரு ஒற்றை வண்டியில் கட்டப்பட்ட கொலைகாரர்களை போலத்தான். ஐரோப்பிய புரட்சி, ஏற்கனவே கூறப்பட்டதைப் போல, இறுதி ஆய்வில் அமெரிக்காவுக்கும் தீர்மானகரமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாக அமையும். ஆனால் நேரடியாக, வரலாற்றின் உடனடிப் பாதையில், ஜேர்மனியில் புரட்சியானது அமெரிக்காவை விட பிரான்சுக்கு அளவிட முடியாத முக்கியத்துவம் கொண்டதாய் அமையும். குறிப்பாக இந்த வரலாற்று வழி வளர்ந்த உறவில் இருந்து தான் ஐரோப்பிய சோவியத் கூட்டமைப்பு பற்றிய முழக்கத்தின் அரசியல் முக்கியத்துவம் வெளிப்படுகின்றது. நாம் இதன் ஒப்பீட்டு முக்கியத்துவம் குறித்து பேசுகிறோம் ஏனென்றால் இந்த கூட்டமைப்பு விரியும், சோவியத் யூனியனின் பெரும் பாலத்தையும் கடந்து ஆசியாவிற்கு, பின் உலக சோசலிசக் குடியரசுகளின் சங்கமத்தில் நிறையும். ஆனால் இது ஒரு இரண்டாவது சகாப்தத்தையோ அல்லது ஏகாதிபத்திய சகாப்தத்தின் அடுத்துவரும் பெரும் அத்தியாயத்தையோ நிறுவும், இதனை மிகவும் நெருங்கிச் சென்று பார்த்தால், அதற்கு தொடர்புபட்ட சூத்திரங்களையும் நாம் காண்போம்.
இன்னும் கூடுதலான மேற்கோள்களால், ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் பற்றிய கேள்வியில் 1915ல் லெனினுடனான நமது வேறுபாடு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட, தந்திரோபாயமான மற்றும் இதன் சாராம்சத்தில் தற்காலிகமான குணாதிசயம் கொண்டதாக இருக்கிறது, ஆனால் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் மூலம் இது நன்றாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. 1923ல் கம்யூனிச அகிலம் சர்ச்சைக்குரிய முழக்கத்தைக் கையிலெடுத்தது. 1915ம் ஆண்டு ஐக்கிய ஐரோப்பிய குடியரசு முழக்கம் கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது என்று வேலைத்திட்ட வரைவின் ஆசிரியர்கள் இப்போது கூறுவது உண்மையாக இருந்திருந்தால், கம்யூனிச அகிலம் அந்த முழக்கத்தை மேற்கொண்டிருக்க சாத்தியமில்லை. சமச்சீரற்ற வளர்ச்சி விதியானது இந்த வருடங்களில் தனது தாக்கத்தின் வீச்சை இழந்து விடவில்லை என்று தான் எவரும் நினைக்க முடியும்.
மேலே சுட்டிக்காட்டிய வகையிலான கேள்விகளின் முழு சூத்திரப்படுத்தலும், எடுத்துக்கொண்ட புரட்சிகர நிகழ்வுப்போக்கு ஒட்டுமொத்தத்தின் இயக்கவியலிலிருந்து ஊற்றெடுப்பவை. சர்வதேச புரட்சியானது ஒன்றுக்கொன்று இணைந்த ஒரு நிகழ்போக்காக, அதன் உறுதியான நிலை மற்றும் நிகழும் வரிசையைக் கணிக்க முடியாததாக, ஆனால் அதன் பொதுவான வரலாற்று உருவரையில் முழுக்கவும் தெள்ளத் தெளிவானதாக கருதப்படுகிறது. வரலாற்று உருவரையை சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால், ஒரு சரியான அரசியல் நோக்குநிலை என்பது முழுக்கவும் கருதுவதற்கு இயலாததாகிவிடும்.
எவ்வாறாயினும், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மற்றும் ஒரு தேசத்தில் நிறைவு பெற்றுக் கொண்டிருக்கின்ற என்று கூடக் கூறலாம், சோசலிச வளர்ச்சி என்னும் சிந்தனையில் இருந்து நாம் ஆரம்பித்தால், விஷயங்கள் முற்றிலும் வேறாகத் தென்படலாம். தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை முழுமையாகக் கட்டமைத்து, முதலாளித்துவ உலகுடனான அந்த நாட்டின் உறவினை உலக பூர்சுவாவை "நடுநிலைப்படுத்துவதின்" அடிப்படையில் ஏற்படுத்த முடியும் என்பது சாத்தியமே என்று போதிக்கக் கூடிய ஒரு "தத்துவம்" இன்று நம்மிடையே இருக்கிறது (ஸ்ராலின்). புரட்சிகர-சர்வதேசியவாத நிலைப்பாட்டில் இருந்து அல்லாமல் இந்த தேசிய-சீர்திருத்தவாத அடிப்படையில் நோக்கப்படுமானால், ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் முழக்கத்திற்கான தேவை குறைந்து போகின்றது, அல்லது குறைந்த பட்சம் குறைந்து விடுகிறது. ஆனால் இந்த முழக்கம் , நமது பார்வையில், முக்கியமானது மற்றும் அதீத தேவையானது ஏனென்றால் அதில் தான் தனிமைப்பட்ட சோசலிச வளர்ச்சி தொடர்பான சிந்தனை மீதான எமது கண்டனம் பொதிந்திருக்கிறது. ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின் பாட்டாளி வர்க்கத்திற்கும், சோவியத் ஒன்றியத்தை விடவும் அதிகமான அளவில் கூட (ஆயினும் வித்தியாசம் என்பது சிறிய அளவில் மட்டுமே) புரட்சியை அண்டை நாடுகளுக்கு பரப்புவது என்பதும் அங்கே எழும் கிளர்ச்சிகளுக்கு கையில் இருக்கும் ஆயுதங்களால் ஆதரவளிப்பதும் மிகவும் முக்கியமானதாகும். இது வர்க்கங்களை தம்மால் இயங்கவைக்க முடியாத சர்வதேச ஒருமைப்பாடு குறித்த வெற்று சிந்தனைகளால் அல்லாமல் (தெளிவற்ற பரிசீலனைகளினால் அல்ல அவை அவற்றின் பண்புகளாலேயே வர்க்கங்களை இயக்கத்தில் வைக்க முடியாது) ஆனால் லெனின் நூற்றுக்கணக்கான முறை வடிவமைத்த முக்கியமான சிந்தனையான - சர்வதேச புரட்சியில் இருந்து சரியான நேரத்தில் உதவி கிட்டவில்லை என்றால், நம்மால் உயிர்வாழ முடியாது என்பதாலாகும். ஐக்கிய சோவியத் அரசுகள் முழக்கம் பாட்டாளி வர்க்க புரட்சியின் இயக்கவியலுடன் தொடர்புபட்டது, இப்புரட்சி ஒரே நேரத்தில் எல்லா நாடுகளிலும் தோன்றுவதானதல்ல, மாறாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பரவுவது, குறிப்பாக ஐரோப்பிய அரங்கத்தில் அந்த நாடுகளுக்கு இடையே நெருக்கமான உறவு அவசியப்படுகின்றது. இவை மிகவும் சக்தி வாய்ந்த வெளிப்புற எதிரிகளுக்கு எதிரான பாதுகாப்பு என்கின்ற பார்வையிலும் மற்றும் பொருளாதார கட்டுமானம் என்கின்ற பார்வை ஆகிய இரண்டு நிலைப்பாட்டிலுமாகும்.
ரூர் பிரதேச நெருக்கடிக்கு பின்வந்த காலகட்டத்தில், அது தான் இந்த முழக்கத்தை கையிலெடுப்பதற்கான சமீபத்திய உந்துதலைக் கொடுத்தது. இம்முழக்கம் ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான கிளர்ச்சியில் முக்கிய பங்காற்றவில்லை, சொல்லப்போனால் வேரூன்றக்கூடவில்லை என்று உறுதிபடக் கூறுவதன் மூலம் யாரும் ஆட்சேபம் தெரிவிக்க நிச்சயம் முயலலாம். ஆனால் இது தொழிலாளர் அரசு, சோவியத்துக்கள் மற்றும் இதுபோன்ற நேரடியான புரட்சிக்கு முந்தைய காலத்தின் அனைத்து முழக்கங்கள் தொடர்பான விஷயத்திலும் உண்மையாகவே இருக்கிறது. இதற்கான விளக்கம், 1923ம் ஆண்டு முதலே, ஐந்தாவது பேரவையின் பிழையான அரசியல் மதிப்பீடுகள் முற்றிலும் பிழையாக இருந்த நிலையிலும், ஐரோப்பிய கண்டத்தில் புரட்சிகர இயக்கம் வீழ்ச்சியடைந்துகொண்டு இருக்கிறது என்னும் உண்மையில் இருக்கிறது. ஆனால், அந்தக் காரணத்தாலேயே, அந்தக் காலத்தில் மட்டும் பெற்ற பதிவுகளைக் கருத்தில் கொண்டு ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையை, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, அமைப்பது என்பது அழிவார்ந்த செயலாகும். ஜேர்மனியில் ஒரு புரட்சிகர வெடிப்பானது எதிர்பார்க்கப்பட்ட சமயத்திலும் மற்றும் ஐரோப்பாவில் நாடுகளுக்கிடையேயான பரஸ்பர உறவுகள் குறித்த கேள்வி அதீத எரிகுணம் கொண்டிருந்த நேரத்தில், ஐக்கிய ஐரோப்பிய சோவியத் அரசுகள் முழக்கமானது சரியாக 1923ம் ஆண்டு கையிலெடுக்கப்பட்டது என்பது பல்வேறு தவறான முற்கருத்துக்கள் இருந்தாலும், தற்செயலாக நடைபெற்ற விபத்து அல்ல. ஐரோப்பிய மற்றும் உலக நெருக்கடியின் ஒவ்வொரு புதிய உக்கிரமும், முக்கிய அரசியல் பிரச்சினைகளை முன்னே கொண்டு வரும்போது, அப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஐரோப்பிய ஐக்கிய அரசுகள் முழக்கம் பலமான சக்தியுடன் முதலீடு செய்வதற்கான ஈர்ப்புவாய்ந்த சக்தியாக இருக்கும். எனவே இந்த கோஷத்தை வேலைத்திட்டத்தில் ஏற்றுக்கொள்ளாமல், அதாவது "அவசர காலங்களில்" உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று கருதி ஒரு இடத்தில் இருத்தி சத்தமில்லாமல் விட்டு விடுவது என்பது அடிப்படைத் தவறாகும். அடிப்படைக்கொள்கை குறித்த கேள்விகள் வரும்போது, ஒதுக்கிவைத்தல் என்ற நிலைப்பாடு வீணானது.