line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 1: சர்வதேச புரட்சி வேலைத்திட்டமா அல்லது தனி ஒரு நாட்டில் சோசலிசத்திற்கான வேலைத்திட்டமா?

Print part 1on single page

6. "சமூக ஜனநாயக தவறிழைப்பு" எங்கே இருக்கிறது?

எடுத்துக் காட்டப்பட்ட மேற்கோள்கள் ஸ்ராலின் மற்றும் புக்காரினின் நேற்றைய மற்றும் இன்றைய தத்துவார்த்த நிலைகளை உணரச் செய்வதற்கு போதுமானவற்றை விட அதிகமாகவே இருக்கும். ஆனால் அவர்களது அரசியல் வழிமுறைகளின் குணநலனை தீர்மானிக்க ஒன்றை நினைவுகூர வேண்டும், எதிரணியினரால் எழுதப்பட்ட அறிக்கைகளில் இருந்து, தாங்களே 1925ம் ஆண்டு வரை பேசி வந்ததற்கு நிகரானவற்றை எடுத்துக் கொண்டு (இந்த விஷயத்தில் லெனினுடன் முழுமையாக உடன்பட்டு), ஸ்ராலினும் புக்காரினும் இந்த மேற்கோள்களின் அடிப்படையில் தான் நமது "சமூக ஜனநாயக தவறிழைப்பு" தத்துவத்தினை நிலைநிறுத்துகின்றனர். அக்டோபர் புரட்சி மற்றும் சர்வதேசப் புரட்சிக்கு இடையிலான உறவுகள் குறித்த மத்திய கேள்வியில், எதிர் தரப்பினரும் ரஷ்யாவில் சோசலிச கட்டமைப்பு சாத்தியத்தை ஏற்றுக் கொள்ளாத ஓட்டோ பௌவர் கொண்டிருந்த அதே கருத்துக்களை தான் கொண்டிருந்தது போன்ற தோற்றம் நிலவுகிறது. அச்சகங்கள் 1929ல் தான் கண்டுபிடிக்கப்பட்டன, அதற்கு முன் நிகழ்ந்தவை எல்லாம் மறக்கப்பட வேண்டியவையே என்று யாரேனும் நினைத்திருக்கலாம். நிலைப்பாட்டைப் பேணும் அனைத்தும் ஞாபகசக்திக் குறைவால் போர்த்தப்படுகின்றன!

ஆனாலும், அக்டோபர் புரட்சியின் இயல்பு பற்றிய கேள்வியில், கம்யூனிச அகிலத்தினர், ஒட்டோ பௌவர் மற்றும் இரண்டாம் சர்வதேச அகிலத்தின் பிற பிலிஸ்தியர்களுடன் நான்காவது பேரவை மாநாட்டில் கணக்கை நேர் செய்து விட்டனர். மத்திய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட, புதிய பொருளாதார கொள்கைகள் மற்றும் உலக புரட்சியின் வருங்கால வாய்ப்புகள் குறித்த எனது அறிக்கையில், ஒட்டோ பௌவரின் நிலைப்பாடானது எங்களது அப்போதைய மத்திய கமிட்டியின் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்ட விதத்திற்கு நிகரான வகையில் கொண்டு செல்லப்பட்டது; இது பேரவை மாநாட்டில் எந்த தடைகளையும் எதிர்கொள்ளவில்லை மற்றும் இது இன்றும் சரியாகவே இருப்பதாகவே நான் கருதுகிறேன். புக்காரினையே பொறுத்தமட்டிலும் கூட, "நிறையத் தோழர்கள், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி உட்பட, இந்த விஷயம் குறித்து ஏற்கனவே பேசி விட்டனர்" என்று கூறி பிரச்சினையின் அரசியல் பக்கத்தை தெளிவாக்க அவர் மறுத்தார்; வேறு வார்த்தைகளில் சொல்வதானால், புக்காரின் அச்சமயத்தில் எனது பேச்சுடன் உடன்பாடு கொண்டிருந்தார். இது தான் நான்காவது பேரவை மாநாட்டில் ஒட்டோ பௌவர் குறித்து நான் கூறியது:

"சமூக ஜனநாயக தத்துவவாதிகள், இவர்கள் ஒரு பக்கத்தில் தங்கள் விடுமுறைநாள் கட்டுரைகளில் முதலாளித்துவம், அதிலும் குறிப்பாக ஐரோப்பாவில், தனது பயன்பாட்டு காலத்தை தாண்டி விட்டது, மற்றும் வரலாற்று வளர்ச்சியில் ஒரு தடையாக மாறி விட்டது என்று அங்கீகரிக்கிறார்கள், மறு பக்கத்தில் சோவியத் ரஷ்யாவின் பரிணாம வளர்ச்சியானது முதலாளித்துவ ஜனநாயகத்தின் வெற்றிக்கு தவிர்க்க இயலாமல் இட்டுச் செல்கிறது என்னும் உறுதியை வெளிப்படுத்துகிறார்கள், மிகவும் பரிதாபமான மற்றும் அற்பமான முரண்பாட்டிற்குள் விழுகிறார்கள். இந்த முட்டாள்தனமான மற்றும் அதிமேதாவித்தனமான குழப்பவாதங்கள் முழுக்கவும் அவர்களுக்கு பொருத்தமானதே. புதிய பொருளாதாரக் கொள்கையானது குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட கால மற்றும் இட சூழல்களுக்கு கணக்கிடப்படுகிறது. இது முதலாளித்துவ சுற்றுப்புறத்துக்குள் இருக்கக் கூடிய தொழிலாளர்களின் தேசத்தின் ஒரு தந்திரமாகவும் மற்றும் ஐரோப்பாவின் புரட்சிகர வளர்ச்சியின் மீது நிச்சயமாக கணக்கிடுகிறது ... காலம் போன்றதொரு இத்தகைய காரணி அரசியல் கணிப்புகளில் கருதப்படாமல் விடப்பட முடியாது. இன்னுமொரு நூறு ஆண்டுகளுக்கு அல்லது அரை நூறு ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் இந்த முதலாளித்துவம் தனது இருப்பைத் தொடர இயல நாம் அனுமதித்து, சோவியத் ரஷ்யா தனது பொருளாதாரக் கொள்கையில் அதற்கேற்றாற்போல சற்று தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், பின் இந்தக் கேள்வி தானாகவே விடையளித்துக் கொள்கிறது ஏனென்றால், இதனை அனுமதிப்பதன் மூலம், ஐரோப்பாவில் பாட்டாளி வர்க்க புரட்சியின் சீர்குலைவையும் மற்றும் முதலாளித்துவ மறுமலர்ச்சியின் புதிய யுகத்தின் எழுச்சியையும் நாம் அனுமானிக்கிறோம். எந்த அடிப்படையில் இது அனுமதிக்கப்பட வேண்டியிருக்கிறது? ஓட்டோ பௌவர் இந்நாளைய ஆஸ்திரியாவில் முதலாளித்துவ மறுஎழுச்சியின் அற்புதமான அறிகுறிகள் எதனையும் கண்டறிந்திருக்கிறார் என்றால், சொல்ல இயன்றதெல்லாம் ரஷ்யாவின் விதி முன்தீர்மானிக்கப்பட்டது என்பது மட்டுமே. ஆனால் இதுவரை நாம் எந்த அற்புதங்களையும் காணவில்லை, அல்லது நாம் அதை நம்பவும் இல்லை. நமது பார்வையைப் பொறுத்தவரை, ஐரோப்பிய நடுத்தர வர்க்கமானது தொடர்ந்து பல பத்தாண்டுகளாக தனது ஆதிக்கத்தை பராமரிக்க முடிகிறது என்றால், அது தற்போதைய உலகச் சூழலில் புதிய முதலாளித்துவ மலர்ச்சியை குறிப்பிடவில்லை, மாறாக ஐரோப்பாவின் பொருளாதார தேக்கத்தையும் கலாச்சார சரிவையும் தான் குறிப்பிடுகிறது. பொதுவாகப் பார்த்தால் இது போன்றதொரு செயல்முறை சோவியத் ரஷ்யாவை பாதாளத்தில் தள்ளி விடும் என்பதை மறுப்பதற்கில்லை. அதன்பின் அந்நாடு 'ஜனநாயக' நிலை வழியே பயணிக்க வேண்டுமா, அல்லது வேறு ஏதேனும் வழிகளில் சிதைவுற வேண்டுமா, என்பது இரண்டாம் முக்கியத்துவம் உள்ள கேள்வி. ஆனால் ஸ்பெங்க்ளரின் தத்துவத்தை கையெடுப்பதற்கான எந்த ஒரு காரணத்தையும் நாம் காணவில்லை. நாம் நிச்சயமாக ஐரோப்பாவில் புரட்சிகரமான வளர்ச்சி குறித்து எண்ணுகிறோம். புதிய பொருளாதாரக் கொள்கையானது அந்த வளர்ச்சி வேகத்தின் வெறுமனே மாறுபடுத்தப்பட்ட ஒன்றே." [32]

கேள்வியின் இந்த வடிவாக்கம் வரைவு வேலைத்திட்ட மதிப்பீட்டை நாம் தொடக்கிய புள்ளிக்கு, அதாவது, ஏகாதிபத்திய யுகத்தில் ஒரு நாட்டின் தலைவிதியை, உலக வளர்ச்சியின் போக்குகளை ஒரு ஒட்டுமொத்த அமைப்பாக, இதில் தனிநாடு அதன் அனைத்து தேசிய சிறப்பியல்புகளுடனும் சேர்க்கப்பட்டிருக்கிறது மற்றும் இதற்கு கீழ் செயல்படுகிறது, ஒரு தொடக்க புள்ளியாக எடுத்துக் கொள்ளும் வழியில் அன்றி வேறு எந்த வகையிலும் அணுகுவது சாத்தியமில்லாதது, என்பதற்கு நம்மை திரும்பவும் அழைத்து வருகிறது. இரண்டாம் அகிலத்தின் தத்துவார்த்தவாதிகள் சோவியத் யூனியனை உலக அலகில் இருந்து மற்றும் ஏகாதிபத்திய யுகத்தில் இருந்து விலக்குகிறார்கள்; அவர்கள் சோவியத் யூனியன் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாடாக, பொருளாதார "முதிர்ச்சி" என்னும் மொட்டையான ஒரு பண்புக்கூறினை அளிக்கின்றனர்; சுதந்திரமான சோசலிச கட்டமைப்பிற்கு சோவியத் யூனியன் பக்குவமடைய இல்லை என்று அறிவித்து, இதில் இருந்து தொழிலாளர் அரசின் முதலாளித்துவ சீரழிவின் தவிர்க்கவியலா தன்மை என்ற முடிவிற்கு இவர்கள் வருகின்றனர்.

இதே தத்துவார்த்த அடிப்படையை எடுத்துக் கொண்டுள்ள வரைவு வேலைத்திட்ட ஆசிரியர்கள் சமூக ஜனநாயக தத்துவார்த்தவாதிகளின் இயங்காவியல் வழிமுறையை (Metaphysical Methodology) மூட்டை முடிச்சுகளுடன் அப்படியே எடுத்துக் கொண்டு விட்டுள்ளனர். அவர்களும் ஒன்றுபட்ட உலகத்திலும் இருந்து மற்றும் ஏகாதிபத்திய யுகத்தில் இருந்தும் "பிரித்தெடுக்கின்றனர்". அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வளர்ச்சி என்னும் கற்பனையில் இருந்து தொடர்கின்றனர். அவர்கள் உலக புரட்சியின் தேசியக் கட்டத்திற்கு ஒரு மொட்டையான பொருளாதார பண்புக்கூறினை மேல்செலுத்துகின்றனர். ஆனால் அவர்கள் கொண்டு வரும் "தீர்ப்போ" வேறாக உள்ளது. வரைவு ஆசிரியர்களின் "இடதுசாரித்தன்மையானது" அவர்கள் சமூக ஜனநாயக மதிப்பீடுகளை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போடும் உண்மையில் கிடக்கிறது. இருப்பினும், இரண்டாம் சர்வதேச அகிலத்தின் தத்துவார்த்தவாதிகளின் நிலைப்பாடானது, நீங்கள் விரும்பும் வகையில் இதனை மறுமாற்றம் செய்து கொள்ளலாம் என்பது, மதிப்பு இல்லாததாகவே தொடர்கிறது. பௌவரின் மதிப்பீடு மற்றும் பௌவரின் கணிப்பு ஆராய்ச்சியை மழலையர் பள்ளி பயிற்சிகள் என வெறுமனே ஒதுக்கித் தள்ளும் லெனினின் நிலைப்பாட்டை ஒருவர் கைக்கொள்ள வேண்டும்.

இப்படித் தான் "சமூக ஜனநாயக தவறிழைப்பு" குறித்த விஷயங்கள் இருக்கின்றன. நாமல்ல, வரைவின் ஆசிரியர்கள் தான் தங்களை பௌவருடன் தொடர்புள்ளதாக கருதிக்கொள்ள வேண்டும்.