line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 1: சர்வதேச புரட்சி வேலைத்திட்டமா அல்லது தனி ஒரு நாட்டில் சோசலிசத்திற்கான வேலைத்திட்டமா?

Print part 1on single page

8. உற்பத்தி சக்திகளுக்கும் தேசிய எல்லைகளுக்கும் இடையிலான முரண்பாட்டின் நிமித்தமாக "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" எனும் பிற்போக்கு கற்பனாவாத தத்துவம்

தனியொரு நாட்டில் சோசலிசம் தத்துவத்தின் அடிப்படை என்பது, நாம் பார்த்தது போல், ஒரு பக்கத்தில் லெனினில் இருந்து எடுக்கப்பட்ட பல வரிகளின் குதர்க்கமான விளக்கங்களுக்கும், மற்றொரு பக்கத்தில் "சமச்சீரற்ற வளர்ச்சி விதி" குறித்த அறிவாராய்ச்சி விளக்கத்திற்கும் சென்று முடிகிறது. வரலாற்றுரீதியான விதி மற்றும் கேள்வியிலுள்ள மேற்கோள்களின் சரியான விளக்கங்களை அளிப்பதன் மூலம் நாம் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மற்றும் ஸ்ராலின் மற்றும் புக்காரின் உள்ளிட்ட நம் அனைவராலும் 1925ம் ஆண்டு வரை எட்டப்பட்டிருந்த முடிவிற்கு நேர் எதிரான ஒரு முடிவிற்கு வருகிறோம்.

சமச்சீரற்ற தொடர்ச்சியற்ற முதலாளித்துவ வளர்ச்சியில் இருந்து சோசலிச புரட்சியின் ஒரேசமயத்ததாக அல்லாத, சமநிலையற்ற மற்றும் தொடர்ச்சியற்ற தன்மை வருகிறது; பல்வேறு நாடுகள் தங்களுக்கு இடையே கொண்டிருக்கும் பரஸ்பர சார்பின் அதீத உறுதித்தன்மையில் இருந்து தனியொரு நாட்டில் சோசலிசத்தை கட்டமைப்பதற்கான அரசியல் சாத்தியமின்மை மட்டுமல்லாது பொருளாதார சாத்தியமின்மையும் எழுகிறது.

இந்தக் கோணத்தில் இருந்து வேலைத்திட்டத்தின் விடயங்களை இன்னும் கொஞ்சம் நெருக்கமாக ஆராயலாம். அறிமுகத்தில் நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம்:

"ஏகாதிபத்தியமானது ... உலகப் பொருளாதாரத்தின் தேசிய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் தேசிய அரசு தடைகளுக்கும் இடையிலான முரண்பாட்டை ஒரு மிதமிஞ்சிய அளவுக்கு மேலும் மோசமாக்குகிறது."

இந்த முன்மொழிவு தான் சர்வதேச வேலைத்திட்டத்தின் மையக்கல்லாக, அல்லது அவ்வாறானதானதாக எண்ணப்படும் நோக்கத்தோடு, இருந்தது என்று நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். திட்டவட்டமாக இந்த முன்மொழிவு தனி ஒரு நாட்டில் சோசலிசம் எனும் தத்துவத்தை முன்கூட்டியே ஒரு பிற்போக்கான தத்துவம் என விலக்கி, நிராகரித்து துடைத்தெறிகின்றது, ஏனெனில் அது உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியின் அடிப்படைப் போக்கினை சமரசத்திற்கு இடம் கொடாமல் எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், இந்த அபிவிருத்தியால் ஏற்கனவே அடையப்பட்டிருக்கும் சடரீதியான விளைவுகளையும் சமரசமின்றி எதிர்க்கிறது. உற்பத்தி சக்திகள் தேசிய எல்லைகளுக்கு இணக்கமற்றவையாக உள்ளன. இதனால் தான் வெளிநாட்டு வர்த்தகம், ஆட்கள் மற்றும் மூலதனத்தின் ஏற்றுமதி, பிரதேசங்களை கைப்பற்றல், காலனித்துவ கொள்கை, மற்றும் கடைசி ஏகாதிபத்திய யுத்தம் மட்டுமல்லாமல், ஒரு தன்னிறைவு பெற்ற சோசலிச சமுதாயத்தின் பொருளாதார ரீதியான சாத்தியமின்மையும் எழுகிறது. முதலாளித்துவ நாடுகளின் உற்பத்தி சக்திகள், தேசிய எல்லைகளை தாண்டிச்சென்று வெகு காலமாகி விட்டன. எனினும், விவசாயம் உள்ளிட்ட உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் மின்சாரம் மற்றும் இரசாயனத்தை பயன்படுத்தி, நவீன தொழில்நுட்பத்தின் மிக உயர்ந்த கூறுகளை ஒன்றிணைத்து, பொதுமைப்படுத்தி மற்றும் மிக உயர்ந்த வளர்ச்சிக்கு கொண்டு வருவதன் மூலம் சோசலிச சமுதாயமானது அதி உயர்ந்த வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்திகளின் மீதுதான் கட்டமைக்கப்பட முடியும். மார்க்ஸ் முதலாகவே, நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், முதலாளித்துவத்தால், அதனால் எழுச்சி அளிக்கப்பட்ட, பூர்சுவா தனியார் சொத்துடைமையின் உரிமைகளின் பாதுகாப்பினை வழங்குவது மட்டுமல்லாமல், 1914 போர் காட்டியதைப் போல, பூர்சுவா அரசின் தேசிய விலங்குகளையும் சுக்குநூறாக உடைக்கின்ற, புதிய தொழில்நுட்பத்தின் பாய்ச்சலுடன் ஒன்றிணைந்து செல்ல முடியாது என்பதை காட்டியது. இருந்தாலும், மிக உயர்ந்த வளர்ச்சி பெற்ற உற்பத்தி சக்திகளை முதலாளித்துவத்திடம் இருந்து சோசலிசம் கைப்பற்றினால் மட்டும் போதாது, உடனடியாக அவற்றை மேலும் முன்னெடுத்துச் சென்று, அதற்கும் உயர்வான ஒரு நிலைக்கு எடுத்துச் சென்று முதலாளித்துவத்தின் கீழ் அறிந்திராத ஒரு வளர்ச்சி நிலையை அவற்றிற்கு அளிக்க வேண்டும். இப்போது கேள்வி எழுகிறது: அப்படியானால், முதலாளித்துவத்தின் கீழ் தீவிரமாக உடைத்து நொருக்க முயன்ற ஒரு தேசிய அரசுக்குள் உற்பத்தி சக்திகளை சோசலிசம் எவ்வாறு மீண்டும் கொண்டு செல்லப்போகிறது? அல்லது ஒருவேளை நாம், ''கட்டுக்கடங்காத'' உற்பத்திசக்திகள் என்ற கருத்தை தேசிய எல்லைகளுக்குள் விட்டுவிட மற்றும் அதன் விளைவாக தனியொரு நாட்டில் சோசலிச தத்துவத்தின் எல்லைகளும் விட்டுவிட கடமைப்பட்டு, ஒடுக்கப்பட்ட மற்றும் பிராந்திய ரீதியான உற்பத்தி சக்திகள் என்று சொல்லத்தக்க, அதாவது, பொருளாதார பின்தங்கிய நிலையின் தொழில்நுட்பத்திற்கு நம்மை குறுக்கிக் கொள்வோமா, மற்றும் நம்மை மட்டுப்படுத்திக் கொள்வோமா? அவ்வாறெனில், தொழிற்துறையின் பல கிளைகளில் வளர்ச்சி முன்னேற்றத்தை நாம் இப்போதே நிறுத்தி விட்டு, பூர்சுவா ரஷ்யாவை உலகப் பொருளாதாரத்துடன் பிரிக்கவியலாத பந்தத்தில் இணைக்கச் செய்த, அதனை அரசு எல்லைகளை விட அதிகமாக வளர்ந்து விட்ட உற்பத்தி சக்திகளுக்காக தனது எல்லைகளை விரிவாக்கும் ஏகாதிபத்திய சீரழிவின் மையப் புள்ளிக்கு அழைத்துச் சென்ற, தற்போதைய பரிதாபமான தொழில்நுட்ப நிலையை விடவும் கீழிறங்கிச் செல்ல வேண்டும்.

இந்த உற்பத்தி சக்திகளை மரபுவழி பெற்று மீண்டும் உபயோகத்திற்கு கொண்டுவருகையியல், தொழிலாளர் அரசானது இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் நிர்ப்பந்திக்கப்படுகிறது.

பிரச்சினையானது, வரைவு வேலைத்திட்டம் தனது உரைக்குள், தேசிய எல்லைகளுடன் நவீன முதலாளித்துவ தொழில்நுட்பத்தின் இணக்கமற்ற தன்மை குறித்த ஆராய்ச்சி அறிக்கையை எந்திரரீதியாக செலுத்தி விட்டு, பின்னர் இந்த இணக்கமற்ற தன்மை குறித்த கேள்வியே எழாதது போல வாதம் தொடர்வதுதான். உண்மையில் மொத்த வரைவுமே, மார்க்ஸ் மற்றும் லெனினில் இருந்து எடுக்கப்பட்ட ஆயத்த புரட்சிகர ஆராய்ச்சி அறிக்கைகள் மற்றும் இந்த புரட்சிகர ஆராய்ச்சி அறிக்கைகளுடன் முழுக்கவும் இணக்கமற்ற சந்தர்ப்பவாத மற்றும் மத்தியவாத முடிவுகளின் கூட்டுச் சேர்க்கையாகவே உள்ளது. இதனால் தான், வரைவில் அடங்கியுள்ள தனிமைப்பட்ட புரட்சிகர சூத்திரங்களால் கவனம் ஈர்க்கப்படாமல், அதன் முக்கியப் போக்குகள் எங்கு இட்டுச் செல்லுகின்றன என்பதை உன்னிப்பாகக் கவனிப்பது அவசியமாகிறது.

"ஒரு தனிமைப்பட்ட முதலாளித்துவ நாட்டில்" சோசலிசத்தின் வெற்றியின் சாத்தியம் குறித்துப் பேசும் முதலாவது அத்தியாயத்தின் பகுதி குறித்து ஏற்கனவே நாங்கள் மேற்கோள் காட்டியிருக்கிறோம். இந்த சிந்தனையானது நான்காவது அத்தியாயத்தில் இன்னமும் கடுமையானதாக மற்றும் கூர்மையாக சூத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது, அது கூறுகிறது:

"உலகப் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமானது [?] ... புதிதாக உருவான பாட்டாளி வர்க்க குடியரசுகளானது ஏற்கனவே உள்ளவற்றுடன் சேர்ந்து ஒரு கூட்டமைப்பினை ஸ்தாபிக்கும்போது, தனி நாடுகளில் சோசலிசத்தின் வெற்றியின் [?] விளைவாக மட்டுமே உணரப்பட முடியும்."

"சோசலிசத்தின் வெற்றி" என்னும் வார்த்தைகளை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதின் மற்றுமொரு வெளிப்பாடு என்று மட்டுமே நாம் புரிந்து கொள்வோமானால், அதன்பின் நம்மால் யாராலும் மறுக்க முடியாத மற்றும் குறைவான ஐயப்பாடுகளுடன் சூத்திரப்படுத்தப்பட்ட ஒரு பொதுவான கூற்றுக்கு வர முடியும். சோசலிசத்தின் வெற்றி மூலம், அவர்கள் வெறுமனே அதிகாரத்தைக் கைப்பற்றுவது மற்றும் உற்பத்திக் கருவிகளை தேசியமயமாக்குவதை மட்டும் குறிப்பிடவில்லை, மாறாக தனி ஒரு நாட்டில் சோசலிச சமுதாயத்தை கட்டமைப்பதையும் தான். இந்த விளக்கத்தை நாம் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், பின்னர் சர்வதேச உழைப்பு பிரிவினையின் அடிப்படையிலானதொரு உலக சோசலிச பொருளாதாரம் நமக்குக் கிட்டாது, மாறாக அரசற்ற நிலை நோக்கினால் ஆசீர்வதிக்கப்பட்ட தன்னிறைவு பெற்ற சோசலிச கம்யூன்களின் கூட்டமைப்பு தான் கிடைக்கும், ஒரே வித்தியாசம் இந்த கம்யூன்கள் தற்போதைய தேசிய அரசுகளைவிட அளவில் விரிந்துபட்டதாக இருக்கும்.

புதிய சூத்திரப்படுத்தலை பழைய மற்றும் வழக்கமான சூத்திரங்கள் மூலம் பல்தரப்பட்ட வழிகளிலும் மறைக்கும் தனது சங்கடமளிக்கும் உந்துதலில், வரைவு வேலைத்திட்டமானது பின்வரும் ஆராய்ச்சி அறிக்கையில் புகலிடம் தேடுகிறது:

"பாட்டாளி வர்க்கத்தின் முழுமையான உலக வெற்றிக்கும், அதன் உலக சக்தியின் பலப்படுத்துதலுக்கும் பின்னர் தான் உலக சோசலிச பொருளாதாரத்தின் தீவிரமான கட்டுமானத்தின் நீண்ட சகாப்தமானது தொடரும்." (Ch.4)

தத்துவார்த்த கேடயமாக பயன்படுத்தப்பட்டுள்ள இந்தக் கொள்கைக்கூற்றானது உண்மையில் அடிப்படையான முரண்பாட்டை வெளிக்கொணரும் பணியையே செய்கிறது. தனித்துவமான சோசலிச கட்டுமான சகாப்தமானது குறைந்தது பல முன்னேறிய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்குப் பின்னர் தான் தொடங்க முடியும் என்று ஆய்வு அறிக்கை கூறுவதாகப் பொருள் கொள்வதாக இருந்தால், இது முற்றிலும் தனியொரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டுமானம் செய்யும் கருத்தாக்கத்தை நிராகரிப்பதாகும், மற்றும் மார்க்ஸ் மற்றும் லெனின் கொண்டிருந்த நிலைக்குத் திரும்புவதாகும். ஆனால் வரைவு வேலைத்திட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்நிறுத்தப்படும் ஸ்ராலின் மற்றும் புக்காரினின் புதிய கருத்தாக்கத்தை நாம் புறப்பாட்டு புள்ளியாக கொள்வதாக இருந்தால், எமக்குப் பின்வரும் பரிமாணம் கிடைக்கிறது: உலக பாட்டாளி வர்க்கத்தின் முழு உலக வெற்றி கிட்டும் வரை ஏராளமான நாடுகள் தனித்தனியாக தங்கள் நாடுகளில் முழு சோசலிசத்தைக் கட்டமைப்பார்கள், தொடர்ந்து இந்த சோசலிச நாடுகளில் இருந்து ஒரு உலக சோசலிச பொருளாதாரம் கட்டுமானம் செய்யப்படும். இது குழந்தைகள் எற்கனவே தயாரிக்கப்பட்ட சம அளவிலான வடிவங்களை கொண்டு கட்டடங்களை எழுப்புவார்களே அதைப் போல உள்ளது. உண்மையில் பார்க்கப் போனால், உலக சோசலிச பொருளாதாரமானது தேசிய சோசலிச பொருளாதாரங்களின் மொத்த கூட்டாக இருக்கவே இருக்காது. முதலாளித்துவத்தின் முழு முந்தைய வளர்ச்சியால் உருவாக்கப்பட்டிருக்கும் சர்வதேச உழைப்பு பிரிவின் இடத்தில் மட்டுமே இது தன் அடிப்படை சாராம்சங்களில் வடிவம் கொள்ள முடியும். இது தன் அத்தியாவசிய அடிப்படைகளில், ஏராளமான தனித்தனி நாடுகளில் "முழுமையான சோசலிசத்தை" கட்டுமானம் செய்தபின் அமைக்கப்படவும் கட்டுமானம் செய்யப்படவும் முடியாது, மாறாக பல பத்தாண்டு காலங்கள் தேவையான உலக பாட்டாளி வர்க்க புரட்சியின் புயல்களிலும் சூறாவளிகளிலும் தான் அமைக்கப்படவும் கட்டுமானம் செய்யப்படவும் முடியும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பெறும் முதலாவது நாடுகளின் பொருளாதார வெற்றியானது, ஒரு தன்னிறைவு பெற்ற "முழுமையான சோசலிசத்தை" அவை எந்த அளவுக்கு நெருங்கியிருக்கின்றன என்பதைப் பொறுத்து அல்லாமல், அந்த சர்வாதிகாரத்தின் அரசியல் உறுதித்தன்மையைப் பொறுத்தும், மற்றும் எதிர்கால உலக சோசலிச பொருளாதாரத்திற்கான பிரிவுகளை தயாரிப்பு செய்வதில் சாதித்துள்ள வெற்றிகளைப் பொறுத்தும் தான் கணக்கிடப்படும்.

இந்த திருத்தல்வாத கருத்தானது இன்னும் கூடுதல் தீர்க்கமாகவும் இவ்வாறானதாக இன்னும் கூடுதலாக தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது, அது சாத்தியமென்றால், ஐந்தாவது அத்தியாயத்தில், அவர்கள் திரித்துக் கூறும், லெனினின் மரணத்துக்குப் பிந்தைய கட்டுரையின் ஒன்றரை வரிகளுக்கு பின்னால் மறைந்து கொண்டு, வரைவின் ஆசிரியர்கள் இவ்வாறு பிரகடனப்படுத்துகிறார்கள்: சோவியத் யூனியன்

"...நிலப்பிரபுக்களையும் பூர்சுவாக்களையும் தூக்கி எறிவதற்கு மட்டுமல்லாமல் சோசலிசத்தின் முழுமையான கட்டுமானத்திற்கும் தேவையான மற்றும் போதுமான சடத்துவ முன்நிபந்தனைகளை தன் நாட்டிற்குள்ளேயே கொண்டிருக்கிறது."

எந்த சூழ்நிலைகளின் புண்ணியத்தால் நாம் இத்தகைய அசாதாரண வரலாற்று அனுகூலங்களை பெற்றிருக்கிறோம்? இந்த விஷயத்தில் வரைவின் இரண்டாவது அத்தியாயத்தில் நாங்கள் ஒரு பதிலைக் காண்கிறோம்:

"ஏகாதிபத்திய கூட்டணியானது அதன் பலவீனமான இணைப்பில், ஜாரிச ரஷ்யாவில் உடைக்கப்பட்டது."

இது லெனினின் அற்புதமான சூத்திரம். இதன் அர்த்தமானது, ரஷ்யாதான் ஏகாதிபத்திய அரசுகளில் மிகவும் பின்தங்கியது மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனமானது என்பதாகும். மிகச்சரியாக இந்த காரணத்தால்தான், நாட்டின் பற்றாக்குறையான உற்பத்தி சக்திகளின் மீது தாங்கவியலா அளவுக்கு சுமைகளை அவர்கள் ஏற்றியதால், இந்த நாட்டின் ஆளும் வர்க்கம், தான் வீழ்ச்சியுறுவதில் முதலாவதாக இருந்தது. சமசீரற்ற, தொடர்ச்சியற்ற வளர்ச்சியானது இவ்வாறாக மிகவும் பின்தங்கிய ஏகாதிபத்திய நாட்டின் பாட்டாளி வர்க்கத்தை முதலாவதாக அதிகாரத்தை கைப்பற்ற செய்ய நிர்ப்பந்தித்தது. துல்லியமாக இந்த காரணத்தால் தான் "பலவீனமான இணைப்பின்" தொழிலாள வர்க்கம் முன்னேறிய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்துடன் ஒப்பிடும்போது சோசலிசத்தை நோக்கிய தனது முன்னேற்றத்தில் மிகப்பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் என்று நாம் முன்னர் கற்பிக்கப்பட்டோம். முன்னேறிய நாடுகளின் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதில் கூடுதலான சிரமத்தையே எதிர்கொள்வார்கள். ஆனால் அவர்கள் நாம் நமது பின்தங்கிய நிலையைக் கடப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே அதிகாரத்தை கைப்பற்றி விட்ட நிலையில், அவர்கள் நம்மை முந்திச் செல்வார்கள் என்பதோடு மட்டுமல்லாமல், உயர்ந்த உலக தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச உழைப்புப் பிரிவின் அடிப்படையில் உண்மையான சோசலிச கட்டுமானப் புள்ளியை நோக்கி நம்மை கொண்டு செல்லும் வண்ணம் நம்மையும் சுமந்து செல்வார்கள். அக்டோபர் புரட்சியில் இறங்கிய போது எங்களது சிந்தனையாக இதுதான் இருந்தது. கட்சி இந்த சிந்தனையை பத்திரிகைகள் மற்றும் கூட்டங்களில் பத்து முறைகள், இல்லையில்லை, நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான முறைகள் சூத்திரப்படுத்தியிருக்கிறது, ஆனால் 1925 முதல் அதற்கு நேர் எதிரான கருத்தை பதிலீடு செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முந்தைய ஜாரிச ரஷ்யா "பலவீனமான இணைப்பாக" இருந்தது என்கிற உண்மையே, ஜாரிச ரஷ்யாவின் அத்தனை பலவீனங்களுடனும் அதன் மரபுவழிவந்த சோவியத் ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கத்திற்கு, ஒரு கணக்கிட முடியாத அனுகூலத்தை, சொல்லப் போனால், "சோசலிசத்தின் முழுமையான கட்டுமானத்திற்கு" தேவையான தனது சொந்த தேசிய முன்நிபந்தனைகளில் கொஞ்சம் கூட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கொண்டிருக்காததொரு நிலையை அளிக்கிறது என்று நாம் இப்போது அறிந்து கொள்கிறோம்.

தனது உற்பத்தி சக்திகளின் மிதமிஞ்சிய வளர்ச்சிக்கு தேவையான மூலப் பொருட்களை வழங்கவும் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யவும் ஏறக்குறைய ஒட்டுமொத்த உலகமும் அவசியப்படுகின்ற துரதிர்ஷ்டம் காரணமாக பிரிட்டனுக்கு இந்த அனுகூலம் இல்லை. பிரிட்டனின் உற்பத்தி சக்திகள் கூடுதல் "மிதமானதாக" இருந்திருந்து, அவை தொழில்துறை மற்றும் விவசாயத்திற்கு இடையே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதொரு சமநிலையையும் பராமரித்திருக்குமேயானால், பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கமானது தனது சொந்த "தனிமைப்படுத்தப்பட்ட" தீவில், அந்நியத் தலையீட்டில் இருந்து தனது கடற்படையால் பாதுகாக்கப்பட்ட நிலையில், முழு சோசலிசத்தை கட்டமைத்திருக்கலாம் என்பது வெளிப்படையானதே.

வரைவு வேலைத்திட்டமானது, தனது நான்காவது அத்தியாயத்தில், முதலாளித்துவ அரசுகளை மூன்று குழுக்களாக பிரிக்கிறது:

1. "உயர்ந்த வளர்ச்சியுற்ற முதலாளித்துவ நாடுகள் (அமெரிக்கா, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற பல)";

2. "முதலாளித்துவ வளர்ச்சியில் மத்திய நிலையில் உள்ள நாடுகள் (1917க்கு முந்தைய ரஷ்யா, போலந்து, போன்ற பல)";

3. "காலனித்துவ மற்றும் அரைக்-காலனித்துவ நாடுகள் (சீனா, இந்தியா, போன்ற பல)."

"1917க்கு முன்னதான ரஷ்யா" இன்றைய அமெரிக்காவை விட இன்றைய சீனாவுக்கு அதிக ஒற்றுமையில் இருந்தது என்பது உண்மைதான் என்றாலும், வரைவின் பிற பகுதிகள் தொடர்பானவற்றில், இது தவறான முடிவுகளுக்கான ஆதாரமாக இல்லாதிருந்திருந்தால், இந்த வகைப்பிரிப்புக்கு யாரும் தீவிரமான எதிர்ப்பினைக் காட்டுவதை தவிர்த்திருக்க முடியும். "மத்திய நிலை"யிலுள்ள நாடுகள் சுதந்திரமான சோசலிச கட்டுமானத்திற்கு "போதுமான தொழில்துறையின் குறைந்தபட்ச அவசியங்களை" கொண்டிருப்பதாக வரைவில் பிரகடனப்பட்டிருக்கும் அளவில், உயர் முதலாளித்துவ வளர்ச்சி பெற்ற நாடுகளிலும் இது அவ்வாறே உண்மையாக இருக்கிறது. காலனித்துவ மற்றும் அரைக்காலனித்துவ நாடுகள் மட்டும் தான் வெளியிலிருந்தான உதவி தேவைப்படுவனவாக இருக்கின்றன. நாம் பின்னால் பார்க்க இருப்பது போல், துல்லியமாக இவ்வாறு தான் வரைவு வேலைத்திட்டத்தின் மற்றொரு அத்தியாயத்தில் அவை பண்பிட்டு காட்டப்படுகின்றன.

இருந்தாலும், சோசலிசக் கட்டுமானப் பிரச்சினைகளை, நாட்டின் இயற்கை வளங்கள், அதற்குள் இருக்கும் தொழில் மற்றும் விவசாயத்திற்கான இணைத்தொடர்பு, உலக பொருளாதார அமைப்பில் இதன் இடம் இவற்றையெல்லாம் விலக்கி வைத்து விட்டு, இந்த அளவுகோல் மூலம் மட்டும் நாம் அணுகுவோமேயானால், கொஞ்சமும் குறைச்சலில்லாத பெரும் தவறுகள் மற்றும் முரண்பாடுகளுக்குள் விழுவோம். இப்போது தான் இங்கிலாந்து குறித்து பேசியிருக்கிறோம். ஒரு உயர் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், துல்லியமாக இந்தக் காரணத்தாலேயே, இதற்கு தனது சொந்த தீவு எல்லைகளுக்குள் வெற்றிகரமாக சோசலிசத்தை கட்டுமானம் செய்யும் எந்த வாய்ப்பும் இல்லை. முற்றுகையிடப்படுமானால், சில மாதங்களிலேயே இங்கிலாந்து திக்குமுக்காடி விடும்.

உறுதியாகச் சொல்ல வேண்டுமென்றால், பிற அனைத்து நிலைமைகளும் சமமாக இருக்கும் நிலையில், மிக உயர்ந்த முன்னேறிய உற்பத்தி சக்திகள் சோசலிசக் கட்டுமான நோக்கங்களுக்கு மிகப்பெரும் அனுகூலத்தைக் கொண்டுள்ளன. போர் சமயத்தில் பூர்சுவா ஜேர்மனியில் நாம் கண்டது போல் ஒரு முற்றுகை வளையத்தால் சூழப்படும் நிலையிலும் கூட இது ஒரு குறிப்பிடத்தக்க நெகிழ்வுத்திறனுடனான பொருளாதார வாழ்க்கையை அளிக்கின்றன. ஆனால் சோசலிசத்தை தேசிய அடிப்படையில் கட்டுமானம் செய்வது, இந்த முன்னேறிய நாடுகளைப் பொறுத்தவரை ஒரு பொதுவான வீழ்ச்சியை, உற்பத்தி சக்திகளின் மொத்த சரிவை, சொல்வதானால், சோசலிசப் பணிகளுக்கு நேர் எதிரான ஒன்றினையே அடையாளப்படுத்துகிறது.

வரைவு வேலைத்திட்டமானது நடப்பு உற்பத்தி சக்திகள் மற்றும் தேசிய எல்லைகளுக்கு இடையிலான இணக்கமற்ற தன்மை பற்றிய அடிப்படை ஆய்வு அறிக்கையை மறந்து விடுகிறது, இதிலிருந்து தான் அதற்கான காரணம் தலைகீழாக இருந்தாலும், தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டுமானம் செய்வதில் உயர் வளர்ச்சி பெற்ற உற்பத்தி சக்திகள், குறைவான வளர்ச்சிபெற்ற உற்பத்தி சக்திகளை விட எந்த வகையிலும் குறைவானதொரு தடைக்கல்லாக இல்லாதுள்ளது. அதாவது, குறைவான வளர்ச்சிபெற்ற உற்பத்தி சக்திகள், அடிப்படையாக பணியாற்றுவதற்கு போதாததாக இருக்கும் அதேவேளையில், உயர் வளர்ச்சி பெற்ற உற்பத்தி சக்திகளுக்கு அந்த அடிப்படையே தேவைக்கு குறைவானது என நிரூபிக்கும். சமச்சீரற்ற வளர்ச்சி விதியானது அது மிகவும் தேவையானதும் அவசியமானதுமான மிகவும் முக்கியமானதொரு தருணத்தில் துல்லியமாக மறக்கப்படுகிறது.

சோசலிசத்தைக் கட்டுமானம் செய்யும் பிரச்சினையானது வெறுமனே ஒரு நாட்டின் தொழிற்துறை "முதிர்ச்சி" அல்லது "முதிர்ச்சியின்மை" மூலம் நிறைவேறி விடுவதில்லை. இந்த முதிர்ச்சியின்மையே கூட சமச்சீரற்றதே. சோவியத் ரஷ்யாவில், தொழில்துறையின் சில கிளைகள் மிக அடிப்படையான உள்நாட்டு தேவைகளை (குறிப்பாக இயந்திர கட்டுமானம்) பூர்த்தி செய்ய முற்றிலும் திறன்குறைந்தவையாக இருக்கின்றன, இதற்கு மாறானதாக மற்ற கிளைகள் நடப்பு சூழலில் விரிவான மற்றும் அதிகரிக்கும் ஏற்றுமதி இல்லாமல் வளர்ச்சியுற முடியாது. பிந்தையதில் விவசாயம் தவிர மிக முக்கியத்துவம் வாய்ந்த கிளைகளான மரம், எண்ணெய், மற்றும் மாங்கனீசு ஆகியவை உள்ளன. மற்றொரு பக்கத்தில் இந்த "திறன்குறைந்த" கிளைகளும் கூட இந்த "அதிக வளம் கொழிப்பவை" (ஒப்பீட்டில்) ஏற்றுமதி செய்ய இயலாமல் போகும்போது குறிப்பிடத்தக்களவு வகையில் வளர்ச்சியுற முடியாது. ஒரு தனிமைப்பட்ட சோசலிச சமுதாயத்தை கட்டுமானம் செய்வதின் சாத்தியமின்மை, ஒரு கற்பனை உலகில் அல்லது அட்லான்டிஸில் (கிரேக்க கற்பனை தீவு) அல்ல மாறாக நமது புவிசார்ந்த பொருளாதாரத்தின் உறுதியான பூகோள மற்றும் வரலாற்று சூழல்களால் -சில கிளைகளின் பற்றாக்குறை வளர்ச்சி மூலம் மற்றும் பிறவற்றின் "மிதமிஞ்சிய" வளர்ச்சியின் மூலம், வெவ்வேறு நாடுகளுக்கும் மாறுபட்ட வழிகளில் தீர்மானிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, நவீன உற்பத்தி சக்திகள் தேசிய எல்லைகளுடன் இணக்கமற்றதாக உள்ளன என்பதே இதன் பொருளாகும்.

"ஏகாதிபத்திய யுத்தம் என்னவாக இருந்தது? பூர்சுவா சொத்துடமை வடிவங்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், முதலாளித்துவ தேசங்களின் எல்லைகளுக்கு எதிராகவுமான உற்பத்தி சக்திகளின் கிளர்ச்சியாக இது இருந்தது. உற்பத்தி சக்திகள், தேசிய அரசுகளின் எல்லைகளுக்குள் தாங்கவியலா வண்ணம் நெருக்கப்படுகின்றன என்ற உண்மையையே ஏகாதிபத்திய யுத்தம் வெளிப்படுத்தியது. முதலாளித்துவம், அதுவே வளர்த்து விடுவதாய் இருந்தாலும், உற்பத்தி சக்திகளைக் கட்டுப்படுத்தும் திறனற்றது என்பதையும், சோசலிசம் மட்டுமே, ஒரு உயர் பொருளாதார வடிவத்திற்குள்ளாக முதலாளித்துவ அரசுகளின் எல்லைகளை தாண்டி வளர்ந்து விட்ட உற்பத்தி சக்திகளை ஒருங்கிணைத்து தன்னுள் கொண்டிருக்கும் திறன் படைத்தது என்பதையும் நாங்கள் எப்போதும் கூறி வந்திருக்கிறோம். தனிமைப்பட்ட அரசுக்கு மீண்டும் இட்டுச் செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு விட்டிருக்கின்றன ..." [38]

ஒரு நாட்டில் சோசலிச தத்துவத்தை நிரூபிக்க முயற்சித்த வரைவு வேலைத்திட்டமானது இருமடங்கு, மும்மடங்கு, மற்றும் நான்கு மடங்கு தவற்றினை இழைக்கிறது: இது சோவியத் ரஷ்யாவின் உற்பத்தி சக்திகளை மிகைப்படுத்துகிறது; தொழில்துறையின் பல்வேறு கிளைகளின் சமச்சீரற்ற வளர்ச்சி விதிக்கு தனது கண்களை மூடிக் கொள்கிறது; இது சர்வதேச உழைப்பு பிரிவினையை புறக்கணிக்கிறது, மற்றும் இறுதியாக, ஏகாதிபத்திய சகாப்தத்தில் உள்ளார்ந்திருக்கும் மிக முக்கிய முரண்பாடான உற்பத்தி சக்திகளுக்கும் தேசிய எல்லைகளுக்கும் இடையிலான முரண்பாட்டை மறந்து விடுகிறது.

எந்த ஒரு ஒற்றை வாதத்தையும் ஆராயாமல் விட்டுவிடக் கூடாது என்பதால் நமக்கு, புதிய தத்துவத்திற்கு ஆதரவான மற்றுமொரு, பொதுமைப்படுத்தப்பட்ட புக்காரினது முன்மொழிவினை மீண்டும் எடுப்பது பாக்கி இருக்கிறது.

புக்காரின் கூறுகிறார், உலக அளவில் பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புபடுத்தலானது சோவியத் ரஷ்யாவில் இருப்பதை விடவும் இனியும் கூடுதல் சாதகமானதாக இல்லை. இதன் காரணமாக, பின்தங்கிய நிலைமையின் காரணங்களால் சோவியத் ரஷ்யாவில் சோசலிசத்தை கட்டுவது செய்வது சாத்தியமில்லை என்றால், உலகப் பொருளாதார அளவில் கைகூடுதல் என்பதும் அதே அளவுக்கு சாத்தியமில்லைத்தான்.

இந்த வாதம் இயங்கியல் மீதான அனைத்து பாடப் புத்தகங்களிலும், கல்விச்செருக்குடைய சிந்தனைக்கான மிகச் சிறந்த உதாரணமாக சேர்க்கப்படுவதற்கான தகுதி படைத்தது.

முதலாவதாக, பாட்டாளி வர்க்க மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான உலக அளவிலான பரஸ்பர தொடர்புபடுத்தலானது சோவியத் ரஷ்யாவிற்குள்ளானதான பரஸ்பர தொடர்புபடுத்தலில் இருந்து அதிக வித்தியாசமானதாக இருக்காது என்பது சாத்தியமான அம்சமே ஆகும். ஆனால், உலகப் புரட்சியானது, சந்தர்ப்பவசமாக தேசிய புரட்சியும் தான், எண்கணித வழிமுறைளுக்கு இயைந்து நிறைவேறுவதில்லை. இவ்வாறாக, அக்டோபர் புரட்சியானது, ஒட்டுமொத்த ரஷ்ய சராசரிக்கு ஒத்துப் போகும் வகையில் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் இடையிலான பரஸ்பர தொடர்புபடுத்தலானது எந்தப் பகுதியில் இருக்கிறது என்று தேடிக் கொண்டிருக்காமல் முதலில் பாட்டாளி வர்க்க பெட்ரோகிராட்டில்தான் (சென்ட் பீட்டர்ஸ்பேர்க்கின் முந்தைய பெயர்) நிகழவும் பாதுகாப்பு நிலைகளை வலுப்படுத்தவும் செய்தது. பெட்ரோகிராடில், பின்னர் மாஸ்கோவில், புரட்சிகர அரசையும் மற்றும் புரட்சிகர இராணுவத்தையும் உருவாக்கிய பின்னர், அவர்கள் பல ஆண்டுகள் கால இடைவெளியில் நாட்டின் தூரதேசங்களிலும் பூர்சுவாக்களை தூக்கி எறிய வேண்டியிருந்தது; புரட்சி என்று அழைக்கப்படும், இந்த செயல்முறையின் காரணமாக மட்டுமே, சோவியத் ரஷ்யாவின் எல்லைகளுக்குள்ளாக, பாட்டாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான தற்போதைய பரஸ்பர தொடர்பானது ஸ்தாபிக்கப்பட்டது. புரட்சியானது எண்கணித சராசரி வழிமுறையுடன் ஒத்து நிகழ்வதில்லை. இது சற்று சாதகம் குறைந்த பிராந்தியங்களில் தொடங்கலாம், ஆனால் இது தேசிய மற்றும் உலக எல்லைக்கோடுகள் இரண்டின் தீர்மானிக்கும் பிராந்தியங்களில் தனது பாதுகாப்பு நிலைகளை வலுப்படுத்தும் வரையில், அதன் முழுமையான வெற்றி குறித்து பேசுவது அனுமதிக்கப்பட முடியாதது.

இரண்டாவதாக, பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாய வர்க்கத்திற்கும் இடையிலான பரஸ்பர தொடர்பு, தொழில்நுட்பத்தில் "சராசரி" மட்டம் இருக்கும் நிலையில், பிரச்சினையின் தீர்வுக்கான ஒரே காரணி அல்ல. கூடுதலாக பாட்டாளி வர்க்கத்திற்கும் பூர்சுவாக்களுக்கும் இடையிலான வர்க்க போரும் இருக்கிறது. சோவியத் ரஷ்யா தொழிலாளர்கள் அல்லது விவசாயிகள் உலகத்தால் அல்ல மாறாக ஒரு முதலாளித்துவ உலகத்தால் தான் சூழப்பட்டிருக்கிறது. பூர்சுவாக்கள் உலகம் முழுவதிலும் தூக்கி எறியப்பட்டால், பின்னர் இந்த உண்மை, தானாகவே பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாய வர்க்கத்திற்கும் இடையிலான பரஸ்பர தொடர்பையோ அல்லது சோவியத் ரஷ்யாவிற்கு உள்ளேயும் ஒட்டுமொத்த உலகத்திலும் இருக்கக் கூடிய தொழில்நுட்பத்தின் சராசரி மட்டத்தையோ மாற்றப் போவதில்லை. ஆனால், எப்படியிருந்தாலும், சோவியத் ரஷ்யாவில் சோசலிச கட்டுமானமானது தற்போதைய சாத்தியக் கூறுகள் மற்றும் விகிதாசாரத்துடன் முற்றிலும் ஒப்பிட முடியாத முழுக்கவும் மாறுபட்ட சாத்தியக்கூறுகளையும், மாறுபட்ட விகிதாசாரத்தினையும் உடனடியாக பெறும்.

மூன்றாவதாக, ஒவ்வொரு முன்னேறிய நாட்டின் உற்பத்தி சக்திகளும் சிறிதளவேனும் தேசிய எல்லைகளை தாண்டி வளர வேண்டுமென்றால், புக்காரின் கருத்துப்படி, அனைத்து நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தி சக்திகளையும் எடுத்துப் பார்த்தால் அவை நமது கோளத்தின் எல்லைகளையும் தாண்டி வளர்ந்திருக்கின்றன என்பதும், இதன் விளைவாக, சோசலிசமானது சூரிய மண்டலத்தின் அளவில் அல்லாது வேறுவிதமாக கட்டுமானம் செய்யப்பட முடியாது என்பதும் இதனால் தொடரவேண்டும்.

நாங்கள் திரும்பவும் சொல்கிறோம், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சராசரி விகிதாசாரத்திலிருந்து வரும் புக்காரினிச வாதமானது, அனைத்து அரசியல் அரிச்சுவடிகளிலும் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். இது இயல்பாகவே, தனியொரு நாட்டில் சோசலிச கருத்தாக்கத்தை ஆதரிப்பதற்காக இப்போது சேர்க்கப்பட்டிருப்பதை போல் அல்லாமல், கல்விச்செருக்குடைய குதர்க்கத்திற்கும் மார்க்சிச இயங்கியலுக்கும் இடையிலுள்ள அப்பட்டமான இணக்கமின்மையின் சான்றாக சேர்க்கப்பட வேண்டும்.