|
|
கம்யூனிச அகிலத்தின்
வரைவுத் திட்டம் |
பகுதி 1: சர்வதேச புரட்சி
வேலைத்திட்டமா அல்லது தனி ஒரு நாட்டில் சோசலிசத்திற்கான வேலைத்திட்டமா?
Print part 1on single page |
4. சர்வதேசியத்தின் அடிப்படை அளவுகோல்
இந்த வரைவானது, நாம் ஏற்கனவே அறிந்தவாறு,
உலக பொருளாதாரம் மற்றும் அதன் உள்முகப் போக்குகள் பற்றிய
நிலைப்பாட்டில் இருந்து தனது கட்டுமானத்தை தொடர முயற்சிக்கிறது. இது அங்கீகாரத்திற்கு
தகுதிபெறும் முயற்சியாகும். இங்கு தான் எமக்கும் தேசிய-தேசப்பற்று சமூக
ஜனநாயகத்திற்குமான அடிப்படை வித்தியாசம் இருக்கிறது என்னும்
பிராவ்தாவின் கூற்று முற்றிலும் சரியே. பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச
கட்சியின் வேலைத்திட்டமானது, தனது பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம்
செலுத்தும் உலகப் பொருளாதாரத்தை ஆரம்ப புள்ளியாகக் கொண்டால் மட்டுமே கட்டப்பட
முடியும். ஆனால் மிகக் குறிப்பாக உலக வளர்ச்சியின் முக்கிய போக்குகளை
ஆராயும்போது, வரைவானது அதன் மதிப்புக்குறைவுக்கு வழிவகுக்கும் வண்ணம்
மேலே குறிப்பிட்டுள்ளவாறு குறைபாடுகளுடன் இருப்பது மட்டுமன்றி, பெருமளவில்
ஒரு பக்க சார்புடையதாகவும் இருக்கிறது, இது பெரும் தவறுகளை இழைப்பதற்கு
இதனை இட்டுச் செல்கிறது.
முதலாளித்துவத்தின் சமச்சீரற்ற வளர்ச்சி விதியையே அந்த வளர்ச்சியின்
முக்கியமான மற்றும் ஏறக்குறைய அனைத்தையும் தீர்மானிக்கும் விதியாக, வரைவு
மீண்டும் மீண்டும், பொருத்தமில்லாத இடங்களில் மட்டுமல்லாமலும்
குறிப்பிடுகிறது. ஒரு அடிப்படை பிழை உள்ளிட்ட வரைவில் உள்ள ஏராளமான தவறுகள்,
தத்துவார்த்தரீதியில் சமச்சீரற்ற வளர்ச்சி விதி குறித்த ஒரு பக்க
சார்பான மற்றும் மார்க்சிசம் அல்லாததும் மற்றும் லெனினினிசமல்லாததுமான
பிழையான விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
தனது முதல் அத்தியாயத்தில் வரைவு குறிப்பிடுகிறது "பொருளாதார மற்றும்
அரசியல் வளர்ச்சியின் சமச்சீரற்ற தன்மை முதலாளித்துவத்தின் ஒரு நிபந்தனையற்ற
விதியாகும். ஏகாதிபத்திய சகாப்தத்தில் இந்த சமச்சீரற்ற தன்மை மேலும்
கூர்மையாகவும் மோசமாகவும் உருவெடுக்கிறது."
இது சரியே. இந்த வடிவாக்கம் ஒரு பகுதியில், லெனினால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாகக்
கூறப்படும் சமச்சீரற்ற வளர்ச்சி விதி குறித்து மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ்
அறியாமல் இருந்தனர் என்று கொள்ளும் ஸ்ராலினின் சமீபத்திய கேள்வியை கண்டிக்கிறது.
செப்டம்பர் 15, 1925 இல், ஸ்ராலின் எழுதினார்: ட்ரொட்ஸ்கிக்கு ஏங்கல்சை
குறிப்பிட வேண்டிய எந்த காரணமும் இல்லை, ஏனெனில் ஏங்கல்ஸ் ஒரு சமயத்தில்
"முதலாளித்துவ நாடுகளின் சமச்சீரற்ற வளர்ச்சி விதி பற்றி அறிந்திருப்பது
குறித்த பேச்சு இருக்க முடியாது [!!]" என்று எழுதினார். இந்த வரைவின்
தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ராலின் இந்த வார்த்தைகளை ஒன்றுக்கும் மேற்பட்ட
இடங்களில் உபயோகப்படுத்தி இருப்பது நம்பவும் இயலாததாக இருக்கிறது. வரைவின்
உரை, நாம் கண்டது போல, இந்த விஷயத்தில் முன்னோக்கி மேலும் ஒரு படி
சென்றுள்ளது. இருப்பினும், இந்த அடிப்படையான தவறின் திருத்தத்தை நாம்
ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால், சமச்சீரற்ற வளர்ச்சி குறித்து வரைவு
கூறுவதானது அடிப்படையில் ஒரு தரப்பானதாகவும் போதுமானதாக இல்லாததாகவும்
இருக்கிறது.
முதலாவதாக, மனித குலத்தின் மொத்த வரலாறே சமச்சீரற்ற வளர்ச்சி பற்றிய
விதியால் தான் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறுவதே சரியாகும்.
முதலாளித்துவமானது மனித குலத்தின் வெவ்வேறு பகுதிகளை வளர்ச்சியின்
வெவ்வேறு கட்டங்களில், ஒவ்வொன்றும் ஆழமான உள்முரண்பாடுகள் கொண்டதாக, கண்டறிகிறது.
அடைந்த நிலைகளில் இருக்கக் கூடிய அதீத மாறுபட்ட தன்மையும், மற்றும்
வெவ்வேறு சகாப்தங்களில் மனித குலத்தின் வெவ்வேறு பகுதிகளின் வளர்ச்சி
விகிதத்தின் அசாதாரண சமச்சீரற்ற தன்மையும் தான் முதலாளித்துவத்தின் ஆரம்ப
புள்ளியாக இருக்கிறது. மரபுவழியாக வரும் சமச்சீரற்ற தன்மையை, உடைப்பது
மற்றும் மாற்றுவது, அதனுள் தனக்கே உரிய பாதைகளையும் வழிமுறைகளையும் அமுல்படுத்துவதன்
ஊடாகத்தான் முதலாளித்துவமானது படிப்படியாக அதன் மீதாக அதன் ஆதிக்கத்தைப்
பெறுகிறது. அதற்கு முன்பிருந்த பொருளாதார அமைப்புகளுக்கு எதிர்மாறானதாக,
முதலாளித்துவமானது பொருளாதாரத்தை விரிவுபடுத்துவது புதிய பகுதிகளுக்கு
ஊடுருவுவது, பொருளாதார வேறுபாடுகளை வெற்றிகொள்வதற்காக, தன்னிறைவான
பிராந்திய மற்றும் தேசியப் பொருளாதாரங்களை நிதிரீதியான ஒன்றுடன் ஒன்று
தொடர்புபட்ட அமைப்பாக மாற்றுவது என்ற தனது இயல்பான தொடர்ச்சியான இலக்கை
முன்வைக்கின்றது. இவ்வாறாக தங்களது உறுதியை அது கொண்டு வந்து, மிகவும்
முன்னேற்றமடைந்த மற்றும் மிகவும் பின்தங்கிய நாடுகளின் பொருளாதார மற்றும்
கலாச்சார நிலைகளை சமன்செய்கிறது. இந்த முக்கிய வழிமுறை இல்லாமல், முதலில்,
ஐரோப்பாவுடன் இங்கிலாந்தை, பின்னர் அமெரிக்காவுடன் ஐரோப்பாவினை ஓப்பீட்டளவில்
சமநிலைப்படுத்துவதை சிந்திப்பதும் சாத்தியமில்லை. காலனித்துவங்களை
தொழில்மயமாக்குவது, இந்தியா இங்கிலாந்து இடையேயான இடைவெளியை குறைப்பது,
மற்றும் ஏராளமான நிகழ்வுப்போக்குகளில் இருந்து உதயமாகும் இன்ன பிற
பின்விளைவுகளின் அடிப்படையில்தான் கம்யூனிச அகிலத்தின் வேலைத்திட்டம்
மட்டுமல்ல அதன் இருப்பே கூட உள்ளது.
நாடுகளை ஒன்றுடன் ஒன்று பொருளாதார ரீதியாக நெருக்கமாகக் கொண்டு வந்து
அவற்றின் வளர்ச்சி நிலைகளை சீராக்கும் போதும், முதலாளித்துவம் அதற்கு
தனது சொந்த வழிமுறைகளையே பயன்படுத்துகிறது. அதாவது தனது சொந்த பணியையே
தொடர்ச்சியாக கீழறுக்கும் கட்டுப்பாடற்ற வழிமுறைகளால், ஒரு நாட்டை மற்றொரு
நாட்டிற்கு எதிராக நிறுத்துகிறது, ஒரு தொழிற்துறையின் ஒரு பிரிவை மற்றொன்றிற்கு
எதிராக நிறுத்துகிறது, உலக பொருளாதாரத்தின் சில பகுதிகளை வளர்த்துக்
கொண்டே அதே சமயத்தில் பிற பகுதிகளின் வளர்ச்சியை தடைசெய்தும்
பின்னோக்கி தள்ளவும் செய்கின்றது. முதலாளித்துவத்தின் இயல்பில் இருந்தே
உருவாகின்ற இந்த இரண்டு அடிப்படை போக்குகளுக்கு இடையிலான உறவு தான் வரலாற்று
நிகழ்வுப்போக்கின் உயிர்வாழும் இழையினை நமக்கு விளக்குகிறது. எங்கும்
வியாபித்துள்ள தன்மை, ஊடுருவும் இயல்பு, நகர்வு மற்றும் ஏகாதிபத்தியத்தின்
உந்துசக்தியாக திகழும் அதி வேகமாக பரவும் நிதிமூலதனத்தின் காரணமாக ஏகாதிபத்தியம்,
இந்த இரு போக்குகளுக்கும் வலிமை தருகிறது. ஏகாதிபத்தியவாதமானது, ஒப்பிடமுடியாத
அளவு அதிவேகத்திலும் அதி ஆழமாகவும் தனித்தனியான தேசிய மற்றும் கண்ட
பிரிவுகளை ஒரு தனி அலகாக இணைக்கிறது, அவற்றை மிகவும் நெருங்கியவையாகவும்
மிகமுக்கிய சார்புத்தன்மை கொண்டவையாகவும் கொண்டுவருகிறது மற்றும் அவற்றின்
பொருளாதார வழிமுறைகள், சமூக வடிவங்கள் மற்றும் அபிவிருத்தியின் மட்டங்களுக்கு
ஒரேமாதிரியான வடிவத்தை தருகிறது. அதவேளை, உலகப் பொருளாதாரத்தின் ஒருங்கிணைப்பு
மற்றும் சமநிலைப்படுத்தல் தோற்றுவித்துள்ள, பின்தங்கிய நாடுகள் மற்றும்
பகுதிகள் மீதான அத்தகைய குரோதமான வழிமுறைகள், அத்தகைய புலிப்பாய்ச்சல்கள்
மற்றும் அத்தகைய திடீர்த்தாக்குதல்கள் மூலம் அது அடையும் இந்த "இலக்கானது",
முந்தைய சகாப்தங்களைவிட மிகவும் பலாத்காரத்தாலும் அதிர்வுகளாலும் அதனாலேயே
நிலைகுலைவிக்கப்படுகிறது. இவ்வாறு சமச்சீரற்ற வளர்ச்சி விதியை முழுக்க
எந்திரவியல் ரீதியாக அல்லாது இயங்கியல் ரீதியாக புரிந்து கொண்டால் மட்டுமே,
ஆறாவது பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு தடுக்கத் தவறிய அடிப்படைப்
பிழையை தவிர்ப்பது சாத்தியமாகும்.
எங்களால் சுட்டிக்காட்டப்பட்ட சமச்சீரற்ற வளர்ச்சி விதி பற்றிய ஒரு தரப்பான
தனது படைப்பாக்கத்திற்குப் பின்னர் உடனடியாக இந்த வரைவுத் திட்டம்
கூறுகிறது:
"எனவே, இதிலிருந்து சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சியானது ஒரு ஒற்றையான,
ஒரே சமயத்திலான, மற்றும் உலகளாவிய செயலாக இருக்கமுடியாது என கருதப்படுகிறது.
சோசலிசத்தின் வெற்றியானது, சில, அல்லது ஒரே ஒரு தனிமைப்படுத்தப்பட்ட முதலாளித்துவ
நாட்டில்தான் சாத்தியமாகும் என அறியப்படுகிறது."
பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச புரட்சியானது ஒரேசமயத்தில் நிகழும் செயலாக
இருக்க முடியாது என்பதில், பின் தங்கிய நாடு ஒன்றில் வரலாற்று தேவையின்
அழுத்தத்தின்கீழ், "முன்னணியை சமநிலைப்படுத்த" பிற முன்னேறிய நாடுகளுக்காக
கொஞ்சம் கூட காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் சாதிக்கப்பட்ட அக்டோபர்
புரட்சி அனுபவத்திற்குப் பின்னர், முதிர்ச்சியடைந்த மக்களுக்கு எந்தவித
கருத்து மாறுபாடும் இருக்க முடியாது. இந்த வரம்புகளுக்குள், சமச்சீரற்ற
வளர்ச்சி விதி பற்றிய குறிப்பு முழுக்கவும் சரியானதாகவும், பொருத்தமானதாகவும்
இருக்கிறது. ஆனால் தீர்மானத்தின் இரண்டாவது பகுதியான "ஒரு தனிமைப்படுத்தப்பட்ட
முதலாளித்துவ நாட்டில்" சோசலிசத்தின் வெற்றி சாத்தியம் என்பது இதற்கு
முற்றிலும் மாறான ஒன்றாக இருக்கிறது. தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதாக
எண்ணி இந்த வரைவு வேலைத்திட்டம் வெறுமனே "இதன் காரணமாய் இது தொடர்கிறது..."
என்கிறது. இது சமச்சீரற்ற வளர்ச்சி விதியில் இருந்து தான் என்று எவருக்கும்
தோன்றுகிறது. ஆனால் எப்டியாயினும் இது தொடரவில்லை. "இதன் காரணமாய் தொடர்கிறது"
என்பது முற்றிலும் மாறான ஒன்றாக இருக்கின்றது. சில நாடுகள் ஒன்றுடன் ஒன்று
சமச்சீரற்று மட்டுமல்லாமல், ஒன்றிலிருந்து ஒன்று சுதந்திரமாகவும் ஒன்றிலிருந்து
ஒன்று தனிமைப்பட்டும் வளர்ச்சியடைந்ததாக வரலாற்று நிகழ்வுப்போக்கு இருக்கின்ற
பட்சத்தில், சமச்சீரற்ற வளர்ச்சி விதியின் படி ஒரு முதலாளித்துவ
நாட்டில் - முதலில் மிகவும் வளர்ச்சியடைந்த நாட்டிலும், பின் அவை
முதிர்ச்சி பெறும்போது, மேலும் பின்தங்கிய நாடுகளிலும்- சோசலிசத்தை கட்டியமைப்பதன்
சாத்தியம் சந்தேகத்திற்கிடமில்லாமல் தொடர்கிறது. இது தான் போருக்கு
முந்தைய சமூக ஜனநாயக தலைமைகளுக்குள் சோசலிச மாற்றம் குறித்த வழக்கமான,
இன்னும் சொல்வதென்றால், சராசரியான சிந்தனையாகும். இது தான் குறிப்பாக
சோசலிச-தேசப்பற்றுவாதத்திற்கான தத்துவார்த்த அடித்தளத்தை உருவாக்கிய
சிந்தனையுமாகும். வரைவு வேலைத்திட்டம், நாம் கூறியது போல், இந்த
பார்வையை கொண்டிருக்கவில்லை, ஆனால் அதனை நோக்கி சாய்ந்திருப்பதாக இருக்கிறது.
சமச்சீரற்ற வளர்ச்சி விதியில் இருந்து அந்த விதி உணர்த்தாத மற்றும் உணர்த்த
முடியாத ஒன்றை தீர்மானிக்கிறது என்கிற உண்மையில் தான் இந்த வரைவின் தத்துவார்த்த
பிழை பொதிந்திருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கிடையே சமச்சீரற்ற அல்லது தொடர்ச்சியற்ற
வளர்ச்சியானது அந்த நாடுகளுக்கிடையேயான வளரும் பொருளாதார பந்தங்களையோ,
இந்த நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர சார்புநிலையையோ குழப்பலாமே தவிர அகற்றி
விட முடியாது, நான்கு ஆண்டுகள் நரகப் படுகொலைகளுக்கு அடுத்த நாளே இவை
தங்களுக்குள் நிலக்கரி, ரொட்டி, எண்ணெய், பொடி, மற்றும் உதவிப்பொருட்களை
பரிமாறிக் கொள்ள நேரிடுகிறது. இந்தக் கேள்வியில், வரலாற்று வளர்ச்சியானது
இந்த தொடர்ச்சியற்ற தாவல்களின் அடிப்படையிலேயே முன்செல்கிறது என வரைவு
முன்வைக்கின்றது, அதே சமயம் இந்த தாவல்களுக்கு காரணமான அல்லது அவற்றின்
மீதான பொருளாதார அடிப்படை என்பது வரைவு தயாரிப்பாளர்களால் முழுக்கவும்
கவனிக்காமல் இடம் பெறாமல் போய் விட்டுள்ளது அல்லது அவர்களால் கட்டாயமாக
அகற்றப்பட்டுள்ளது. தனி ஒருநாட்டில் சோசலிசம் என்னும் பாதுகாக்கமுடியாத
தத்துவத்தை ஆதரிக்கும் ஒரே நோக்கத்துடனேயே இதனை அவர்கள் மேற்கொள்கின்றனர்.
கூறப்பட்டவற்றில் இருந்து, பின்வருவதை புரிந்து கொள்வது சுலபம்: ஒரு பக்கத்தில்,
சமச்சீரற்றதன்மை அதாவது தொடர்ச்சியற்ற வரலாற்று வளர்ச்சியானது ஒரு யுகம்
முழுக்க பாட்டாளி வர்க்க புரட்சியை நீட்டிச் செல்கிறது, வழியில் புரட்சி
வெள்ளத்தில் நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்திணையும், மறுபக்கத்தில்,
உலகளாவிய உழைப்புப் பிரிவினை நோக்கி வளர்கின்ற, பல்வேறு நாடுகளுக்கு இடையேயான
உயிரோட்டமுள்ள பரஸ்பர சார்புத்தன்மை தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டுவதற்கான
சாத்தியத்தை இல்லாமல் செய்கின்றது என்கின்ற தீர்மானத்திற்கு மார்க்ஸ்
மற்றும் ஏங்கல்ஸ், ஏகாதிபத்திய சகாப்தத்திற்கு முன்னரேயே வந்து
விட்டிருந்தனர் என்பதே கேள்வியின் ஒரே சரியான வடிவாக்கமாகும். இதன்
பொருளானது, அதிலும் குறிப்பாக இப்போது, ஏகாதிபத்தியம் இந்த குரோதம்மிக்க
போக்குகளில் வளர்ச்சியும், ஆழமும், இரண்டிலும் கூர்மையும் பெற்றுள்ள இந்த
நவீன யுகத்தில், சோசலிசப் புரட்சி தேசிய அடிப்படையில் ஆரம்பிக்கத்தான்
முடியுமே தவிர, தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டுவது சாத்தியமில்லை என்று
நிறுவும் மார்க்சிச தத்துவமானது இருமடங்கு மற்றும் மும்மடங்கு உண்மையாக
வெளிக்காட்டப்பட்டு உள்ளது. இந்த வகையில், லெனின் வெறுமனே மார்க்சின்
சொந்த சூத்திரப்படுத்தலையும், இந்த கேள்வி தொடர்பான மார்க்சின் சொந்தப்
பதிலையுமே அபிவிருத்திசெய்து, உறுதிப்படுத்தினார்.
எமது கட்சியின் வேலைத்திட்டமானது முழுக்கமுழுக்க அக்டோபர் புரட்சியினதும்
மற்றும் சோசலிச கட்டுமானத்தினதும் அடித்தளமாக இருக்கும் சர்வதேச நிலைமைகளை
அடிப்படையாக கொண்டதாகும். இதனை நிரூபிக்க, ஒருவர் எங்களது வேலைத்திட்டத்தின்
முழு தத்துவார்த்த பகுதியையும் வடிவெடுத்துப் பார்த்தாலே தெரியும். இங்கே
நாங்கள் பின்வருவதை சுட்டிக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்ளவே
விரும்புகிறோம்: எமது கட்சியின் எட்டாவது பேரவை மாநாட்டில், மறைந்த
பொட்பெல்ஸ்கி வேலைத்திட்டத்தின் சில சூத்திரப்படுத்தல்கள் ரஷ்ய புரட்சிக்கு
மட்டுமே குறிப்புகள் கொண்டிருக்கின்றன என்று புரிவதாகக்
குறிப்பிட்டார், கட்சி வேலைத்திட்டம் குறித்த கேள்விக்கு லெனின் தனது
நிறைவுரையில் பின்வருமாறு பதிலளித்தார் (மார்ச் 19, 1919):
"பொட்பெல்ஸ்கி நிலுவையில் இருக்கும் சமூகப் புரட்சி குறித்துப் பேசும்
பத்தி குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளார் ... அவரது வாதம் அடிப்படையில்லாதது
என்பது தெளிவு ஏனென்றால் நமது வேலைத்திட்டம் சமூகப் புரட்சியை உலகளாவிய
அளவில் கையாள்கிறது." [14]
ஏறக்குறைய இதே நேரத்தில் தான், இது சர்வதேச புரட்சிக்கான கட்சி என்பதை
மேலும் வலியுறுத்தும் வண்ணம், எமது கட்சி தனது பெயரை ரஷ்ய கம்யூனிஸ்ட்
கட்சி என்பதில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி என்று மாற்றிக் கொள்ள
வேண்டும் என்று லெனின் ஆலோசனை தெரிவித்தார் என்பதை இந்த இடத்தில்
சுட்டிக்காட்டுவது தவறாகாது. மத்திய கமிட்டியில் லெனினின் தீர்மானத்திற்கு
வாக்களித்த ஒரே ஆள் நான் தான். ஆனாலும், அவர் அந்த விஷயத்தை மூன்றாம்
அகிலத்தை நிறுவுவதை மனதில் கொண்டு பேரவையின் முன் கொண்டு வரவில்லை. அந்த
நேரத்தில் தனியொரு நாட்டில் சோசலிசம் என்பதற்கான அறிகுறி கூட இல்லை என்னும்
உண்மைக்கு இந்த நிலைப்பாடு சான்று. கட்சியின் வேலைத்திட்டம் இந்த "தத்துவத்தை"
கண்டிக்காததற்கும், அதனை வெறுமனே அகற்றி விட்டதற்கும் இது மட்டுமே உண்மையான
காரணம்.
ஆனால் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இளம் கம்யூனிஸ்ட் லீக்கினால்
கைக்கொள்ளப்பட்ட வேலைத்திட்டமானது, சர்வதேசியவாதத்தின் புத்துணர்வை இளைஞர்களுக்கு
பயிற்சி அளிக்கும் வண்ணம், பாட்டாளி வர்க்க புரட்சி குறித்த கேள்வியில்
உள்ளூரில் வளர்க்கப்பட்டு வந்த தவறான கருத்துகளுக்கும் மற்றும் தேசியரீதியான
குறுகிய மனப்பான்மைக்கும் எதிராக நேரடியான எச்சரிக்கை விட நேரிட்டது.
இது குறித்து பின்னர் நாங்கள் நிறைய கூறுவோம்.
கம்யூனிச அகிலத்தின் புதிய வரைவு வேலைத்திட்டமானது இந்த விஷயத்தை வேறு
விதமாக நிறுத்துகிறது. இதன் ஆசிரியர்கள் 1924 முதலான திருத்தல்வாதிகளின்
பரிணாம வளர்ச்சிக்கு இயையும் வண்ணம், வரைவானது, நாம் கண்டது போல், நேர்
எதிர்ப்பாதையை தேர்ந்தெடுக்கிறது. ஆனால் தனி ஒரு நாட்டில் சோசலிசம் என்னும்
கேள்வி எவ்வாறு தீர்மானிக்கப்படுவது முழு வரைவின் இயல்பும் ஒரு
மார்க்சிச அல்லது திருத்தல்வாத ஆவணமா என்பதில் தங்கியுள்ளது.
உண்மை தான், வரைவுத் வேலைத்திட்டமானது கேள்விகளின் கம்யூனிச மற்றும்
சீர்திருத்தவாத சூத்திரப்படுத்தல்களுக்கு இடையேயான வித்தியாசத்தை
கவனமாக, தொடர்ச்சியாக, மற்றும் பிரத்தியேக அணுகுமுறையுடன் வழங்குகிறது,
வலியுறுத்துகிறது மற்றும் விளக்குகிறது. ஆனால் இந்த உத்தரவாதங்கள்
பிரச்சினையை தீர்க்காது. ஏராளமான மார்க்சிச நுட்பங்கள் மற்றும்
கருவிகளை கப்பல் சுமந்து செல்லும் நிலையில், அளவுக்கதிமாகவே சுமந்து
செல்லும் என்று கூட சொல்லலாம், அதன் முக்கிய பாய் பகுதியானது ஒவ்வொரு
திருத்தல்வாத மற்றும் சீர்திருத்தவாத காற்றினால் அடித்துச்செல்லக்கூடிய
நிலையில் கட்டப்பட்டு இருப்பதைப் போன்ற ஒரு சூழலைத் தான் நாம் இங்கே
கொண்டிருக்கிறோம்.
கடந்த மூன்று தசாப்தங்களின் அனுபவத்திலிருந்து, குறிப்பாக சமீப
வருடங்களில் சீனாவின் அசாதாரண அனுபவத்தில் இருந்து யார் பாடம்
பெற்றிருந்தாலும், அவர்கள் வர்க்க போராட்டத்திற்கும் கட்சி வேலைத்திட்ட
ஆவணங்களுக்கும் இடையேயான சக்திவாய்ந்த இயங்கியல் பரஸ்பர சார்பினை
புரிந்து கொள்வார்கள் மற்றும் புதிய சீர்திருத்தவாதிகளின் பாயானது
மார்க்சிசம் மற்றும் லெனினிசத்தின் அனைத்து பாதுகாப்பு கருவிகளையும்
பயனில்லாது செய்து விட முடியும் என்னும் எங்களது கூற்றையும் புரிந்து
கொள்ள முடியும். அதனால் தான் நாங்கள் கம்யூனிச அகிலத்தின் வளர்ச்சி
மற்றும் தலைவிதியை நீண்டகாலத்திற்கு தீர்மானிக்கும்
இந்த முதன்மையான அடிப்படை கேள்வியை ஆழமாக விவாதிக்க நேரிட்டது. |
|
|
|
|