:
மத்திய கிழக்கு
In speech on Iraq escalation, Bush promises more
bloodshed, wider war
ஈராக்கில் யுத்தத்தை தீவிரப்படுத்துவது சம்பந்தமான உரையில் புஷ் மேலும் இரத்தக்களரிக்கும்
பரந்த யுத்தத்திற்கும் வாக்குறுதியளிக்கின்றார்
By the Editorial Board
11 January 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
ஜனாதிபதி புஷ், ஈராக்கிற்கு மேலும் 20,000 அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புவதை
அறிவித்து புதன் கிழமை இரவு தொலைக்காட்சியில் ஆற்றிய உரை, அந்த நாட்டை இரத்தக் களரிக்குள்ளாக்கும்
நடவடிக்கை 2007ல் நாடகபாணியில் அதிகரிக்கும் என்பதையும் புஷ் நிர்வாகம் சிரியா, ஈரான் மற்றும் மத்திய
கிழக்கில் உள்ள ஏனைய இலக்குகளுக்கும் யுத்தத்தை விரிவுபடுத்த உள்ளது என்பதையும் சமிக்ஞை செய்துள்ளது.
அமெரிக்க இராணுவ தலையீட்டை தீவிரமாக்குவதற்கு எடுத்த முடிவானது, 2006 காங்கிரஸ்
தேர்தல் பெறுபேறுகளை நேரடியாக நிராகரிப்பதாகும். செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் குடியரசுக்
கட்சியின் ஆட்சிக்கு முடிவுகட்டியதன் மூலம், மில்லியன் கணக்கான அமெரிக்க வாக்காளர்கள ஈராக் மீதான யுத்தத்திற்கு
தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிராந்தியத்திற்கு மேலதிகத் துருப்புக்களை அனுப்பும் முதலாவது அலை ஏற்கனவே
தொடங்கிவிட்டதோடு, பக்தாத் நகருக்கு ஐந்தும் மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான சுன்னி முஸ்லிம்களின்
கிளர்ச்சியின் மையமாக உள்ள அன்பார் மாகாணத்திற்கு ஒன்றுமாக மொத்தம் ஆறு பிரகேட்களை அனுப்ப கட்டளை
பிறப்பிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான அணுவாயுதங்களுடன் ஒரு மேலதிக அதிரடி விமானப்படையை பாரசீக
வளைகுடாவுக்கும் புஷ் அனுப்பியுள்ளார்.
இந்த இராணுவ ஆக்கிரமிப்பின் பெறுபேறாக அமெரிக்கர்களும் மற்றும்
ஈராக்கியர்களும் மிக உயர்ந்த எண்ணிக்கையில் உயிரிழக்க வாய்ப்புகள் உள்ளன என்பதையும் புஷ் பலதடவைகள்
குறிப்பிட்டார். "பக்தாத்தில் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான" திட்டமாக, பிரமாண்டமான
இரத்தவெள்ளத்தை ஏற்படுத்தும் தற்போதைய திட்டங்களுக்கு அவர் உண்மையான ஓர்வெலியன் மொழியைப்
பயன்படுத்தினார்.
அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் கடந்தகால தோல்விக்கு மிகவும்
குறைந்தளவிலான துருப்புக்களையும் மற்றும் "துருப்புக்கள் மீது பல கட்டுப்பாடுகளையும் நாம் கொண்டிருந்ததே"
காரணம் என குற்றஞ்சாட்டினார். வேறு வார்த்தைகளில் சொன்னால், சித்திரவதை மற்றும் அபுகிரைப்
அவமானங்கள், ஹடித்தாவில் நடத்திய மனிதப் படுகொலை மற்றும் ஈராக் பாடசாலை மாணவிகளை பாலியல்
துஷ்பிரயோகம் செய்து கொலைசெய்தல் போன்றவற்றை ஏற்கனவே அரங்கேற்றியுள்ள ஒரு இராணுவ இயக்கம்,
இப்போது "கையுறைகளைக் களற்றியெறியப் போகிறது."
புஷ், ஈராக் தலைநகரில் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ள இராணுவ
நடவடிக்கைகளுக்கான திட்டங்களை விளக்கினார். ஈராக் மற்றும் அமெரிக்க இராணுவப் படைகள் நகருக்குள்
பெருக்கெடுத்து, "பக்தாத்வாசிகளின் நம்பிக்கையைப் பெற வீட்டுக்கு வீடு செல்வர்." இது நடைமுறையில் எதை
அர்த்தப்படுத்துகின்றது என்பதை, இந்த உரையை ஆற்றுவதற்கு முதல் நாள் மத்திய பக்தாத்தின் ஹய்ஃபா வீதியில்
நடந்தவை அம்பலப்படுத்துகின்றன. அங்கு சுன்னிக்கள் வாழும் பிரதேசத்திற்குள் சீறிப்பாய்ந்த ஷியைட் ஈராக்
சிப்பாய்களும் மற்றும் அமெரிக்கத் துருப்புக்களும், குறைந்தபட்சம் 50 பேரைக் கொன்றதோடு நகரின் முழுக்
கட்டமைப்பையும் தரைமட்டமாக்கின.
நகரின் சுன்னிக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை கைப்பற்றியவுடன், இந்தத்
தாக்குதல்கள் ஷியைட் பிரதேசங்களுக்கு, குறிப்பாக சதார் நகர் என்றழைக்கப்படும் கிழக்கு பக்தாத்தின் பரந்த
தொழிலாளர் வர்க்கம் வாழும் பிரதேசத்தின் மீது திரும்பும். அமெரிக்க இராணுவம் தலைநகரின் அப்பாகத்தில்
மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் விலகியிருந்த போதிலும், இப்போது, "ஈராக் மற்றும் அமெரிக்கப்
படைகளுக்கு இத்தகைய பிரதேசங்களுக்குள் நுழைவதற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதோடு அரசியல் அல்லது
மதப்பிரிவினைவாத தலையீடுகள் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என பிரதமர் மலிகி உறுதிபூண்டுள்ளார்," என புஷ்
பிரகடனம் செய்தார். இது முழு அயல் பிரதேசமும் அமெரிக்காவின் ஆயுத சக்தியால் சாம்பலாக்கப்படுவதையும்
மற்றும் சதாம் ஹுசைனின் காலத்தையும் விஞ்சும் வகையில் ஷியைட்டுக்கள் கொன்று குவிக்கப்படுதையும்
விளைவுகளாக்கும்.
ஈராக்கில் வன்முறைகளை அதிகரிப்பது ஆரம்பம் மட்டுமே. யுத்தத்தின்
பரப்பெல்லையை விரிவுபடுத்துவதன் மூலம் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் சீரழிவைத் தடுக்கலாம்
என யோசனை தெரிவிக்கும் புஷ், ஈரானுக்கும் சிரியாவிற்கும் எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக
அச்சுறுத்துகிறார்.
வியட்நாம் யுத்தத்தின் போது, கம்போடியா மற்றும் லாஓஸ் நாடுகள் மீதான
படையெடுப்பிற்கு கட்டளையிடுகையில் ரிச்சட் நிக்ஸன் வெளியிட்டப் பிரகடனங்களை நினைவூட்டும் மொழியில் பேசிய
புஷ், ஈராக் கிளர்ச்சிக்கு ஈரானும் சிரியாவும் உதவுவதாக குற்றஞ்சாட்டியதோடு பதிலடி கொடுப்பதாகவும்
உறுதியளித்தார்: "எமது படைகள் மீதான தாக்குதல்களை நாம் தகர்த்தெறிவோம். ஈரான் மற்றும் சிரியாவின்
ஆதரவு அலையை நாம் தடுத்து நிறுத்துவோம். மற்றும் ஈராக்கில் உள்ள எமது எதிரிகளுக்கு அபிவிருத்தி
செய்யப்பட்ட ஆயுதங்களையும் பயிற்சியையும் வழங்கும் வலையமைப்பை கண்டுபிடித்து அழிப்போம்," என்றார்.
ஈராக் மீதான யுத்தம், அமெரிக்கா மீதான பயங்கரவாத அச்சுறுத்தலை
ஒடுக்குவதை இலக்காகக் கொண்டுள்ளதோடு நியூ யோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான 9/11 தாக்குதல்களுக்கான
பதிலடியையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது என தனது பழைய போலிக் கூற்றுக்களில் ஒன்றுக்கு புதுவடிவம் கொடுத்து
தனது தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் அறிவை அலட்சியம் செய்தார். உண்மையில், உலகின் மூன்றாவது
எண்ணெய் வளம்மிக்க மற்றும் தீர்க்கமான மூலோபாய நிலையில் உள்ள நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற
அமெரிக்க ஆளும் தட்டு முயற்சித்துக்கொண்டிருக்கின்ற அதே வேளை, இந்த யுத்தம் மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை
ஸ்தாபிக்கும் உயர்ந்த எண்ணத்திலான போராட்டம் என அவர் மீண்டும் ஒரு முறை காட்ட முயற்சிக்கின்றார்.
"ஆப்கானிஸ்தானில் இருந்து லெபனான் மற்றும் பாலஸ்தீன பிராந்தியங்களில், மில்லியன்
கணக்கான சாதாரண மக்கள் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் அவர்கள் ஈராக்கையும்
பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா வெளியேறி நாட்டின் எதிர்காலத்தை தீவிரவாதிகளின் கைகளில்
ஒப்படைக்குமா அல்லது சுதந்திரத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ள ஈராக்கியர்களுடன் நாங்கள் நிற்கிறோமா
என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்," என அவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கிலும், முழு உலகிலும் கோடிக்கணக்கான மக்கள் அமெரிக்க
படையெடுப்பையும் ஈராக்கைக் கைப்பற்றுவதையும் எதிர்ப்பதோடு, இது குறிப்பாக பண்பற்ற கொடூரமான
முறையிலான மேற்கத்தைய காலனித்துவத்தை மீண்டும் திணிப்பதாகும் என்பதை மிகச் சரியாகப்
புரிந்துகொண்டுள்ளனர். பொதுச் சுகாதார ஜோன் ஹொப்பிங்ஸ் பாடசலையின் கற்கையின்படி, ஈராக் மீதான
அமெரிக்க ஆக்கிரமிப்பு ஏற்கனவே 655,000 உயிர்களைப் பலிகொண்டுள்ளது. "அப்பாவிகளைக் கொல்லும்
தீவிரவாதிகளான" அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடிக்கொண்டிருப்பது ஈராக் மக்களேயாகும்.
ஆயினும், புஷ் கிறுக்குத்தனமாக உலகைத் தலைகீழாக மாற்றிக்கொண்டுள்ளார்.
ஈராக் மற்றும் மத்திய கிழக்கில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் பற்றிய புஷ்ஷின்
பேச்சுக்களின் போலித்தனமும் மற்றும் சிடுமூஞ்சித்தனமும், அமெரிக்காவில் ஜனநாயகம் தொடர்பான அவரது நிலைப்பாட்டில்
அம்பலத்திற்கு வந்துள்ளன. அவர் 2005ல் ஈராக்கில் தேர்தல் நடத்தியதைப் பாராட்டியவாறு தனது உரையை
ஆரம்பித்த போதிலும், சற்றே இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அமெரிக்க காங்கிரஸ் தேர்தல்களைப்
பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
நவம்பர் 7 நடந்த தேர்தல், புஷ்ஷின் ஈராக் கொள்கை சம்பந்தமான
பெரும்பான்மையான மக்களின் எதிர்ப்பையும் மற்றும் புஷ் தானே தேர்தலில் போட்டியிட்டிருந்தால் ஆட்சியில் இருந்து
வெளியேற்றப்பட்டிருப்பார் என்பதையுமே குறிக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக மெளனம் சாதித்ததன் மூலம்,
தனது யுத்தக் கொள்கையில் எந்தவொரு தலையீட்டையும் செய்ய அமெரிக்க மக்களை அனுமதிக்கும் எண்ணம் தனக்கு
இல்லை என்பதை புஷ் தெளிவுபடுத்தியுள்ளார். அத்தோடு வெகுஜனங்களின் யுத்தவிரோத உணர்வு உத்தியோகபூர்வ
வாஷிங்டனில் வெளிப்பாட்டைக் காணவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதில் அவர் பெயரளவிலான எதிர்க்
கட்சியான ஜனநாயகக் கட்சியை நம்பியிருக்கின்றார்.
இலினொயிஸின் செனட்டர் ரிச்சர்ட் டூர்பினால் வெளியிடப்பட்ட ஜனநாயகக் கட்சியின்
உத்தியோகபூர்வ பதில், புஷ்ஷின் சொந்த உரையைப் போலவே பிற்போக்கானதும் மற்றும் நேர்மையற்றதும், சில
சமயங்களில் பண்பற்றதும் வெளிப்படையான இனவாதத்தின் தொடக்கமுமாகும். டுர்பினின்படி, அமெரிக்க
அரசாங்கமானது தூய்மையான நோக்கங்களுடன் முன்செல்கின்றது. ஈராக்கை இயங்கமுடியாத சமுதாயமாக
சீரழித்ததோடு நாட்டின் பெரும்பகுதியை பண்டைய கால நிலைமைக்கு குறைத்த அமெரிக்க ஆக்கிரமிப்பை விவரித்த
அவர், "யாரும் இல்லாத நிலையில் நாங்கள் ஈராக்கைக் காப்பாற்றினோம்" எனக் கூச்சலிட்டார்.
சதாம் ஹுசைனை தூக்கியெறிந்தது, புதிய அரசியலமைப்பை எழுதியது மற்றும் புதிய
அரசாங்கத்திற்கான தேர்தலை நடத்தியது என ஒரு பட்டியலை நீட்டிய அவர், "அமெரிக்கா ஈராக்கியர்களுக்கு
நிறையவே கொடுத்துள்ளது" என தொடர்ந்தும் தெரிவித்தார். இப்போது தாங்களாகவே பொறுப்பேற்றுக்கொள்ள
வேண்டிய நேரம் ஈராக்கியர்களுக்கு வந்துவிட்டது என அவர் பிரகடனம் செய்தார். "அவர்கள் 9-1-1
இலக்கங்களை அழைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாங்கள் மேலும் 20,000 துருப்புக்களை
அனுப்பப்போவதில்லை என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்."
ஈராக்கில் புஷ்ஷின் கொள்கைகள் சம்பந்தமான ஜனநாயகக் கட்சியின் "எதிர்ப்பு",
யுத்தத்திற்கு எதிரான உண்மையான வெகுஜன வெறுப்பை தணிக்கும் அதே வேளை, அந்த நாட்டின் மீதான அமெரிக்காவின்
மரணப்பிடிக்கு பலம்சேர்க்கும் முயற்சியைத் தவிர வேறு ஒன்றுமல்ல. தனது அந்தப் பிரதிபலிப்பின் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு
பதிலளித்த டூர்பின், ஜனநாயகக் கட்சி யுத்தத்திற்கான நிதியை வெட்டிக் குறைக்காது மற்றும் போரைத் தீவிரப்படுத்துவதையும்
நிறுத்தாது என்பதை வலியுறுத்தினார்.
யுத்தத்தை எதிர்த்த வாக்காளர்களுக்கு சொற்களில் அன்றி செயலில் யுத்தத்தை நிறுத்துவதற்கான
நடவடிக்கை ஒன்றை எதிர்பார்க்கும் உரிமை உண்டா எனக் கேட்ட போது, "அதை அதன் செல்வழித் தடத்தில் நிறுத்த
முடியும் என்று நினைப்பது நடைமுறைக்குரியதல்ல," என டூரின் பதிலளித்தார்.
புஷ்நிர்வாகத்தால் யுத்தம் தீவிரப்படுத்தப்படுவதும் மற்றும் ஜனநாயகக் கட்சிக்காரர்கள்
புஷ் நிர்வாகத்துடன் ஒத்துழைப்பதும், அமெரிக்க உழைக்கும் மக்களும் மற்றும் ஈராக் மீதான பிற்போக்குப் படுகொலைகளை
எதிர்க்கும் அனைவரும் முகங்கொடுத்துள்ள மத்திய அரசியல் பிரச்சினையை கோடிட்டுக்காட்டுகிறது. அமெரிக்க
அரசியல் ஸ்தாபனம் மற்றும் இரு பெரும் வர்த்தகர்களின் கட்சிகளில் இருந்து பிரிவதன் மூலமும் மற்றும் தொழிலாளர்
வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட பரந்த சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமும்
மட்டுமே யுத்தத்திற்கு எதிரான போராட்டம் முன் செல்ல முடியும்.
தொழிலாளர் வர்க்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைக் காக்கும்
உத்தியோகபூர்வ பொதுக் கருத்தை நிராகரிப்பதோடு ஈரக்கில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களை உடனடியாகவும்
நிபந்தனையின்றியும் வெளியேற்றவும் மற்றும் யுத்தத்திற்கு எதிராகவும் வெகுஜன போராட்டங்களை ஒழுங்கு
செய்வதுடன், இந்த குற்றவியல் ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடுத்து, அதை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்குப்
பொறுப்பானவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடுக்குமாறும் கோரிக்கை விடுக்க வேண்டும். |