:ஆசியா
: பாகிஸ்தான்
In wake of assassination of Benazir Bhutto, Bush
administration rushes to defense of Musharraf
பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, முஷாரஃப்பின் ஆதரவிற்கு புஷ்
நிர்வாகம் விரைகிறது
By Keith Jones
28 December 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் (Pakistan
People's Party- PPP) "வாழ்நாள் தலைவரும்" பிரதம
மந்திரி வேட்பாளருமான பெனாசீர் பூட்டோ ஜனவரி 8ம் தேதி வரவிருக்கும் தேசிய மற்றும் மாநில சட்டமன்றங்களின்
தேர்தல்களுக்காக பிரச்சாரம் செய்துவந்தபோது பாக்கிஸ்தானிய நேரப்படி வியாழன் முன்மாலைப்பொழுதில் படுகொலை
செய்யப்பட்டார்.
நாட்டின் மிகப் பாதுகாப்பான நகரங்களில் ஒன்று எனக் கூறப்படும் நகரமான,
பாக்கிஸ்தான் இராணுவத்தின் தலைமையிடமான ராவல்பிண்டியில் இந்தப் படுகொலை நடத்தப்பட்டது.
படுகொலை எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி முரண்பாடான தகவல்கள் வெளிவந்துள்ளன.
பல செய்தித் தகவல்களும் அவரை படுகொலை செய்தவன் தன்னையே வெடித்து மாய்த்துக் கொள்ளுவதற்கு முன்பு
பூட்டோவின் கழுத்திலும் உடற்பகுதியிலும் துப்பாக்கியால் சுட்டதாக சாட்சிகளை மேற்கோளிட்டுக் கூறுகின்றன. இந்த
குண்டு வெடிப்பினால் குறைந்தது மற்ற 20 பேர்களும் இறந்தனர். ஆனால் இரண்டாவது கொலைகாரன் தற்கொலைக்
குண்டு வெடிப்பை நடத்துவதற்கு முன்னதாக, கட்டிடக் கூரை மீதிருந்து வந்த தோட்டாவின் மூலம் முதலில் பூட்டோ
தாக்கப்பட்டார் என்று பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த அலுவலர்கள் கூறியதாக நியூயோர்க் டைம்ஸ்
தெரிவிக்கிறது.
பதவியில் இருந்த இறக்கப்பட்ட பிரதம மந்திரி நவாஸ் ஷெரிப்பால் பேசுவதற்கு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, மற்றொரு முக்கிய எதிர்க் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அணிவகுப்பும் வியாழனன்று
தாக்குதலுக்கு உட்பட்டது. தொலைதூரத்திலிருந்து சுட்டவர் பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஆதரவாளர்கள்
நான்கு பேரையாவது கொன்றதாகவும் ஐந்து பேரைக் காயப்படுத்தியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
சான்றுகள் ஏதும் ஆராயப்படுவது ஒருபுறம் இருக்க, அவை சேகரிக்கப்படும்
முன்னரே, படுகொலை பற்றிய முக்கிய உண்மைகள் சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில், அமெரிக்க அரசியல் அமைப்பு
விசாரணை முடிந்து விட்டது என்றும் பூட்டோவின் கொலை அல் கொய்தா அல்லது அதே போன்ற போக்கு உடைய
இஸ்லாமியக் குழுவினால்தான் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் உறுதியாக அறிவித்துள்ளது.
பாக்கிஸ்தானில் உள்ள அரசியல் யதார்த்தத்திற்கு பெரிதும் மாறுபட்ட வகையில் ஒரு
வாடிக்கையான அறிக்கையில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் அமெரிக்க நேரப்படி வியாழனன்று காலை புட்டோ படுகொலை
செய்யப்பட்டது "பாக்கிஸ்தானின் ஜனநாயகத்தை அழித்துவிட முயலும் கொலைகார தீவிரவாதிகளின்
கோழைத்தனமான செயல்" என்று அறிவித்தார். பாக்கிஸ்தானியர்கள் "பெனாசீர் பூட்டோவின் நினைவைக்
கெளரவிக்கும் வகையில், தைரியமாக அவர் உயிர்நீத்த ஜனநாயக வழிவகை தொடர்வதற்கானதை செய்யவேண்டும்"
என்றும் வலியுறுத்தினார்.
பின்னர் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான
Scott M. Stanzel அடுத்த சில மணி நேரத்தில்
பாக்கிஸ்தானின் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப்புடன் புஷ் பேசத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்; ஆனால் ஜனவரி 8
தேர்தல்கள் நடத்தப்படுவது பற்றி அவரிடம் ஏதும் கூறப்பட மாட்டாது என்றும் கூறினார். "அது
பாக்கிஸ்தானியர்கள் எடுக்க வேண்டிய முடிவு" என்று
Stanzel கூறினார்.
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக வரக்கூடிய பரக்
ஒபாமாவும் புஷ் கூறிய வழிவகையை ஒட்டித்தான் பேசினார்; அமெரிக்கச் செய்தி ஊடகமும் விரைவில் இதே
பல்லவியை மேற்கொண்டது: பயங்கரவாததிற்கு எதிரான போரில் பூட்டோ ஒரு தியாகி என்றும் பாக்கிஸ்தானிய
மக்கள் முஷாரஃப் மற்றும் இராணுவத்தின் பாசாங்குத் தேர்தல்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்றும் கூறப்பட்டது.
பூட்டோவின் கொலையில் முஷாரஃப்பின் ஆட்சி தொடர்பு கொண்டிருக்கக்கூடும் என்ற
வாய்ப்புக்களை பற்றி அமெரிக்கச் செய்தி ஊடகம் சிறிது கூட குறிப்பைக் காட்டும் வகையில் கூறவில்லை. முஷாரஃப்
ஆட்சி எட்டு ஆண்டு காலமாக மனிதஉரிமைகளை மிகப்பாரியளவில் தவறாகப் பயன்படுத்தியிருந்துடன் அரசியல்
எதிர்ப்பாளர்கள் மீது கடுமையான தாக்குதல்களை தூண்டிவிட்டிருந்த போதிலும்கூட, மற்றும் பாக்கிஸ்தானின் இராணுவ
உளவுத்துறை அமைப்பு பல தசாப்தங்களாக ஆயுதமேந்திய இஸ்லாமிய குழுக்களுக்கு ஆதரவு கொடுத்து வளர்த்து
அதனை தனது பூகோள-அரசியல் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தியுள்ளது என்றாலும்
கூட, அதைப்பற்றிக் கவலையில்லை.
அமெரிக்காவின் ஆதரவு இல்லாத, இராணுவ வலிமை மிக்கவர் ஆட்சிநடத்தும் ஒரு
நாட்டில் முக்கிய எதிர்க்கட்சி நபர் கொலை செய்யப்பட்டிருந்தால் வாஷிங்டனிலிருந்து வேறுவிதமான பிரதிபலிப்பை
வெளிக்கொணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் எதுவும் இருக்குமா? அப்பொழுது முழு அமெரிக்க அரசியல் மற்றும்
செய்தி ஊடக அமைப்பு அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி விரலைச் சுட்டிக்காட்டியிருக்கும்.
முஷாரஃப்பின் அரசாங்கம் பூட்டோவின் படுகொலையில் நேரடியாக தொடர்பு
கொள்ளவில்லை என்றாலும், அதன் விளைவை தனிப்பட்டரீதியாக வரவேற்ற, அவ்விளைவை உருவாக்கிய
முன்னேற்பாடுடன் செய்யப்பட்ட அலட்சியம்தான் இதற்குக் காரணம் என்ற வலுவான வாதம் வெளிப்பட்டுள்ளது.
அரசாங்கமும் மற்றும் பாக்கிஸ்தானிய இராணுவ-உளவுத்துறை அமைப்பும் அக்டோபர் 18 அன்று தன்னுடைய உயிரை
கராச்சியில் கவர்வதற்கான முயற்சியை நடத்தியது என்று பூட்டோவே பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்;
அந்த பல்வேறான குண்டு வெடிப்பு 140 குடிமக்களை கொன்றது.
பூட்டோ பாக்கிஸ்தானுக்கு அக்டோபர் மாத நடுவில் வருவதற்கு முன்பு,
அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்; அதில் மூன்று நபர்கள் தன்னை அழிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர் என்று
கூறியிருந்தார். பெயர்களை பூட்டோ பகிரங்கப்படுத்தவில்லை என்றாலும், உளவுத்துறைப் பிரிவின் தலைமை
இயக்குனர் இயாஸ் ஷாவின் பெயரும் உள்ளடங்கியிருந்ததாக கருதப்படுகிறது.
சமீபத்திய வாரங்களில் பூட்டோ பலமுறையும் அரசாங்கம் மறைப்புக் கண்ணாடி
கதவுகள் கொண்ட கவச வாகனம், மற்றும் குண்டுகளை வெடிக்காமல் செயலிழக்க வைப்பதற்கான மின்னணுமூலம்
இயக்கப்படும் கருவிகள் உள்பட அவருக்கு தேவையான அடிப்படை பாதுகாப்பு தேவைகளை கொடுக்கவில்லை என்றும்
புகார் கூறியிருந்தார்.
அமெரிக்காவில் இருந்து பூட்டோவின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவர், தான்
கொல்லப்பட்டால் பாக்கிஸ்தானிய அரசாங்கமும் இராணுவமும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று
படுகொலையுண்ட பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பூட்டோ தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.
அமெரிக்க செனட் உறுப்பினரும், செனட்டின் வெளியுறவுக் குழுவின் தலைவரும்,
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடியவர்களுள் ஒருவருமான ஜோசப் பிடென் தான் தனிப்பட்ட
முறையில் பூட்டோவிற்கு கூடுதலான பாதுகாப்பு அளிக்குமாறு முஷாரஃப் ஆட்சிக்கு முறையிட்டதாகவும் அவருடைய
முறையீடுகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டன என்றும் கூறியுள்ளார்.
தான் எதிர்கொண்டுள்ள பாரிய ஆபத்தை நன்கு அறிந்திருந்த போதிலும்கூட, அமெரிக்காவுடன்
தான் கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் தன்னுடைய பாதுகாப்பிற்கு போதும் என்ற கருத்துடன் பூட்டோ
இருந்திருந்ததாக தோன்றுகின்றது. இந்தவிதத்தில் அவர் பெரிதும் தப்புகணக்கு போட்டுவிட்டார்.
பாக்கிஸ்தானிய "ஜனநாயகம்" எனப்படும் மோசடி
முஷாரஃப்பின் தலைமையில் இருக்கும் இராணுவ அரசாங்கம் நீண்டகாலமாக உறுதி
மொழி கூறப்படும் தேர்தல்களை நடத்துமா என்பது பற்றி பூட்டோவின் படுகொலை வினாவிற்கு உட்படுத்துகிறது.
குறைந்த பட்சம், அரசாங்கம் வியாழன் நடந்த படுகொலை, குண்டுவீச்சு கொடூரத்தை அனைத்து தேர்தல்
பிரச்சார நடவடிக்கைகளையும் தடைசெய்வதற்கு ஒரு போலிக் காரணமாக பயன்படுத்தும் என்று
எதிர்பார்க்கலாம்.
ஒரு சுருக்கமான தொலைக்காட்சி தோன்றலில் முஷாரஃப் நாட்டில் மூன்று நாட்கள்
துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்ததுடன், இஸ்லாமிய பயங்கரவாதிகள்மீது படுகொலைக்கான
குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
ஒரு தேர்தல் வேட்பாளராகக்கூட நிற்பதற்கு ஆட்சியினால் தடைசெய்யப்பட்டுள்ள
நவாஸ் ஷெரிப், ஜனவரி 8ம் தேதி அரசாங்கம் தேர்தல்களை நடத்தினால் தனது கட்சி அவற்றை புறக்கணிக்கும்
என்று அறிவித்ததன் மூலம் பூட்டோவின் படுகொலைக்கு பதிற்செயலாற்றினார்.
பாக்கிஸ்தானின் நன்கு அறியப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரும், இருமுறை பிரதம
மந்திரியாகவும் இருந்த பூட்டோவின் படுகொலையானது, பாக்கிஸ்தானின் "ஜனநாயக மாறுதலுக்கு" ஊக்கம்
கொடுக்கும் கட்டம் என்று புஷ் நிர்வாகத்தாலும் அமெரிக்க செய்தி ஊடகத்தாலும் உயர்வாய் பாராட்டப்பட்டிருந்த
தேர்தல்களின் முழுப் போலித்தன்மையை அடிக்கோடிட்டுத்தான் காட்டுகிறது.
1999ல் இராணுவ ஆட்சிகவிழப்பு முறையின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய
முஷாரஃப் ஆறு வாரங்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தியிருந்த அவசரகால நிலைமையை டிசம்பர் 15ம் தேதி,
அகற்றினார். சர்வாதிகார ஆணைப்படி தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வரவிருந்த அனைத்து
சட்டபூர்வ-அரசியலமைப்பு தடைகளையும் அகற்றுவதற்காக அவர் அவசரகால ஆட்சியை சுமத்தியிருந்தார். ஆனால்
அந்த பெயரில் இல்லாமல், மற்றபடி அவசரகால ஆட்சி தொடரத்தான் செய்கிறது.
செய்தி ஊடகம் மிகக் கடுமையான தணிக்கை விதிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் இராணுவ நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட முடியும். தேர்தல்
ஊர்வலங்களும் அனைத்து அரசாங்க எதிர்ப்புக்களும் தடை செய்யப்பட்டுள்ளன. தேர்தல்கள் பற்றி இறுதி சட்ட
அதிகாரத்தை கொண்ட நாட்டின் தலைமை மற்றும் மாநில உயர்நீதி மன்றங்களில், முஷாரஃப்பிற்கு போதுமான
விசுவாசமற்றவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் அகற்றப்பட்டுவிட்டனர்.
பொதுவாக இத்தகைய குற்றம் சார்ந்த சதித்திட்டங்களில் இருப்பதுபோலவே,
பூட்டோ படுகொலையை எவர் செய்திருப்பர் என்று உறுதியாகக்கூற இயலாது. ஆனால் பாக்கிஸ்தானிய
பொதுமக்களில் பலரும், ஏன் பெரும்பாலானவர்கள், முஷாரஃப் ஆட்சியும் மற்றும் அதன் இராணுவத்தை
புரப்பவர்களும்தான் இதற்குப் பொறுப்பு என்று கருதுகின்றனர். பெரும் காயமுற்று பூட்டோ எடுத்துச்
செல்லப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அருகே கூடியிருந்த பெரும் மன உளைச்சலில் இருந்த பாக்கிஸ்தான் மக்கள்
கட்சியின் உறுப்பினர்கள் "நாய், முஷராஃப், நாய்" என்று கோஷமிட்ட வண்ணம் இருந்தனர்.
அல் கொய்தா மற்றும் பல பிற இஸ்லாமிய இராணுவக் குழுக்கள் புஷ் நிர்வாகம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் பூட்டோவிற்கும் முஷாரஃப்பிற்கும் இடையே அதிகாரப் பகிர்வு உடன்பாடு வருவதைத்
தான் ஆதரிக்கும், என்று தெளிவாக்கியபோது பூட்டோவை கொலை செய்துவிடவேண்டும் என்று உறுதி
எடுத்திருந்தனர்; அவ்வாறு செய்வது இராணுவ ஆட்சிக்கு ஒரு சட்டபூர்வ தன்மையை கொடுக்கும் என புஷ் நிர்வாகம்
நம்பியிருந்தது. ஆனால் இதன் பொருள் இஸ்லாமியவாதிகள் கொலையை நடத்தியிருப்பர் என்றோ, அவ்வாறு
செய்திருந்தால் அதற்கு இராணுவ-உளவுத்துறை அமைப்பு மற்றும் அரசாங்கத்தில் இருக்கும் கூறுபாடுகளின் தூண்டுதல்
அல்லது ஊக்கம் இல்லை என்றோ பொருள் ஆகிவிடாது.
பாக்கிஸ்தானிய இராணுவம் மற்றும் முதலாளித்துவ உயரடுக்கினுள் பலரும் அயுப் கான்
மற்றும் யாஹ்யா கான் சர்வாதிகாரங்களின் இறுதிக்காலத்தில் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் தான் அதிகாரத்திற்கு
வருகின்ற காலங்களின் பொழுது, வறுமை, சமத்துவமின்மை பற்றி மக்களிடையே இருந்த அதிருப்திக்கு வார்த்தைஜால
முறையீடு செய்ததை ஒருபோதும் மன்னித்திருக்கவில்லை. பூட்டோவின் தந்தையும் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின்
நிறுவனர் மற்றும் முன்னாள் பாக்கிஸ்தானின் பிரதம மந்திரியுமான ஜுல்பிகார் அலி பூட்டோ 1979ல் ஜியாவுல்
ஹக்கின் இராணுவ ஆட்சியினால் தூக்கிலிடப்பட்ட போது, பாக்கிஸ்தானின் வணிக மற்றும் நிலப்பிரபுத்துவ அடுக்கு
பெரும் உற்சாகத்தைத்தான் அதற்குக் காட்டியது.
கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் புஷ் நிர்வாகம் பூட்டோவிற்கும்
முஷாரஃப்பிற்கும் இடையே அதிகாரப் பகிர்வு உடன்பாட்டை கொண்டுவருவதற்கு முயற்சிப்பதில் கணிசமான சக்தியை
செலவிட்டது; போலித் தேர்தல்களை தொடர்ந்து எப்படியும் ஒரு உடன்பாடு உருவாகக்கூடும் என்று இன்னும்
நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால் முஷாரஃப்பிற்கு அவருடைய சமீபத்திய "நெருக்கடி" காலத்தில் அது கொடுத்த
ஆதரவின் மூலம், முஷாரஃப்பும் இராணுவமும்தான் தனது மிகச் சிறந்த நண்பர்கள் என்று தான் கருதுவதை புஷ்
நிர்வாகம் மிகவும் தெளிவாக்கிவிட்டது.
அரசாங்கத்திற்கும் பாக்கிஸ்தானை ஜனநாயக வகைக்கு வழிநடத்துவதற்கான அதன்
முட்டாள் தனமான கூற்றுக்கும் அமெரிக்காவின் உறுதியான ஆதரவு, முஷாரப்பிடம் இல்லாவிடினும் இராணுவம் மற்றும்
பாக்கிஸ்தானின் முஸ்லிம் லீக்(Q)
இல் உள்ள அவரது அரசியல் அடிவருடிகளின் மத்தியில் உள்ள மிகவும்
பொறுப்பற்ற, இரக்கமற்ற கூறுபாடுகளிடமும் பூட்டோவை முற்றிலும் அகற்றிவிடுவது பற்றிய சிந்தனைக்கு இடம்
கொடுத்திருக்கக்கூடும்.
பூட்டோ படுகொலை செய்யப்பட்டுள்ளது கருத்துக் கணிப்புக்கள் பாக்கிஸ்தானின்
தேசிய பாராளுமன்றத்தில் ஒற்றைப் பெரும்பான்மை கட்சியாக வெளிப்படக்கூடும் என்ற குறிப்பை காட்டியிருந்த
பாக்கிஸ்தான் மக்கள் கட்சியில் ஒரு அரசியல் தலைமையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. ஒரு குடும்ப பரம்பரைக்
கட்சியான பாக்கிஸ்தான் மக்கள் கட்சி தனது அரசியல் முறையீட்டை பெனசீர் பூட்டோவையும் மற்றும்
தூக்கிலிடப்பட்ட அவருடைய தந்தையாரை நோக்கியும் முற்றாக நெறிப்படுத்தியிருந்தது.
பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் "வாழ்நாள் தலைவர்" கொலை செய்யப்பட்டது,
வெளிப்படையாக முஷாரஃப்பிற்கும் மற்றும் அவருடைய ஆட்சிக்கும் ஒரு போட்டித் திறன் கொண்ட மற்றும்
வாஷிங்டனின் ஆதரவைப் பெறக் கூடிய திறனையும் உடையவரை அகற்றியதின் மூலம் நலனை அளித்துள்ளது. ஆனால்
வியாழனன்று நடைபெற்ற ஒரு வெளியுறவுக் குழுவின் செய்தியாளர் கூட்டத்தில், படுகொலை, ஆட்சிக்கு அது ஓரளவு
அனுபவித்து வந்துள்ள நம்பகத்தன்மையையும் இல்லாதொழித்துவிட்டது, சமூக அமைதியின்மைக்கு எரியூட்டக்கூடும்
போன்ற அமெரிக்க அரசியல் கட்டமைப்பின் கவலைகளை கூற வைத்துள்ளது.
கராச்சியில் கலகம் வெடித்தது; அதேபோல் பூட்டோவின் சொந்த மாநிலமான
சிந்துவிலும் பாக்கிஸ்தானின் பிற பகுதிகளிலும் கலவரங்கள் வெடித்துள்ளன.
BBC கூற்றின்படி,
எதிர்ப்புக்களை அடக்குவதற்கு பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தப்பட்டபோது குறைந்தது 11 பேர்
கொல்லப்பட்டனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கு
ஏகாதிபத்தியம்தான், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியம்தான்
தற்கால பாக்கிஸ்தானை பீடித்துள்ள அரசியல், சமூக, பொருளாதார பெரும் கெடுதல்களுக்கு காரணமாகும்.
இந்த நாட்டில் இராணுவ அதிகாரிகள் பிரிவு அரசாங்கத்தில் மேலாதிக்கத்தை கொண்டு ஒரு சிறிய முதலாளித்துவ
மற்றும் நிலப்பிரபுக்கள் பிரிவுடன் இணைந்து தொழிலாள வர்க்கம் மற்றும் வறிய கிராமப்புற உழைப்பாளிகளை
மிருகத்தனமாக சுரண்டி பெரும் செல்வங்களை குவித்து வருகிறது.
அமெரிக்க செய்தி ஊடகம் பாக்கிஸ்தானின் ஜனநாயகம் பற்றி பிதற்றல்களை
வெளியிடும்போது, பாக்கிஸ்தானிய முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் மிக அடிப்படைப் பிரச்சினைகளைக் கூட -
அடிப்படை குடியியல் உரிமைகள் மற்றும் மகளிருக்கு சமத்துவத்திற்கு உத்திரவாதம் முதல் மற்றும் கல்வி,
சுகாதாரங்களை வழங்குதல் வரை, சிறுவர் மற்றும் கொத்தடிமை உழைப்பை அகற்றுவது வரையிலான
பிரச்சினைகளை - கவனிக்கத் தவறிவிட்டது என்பதுதான் உண்மை.
அமெரிக்க உயரடுக்கின் கொள்ளையிடும் பொருளாதார மற்றும் பூகோள-அரசியல்
நலன்களை தொடர்வதில், ஜனநாயக மற்றும் குடியரசு நிர்வாகங்கள் இரண்டுமே மிருகத்தனமான இராணுவ
சர்வாதிகார ஆட்சிகள் தொடர்ந்திருப்பதற்கு ஆதரவைக் கொடுத்துள்ளன.
ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த இரண்டு நிகழ்ச்சிப்போக்குகள், பாக்கிஸ்தானின்
செத்துப் பிறந்த ஜனநாயகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குன்றிய தன்மையின் அடித்தளத்தில் உள்ளன; அவை
ஏகாதிபத்தியம் சுமத்திய 1947ம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்தை வகுப்புவாத முறையில் பிரிவினை செய்ததும்
மற்றும் தளபதி முகமது ஜியாவுல் ஹக் காலத்தில் பாக்கிஸ்தான் திருத்தி அமைக்கப்பட்டதுமாகும். வாஷிங்டனுடைய
நெருக்கமான பிணைப்பில் ஜியாவுல் ஹக் பாக்கிஸ்தான் இராணுவம் மற்றும், அரசியலை "இஸ்லாமிய"
வழிப்படுத்தினார்; அதேவேளை ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாத இராணுவக் குழுக்களுக்கு ஆயுதமும்
ஊக்கமும் கொடுப்பதன் மூலம் சோவியத் ஒன்றியத்தை கீழறுப்பதற்கான அமெரிக்கப் பிரச்சாரத்திற்கு நாட்டை ஒரு
சுழல் அச்சாக இருக்கச்செய்தார்.
பாக்கிஸ்தான் ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசு ஆகும்; இதன் உருவாக்கம்
பொருளாதார, பூகோளவியல் தர்க்கத்தை மீறியதுடன், அதே போல் தெற்கு ஆசியாவின் வரலாற்று, கலாச்சார
மரபுகள் இல்லாததுமாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டு முறையிலுள்ள இரண்டு முக்கிய கூறுகளை
நிலைநிறுத்துவதற்கு சேவை செயதது: முஸ்லிம்கள் ஒரு தனி அரசியல் குழு என்ற அரசு ஆதரவு வரையறைக்கும்,
பஞ்சாபியர்கள் மேலாதிக்கம் செய்யும் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்திற்கும்கும்தான் அது உதவியது.
இவ்வாறு கூறுவதால் முதலாளித்துவ இந்திய தேசிய காங்கிரஸ் (INC)
பிரிவினைக்கு கொண்டிருந்த பொறுப்பு இல்லாமல்போய்விட்டது
என்ற பொருளைத் தராது; மேலும் பிரிட்டிஷ் ஆட்சியின் தளத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சுதந்திர
முதலாளித்துவ அரசு கூடுதலான வரலாற்று சட்டபூர்வத்தன்மையை கொண்டுவிட்டது என்ற பொருளையும் தராது.
இந்திய தேசிய காங்கிரஸ், இந்து வகுப்புவாத இந்து மகாசபை மற்றும்
RSS
இயக்கத்தினருடன் இணைந்து கொண்டு, கீழிருந்து நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள
வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட விவசாயிகளினதும் புரட்சிகரமான அணிதிரட்டலின் ஊடாக துணைக்கண்டத்தை
ஒன்றுபடுத்துவதன் மூலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தந்திர உத்திகளை முறியடிப்பதற்கு அமைப்பு ரீதியாய்
திராணியற்றும் விரும்பாமலும் இருந்தது.
பிரிவினை என்பது, இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் துணைக்கண்டத்தை உலுக்கிய
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் ஏகாதிபத்தியத்தினதும் மற்றும் பேராவல் கொண்ட இந்திய, பாக்கிஸ்தானிய
தேசிய முதலாளித்துவ பிரிவினதும் கரங்களால் ஒடுக்கப்பட்டதன் மிகத் தெளிவான, குருதி கொட்டிய
வெளிப்பாடாகத்தான் இருந்தது.
இது ஒரு பகுத்தறிவார்ந்த பொருளாதார வளர்ச்சியை தடுத்து, வகுப்புவாதப்
பிளவுகளை அரசுகளுக்கு இடையேயான போட்டி என போற்றிப்பேணச் செய்து தெற்கு ஆசிய மக்களை மூன்று
அறிவிக்கப்பட்ட போர்களில் ஈடுபடுத்திய வகையில் இழைந்து நின்றதுடன், அந்தந்த நாட்டு முதலாளித்துவங்கள் சமூக
அதிருப்தியை சோவினிச வெறியாக மாற்றுவதற்கான வழிவகையை ஏற்படுத்தி, அதனூடாக தெற்கு ஆசியாவில்
ஏகாதிபத்திய ஆதிக்கம் மேலோங்குவதற்கே வழிவகுத்தது.
சுதந்திரத்திற்கு முன் முஸ்லிம் லீக் ஏற்படுத்தியிருந்த பங்கை தொடர்ந்த வகையில்,
பாக்கிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கம் இன்னும் பரிதாபகரமான முறையில் குளிர்யுத்த காலத்தில் இந்திய
போட்டியாளர்கள் ஏகாதிபத்தியத்திடம் கொண்டிருந்த கூட்டை விடவும் மிக இழிவான வகையில் மற்றும்
வெளிப்படையான வகையில் தன்னை ஏகாதிபத்தியத்துடன் பிணைத்திருந்தது. 1950களின் நடுப்பகுதியில் சோவியத்
ஒன்றியத்தை எதிர்ப்பதற்கு "முன்னணி வரிசையில்" இருந்த நாடுகளில் ஒன்றாக பாக்கிஸ்தான் வாஷிங்டனால்
கருதப்பட்டது; பாக்கிஸ்தானிய இராணுவம் அமெரிக்க பூகோள-அரசியல் மூலோபாயத்தில் மிக முக்கியமான
இடத்தைப் பெரும் வகையில் நிலைத்தது. தளபதி அயூப் கான் 1958ல் ஆட்சியை கைப்பற்றியபோது, அவர்
வாஷிங்டனின் ஆரவரமான வரவேற்பை பெற்றார்; இது "ஐக்கிற்கு (ஐசனோவருக்கு) அயூப்பைப் பிடிக்கும்" என்று
கூறப்பட்ட சொற்றடர் மூலம் நன்கு புலனாகும்.
பாரிய வெகுஜன மாணவர்-தொழிலாளர் எதிர்ப்புக்கள் மற்றும் பாக்கிஸ்தானிய
கூட்டமைப்பில் தன்னுடைய தாழ்ந்த நிலைக்கு எதிராக கிழக்கு பாக்கிஸ்தானிடமிருந்து எதிர்ப்புக்களை எதிர்கொண்ட
நிலையில் அயூப் கானின் ஆட்சி 1968-69ல் சரிந்த பின், நிக்சனும் கிஸ்ஸிங்கரும் பங்களாதேசம் பிரிந்து
செல்வதைத் தடுக்க பெரும் இனப்படுகொலை நடவடிக்கையை நடத்தியதில் ஒரு புதிய இராணுவ வலிமை பெற்ற
யாஹ்யா கானை ஊக்கப்படுத்தினர்.
மூன்றாம் இந்திய-பாக்கிஸ்தானிய போரில் பாக்கிஸ்தான் அவமானகரமாக
தோல்வியுற்றது பாக்கிஸ்தானிய உயரடுக்கினரையும் வாஷிங்டனையும் ஒரு நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்து அயூப்
கானின் செல்லப்பிள்ளையாக இருந்த பூட்டோவிடம் திரும்பவைத்தது. இந்திய-எதிர்ப்பு சோவினிசத்தையும், போலி
சோசலிச சொற்றொடர்களையும் பூட்டோ பயன்படுத்தி பாக்கிஸ்தானின் பெருமளவு சமத்துவமின்மை மற்றும்
இராணுவத்திற்கு எதிராகக் கிளம்பிய மக்கள் எதிர்ப்பை அரசியல் ரீதியாக காயடிக்கச் செய்தார்.
ஆறு ஆண்டுகள் பூட்டோ பதவியில் இருந்தபோது, மோதிக் கொண்டிருந்த சமூக
சக்திகளுக்கிடையில் ஆபத்து நிறைந்த சமநிலைப்படுத்துதலுக்கு முயன்றார். இராணுவத்தை மீண்டும் வலுப் பெறுமாறு
செய்து, அதை பலூச்சிஸ்தானில் தேசிய எழுச்சியை அடக்கப் பயன்படுத்தி பாக்கிஸ்தானை ஒரு இஸ்லாமியக் குடியரசு
என்று அறிவித்து, அமெரிக்க-பாக்கிஸ்தானிய நட்புறவை தக்க வைத்துக் கொண்டார். குறைந்தபட்ச சமூக
சீர்திருத்தங்களையும் அவர் செய்தார்; அதே நேரத்தில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமான நடவடிக்கைகளில்
ஈடுபட்டால் வன்முறையைக் கையாண்டு அவற்றை ஒடுக்கினார். இறுதியில் சர்வதேச அளவில் 1970களின் கடைசிப்
பகுதியில் அரசியல் வலதிற்கு மாற்றம் காண்கையில், தளபதி ஜியாவின் தலைமையில் இராணுவம் வாஷிங்டனுடைய
ஊக்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
ஜியாவின் ஆட்சி, பாக்கிஸ்தானின் அடுத்த வளர்ச்சிக் கட்டத்தில் கொடூரமான
விளைவுகளை கொடுத்தது. 1978-79 தொடங்கி பதினொரு ஆண்டுகளுக்கு, வாஷிங்டன் இஸ்லாமாபாத்தை
ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரில் அமெரிக்கத் தலையீட்டிற்கு பிணைப்பாகப் பயன்படுத்தி, சோவியத்-எதிர்ப்பு
இஸ்லாமிய சக்திகளை அமைத்து ஊக்கம் கொடுத்து, அமெரிக்கா மற்றும் சவுதி அரேபிய ஆயுதங்களும் பணமும்
ஆப்கானிய முஜாஹைதீனுக்கு செல்வதற்கு வழிவகையாகவும் மாற்றியது. இது உள்நாட்டில் ஜியாவின் சொந்த
முயற்சிகளான இஸ்லாமிய வலதை தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் இடதுக்கும் எதிராக கட்டமைக்க துணை நின்று
இஸ்லாமிய அடிப்படை வாதத்தை அரசின் சித்தாந்தமாக முன்னெடுக்கவும் வழிவகுத்தது.
அரசு கல்வி மற்றும் பிற அடிப்படை பொதுப் பணிகளை செய்வதில் இருந்து விலகிக்
கொள்ளவே, ஜியாவின் வலதுசாரி பொருளாதார கொள்கைகள் நிறைந்த ஆட்சியில், இஸ்லாமிய மத அமைப்புகள்
பெரும் பிளவாக இருந்த நிலையை இட்டு நிரப்புவதற்கு ஊக்குவிக்கப்பட்டன.
இதன் முடிவான விளைவு, மத பிற்போக்குத்தனத்தை முன்னேற்றுவித்தது, பெருகிய
குழுவாத பூசல்களை பெருக்கியது, சிறுபான்மையினரை ஒடுக்குதலை அதிகரித்தது, இராணுவத்திற்கும் ஆயுதமேந்திய
இஸ்லாமிய குழுக்களுக்கும் இடையே பிணைப்பை அபிவிருத்தி செய்தது; இவை அனைத்தையும் பாக்கிஸ்தானிய உயரடுக்கு
இந்தியாவுடனான பாக்கிஸ்தானின் பூகோள-அரசியல் பூசலில் பயன்படுத்திக் கொள்ள முயன்றது.
குளிர்யுத்த காலத்தில், பாக்கிஸ்தானிய உயரடுக்கை இந்தியாவுடனான அழிவுதரக்கூடிய
போட்டியை கொள்ளுமாறு வாஷிங்டன் ஊக்கம் கொடுத்தது; இதற்காக பாக்கிஸ்தானுக்கு அனைத்துவித ஆயுதங்கள்,
ஆயுத முறைகள் ஆகியவற்றை அளித்தும், விற்றும் வந்தது. ஆனால் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர், இந்திய
முதலாளித்துவம் தன்னுடைய தேசிய பொருளாதார கொள்கையை கைவிட்டதை அடுத்து, கிளின்டன் நிர்வாகத்தின்கீழ்,
அமெரிக்கா இந்தியாவுடன் ஒரு புதிய மூலோபாயக் கூட்டினை உருவாக்குவதற்கு நகர்ந்தது.
அமெரிக்காவின் பூகோள-அரசியல் மூலோபாயத்தில் இப்பொழுது பாக்கிஸ்தான்
குறைவான முக்கியமாக இருந்தாலும், பென்டகன்-பாக்கிஸ்தானிய இராணுவ பங்காளித்தனம் நீடித்தது. வாஷிங்டன்,
பாக்கிஸ்தானிய இராணுவத்தை விலைமதிப்பு உடைய சொத்தாகத் தொடர்ந்து கருதுவதுடன் பாக்கிஸ்தானிய அரசின்
பாதுகாப்பு அரணாக கருதுகிறது.
செப்டம்பர் 11, 2001 நிகழ்வுகளை பயன்படுத்தி, மத்திய ஆசியா, மத்திய
கிழக்கில் இருக்கும் எண்ணெய் இருப்புக்கள் மீது அமெரிக்க கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் புஷ்
நிர்வாகம் இன்னும் கூடுதலான வகையில் ஆக்கிரோஷமான வெளிநாட்டுக் கொள்கைக்கு மாறியபொழுது,
பென்டகன்-பாக்கிஸ்தானிய இராணுவ உறவுகள் புதிய சக்தியுடன் செயல்படுத்தப்பட்டு முஷாரஃப் விரைவில்
அமெரிக்காவின் மிக முக்கியமான நண்பர்களுள் ஒருவராக வெளிப்பட்டார்.
செப்டம்பர் 2001ல் இருந்து பாக்கிஸ்தானுக்கு $10 பில்லியன் அளித்ததாக
வாஷிங்டன் ஒப்புக் கொண்டுள்ளது; இதில் பெரும்பகுதி இராணுவ உதவி மற்றும் "பயங்கரவாதத்தின் மீதான
போருக்கான" உதவி நிதிகள் ஆகும். இதற்குப் பதிலாக முஷாரஃப் ஆட்சி ஆப்கானிஸ்தானின் மீதான படையெடுப்பு
மற்றும் ஆக்கிரமிப்பிற்கு சுழலச்சாக இயங்கும் இராணுவ நிலை ஆதரவை வழங்கியதுடன், அமெரிக்கப் பாதுகாப்பு
பிரிவுகள் சித்திரவதை முகாம்கள் நடத்த அனுமதித்தது. இப்பொழுது ஈரான்மீது ஒருவேளை நடத்தக்கூடிய
தாக்குதலுக்கு பாக்கிஸ்தானை பயிற்சி தளங்களாகவும் பயன்படுத்த அனுமதித்துக் கொண்டிருக்கிறது.
முஷாரஃப்பின் ஆட்சி கடந்த இரு மாதங்களாக அதன் நச்சுப் பற்களைக் காட்டி வருகிறது;
முதலில் ஒரு ஆறு வாரகால அவசரகால நிலைமையை சுமத்தியது; அமெரிக்காவோ பாக்கிஸ்தானிய இராணுவத்துடன்
தன்னுடைய பிணைப்புக்களை இன்னமும் கூடுதலாக வலுப்படுத்தி வருகிறது.
கடந்த வாரம், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அமெரிக்க
காங்கிரஸ் மற்றும் ஒரு $785 மில்லியனை 2008ம் ஆண்டிற்கு இஸ்லாமாபாத்திற்குக் கொடுப்பதற்கு ஒப்புதல்
கொடுத்தது. வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயோர்க் டைம்ஸ் ஆகியவற்றில் வந்துள்ள
தகவல்களின்படி, புதிதாக முடிவு செய்யப்பட்ட அமெரிக்க-பாக்கிஸ்தானிய உடன்பாட்டின்படி, பல நூறு அமெரிக்க
சிறப்புப் படையினர் பாக்கிஸ்தானில் வரவிருக்கும் வாரங்களில் "உள்நாட்டு எழுச்சி எதிர்ப்பு பிரிவிற்கு பயிற்சி,
மற்றும் ஆதரவு கொடுக்கவும் இரகசிய முறையில் பயங்கரவாத-எதிர்ப்புப் பிரிவுகளை ஏற்படுத்தவும்
அனுப்பப்படும்". (December 26, Washington
Post)
தொழிலாள வர்க்கமும் பாக்கிஸ்தானில் ஜனநாயகத்திற்கான போராட்டமும்
பாக்கிஸ்தானில் ஜனநாயகத்திற்கான போராட்டமானது, அமெரிக்கா ஆதரவு மற்றும்
நிதியைப் பெறும் இராணுவ அரசு எந்திரத்திற்கும் மற்றும் தெற்கு ஆசியாவில் ஏகாதிபத்தியம் திணித்த தேசிய
அரசமைப்பிற்கும் எதிராகவும் இருக்க வேண்டிய போராட்டம் ஆகும். இதற்கு பாக்கிஸ்தானின் உழைக்கும் மக்கள்
அரசியலில் தலையிட்டு அடிப்படை குடியுரிமைகளுக்கு போராடுவதுடன், வேலைகள், பொதுப்பணிகள், கிராமப்புற
உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு ஆகியவற்றிற்கும், அதாவது தீவிரமான முதலாளித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு
போராட வேண்டும்.
இறுதி ஆய்வில், பாக்கிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கம் மிக அடிப்படையான
ஜனநாயக நெறிகளை கூட கடைப்பிடிக்காமல் இருப்பதும், மீண்டும் மீண்டும் இராணுவ ஆட்சியையும் அரசியலமைப்பிற்கு
அப்பாற்பட்ட நடவடிக்கைகளையும் கையாள்வதும் பாக்கிஸ்தானிய சமூகத்தில் செல்வத்தின் தீவிர துருவமுனைப்படல்
இருப்பதிலும், அது ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து இருப்பதிலும் வேர்களை கொண்டுள்ளது.
தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ள சிறுபான்மைக் கட்சிகள்
உட்பட முதலாளித்துவ ஜனநாயக எதிர்ப்பின் எந்தப் பிரிவும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை
தொழிலாள வர்க்கம் மற்றும் உழைக்கும் பாக்கிஸ்தானிய விவசாய மக்களினதும் எல்லாவற்றிற்கும் மேலாக குத்தகை
எடுத்தவர்கள், விளைச்சலில் பங்கு கொள்ளும் விவசாயிகளினதும் சமூகப் பொருளாதார இன்னல்களுடனும் பிணைத்து,
மக்களுக்கு உண்மையாக அழைப்புவிடுவதும் இல்லை; அதற்கான திறனையும் பெற்றிருக்கவில்லை.
பூட்டோவின் வளர்ச்சியில் இதுதான் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. முஷாரஃப்
ஆட்சிக்கு எதிர்ப்பு கடந்த ஓராண்டு காலமாக அதிகரித்து கூடுதலான வகையில் பகிரங்கமாக வெளிப்பட்ட
நிலையில், பூட்டோ பலமுறை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்திற்கு தன்னுடைய எதிர்ப்பை
வெளிப்படுத்தினார்; ஏனெனில் அது அரசியல் உயரடுக்கின் கட்டுப்பாட்டைவிட்டு தப்பிவிடும் என்று அவர் அஞ்சினார்.
முதலாளித்துவத்தின் எதிர்ப்புப் பிரிவுகள் அனைத்தும் தொழிலாள வர்க்கத்திற்கு
எதிரான தங்களுடைய சொந்த வர்க்க சலுகைகளை தக்க வைக்கவும் பாக்கிஸ்தானிய அரசின் நெருக்கடி நிறைந்த
எல்லைப்புற ஒருங்கிணைப்பை பாதுகாக்கவும் இராணுவத்தைத்தான் நம்பியுள்ளன. மேலும் நிதிய இடைத்தொடர்பினால்
ஏகாதிபத்தியத்தின் நிதிய வலைப்பின்னலிலும் கட்டுண்டுள்ளன. இதையொட்டி அவை இராணுவ ஆட்சி, ஏகாதிபத்திய
மேலாதிக்கம் ஆகியவற்றிற்கு எதிராக உண்மையான மக்கள் அறைகூவல் வெடித்து வரக்கூடுமோ என்று பயந்து அதை
எதிர்க்கவும் செய்கின்றன.
ஆழ்ந்த சமூக சமத்துவமின்மை, பெருகிய வேலையின்மைப் பிரச்சினை, உணவு, சக்தி
தட்டுப்பாடுகள் மற்றும் விலைவாசி உயர்வுகள் ஆகியவற்றிற்கு எதிரான மக்களின் பெருகிய அதிருப்தி முதலாளித்துவ
எதிர்க்கட்சிகளை இன்னும் கூடுதலான வகையில் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக பாக்கிஸ்தானிய மக்களிடம்
கோரிக்கை விடுவதை பற்றி விருப்பமற்று இருக்க வைத்துள்ளது. எழுச்சி பெற்றுவிட்டால், பாக்கிஸ்தானின் உழைக்கும்
மக்கள், நிழலுக்கு விரைவில் திரும்பிவிட மாட்டார்கள் என்றும் தங்கள் சலுகைகளுக்கு சவால்விடும் சமத்துவ
உள்ளடக்கம் உடைய ஜனநாயகத்திற்கான அழைப்பில் ஈடுபட்டுவிடுவர் என்ற பயத்தில் அவர்கள் நடுங்குகின்றனர்.
முஷாரஃப் சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் முதலாளித்துவ எதிர்க்கட்சியின் தீயஅரசியல்
செல்வாக்கை முறிக்கவும் வெகுஜனத்தை திரட்டும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாள வர்க்கம் மற்றும்
சோசலிச சிந்தனை உடைய மாணவர்களும் அறிவுஜீவிகளும், அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட
வேண்டும், செய்தி ஊடகத் தடைகள் அகற்றப்பட வேண்டும், அரசியல் எதிர்ப்புக்கள் வேலைநிறுத்தங்கள் மீதுள்ள தடைகள்
அகற்றப்பட வேண்டும், முஷாரஃப் ஆட்சி கலைக்கப்பட வேண்டும் மற்றும் உண்மையான தேர்தல்கள் நடத்தப்பட
வேண்டும் என்று கோர வேண்டும்.
இவ்வாறு செய்கையில் அவர்கள் அரசியல் அமைப்பு, ஜனநாயகம் பற்றிய ஆளும்
வர்க்கத்தின் விவாதத்தின் முழு கட்டமைப்பையும் நிராகரிக்க வேண்டும்; இவை ஜனநாயகத்தை கையளவேயான குடிஉரிமைகள்
கடைப்பிடிக்கும் வகையில் குறைத்து, பாக்கிஸ்தானிய முதலாளித்துவ ஒழுங்கை வழங்கப்பட்ட ஒன்றாய் ஏற்கும், அமெரிக்கா
மற்றும் உலக ஏகாதிபத்தியத்துடன் அடிபணிந்து நிற்கும் உறவுகளைத்தான் ஏற்கும்.
உண்மையான ஜனநாயகத்திற்கு நிலச்சுவாந்தார் முறை ஒழிக்கப்படுதல், அமெரிக்க
ஆதரவு உடைய இராணுவ-பாதுகாப்பு அரசாங்கம் கலைக்கப்படுதல், மசூதி, அரசாங்கத்தில் இருந்து
பிரிக்கப்படுதல், வேலைகள் வழங்க, அனைவருக்கும் வருமானத்தை உறுதிப்படுத்த சோசலிச நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுதல், ஏகாதிபத்தியம், தெற்கு ஆசியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின்
உதவியுடன் 1947-48ல் திணித்த வகுப்புவாத அரசு அமைப்பை தூக்கி எறிதல் ஆகியவை தேவைப்படுகின்றன. அது
பாக்கிஸ்தானின் உழைக்கும் மக்களினதும் மற்றும் தெற்கு ஆசியாவின் உழைக்கும் மக்களினதும் தலைவிதியை
முதலாளித்துவ முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு சர்வதேச தொழிலாள வர்க்கப் போராட்டத்துடன்
நனவுபூர்வமாய் பிணைக்கும் ஒரு தொழிலாளர் விவசாயி அரசாங்கம் என்ற வடிவம் மூலம் மட்டுமே அடையப்பட
முடியம்.
உலக சோசலிச வலைத் தளம் பாக்கிஸ்தான், தெற்கு ஆசியாவில் இருக்கும் எமது
வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களை, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர கட்சிக்கான, அதாவது
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பாக்கிஸ்தானிய பகுதிக்கான போராட்டத்தை தொடங்குமாறு
அழைப்புவிடுகின்றது. |