:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan Human Rights Commission
stalls inquiry into disappeared SEP member
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காணாமல் போயுள்ள சோ.ச.க. உறுப்பினர்
தொடர்பான விசாரணையை தட்டிக்கழிக்கின்றது
By our correspondent
15 October 2007
Use this version to
print | Send this link by email |
Email the
author
வட இலங்கையில் மார்ச் 22 அன்று காணாமல் போன சோசலிச சமத்துவக்
கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனன்
தொடர்பான விசாரசணையை மீண்டும் தொடங்குவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு இன்னமும் திகதி
ஒன்றை தீர்மானிக்கவில்லை. ஆணைக்குழுவின் கடைசி விசாரணை நடைபெற்று இப்போது மூன்று மாதங்கள் கடந்துவிட்டன.
கடந்த வியாழனன்று சோ.ச.க. பொதுச் செயாலளர் விஜே டயசுடன் பேசிய
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கான பொறுப்பதிகாரி பிரசன்ன அரம்பத், "இந்த விடயங்கள் தாமதமாகின்றன"
என்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், தன்னுடைய சொந்த வேலைப் பளுவைத் தவிர வேறு காரணங்கள் எதையும்
முன்வைக்கவில்லை. ஜூலை 6 முதல் எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை என்ற விடயம் தொடர்பாக
கேட்டபோது, திகதியொன்றை வழங்காத அரம்பத், சாத்தியமானளவு விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு
எதிரான யுத்தத்தை மீண்டும் தொடங்கியதில் இருந்து, பாதுகாப்பு படையினர் சம்பந்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படும்
ஒரு சூழ்நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர் அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்னமும், ஒரு சில சம்பவங்களைத் தவிர அனைத்து சம்பவங்களிலும் குற்றவாளி என தீர்ப்பளிப்பது ஒருபுறமிருக்க
எவர்மீதும் குற்றஞ்சாட்டப்படவில்லை.
விமலேஸ்வரன் மற்றும் மதிவதனன் காணாமல் போயுள்ளமை தொடர்பாக எந்தவொரு
கடுமையான விசாரணையையும் நடத்த ஆணைக்குழு முயற்சி எடுக்காமையானது அவர்கள் இருவரும் வாழ்ந்த
ஊர்காவற்துறை தீவில் இடம்பெறும் சம்பவங்களுக்கு சமாந்தரமாக உள்ளது. ஊர்காவற்துறையில் உள்ள கடற்படை
சிப்பாய்கள் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதை பலமாக வெளிக்காட்டும் ஆதாரங்கள் இருந்த போதும்,
பொலிசாரும் உள்ளூர் நீதிமன்றமும் வேலனையில் உள்ள கஞ்சதேவ கடற்படை முகாமின் கட்டளை அதிகாரியை
அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை.
மார்ச் 22, அயலில் உள்ள புங்குடு தீவில் இருந்து நீண்ட கடல் பாலத்தின் ஊடாக
ஊர்காவற்துறை தீவில் வேலனையில் உள்ள வீதித்தடையை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணம்
செய்துகொண்டிருந்த போது விமலேஸ்வரனும் மதிவதனனும் கடைசியாக காணப்பட்டுள்ளனர். இந்த இருவரும் அன்றைய
தினம் இரவு திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக புங்குடுதீவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து சில
ஆடைகளை எடுத்துக்கொண்டு ஊர்காவற்துறைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இந்த வடக்கு தீவுகள் பூராவும் இறுக்கமாக நிலைகொண்டுள்ள கடற்படை, கடல்
பாலத்தின் இரு தொங்கல்களிலும் சோதனை நிலையங்களை வைத்திருக்கின்றது. இந்த இருவரையும், புங்குடுதீவு
நோக்கி செல்லும் போது ஊர்காவற்துறையில் உள்ள வேலனை சோதனை நிலையைத்தில் மாலை சுமார் 5 மணிக்கும்,
பின்னர், மாலை 6.30 மணியளவில் புங்குடுதீவு சோதனை நிலையத்தில் வேலனைக்குத் திரும்புவதற்காக மோட்டார்
சைக்கிளை மீண்டும் இயக்கியபோதும் சிலர் கண்டுள்ளனர்.
புங்குடுதீவு கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி, குறித்த நேரத்தில் மோட்டார்
சைக்கிள் ஒன்று அந்த சோதனை நிலையத்தை கடந்து சென்றுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் வேறு
எங்கும் செல்வதற்கு வழியில்லாத நிலையில் இந்த இருவரும் ஒரு குறுகிய நேரத்துக்குள் வேலனை சோதனை
நிலையத்தை அடைந்திருக்க வேண்டும். எவ்வாறெனினும், வேலனையில் உள்ள கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி,
இந்த இருவர் தொடர்பாகவும் எதுவும் தெரியாது எனக் கூறுவதோடு சோதனை நிலையம் தொடர்பான
எந்தவொரு தகவலையும் வழங்க மறுத்துள்ளார்.
சோ.ச.க. யின் வலியுறுத்தலின் பேரில், ஆணைக்குழு ஜூன் 14 அன்று காணாமல்
போனவர்கள் தொடர்பாக ஒரு விசாரணையை மேற்கொண்டது. இந்த விசாரணைக்கு நாட்டின் கடற்படை
தளபதியினதும் மற்றும் பொலிஸ் மா அதிபரினதும் பிரதிநிதிகள் வருகை தந்திருந்த போதிலும், ஊர்காவற்துறை
மற்றும் புங்குடுதீவில் உள்ள கட்டளை அதிகாரிகள் வருகைதரவோ அல்லது பிரதிநிதிகளை அனுப்பவோ
மறுத்துவிட்டார்கள்.
அடுத்த விசாரணைக்கான திகதியாக ஜூலை 6 தீர்மானிக்கப்பட்ட போதிலும், மனித
உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி அரம்பத் வரவில்லை. சோ.ச.க. பொதுச் செயலாளர் கண்டனம்
தெரிவித்ததை அடுத்து, இன்னுமொரு அதிகாரி விசாரணையை நடத்தினார். ஆயினும், கடற்படை கட்டளை
அதிகாரிகளோ அல்லது ஊர்காவற்துறை பொலிசாரோ வருகைதரவில்லை. விசாரணை புதிய திகதி
தீர்மானிக்கப்படாமலேயே முடிவுற்றது.
ஆகஸ்ட் 15, காணாமல் போண சம்பவம் தொடர்பாக அத்தாட்சிப்படுத்தப்பட்ட
சத்தியக் கடதாசிகளைக் கோரி சோ.ச.க. க்கு ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. இதே போன்ற
கடிதமொன்று கடற்படை தளபதியின் சட்டக் காரியாலயத்திற்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதில் மார்ச் 22 வேலனை
சோதனை நிலையத்தில் கடமையில் இருந்த கடற்படை சிப்பாய்களின் பெயர்களும் மற்றும் சோ.ச.க. யின்
முறைப்பாட்டை விசாரணை செய்யும் கடற்படை அதிகாரிகளின் பெயர்களும் கேட்கப்பட்டிருந்தன.
சோ.ச.க. செப்டெம்பர் 3 அன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஐந்து
சத்தியக் கடதாசிகளை கையளித்தது. அவை விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனின் மனைவிமார்களிடமிருந்தும் மற்றும்
விமலேஸ்வரனும் மதிவதனனும் காணாமல் போன அன்று அவர்களைக் கண்ட மூன்று கண்கண்ட சாட்சிகளிடமிருந்தும்
பெற்றுக்கொள்ளப்பட்டன. ஆணைக்குழு சோ.ச.க. யிற்கு பதிலளிக்கவில்லை.
ஊர்காவற்துறை நீதிமன்றில் நடந்த வேறு ஒரு விசாரணையும் முன்னேற்றம் எதையும்
காணவில்லை. ஆகக் கடைசியாக செப்டெம்பர் 14 நடந்த வழக்கு விசாரணையில், வேலனையில் உள்ள கஞ்சதேவ
கடற்படை முகாமின் மக்கள் தொடர்பு அதிகாரி வருகைதந்திருந்த போதும், மீண்டும் அந்த கட்டளை அதிகாரி
மன்றுக்கு சமூகமளிக்கவோ அல்லது பிரதிநிதி ஒருவரை அனுப்பவோ மறுத்துவிட்டார்.
வழக்கை விசாரித்த நீதவான், சுருக்கமாக வழக்கைப்பற்றி குறிப்பிட்டார். மக்கள்
தொடர்பு அதிகாரியிடம் எந்தவொரு கேள்வியும் கேட்கப்படவில்லை. நீதவான், முறைப்பாட்டாளர்களான
விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனின் மனைவிமார்களிடம், அவர்களது கணவன்மார்களை கண்டுபிடித்து தரமுடியும் என
நீதிமன்றத்தால் உத்தரவாதம் அளிக்க முடியாது எனக் கூறியதோடு சாட்சிகள் யாராவது இருந்தால் அவர்களின்
பெயர்களை கொடுக்குமாறும் கூறினார். அவர் பின்னர் இந்த வழக்கை அக்டோபர் 19 வரை ஒத்திவைத்தார்.
பொலிசாரோ அல்லது கடற்படை சிப்பாய்களோ வருகைதர வேண்டும் என அவர் கட்டளை பிறப்பிக்கவில்லை.
இந்த இரு பெண்களும் ஏற்கனவே கண்கண்ட சாட்சிகளின் பெயர்களை
கொடுத்திருந்தனர். இந்த சாட்சிகள், விமலேஸ்வரனும் மதிவதனனும் புங்குடுதீவு நோக்கி சென்றுகொண்டிருக்கும்
போது கடற்படை சிப்பாய்களால் அவர்கள் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதை
கண்டிருந்தனர். வேலனை முகாமில் உள்ள கடற்படை கட்டளை அதிகாரி, அங்கு ஒரு சோதனை நிலையம் இருப்பதை
இன்னமும் உறுதிப்படுத்தியிராததோடு அதனால் அங்கு கடமையில் இருந்த சிப்பாய்களின் பெயர்களை வழங்கவும்
மறுத்துவருகின்றார்.
கடந்த மாதம் பூராவும், வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மாத்திரம் மேலும்
24 பேர் "காணாமல் போயுள்ளனர்". அதே காலகட்டத்தில், தாம் கடத்தப்படலாம் அல்லது கொல்லப்படலாம்
என்ற பீதியால், 72 பொதுமக்கள் யாழ்ப்பாண நகரில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளையில்
பாதுகாப்பு தேடி சரணடைந்துள்ளனர். இவர்களில் பிள்ளைகளுடன் கூடிய நான்கு குடும்பங்களும் அடங்குகின்றன. இந்த
விவகாரம் நீதவான் நீதிமன்றின் முன் கொண்டுவரப்படும் போது, அவர்கள் தமது "பாதுகாப்புக்காக"
விளக்கமறியலுக்கு செல்லும் வாய்ப்பை எதிர்கொள்கின்றனர்.
அக்டோபர் 11, யாழ்ப்பாண வடக்கில் பருத்தித்துறையில் உள்ள சட்டத்தரணிகள்,
ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இராணுவமும் அவர்களோடு சேர்ந்து செயற்படும் துணைப்படை குழுக்களும்
தொந்தரவு செய்வதாகவும் கப்பம் கேட்பதாகவும் மற்றும் மரண அச்சுறுத்தல் விடுப்பதாகவும் இந்த
சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டினர். இதே போன்றதொரு ஆர்ப்பாட்டம் செப்டெம்பர் 19 அன்று யாழ்ப்பாண
குடாநாட்டு சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாண இராணுவத் தளபதி
பாதுகாப்புத் தருவதாக வாக்குறுதியளித்த போதும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்படவில்லை.
செப்டெம்பர் 18, மேம்பட்ட நபர்களின் சர்வதேச சுயாதீனக் குழு, மோசமான
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவால்
கணிசமான முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவித்தது. இந்த விசாரணைக்கான ஜனாதிபதி
ஆணைக்குழுவானது, இலங்கையில் பரந்தளவிலான மனித உரிமைகள் துஷ்பிரயோகம் தொடர்பாக வளர்ச்சி கண்டுவந்த
சர்வதேச விமர்சனத்தை தணிக்கும் முயற்சியாக ஜனாதிபதி இராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டது. ஜனாதிபதி
ஆணைக்குழுவின் பிரச்சினைகளை அணுகுவதற்குப் பதிலாக, அரசாங்கமும் சட்டமா அதிபரும் அந்த அமைப்பை பகிரங்க
அறிக்கைகள் விடுவதை நிறுத்துமாறு உடனடியாக அழைப்புவிடுத்தனர்.
கடந்த சனிக்கிழமை கொழும்புக்கு விஜயம் செய்த மனித உரிமைகளுக்கான ஐ.நா.
உயர் ஸ்தானிகரான லூயிஸ் ஆர்பர் பிரகடனம் செய்ததாவது: "சட்ட ஆளுமையின் பலவீனமும் தண்டனையில் இருந்து
விலக்கீட்டு உரிமை மேலோங்குவதும் எச்சரிக்கை மணிகளை ஒலிக்கின்றன. கொலைகள், காணாமல் போன
சம்பவங்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பாக பெருந்தொகையான அறிக்கைகள் உள்ளன. இவை தீர்க்கப்படாமல்
உள்ளன." ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்காணிப்பாளர்கள் அனுப்பப்பட வேண்டும் அல்லது இலங்கையில்
அதன் அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற ஆர்பரின் யோசனைகளை அரசாங்கம் உடனடியாக
நிராகரித்துவிட்டது.
விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனைக் கண்டுபிடித்து அவர்களின் பாதுகாப்பான
விடுதலையை உறுதி செய்ய அவசர விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை அதிகாரிகளைக் கோருமாறு
நாம் சோ.ச.க. ஆதரவாளர்களிடமும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களிடமும் மீண்டும்
வேண்டுகோள் விடுக்கின்றோம்.
கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Gotabhaya Rajapakse,
Secretary of Ministry of Defence,
15/5 Baladaksha Mawatha, Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529
Email: secretary@defence.lk
N. G. Punchihewa Director of Complaints and Inquiries,
Sri Lanka Human Rights Commission,
No. 36, Kinsey Road, Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924
பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) உலக சோசலிச
வலைத் தளத்திற்கும் அனுப்பி வையுங்கள்.
Socialist Equality Party,
P.O. Box 1270, Colombo, Sri Lanka.
Email: wswscmb@sltnet.lk
உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்கள் அனுப்ப
தயவுசெய்து இந்த online
படிவத்தை பயன்படுத்தவும்.
* * *
கிடைக்கப்பெற்ற கடிதங்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து இங்கு பிரசுரித்துள்ளோம்:
செப்டெம்பர் 13 கொழும்பில் நடந்த மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (இலங்கை)
வருடாந்த பொதுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:
"கடந்த மார்ச் 22ம் திகதி யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊர்காவற்துறை
பிரதேசத்தில் வைத்து காணாமல் போன சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்
சிவநாதன் மதிவதனன் தொடர்பாக முழு அறிக்கை ஒன்றை வழங்க வேண்டும் என மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின்
வருடாந்த கூட்டம் பலமாக கோரிக்கை விடுக்கின்றது.
"புங்குடுதீவையும் ஊர்காவற்துறையையும் இணைக்கும் கடல்பாலத்தினுள் அவர்கள்
நுழைந்த பின்னர், அவர்கள் காணாமல் போயுள்ளமைக்கு இராணுவமே நேரடியாக பொறுப்பு சொல்லவேண்டும்.
பாலத்தின் இரு தொங்கல்களிலும் கடற்படையின் சோதனை நிலையங்கள் இருப்பதோடு பிரதேசத்திலும்
கடற்படையினர் தொடர்ச்சியாக ரோந்து செல்கின்றனர். இந்த சம்பவத்தின் பின்னர் சோ.ச.க. யால்
உறுதியான ஆதாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதோடு அவை உலக சோசலிச வலைத் தளத்திலும்
வெளியிடப்பட்டுள்ளன.
"இவர்கள் காணாமல் போய் ஐந்து மாதங்கள் கடந்துள்ள போதிலும், இன்னமும்
அரசாங்கமோ அல்லது இலங்கை மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவோ முறையான விசாரணைகளை
நடத்தவில்லை. விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனும் காணாமல் போயுள்ளமைக்கு அரசாங்கமே பொறுப்புச் சொல்ல
வேண்டும் என இந்த ஆண்டுக் கூட்டம் கூறிவைப்பதோடு அவர்களது பாதுகாப்பான விடுதலையை உறுதிப்படுத்துமாறும்
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றது.
"அரசாங்கமும் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், சோ.ச.க.
ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தக்க மற்றும் முறையான
விசாரணையை நடத்தத் தவறிவிட்டனர். சிவப்பிரகாசம் மரியதாஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7, கிழக்கில்
திருகோணமலை மாவட்டத்தில் முல்லிப்பொத்தானை கிராமத்தில் அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார்.
மரியதாஸ் கொலைசெய்யப்பட்ட பின்னர் அவர் ஒரு புலி உறுப்பினர் என அந்தப் பிரதேசத்தில் பொய் வதந்தி
ஒன்றைப் பரப்பிவிட்ட இராணுவம் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதற்கான நம்பத்தகுந்த
ஆதாரங்கள் உள்ளன. ஒரு ஆண்டு கடந்த பின்னரும் இந்தக் குற்றத்திற்காக எவரையும் கைதுசெய்ய அல்லது
குற்றஞ்சாட்ட பொலிசார் தவறியுள்ளமை, இந்த ஆதாரத்தை பலமான முறையில் மெய்ப்பித்துக்காட்டுகிறது.
"இந்த நபர்களும் மற்றும் சோ.ச.க. யும் யுத்தத்தையும் மற்றும் அனைத்துவிதமான
இனவாத அரசியலையும் எதிர்ப்பதாலும் மற்றும் அவர்கள் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்
வர்க்கத்தை ஐக்கியப்படுத்த போராடுவதாலுமே அவர்களுக்கு எதிராக இத்தகைய அரசியல் குற்றங்கள்
இழைக்கப்பட்டுள்ளது எனக் கூறி, இத்தகைய காணாமல் போகும் சம்பவங்கள் மற்றும் கொலைகளை இந்த
வருடாந்த மாநாடு கண்டனம் செய்கின்றது.
* * *
ஐயா,
நடராஜா விமலேஸ்வரனும் மற்றும் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போயுள்ள
சம்பவத்தைச் சூழவுள்ள சூழ்நிலைகள் தொடர்பாக ஒரு முழு விசாரணையை நடத்த இலங்கை அதிகாரிகளும் இராணுவமும்
தவிர்த்துக்கொள்ள மேற்கொள்ளும் படுமோசமான முயற்சியை நான் கண்டனம் செய்கின்றேன். விமலேஸ்வரனும்
மதிவதனனும் மார்ச் 22 அன்று ஊர்காவற்துறை தீவை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்
போது ஒரு வீதித்தடையில் கடைசியாகக் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அயலில் உள்ள புங்குடு தீவில் இருந்து
திரும்பிக்கொண்டிருந்தனர். சம்பவ தினத்தன்று, கடல் பாலத்தின் இரு தொங்கல்களிலும் கடற்படை வீதித்தடைகளை
பராமரித்து வந்துள்ளது -இந்த உண்மைக்கு எத்தனை சாட்சிகளையும் முன்வைக்கலாம். ஆயினும், ஊர்காவற்துறை
நீதவான் நீதிமன்றில் ஆகஸ்ட் 3ல் நடந்த வழக்கில், இங்கு எந்தவொரு வீதித் தடையும் இல்லை என மறுத்து கஞ்சதேவ
முகாமின் கடற்படை கட்டளை அதிகாரி அனுப்பிய கடிதத்தை பொலிசார் சமர்ப்பித்துள்ளனர். இந்த வெளிப்படையான
பொய், சாதாரண இலங்கைப் பிரஜைகளுக்கு எதிராக மீண்டும் ஒரு முறை இரகசிய யுத்தம் ஒன்று கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள
ஒரு நிலையை ஆராயும் போது, இலங்கை பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகளை பாதுகாக்கவே சேவை செய்கின்றது.
விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனும் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க அவசரமான மற்றும் குவிமையப்படுத்தப்பட்ட
விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என நான் கோருகின்றேன்.
உங்கள்,
âv.«ü.
ஐக்கிய இராச்சியம்
|