World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan trade unions betray teachers strike

இலங்கை தொழிற்சங்கங்கள் ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை காட்டிக்கொடுத்தன

By W. A. Sunil
3 November 2007

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் ஐந்து ஆசிரியர் தொழிற்சங்கங்களின் கூட்டணி இந்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் தீர்மானிக்கப்பட்டிருந்த அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கடைசி நிமிடத்தில் காட்டிக்கொடுத்தது. இந்த கூட்டமைப்பில் மூன்று சங்கங்கள், இந்த ஆண்டு கடைசியில் சம்பள விவகாரத்தை தீர்ப்பதாக அரசாங்கம் கொடுத்த பெறுமதியற்ற வாக்குறுதியை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டன. அதே வழியில் உடனடியாக விழுந்த ஏனைய இரண்டு தொழிற்சங்கங்களும் பிரச்சாரத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது சாத்தியமற்றது என பிரகடனம் செய்தன.

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் பயமுறுத்தல்கள் இருந்த போதிலும் இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் இணைந்துகொள்ளத் தயாராக இருந்தனர். நீண்டகால சம்பள முரண்பாடுகளைத் தீர்க்குமாறு கோரி செப்டெம்பர் 13ம் திகதி நடந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஒரு மதிப்பீட்டின்படி தீவு பூராவும் 200,000 ஆசிரியர்கள் பங்கேற்றனர். வேலை நிறுத்தத்தை இரத்து செய்வதற்காக எடுத்த முடிவானது தொழிற்சங்கத் தலைவர்களின் மோசமான காட்டிக்கொடுப்பு என ஆசிரியர்கள் ஆத்திரத்துடன் இந்த வாரம் உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்தனர்.

ஏனைய தொழிலாளர்களைப் போலவே, ஆசிரியர்களின் சம்பளமும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகளவிலான விலையேற்றத்தினால் பற்றாக்குறையானதாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் பாகமாக இராணுவச் செலவுகளை அரசாங்கம் பிரமாண்டமானளவு அதிகரித்ததன் காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில், ஒட்டுமொத்த பிரச்சாரம் ஒன்றை முன்னெடுக்கும் தமது தீர்மானத்தை ஐந்து தொழிற்சங்கத் தலைவர்களும் வலியுறுத்தினர். இரண்டு நாள் வேலை நிறுத்தத்திற்குப் பின்னரும் சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் அகற்றாவிட்டால் "மிகவும் சக்திவாய்ந்த பிரச்சாரமொன்றை" முன்னெடுக்கப் போவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் (இ.ஆ.சே.ச.) தலைவர் மஹிந்த ஜயசிங்க வீம்பாக எச்சரித்தார். அவருடன் இணைந்த ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும் இதே வாய்வீச்சை வீசினர்.

அன்றைய தினமே பிற்பகல் இந்த வேலை நிறுத்தத்தை தவிர்ப்பதற்கான கடைசி நிமிட கலந்துரையாடல்களுக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அலுவலகத்திற்கு இதே தலைவர்கள் அணிவகுத்துச் சென்றனர். இ.ஆ.சே.ச., கல்வி ஊழியர்கள் சங்கம் (க.ஊ.ச.), அனைத்து இலங்கை ஆசிரியர்கள் சங்கம் (அ.இ.ஆ.ச.) ஆகிய மூன்று தொழிற்சங்கங்களும் வெற்றிக்கழிப்புடன் தோன்றின. இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள் அவசர அவசரமாக கூட்டிய பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில், "மேலோங்கிவரும் நிலைமையை" கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டதாக விளக்கமளித்தனர்.

இந்த "வாக்குறுதி" புதியதல்ல. சம்பள மற்றும் பணிமுறை ஆணைக்குழுவால் ஆராயப்பட்ட பின்னர் அதன் அறிக்கையின்படி டிசம்பர் 31ம் திகதியளவில் சம்பள விவகாரத்திற்கு முடிவெடுப்பதாக ஏற்கனவே அக்டோபர் 25ம் திகதி கல்வி அமைச்சர் அறிவித்துவிட்டார். இது அரசாங்க ஆணைக்குழுவின் கடைசி முடிவுவரை இத்தகைய பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக கடந்த காலத்தில் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு நிலையான திட்டமாகும். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை, இந்த ஐந்து தொழிற்சங்கங்களும் இந்த வாக்குறுதியை மறுத்து வந்தன.

ஆசிரியர்கள் மத்தியில் வளர்ச்சியடையக்கூடிய ஆத்திரத்தையிட்டு எச்சரிக்கையாக இருந்த இலங்கை ஆசிரியர் சங்கமும் (இ.ஆ.ச) இலங்கை மனையியல் மற்றும் விவசாய பட்டதாரி ஆசிரியர் சங்கமும் உடனடியாக இந்த வழியில் விழுவதற்கு தயக்கம் காட்டி வந்தன. வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக அதன் தலைவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். உண்மையில், இந்த இரு சங்கங்களும் வேலைநிறுத்தத்தை தவிர்த்துக்கொள்ளும் முடிவுக்கு சத்தமின்றி உடன்பட்டிருந்தன. சோலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் அதை சவால் செய்த போது, இ.ஆ.ச. தலைவர் ஜோசப் ஸ்டாலின், இரண்டு தொழிற்சங்கங்களால் மட்டும் "தனியே முன் செல்ல முடியாது" என பிரகடனம் செய்தார்.

தொழிற்சங்கங்களின் இந்த திருப்பத்திற்குப் பின்னால் உள்ள பிரச்சினை, அவர்கள் அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தை எதிர்க்க மறுப்பதேயாகும். மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி.) சார்பான இ.ஆ.சே.ச. வைப் பொறுத்தளவில் காரணம் தெளிவானதாகும். ஒரு வெளிப்படையான சிங்களப் பேரினவாதக் கட்சியான ஜே.வி.பி, பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை ஆதரிக்கின்றது. போதுமானளவு தீவிரமாக யுத்தத்தை முன்னெடுக்கத் தவறியுள்ளார் என்பதே இராஜபக்ஷ தொடர்பாக ஜே.வி.பி. முன்வைக்கும் விமர்சனமாகும். "மேலோங்கிவரும் நிலைமை" என அது குறிப்பிடுவது, அனைத்தும் யுத்தத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்பதேயாகும்.

சம்பள உயர்வுக்காக ஆசிரியர்களும் ஏனைய பகுதி தொழிலாளர்களும் முன்வைக்கும் கோரிக்கைகளை ஜனாதிபதி இராஜபக்ஷ முற்றாக நிராகரித்துவிட்டார். அரசாங்கத்திடம் நிதி இல்லை என அவர் பிரகடனம் செய்துவிட்டார். திட்டமிடப்பட்ட வேலை நிறுத்தத்தை தேசப்பற்று அற்ற நடவடிக்கை என கல்வி அமைச்சர் பிரேமஜயந்த கடந்த வாரம் முத்திரை குத்தினார். "பாதுகாப்பு படையினர் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு தமது உயிரை வடக்கு கிழக்கில் தியாகம் செய்துள்ள நிலையில், அவர்களின் மனநிலையை பாதிக்கும் வகையில் ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது" என அவர் தெரிவித்தார்.

இத்தகைய கண்டனங்களுக்குப் பின்னால் பொலிஸ் அடக்குமுறைக்கான தயாரிப்புக்கள் உள்ளன. பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா, ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தொடர்பான விபரங்களை சேகரிக்குமாறு பொலிஸ் நிலையங்களுக்கு கட்டளையிட்டுள்ளார். கல்வி அமைச்சும் வேலை நிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்ட கட்டளையிட்டுள்ளது. குறைந்த பட்சம் ஒரு மாகாணத்திலேனும், ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) சார்ந்த குண்டர்கள் ஒரு பாடசாலையினுள் நுழைந்து, வேலை நிறுத்தத்திற்கு சென்றவர்களை அச்சுறுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கைகளை எந்தவொரு ஆசிரியர் தொழிற்சங்கமும் கண்டனம் செய்யவில்லை.

ஜே.வி.பி. யின் யுத்தச் சார்பு நிலைப்பாட்டில் இருந்து தம்மை தொலைவில் வைத்துக்கொள்ள இ.ஆ.சே.ச., இ.ஆ.ச. மற்றும் இலங்கை மனையியல் மற்றும் விவசாய பட்டதாரி ஆசிரியர் சங்கமும் எடுத்த முயற்சிக்கு க.ஊ.ச., அ.இ.ஆ.ச. ஆகியவை ஆதரவளித்தன. இ.ஆ.ச. தலைவர்கள், பெரும் வல்லரசுகளால் அனுசரணையளிக்கப்படும் சர்வதேச சமாதான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் யுத்தத்தை "எதிர்ப்பதாக" கூறிக்கொள்ளும் நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற மத்திதர வர்க்க தீவிரவாதிகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

பெரும் வர்த்தகர்களின் ஒரு பகுதியினரால் ஆதரவளிக்கப்படும் சமாதான முன்னெடுப்புகளின் இலக்கு, இலங்கையை மலிவு உழைப்பு களமாக திறந்துவிடுவதன் பேரில் புலிகளுடன் ஒரு அதிகாரப் பரவலாக்கள் ஒழுங்கை ஏற்படுத்துவதேயாகும். இது எந்த வழியிலும் ஆளும் தட்டுக்களையோ அல்லது அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக தசாப்த கணக்காக பயன்படுத்தப்பட்ட இனவாத அரசியலையோ சவால் செய்யப் போவதில்லை. இத்தகைய சமாதானப் பேச்சுக்கள் தொடர்பான மாயைகளை முன்நிலைப்படுத்துவதன் மூலம், நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி ஆகியன தொழிலாளர்களை அரசியல் ஸ்தாபனத்தின் ஏதாவதொரு கோஷ்டியுடன் இறுக்கிக் கட்டுப்போடவே செயற்படுகின்றன.

இ.ஆ.ச., கடந்த செப்டெம்பரில் நவசமசமாஜக் கட்சி மற்றும் வலதுசாரி எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனும் (யூ.என்.பி.) தொழிற்சங்கங்கள் "பெரும் கூட்டணியொன்றை" அமைத்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்ததில் எந்த ஆச்சரியமும் கிடையாது. 1983ல் உள்நாட்டு யுத்தத்தை முன்னெடுத்ததற்கு பொறுப்பான யூ.என்.பி., 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டு சமாதானப் பேச்சுக்களுக்கு ஏற்பாடு செய்ததோடு புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களிலும் ஈடுபட்டது. எவ்வாறெனினும், கடந்த 18 மாதங்களாக யுத்தம் உக்கிரமாக்கப்பட்டுள்ள நிலையில், யூ.என்.பி. இப்போது அரசாங்கத்தின் யுத்தப் பிரச்சாரத்திற்கு முழுமையாக அடிபணிந்து போயுள்ளதோடு சமாதானப் பேச்சுவார்த்தைகள் என சொல்லப்படுவதில் இருந்து மிகவும் தொலைவில் நின்றுகொண்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கமும் இதே வளைபாதையை பின்பற்றுகிறது. ஜே.வி.பி. கடந்த பெப்பிரவரியில் இ.ஆ.ச. தலைவர் உட்பட பல தொழிற்சங்கத் தலைவர்களை "சிங்களப் புலிகள்" என முத்திரை குத்தியது. சிங்களப் புலிகள் என்றால் "சமாதான முன்னெடுப்புகளுக்கு" ஆதரவளிக்கும் துரோகிகள் என்பதே அர்த்தமாகும். இன்னமும், தற்போதைய சம்பளப் பிரச்சாரத்தின் போதும், ஜே.வி.பி. மற்றும் அதைச் சார்ந்த இ.ஆ.சே.ச. வையும் சவால் செய்ய இ.ஆ.ச. மறுத்து விட்டதுடன் சம்பளம் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்கம் பற்றி எந்தவொரு கலந்துரையாடலை முன்னெடுப்பதையும் எதிர்த்தது.

இ.ஆ.ச. தலைமைத்துவமானது ஐந்து தொழிற்சங்கங்களின் கூட்டமொன்றில் இ.ஆ.ச. வில் அங்கத்துவம் வகிக்கும் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அங்கத்தவர்களை பங்குபற்ற விடாமல் செய்தது. சோ.ச.க. "அரசியல் பிரச்சினைகளை எழுப்புவர் என்பதே அது கூறிய காரணமாகும். யுத்தமும் அதன் விளைவுகளையும் பற்றி ஏன் கலந்துரையாடக் கூடாது என சவால் செய்த போது, அது "பொருத்தமானது அல்ல" என இ.ஆ.ச. தலைவர் வெளிப்படையாக பிரகடனம் செய்தார். "எங்களுடன் பல கருத்துக்களைக் கொண்ட பல தொழிற்சங்கங்கள் உள்ளன" என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த அரசியல் அணிதிரள்வு தெளிவானதாகும்: அரசாங்கத்தின் இனவாத யுத்தத்திற்கு ஆதரவளிக்கும் இ.ஆ.சே.ச. தலைவர்களுக்கு சுதந்திரமாக பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இ.ஆ.ச. தலைமைத்துவம் ஐக்கியம் என்ற பெயரால், இ.ஆ.சே.ச. மற்றும் ஜே.வி.பி. யின் பிற்போக்கு அரசியலை எந்த விதத்திலும் சவால் செய்வதை தடுக்கின்றது. முடிவான விளைவு என்னவெனில், வேலை நிறுத்தத்தை இரத்து செய்த இந்த சந்தர்ப்பவாத கூட்டணி, அத்தியாவசியமான சேவைகளுக்கு பணமின்றி வற்றிப் போயுள்ள அதே வேளை பில்லியன் கணக்கான ரூபாய்களை யுத்தத்திற்கு தொடர்ந்தும் செலவிட அரசாங்கத்திற்கு அனுமதியளித்துள்ளன.

அரசாங்கம் வாக்குறுதிகளை மீறினால் அதற்கு எதிராக "போராட்டத்தை ஏற்பாடு செய்வதாக" இ.ஆ.சே.ச. இப்போது பிரகடனம் செய்கின்றது. தமது செயற்பாட்டை மூடிமறைக்க அவநம்பிக்கையுடன் முயலும் இ.ஆ.ச., ஏனைய தொழிற்சங்கங்களை ஆட்சியாளர்களின் "கைப்பாவைகள்" என கண்டனம் செய்வதோடு "தீர்க்கமான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்படும்" எனவும் பிரகடனம் செய்தது. இவை அனைத்தும் வெறும் சூடான காற்று மட்டுமே. இந்த ஆண்டின் கடைசியில் தற்போதைய சம்பள முரண்பாட்டை தீர்க்க அரசாங்கம் தவறும் பட்சத்தில் -தவிர்க்க முடியாமல் அது அவ்வாறு செய்யும்- தொழிற் சங்கத் தலைவர்கள் இப்போது இருப்பதை விட "தீர்க்கமான போராட்டமொன்றை" முன்னெடுக்கும் நிலையில் இருக்கப் போவதில்லை.

அண்மைய காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது ஆசிரியர்களுக்கு தீர்க்கமான ஒன்றாகும். யுத்தத்தை எதிர்ப்பதற்கான பிரச்சாரம் இன்றி, தொழிலாளர் வர்க்கத்தின் எந்தவொரு பகுதியினராலும் அவர்களின் தொழில், நிலைமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைக் கூட காத்துக்கொள்ள முடியாது. யுத்தத்தை நிறுத்தவும் சமூக சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டுவரவும் எமது சோசலிச வேலைத்திட்டத்தை அக்கறையுடன் கற்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது.

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்புவதற்கான முதற் படி, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விலக்கிக்கொள்ளக் கோருவதேயாகும் என நாம் வலியுறுத்துகிறோம். சமுதாயத்தை ஒரு சிலரின் இலாபத்துக்காக அன்றி, பெரும்பான்மையானவர்களின் தேவைகளை அடையும் வகையில் முழுமையாக மாற்றியமைக்கும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கமொன்றை - ஸ்ரீலங்கா மற்றும் ஈழம் சோசலிச குடியரசு- கட்டியெழுப்ப சோ.ச.க. போராடுகிறது. இது தெற்காசியாவிலும் மற்றும் சர்வதேசம் பூராவும் சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாகும்.