:
ஆசியா
:
இலங்கை
A socialist perspective for striking Sri Lankan
teachers
வேலை நிறுத்தம் செய்யும் இலங்கை ஆசிரியர்களுக்கு ஒரு சோசலிச முன்நோக்கு
By the Socialist Equality Party (Sri
Lanka)
13 September 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
இலங்கையில் பத்தாயிரக்கணக்கான அரசாங்கத் துறை ஆசிரியர்கள் சம்பள உயர்வு
கோரி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அரசாங்கம் மீண்டும் யுத்தத்திற்கு திரும்பியுள்ளதை
நியாயப்படுத்துவதற்காக இனப் பகைமை சூழலை கிளறிவிட்டுள்ள போதிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் தமது
சிங்கள சகோதரர்களுடன் இணைந்துகொண்டுள்ளனர். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவது தொடர்பாக
உழைக்கும் மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் அமைதியின்மைக்கு மத்தியிலேயே இந்த கண்டன வேலை நிறுத்தம்
இடம்பெறுகின்றது.
தொழிற்சங்கங்கள் ஆசிரியர்களின் சம்பளத்திற்கும் தாதிமார் மற்றும் எழுதுவினைஞர்
போன்ற சேவைகளில் உள்ள சக அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்கும் இடையில் 1997ம் ஆண்டு அரசாங்க சுற்று
நிரூபமொன்றில் விரிவுபடுத்தப்பட்ட முரண்பாட்டை திருத்தும் கோரிக்கைக்கு இன்றைய வேலை நிறுத்தத்தை மட்டுப்படுத்தியுள்ளன.
இந்த சம்பள முரண்பாடு நீக்கப்பட்டால் ஆசிரியர்களின் மாத சம்பளத்தில் ரூபா 5,000 (48 அமெரிக்க
டொலர்கள்) அதிகரிக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் இன்னும் கூடுதலானவை பணயமாக வைக்கப்பட்டுள்ளன என
சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது. தனது பிற்போக்கு யுத்தத்தை முன்னெடுப்பதற்கான சுமையை
உழைக்கும் மக்களே தாங்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றது. அரசாங்கத்திற்கும் அதன்
யுத்தத்திற்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டமின்றி சம்பளம் மற்றும் நிலைமைகளில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட
முன்னேற்றத்தை பெறுவதற்கான பிரச்சாரம் கூட தோல்விக்கே உள்ளாகும்.
ஆகஸ்ட் 13 அன்று ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவிற்கும் தொழிற்சங்கங்களுக்கும்
இடையில் நடந்த கூட்டத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை சமிக்ஞை செய்துள்ளது. பிரேரிக்கப்பட்டுள்ள சம்பள
உயர்வை ஈடு செய்வதற்கு மேலும் ரூபா 9 பில்லியனுக்கும் அதிகமாகத் தேவைப்படுகிறது என ஜனாதிபதி மஹிந்த
இராஜபக்ஷ தொழிற்சங்கத் தலைவர்களிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளார். "இதற்காக ஒதுக்குவதற்கு எங்களிடம்
பணம் கிடையாது. வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என நீங்கள் கூறுகின்றீர்களா?"
என இராஜபக்ஷ கேட்டார்.
இராஜபக்ஷவின் கருத்துக்களை அறிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர்
ஜோசப் ஸ்டாலின், இதற்குப் பதிலளிக்காது விட்டுவிட்டார். தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியை சவால் செய்யாதது
ஏன் எனக் கேட்டபோது, "அரசாங்கம் கவிழ்ந்துவிட்டால்?" என ஸ்டாலின் நொண்டிச் சாக்காக பதலிளித்தார்.
வேறு வார்த்தைகளில் சொன்னால், தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை ஆதரிப்பதோடு யுத்தத்தை எதிர்க்கப்
போவதில்லை. இந்த ஐந்து தொழிற்சங்கங்களில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி.) சார்பான
இலங்கை ஆசிரியர் சேவை தொழிற்சங்கம், யுத்தம் நிறுத்தாமல் முன்னெடுக்கப்பட வேண்டும் என தொண்டை கிழிய
கோரிக்கை விடுக்கின்றது.
செப்டெம்பர் 6 நடந்த சந்திப்பிலும் இதே செய்தியே கிடைத்தது. கூட்டத்தில்
பங்குபற்றிய தொழிற்சங்கத் தலைவர்களிடம் அமைச்சர்கள் சுசில் பிரேமஜயன்த, கரு ஜயசூரிய மற்றும் ஜோன்
செனவிரட்னவும் தெரிவித்ததாவது: "சமுர்த்திக்கு (நலன்புரி திட்டம்) கூட ரூபா 5-6 பில்லியன்கள் மட்டுமே
ஒதுக்கப்பட்டுள்ளன. எங்களால் எப்படி இதற்கு 9 பில்லியன்களை ஒதுக்க முடியும்? நாங்கள் இந்தப்
பெருந்தொகையை ஒதுக்கினால் அரசாங்கம் கவிழ்ந்துவிடும்."
தொழிற்சங்கத் தலைவர்கள் இதற்குப் பிரதிபலிப்பாக, சம்பள உயர்வை அறிவித்து
ஒரு சுற்றுநிரூபத்தை வெளியிடுமாறும், பின்னர் பணம் எங்கிருந்து வரும் என்பதைப் பற்றி பேசலாம் என்றும்
அரசாங்கத்திடம் அடக்கத்துடன் வேண்டுகோள் விடுத்தனர். வேறு வார்த்தைகளில் சொன்னால், தொழிற்சங்கங்கள்
ஆத்திரமடைந்துள்ள தமது உறுப்பினர்களை அமைதிப்படுத்த ஒரு பெறுமதியற்ற கடதாசித் துண்டை
எதிர்பார்த்திருப்பதோடு சம்பள உயர்வுக்காக போராடும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. அமைச்சர்கள் இந்த
சூழ்ச்சித்திட்டத்தை நிராகரித்ததோடு யுத்தம் முதன்மையானது என வலியுறுத்தியமை ஆச்சரியத்திற்குரியதல்ல.
அரசாங்கம் கடந்த நவம்பரில் 2007ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்
இராணுவச் செலவை 139 பில்லியன் ரூபாய்கள் வரை அதிகரித்தது. இது 2006ம் ஆண்டை விட 45 வீத
அதிகரிப்பாகும். அப்போதிருந்தே, கிழக்கிலும் இப்போது வடக்கிலும் தனது இராணுவத் தாக்குதல்களை
உக்கிரமாக்கிய நிலையில் அரசாங்கம் மேலும் இதற்கு ஒதுக்கீடுகளைச் செய்தது. கடந்த வாரமும் கூட,
வெற்றாகிப் போயுள்ள திறைசேரியை நிரப்பவும் யுத்தத்திற்கு பணம் வழங்கவும் உழைக்கும் மக்களின் பைகளில்
இருந்து மேலும் பணத்தைக் கறப்பதற்காக புதிய வரி திருத்தச் சட்டங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
இராஜபக்ஷ ஜனநாயக உரிமைகளை நசுக்கவும் யுத்தத்தை பயன்படுத்துகிறார்.
அவசரகால அதிகாரங்கள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்துடன் சேர்த்து, இப்போது வேலை
நிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் சட்டவிரோதமாக்குவதற்காக அத்தியாவசிய சேவை கட்டளைகளையும்
பிரகடனப்படுத்த ஜனாதிபதியால் முடியும். அமைச்சர்கள் எந்தவொரு எதிர்ப்பு நடவடிக்கையையும் அல்லது
விமர்சனத்தையும் "எதிரிக்கு உதவுவதாக" வழமை போல் கண்டனம் செய்துள்ளனர். கொடுஞ்சொற்களாலும்
அச்சுறுத்தல்களாலும் மற்றும் வன்முறைகளாலும் ஊடகங்கள் தாக்கப்படுகின்றன. அச்சுறுத்தல் மற்றும் பீதியை
ஏற்படுத்தும் பிரச்சாரத்தின் பாகமாக, நூற்றுக்கணக்கானவர்கள் பிரதானமாக தமிழர்கள் கொல்லப்பட்டு மற்றும்
காணாமல் போயுள்ள சம்பவங்களில் பாதுகாப்புப் படைகள் சம்பந்தப்பட்டுள்ளமை வெளிப்படையாகியுள்ளது.
அரசாங்கத்தின் இனவாத யுத்தத்திற்கு உழைக்கும் மக்கள் அர்ப்பணிக்க வேண்டும் என
அரசாங்கம் கோருகின்றது. அரசாங்கத் துறை ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விவசாயிகள் மற்றும்
மீனவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் அல்லது தோட்டத் தொழிலாளர்களானாலும் தமது உரிமைகளுக்காக
போராடும் எவரும் "நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்கள்" என்ற கண்டனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
இராஜபக்ஷ கடந்த மே மாதம் தொழிற்சங்க தலைவர்களுடன் நடந்த சந்திப்பில், "பிரபாகரனுக்கு (புலிகளின்
தலைவர்) பாதை அமைக்கும் வேலை" செய்வதாக சில தொழிற்சங்கத் தலைவர்களை குற்றஞ்சாட்டினார். இதற்கு
எவரும் அவரை சவால் செய்யவில்லை.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் இணங்கிப்
போகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்பிரல் மாதங்களில், சம்பள உயர்வு கோரிய அரசாங்கத் துறை
ஊழியர்களுடன் ஆசிரியர்களும் இணைந்துகொண்டார்கள். ஆனால், வேலை நிறுத்தங்கள் "தேசிய பாதுகாப்புக்கு"
அச்சறுத்தல் விடுப்பதாக அரசாங்கம் கண்டனம் செய்த போது, இந்தத் தொழிற்சங்கங்கள் பின்வாங்கி
பிரச்சாரத்துக்கு முடிவுகட்டியதோடு, தமது மூஞ்சியை பாதுகாக்கும் கருவியாக போலியாக நியமிக்கப்பட்ட தேசிய
சம்பள ஆய்வுக் குழுவை ஏற்றுக்கொண்டன.
கடந்த காலத்திலும் சரி நிகழ்காலத்திலும் சரி, யுத்தமானது நாட்டின்
பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை தீர்ப்பதில் அரசாங்கத்தின் இலாயக்கற்ற நிலைமைக்கு ஒரு
வெளிப்பாடாக இருந்து வந்துள்ளது. பொருளாதார மறுசீரமைப்பு, தனியார்மயமாக்கம் மற்றும் அரசாங்கத்
துறையில் வெட்டு போன்ற அரசாங்கத்தின் கொள்கைகள் வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான
இடைவெளியை ஆழப்படுத்தியுள்ளது. கல்வித் துறையில், அரசாங்கம் தனியார் பாடசாலைகளுக்கு கதவுகளைத்
திறந்துவிட்டுள்ளதோடு கட்டணம் அறவிடும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகள் முளைக்கவும் அனுமதித்துள்ளது.
உயர் கல்விக்கான இந்த ஆண்டின் ஒதுக்கீடு 20 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
இராஜபக்ஷவும் தனது முன்னோடிகளைப் போலவே வளர்ச்சி கண்டுவரும் சமூக
அமைதியின்மையின் அறிகுறிகளுக்கு இனவாத பதட்ட நிலைமைகளை சிடுமூஞ்சித்தனமாக கிளறிவிடுவதன் மூலமும் நாட்டை
மீண்டும் அழிவுகரமான யுத்தத்திற்குள் தள்ளுவதன் மூலமும் பதிலளிக்கின்றார். இது பிரித்தானிய காலனித்துவ
ஆசான்களிடம் இருந்து கொழும்பு ஆளும் வர்க்கம் கற்றுக்கொண்ட நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும்
"பிரித்து ஆளும்" வழிமுறையாகும். சுமார் கால் நூற்றாண்டாக முன்னெடுக்கப்பட்டு, 70,000த்திற்கும்
மேற்பட்டவர்களின் சாவுக்கு வழிவகுத்து மேலும் பெருந்தொகையானவர்களின் வாழ்க்கையை சீரழித்த உள்நாட்டு
யுத்தத்திற்கு முடிவுகட்ட இலாயக்கற்றுள்ளமையே இலங்கை ஆளும் வர்க்கத்தின் மீது சுமத்தப்படும் கடுமையான
குற்றச்சாட்டாகும்.
யுத்தத்தை எதிர்ப்பதற்கான ஒரு சோசலிச வேலைத் திட்டம் இன்றி ஊதியம்,
வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்காகப் போராடுவது சாத்தியமற்றது என்பது
தொழிலாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படை அரசியல் பாடமாகும். அனைத்துவிதமான தேசியவாதம் மற்றும்
இனவாதம் ஆகியவற்றை நிராகரிப்பதன் மூலம் மட்டுமே தொழிலாளர் வர்க்கத்தால் தனது சொந்த சுயாதீனமான
வர்க்க அபிலாஷைகளை முன்னேற்ற முடியும். அரசாங்கத்தின் சிங்களப் பேரினவாதமும் புலிகளின் தமிழ் பிரிவினைவாதமும்
குறுகிய ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கே சேவை செய்கின்றன. அவை சீரழிந்துவரும் வாழ்க்கை நிலைமையை எதிர்கொள்ளும்
சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவில்லை.
சோ.ச.க. தீவின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பாதுகாப்புப் படைகளை உடனடியாகவும்
நிபந்தனையின்றியும் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் எனக் கோருகின்றது. இந்த யுத்தத்திற்கு ஒரு சதமோ அல்லது
ஒரு ஆளோ கொடுக்கப்படக் கூடாது. அவசரகால விதிகள், அத்தியாவசிய சேவை கட்டளைகள் மற்றும் பயங்கரவாதத்
தடைச் சட்டம் உட்பட அனைத்து ஜனநாயக விரோத சட்டங்களும் திருப்பிச் சுருட்டிக்கொள்ளப்பட வேண்டும் என
சோ.ச.க. கோரிக்கை விடுக்கின்றது.
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் யுத்தத்தை முன்னெடுக்கின்ற அதே சக்திகளால் பரிந்துரைக்கப்படும்
மோசடியான சர்வதேச "சமாதான முன்னெடுப்புகளில்" தொழிலாளர்களால் நம்பிக்கை வைக்க முடியாது. தீவை
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான மலிவு உழைப்பு களமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டதே அரசாங்கத்திற்கும்
புலிகளுக்கும் இடையிலான "சமாதான முன்னெடுப்பாகும்". சுரண்டலை உக்கிரப்படுத்தும் இந்தத் திட்டத்திற்கு எதிராக,
சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்கள் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான
போராட்டத்தைச் சூழ ஐக்கியப்படுமாறு தொழிலாளர் வர்க்கத்திற்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. நாம்
தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் ஐக்கிய சோசலிசக் குடியரசுகளின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச
குடியரசுக்காகப் போராடுகின்றோம்.
இந்த அனைத்துலக சோசலிச முன்நோக்கிற்காகப் போராடுவதற்கு தொழிலாளர்
வர்க்கம் ஒரு வெகுஜனக் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும். நாம் இன்று எமது வேலைத் திட்டத்தை
படிக்குமாறும், உலக சோசலிச வலைத் தளத்தை வாசிக்குமாறும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவின் இலங்கைப் பகுதியான சோ.ச.க. யில் இணைய விண்ணப்பிக்குமாறும் ஆசிரியர்கள், இளைஞர்கள் மற்றும்
தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
|