line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 3: சீனப்புரட்சியை பற்றிய முன்னோக்குகளும் சுருக்கவுரையும்

 

Print part 3 on single page

7. கீழ்திசை நாடுகளுக்கான "இரு-வர்க்க தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சிகள்" பற்றிய பிற்போக்கு கருத்து

இரண்டாம் சீனப் புரட்சியின் படிப்பினைகள் முழு கம்யூனிச அகிலத்திற்கும், ஆனால் முக்கியமாக கீழ்திசை அனைத்து நாடுகளுக்குமான படிப்பினைகள் ஆகும்.

சீனப் புரட்சியில் மென்ஷிவிக் நிலைப்பாட்டை ஆதரித்து வைக்கப்பட்ட அனைத்து வாதங்களும், அவற்றைத் தீவிர பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டால், இந்தியாவிற்கு மும்மடங்கு பொருத்தமானவை ஆகும். சீனாவைவிட அளவு கடந்த வகையில் இன்னும் நேரடியாக மற்றும் தெளிவாகக் காணக்கூடிய வடிவங்களில் இந்தியா ஏகாதிபத்திய நுகத்தடியில் ஒரு முன்னுதாரணமான காலனித்துவமாக உள்ளது. இந்தியாவில் நிலப்பிரபுத்துவ, அடிமை உறவுகளின் எஞ்சியவைகள் அளவிடமுடியாத வகையில் ஆழமானதாகவும் அதிக அளவிலும் உள்ளன. ஆயினும்கூட, அல்லது இந்தக் காரணத்தினாலேயே கூட சீனாவிற்கு பிரயோகிக்கப்பட்ட அப்புரட்சியை கீழறுத்த வழிவகைகள் இந்தியாவில் இன்னும் பேராபத்தான விளைவுகளை தோற்றுவிக்கும் என்று கூறலாம். இந்து நிலப்பிரபுத்துவ முறை, ஆங்கிலோ-இந்து அதிகாரத்துவம், பிரிட்டிஷ் இராணுவவாதம் தூக்கி வீசப்படுவது என்பது ஒரு பாரிய மக்கள் இயக்கத்தின் மகத்தான, சளைக்காத போராட்டத்தின் மூலம்தான் சாதிக்கப்படமுடியும்; ஏனெனில் அதுதான் சக்திவாய்ந்த எழுச்சியாலும், தடுக்கமுடியாத தன்மையாலும் மற்றும் அதன் சர்வதேச நோக்கங்கள், பிணைப்புக்கள் மூலமும், தலைமையின் பங்கை பொறுத்தவரையிலான அரைமனதான மற்றும் சமரசப்படுத்தும் சந்தர்ப்பவாத நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாத அதன் தன்மையின் மூலமும் ஆகும்.

கம்யூனிச அகிலத்தின் தலைமை ஏற்கனவே இந்தியாவில் சில தவறுகளை செய்துள்ளது. ஆனால் சீனாவில் வெளிப்பட்டது போல் அந்த அளவில் இந்த தவறுகள் வெளிப்படுவதற்கு நிலைமைகள் இன்னும் அனுமதிக்கவில்லை. எனவே சீன நிகழ்வுகளின் படிப்பினைகள், இன்னும் சரியான நேரத்தில் இந்தியாவிலும், ஏனைய கீழ்திசை நாடுகளிலும் திருத்தப்பட்ட கொள்கையை வழிநடத்த அனுமதிக்கும் என்று நம்புவோம்.

அனைத்து இடங்களிலும், எப்பொழுதும் இருப்பதுபோல் இங்கு நமக்கு மிக முக்கியமான பிரச்சினை, கம்யூனிஸ்ட் கட்சி பற்றியதும், அதன் முழுமையான சுயாதீனம், சமரசத்திற்கு இடமில்லாத அதன் வர்க்கத் தன்மை ஆகியவை பற்றிய பிரச்சினை ஆகும். இந்தப் பாதையில் மிகப் பெரிய ஆபத்து கீழ்த்திசை நாடுகளில் அமைக்கப்படும் " 'தொழிலாளர்கள்' மற்றும் 'விவசாயிகளின்' கட்சிகள்" என்று அழைக்கப்படுவது ஆகும்.

மார்க்ஸ் மற்றும் லெனினுடைய அடிப்படை ஆய்வுக் கருத்துக்கள் பல வெளிப்படையாக திருத்தப்பட்டது என்று கூறக்கூடிய 1924ம் ஆண்டு தொடங்கி, "கிழக்கு நாடுகளுக்காக இரு-வர்க்க தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி" என்ற சூத்திரத்தை ஸ்ராலின் முன்வைத்துள்ளார். மேலைநாடுகளில் "ஸ்திரப்படுத்தல்" என்ற பெயரில் சந்தர்ப்பவாதத்தை மூடிமறைத்த வழிவகையைத்தான் கிழக்கு நாடுகளில் அதனின்றும் வேறல்லாத அதே தேசிய அடக்குமுறை என்பதன் மீது அதன் தளத்தைக் கொண்டுள்ளது. இந்தியா, மற்றும் தேசிய ஒடுக்கு முறை இல்லாத ஜப்பான் ஆகியவற்றில் இருந்து வரும் தந்திச் செய்திகள் சமீப காலத்தின் அடிக்கடி பிராந்திய "தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சிகளை" பற்றிக் குறிப்பிட்டு அவை கம்யூனிச அகிலத்திற்கு மிகவும் நெருக்கமான மற்றும் நட்பு அமைப்புக்கள் என்றும் கூறப்படுகின்றன; அவை பெரும்பாலும் "எமது 'சொந்த' அமைப்புக்களாக" இருந்தது போல், சில காலத்திற்கு முன்பு கோமின்டாங்கை பற்றி பேசியது போல் அதே வழியில், அவற்றின் அரசியல் சாமுத்திரிகா லட்சணத்தை பற்றிய ஸ்தூலமான வரையறை ஏதும் கூறப்படாமல் ஒரு வார்த்தையில் எழுதவும், பேசவும் படுகிறது.

1924 இல் பிராவ்தா, "கொரியாவில் தேசிய விடுதலை இயக்கம், ஒரு தொழிலாளர்கள், விவசாயிகள் கட்சியை தோற்றுவித்தல் என்ற வகையில் படிப்படியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன" என்ற தகவலை கொடுத்தது. [10]

இதற்கிடையில் கீழ்திசை நாடுகளில் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஸ்ராலின்,

"ஒரு ஐக்கிய தேசிய முன்னணி என்ற கொள்கையில் இருந்து கம்யூனிஸ்ட்டுக்கள் ... தொழிலாளர்களுக்கும் குட்டி முதலாளித்துவத்திற்கிடையிலான புரட்சிகர கூட்டு கொள்கைக்கு கட்டாயம் செல்ல வேண்டும். இந்த கூட்டு ஒரு ஒற்றைக் கட்சி வடிவமைப்பை மேற்கொள்ளக் கூடிய நாடுகளில், அதாவது கோமின்டாங்கில் இருப்பதை ஒத்த ஒரு தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் கட்சி என்ற வடிவத்தை எடுக்கமுடியும்..." என்று போதித்தார். [11]

இதைத் தொடர்ந்து வருகின்ற கம்யூனிஸ்ட் கட்சியின் சுயாதீனம் பற்றிய விடயம் மீதான சிறு "அதிருப்திகள்" மூடிமறைக்கும் நோக்கத்திற்காகத்தான் பயன்பட்டன (வெளிப்படையாக திமிங்கிலத்தினுள் தீர்க்கதரிசி ஜோனா கண்ட "சுதந்திரம்" போல் இது உள்ளது). இந்த அரங்கில் சிறு இரட்டுற மொழிதலும் கூட பேராபத்தைத் தரும் மற்றும் அது நிராகரிக்கப்பட வேண்டும் என ஆறாம் அகல் பேரவை கட்டாயம் அறிவிக்கும் என நாம் ஆழ்ந்து நம்பவைக்கப்படுகிறோம்.

இங்குள்ள பிரச்சினை, ஒரு முற்றிலும் புதிய, முழுதும் தவறான, கட்சி தொடர்பான அடிப்படை பிரச்சினையிலும் அதன் சொந்த வர்க்கத்துடனான உறவு மற்றும் பிற வர்க்கங்களின் தொடர்பு ஆகியவற்றில் முற்றிலும் மார்க்சிச-எதிர்ப்பு சூத்திரமாக உள்ளது.

கோமின்டாங்கில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சேரவேண்டிய தேவை கோமின்டாங் தன்னுடைய சமூக உள்ளடக்கத்தில் ஒரு தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியாக இருப்பதாகவும், இந்த விகிதாசாரம் நூற்றுக்கணக்கான முறை கூறப்பட்டு, கோமின்டாங்கின் பத்தில் ஒன்பது பங்கு புரட்சிகர போக்கை சார்ந்திருந்தது என்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கையோடு கைகோர்த்து அணிவகுத்துச்செல்ல தயாராக இருந்தது என்றும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் ஷங்காய் மற்றும் வுகானில் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பின்னர் கோமின்டாங்கின் பத்தில் ஒன்பது பங்கு புரட்சிகர பகுதி மாயமாய் மறைந்துவிட்டது. அவை எங்கு உள்ளன என்பதை ஒருவரும் கண்டுபிடிக்க முடியவில்லை. சீனாவில் வர்க்க ஒத்துழைப்பு தத்துவத்தை பற்றிக் கூறும் ஸ்ராலின், புக்காரின் இன்னும் மற்றவர்கள், கோமின்டாங்கின் பத்தில் ஒன்பது பகுதியினரான தொழிலாளர்கள், விவசாயிகள், புரட்சியாளர்கள், ஆதரவு காட்டியவர்கள் மற்றும் "நம்மவர்கள்" அனைவருக்கும் என்ன ஆயிற்று என்பதை விளக்க முற்படவில்லை. ஆயினும்கூட, இப்பிரச்சினைக்கு ஒரு விடை என்பது, ஸ்ராலினால் உபதேசிக்கப்பட்ட "இரு-வர்க்க" கட்சிகளின் எதிர்காலத்தை பற்றி புரிந்து கொள்வதாக இருந்தால், அத்துடன் அதே கருத்துருதன்னில் நாம் தெளிவூட்டப்படுவதாக இருந்தால், தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அது நம்மை 1919 சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரைவு வேலைத்திட்டத்திற்கு பின்னால் மட்டுமல்லாது 1847 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கும் மிகவும் பின்னால் தள்ளிவிடுகிறது.

இப்படி புகழப்பட்ட பத்தில் ஒன்பது பகுதியினர் எங்கு மறைந்தனர் என்ற பிரச்சினை, முதலில் ஒரு இருவகைக் கூட்டின் சாத்தியமின்மையை, அதாவது, ஒரே நேரத்தில் ஒன்றோடொன்று தொடர்பு இல்லாத இரு வரலாற்று வழிகள் - பாட்டாளி வர்க்க மற்றும் குட்டி முதலாளித்துவ வழிகளை வெளிப்படுத்தும், ஒரு இரு வர்க்க கட்சியின் சாத்தியமின்மையை புரிந்து கொண்டால்தான் நமக்குத் தெளிவாகும்; இரண்டாவதாக ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில் ஒரு சுயாதீனமான விவசாயிகள் கட்சியை, அதாவது, பாட்டாளி வர்க்கம் மற்றும் முதலாளித்துவ வர்க்கம் இரண்டில் இருந்தும் ஒரே நேரத்தில் சுயாதீனமாக விவசாயிகளின் நலன்களை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கட்சியை, அடைவதற்கு இயலாமையை புரிந்து கொண்ண்டால்தான் நமக்குத் தெளிவாகும்.

மார்க்சிசம் எப்பொழுதும் எமக்கு கற்பித்ததும், போல்ஷிவிசமும் அதை ஏற்றுக் கொண்டு கற்பித்ததும் என்னவெனில், விவசாயிகள் மற்றும் பாட்டாளி வர்க்கம் என்பது இரு வேறுபட்ட வர்க்கங்கள் என்பதும் முதலாளித்துவ சமூகத்தில் அவர்களுடைய நலன்களை ஒன்றுபடுத்திப்பார்ப்பது தவறு மற்றும் சொத்துக் கண்ணோட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் நிலைப்பாட்டை ஏற்றால்தான் ஒரு விவசாயி கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாம் என்பதாகும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் தொழிலாளர் விவசாயிகளின் கூட்டு இக்கருத்தாய்வை செல்லுபடியாக செய்யாது; மாறாக வேறுபட்ட வகையில் சில வித்தியாசமான சூழ்நிலைகளில் அதனை உறுதிப்படுத்துகின்றது. வேறுபட்ட நலன்களுடன் வேறுபட்ட வர்க்கங்கள் இல்லை என்றால், கூட்டு என்ற பேச்சுக்குக்கூட இடமில்லை. பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இரும்பு வகை வடிவமைப்பிற்குள் உருவாக்கப்பட்டால்தான் அவ்வாறான கூட்டு சோசலிசப் புரட்சியுடன் பொருத்தமாகின்றது. எமது நாட்டில் சர்வாதிகாரம் என்பது விவசாயிகள் கழகம் என்று அழைக்கப்படுவதுடன் பொருத்தமற்றிருந்தது. ஏனெனில் தேசிய, அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முற்படும் ஒவ்வொரு "சுதந்திரமான" விவசாய அமைப்பும் தவிர்க்கமுடியாமல் முதலாளித்துவ வர்க்கத்தின் கரங்களில் இருக்கும் ஒரு கருவியாக மாறிவிடும்.

முதலாளித்துவ நாடுகளில் தங்களை விவசாயிகள் கட்சிகள் என்று முத்திரையிட்டுக் கொள்ளும் அமைப்புக்கள் அனைத்தும் உண்மையில் பல்வேறுபட்ட முதலாளித்துவ கட்சிகளில் ஒன்றாகும். பாட்டாளி வர்க்கத்தின் நிலைப்பாட்டை ஏற்காத ஒவ்வொரு விவசாயியும், தன்னுடைய சொத்துரிமை உளப்பாங்கை கைவிட்டு அடிப்படை அரசியல் பிரச்சினைகள் வரும்போது தவிர்க்க முடியாமல் முதலாளித்துவத்தைத்தான் பின்பற்றுவர். ஆனால் விவசாயிகளை, சாத்தியமானால் தொழிலாளர்களையும், நம்பும் அல்லது நம்ப முற்படும் முதலாளித்துவ கட்சி ஒவ்வொன்றும் தன்னை உரு மறைப்பு செய்து கொள்ளும் கட்டாயத்திற்கு உட்படுகிறது; அதாவது தாமே இரண்டு அல்லது மூன்றுவித பொருத்தமான வண்ணங்களை எடுத்துக்கொள்ள நேரிடுகிறது. "தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சிகள்" என்று புகழ்ந்து கூறப்படும் சிந்தனை, விவசாயிகளின் ஆதரவை நாட நிர்ப்பந்திக்கப்பட்ட, ஆனால் தங்கள் அணிளுக்குள் தொழிலாளர்களை சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கும் முதலாளித்துவ கட்சிகளை உருமறைத்துக்கொள்ள குறிப்பாக தோற்றுவிக்கப்பட்டவை ஆகும். வரலாற்றுப் பதிவேடுகளில் அனைத்துக் காலத்திற்குமான இத்தகைய கட்சியின் தொல்சீர் உதாரணம் என்ற வகையில் கோமின்டாங் நுழைந்துவிட்டது

நன்கு அறிந்துள்ளபடி, சொத்துக்கள் இல்லாதவர்கள், அதிருப்தி அடைந்தவர்கள் மற்றும் ஏமாற்றப்பட்ட மக்கள் சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் வகையிலும், திருப்தி அடைந்துள்ள போலிகள் மேல்மட்டத்தில் இருக்குமாறும் முதலாளித்துவ சமுதாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முதலாளித்துவ கட்சியும், ஒரு உண்மையான கட்சியாக இருந்தால், அதாவது அது ஒரு கணிசமான மக்களின் ஆதரவை கொண்டிருக்கிறது என்றால் இந்தக் கொள்கையின் அடிப்படைலேயே கட்டப்பட்டிருக்கும். சுரண்டுபவர்கள், போலிகள், சர்வாதிகாரிகள் ஆகியோர் ஒரு வர்க்க சமூகத்தில் சிறுபான்மையாக இருக்கின்றனர். எனவே முதலாளித்துவ கட்சி தன்னுடைய உறவுகளில் ஏதேனும் ஒருவிதத்தில் முதலாளித்துவ சமூகம் முழுவதிலும் இருக்கும் உறவு முறைகளை மறுஉற்பத்தி செய்து பிரதிபலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒவ்வொரு பரந்த முதலாளித்துவ கட்சியிலும் கீழ்மட்ட உறுப்பினர்கள் கூடுதலான ஜனநாயகமானதாகவும், மேலே இருப்பவர்களைவிட கூடுதலான முறையில் "இடது புறமும்" இருப்பர். இது ஜேர்மனிய மையம், பிரெஞ்சு தீவிரப்போக்கினர் ஆகியோருக்கும், இன்னமும் குறிப்பாக சமூக ஜனநாயகத்திற்கும் பொருந்தும். எனவேதான் ஸ்ராலின் புக்காரின் இன்னும் பிறரும், மேலே இருப்பவர்கள் அடிமட்ட "இடது" கோமின்டாங்கின் உணர்வை பிரதிபலிக்கவில்லை, "பெரும்பான்மையான" "பத்தில் ஒன்பது பகுதியை" பிரதிபலிக்கவில்லை என்று இடைவிடாமல் குறைகூறுவது குழந்தைத்தனமானதும், மன்னிக்க முடியாததுமாகும். அமைப்பு முறை நவடிக்கைகள், அறிவுறுத்தல்கள், சுற்றறிக்கை கடிதங்கள் வழுமுறைகள் மூலம் அகற்றப்படக்கூடிய, ஒரு தற்காலிக, உடன்படத்தகாத தவறான புரிதல்களாக இருக்கும் தங்களுடைய விந்தையான புகார்கள் வாயிலாக தெரிவிக்கப்படும் அவை, யதார்த்தத்தில், குறிப்பாக ஒரு புரட்சிகர சகாப்தத்தில் முதலாளித்துவக் கட்சி ஒன்றின் அடிப்படை சிறப்பியல்பாகும்.

இந்தக் கண்ணோட்டத்தில் இருந்துதான் வரைவு வேலைத்திட்ட ஆசிரியர்களின் அடிப்படை விவாதமான இங்கிலாந்திலும் சீனாவிலும் சகலவித சந்தர்ப்பவாத முகாம்களை பாதுகாப்பது பற்றி கட்டாயம் தீர்மானிக்கப்பட வேண்டும். அவர்களுடைய கூற்றின்படி, தாம் உயர்மட்டத்தில் இருப்பவர்களுடன் தோழமையுடன் பழகுவது முற்றிலும் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுடைய நலன்களுக்கு என்பதாகும். எதிர்ப்பானது, நன்கறிந்துள்ளபடி, கட்சி கோமின்டாங்கில் இருந்து விலகவேண்டும் என்பதன் மீதாக வலியுறுத்தி வந்துள்ளது.

"ஏன்? என்ற கேள்வி எழுகிறது" என்று புக்காரின் கூறுகிறார். "ஏனெனில் கோமின்டாங் தலைவர்கள் ஊசலாடுகிறார்கள் என்பதாலா? கோமின்டாங் வெகுஜனங்கள் பற்றி என்ன, அவர்கள் வெறும் "மந்தைகளா"? எப்பொழுது முதல் ஒரு வெகுஜன அமைப்பினுடனான எமது அணுகுமுறை 'மேல்' மட்டத்தில்" என்ன நடைபெறுகின்றது என்பதால் தீர்மானிக்கப்படுகிறது!" [12]

ஒரு புரட்சிகரக் கட்சியில் இத்தகைய வாதத்திற்கான சாத்தியத்திற்கே இடமில்லை என்றுதான் தோன்றுகிறது. புக்காரின் கேட்கிறார், "கோமின்டாங் மக்கள் பற்றி என்ன கூறுவது, அவர்கள் மந்தைகளா?". ஆம் அவர்கள் மந்தைகள்தான். எந்த முதலாளித்துவ கட்சியிலுமுள்ள மக்கள் எப்பொழுதும் மந்தைகள்தான்; வேறுபட்ட விகிதத்தில் இது இருக்கும். ஆனால் நம்மைப் பொறுத்த வரையில், மக்கள் மந்தைகள் அல்லர், அப்படியா அவர்கள் உள்ளனர்? இல்லை, துல்லியமாக அதனால்தான் முதலாளித்துவத்திற்கு ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி என்ற பேரின் கீழ் உருமறைப்பு செய்வதன் மூலம் நாம் அவர்களை முதலாளித்துவத்தின் கரங்களுக்குள் விரட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அதனால்தான் பாட்டாளி வர்க்க கட்சியை ஒரு முதலாளித்துவ கட்சிக்கு அடிபணியச் செய்வதை நாம் துல்லியமாக அனுமதிக்கக்கூடாது; மாறாக ஒவ்வொரு கட்டத்திலும் பிந்தையதிற்கு எதிராக முந்தையதை முன்னிறுத்தவேண்டும்.

புக்காரின் வஞ்சப் புகழ்ச்சியாக பேசும் கோமின்டாங்கின் "உயர் மட்டம்" ஏதோ இரண்டாம் பட்சமானது, தற்செயல் நிகழ்வு, தற்காலிகமானது என கூறுவது என்பது உண்மையில் அதன் சமூக சாராம்சத்தில் கோமின்டாங்கின் ஆன்மாவாகும். உண்மை என்னவெனில் முதலாளித்துவம் கட்சியிலும் மற்றும் சமூகத்திலும் "உயர்" மட்டத்தில்தான்" இருக்கும். ஆனால் இந்த உயர்மட்டம் அதன் மூலதனம், அறிவு மற்றும் தொடர்புகளினால் மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்: அது எப்பொழுதும் ஏகாதிபத்தியவாதிகளிடம் ஆதரவைப் பெறலாம்; இன்னும் முக்கியமாக அது எப்பொழுதும் உண்மை அரசியல் மற்றும் இராணுவ சக்தியை நாடலாம்; அவையோ கோமின்டாங்கின் தலைமையிலேயே நெருக்கமாகக் கலந்துள்ளவை. இந்த உயர்மட்டம்தான் வேலைநிறுத்தங்களுக்கு எதிராக சட்டங்களை துல்லியமாக இயற்றியது, விவசாயிகளின் எழுச்சிகளை நெரித்தது; கம்யூனிஸ்ட்டுக்களை இருண்ட மூலைக்குத் தள்ளியது; அதிக பட்சம் அவர்களை கட்சியில் மூன்றில் ஒரு பங்காக மட்டும் இருக்குமாறு அனுமதித்தது; அவர்களிடம் இருந்து குட்டி முதலாளித்துவ சன் யாட் செனிச பணிகள் மார்க்சிச பணிகளை விட முன்னுரிமை பெறும் என்ற உறுதிமொழியை பெற்றது. கீழ்மட்ட காரியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேல்மட்டத்தால் அவர்களது சேணத்தால் கட்டப்பட்டுள்ளனர். இது மாஸ்கோவைப் போல் ஒரு "இடது" ஆதரவாக சேவை செய்கின்றது; தளபதிகள், தரகர்கள், ஏகாதிபத்தியவாதிகள் அதற்கு ''வலது'' ஆதரவைக் கொடுத்தது போல். கோமின்டாங்கை ஒரு முதலாளித்துவக் கட்சி என்று கருதாமல், மக்களுடைய போராட்டத்தில் ஒரு நடுநிலை அரங்கம் என்றால், இடது தொண்டர்களில் பத்தில் ஒன்பது பகுதியினரை சொற்ஜாலங்களால் உண்மையான எஜமானர் எவர் என்ற பிரச்சினையை மூடி மறைப்பதற்காக என்பது, மேல் மட்டத்தின் வலிமையையும், சக்தியையும் அதிகப்படுத்துவது என்ற பொருளைத் தரும். இன்னும் பரந்த முறையில் மக்கள் கூட்டத்தை "மந்தைகளாக" மாற்ற உதவுவதால் மேலும் ஷங்காய் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு இன்னும் சாதகமான சூழ்நிலையை தயார் செய்தலாகும். இரு-வர்க்க கட்சி என்ற பிற்போக்கு சிந்தனையை தளமாகக் கொண்டு, ஸ்ராலினும் புக்காரினும் கம்யூனிஸ்ட்டுக்கள் "இடதுகளுடன்" சேர்ந்து கோமின்டாங்கில் பெரும்பான்மை பெறுவர் என்றும் அதையொட்டி நாட்டின் அதிகாரத்தை பெறுவர் என்றும் நினைத்தனர்; ஏனெனில் சீனாவில் அதிகாரம் என்பது கோமின்டாங்கின் கரங்களில் இருந்தது. வேறுவிதமாகக் கூறினால், அவர்கள் சாதாரண தேர்தல்கள் மூலம் கோமின்டாங்கின் மாநாட்டில், அதிகாரம் முதலாளித்துவத்தில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் கரங்களுக்கு வந்துவிடும் என்று நினைத்தனர். இதையும் விட "கட்சி ஜனநாயகம்" பற்றிய உருக்கமான, உயர்சிந்தனைமிக்க வழிபாட்டுத் தன்மையை ஒரு முதலாளித்துவ கட்சியில் நினைக்க இயலுமா? உண்மையில், இராணுவம், அதிகாரத்துவம், செய்தி ஊடகம், மூலதனம் அனைத்தும் முதலாளித்துவத்தின் கரங்களில் உள்ளன. இதனால்தான் துல்லியமாக, இதனால் மட்டுமே மேல்மட்டம் ஆளும் கட்சியில் உள்ளது. முதலாளித்துவ "மேல்மட்டம்" இடதுகளின் "பத்தில் ஒன்பது பகுதிகளை" பொறுத்துக் கொள்ளுகிறது, பொறுத்துக் கொண்டது (இத்தகைய இடதுகளை); அதுவும் இவை இராணுவம், அதிகாரத்துவம், செய்தி ஊடகம், முதலீடு இவற்றை எதிர்க்கத் தைரியம் இல்லாத வரையில்தான் இந்த நிலை. இத்தகைய சக்திவாய்ந்த வழிவகைகளால், முதலாளித்துவ உயர்மட்டம் "இடது" கட்சி உறுப்பினர்களில் பத்தில் ஒன்பது பகுதியினரை கீழ்ப்படிய வைத்தது மட்டும் அல்லாமல், மக்கள் அனைவரையும்கூட கட்டுப்பாட்டிற்குள் வைத்தது. வர்க்கங்களின் கூட்டு என்ற இந்த தத்துவத்தால், கோமின்டாங் ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கட்சி என்ற தத்துவத்தால் முதலாளித்துவ வர்க்கத்திற்கு மிகச் சாதகமான உதவியை அளித்தது. பின்னர் முதலாளித்துவ வர்க்கம் மக்களுடன் விரோதப் போக்கான மோதலின்பின் அவர்களை சுட்டுக் கொன்றபோது, முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என்ற இரண்டு உண்மையான சக்திகளுக்கு இடையே நடந்த மோதலில், புகழப்பட்ட பத்தில் ஒன்பது பகுதியின் ஆடுபோல் கத்தும் ஒலி கூட வெளிவரவில்லை. பரிதாபத்திற்கு உரிய ஜனநாயகக் கற்பனை குருதிகொட்டும் வர்க்கப் போராட்ட யதார்த்தத்தின் முன்னிலையில் எவ்வித அடையாளமும் இல்லாமல் ஆவியாகிப்போய்விட்டது.

இப்படித்தான் கீழ்த்திசை நாடுகளில் உண்மையான "இரு-வர்க்க-தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்" கட்சிகளின் அரசியல் இயங்குமுறை இருக்க முடியும். இது வேறுவிதமாக இருக்கமுடியாததுடன், அவ்வாறு ஒன்றும் இல்லை.

* * * * * *

தேசிய அடக்குமுறையினால் உந்தப்பெற்று இரு-வர்க்க கட்சிகள் பற்றிய கருத்துக்கள் வந்தாலும், மார்க்சின் வர்க்கக் கொள்கைநெறியை வலுவிழக்க செய்கின்றது என்றாலும், நாம் ஏற்கனவே "தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்" கலப்பு பற்றி ஜப்பானில் கேள்விப்பட்டுள்ளோம்; அங்கோ தேசிய அடக்குமுறையே இல்லை. இது மட்டும் இல்லை. கீழ்திசை நாடுகளுடன் மட்டும் இவ்விடயம் நின்றுவிடவில்லை. "இரு-வர்க்க" சிந்தனை ஒரு உலகப்பொதுத்தன்மையை பெற முற்படுகிறது. இந்தத் தொகுப்பில் மிக மோசமான கூறுபாடுகள் மேலே கூறப்பட்ட அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியினால் முதலாளித்துவ ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் அதன் முயற்சிக்காக, "டிரஸ்ட்-எதிர்ப்பு" செனட்டர் லா பொலெட்டை ஆதரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது; இது அமெரிக்க விவசாயிகளை இவ்விதத்தில் சமூகப் புரட்சி என்றும் இரதத்தை நோக்கி இழுக்க முயல்கின்றது. இந்த சூழ்ச்சிக்கையாளலின் தத்துவார்த்தவாதியான பெப்பர், ஹங்கேரிய புரட்சியை தகர்த்தவர்களில் ஒருவராவார்; ஏனெனில் அவர் ஹங்கேரிய விவசாயிகளை கண்காணாது புறக்கணித்ததை (அதற்கு இழப்பீடாக என்பதில் ஐயமில்லை) அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியை அழிப்பதற்கு அதை விவசாயிகளிடையே கரைத்துவிட பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். மிக அதிக இலாபம் அடையும் அமெரிக்க முதலாளித்துவம் அமெரிக்க பாட்டாளி வர்க்கத்தை ஒரு உலக தொழிலாளர் அதிகாரத்துவ கூட்டமாக மாற்றுகிறது ஆனால் அதே நேரத்தில் விவசாயத்துறை நெருக்கடி விவசாயிகளை அழித்து அவர்களை சமூகப் புரட்சி பாதைக்கு செல்ல உந்துதலைக் கொடுக்கிறது என்பது பெப்பரின் தத்துவமா£கும். பெப்பரின் கருத்துப்படிவத்தின்படி, பெரும்பாலும் புலம்பெயர்ந்தோர் அடங்கிய ஒரு சில ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சி ஒரு முதலாளித்துவக் கட்சியின் மூலம் விவசாயிகளுடன் பிணைந்து கொள்ள வேண்டி இருந்தது மற்றும், இதன்மூலம் ஒரு "இரு-வர்க்கக் கட்சி" என்பது நிறுவப்படும். அது மிக அதிக இலாபத்தால் ஊழலடைந்திருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் செயல்படாத் தன்மை அல்லது நடுநிலைமை காரணமாக சோசலிசப் புரட்சியை உறுதிசெய்யும். இந்தப் பைத்தியக்காரத்தனமான சிந்தனை கொமின்டேர்னின் உயர்மட்டத் தலைமையிடத்தில் ஆதரவாளர்கள், அரைகுறை ஆதரவாளர்களை பெற்றது. பல வாரங்கள் இப்பிரச்சினையில் ஊசலாடிய பின்னர், இறுதியில் மார்க்சிசத்தின் அரிச்சுவடியுடன் ஒரு விட்டுக்கொடுப்பு செய்யப்பட்டது. (திரைக்குப் பின்னால் வெளிப்பட்ட கருத்துக்கள்: ட்ரொட்ஸ்கிச தப்பெண்ணங்கள் எனக் கூறப்பட்டன). அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியை தளையில் இருந்து விடுவிக்க லா பொலெட் கட்சியில் இருந்து (அதன் நிறுவனர் இறப்பதற்கு முன்பே கட்சி இறந்துவிட்டது) பிரித்தெடுப்பது மிக முக்கியமானதாகும்.

கீழ்திசை நாடுகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட நவீன திருத்தல்வாதத்தின் அனைத்துக் கருத்துக்களும் பின்னர் மேலைநாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அத்லாந்திக் பெருங்கடலின் ஒரு புறத்தில் பெப்பர் ஒரு இரு-வர்க்க கட்சி வழிவகைகளால் ஒரு வரலாற்றை தூண்டிவிடுகின்றார் என்றால், செய்தி ஊடகத்தில் இருந்து வரும் சமீபத்திய தகவல்கள் கோமின்டாங் அனுபவங்கள், தெளிவாகவே, எமது கட்சி மீது அரக்கத்தனமான கோஷமான "தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் குழுக்களின் அடிப்படையில் ஒரு குடியரசுப் பொதுமன்றம் (?!)" என்று போலியை நல்லதெனக்காட்டி பரப்புவதற்கு, வெளிப்படையாக முயற்சி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற இத்தாலியில் அதை முன்மாதிரியாகக் கொள்ள விரும்புபவர்களை காண்கிறது. இந்த முழக்கத்தில் சியாங் கேய்-ஷேக் பிவீறீயீமீக்ஷீபீவீஸீரீ இன் உணர்வைத் தழுவ முற்படுகிறார். நாம் அந்த அளவிற்கு உண்மையில் போய்விடுவோமா?

* * * * * *

முடிவாக போல்ஷிவிச வரலாற்றில் இருந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கட்சி பற்றிய ஜனரஞ்சகவாத நரோத்னிக்குகளுக்கு எதிரான போராட்டம் முழுவதையும் பெருக்கித் தள்ளுகிறது என்பதை நம் நினைவிற்கு கொண்டுவருகின்றது. அது இல்லாவிடில் போல்ஷிவிக் கட்சி இருந்திருக்காது. இந்த வரலாற்று முக்கியமான போராட்டத்தின் முக்கியத்துவம் என்ன? 1909ம் ஆண்டு லெனின் சமூகப் புரட்சியாளர்களை பற்றி கீழ்க்கண்டவாறு எழுதினார்:

"அவர்களுடைய வேலைத்திட்டத்தின் அடிப்படை கருத்து "பாட்டாளிகள் மற்றும் விவசாயிகளின் 'சக்திகளின் கூட்டு'" என்பது தேவை என்பது மட்டுமல்ல, முந்தையவற்றிற்கும் பிந்தையவற்றிற்கும் இடையே வர்க்கப் பிளவும் இல்லை என்பதாகும்; அதையொட்டி அவற்றிற்கு இடையே வர்க்க வேறுபாட்டு எல்லையை வரைவது தேவையில்லை என்றும் விவசாயிகளின் குட்டி முதலாளித்துவ இயல்பு அதனை பாட்டாளி வர்க்கத்தில் இருந்து வேறுபடுத்துகிறது என்ற சமூக ஜனநாயக கருத்து அடிப்படையில் பிழையாகும்." [13]

வேறுவிதமாகக் கூறினால், இரு-வர்க்க தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி ரஷ்ய நரோத்னிக்குகளின் மையக் கருத்து ஆகும். இந்தக் கருத்துக்கு எதிரான போராட்டத்தினால் மட்டும்தான் விவசாய ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க முன்னணிப்படை வளர்ச்சியடைய முடியும்.

லெனின் தொடர்ந்து, சளைக்காமல் 1905 புரட்சி சகாப்த காலத்தில் பல முறையும் கூறியது:

"விவசாயிகள் பற்றிய எமது அணுகுமுறை அவர்களை நம்பும் வகையில் இருக்கக் கூடாது; நாம் அவர்களில் இருந்து நம்மை தனியே ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும், எந்த அளவிற்கு விவசாயிகள் ஒரு பிற்போக்கான அல்லது தொழிலாள வர்க்க எதிர்ப்பு சக்தியாக வருவர் என்பதைப் பொறுத்து அதற்கு எதிராக ஒரு போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்."

1906ல் லெனின் எழுதினார்:

"எமது கடைசி அறிவுரையாவது: நகரத்திலும் நாட்டுப்புறத்திலும் இருக்கும் பாட்டாளி மற்றும் அரைப்-பாட்டாளி வர்க்கத்தினரே, நீங்கள் உங்களை தனியே ஒழுங்கமைத்து கொள்ள வேண்டும்! சிறு சொத்துடமையாளர்கள் மிகச் சிறிய சொத்துள்ளவர்களானாலும், "தொழிலாளிகளாக இருந்தாலும்" அவர்கள் மீது நம்பிக்கையை வைக்காதீர்கள். ...இறுதிவரை நாம் விவசாயிகள் இயக்கத்திற்கு ஆதரவு கொடுப்போம், ஆனால் அது மற்றொரு வர்க்கத்தின் இயக்கம் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்; சோசலிசப் புரட்சியை செய்யவும், முற்றுப்பெற செய்யவும் விரும்பாத ஒரு வர்க்கம் அது." [15]

இந்த சிந்தனை லெனின் முக்கிய படைப்புக்கள் பலவற்றிலும் நூற்றுக் கணக்கான முறை தோன்றுகிறது. 1908ல் அவர் விளக்கினார்:

"பாட்டளி வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையேயுள்ள கூட்டு எந்தவிதத்திலும் வேறுபட்ட வர்க்கங்களின் அல்லது பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளினதும் கட்சிகளையோ அல்லது வேறுபட்ட வர்க்கங்களை ஒன்றாகக் கலந்துவிடுதல் என்பதோ ஆகாது. ஒன்றாகக் கலந்து விடுதல் என்பது மட்டுமல்லாது, எந்தவிதமான நீடித்த உடன்பாடும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச கட்சிக்கு பேராபத்தாகிவிடும் என்பதோடு புரட்சிகர ஜனநாயகப் போராட்டத்தை வலுவிழக்கவும் செய்துவிடும்." [16]

இதைவிடக் கடுமையாக, இரக்கமற்ற முறையில், தாக்கம் மிக்கவகையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி என்ற சிந்தனையை எவராலும் கண்டித்துவிட முடியுமா?

ஆனால் மறுபுறத்தில் ஸ்ராலின் கற்பிப்பதாவது:

''புரட்சிகர ஏகாதிபத்திய-எதிர்ப்பு கூட்டணி........ ஒரு தனி தொழிலாளர், விவசாயிகள் கட்சி என்னும் வடிவத்தை எப்பொழுதும்[!] அவசியமாகவும்[!] கட்டாயம் எடுக்கவேண்டியதில்லை. ஆனால் ஒரு தனி மேடை ஊடாக சம்பிரதாயமாக[?] இணைந்திருக்கலாம்'' [17]

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையே ஒரு கூட்டு என்பது எப்படியும், ஒருபொழுதும் கட்சிகளின் இணைப்பிற்கு வழிவகுக்கக் கூடாது என்று லெனின் நமக்குக் கற்பித்திருக்கிறார். ஆனால் லெனினுக்கு ஒரு சலுகை மட்டுமே ஸ்ராலின் காட்டுகிறார்: வர்க்கங்களின் முகாம்கள் "ஒரு ஒற்றைக் கட்சியின் வடிவமைப்பை கொள்ள வேண்டும்", ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி, கோமின்டாங் கட்சி போல் --இது எப்பொழுதும் கட்டாயமானதல்ல என்கிறார். இதற்காகவாவது நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

இந்தப் பிரச்சினையை அக்டோபர் புரட்சி சகாப்தத்தில் லெனின் இதே சமரசத்திற்கு இடமில்லாத உணர்வில் நிறுத்தினார். மூன்று ரஷ்ய புரட்சிகளின் அனுபவத்தை பொதுப்படையாக்கி கூறுகையில், லெனின், முதலாளித்துவ உறவுகள் அதிகமாக மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சமூகத்தில் இரு தீர்மானகரமான தனி சக்திகள் உள்ளன, பூர்ஷ்வாக்கள், பாட்டாளி வர்க்கம் என்பவையே அவை என 1918 உடன் தொடங்கி ஒரு வாய்ப்பை கூட தவறாமல் குறிப்பிடுகின்றார்.

"விவசாயி தொழிலாளர்களை பின்பற்றாவிட்டால், அவர் பூர்ஷ்வாக்களுக்கு பின்னால் நிற்பர். இதில் ஒரு மத்திய பாதை இல்லை, இருக்கவும் முடியாது." [18]

இருந்த போதிலும் கூட, "தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி" என்பது ஒரு மத்திய பாதையை காட்டும் துல்லியமான கருத்துத்தான்.

ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை, விவசாயிகளை எதிர்க்க தவறியிருந்தால், அனைத்தையும் விழுங்கும் அதன் குட்டி முதலாளித்துவ இரட்டை நிலைக்கு எதிராக இரக்கமற்ற போராட்டத்தை நடத்தத் தவறியிருந்தால், அது தவிர்க்க முடியாமல் சமூகப் புரட்சிக் கட்சி அல்லது வேறு "இரு-வர்க்கக் கட்சி" என்ற வகையில் குட்டி முதலாளித்துவ கூறுபாடுகளில் தன்னை கரைத்துக் கொண்டிருக்கும்; அதுவோ தவிர்க்க முடியாமல் முன்னணிப்படையை முதலாளித்துவத் தலைமையின் கீழ் அடிபணியச் செய்திருக்கும். விவசாயிகளுடன் ஒரு புரட்சிகர கூட்டைக் கொள்ளுவதற்கு --இது ஒன்றும் சுற்றிவளைத்து வருவதில்லை-- முதலில் பாட்டாளி வர்க்க முன்னணிப் படையை பிரித்து வைக்க வேண்டும்; அதையொட்டி தொழிலாள வர்க்கம் முழுவதையும் குட்டி முதலாளித்துவ மக்களிடம் இருந்து பிரித்து வைக்க வேண்டும். இது பாட்டாளி வர்க்கக் கட்சியை அசைக்க முடியாத வர்க்க சமரசத்திற்கு இடமில்லாத தன்மையின் உணர்வில் பயிற்சி கொடுப்பதின் மூலம்தான் முடியும்.

பாட்டாளி வர்க்கம் இளமையாக இருக்கும் பட்சத்தில் இன்னும் புத்துணர்வுடனும் கூடுதலான நேரடி வகையில் அதன் விவசாயிகளுடனான "இரத்தப்-பிணைப்புக்கள்" இருக்கும் பட்சத்தில், மக்கட் தொகையில் விவசாயிகளின் விகிதம் அதிகம் இருக்கும் தன்மையில், இன்னும் கூடுதலான வகையில் எந்தவிதமான "இரு-வர்க்க" அரசியல் இரசவாதத்திற்கு எதிரான போராட்டம் முக்கியத்துவத்தை பெறும். மேலை நாடுகளில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடைய கட்சி என்னும் கருத்து எள்ளி நகையாடுவதற்கு உரியது ஆகும். சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த கருத்து பாட்டாளி வர்க்கத்திற்கு புரட்சியில் மேலாதிக்கம் பெறுவதற்கு பேராபத்து கொடுக்கும் விரோதப் போக்கை கொண்டது மட்டும் அல்லாமல், பாட்டாளி வர்க்க முன்னணிப் படையின் அடிப்படை சுயாதீனத்திற்கும் விரோதமானதாகும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி என்பது முதலாளித்துவத்திற்கு ஒருதளமாக, ஒரு திரையாக, உந்து பலகையாகத்தான் இருக்க முடியும்.

முழு கிழக்கிற்கும் அடிப்படையான முக்கியத்துவமான இந்தப் பிரச்சினையில் நவீன திருத்தல்வாதம் புரட்சிக்கு முந்தைய நாட்களின் பழைய சமூக ஜனநாயக சந்தர்ப்பவாத பிழைகளை மீண்டும் செய்கின்றது. ஐரோப்பிய சமூக ஜனநாயகத்தின் தலைவர்களில் பெரும்பாலானவர்கள், எமது கட்சியின் சமூகப் புரட்சியாளர்களுக்கு (SR) எதிரான போராட்டத்தை தவறானது என்று கருதியதோடு, இரு கட்சிகளும் ஒன்றாகக் கலந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்; ரஷ்ய "கிழக்கை" பொறுத்தவரை ஒரு இரு-வர்க்க தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சிதான் அன்று அத்தியவசியமானது என்ற கருத்தை கூறினர். அவர்களுடைய ஆலோசனையின்படி நடந்து கொண்டிருந்தால், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டையோ அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையோ நாம் அடைந்திருக்க முடியாது. சோசலிசப் புரட்சியாளர்களின் "இரு-வர்க்க" தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் முகவராக மாறியது; நம் நாட்டில் வேறுவிதமாக நடந்திருக்க முடியாது; அதாவது போல்ஷிவிக்குகளின் திருத்தல்வாதிகளுக்கு நன்றிகூறியபடி அது சீனாவில் கோமின்டாங் சற்று மாறுபட்ட "வினோதமான" சீன முறையில் வெற்றிகரமாக செயலாற்றிய அதே வரலாற்றுப் பங்கைத்தான் தோல்விகரமாக செய்து முடிக்க முயன்றது. கிழக்கிற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி என்ற கருத்தை இடைவிடாமல் கண்டிக்காமல், கம்யூனிச அகிலத்திற்கு வேலைத்திட்டமும் கிடையாது, ஏதும் இருக்கவும் முடியாது.

Notes

10. Pravda, March 2, 1929.

11. Stalin, Problems of Leninism, p.269.

12. The Present Situation in the Chinese Revolution.

13. Works, Vol.XI, Part 1, p.198.

14. Works, Vol.VI, p.113.

15. Works, Vol.IX, p.410.

16. Works, Vol.XI, Part 1, p.79.

17. Problems of Leninism, p.265.

18. Works, Vol.XVI, The Year 1919, p.219.