line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 3: சீனப்புரட்சியை பற்றிய முன்னோக்குகளும் சுருக்கவுரையும்

 

Print part 3 on single page

3. ஜனநாயக சர்வாதிகாரமா அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமா?

ஆனால், கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் கடந்த நிறை பேரவையானது கன்டோன் எழுச்சி உட்பட சீனப் புரட்சியின் அனுபவங்களை எப்படி மதிப்பீடு செய்தது? இன்னும் எத்தகைய கூடுதலான முன்னோக்குகளை அது கோடிட்டுக் காட்டியது? இந்த விஷயத்தின் வரைவு வேலைத்திட்டத்தின் ஒத்த பிரிவுகளுக்கு முக்கிய திறவுகோலாக இருக்கும் (1928) பெப்ருவரி பேரவையின் தீர்மானம், சீனப் புரட்சி பற்றிக் கூறுவதாவது:

"இதை ஒரு "நிரந்தரப் புரட்சி" என்று வகைப்படுத்திக் கூறுவது தவறு ஆகும் [கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு பிரதிநிதியின் நிலைப்பாடு]. புரட்சியின் முதலாளித்துவ-ஜனநாயகக் கட்டத்தை கடந்துவிடும் போக்கு, அதே நேரத்தில் [?] புரட்சியை ஒரு "நிரந்தரப் புரட்சி" என்று அணுகுவதும் ட்ரொட்ஸ்கி 1905ல் [?] செய்த தவறைப் போன்றதே ஆகும்.

லெனின் அதன் தலைமையில் இருந்து நீங்கியதில் இருந்து அகிலத்தின் கருத்தியல் வாழ்வானது, அதாவது 1923ல் இருந்து, முக்கியமாக "ட்ரொட்ஸ்கிசம்" என்று அழைக்கப்படுவதற்கு எதிரான போராட்டமாக, குறிப்பாக "நிரந்தரப் புரட்சிக்கு" எதிராக என்று இருந்தது. அப்படியானால், சீனப்புரட்சி பற்றிய அடிப்படைப் பிரச்சினையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு மட்டுமில்லாமல் அகிலத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதியும், அதாவது சிறப்பு உத்தரவுகளுடன் அனுப்பப்பட்ட ஒரு தலைவரும், "தவறு" செய்தததற்காக இப்பொழுது சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கானவர்கள் செய்த "அதே தவறினை" செய்தார்? சீனப் பிரச்சினையை சூழ்ந்திருந்த போராட்டம் இரண்டரை ஆண்டுகளாக சீற்றத்தில்தான் நிலைத்திருந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பழைய மத்திய குழு (Chen Tu-hsiu), அகிலத்தின் தவறான வழிகாட்டுதல்களின் செல்வாக்கிற்கு உட்பட்டு ஒரு சந்தர்ப்பவாத கொள்கையை கடைப்பிடித்தது என எதிர்ப்பாளர்கள் கூறியபோது, இந்த மதிப்பீடு "ஒரு அவதூறு" என்று அறிவிக்கப்பட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சிறிதும் தவறிழைக்கக் கூடியது அல்ல என்று அறிவிக்கப்பட்டது. புகழ்பெற்ற Tang Ping-shan, கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் ஏழாம் நிறை பேரவையின் பொது ஒப்புதலுடன் பின்வருமாறு அறிவித்தார்:

"ட்ரொட்ஸ்கிசத்தின் முதல் தோற்றங்கள் வெளிப்பட்ட உடனேயே, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், இளங் கம்யூனிஸ்ட் லீக்கும் உடனடியாக ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிராக ஏகமனதாக தீர்மானத்தை ஏற்றன." [3]

ஆனால், இந்த "சாதனைகள்" ஒருபுறம் இருந்தபோதிலும்கூட, அவர்களின் பெரும் சோகம்மிக்க தர்க்கத்தின் பின்னான நிகழ்வுகள் முதலில், பின்னர் இரண்டாவதாகவும் இன்னமும் கூடுதலான வகையில் புரட்சியின் பெரும் பயங்கரமான ஈடாட்டத்திற்கு இட்டுச்சென்றன. பொதுவாக பிழையற்றது எனக்கூறப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மீண்டும் மென்ஷிவிக் என்று ஆசீர்வதிக்கப்பட்டு பின்னர் இருபத்தி நான்கு மணி நேரத்தில் பதவியில் இருந்து இறக்கப்பட்டது. அதே நேரத்தில், புதிய தலைமை கம்யூனிச அகிலத்தின் நிலைப்பாட்டை முழுமையாகப் பிரதிபலிப்பதாக ஆணை ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் உடனடியாகவே ஒரு புதிய, தீவிரமான சோதனை எழுந்தது; புதிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை (நாம் ஏற்கனவே பார்த்தது போல் சொற்களில் இல்லாமல், நடவடிக்கைகளில்) "நிரந்தரப் புரட்சி" என்று அழைக்கப்பட்ட நிலைப்பாட்டிற்கு மாறுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அகிலத்தின் பிரதிநிதியும் இதே பாதையைத்தான் மேற்கொண்டார். வியக்கத்தக்க, புரிந்து கொள்ள முடியாத உண்மை, கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் உத்தரவுகளுக்கும் புரட்சியின் உண்மையான இயக்கவியலுக்கும் இடையே இருந்த மிகப் பெரிய "கத்தரிக்கோல் பிளவுதான்."

1905 "நிரந்தரப் புரட்சி" பற்றிய கட்டுக் கதை பற்றி நாம் இங்கு அதிகம் கூறவேண்டியது இல்லை. அது 1928ம் ஆண்டு குழப்பம், பெரும் திகைப்பு இவற்றை விதைப்பதற்காக கருத்துச் சுற்றறிக்கையாக வந்தது. சீனப் புரட்சி பிரச்சினையில் இந்த கட்டுக்கதை எப்படி உடைந்தது என ஆராய்வதுடன் நிறுத்திக் கொள்வோம்.

பெப்ருவரி தீர்மானத்தின் முதல் பந்தி -அதில் இருந்துதான் மேற்கூறிய வசனம் எடுக்கப்பட்டது- "நிரந்தரப் புரட்சி" என்று அழைக்கப்படுவதின் மீதான அதன் எதிர்மறைப் போக்கிற்கு கீழ்க்கண்ட நோக்கங்களை கூறுகிறது:

"சீனப் புரட்சியின் தற்போதைய காலகட்டம் ஒரு முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி காலகட்டமாகும்; இது பொருளாதார நிலைப்பாட்டில் இருந்தோ (விவசாயப் புரட்சி மற்றும் நிலப்பிரபுத்துவ உறவுகள் அழிக்கப்படுதல்) அல்லது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசியப் போராட்டத்தில் இருந்தோ (சீனா ஐக்கியப்படுத்தப்படுதல், தேசிய சுதந்திரம் நிறுவப்படுதல்), அல்லது அரசின் வர்க்கத் தன்மை என்ற நிலைப்பாட்டில் இருந்தோ (பாட்டாளிகளதும் விவசாயிகளதும் சர்வாதிகாரம்) முற்றிலும் முழுமை அடையவில்லை..."

இத்தகைய விதத்தில் நோக்கங்களை பற்றிக் கூறுதல் தவறுகள், முரண்பாடுகள் பற்றிய இடையறாச் சங்கிலி போன்றதாகும்.

சீனப் புரட்சி, சீனா சோசலிசப் பாதையில் வளர்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை பாதுகாப்பாகக் கொடுக்க வேண்டும் என்று கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு கற்பித்துள்ளது. முதலாளித்துவ-ஜனநாயக கடமைகளை தீர்த்துக்கொள்வதுடன் புரட்சி நிறுத்திக் கொண்டுவிடாமல், தொடர்ந்து ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு விரிந்து செல்லும்போதுதான் இந்த இலக்கு அடையப்படமுடியும்; அதாவது, தடைகள் ஏதும் இல்லாமல் வளர்ச்சியுற்று (அல்லது நிரந்தரமாக) சீனாவை ஒரு சோசலிச வளர்ச்சிக்கு இட்டுச்செல்லவேண்டும். "நிரந்தரப் புரட்சி" என்ற சொற்றொடர் மூலம் இதைத்தான் மார்க்ஸ் துல்லியமாக உணர்ந்திருந்தார். பின் நாம் எவ்வாறு ஒருபுறம் சீனாவிற்கு ஒரு முதலாளித்துவ முறையற்ற வளர்ச்சி வழி பற்றிப் பேசி, மறுபுறம் பொதுவான புரட்சியின் நிரந்தரத் தன்மையையும் மறுக்க முடியும்?.

ஆனால், -கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் தீர்மானம் வலியுறுத்தும் விதத்தில்- புரட்சியானது விவசாயப் புரட்சி நிலைப்பாட்டில் இருந்தோ, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசியப் போராட்ட நிலைப்பாட்டில் இருந்தோ முற்றுப் பெறவில்லை. எனவே "சீனப் புரட்சியின் தற்போதைய காலத்தில்" முதலாளித்துவ-ஜனநாயகத் தன்மை பற்றி அது முடிவுரை கூறுகிறது. உண்மையில், "தற்போதைய காலம்" என்பது ஒரு எதிர்-புரட்சி காலம் ஆகும். சீனப் புரட்சியின் புதிய எழுச்சி பற்றி அல்லது மூன்றாம் சீனப் புரட்சி பற்றி கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு சந்தேகத்திற்கு இடமில்லாமல் அது ஒரு முதலாளித்துவ-ஜனநாயக தன்மையை கொண்டிருக்கும் எனக் கூற விரும்புகிறது; ஏனெனில் 1925-27 இரண்டாம் சீனப் புரட்சி விவசாயப் பிரச்சினையையோ அல்லது தேசியப் பிரச்சினையையோ தீர்க்கவில்லை. ஆனால் திருத்தப்பட்ட இத்தகைய காரணம் கூறுதல்கூட சீன மற்றும் ரஷ்ய புரட்சிகள் இரண்டின் அனுபவங்களை, படிப்பினைகளை புரிந்து கொள்வதில் முழுத் தோல்வி அடைந்த நிலைப்பாட்டில்தான் அடங்கியுள்ளது.

ரஷ்யாவின் 1917 பெப்ருவரி புரட்சி, புரட்சிக்கு இட்டுச்சென்ற அனைத்து உள்நாட்டு, சர்வதேசப் பிரச்சினைகளையும் தீர்க்காமல் விட்டது -- அதாவது கிராமங்களில் இருந்த விவசாயிகள் அடிமை முறை, பழைய அதிகாரத்துவம், போர், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை. இதை ஒரு ஆரம்பக் கட்டமாக எடுத்துக் கொண்டு சமூகப் புரட்சியாளர்கள் (SR), மென்ஷிவிக்குகள் மட்டுமல்லாது எமது கட்சியின் தலைமையில் கணிசமான பிரிவும்கூட லெனினிற்கு "தற்பொழுதைய புரட்சிக்கால கட்டம் முதலாளித்துவ-ஜனநாயக புரட்சியின் ஒரு கால கட்டம்தான்" என்று நிரூபிக்க முற்பட்டனர். இவ்விதத்தில், அதன் அடிப்படைப் பரிசீலனையில், கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் தீர்மானம் லெனின் 1917ம் ஆண்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான போராட்டத்திற்கு எதிராக சந்தர்ப்பவாதிகள் எழுப்பிய ஆட்சேபனைகள் ஆகியவற்றின் வெறும் நகல்களாகத்தான் உள்ளன.

மேலும், பொருளாதார, தேசிய நிலைப்பாட்டில் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி சாதிக்க முடியாத நிலையில் இருப்பதாகத் தோன்றுவது மட்டும் இல்லாமல் "அரசின் வர்க்கத் தன்மை நிலைப்பாட்டில் இருந்தும் (பாட்டாளிகளதும் விவசாயிகளதும் சர்வாதிகாரம்) சாதிக்காதது போல்தான் தோற்றம் அளிக்கிறது. இதன் பொருள் ஒன்றுதான்: சீனாவில் "உண்மையான" ஜனநாயக அரசாங்கம் அதிகாரத்திற்கு வரும் வரையும் சீனப் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை வெற்றிகொள்வதற்காக போராடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதாகும். துரதிருஷ்டவசமாக, அதை எங்கு பெறுவது என்பது பற்றிக் குறிப்புக்கள் ஏதும் வரவில்லை.

இந்த இரண்டு ஆண்டுகள் சோவியத்துக்களைத் தோற்றுவித்தல் தொழிலாள வர்க்க புரட்சிக்கு மாறும் காலத்தில்தான் முடியும் என்ற அடிப்படையில் சோவியத்துக்கள் வேண்டும் என்ற முழக்கம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து குழப்பம் இன்னமும் கூடுதலாயிற்று (ஸ்ராலினின் "தத்துவம்"). ஆனால் கன்டோனில் சோவியத் புரட்சி ஏற்பட்டபோது, அதில் பங்கு பெற்றவர்கள் இது பாட்டாளி வர்க்கத்திற்கான மாறும் காலம்தான் என்ற துல்லியமான முடிவில் இருந்தபோது, அவர்கள் "ட்ரொட்ஸ்கிசத்தை" சார்ந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டனர். ஒரு கட்சி இத்தகைய விதத்திலா பயிற்றுவிக்கப்பட வேண்டும்? தலையாய பணிகளின் தீர்விற்கு உதவ இதுவா வழி?

ஒரு நம்பிக்கையற்ற நிலையைக் காப்பாற்றுவதற்கு கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் தீர்மானம் (தன்னுடைய முழு சிந்தனைப் போக்குடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத வகையில்) மிக அவசரமாக ஏகாதிபத்தியத்தில் இருந்து அது எடுத்துக் கொண்ட கடைசி வாதத்திற்கு செல்கிறது. "முதலாளித்துவ-ஜனநாயக கட்டத்தை தாண்டிச்செல்லும் போக்கு இன்னும் தீமை பயக்கும் [!], ஏனெனில் அத்தகைய பிரச்சினை பற்றிய கருத்து சீனப் புரட்சியின் மிக முக்கியமான தேசிய சிறப்புத் தன்மையை அகற்றுகிறது [?], அதுவோ ஒரு அரைக்காலனித்துவப் புரட்சி ஆகும்."

இத்தகைய அர்த்தமற்ற சொற்களின் ஒரே பொருள் ஏகாதிபத்திய அடிமைத்தளை ஏதோ ஒருவித பாட்டாளி வர்க்கம் அல்லாத சர்வாதிகாரத்தால் அகற்றப்பட்டுவிடும் என்பதுதான். ஆனால் இதன் பொருள் சீனத் தேசிய முதலாளித்துவம் அல்லது சீன குட்டி முதலாளித்துவ "ஜனநாயகத்தை" மிளிரும் வண்ணத்தில் காட்டும் பொருட்டு "மிக முக்கியமான தேசிய சிறப்புத் தன்மை" என்பது இதில் கடைசி நேரத்தில் இழுத்துக் கொண்டுவரப்பட்டது என்பதாகும். இத்தகைய வாதத்திற்கு வேறுபொருள் ஏதும் இல்லை. ஆனால் இந்த ஒரே "பொருள்" நம்மால் "காலனித்துவ முதலாளித்துவ வர்க்கத்தின் தன்மை" என்ற அத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளது. இதைப் பற்றி மீண்டும் பேசுவதற்கு அவசியம் இல்லை.

"ஆசிய" வடிவங்களிலான அடிமைத்தனத்தை ஒழித்தல், தேசிய விடுதலை, நாட்டை ஐக்கியப்படுத்தல் ஆகியன போன்ற அடிப்படை விஷயங்களுக்கான ஒரு பரந்த, கடுமையான, இரத்தம்தோய்ந்த, நீடித்த போராட்டத்தை சீனா இன்னமும் எதிர்கொண்டிருக்கிறது. ஆனால் நிகழ்வுகளின் போக்கு காட்டியுள்ளதுபோல், துல்லியமாக இந்த நிலைமைதான் வருங்காலத்தில் எவ்வித குட்டி-முதலாளித்துவ தலைமையையும் அல்லது அரை-தலைமையையும் புரட்சியில் இயலாதாதாக்கிவிடும். இன்று சீனாவின் ஐக்கியம் மற்றும் விடுதலை என்பது ஒரு சர்வதேசப் பணியாகும், சோவியத் ஒன்றியத்தின் நிலைப்பாடும் இதற்கு குறைந்த தன்மையைக் கொண்டிருக்கவில்லை. இப்பணியானது பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையின் நேரடித் தலைமையின் கீழ் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள, பசியில் வாடும், துன்புறுத்தப்படும் மக்கள்திரள், உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மட்டும் அல்லாமல், சீனாவில் இருக்கும் அதன் பொருளாதார, அரசியல் ஏஜண்டுகளுக்கு எதிராகவும், "தேசிய" முதலாளித்துவம் மற்றும் அதன் அனைத்து ஜனநாயக எடுபிடிகள் உள்ளடங்கலாக முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான மூர்க்கமான போராட்டத்தின் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியும். இது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நோக்கிய பாதை தவிர வேறொன்றுமில்லை.

ஏப்ரல் 1917ல் இருந்து "நிரந்தரப் புரட்சியின்"நிலைப்பாட்டை ஏற்றுவிட்டதாக அவரைக் குற்றம் சாட்டிய எதிரிகளிடம் பாட்டாளிகள் மற்றும் விவசாயிகளின் சர்வாதிகாரம் இரட்டை அதிகார சகாப்தத்தின் போது ஓரளவு அடையப்பட்டுவிட்டது என்று விளக்கினார். பின்னர் இந்தச் சர்வாதிகாரம் அதன் விரிவாக்கத்தை நவம்பர் 1917 தொடங்கி ஜூலை 1918 வரையிலான சோவியத் அதிகாரத்தின் முதல் காலத்தில் அடைந்தது என்றும் விளக்கினார்; அப்பொழுது முழு விவசாயிகளும் தொழிலாளர்களுடன் சேர்ந்து விவசாயப் புரட்சியை ஏற்படுத்தினர். அந்த நேரத்தில் தொழிலாள வர்க்கம் ஆலைகளையும், தொழிற்சாலைகளையும் கைப்பற்றுவதற்கு இன்னும் முற்பட்டிருக்கவில்லை, ஆனால் அவற்றின் மீதான தொழிலாளர்களின் கட்டுப்பாடு பற்றித்தான் பரிசோதனை நடத்தி வந்தது. "அரசின் வர்க்கத் தன்மையை" பொறுத்த வரையில், ஜனநாயக -சமூகப் புரட்சியாளர்- மென்ஷிவிக் "சர்வாதிகாரம்" அது கொடுக்க முடிந்த அனைத்தையும் கொடுத்தது - அதாவது இரட்டை அதிகாரத்தின் குறைப்பிரசவத்தை கொடுத்தது. விவசாய மாற்றம் என்பதைப் பொறுத்தவரையில், புரட்சி ஒரு முழுமையான, சுகாதாரமான மற்றும் திடகாத்திரமான குழந்தையைக் கொடுத்தது; ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்தான் தாதியாகப் பணியாற்றியது. வேறுவிதமாகக் கூறினால், பாட்டாளிகள் விவசாயிகளின் சர்வாதிகாரம் என்ற தத்துவார்த்த சூத்திரத்தினால் இணைக்க முயன்றவை உண்மையான வர்க்கப் போராட்டத்தின்போது பிரிக்கப்பட்டன. அரைகுறை அதிகாரம் என்ற வெற்றுக்கூட தற்காலிகமாக கெரென்ஸ்கி-டிசெரெடெல்லியிடம் ஒப்படைக்கப்பட்டது; அதேவேளை விவசாயிகள்-ஜனநாயகப் புரட்சியின் உண்மையான சாரம் வெற்றியடைந்த தொழிலாள வர்க்கத்தின் பங்கில் விழுந்தது. ஜனநாயக சர்வாதிகாரத்தின் இந்த இயங்கியல் ரீதியான தொடர்பறுதலை கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு புரிந்து கொள்ளுவதில் தோல்வியடைந்தது. அவர்கள் "எந்தவித முதலாளித்துவ-ஜனநாயகக் கட்டத்தை தாண்டுதலையும்" இயந்திர கதியில் கண்டித்ததன் மூலம், சுற்றறிக்கை கடிதங்கள் மூலம் வரலாற்று வழிவகைகளுக்கு வழிகாட்ட முயல்வதன் மூலம் ஒரு அரசியல் முட்டுச்சந்திற்கு தங்களைத்தாங்களே இட்டுச் சென்றனர். "ஜனநாயக சர்வாதிகாரத்தின் துணைகொண்டு விவசாயப் புரட்சி நிறைவேறுதலை, முதலாளித்துவ-ஜனநாயகக் கட்டத்தால் நாம் புரிந்து கொள்வதாக இருந்தால், பின் அக்டோபர் புரட்சியே முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்தை துணிச்சலான வகையில் "கடந்ததே". இதற்காக அது கண்டிக்கப்பட வேண்டாமா?

அப்படியானால் வரலாற்றளவில் தவிர்க்க முடியாத நிகழ்வுப் போக்கான ரஷ்யாவில் போல்ஷிவிசத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடை சீனாவில் "ட்ரொட்ஸ்கிசம்" என்று கட்டாயம் நிரூபிக்கப்பட வேண்டியதற்கான தேவை என்ன? இதே தர்க்கத்தின் அடிப்படையில்தான் ரஷ்யாவில் போல்ஷிவிசத்தால் இரு தசாப்தங்களாக போராடப்பட்ட மாட்டினோவ் தத்துவம் சீனாவிற்கு பொருந்தும் என்று அறிவிக்கப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், இங்கு ரஷ்யாவுடன் ஒரு ஒப்புமையைக் காண்பது அனுமதிக்கப்படுமா? கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு தலைவர்களால் ஒரு பாட்டாளிகள் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரம் என்று கட்டமைக்கப்பட்ட முழக்கம் பிரத்தியேகமாக, முற்றிலும் ஒப்புமை வழிவகைக்கு இயைந்த வகையில்தான் செய்யப்பட்டது; சடத்துவவாத மற்றும் வரலாற்று ஒப்புமைக்கு இயைந்த வகையில் அல்ல என்பதுதான் எமது விடையாகும். சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒப்புமை என்பது இது பற்றி ஒரு சரியான அணுகுமுறையை கொண்டிருந்தால்தான் முற்றிலும் ஏற்கப்பட முடியும்; லெனின் அத்தகைய ஒப்புமையை சிறந்த வகையில் பயன்படுத்தினார். மேலும் நிகழ்வுகளுக்கு பின்னர் என்று இல்லாமல் அதன் இழிபாசாங்கினர்களின் பெரும் வருங்காலத் தவறை முன்கூட்டியே அறிந்தது போல்தான் கூறினார். முதலாளித்துவ-ஜனநாயக கடமைகள் தீர்க்கப்பட்டிருக்கவில்லை என்ற உண்மை இருந்தபோதிலும் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பெரும் தைரியத்தை கொண்டிருந்த உண்மையினால்தான் நூற்றுக்கணக்கான சமயங்களில் லெனின் அக்டோபர் புரட்சிக்கு ஆதரவு கொடுக்க நேர்ந்தது. அதன்காரணமாகத்தான், அதைத் துல்லியமாகச் செய்வதற்காகத்தான் அவர் அவ்வாறு கூறினார். தங்களுடைய சோசலிசத்திற்கு ரஷ்யா பொருளாதாரப் பக்குவம் அடையவில்லை என்பதைக் குறிப்பிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு எதிராக வாதங்களைக் கொண்டிருந்த கல்விச் செருக்கு உடையவர்களுக்கு, "மறுப்பதற்கியலாததாக" அவருக்கு இருந்த அதற்கு எதிராக லெனின் தானே அவ்வாறு கூறினார்.[4] ஜனவரி 16, 1923ல் லெனின் எழுதினார்:

"ரஷ்யா, நாகரிகமடைந்த நாடுகளுக்கும் முதல் தடவையாக இப்போரின்மூலம் நாகரிகத்தன்மைக்கு ஈர்க்கப்படும் நாடுகளுக்கும் இடைப்பட்ட எல்லையில் நிற்கும் நிலையில், அனைத்து கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இவற்றிற்கு இடையே இருப்பதால் சில வினோதமான தன்மைகளை வெளிப்படுத்தக்கூடும், உறுதியாக வெளிப்படுத்த வேண்டும். இது உலக வளர்ச்சியின் சில பொது வழிவகைகளின் படி நிகழ்ந்தாலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இதற்கு முன்நிகழ்ந்த சில புரட்சிகளில் இருந்து முற்றிலும் வினோதமான தன்மையைக் கொண்டிருக்கும் என்பது அவர்களுக்கு தோன்றவில்லை; கீழை நாடுகளை அணுகும்போது சில பகுதி புதுமைகள் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டு என்பதையும் அவர்கள் அறியவில்லை." [5]

ரஷ்யாவை கீழை நாடுகளுக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் "வினோதம்" ஒரு இளம் பாட்டாளி வர்க்கம், மிக ஆரம்ப நிலையிலேயே துடைப்பத்தை கையில் எடுத்துக் கொண்டு சோசலிசப் பாதையில் இருக்கும் அனைத்துவித குப்பைகள் மற்றும் நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித் தனத்தையும் அகற்றிவிட வேண்டியிருந்தது என்ற உண்மையை துல்லியமாக லெனின் கண்டார்.

இதன் விளைவாக சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே லெனின் கூறிய ஒப்புமையை நாம் புறப்பாட்டுப் புள்ளியாக எடுத்துக் கொண்டால், நாம் கூற வேண்டியது: "அரசின் அரசியல் தன்மை" என்ற கண்ணோட்டத்தில் இருந்து சீனாவில் ஜனநாயக சர்வாதிகாரத்தின் மூலம் கிடைக்கப் பெற்றிருக்கக் கூடிய அனைத்தும் சோதனைக்கு உட்பட்டன; முதலில் சுன்யாட் சென்னின் கன்டோனிலும், பின்னர் கன்டோனில் இருந்து ஷங்காய் பாதையிலும்; அதுதான் ஷங்காய் சதியிலும் உச்சகட்டத்தை அடைந்தது, பின் வுகான் இல் இரசாயன ரீதியாக வடித்தெடுத்தலூடாக தோன்றிய இடது கோமிண்டாங் இலும் ஏற்பட்டது; அதாவது கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் உத்தரவுகளின்படி, விவசாயப் புரட்சியை ஒழுங்கமைத்தாலும் உண்மையில் அதனை தூக்கிலிட்டவன்போல் தான் செயல்பட்டது. ஆனால் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சியின் சமூக உள்ளடக்கம் வரவிருக்கும் சீனப் பாட்டாளி வர்க்கம் மற்றும் வறிய விவசாயிகளின் சர்வாதிகாரத்தின் ஆரம்ப காலகட்டத்தை செய்துமுடிக்கும். சீன முதலாளித்துவத்தின் பங்கு மட்டும் இல்லாமல், சீன "ஜனநாயகத்தின்" பங்கும் சோதனைக்கு உட்பட்டுவிட்ட நிலையில் இப்பொழுது பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற முழக்கத்தை எழுப்புவது, "ஜனநாயகம்" என்பது இன்னும் கூடுதலான முறையில் வரவிருக்கும் போராட்டங்களில் இன்னும் கூடுதலான வகையில் தூக்கிலிடுபவர் பங்கைக் கொள்ளும் என்பது மறுக்க முடியாத நிலையில், கோமின்டாங்கிசத்தின் புதிய வகைகளை மூடிமறைத்தலுக்கு வழிவகுக்கும் என்பதுடன் பாட்டாளி வர்க்கத்திற்கும் ஒரு தூக்குக் கயிறைத் தயாரிப்பது போல் ஆகும்.

முழுமையான தன்மையை கொடுப்பதற்கு சமூகப்புரட்சியாளர்- மென்ஷிவிக் அனுபவத்திற்கு எதிராக முன்வைத்தலின் மீது "உண்மையான" ஜனநாயக சர்வாதிகாரம் என்ற முழக்கத்தை வலியுறுத்திய போல்ஷிவிக்குகள் பற்றி லெனின் கடுமையுடன் என்ன கூறினார் என்பதை நாம் நினைவு கூர்வோம்:

"இப்பொழுது "பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் புரட்சிகர ஜனநாயக சர்வாதிகாரம்" பற்றி பேசுபவர்கள் வாழ்க்கையுடனான தொடர்பை இழந்து விட்டனர் என்பதுடன் இச்சூழ்நிலையின் காரணமாக நடைமுறையில் பாட்டாளிகளின் வர்க்க போராட்டத்திற்கு எதிராக குட்டி முதலாளித்துவத்தின் பக்கம் சென்றும் விட்டனர். அப்படிப் பேசுபவர் "போல்ஷிவிக்கின்" புரட்சிக்கு முந்தைய பழைமைகள் இருக்கும் அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் (அல்லது "பழைய போல்ஷிவிக்குகளின்" அருங்காட்சியகத்திற்கு என்றும் கூறலாம்).[6]

இச்சொற்கள் இன்று பேசப்பட்டது போல் ஒலிக்கின்றன. அது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு உடனடி எழுச்சிக்கு அழைப்பு விடும் பிரச்சினை இல்லை என்பது உண்மைதான். அதன் வேகம் முற்றிலும் சூழ்நிலைகளைப் பொறுத்துத்தான் இருக்கும். தோல்வியின் விளைவுகள் தந்திரோபாயத்தை திருத்துவதின் மூலம் மட்டுமே அகற்றப்பட முடியாதவை. புரட்சி இப்பொழுது தணிந்து கொண்டிருக்கிறது. கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் அரை-மூடிமறைப்பான தீர்மானம், கணக்கிலடங்கா மக்கள் தூக்கில் இடப்படுவது மற்றும் சீனாவில் வணிக, தொழில்துறை நெருக்கடி நிலவும் அதேவேளையில், உடனடியாய் வரவிருக்கும் தவிர்க்க முடியாத புரட்சிகர தாக்குதல்களைப் பற்றி ஆரவாரிப்பது, நெஞ்சுரமில்லாத குற்றத்தன்மையை சேர்ந்தவையே அன்றி, வேறு எதுவும் இல்லை. மூன்று பெரும் தோல்விகளுக்கு பின்னர் ஒரு பொருளாதார நெருக்கடி பாட்டாளி வர்க்கத்திற்கு ஊக்கம் கொடுக்காமல் பெரும் உளைச்சலைத்தான் கொடுக்கும்; ஏனெனில் ஏற்கனவே அது இந்த வர்க்கத்தை பிழிந்து எடுத்துவிட்டது; தூக்குதண்டனைகள் அரசியலில் வலுவிழந்த கட்சியை மட்டுமே அழிக்கும். நாம் சீனாவில் ஒரு பின்னோக்கிப்பாயும் காலகட்டத்தில் நுழைகிறோம், அதில் கட்சி அதனது தத்துவார்த்த வேர்களை ஆழப்படுத்துவதுடன், தன்னையே விமர்சனரீதியாக கல்வியூட்டிக் கொண்டு, தொழிலாள வர்க்க இயக்கத்தின் அனைத்து பிரிவுகளிலும் அமைப்பு ரீதியான இணைப்புக்களை உருவாக்கி, வலுப்படுத்திக் கொண்டு, கிராமப்புற மையங்களை ஒழுங்கமைத்துக் கொண்டு, தொழிலாளர்கள் மற்றும் வறிய விவசாயிகளின் யுத்தங்களை ஓரளவு முதலில் தற்பாதுகாப்பு பின்னர் தாக்குதல் என்ற வகையில், பகுதியளவில் ஐக்கியப்படுத்தி வழி நடத்துகிறது.

இந்த வெகுஜன இயக்கத்தில் ஏற்ற இறக்கத்தை எது திருப்பும்? பல மில்லியன்கள் அடங்கிய மக்களின் தலைமையில் இருக்கும் ஒரு பாட்டாளி வர்க்க முன்னணிப்படைக்கு எத்தகைய சூழ்நிலைமைகள் அவசியமான புரட்சிகர ஊக்கத்தை அளிக்கும்? இதை முன்கூட்டி கணிக்க இயலாது. வருங்காலம்தான் உள் வழிவகைகள் மட்டுமே போதுமா அல்லது வெளியில் இருந்து கூடுதலான ஊக்கம் வரவேண்டுமா என்பதைக் காட்டும்.

தவறான தலைமை மூலம் சீனப் புரட்சியை உடைத்தல் நேரடியாக நடக்கக் கூடும், அது சீன மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவத்தை இப்பொழுது நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் பயங்கரமான பொருளாதார நெருக்கடியை குறைந்த அளவிலோ, கூடிய அளவிலோ கடக்க முடியும் என்பதற்கு போதுமான அடிப்படைகள் இருக்கின்றன. இயல்பாகவே, இது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் முதுகுகளிலும் எலும்புகளிலும் பெரும் சுமைகளை ஏற்றுவதின் மூலம் நடக்கும். "ஸ்திரப்படுத்தப்படும்" இந்த காலகட்டம் மீண்டும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, ஒன்றாக்கும், அவர்களுடைய வர்க்கத் தன்னம்பிக்கையை மீட்டு விரோதியுடன் தீவிரமாக போரிட ஒன்றுபடுத்தும் என்பதுடன், இது சற்று உயர்ந்த வரலாற்றுக் கட்டத்திலும் நடைபெறும். பாட்டாளி வர்க்க இயக்கத்தின் ஒரு புதிய அலை தாக்குதலில் இருக்கும் நிலையில் மட்டும்தான் ஒரு விவசாயப் புரட்சி முன்னோக்கு பற்றித் தீவிரமாகப் பேசுவதற்கு இயலும்.

வரவிருக்கும் மூன்றாம் புரட்சியின் முதல் கட்டம் ஏற்கனவே கடக்கப்பட்டுவிட்ட கட்டங்களை ஒரு சுருக்கமான, திருத்தப்பட்ட வடிவத்தில் திரும்ப உண்டுபண்ணும் என்பது ஒதுக்கப்பட முடியாது; உதாரணமாக "தேசிய ஐக்கிய முன்னணி"யின் ஒரு சில புதிய நையாண்டிகளை முன்வைக்கும். ஆனால் இந்தக் கட்டம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தன்னுடைய "ஏப்ரல்" ஆய்வுக் கட்டுரையை முன்வைத்து அறிவிப்பதற்கு ஒரு வாய்ப்பை கொடுக்கும்; அதாவது வெகுஜனத் திரளின் முன்பு தன்னுடைய திட்டம் மற்றும் தந்திரோபாயங்களை முன்வைக்க போதுமானதாக இருக்கும்.

ஆனால், வரைவு வேலைத்திட்டம் இதைப்பற்றி என்ன கூறுகிறது?

"[சீனா] பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான மாறுதல் தொடர்ச்சியான பல தயாரிப்புக் கட்டங்களுக்கு (?) பின்னர்தான் நிகழக்கூடும்; அதுவும் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி ஒரு சோசலிசப் புரட்சியாக வளரக்கூடிய முழுக்காலத்தின் (??) விளைவாகத்தான் வரும்."

வேறு வார்த்தைகளில் கூறினால் ஏற்கனவே கடக்கப்பட்டுவிட்ட "அனைத்துக் கட்டங்களும்" கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டா. வரைவு வேலைத்திட்டம் ஏற்கனவே விட்டுச்செல்லப்பட்டதைத்தான் தனக்கு முன்பு காண்கிறது. இதுதான் துல்லியமாக வாலைப்பிடிக்கும் சூத்திரம் என்று அழைக்கப்படுவது ஆகும். இது கோமிண்டாங்கின் போக்கின் ஊக்கத்தில் புதிய பரிசோதனைகளுக்கான கதவுகளை திறக்கும். பழைய தவறுகளை மறைத்தல் இவ்விதத்தில் புதிய பிழைகளை தயாரிக்கத்தான் தவிர்க்கமுடியாமல் வழிசெய்யும்.

நாம் கடந்ததைவிட மிகவிரைவான வகையில், ஒப்பிடமுடியாத வகையில் ஊக்கம் பெற்றிருக்கக் கூடிய புதிய எழுச்சியில் நுழைந்தால்தன்னுடைய உபயோகத்தை ஏற்கனவே கடந்து விட்ட "ஜனநாயக சர்வாதிகாரம்" பற்றிய திட்டத்துடன் நுழைந்தால், மூன்றாம் சீனப்புரட்சி, இரண்டாவதை போன்றே பெரும் அழிவிற்குத்தான் இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமே கிடையாது.

Notes

3. Minutes, p.205.

4. Works, Vol.XVIII, part 2, p.119.

5. Ibid., p.118.

6. Works, Vol.XIV, part 1, p.29.