line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 3: சீனப்புரட்சியை பற்றிய முன்னோக்குகளும் சுருக்கவுரையும்

 

Print part 3 on single page

4. சந்தர்ப்பவாதத்தின் விளைவாக சாகசவாதம்

கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் பெப்ரவரி நிறைபேரவை இயற்றிய இதே தீர்மானத்தின் இரண்டாம் பகுதி கூறுவதாவது:

"குறிப்பிட்டளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ், முக்கியமான முழக்கங்களின் கீழ் தொடர்ந்து நடந்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பரந்த புரட்சிகர இயக்கத்தின் முதல் அலை முடிந்துவிட்டது. தொழிலாளர்கள் விவசாயிகளை பொறுத்தவரைக்கும் பல புரட்சிகர மையங்களில் பெரும் தோல்விகளிலும், பொதுவில் கம்யூனிஸ்டுகள், தொழிலாளர் விவசாயிகள் இயக்கத்தின் புரட்சிகர காரியாளர்கள் சரீரரீதியாய் அழிக்கப்பட்டதிலும் அது முடிவுற்றது."

"அலை" உயர்ந்து வரும்போது, முழு இயக்கமும் கோமின்டாங்கின் நீலப் பதாகை மற்றும் தலைமையின் கீழ் இருந்தது, சோவியத்துக்களின் இடத்தைக்கூட எடுத்துக்கொண்டது என்றும் கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு கூறியது. துல்லியமாக அந்த காரணத்தினால்தான் கம்யூனிஸ்ட் கட்சி கோமிண்டாங்கிற்கு அடிபணியச் செய்யப்பட்டது. அதனால்தான் மிகச் சரியாக புரட்சிகர இயக்கம் "பெரும் தோல்விகளில்" முடிவுற்றது. இப்பொழுது இந்தத் தோல்விகள் உணரப்பட்டபோது, ஏதோ கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு நீலப்பதாகையை தன்னுடையது என்று அறிவிக்காதிருந்தது போல், கோமின்டாங்கை ஒருபோதும் இருந்திராதது போல் கடந்த காலத்திலிருந்து அதனை அழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் ஷங்காயிலோ அல்லது வுகானிலோ தோல்விகள் அடையப்படவில்லை; இவை "ஒரு உயர்ந்த கட்டத்தை" அடைகின்ற புரட்சியின் இடைமருவுகாலமாக காலகட்டமாகவே இருந்தன -- அப்படித்தான் நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த இடைமருவுகாலங்கள் அனைத்தும் திடீரென்று "தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் தோல்விகள்" என்று அறிவிக்கப்படுகின்றன. ஆனால் இத்தகைய முன்னோடியற்ற கணிப்புக்கள் மதிப்பீடுகளின் அரசியல் திவால்தன்மையை மூடி மறைக்கும் வகையில் தீர்மானத்தின் கடைசிப் பந்தி அறிவிப்பதாவது:

"கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவானது சீனப் புரட்சி அழிக்கப்பட்டுவிட்டது[?] என்ற வகையில் கூறும் சமூக ஜனநாயக மற்றும் ட்ரொட்ஸ்கிச அவதூறுகளுக்கு எதிராகப் போரிடுதலை கம்யூனிச அகிலத்தின் அனைத்து பகுதிகளதும் ஒரு கடமையாக ஆக்குகிறது."

தீர்மானத்தின் முதல் பந்தியில் "ட்ரொட்ஸ்கிசம்" நிரந்தர சீனப்புரட்சியின் கருத்தாக இருந்ததாக, அதாவது, புரட்சியானது இந்தநேரத்தில் துல்லியமாக முதலாளித்துவத்திலிருந்து சோசலிசக் கட்டத்திற்கு வளருகின்றதாக கூறப்பட்டது; கடைசிப் பந்தியில் "ட்ரொட்ஸ்கிஸ்டுகளின்" கூற்றின்படி, "சீனப் புரட்சி அழிக்கப்பட்டுவிட்டது" என்று எமக்கு கூறப்படுகின்றது. ஒரு "அழிக்கப்பட்ட" புரட்சி ஒரு நிரந்தர புரட்சியாக எப்படி இருக்க முடியும்? இங்கு புக்காரினுக்கே எல்லாப்பெருமையும்.

முற்றிலும், கவனம் செலுத்தப்படாத பொறுப்பற்ற தன்மைதான் இத்தகைய முரண்பாடுகளை அனுமதிக்க முடியும்; இது புரட்சிகர சிந்தனைகள் அனைத்தையும் அதன் வேரோடு அரித்துவிடும்.

புரட்சி "அழிக்கப்பட்டது" என்பதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டு குருதியில் மூழ்கடிக்கப்பட்டது, பொதுமக்கள் பின்வாங்கல் மற்றும் வீழ்ச்சி நிலையில் இருக்கின்றனர், ஏனைய பல சூழ்நிலைகளைத் தவிர அடுத்த தாக்குதலுக்கு முன்பு, மக்கள் மத்தியில் வேலைசெய்யும் மூலக்கூறு செயல்முறைகள் கட்டாயம் இருக்கும், அதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும், அந்தக் கால நீட்டிப்பு முன்கூட்டி உறுதிசெய்யப்பட முடியாது என்ற உண்மையை நாம் புரிந்து கொள்வதாக இருந்தால், பின் அது ஒன்றும் கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு இறுதியில் அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிற "பெரும் தோல்விகளில்" இருந்து எந்தவிதத்திலும் வேறுபடாது. அல்லது சொல்லின் பொருள்படி அழித்தல் என்பதை, சீனப் புரட்சி உண்மையில் அழிவுற்றது என்று, அதாவது, ஒரு புதிய தளத்தில் அதன் மறுபிறப்பின் தவிர்க்கமுடியாத தன்மையும் சாத்தியமும் அழிவுற்றது என்று கொள்ளப் போகிறோமா? அத்தகைய முன்னோக்கை குழப்பம் ஏற்படாதபடிக்கு இரு விதங்களில் மட்டுமே ஒருவர் கரிசனத்துடன் எடுத்துக்கொள்ள முடியும் -- சீனா சிதைந்து முற்றிலும் அழிந்து போகக்கடவது என்றால், அந்த ஊகத்திற்கு எந்தவித அடிப்படையும் இல்லை; அதேபோல் சீன முதலாளித்துவ வர்க்கம் சீன வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளை அதன் சொந்த புரட்சிகரமல்லாத வழியில் தீர்ப்பதன் மூலம் தன் திறனை நிரூபிக்கும் என்பதாகும். இந்தக் கடைசி மாற்றுக் கருத்து, "நான்கு வர்க்கங்களின் கூட்டு" என்னும் தத்துவார்த்தவியலார்களின் கருத்து அல்லவா, அவர்கள்தானே கம்யூனிஸ்ட் கட்சியை முதலாளித்துவத் தளையின்கீழ் நேரடியாக விரட்டினர், இப்பொழுது அதை நம்மீது சாட்டிவிடுகின்றனர்?

வரலாறு மீண்டும் தன்னைப் படைத்துக் கொள்ளுகிறது. 1923 தோல்வியின் பரப்பை புரிந்துகொள்ளாத குருடர்கள், ஒன்றரை ஆண்டு காலம் நம்மை ஜேர்மன் புரட்சி தொடர்பானதில் "கலைப்புவாதத்தை" கொண்டிருந்ததாக நம்மை குற்றம் சாட்டினர். ஆனால் இந்தப் படிப்பினைகூட, அகிலத்திற்கு பெரும் இழப்பைக் கொடுத்தாலும், அவர்களுக்கு எதையும் கற்பிக்கவில்லை. இப்பொழுது அவர்கள் தங்களது பழைய கைப்பொறிப்பு-முத்திரைகளை பயன்படுத்துகின்றனர்; ஜேர்மனி என்பதற்கு பதிலாக சீனா என்று கூறுகின்றனர். இன்று அவர்கள் "கலைப்புவாதிகளை" கண்டுபிடிப்பதற்கான தேவை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மிகவும் கடுமையாகி விட்டது; ஆனால் இப்பொழுது எவரேனும் இரண்டாம் சீனப் புரட்சியை "அழித்தார்கள்" என்றால் அது "கோமிண்டாங்" போக்கின் ஆசிரியர்கள்தாம்.

மார்க்சிசத்தின் வலிமை அதன் முன்கணிப்புத் திறனில் உள்ளது. இந்த விதத்தில் எதிர்ப்பாளர்கள் தான், முன்கூட்டி கண்டறிவதில் பெற்றுள்ள அதன் முழு உறுதிப்பாட்டை பின்வரும் அனுபவங்களினூடாக சுட்டிக்காட்ட முடியும். முதலில் கோமின்டாங் முழுவதையும் குறித்தல், பின்னர் "இடது" கோமின்டாங்கை குறித்தல், பின்னர் வுகான் அரசாங்கத்தை குறித்தல், இறுதியில் மூன்றாம் புரட்சி, அதாவது கன்டோன் எழுச்சி மீதான "அடைமானம்" தொடர்பானதாகும். ஒரு தத்துவார்த்தரீதியான சரியான தன்மைக்கு இன்னும் என்ன உறுதி அங்கு இருக்கக் கூடும்?

இதே சந்தர்ப்பவாத நிலைப்பாடுதான், முதலாளித்துவ வர்க்கத்திற்கு நிபந்தனையற்ற சரண் அடைதல் கொள்கை மூலம் புரட்சியின் முதல் இரு கட்டங்களிலும் கடுமையான தோல்விகளை ஏற்கனவே கொண்டுவந்திருந்தது; மூன்றாம் கட்டத்திலும் முதலாளித்துவ வர்க்கத்தின்மீது ஒரு சாகசவாத திடீர் தாக்குதல் கொள்கையாக "வளர்ச்சியுற்று" இவ்வாறு இறுதித் தோல்விக்கு வழிவகுத்தது.

தானே தன்மீது கொண்டுவந்த தோல்விகளை பாய்ந்து கடக்க நேற்று தலைமை அவசரப்படவில்லை என்றால், அது முதலில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைக்கு வெற்றி ஒரே மூச்சில் அடையப்படுவதில்லை என்றும், ஆயுதமேந்திய எழுச்சிப் பாதையை அடைவதற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்மீது அரசியல் செல்வாக்கை அடைவதற்கு இன்னமும் கடுமையான, இடைவிடாத மற்றும் மூர்க்கத்தனமான போராட்டத்தைக் கொண்ட காலகட்டங்கள் இன்னும் உள்ளது என்பதை விளக்கியிருக்க வேண்டும்.

செப்டம்பர் 27, 1927ல் கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் நிறை பேரவையில் நாம் கூறினோம்:

"இன்றைய நாளேடுகள் புரட்சிகர இராணுவம் Swatow வை ஆக்கிரமித்துள்ளதாக தகவல் கொடுத்துள்ளன. ஏற்கனவே பல வாரங்களாக Ho Lung, Yeh Ting ஆகியோரின் படைகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இந்தப் படைகளை பிராவ்தா புரட்சிகரப் படைகள் என்று அழைக்கிறது... ஆனால் நான் உங்களைக் கேட்கிறேன்: சீனப் புரட்சிக்கு முன் ஸ்வாட்டோவை கைப்பற்றிய புரட்சிகர இராணுவத்தின் இயக்கம் பற்றிய வருங்காலக் கருத்து எப்படி இருந்தது? இயக்கத்தின் முழக்கங்கள் என்ன? அதனுடைய வேலைத்திட்டம் என்ன? அதன் அமைப்பு வடிவங்கள் எப்படி இருக்க வேண்டும்? திடீரென ஜூலை மாதம் ஒரே நாளில் பிராவ்தா முன்வைத்த சீன சோவியத்துக்களுக்கு என்ன ஆயிற்று? கம்யூனிஸ்ட் கட்சியை கோமின்டாங்கிற்கு எதிராக முதலில் நிறுத்தாமல், சோவியத்துக்களுக்கும் ஒரு சோவியத் அரசாங்கத்திற்கும் மக்களிடையே கட்சியின் போராட்டம் இல்லாமல், விவசாயப் புரட்சி மற்றும் தேசிய விடுதலை என்ற முழக்கங்களின்கீழ் மக்களை சுயாதீனமாக திரட்டாமல், உள்ளூர் தொழிலாளர்கள், வீரர்கள், விவசாயிகளின் பிரதிநிதிகளுடைய சோவியத்துக்களை தோற்றுவித்து, அகன்றதாகவும் வலுவுடையதாகவும் செய்யாமல், Ho Lung, Yeh Ting இன் கிளர்ச்சியெழுச்சியானது, அவர்களின் சந்தர்ப்பவாதக் கொள்கையை தவிரவும் கூட, ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சாகசச்செயலாகத்தான், ஒரு போலி கம்யூனிஸ்ட் மக்னோ செயற்பாடாகத்தான் இருக்க முடியும்; அதன் சொந்த தனிமைப்படலுடன் மோதுவதற்கு தவறாது. இப்பொழுது அது மோதிச் சிதைந்து விட்டது.

கன்டோன் எழுச்சி ஒரு பரந்த, ஆழ்ந்த வகையில் Ho Lung, Yeh Ting இன் சாகசச்செயலை திரும்பச்செய்தலாக இருந்தது, முடிவற்ற பெரும் சோகம் ததும்பிய விளைவுகளைத்தான் அதிகமாகக் கொடுத்தது.

கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் பெப்ருவரி தீர்மானம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த திடீர்சதிவாத மனோநிலையை எதிர்த்து போராடுவதாக இருந்தது; அதாவது ஆயுத எழுச்சிகளை நோக்கிய போக்குகள் பற்றி. ஆனால் இந்தப் போக்குகள் 1925-27ன் முழு சந்தர்ப்ப வாதக் கொள்கைகளின் எதிர்விளைவுதான் என்று அது கூறவில்லை; அதேபோல் நடந்தது அனைத்தையும் மதீப்பீடு செய்யாமல், தந்திரோபாயத்தின் அடிப்படையை பற்றி வெளிப்படையான மதிப்பீடு செய்யாமல், ஒரு தெளிவான முன்னோக்கு இல்லாமல் மேலிடத்தில் இருந்து "நடக்கும் முறையை மாற்றுக" என்று வெளிவந்த, முற்றிலும் ஒரு இராணுவ உத்தரவின் தவிர்க்க முடியாத விளைவு என்றும் கூறவில்லை. ஹோ லுங்கின் முயற்சியும் கன்டோனின் எழுச்சியும் இந்த நிலைமைகளின் திடீர்சதிவாதத்திற்கான விளைநிலமாகத்தான் இருக்கமுடியுமே தவிர வேறுவிதமாக இருக்க முடியாது.

இப்படி திடீர்சதி வாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கு உண்மையான மாற்று மருந்து, தொழிலாளர்கள், வறிய விவசாயிகளின் ஆயுதமேந்திய எழுச்சியின் தலைமை, அதிகாரத்தைக் கைப்பற்றுதல், புரட்சிகர சர்வாதிகார அமைப்பை நிறுவுதல் ஆகியவை முற்றிலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோள்களில்தான் இருக்க வேண்டும் என்ற உண்மையை அறிதல் ஆகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இந்த முன்னோக்கு பற்றிய புரிதலை முற்றிலும் விளங்கிக்கொண்டு இருக்குமேயானால், எதிரியின் பதாகைகளின் பின்னே மதிப்பிழந்து துரத்திக்கொண்டு செல்லாமலும் அல்லது நகரங்களின் மீது இராணுவ திடீர்த்தாக்குதல்களை அல்லது பொறிகளால் அமைந்த ஆயுத எழுச்சிகளை முன் ஆயத்தமின்றி பயன்படுத்துவதற்கு சிறிதளவே விருப்பம் கொண்டிருக்கும்.

கட்டங்களை பாய்ந்து கடந்தலை ஏற்கவியலாமை மற்றும் திடீர்சதிவாதம் பற்றிய தீமை பற்றி மிக அருவமானவகையில் வாதிடுகிறது என்ற உண்மையால் மட்டுமே, கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் தீர்மானம் முற்றிலும் ஆண்மையற்ற வகையில் தன்னையே கண்டனம் செய்து கொள்ளுகிறது. இவ்விதத்தில் அது கன்டோன் எழுச்சி மற்றும் குறைந்த காலமே நீடித்த அது தோற்றுவித்த சோவியத் ஆட்சியின் வர்க்க உள்ளடக்கத்தை முற்றிலும் அலட்சியம் செய்கிறது. எதிர்த்தரப்பினராகிய நாங்கள் இந்த எழுச்சி தங்களுடைய "கௌரவத்தை" காப்பாற்றிக் கொள்ள எடுத்த முயற்சியில் தலைவர்களின் சாகசச்செயல் என்று கருதுகிறோம். ஆனால் ஒரு சாகசச்செயல்கூட சமூகத்தின் கட்டமைப்பினால் தீர்மானிக்கப்படும் சில விதிகளின்படிதான் வளர்ச்சியுற வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவு கொண்டுள்ளோம். எனவேதான் சீனப் புரட்சியின் வருங்காலக் கட்டங்களின் சிறப்பியல்புகளுக்கானதாக கன்டோன் எழுச்சியை பார்க்கிறோம். இந்த சிறப்பம்சங்கள் கன்டோன் எழுச்சிக்கு முன்னால் செய்யப்பட்ட எங்களது தத்துவார்த்த ஆய்வுடன் முழுமையாக ஒத்து உள்ளன. ஆனால் கன்டோன் எழுச்சி சரியானது என்றும் போராட்டச் சங்கிலியில் இயல்பான இழையே என்று நினைக்கும் கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவிற்கு கன்டோன் எழுச்சி பற்றி ஒரு தெளிவான வர்க்க குணாதிசயப்படுத்தல் எவ்வளவு அதிகம் கட்டாயமானது. ஆனால் நிறை பேரவை கன்டோன் நிகழ்வுகளை அடுத்து உடனடியாகக் கூடிய போதிலும் கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் தீர்மானத்தில் இதைப் பற்றி ஒரு சொல் கூட இல்லை; ஒரு தவறான கொள்கையை உறுதியாக பின்பற்றுகின்ற தற்போதைய கோமின்டேர்னின் தலைமை 1927 கன்டோன் எழுச்சி பற்றி அணுகுவதற்குக் கூட தைரியம் இல்லாமல், 1905 இனதும் மற்றும் இன்னும் பல ஆண்டுகளில் நடைபெற்றதாக கூறப்படும் கற்பனையான தவறுகள் பற்றி கவனம் செலுத்திக் கொள்ள தன்னை நிர்ப்பந்தித்துக்கொண்டுள்ளது என்பதற்கு இது மிகவும் நம்பிக்கைதரக்கூடிய நிரூபணம் அல்லவா? இதன் பொருள், வரைவு வேலைத் திட்டத்தில் இயற்றப்பட்ட கீழை நாடுகளின் புரட்சிக்கான வரைபட நகல்களை முற்றிலும் தூக்கிவீசிவிட்டது என்பதை காட்டிவிடும் என்பதாலாகும்.