line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 3: சீனப்புரட்சியை பற்றிய முன்னோக்குகளும் சுருக்கவுரையும்

 

Print part 3 on single page

8. விவசாயிகள் அகிலத்திலிருந்து கிடைத்த அனுகூலங்கள் கட்டாயம் ஆராயப்பட வேண்டும்.

எதிர்ப்புக்கு எதிராக வீசப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானவற்றில் ஒன்று, அல்லது அந்த முக்கியமானது, விவசாயிகளை பற்றி அது "குறைமதிப்பீடு" செய்தது எனக் கூறப்படுவதாகும். இந்தக் கருத்திலும், வாழ்க்கை அதன் பரிசோதனைகளை நடாத்தி தேசிய மற்றும் சர்வதேச வழிகளில் அதன் தீர்ப்பைக் கூறியுள்ளது. ஒவ்வொரு நிகழ்விலும் உத்தியோகபூர்வ தலைவர்கள் விவசாயிகள் சம்பந்தமானதில் பாட்டாளி வர்க்கத்தின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பீடு செய்து அதைக் கொள்ளையடித்த குற்றத்தை கொண்டிருந்தது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இவ்விதத்தில் பொருளாதார, அரசியல் துறைகளில் சர்வதேச அளவில் மிகப் பெரிய மாற்றங்களும், பிழைகளும் நடந்தன. 1923ல் இருந்து உள்நாட்டின் பிழைகளின் வேர்களாக, பாட்டாளி வர்க்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த அரசு தொழிற்துறையின் முக்கியத்துவத்தினை குறைமதிப்பீடு செய்வது தேசியப் பொருளாதாரம் முழுவதிலும் மற்றும் விவசாயிகளுடனான கூட்டிலும் இருந்தது. சீனாவில் விவசாயப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் திட்டவட்டமான மற்றும் முன்னணிப் பங்கை அறிந்து கொள்ள திறனின்மைமையால், புரட்சி தோல்விக்கு இட்டுச்செல்லப்பட்டது.

இதே நிலைப்பாட்டில் இருந்து விவசாயிகள் அகிலத்தின் (Krestintern) முழுப் பணியையும் ஆராய்ந்து மதிப்பீடு செய்வது அவசியமாகும்; ஆரம்பத்தில் இருந்தே இது ஒரு பரிசோதனையாகத்தான் இருந்து வருகிறது -- மேலும், இந்த பரிசோதனை மிகப் பெரும் கவனத்தையும் கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றப்பட வேண்டிய தன்மையையும் கொண்டிருந்தது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுவது கடினம் அல்ல.

அதன் முழு வரலாறு, இருக்கும் நிலைமைகள் இவற்றின் காரணமாக விவசாயி வர்க்கம் அனைத்து வர்க்கங்களை காட்டிலும் மிகக் குறைந்த சர்வதேசியத்தைத்தான் கொண்டிருக்கிறது. பொதுவாக தேசிய தனித்தன்மைகள் என்று கூறப்படுபவை தங்களின் முக்கிய ஆதாரவளங்களை துல்லியமாக விவசாயிகளிடம் தான் கொண்டுள்ளன. விவசாயிகள் மத்தியில் இருந்து, ஏழை விவசாய அரைப்பாட்டாளி வர்க்க வெகுஜனங்கள்தான் சர்வதேசப் பாதைக்கு வழிநடத்தப்பட முடியும்; அதுவும் கூட பாட்டாளி வர்க்கம்தான் அவர்களை வழிநடத்த முடியும். எந்தக் குறுக்குவழியும் வர்க்கங்களுடன் விளையாடுவதற்கு ஒப்பாகும்; அதன் பொருள் பாட்டாளி வர்க்கத்திற்கு ஊறு விளைவித்தல் என்பது ஆகும். முதலாளித்துவத்தின் செல்வாக்கில் இருந்து விவசாயிகள் பாட்டாளி வர்க்கத்தால் பிரித்தெடுக்கப்பட முடிந்தால்தான் அதனை சர்வதேசிய அரசியலுக்கு ஈர்க்க முடியும்; அதுவும் விவசாயிகள், பாட்டாளி வர்க்கத்தை தன் கூட்டு என்றுமட்டும் கருதாமல் தலைவன் என்று ஏற்றுக்கொண்டால்தான் முடியும். எதிரிடையாக, பல்வேறு நாடுகளின் விவசாயிகளை, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையை கடந்து மற்றும் தேசிய கம்யூனிஸ்ட் கட்சிகளை கருத்தில் கொள்ளாமல், ஒரு சுயாதீனமான சர்வதேச அமைப்பிற்குள் கொண்டுவரும் முயற்சிகள் முன்கூட்டியே தோல்வியில் போய் முடிந்தன. இறுதிப்பகுப்பாய்வில், அத்தகைய முயற்சிகள் ஒவ்வொரு நாட்டிலும் விவசாயத் தொழிலாளிகள் மற்றும் ஏழை விவசாயிகள் மீதான பாட்டாளி வர்க்கத்தின் மேலாதிக்கத்திற்கான போராட்டத்தை தீமைக்குத்தான் உட்படுத்தும்.

16ம் நூற்றாண்டின் விவசாய போர்களில் தொடங்கி, அதற்கும் முந்தைய காலத்தில் இருந்தே அனைத்து முதலாளித்துவ புரட்சிகள் மற்றும் எதிர்-புரட்சி நடவடிக்கைகளிலும், விவசாயிகளின் வேறுபட்ட பிரிவுகள் மகத்தான, சில நேரங்களில் தீர்க்ககரமான பங்கைக்கூட கொண்டிருந்தன. ஆனால் அது ஒருபோதும் ஒரு சுயாதீனமான பங்கை ஆற்றியது கிடையாது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ, விவசாயி வர்க்கம் எப்பொழுதுமே ஒரு அரசியல் சக்தியை மற்றொன்றுக்கு எதிராக ஆதரித்துள்ளது. அது தன்னை ஒரு சுயாதீன சக்தியாக, தேசிய அரசியல் கடமைகளை தீர்க்கும் திறன் உடையதாக அமைத்துக் கொண்டதில்லை. நிதி மூலதன சகாப்தத்தில், முதலாளித்துவ சமூகத்தில் துருவமுனைப்படல் நிகழ்வுப்போக்கு முதலாளித்துவ வளர்ச்சியின் முந்தைய கட்டங்களுடன் ஒப்பிடுகையில் பாரியளவில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் விவசாயிகளின் ஒப்பீட்டு பலம் குறைந்துவிட்டதே தவிர பெருகவில்லை என்பதாகும். எவ்விதத்திலும், ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய அளவில் விவசாயிகள் சுயாதீனமான அரசியல் நடவடிக்கைகளுக்கு தொழிற்துறை முதலாளித்துவ சகாப்தத்தையும் விட குறைவான திறனைத்தான் கொண்டிருந்தனர். (சர்வதேச அளவில் அதனைப்பற்றி குறிப்பிடத்தேவையில்லை). இன்று அமெரிக்காவின் விவசாயிகள் இன்னும் ஒப்புமை காணமுடியாத அளவில் நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட சுயாதீனமான அரசியல் பங்கை குறைவாகத்தான் கொண்டிருக்கின்றனர். ஜனரஞ்சகவாத இயக்கத்தின் அனுபவம் காட்டுகிறவாறு, விவசாயிகள் ஒரு சுயாதீனமான தேசிய அரசியல் கட்சி ஒன்றை அமைத்துக்கொள்ளவும் முடியாது, அமைத்துக்கொள்ளவும் இல்லை.

போரினால் ஏற்பட்ட பொருளாதார சரிவின் விளைவாக ஐரோப்பாவில் விவசாயத்திற்கு கொடுக்கப்பட்ட ஒரு தற்காலிக, ஆனால் தீவிர ஊக்கம், "விவசாயிகளின்" சாத்தியமான பங்கு பற்றிய பொய்த் தோற்றங்களுக்கு வழிவகுத்தது; அதாவது பூர்ஷ்வா போலி-விவசாயிக் கட்சிகள் வார்த்தைஜாலங்களால் தங்களை பூர்ஷ்வா கட்சிகளுக்கு எதிராக நிலைநிறுத்த முயன்றன. பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையேயான புதிய உறவுகளை மற்றும் விவசாயிகளுக்கும் பூர்ஷ்வாவிற்கும் இடையேயான உறவுகளை பரிசோதிக்கும் பொருட்டு போருக்குப் பிந்தைய ஆண்டுகளின்போது விவசாயிகனின் கிளர்ச்சி சூறாவளிப் புயலாய் இருந்த காலகட்டத்தில் ஒருவர் விவசாயிகள் அகிலம் என்ற அமைப்பை ஒழுங்கமைக்கும் பரிசோதனையில் அபாயகரமான நிலையை எடுக்க முடியும் என்றால், தீமை மிகுந்த அதன் குறைபாடுகளை அம்பலப்படுத்தவும் அதன் சாதகமான அம்சங்களை சுட்டிக்காட்ட ஒரு முயற்சி எடுக்கவும் இன்று விவசாயிகள் அகிலத்துடனான ஐந்து ஆண்டு காலம் அனுபவத்தில் தத்துவார்த்த மற்றும் அரசியல் இருப்பு நிலைக் குறிப்பை எடுப்பது மிகவும் தாமதப்படுத்த முடியாத கடைசி நேர அவசியமாகும்.

எப்படி பார்த்தாலும் எமது முடிவு மறுக்கப்படுவதற்கு இல்லை. பல்கேரியா, போலந்து, ருமேனியா, யூகோஸ்லேவிய (அதாவது, அனைத்து பின்தங்கிய நாடுகளினதும்) "விவசாயி" கட்சிகளின் அனுபவம், மற்றும் எமது சமூகப் புரட்சியாளர்களின் அனுபவம், மற்றும் கோமின்டாங்கின் புதிய அனுபவத்தை (இரத்தம் இன்னும் சூடாகத்தான் உள்ளது) பார்த்தாலும், முன்னேற்றமடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமான பரிசோதனைகளைப் பார்த்தாலும், குறிப்பாக லா பொலெட்டே -பெப்பர் (LaFollettee-Pepper) அமெரிக்காவில் செய்த பரிசோதனையை பார்த்தாலும், அனைத்துமே ஐயத்திற்கு இடமின்றி முதலாளித்துவத்தின் வீழ்ச்சி சகாப்தத்தில், முதலாளித்துவத்தின் எழுச்சி சகாப்தத்திலும் பார்க்க ஒரு சுயாதீனமான, புரட்சிகரமான, முதலாளித்துவ-எதிர்ப்பு விவசாயிகள் கட்சிகள் வெளிப்படுவதற்கான காரணங்கள் குறைவு என்றுதான் காட்டுகின்றன.

"ஒரு நகரம் கிராமத்துடன் சமன்படுத்தப்பட முடியாது; ஒரு கிராமம் தற்போதைய சகாப்தத்தின் வரலாற்று சூழ்நிலையில் நகரத்துடன் சமன்படுத்தப்பட முடியாதது ஆகும். நகரம்தான் தவிர்க்க முடியாமல் கிராமத்தை வழிநடத்தும், கிராமம் தவிர்க்க முடியாமல் நகரத்தைப் பின்பற்றும். இதில் ஒரே கேள்வி நகரத்தின் வர்க்கங்களில் எது கிராமத்தை வழிநடத்திச் செல்லும் என்பதுதான்." [19]

கீழை நாட்டுப் புரட்சிகளில் விவசாயிகள் இன்னமும் முக்கிய பங்கை கொண்டுள்ளனர்; ஆனால், மீண்டும் இந்தப் பங்கு வழிநடத்துவதாகவோ, சுயாதீனமாகவோ இருக்காது. கூப்பே, க்வாங்ருங் அல்லது வங்காளத்தில் இருக்கும் வறிய விவசாயிகள் ஷங்காய், கன்டோன், ஹான்கோ, கல்கத்தா தொழிலாளர்களை ஆதரித்தால்தான் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஒரு பங்கை வகிக்க முடியும். அது ஒன்றுதான் புரட்சிகர விவசாயி ஒரு சர்வதேசப் பாதைக்கு வரும் வழியாகும். கூப்பேயில் இருக்கும் விவசாயிக்கும் காலிசியா அல்லது டோப்ருட்ஜா, எகிப்திய விவசாயகுடிமக்களுக்கும் மற்றும் அமெரிக்க விவசாயி ஆகியோரிடையே ஒரு நேரடிப் பிணைப்பை ஏற்படுத்துவது என்பது பயனற்ற முயற்சியாகத்தான் போகும்.

இந்த அரசியல் தன்மையில்தான் நேரடி இலக்கிற்கு பயன்படாத எதுவும் வேறொரு இலக்குகளின் கருவியாக தவிர்க்க முடியாமல் ஆகும், அடிக்கடி ஒருவர் விழைவதற்கு மாறாக. விவசாயிகளை நம்பியுள்ள கட்சி அல்லது அதன் நம்பிக்கையை பெற முயலும் ஒரு பூர்ஷ்வா கட்சி தன்னுடைய சொந்த நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பை நாடுவதற்கு விவசாயிகள் அகிலத்தித்தினுள் (கம்யூனிச அகிலத்தினுள் அவ்வாறு செய்ய முடியாவிட்டாலும்) குறைந்த அல்லது நீடித்த காலத்திற்கு தனக்கு காப்புறுதி தேட முயற்சித்ததை நாம் பார்க்கவில்லையா? இதேபோல் பூசேல் தொழிற்சங்க தளத்தில் தன்னை ஒரு ஆங்கிலோ-ரஷ்ய குழுவின் மூலம் பாதுகாத்துக் கொள்ள முற்பட்டார். லா பொலெட்டே விவசாயிகள் அகிலத்தில் பதிவு செய்துகொள்ள முயற்சிக்கவில்லை ஏனென்றால், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் வலுவற்று இருந்தது என்பதுடன் அவர்களின் அன்றைய தலைவர் பெப்பர் எவரும் அழைக்காமல், எவராலும் கேட்கப்படாமல் லா பொலெட்டேயைத் தழுவினார் என்பதாலாகும். குரோசிய பணக்கார விவசாயிகளின் வங்கியாளர்-தலைவரான ராடிக் மந்திரிசபையில் சேர்வதற்கு, தன்னுடைய முகவரி சீட்டை (Visiting Card) விவசாயிகள் அகிலத்தில் கொடுப்பது அவசியம் எனக் கண்டார். கோமின்டாங் இன்னும் மேலே சென்று விவசாயிகள் அகிலத்தில் மட்டும் இல்லாமல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கழகத்திலும் இடத்தை தேடிக் கொண்டது; மேலும் கம்யூனிச அகிலத்தின் கதவை தட்டியது, அது சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவின் நல்லாசிகளுடன் வரவேற்கப்பட்டது; ஒரே ஒரு வாக்குதான் அதற்கு எதிராக அளிக்கப்பட்டது.

சமீபத்திய ஆண்டுகளின் முக்கிய அரசியல் நிகழ்வுகளின் உயர் கூறுபாடாக உள்ளது Profintern [தொழிற்சங்கங்களின் சிவப்பு அகிலம் - Red International of Labour Unions] ஐ தகர்ப்பதற்கு ஆதரவாக போக்குகள் மிகவும் வலுவாக இருந்த நேரத்தில் (அந்தப் பெயரே சோவியத் தொழிற்சங்கங்களின் சட்டங்களில் இருந்து நீக்கப்பட்டது), நாம் நினைவுகூரும் வகையில் எங்கும் உத்தியோகபூர்வ செய்தி ஊடகத்தில் Krestintern விவசாயிகள் அகிலத்தின் இம்மியும் பிசகாத வெற்றிகள் பற்றிய வினாக்கள் எழுப்பப்படவில்லை.

ஆறாம் அகல் பேரவை விவசாயிகளின் "அகிலத்தின்" பணியை ஒரு பாட்டாளி வர்க்க சர்வதேசிய நிலைப்பாட்டில் இருந்து கட்டாயம் பரிசீலித்தாக வேண்டும். இந்த நீடித்த பரிசோதனைக்கு ஒரு மார்க்சிச இருப்புநிலைக் குறிப்பை வரைவதற்கு தக்க காலம் வந்துவிட்டது. ஏதேனும் ஒருவிதத்தில் இருப்புநிலை குறிப்பு கம்யூனிச அகிலத்தின் வேலைத்திட்டத்தில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். தற்போதைய வரைவில் ஒரு எழுத்து கூட விவசாயிகள் அகிலத்தில் இருக்கும் "மில்லியன் கணக்கானோர்" பற்றி மூச்சுவிடவில்லை, அல்லது, அவ்வாறு ஒன்று இருப்பது பற்றிக் கூடக் கூறவில்லை.

முடிவுரை

வரைவு வேலைத்திட்டத்தில் இருக்கும் அடிப்படை கருத்தாய்வுகள் பற்றி ஒரு விமர்சனத்தை நாம் அளித்திருக்கிறோம்; நேரத்தின் தீவிர அழுத்தம் நம்மை அனைத்துக் கூறுபாடுகளையும் பற்றி எழுதவிடாமல் தடுக்கிறது. இந்த வேலைக்கு நமக்குக் கிடைத்தது இரு வாரங்கள்தான். எனவே சமீப காலத்திய புரட்சிகர மற்றும் உள்கட்சி போராட்டங்களுடன் நெருக்கமாக பிணைந்துள்ள மிக முக்கியமான வினாக்களுடன் மட்டும் நம்மை கட்டுப்படுத்திக் கொண்டோம்.

"கலந்துரையாடல்கள்" என அழைக்கப்படுவது பற்றி எமது முந்தைய அனுபவத்தின் காரணமாக, சொற்றொடர்கள் உள்ளடக்கத்தில் இருந்து அகற்றப்பட்டு கூறப்படுதல், பேனாவில் இருந்து நழுவிய கருத்துக்கள் ஆகியவை "ட்ரொட்ஸ்கிசத்தை" சிதைக்கும் புதிய தத்துவங்களின் ஊற்றெடுக்கும் ஆதாரங்களாக மாறக்கூடும் என்பதை நாம் அறிவோம். ஒரு முழுக் காலமும் இவ்வகையான வெற்றிகரமான தம்பட்டங்களால் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுதும் பெரும் அமைதியுடன் இழிந்த தத்துவார்த்த தேள்கள் நம் மீது பாய்ந்து திடீரென்று கொட்ட இருப்பதை காண உள்ளோம்.

தற்செயலாய், வரைவு வேலைத்திட்டத்தின் ஆசிரியர்கள் புதிய விமர்சனரீதியான, விளக்க கட்டுரைகளை சுற்றுக்கு விடுவதற்கு பதிலாக பழைய கட்டுரை 58 ஐ மேலும் விரிவாக்க விரும்புவது நிகழலாம். இத்தகைய வாதம் நமக்கு கொஞ்சம்கூட பொருந்ததாது என்பதை கூறத் தேவையில்லை.

ஆறாம் உலக அகல்பேரவை ஒரு வேலைத்திட்டத்தை ஏற்கும் பணியை எதிர்கொண்டுள்ளது. எமது இந்த முழுப்பணியினூடாக புக்காரின் மற்றும் ஸ்ராலின் இயற்றியுள்ள வரைவை, வேலைத்திட்டத்தின் அடிப்படையாக ஏற்கக்கூடிய வாய்ப்பு சிறிதும் இல்லை என்பதைத்தான் நாம் நிரூபிக்க முற்பட்டுள்ளோம்.

தற்போதைய கணம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியினதும் மற்றும் முழு கம்யூனிச அகிலத்தினதும் வாழ்வில் ஒரு திருப்பு முனையாகும். எமது கட்சியின் மத்திய குழுவின் சமீபத்திய விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகள் மற்றும் கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் நிறைபேரவை செயல்களிலும் இது நன்கு புலனாகும். இந்த நடவடிக்கைகள் முற்றிலும் போதாததுடன் தீர்மானங்கள் முரண்பாடுகள் உடையனவாக உள்ளன. அவற்றுள் சில கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக்குழுவின் பெப்ருவரி தீர்மானம் சீனப் புரட்சி பற்றி குறிப்பிட்டிருப்பது போல், சாராம்சத்திலேயே பெரும் தவறாகும். ஆயினும்கூட இத்தீர்மானங்கள் அனைத்திலும் இடதிற்கு திரும்பும் ஒரு போக்கு உள்ளது. அதை எவ்விதத்திலும் நாம் மிகைமதிப்பீடு செய்வதற்கு அடிப்படை இல்லை; இன்னும் கூடுதலான முறையில் அது வலது பகுதியை பாதுகாக்கும் அதேவேளை, புரட்சிகரப் பிரிவை அழிக்கும் நடவடிக்கையில் கையோடு கைகோர்த்துச் செல்கிறது. இவ்வளவு இருந்த போதிலும், பழைய நிலைப்பாட்டினால் தோற்றுவிக்கப்பட்ட தேக்க நிலையால் நிர்பந்திக்கப்பட்ட இந்த இடதுபுறப் போக்கை ஒதுக்கும் கருத்தை நாம் ஒரு கணம் கூட வரவேற்கவில்லை. உண்மையான புரட்சியாளர் ஒவ்வொருவரும் தன்னுடைய நிலைமையில் கட்சிக்கு அதிக இடர்ப்பாடுகளையும் அதிர்வுகளையும் கொடுக்காமல் தன்னுடைய சக்தியை முழுமையாக திரட்டி இந்த கோணல்மாணலான இடது போக்கை ஒரு புரட்சிகர லெனினிச போக்காக மாற்ற அனைத்தையும் செய்ய உதவுவர். ஆனால் இன்று நாம் இவற்றிடம் இருந்து வெகு தொலைவில் உள்ளோம். தற்போது கம்யூனிச அகிலம் ஒருவேளை அதன் தீவிர வளர்ச்சி காலத்தை கடந்து கொண்டிருக்கக்கூடும்; இக்காலகட்டத்தில் பழைய போக்கு முழுமையாக அழிக்கப்படவே இல்லை, அதேவேளை புதிய போக்கோ விரோதப் போக்கு உடைய கூறுபாடுகளின் வெடிப்புக்களை கொண்டுவருகிறது. வரைவு வேலைத்திட்டம் மொத்தத்திலும், ஒரளவு பகுதியாகவும் இந்த இடைமருவு நிலையை பிரதிபலிக்கிறது. ஆயினும்கூட அத்தகைய காலங்கள் தங்கள் இயல்பை ஒட்டி, எதிர்வரும் பல ஆண்டுகளுக்கும் எமது சர்வதேச கட்சியின் நடவடிக்கையை உறுதி செய்வதற்கான ஆவணங்களை விரிவாக்கம் செய்வதற்கு மிகக் குறைந்த சாதக தன்மையைத்தான் கொண்டுள்ளன. கடினமாக இருந்தாலும், எமது நேரத்திற்கு காத்திருக்க வேண்டும்--ஏற்கனவே அதிக நேரம் இழக்கப்பட்டுவிட்டது என்றாலும் குழம்பிய நீர், தெளிவதற்கு அனுமதிக்க வேண்டும். குழப்பம் கட்டாயம் கடக்கப்பட்டு, முரண்பாடுகள் கட்டாயம் அகற்றப்பட்டு, புதிய பாதை உறுதியான வடிவைக் கொள்ளும்.

காங்கிரஸ் நான்கு ஆண்டுகளாக கூட்டப்படவில்லை. ஒன்பது ஆண்டுகளாக கம்யூனிச அகிலம் எந்த உறுதிப்பாடான வேலைத்திட்டமும் இல்லாமல் இருந்து வருகிறது. தற்போதைய கணத்தில் இருந்து ஒரே வெளியேறும் வழி இதுதான்: இன்று தொடங்கி ஓராண்டு காலத்திற்குள் ஏழாம் உலக மாநாடு கூட்டப்படட்டும்; அது கம்யூனிச அகிலத்தின் முழு தலைமை அதிகாரங்களையும் கைப்பற்றும் முயற்சிகளுக்கு ஒரேவழியாக முற்றுப் புள்ளி வைக்கும்; ஒரு இயல்பான ஆட்சி மீண்டும் நிலைநிறுத்தப்படட்டும்; அத்தகைய ஆட்சி வரைவு வேலைத்திட்டத்தின் மீது உண்மையான விவாதத்தை அனுமதிக்கட்டும், திரட்டுவாத வரைவை எதிர்ப்பதற்கு மற்றொரு மார்க்சிச லெனினிச வரைவை முன்வைக்க எங்களை அனுமதிக்கட்டும். கம்யூனிச அகிலத்தில் மறைக்கப்பட்ட வினாக்கள் கட்டாயம் இருக்க கூடாது; அதன் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் அதன் செய்தி ஊடகத்திலும் அப்படித்தான் இருக்க வேண்டும். இந்த ஆண்டு முழு மண்ணும் மார்க்சிசம் என்ற கலப்பையால் நன்கு உழப்படட்டும். அத்தகைய உழைப்பின் விளைவாகத்தான் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச கட்சி ஒன்று ஒரு வேலைத்திட்டத்தை, கலங்கரை விளக்கத்தை அடைய முடியும்; அது தன்னுடைய ஊடுருவிச் செல்லும் கதிர்களால் ஒளியை சிதறி வழிகாட்டும் விளக்காக இருப்பதுடன், எதிர்காலத்திற்கான நம்பிக்கையான ஒளிவீச்சை தொலைதூரம் வீசும்.

Notes

19. Lenin, Works, Vol.XVI, The Year 1919, p.442.