பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்துவதற்காக இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்தார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதற்காக இந்தியாவிற்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்கொண்டார். தீவின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அவரது ஆட்சியின் அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் புது டெல்லியுடன் உறவுகளை வலுப்படுத்த விக்கிரமசிங்க ஆர்வமாக உள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (வலது) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்தியாவில் புது டில்லியில், 21 ஜூலை 2023 வெள்ளிக்கிழமை வரவேற்கிறார். [AP Photo/Manish Swarup]

ஒருபுறம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இந்தியாவிற்கும், மறுபுறம் சீனாவிற்கும் இடையே தீவிரமடைந்துவரும் பூகோள-அரசியல் பதட்டங்களை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுடன் இலங்கையை அணிசேர்ப்பதற்கும் இலங்கையில் பெய்ஜிங்கின் செல்வாக்குக்கு குழிபறிக்கவும், மோடி ஆட்சி கொழும்பு மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.

விக்கிரமசிங்க ஒரு இழிபுகழ்பெற்ற அமெரிக்க சார்பு அரசியல்வாதியாக இருக்கும் அதே வேளை, சீனாவின் பக்கம் சாய்ந்தவராக அறியப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) அவரது நிர்வாகம் சார்ந்திருப்பது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்தியா இலங்கையில் தனது பொருளாதார செல்வாக்கை பெரிதும் மேம்படுத்தும் பல பொருளாதார மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது. மோடி, சீனாவுடன் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் இந்தியாவின் நலன்களுக்கு கொழும்பு ஆதரவு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து விக்கிரமசிங்கவுடன் மூடிய கதவுகளுக்குள் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

சீனாவின் பிரச்சினை எழுப்பப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா, “இந்த சவால்கள் [மோடி மற்றும் விக்ரமசிங்க இடையேயான] பேச்சுவார்த்தையின் போது சரியான முறையில் கொண்டு வரப்பட்டன,” என்றார்.

சீனா உட்பட கிழக்கு ஆசியாவுடன் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவை இணைக்கும் கடல் பாதைகளை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலில் இலங்கை மூலோபாய ரீதியாக அமைந்துள்ளது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான தீவிரமடைந்து வரும் அமெரிக்கத் தலைமையிலான போருக்கு ஏற்ப, சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்பில் இந்திய துணைக்கண்டத்தில் மூலோபாய கூட்டாண்மைகளை வாஷிங்டன் பலப்படுத்தி வருகிறது. இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் வாஷிங்டனின் முக்கிய பங்காளியாக புது டெல்லி இருக்கின்றது. போர் ஏற்பட்டால் சீனாவுக்கு எண்ணெய் உட்பட பொருட்களைத் தடுப்பதில் இந்திய சமுத்திரத்தின் மீதான கட்டுப்பாடு முக்கியமானது என்று இரு நாடுகளும் கணக்கிடுகின்றன.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, மோடியும் விக்கிரமசிங்கவும், “இணைப்பை ஊக்குவித்தல், சுபீட்சத்திற்கு ஊக்கமளித்தல்: இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டாண்மை நோக்கு” என்ற தலைப்பிலான ஆவணத்தை ஏற்றுக்கொண்டனர். இது வான், கடல், மின்சாரம், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் நிதி “இணைப்பை” வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த ஆவணத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே அதிக திறன் கொண்ட ஒன்றோடொன்று இணைந்த மின் கட்டமைப்பு, சூரிய சக்தி திட்டம் மற்றும் எல்.என்.ஜி. (திரவ இயற்கை எரிவாயு) உள்கட்டமைப்பு மற்றும் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு குழாய் இணைப்பு ஆகியவை அடங்கும். இலங்கையின் பிரதான துறைமுக நகரமான திருகோணமலையை தொழில்துறை மையமாக அபிவிருத்தி செய்வதற்கும் கொழும்பு, திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் ஏனைய நகரங்களில் துறைமுகம் மற்றும் பண்ட போக்குவரத்து இடம்மாறல் உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதற்கும் இது முன்மொழியப்பட்டது.

இந்த விரிவான “அபிவிருத்தி” திட்டங்கள், இந்திய பெருவணிகத்தின் நலனுக்காக இலங்கையில் கிடைக்கும் வளங்கள் மற்றும் வணிக வாய்ப்புகளை சுரண்டுவதற்கும் தீவை அதன் புவிசார் அரசியல் பிடியில் மேலும் இழுப்பதற்குமான மோடி அரசாங்கத்தின் முயற்சிகளை சுட்டிக்காட்டுகின்றன.

குறிப்பிடத்தக்க வகையில், கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையம் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் போன்ற இலங்கையிலான அதானியின் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக, பிரபல இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியை விக்கிரமசிங்க சந்தித்தார்.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உக்கிரமடைந்த இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, வானளவு உயர்ந்த பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் நீண்ட மணிநேர மின்வெட்டுக்கும் எதிரான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களும் வெடிப்பதற்கும் வழிவகுத்தது.

இந்த வெகுஜன இயக்கம் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்தியது. இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு, விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட போதும், இந்தக் காலகட்டம் முழுவதும் புதுடில்லி நிதி உதவியை வழங்கியது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, கொழும்பில் பெய்ஜிங்கின் செல்வாக்கை ஓரங்கட்டும் நோக்கில், இந்தியா 4 பில்லியன் டொலர் நீண்ட கால கடனை வழங்கியது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனைப் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு புது டில்லியும் ஆதரவளித்து உத்தரவாதம் அளித்தது.

விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள், இலங்கையின் பெரும் வர்த்தகர்களின் சில பிரிவுகளை விழிப்படையச் செய்துள்ளன. இந்தப் பிரிவினர் இந்த உடன்படிக்கைகளின் சர்வதேச விளைவுகள் மற்றும் பொருளாதார பாதகங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.

இலங்கையின் பெருவணிகத்தின் ஊதுகுழலான டெயிலி எப்ஃடி வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கை, “இத்தகைய அரசியல் அழுத்தத்தின் கீழ் திட்டங்களை வழங்குவதில் உள்ள நியாயமற்ற தோல்வி, நியாயமான போட்டியை நாடும் இலங்கையில் இயங்கும் பெரிய சீன நிறுவனங்களுக்கு நிச்சயமாக ஒரு தடுப்பு சமிக்ஞையை ஏற்படுத்தும் என்று ஆதாரங்கள் எச்சரித்துள்ளன.” என்று கூறியது.

ஒரு பெரிய எல்.என்.ஜி. திட்டத்திற்கான அசல் ஒப்பந்தமானது முதலில் ஒரு டெண்டர் செயல்முறைக்குப் பிறகு சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதுடன் 2022 செப்டம்பர் முதல் தயாராக உள்ளதுடன், அமைச்சரவை ஒப்புதலே தாமதிக்கப்படுகின்றது. நிலுவையில் உள்ளது என்று கட்டுரை குறிப்பிட்டது. இந்த ஒப்பந்தம், “சீனாவை இலங்கையின் எல்.என்.ஜி. வாய்ப்பில் இருந்து வெளியேற்றி” இப்போது நிறுத்தப்படலாம். புது தில்லியின் நோக்கமும் இதுவாகவே இருந்தது, என அந்த செய்தி கூறியது.

ஜூலை 22 அன்று டெய்லி மிரர் நாளிதழின் ஆசிரியர் தலையங்கம், “ஜனாதிபதியின் இந்திய விஜயம் மற்றும் மூலோபாய நலன்களை சமநிலைப்படுத்துதல்” என்ற தலைப்பில் கருத்துரைத்தது: “இந்தியா பல்வேறு காலங்களில் எங்களுக்கு உதவிய வரலாற்றைக் கொண்டுள்ளது என்பது உண்மையாக இருந்தாலும், எரிசக்தி திட்டங்கள் மற்றும் மின் கட்டமைப்புகள் மூலமான அதனுடனான அதிக இணைப்பு இருப்பது நன்றாகத் தோன்றலாம். ஆனால் நமது பொருளாதாரத்தின் மூலோபாயப் பிரிவுகள் வெளிநாட்டு ஆதாரங்களைச் சார்ந்து இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். யாருடைய இசைக்கு நடனம் ஆடினாலும் பரவாயில்லை, ஆனால் நடனம் நம்முடையதாக இருக்க வேண்டும், அவர்களுடையதாக இருக்க கூடாது.”

மோடி அரசாங்கம், விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கைகளை முறுக்குவதற்காக தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான இலங்கையின் இனவாத பாரபட்சங்களையும் பயன்படுத்துகிறது.

அவர்களின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, “இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று மோடி வஞ்சத்தனமாகக் கூறினார். இந்த வார்த்தைகள், இந்தியாவில் சிறுபான்மையினரை தொடர்ந்து இரத்தக்களரியில் ஒடுக்கி வரும் பா.ஜ.க. அரசாங்கத்தின் தீவிர வலதுசாரி இந்து மேலாதிக்கவாத தலைவரிடமிருந்து வந்தவை ஆகும்.

இலங்கையில் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் மீது மோடி அரசாங்கத்திற்கோ ஏனைய இந்திய ஆளும் உயரடுக்கிற்கோ எந்த அனுதாபமும் கிடையாது. பல தசாப்தங்களாக நடந்த தமிழர் விரோத ஆத்திரமூட்டல்களின் உச்சக்கட்டமாக நடந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் 26 ஆண்டுகால இனவாதப் போரை அவர்கள் ஆதரித்தனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்த அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் மோடி அழைப்பு விடுத்தார். இந்த உடன்படிக்கையின் கீழ், விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்க, இந்திய அமைதி காக்கும் படைகள் இலங்கையின் வடக்கு கிழக்கிற்கு அனுப்பப்பட்டு, தெற்கில் மக்கள் எதிர்ப்பை அடக்குவதில் கவனம் செலுத்த கொழும்பை அனுமதித்தது.

முன்மொழியப்பட்ட இந்த திருத்தமானது, தமிழ் முதலாளித்துவத்தின் நிலைப்பாட்டை உயர்த்தும் வகையில், தீவின் இணைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாக இருந்தது. எவ்வாறாயினும், சிங்கள பேரினவாத குழுக்கள் தமிழ் உயரடுக்கிற்கு எந்த அதிகாரப் பகிர்வும் வழங்குவதை எதிர்த்து, தமிழர் விரோத இனவாதத்தில் வேரூன்றியிருக்கும் அடுத்தடுத்த கொழும்பு அரசாங்கங்கள் மாகாணங்களுக்கு பெயரளவு அதிகாரங்களை மட்டுமே வழங்குவதை உறுதிசெய்தன.

கடந்த காலங்களைப் போலவே, மோடியின் அறிக்கைகள், கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, வாஷிங்டன் மற்றும் புதுடில்லியின் புவிசார் அரசியல் நலன்களை ஆதரிக்கும் இலங்கை தமிழ் தேசியவாதக் கட்சிகளை பயன்படுத்திக்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

விக்கிரமசிங்க இந்தியாவிலிருந்து திரும்பிய உடனேயே, மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வது குறித்து பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.

வாஷிங்டனும் புது தில்லியும் சீனாவைத் தனிமைப்படுத்த முயல்கின்றன என்பதை பெய்ஜிங் தீவிரமாக உணர்ந்துள்ள அதே நேரத்தில், பெய்ஜிங் பிராந்தியத்தில் தனது உறவுகளை வளர்த்து வருகிறது. இது கடந்த ஆண்டு இலங்கையின் இரண்டாவது பிரதான வர்த்தக பங்காளியாக இருந்த அது, சுமார் 7 பில்லியன் டொலர் கடன்களை வழங்கியதுடன் பெரிய முதலீட்டு திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

விக்கிரமசிங்க இந்தியாவில் இருந்தபோது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் சிரேஷ்ட உறுப்பினரான யுவான் ஜியாஜூன் தலைமையிலான சீனக் குழு இலங்கைக்கு விஜயம் செய்தது. முன்னாள் ஜனாதிபதியும் ஆளும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும் இந்தக்குழு சந்தித்துள்ளது. இந்த கலந்துரையாடல்களின் விவரங்கள் கிடைக்கப்பெறாத நிலையில், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு மீதான மோடி ஆட்சியின் தீவிரமான அழுத்தம், சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ தயாரிப்புகளின் முன்னேறிய கட்டத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் இந்தியா நெருக்கமாக ஈடுபட்டுள்ளது.

கடந்த நவம்பரில், “எங்களுக்கு (இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில்) வல்லரசு போட்டி வேண்டாம்” என்று விக்கிரமசிங்க,அறிவித்தார். ஆனால் கடந்த வாரம் மோடியுடனான தனது கூட்டு செய்தியாளர் சந்திப்பில், “இந்தியாவின் வளர்ச்சி அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்று இந்தியாவை நோக்கிய தனது நோக்குநிலையை தெளிவாக்கினார்.

அமெரிக்காவும் இந்தியாவும் தெற்காசியாவையும் இந்தியப் பெருங்கடலையும் சீனாவுடனான ஒரு பெரிய போர்க்களமாக மாற்றி வரும் நிலையில், இலங்கையின் “நடுநிலை” நிலைப்பாட்டை அவை பொறுத்துக்கொள்ளாது. அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான இத்தகைய மோதல் மனிதகுலத்திற்கு பேரழிவையே ஏற்படுத்தும்.

அத்தகைய பேரழிவைத் தடுப்பதற்கான ஒரே வழி, முதலாளித்துவ இலாப முறைக்கு எதிராகவும் சோசலிச அனைத்துலகவாதத்துக்காகவும் ஒரு உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதே ஆகும். இந்தியா, இலங்கை மற்றும் தெற்காசியா முழுவதும் உள்ள அனைத்து தொழிலாளர்களும், அத்தகைய போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதில் உலகெங்கிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் இணைந்து கொள்ள வேண்டும்.

Loading