அமெரிக்காவின் சமீபத்திய உயர் தொழில்நுட்ப தடைகளுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் கணினி சில்லுகள் (chips) மீதான தடையை மேலும் நீட்டிக்க, வெளியேறும் பைடென் நிர்வாகத்தின் முடிவுக்குச் சீனா உடனடியாக பதிலடியை வழங்கியிருக்கிறது. செவ்வாயன்று, அமெரிக்காவிற்கு தொடர்ச்சியான முக்கிய கனிமங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப் போவதில்லை என்று அது அறிவித்தது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள டோங்குவான் நகரின் ஹவுஜி டவுனில் உள்ள ஆல்கோ எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி மின்னணு சாதனங்களைப் பொருத்தும்போது. [AP Photo/Ng Han Guan]

இது காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி மற்றும் மிக கடினமான பொருட்கள் என அறியப்படும் பல்வேறு கலவைகளின் விநியோகத்தைத் தடை செய்யும். மேலும், இதைத் தவிர கணினி சில்லுகளின் உற்பத்தியில் முக்கிய கூறாக உள்ள கிராஃபைட்டின் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளையும் இறுக்கமாக்கும்.

இந்த முடிவை அறிவித்த சீன வர்த்தக அமைச்சகம், “தேசிய பாதுகாப்பு” அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட அமெரிக்க தடைகளுக்கு எதிராக ஒரு வலுவான அறிக்கை மூலம் பதிலடி கொடுத்துள்ளது.

“அமெரிக்கா தேசிய பாதுகாப்பின் கருத்தாக்கத்தை விரிவுபடுத்தி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களை அரசியல்மயமாக்கி ஆயுதமாக்கியுள்ளதுடன், ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தவறாகப் பயன்படுத்தியுள்ளது,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

“தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக” சீனாவின் பதிலளிக்கப்பட்ட தடைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும்.

வணிகத்துறை செயலாளர் ஜினா ரைமோண்டோவால் அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் சமீபத்திய தடைகள், அக்டோபர் 2022 மற்றும் அக்டோபர் 2023 இல் அமல்படுத்தப்பட்ட இரண்டு முந்தைய தடைத் தொகுப்புகளைத் தொடர்ந்து வந்தன. இவை “முன்னோடியானவை மற்றும் விரிவானவை” என்று ரைமோண்டோ கூறினார்.

“அவர்கள் தங்கள் இராணுவ நவீனமயமாக்கலில் பயன்படுத்தும் மிக மேம்பட்ட சில்லுகளை உருவாக்கும் சீன மக்கள் குடியரசின் திறனைக் குறைக்க அமெரிக்காவால் இதுவரை பயன்படுத்தப்பட்ட வலுவான கட்டுப்பாடுகளாக அவை இருக்கின்றன.”

அந்தத் துறையானது “நிறுவன பட்டியலில்” 140 சீன நிறுவனங்களை சேர்த்துள்ளது, அதன்படி அமெரிக்க நிறுவனங்கள் ஏற்றுமதி உரிமங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் ஆனால் அவற்றைப் பெறுவது இலகுவானதல்ல.

முந்தைய தடைகளைப் போலவே, சமீபத்திய அமெரிக்க நடவடிக்கைகள், “தேசிய பாதுகாப்பு” அடித்தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, அது ஒரு “உயர் பாதுகாப்பு, சிறிய நிலம்” (“high defence, small yard”) என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கூறியதற்கு இணங்க, அதாவது, அந்த நடவடிக்கைகள் இராணுவ வளர்ச்சியில் மட்டுமே நோக்கமாக உள்ளன, பரந்த பொருளாதாரத்தில் அல்ல.

ஆனால் இந்தத் தடைகள் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதைப் பகுப்பாய்வு மூலம் இந்தப் புனைக்கதை பரவலாக அம்பலப்படுத்தியுள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் அதன் மேலாதிக்கத்திற்கு மிகப்பெரும் இருத்தலியல் அச்சுறுத்தலாக அமெரிக்கா கருதுகிறது.

இந்தப் புதிய தடைகள், அமெரிக்கா முன்னர் குறிவைக்காத ஒரு பகுதியான சீனாவின் சில்லு (chip) தயாரிக்கும் திறனை இலக்கில் வைத்துள்ளது. ட்ரம்ப் தொடங்கிய முந்தைய தடைகளால் ஏறத்தாழ வணிகத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த தகவல்தொடர்பு பெருநிறுவனமான ஹூவாய் (Huawei), சமீபத்தில் ஒரு புதிய தொலைபேசியை வெளியிட முடிந்தது, அதில் அதிவசதிகள் இல்லையென்றாலும், சீனாவில் வடிவமைக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட ஒரு சிப்பைக் கொண்டிருந்தது. அது ஒரு கணிசமான முன்னேற்றத்தைக் குறிக்கின்றது.

சில்லு (chip) தயாரிக்கும் திறன்களை நேரடியாக இலக்கு வைக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி, பெக்கான் உலகளாவிய மூலோபாயங்கள் (Beacon Global Strategies) நிறுவனத்தின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நிபுணர் மேகன் ஹாரிஸ், பைனான்சியல் டைம்ஸிடம் இது பைடென் நிர்வாகம் முன்பு குறைத்து மதிப்பிட்ட ஒரு பகுதி என்று கூறியுள்ளார்.

“சீனாவின் நவீன குறைக்கடத்தி (semiconductor) தொழில்துறையை, அவர்களின் வேகமாக முன்னேறும் உள்நாட்டு தொழில்நுட்ப உற்பத்தித் திறனை கருத்தில் கொள்ளாமல் தடுக்க முயல்வது, ஒரு மீனவனுக்கு பெரிய தூண்டில்களை மறுப்பதன் மூலம் மட்டுமே அவன் பெரிய மீன்களைப் பிடிப்பதைத் தடுக்க முடியும் என நினைப்பது போன்றது. இறுதியில் அவன் தனது இலக்கை அடைந்துவிடுவான்,” என அவர் கூறினார்.

புதிய விதிமுறைகள் முன்னர் சேர்க்கப்படாத 24 வகையான சில்லு (chip) தயாரிக்கும் கருவிகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகின்றன. சில சந்தர்ப்பங்களில், தடைகளை நடைமுறைப்படுத்த அமெரிக்கா மற்ற நாடுகளின் ஆதரவை பெற வேண்டும். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட உதிரிப்பாகங்களைக் கொண்ட சில்லுகளைத் (chips) தடை செய்ய வேண்டும் என்று கோருவதன் மூலம் இதைச் செய்ய முடியும். மறுக்கும் நிறுவனங்கள் மீதும் அமெரிக்க தடைகள் விதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆனால் பல்வேறு நாடுகளிலிருந்து வெளிவரும் கூறுகளை உள்ளடக்கிய மிகவும் ஒருங்கிணைந்த உலகளாவிய செயல்பாடான சில்லு (chip) தயாரிப்பின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, புதிய விதிமுறைகளை உருவாக்குவதில் அமெரிக்காவிற்கு சிரமம் உள்ளது.

மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (Center for Strategic and International Studies- CSIS) ஒரு தொழில்நுட்ப ஆய்வாளரான கிரிகோரி ஆலென் நியூ யோர்க் டைம்ஸ் க்கு கூறுகையில், புதிய விதிகளின் சிக்கலான தன்மை —அவற்றை அமைக்கும் ஆவணம் 200 க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்டுள்ளது— அவற்றை வரைவதற்கு, சென்ற பேச்சுவார்த்தைகளின் தீவிரத்தை பிரதிபலித்துள்ளது என்றார்.

இந்தக் கட்டுப்பாடுகள் அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும், அவற்றின் சர்வதேச போட்டியாளர்களுக்குப் பொருந்தாது என்றால், இது சீனாவை திறம்பட கட்டுப்படுத்தாமல் தங்களையேத் தாக்கும் என்று அமெரிக்க நிறுவனங்கள் கவலை கொண்டுள்ளன.

ஆயினும்கூட, புதிய விதிகளின் சில பகுதிகள் அமெரிக்காவிற்கு “உண்மையில் ஒரு குறிப்பிடத் தக்க அதிகார விரிவாக்கம்” என்று ஆலன் கூறியுள்ளார்.

உயர்-தொழில்நுட்ப அபிவிருத்திக்கான அணுகலை சீனாவுக்கு மறுக்க அமெரிக்கா விரும்புகிறது என்றால், பின்னர், உயர்-தொழில்நுட்ப அபிவிருத்தியின் பூகோளரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட தன்மையின் காரணமாக, அது ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலி மீதும் அதன் மேலாதிக்கத்தைத் திணிக்க வேண்டும் என்பதோடு, அதன் கோரிக்கைகளை ஒவ்வொரு நாட்டுக்கு எதிராகவும் —நண்பனாக இருந்தாலும் சரி, எதிரிகளாக இருந்தாலும் சரி— திணிக்க வேண்டும் என்ற உண்மையை அவரது கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒட்டுமொத்த உயர்-தொழில்நுட்ப தொழில்துறை மீதும் அது தன்னை ஒரு நடைமுறையளவிலான உலகளாவிய சர்வாதிகாரியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.

சீனா திருப்பித் தாக்கக்கூடிய சக்திவாய்ந்த ஆயுதங்களை கொண்டுள்ளன, மேலும் பெய்ஜிங் அவற்றைப் பயன்படுத்துவதற்கான அதிக விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. முதல் சுற்று ட்ரம்ப் வரிகளுக்கு அதன் பதில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது மற்றும் அதனால் சிறிய விளைவைக் கொண்டிருந்தது, மேலும் பைடென் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அது ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாகச் சீனா அதன் பதிலடியைத் தயாரித்து வருகிறது. கடந்த வாரம் டைம்ஸ் செய்தியறிக்கை குறிப்பிட்டதைப் போல, ட்ரம்ப் முதல் ஜனாதிபதி பதவிக்காலத்தின் போது, “சீன அரசாங்கம் அமெரிக்க சுங்கவரி விதிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் பெரும்பாலும் அடையாள மற்றும் சமமான நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் இந்த முறை சீனா தனது பதிலடிகளை அதிகரிக்க முன்வந்துள்ளது... மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக தீவிரமான மற்றும் குறிவைக்கும் எதிர் நடவடிக்கைகளை இலக்காகக் கொள்ளலாம்.”

மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) சேர்ந்த ஜூட் பிளான்செட் கூறுகையில், சீனா “வலியைப் போக்கும்” திறன் கொண்டது என்று டைம்ஸ் க்கு தெரிவித்துள்ளார்.

“அரசியல் காரணங்களுக்காக பெய்ஜிங் கணிசமான புதிய சுங்கவரி விதிப்புகள் வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க தயாராக இல்லை என்பது தெளிவாகிறது” என்று அவர் கூறினார்.

சில்லு (chip) தயாரிப்பதற்குத் தேவையான முக்கியமான கனிமங்களுக்குச் சீனா முக்கிய அளிப்பாளராக (supplier) உள்ளது. இது உலகின் காலியம் விநியோகத்தில் 98 சதவீதத்தையும் ஜெர்மானியம் 60 சதவீதத்தையும் உற்பத்தி செய்கிறது. கடந்த மாதம் புளூம்பேர்க் மேற்கோள் காட்டிய அறிக்கை ஒன்றில், காலியம் மற்றும் ஜெர்மானியம் மீதான சீனாவின் மொத்த ஏற்றுமதித் தடையானது அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு $3.4 பில்லியன் டாலர் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்கப் புவியியல் மதிப்பாய்வு கூறியிருக்கிறது.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில், சீனா ஏற்றுமதித் தடைகள் குறித்து நீண்ட காலமாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, டிரிவியம் சீனா ஆய்வு நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் ஜோ மசூர் புளூம்பெர்க் ஊடகத்திடம் கருத்து தெரிவிக்கையில், “இந்த தடைகளின் அமலாக்கம், கடந்த ஆண்டுகளை விட தற்போது அமெரிக்காவின் பொருளாதார அழுத்தங்களுக்கு எதிராக சீனா மிகக் கடுமையாக பதிலடி கொடுக்கத் தயாராகிறது என்பதன் வெளிப்படையான அறிகுறியாகும்” என்று குறிப்பிட்டார்.

Loading