மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இந்தியாவின் தீவிர வலதுசாரி இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார். அத்துடன், ஜூலை 14 வெள்ளியன்று, பாரிஸ் சாம்ப்ஸ் எலிசேயில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்த பாஸ்டில் தின அணிவகுப்பில் கெளரவ விருந்தினராக கலந்துகொண்டிருந்த மோடி, மக்ரோனுடன் நின்றிருந்தார்.
கடல்போல் வறுமை மற்றும் மக்களின் அவலநிலைக்கு மத்தியில் இந்தியாவின் செல்வ வளத்தில் 45 சதவீதத்தை விழுங்கி உள்ள உயர்மட்ட 1 சதவீதத்தினரான, இந்தியாவின் முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் பிரதிநிதியாக மோடி இருக்கின்றார். அவர் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது, 2,000 பேர் கொல்லப்பட்டு நூறாயிரக் கணக்கானவர்களை வீடற்றவர்களாக ஆக்கிய 2002 முஸ்லீம்-விரோத படுகொலையைத் தூண்டியதிலும், ஒத்துழைத்ததிலும் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
“இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 14 அன்று கெளரவ விருந்தினர்: ஒரு சோக சின்னம்”என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை, “பல மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் எதிர்ப்பாளர்கள், அமைதியான போராட்டக்காரர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களை எதிர்கொள்கிறார்கள். அத்தோடு, அடிப்படையற்ற வழக்குகள், சட்டவிரோத டிஜிட்டல் கண்காணிப்பு, கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் அவர்களின் உரிமைகளை மீறுதல் ஆகிய பிற வடிவங்களையும் எதிர்கொள்கிறார்கள்”என்று குறிப்பிட்டுள்ளது.
பாரிஸில் பொலிஸ் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சிறிய போராட்டங்கள் மோடிக்கு எதிராக நடத்தப்பட்டன. “இன்று இல்லை மிஸ்டர் மோடி! பாஸ்டில் தினம் என்பது சுதந்திர தினம்”, “மோடியின் அதிதீவிர வலதுசாரி நிகழ்ச்சி நிரல் வேண்டாம்”, “மனித உரிமைகளின் எதிரிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வேண்டாம்”, “முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பாகுபாட்டை நிறுத்து”போன்ற பதாகைகளை போராட்டக்காரர்கள் வைத்திருந்தனர்.
ஆனால், மோடியின் எதேச்சாதிகார சாதனை, அவரை சர்வதேச அளவில் அவரது சகாக்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்திருக்கிறது. உண்மையில், வியாழன் மாலை மக்ரோன் அவருக்கு லெஜியன் ஆஃப் ஹானர் (Legion of Honor) என்ற விருதை வழங்கினார். 2020-ல் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மோடிக்கு அமெரிக்க “லெஜியன் ஆஃப் மெரிட்”என்ற விருதை வழங்கியதைத் தொடர்ந்து, 2023-ல் எகிப்திய கசாப்புக் கடைக்காரர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியால் அவருக்கு ஆர்டர் ஆஃப் தி நைல்என்ற விருது வழங்கப்பட்டது. கடந்த மாதம் மோடியை அமெரிக்க அதிபர் பைடெனும் வரவேற்றிருந்தார். மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அவர் செல்கிறார்.
ஜூலை 14, 1789 இல், மன்னர் 16ம் லூயியின் கொடுங்கோல் நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிராக “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற கோஷத்தை உயர்த்தி, பாஸ்டில் சிறையை தகர்த்தெறிந்ததின் மூலம் பிரெஞ்சு புரட்சி தொடங்கியது. ஆனால், இந்த ஆண்டு, இரண்டு வாரங்களுக்கு முன்பு 17 வயதான நஹெல் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நாடு முழுவதும் வெடித்த எதிர்ப்புகளை அடக்குவதற்கு மக்ரோன் பொலிஸ் வன்முறையைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, பாஸ்டில் புயல் தாக்குதலின் ஆண்டு நினைவு நாள் குறிக்கப்பட்டது.
மீண்டும் போராட்டம் வெடிக்கலாம் என்பதால் 100,000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அணிவகுப்பில் இராணுவ வாகனத்தில் சென்ற மக்ரோன், மேலும் எதிர்ப்பு போராட்டங்களைத் தூண்டிவிடுமோ என்ற அச்சத்தில், கலவரங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கும் திட்டமிடப்பட்ட உரையை அவரால் ஆற்ற முடியவில்லை.
இத்தகைய நிலைமைகளின் கீழ், மோடியை கெளரவ விருந்தினராக ஆக்கியது பிரெஞ்சு பசுமைக் கட்சியின் தலைவரான மரீன் டோண்டிலியே விவரித்த “கடுமையான அரசியல் பிழை”அல்ல. மாறாக, இது மக்ரோனின் சொந்த ஜனநாயக விரோத மற்றும் இராணுவவாத நிகழ்ச்சி நிரலை அடிக்கோடிட்டுக் காட்டும் நோக்கத்தின் பிரகடனமாகும்.
ஆயிரக்கணக்கான துருப்புக்களின் அணிவகுப்பு காட்சியுடன், ஹெலிகாப்டர்களை உள்ளடக்கிய 90 க்கும் மேற்பட்ட ஜெட் விமானங்கள் வானில் பறந்தன. இவற்றுக்கு மத்தியில், 240 இந்திய துருப்புக்கள் மற்றும் பிரான்சில் தயாரிக்கப்பட்ட இந்திய போர் விமானங்களுடன், பாரிஸ் உக்ரேனுக்கு வழங்கும் சீசர் ரக ஏவுகணை எதிர்ப்பு பேட்டரிகளும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன. அத்துடன், மோடி மற்றும் பல்வேறு உக்ரேனிய அதிகாரிகளுடன் மக்ரோன் அமர்ந்திருந்திருந்தது முற்றிலும் பொருத்தமானதாக இருந்தது.
ஏகாதிபத்திய போர் உந்துதலுக்கு மத்தியில் மோடியின் பிரான்ஸ் பயணம், இந்தியாவின் இராணுவ அதிகரிப்பை எடுத்துக்காட்டுகிறது. அவரது அரசாங்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஊக்குவிக்கப்பட்டு, மூலோபாய ரீதியாகவும் வணிக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடல் பகுதியில், இந்திய இராணுவ சக்தியை வலுப்படுத்துவதன் மூலம், சீனாவிற்கு எதிராக பெருகிய முறையில் போட்டி மூலோபாயத்தை பின்பற்றுகிறது.
இந்த கொந்தளிப்பான சூழ்நிலையில், மோடி மக்ரோனுடன் பல ஆயுத ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். வியாழன் அன்று, மோடி அரசாங்கம் 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் 3 ஸ்கார்பீன் வகை இராணுவ நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆதரவு உபகரணங்கள், ஆயுதங்கள், சிமுலேட்டர்கள் மற்றும் உதிரி பாகங்களை பிரான்சின் டசோ மற்றும் கடற்படைக் குழுமத்திடம் இருந்து வாங்குவதை உறுதி செய்தது. இந்த விமானங்கள் இந்திய விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து செயல்படும். மோடி ஏற்கனவே 36 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் 6 ஸ்கார்பீன்களை வாங்கியுள்ளார்.
பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள், போக்குவரத்து, எரிசக்தி, விண்வெளித் துறைகளில் புதிய ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, விண்வெளித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் ஒப்பந்தங்களில் மோடியும், மக்ரோனும் கையெழுத்திட்டனர்.
தெற்காசியப் பிராந்தியம் முழுவதும் போக்குவரத்துக் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும், கடல்வழிப் போக்குவரத்தைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் ஒப்பந்தம் ஒன்றில் பிரான்ஸ் மற்றும் இந்தியா கையெழுத்திட்டுள்ளன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் (IOR) சீனாவின் நடமாட்டம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தனது சொந்த நலன்களைப் பாதுகாக்க நீண்ட காலமாக தனது கடற்படைப் பிரிவுகளை பரந்துவிரிந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலைநிறுத்தியுள்ளது. இப்பொழுது, அமெரிக்கா மற்றும் இதர நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளால் நடத்தப்படும் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான பரந்த போட்டியின் மத்தியில், பிரான்ஸ் இந்தோ-பசிபிக் பகுதியில் தனது இருப்பை அதிகரிக்கவும், பிராந்தியத்தில் அதன் போட்டியாளர்களின் வளர்ந்து வரும் செல்வாக்கை, முக்கியமாக சீனாவை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் மோடி ஆட்சியுடன் அதன் மூலோபாய உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது.
எலிசே அரண்மனையில் வியாழன் மாலை அவர்கள் நடத்திய கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் மக்ரோன் தனது சுருக்கமான அறிக்கையில், இந்து அல்லாத சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு பற்றி எதுவும் குறிப்பிடாமல், 'இந்தியா ஒரு ஜனநாயக மற்றும் மக்கள்தொகை சக்தி' கொண்ட நாடு என்று அறிவித்தார். இந்த சந்திப்பில், ஊடகவியலாளர்கள் கேள்விகள் கேட்பதற்கு எதுவும் அனுமதிக்கப்படவில்லை.
2047ல் பிரித்தானியாவில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற 100வது ஆண்டு நிறைவையொட்டி, தங்கள் நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான “வரைபடத்தை” ஏற்றுக்கொண்ட மக்ரோன், “நமது எதிர்காலத்தில் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருக்கும் இந்தியா, ஒரு மூலோபாய பங்காளியாகவும், நட்பு நாடாகவும் இருக்கிறது, இந்தோ-பசிபிக் நாடுகளின் ஒரே கருத்தை நாங்கள் ஒன்றாகப் பாதுகாக்கிறோம், அனைத்து மேலாதிக்க சக்தியும் இல்லாத திறந்தவெளியாக அது இருக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
இராணுவ அணிவகுப்பை தொடர்ந்து சீனாவை மறைமுகமாகக் குறிப்பிட்ட அவர், “கடலிலும், நிலத்திலும், வானத்திலும் நமது ஒத்துழைப்பின் அற்புதமான காட்சியை நாம் அனைவரும் பார்க்க முடியும்” என்று கூறினார்.
பிரான்ஸ் 7,000க்கும் மேற்பட்ட நிரந்தர தரைப்படைகளை இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் நிறுத்தியுள்ளது. இது ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதியில் உள்ள டிஜிபூட்டி, மடகாஸ்கருக்கு அருகிலுள்ள ரீயூனியன் தீவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடலில் மொசாம்பிக்கிக்கு அருகிலுள்ள மயோட் ஆகிய இடங்களில் தளங்களைக் கொண்டுள்ளது. அத்தோடு, இது தெற்கு பசிபிக் பகுதியில் பிரெஞ்சு பொலினேசியா மற்றும் நியூ கலிடோனியாவிலும் தளங்களைக் கொண்டுள்ளது. செஷல்ஸில் ராணுவ தளம் அமைக்க பிரான்ஸ் மற்றும் இந்தியா தயாராகி வருகின்றன.
மோடி அரசாங்கம் தனது பங்கிற்கு, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக எல்லைப் பகுதிகளில் புதிய அரண்கள், விமான ஓடுபாதைகள், சாலைகள், சுரங்கப்பாதைகள், பாலங்கள் மற்றும் ரயில் இணைப்புகளை உருவாக்கி, துருப்புக்கள் மற்றும் பொருட்களை விரைவாக நகர்த்தும் நடவடிக்கைகளை தொடர்கிறது. அத்தோடு, புதிய போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கும், இந்தியாவின் அணுசக்தியை விரிவுபடுத்துவதற்கும், கடந்த பட்ஜெட்டில் இராணுவ செலவினங்களை 13 சதவீதம் அதிகரித்து 5.94 டிரில்லியன் ரூபாயாக (72.6 பில்லியன் டொலர்களை) அதிகரித்துள்ளது.
மோடியை, புட்டினின் ஆட்சியில் இருந்து விலகி, அமைதிக்கான அழைப்பு மற்றும் ரஷ்ய எண்ணெயை வாங்கும் அதன் கொள்கையை முறித்துக் கொண்டு, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் நடைமுறைப் போருடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளச் செய்யும் நோக்கத்தைக் கொண்டிருந்த மக்ரோனின் இதர முக்கிய இராஜதந்திர முயற்சியானது, வெளிப்படையாக வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.