சீனாவில் பொருளாதாரம் தொடர்ந்து மந்தநிலையில் இருப்பதால் அனைத்துப் பார்வைகளும் முக்கியமான அரசாங்கக் கூட்டத்தைக் கவனிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நவம்பர் 4-8 சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழுவின் கூட்டம் பல ஆண்டுகளில் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.

1990 களின் தொடக்கத்திலிருந்து இல்லாத அளவுக்கு குறைந்த வளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை தூண்டுவதற்காக ஜி ஜின்பிங் ஆட்சிமுறை எவ்வாறு செயல்திட்டங்களை உருவாக்குகிறது என்பதே கூட்டத்தில் இருந்து வெளியாகும் முக்கிய அறிவிப்பாக இருக்கும்.

மார்ச் 5, 2024 செவ்வாய்க்கிழமை, [AP Photo/Ng Han Guan] சீனாவின் பெய்ஜிங்கில் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) தொடக்க அமர்வின்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இடது, பிரதமர் லி கியாங்குடன் பேசும்போது [AP Photo/Ng Han Guan]

செப்டம்பர் பிற்பகுதியிலும் இந்த மாத தொடக்கத்திலும், சீன மக்கள் வங்கி தலைமையிலான அதிகாரிகள், பங்குச் சந்தை மற்றும் கட்டட மனைத் துறையை (real estate sector) ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ச்சியான நிதியியல் நடவடிக்கைகளைத் தொடங்கினர், இது ஒரு குறிப்பிட்டளவு ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது.

ஆனால் சீனாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள பொருளாதார மற்றும் நிதியியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி நுகர்வுச் செலவினங்களை அதிகரிக்க இன்னும் அதிகம் செயற்பட வேண்டும் என்பதாகும். அது நடக்காவிட்டால், எதிர்காலத்திற்காக எடுக்கப்படக்கூடிய ஒரு சாத்தியமான வளர்ச்சிப் பாதை ஒருபுறம் இருக்க, இந்த ஆண்டுக்கான இலக்கு வளர்ச்சியான “சுமார் 5 சதவீதம்” என்பதை அடைய முடியாது.

வரவிருக்கும் ஆண்டுகளில் 10 டிரில்லியன் யுவான் ($1.4 டிரில்லியன் டாலர்) கடன் வாங்குவதற்கு ஒப்புதல் கொடுப்பது பரிசீலனையில் உள்ள முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் கொடுத்துள்ளது. இது உள்ளாட்சி நிர்வாகங்களின் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கவும், கட்டட மனைத் துறைக்கு ஏற்றம் கொடுக்கவும் உதவும். 6 டிரில்லியன் யுவான் கடன் உள்ளூர் அதிகாரிகளுக்கு அவர்களின் நிதிப் பிரச்சினைகளைச் சமாளிக்க உதவும் என்றும் 4 டிரில்லியன் யுவான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிலம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்றும் அது கூறியிருக்கிறது.

சீன அரசாங்க அதிகாரிகள் இன்னும் ஊக்கமளிக்கவிருப்பதாகவும், இது உள்நாட்டு தேவையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

கடந்த வாரம் வாஷிங்டனில் நடந்த சர்வதேச நாணய நிதியக் (IMF) கூட்டத்தின் ஒரு பகுதியாக ப்ளூம்பெர்க் ஊடகத்திடம் பேசிய துணை நிதியமைச்சர் லியாவோ மின் (Liao Min), “உள்நாட்டு தேவையை விரிவுபடுத்துவதற்கும் இந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி இலக்கை அடைவதற்கும் பெரியளவு (macro) கொள்கைகளின் வலிமையை மேம்படுத்துவதே குறிக்கோள்களாக இருக்கின்றன. இதற்கிடையில், பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கு, குறிப்பாக நுகர்வு உட்பட உள்நாட்டு தேவையை அதிகரிப்பதற்கு அழுத்தமளிக்க நாணயக் கொள்கையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.”

அடுத்த சுற்றுக் கொள்கைகள் “மிகப் பெரிய அளவில்” இருக்கும் என்று அவர் கூறினார், ஆனால் அதற்கான எந்த விவரங்களையும் கூறவில்லை. நிலைக்குழு கூட்டத்தின் முடிவில் மட்டுமே இவை வெளியிடப்படும், ஏனெனில் “சீனாவின் நிதிக் கொள்கைக்குச் செல்ல ஒரு சட்ட செயல்முறை” உள்ளது.

இதன் விளைவு இரண்டு காரணங்களுக்காகச் சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். முதலாவது, உலகளாவிய வளர்ச்சியில், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனப் பொருளாதாரத்தின் மந்தநிலையின் தாக்கம் ஆகும்.

சீன அரசாங்கமானது உள்நாட்டு பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறியுள்ளது. உள்நாட்டு நுகர்வை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் இல்லாமல், சீனாவின் ஆண்டு வளர்ச்சி எதிர்காலத்தில் 4 சதவீதத்திற்கும் “கீழே” வீழ்ச்சியடையக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரித்துள்ளார்.

இரண்டாவது பிரச்சினை, குறிப்பாகப் பசுமை தொழில்நுட்பம் (green technology) மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற உயர் தொழில்நுட்ப பகுதிகளில் ஏற்றுமதி மூலம் பொருளாதாரத்தை உயர்த்த முயற்சிக்கும் சீன அரசாங்கத்தின் உந்துதல் ஆகும். இது எதிர்கால சீன வளர்ச்சியானது உயர்தர புதிய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அரசாங்கத்தின் முன்னோக்குடன் ஒத்துப்போகிறது.

இந்தக் கொள்கையானது அமெரிக்காவின் தலைமையில் நடந்த ஒரு சர்வதேச தாக்குதலின் கீழ் ஏற்பட்டுள்ளது, இதன் விளைவாகச் சீன பொருட்களின் ஏற்றுமதி மீது வரிகள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்திற்காக வாஷிங்டனில் பேசிய, அமெரிக்க கருவூலச் செயலர் ஜேனட் யெலென் (Janet Yellen) இதுவரையில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளை, சீனாவின் அதிக திறன் மற்றும் பலவீனமான உள்நாட்டு தேவையைச் சமாளிக்கத் தவறிவிட்டதாக விமர்சித்தார்.

கூட்டத்திற்கு முன்னதாக, அவர் கூறுகையில், சீனாவின் கொள்கைகள் “முக்கிய தொழில்துறைகளில் அதிக உற்பத்தித் திறனை உருவாக்கி, அமெரிக்க மற்றும் பிற நிறுவனங்களின் நிலைத்தன்மையை அச்சுறுத்துகிறது மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைத்தன்மையை பாதிக்கும் அளவுக்கு அதிகமாகச் சுருங்கிய விநியோக சங்கிலிகளின் ஆபத்தை உயர்த்துகிறது” என்று கூறினார்.

சீனாவின் சமீபத்திய புள்ளிவிவரம் அதன் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் பெருகியிருக்கும் பிரச்சினைகளின் அளவைக் குறிக்கின்றது. ஞாயிறன்று (27-10-2024) தேசியப் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, பெரிய சீன தொழில்துறை நிறுவனங்களின் இலாபங்கள் ஆகஸ்ட் மாதம் 17.1 சதவிகிதம் சரிந்ததைத் தொடர்ந்து, செப்டம்பரில் முந்தைய ஆண்டைவிட 27.1 சதவிகிதம் குறைந்துள்ளது.

உயர் தொழில்நுட்பத் துறை மட்டுமே இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலாபம் 6.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக, செப்டம்பர் காலாண்டில் கடந்த ஆண்டைவிட 4.6 சதவீதம் பொருளாதாரம் விரிவடைந்தது. இது 2023 மார்ச் காலாண்டிற்குப் பிறகு மிகக் குறைந்த விகிதமாக இருக்கிறது.

ப்ளூம்பேர்க் தொகுத்துள்ள புள்ளிவிவரங்கள் பொருளாதாரத்தில் எந்த அளவிற்கு மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றன. பல மாகாணங்களும் உத்தியோகபூர்வ இலக்கான 5 சதவிகிதத்தை விடப் பின்தங்கியுள்ளன. இதுவே மூன்று தசாப்தங்களில் மிகக் குறைந்த அளவாகும்.

பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட மாகாணங்கள் இந்த ஆண்டு ஒட்டுமொத்த நாட்டைவிட மோசமாகச் செயல்படுகின்றன என்று புள்ளிவிபரம் காட்டுகிறது. மொத்தமுள்ள 26 மாகாணங்களில் ஐந்து மாகாணங்கள் மட்டுமே 2023 ஐ விட மூன்றாவது காலாண்டில் வளர்ச்சியடைந்ததைக் காட்டுகின்றன, மேலும் சில 11 மாகாணங்கள் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விடச் செங்குத்தான சரிவைப் பதிவு செய்துள்ளன.

ப்ளூம்பேர்க் அறிக்கையின் படி “இந்தாண்டு இதுவரை திபெத், ஜிலின் மற்றும் ஹைனன் ஆகியவை மிகவும் மோசமாகச் செயல்பட்டிருப்பதாகவும், அவற்றின் 3.2 சதவீதம் 2023 ஐ விட 6 சதவீதம் குறைவாக இருக்கிறது.

“கடந்த ஆண்டு பொருளாதாரத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த குவாங்டாங், வெறும் 3.4 சதவீதமாக மட்டுமே விரிவடைந்துள்ளது, இது பெருந்தொற்று நோய்க்குப் பிறகு பலவீனமான விளைவாக இருக்கிறது மற்றும் 2023 முழுவதும் 1.4 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. நாடு முதுவதும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முதல் ஒன்பது மாதங்களில் 4.8 சதவீதம் விரிவடைந்துள்ளது, இது கடந்த ஆண்டு 5.2 சதவீதமாக இருந்தது.”

சீன அரசாங்கமானது, சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திவாய்ந்த நிறுவனங்களின் தீவிர அழுத்தத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டின் இறுதியில் அதன் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைக் கைவிட்டது, அதன் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதன் மூலம் பொருளாதாரம் “மீண்டெழும்” என்று பரவலாகக் கணிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் சிறிதளவு அதிகரிப்பு இருந்தது, ஆனால் நுகர்வுச் செலவினம் தேக்கமடைந்ததால் அது வேகமாகக் குறைந்தது.

ஊக்க நடவடிக்கைகள் பெரிதும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகளின் செயல்பாடுகளைக் கொண்டே அமையும். இருப்பினும், கட்டட மனைத் துறையில் ஏற்பட்ட சரிவு காரணமாக, எவர்கிராண்டே (Evergrande) போன்ற முக்கிய நிறுவனங்கள் திவாலாகி விட்டதால், நில விற்பனையிலிருந்து வரும் வருவாய் குறைந்துள்ளது. இதன் காரணமாக, உள்ளூர் அரசாங்கங்கள் அதிக கடன் சுமையை எதிர்கொண்டு வருகின்றன.

உள்ளூர் அரசாங்கங்களின் கடனைத் தீர்க்க மத்திய அரசாங்கம் உதவுவதாக உறுதியளித்தாலும், அவற்றின் சிக்கல்கள் தொடர்ந்து மோசமடைகின்றன. இந்த ஆண்டு அனைத்து உள்ளூர் அரசாங்கங்களும் 3 சதவீதம் அதிகமான நிதி பற்றாக்குறையைச் சந்தித்து, செப்டம்பர் மாத இறுதிக்குள் 11.2 டிரில்லியன் யுவானை (1.6 டிரில்லியன் டாலர்) எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த வார உயர்நிலை கூட்டத்தில் எவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டாலும், அவை பொருளாதார மற்றும் அரசியல் மதிப்பீடுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். பொருளாதார ரீதியில் மத்திய அரசாங்கம் கடந்த காலத்தில் செயல்படுத்திய ஊக்க நடவடிக்கைகளை விரும்பவில்லை, ஏனெனில் இது கடனை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது.

ஆனால் அதேநேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் பார்வையிலும், அத்துடன் நடுத்தர வர்க்கத்தின் மேல்நோக்கி நகரக்கூடிய பிரிவுகளின் பிரிவுகளின் பார்வையிலும் அது என்ன அரசியல் சட்டபூர்வத்தன்மையை அனுபவித்து வருகிறதோ, அது பொருளாதார விரிவாக்கத்தைத் தொடர முடியுமா என்பதைச் சார்ந்துள்ளது என்பதை அது துல்லியமாக அறிந்துள்ளது. அந்த திறன் பெருகிய முறையில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

Loading