அமெரிக்க பொருளாதார போருக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை சீனா தீவிரப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

சீனாவுக்கு எதிராக 60 சதவீத வரிவிதிப்பை விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ள ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்று சுங்கவரிகளை உயர்த்துவதற்கு முன்னரே பெய்ஜிங் அதற்கு எதிராக அமெரிக்கா மூலம் தொடுக்கப்பட்டு வருகின்ற பொருளாதாரப் போருக்கு இதுவரை உள்ளதை விட மிகவும் பலமாகப் பதிலடி கொடுக்க அது தயாராக இருப்பதை எடுத்துக்காட்டி வருகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் [AP Photo/Maxim Shemetov]

உயர் தொழில்நுட்பக் உபகரணங்கள் மீது ஒரு புதிய தொடர்ச்சியான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் திணிக்க வெளியேறும் பைடென் நிர்வாகம், இந்த மாத தொடக்கத்தில் எடுத்திருக்கும் முடிவுக்குப் பதிலளிக்கும் விதமாகச் சீனா மிக வேகமாக முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் சீனாவின் உயர்-தொழில்நுட்ப வளர்ச்சியை முடக்குவதை நோக்கமாகக் கொண்டவையாக இருக்கின்றன, புதிய “உயர்தர” உற்பத்தி சக்திகளை உருவாக்குவதற்கான உந்துதலை மிக முக்கியமான நிலையில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் முன்வைத்துள்ளார்.

பெய்ஜிங் கடந்த வாரம் முக்கிய கனிமப் பொருட்களின் ஏற்றுமதி மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் இந்த வாரம் அமெரிக்காவின் முன்னணி மைக்ரோசிப் (chip) தயாரிப்பு நிறுவனமான என்விடியா (Nvidia) மீது ஒரு ஏகபோகத்திற்கு எதிரான விசாரணையை அறிவித்துள்ளது, இந்த நடவடிக்கையை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் (WSJ), “வர்த்தக மற்றும் தொழில்நுட்ப தடைகளால் இலக்கு வைக்கப்படும்போது சீனா அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்ற ஒரு செய்தியை அனுப்புகிறது” என்று வகைப்படுத்தியிருக்கிறது.

ஏற்றுமதித் தடைகளானது காலியம் (gallium), ஜெர்மானியம் (germanium), ஆண்டிமனி (antimony) ஆகிய தனிமங்களையும், அதி கடின கனிமங்கள் என வர்ணிக்கப்படும் பல்வேறு சேர்மங்களையும், குறைக்கடத்திகளின் (semi-conductors) உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் கிராபைட்டையும் (graphite) உள்ளடக்குகின்றன.

கனிமங்களை அமெரிக்காவுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கு சீனா தடை விதித்ததோடு மட்டுமல்லாமல், சீனாவிடமிருந்து கனிமங்களை வாங்கி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் மூன்றாவது நாடுகளுக்கும் தடையை விதித்துள்ளது.

இது அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளுக்கு இணையானதாக உள்ளது. அமெரிக்கத் தொழில்நுட்பம் கொண்ட கூறுகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை, அவற்றைப் பயன்படுத்தும் நாடுகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதைத் தடுக்க அமெரிக்கா முயன்றுள்ளது. இத்தகைய மூலோபாய ஏற்றுமதிகளின் மறு-ஏற்றுமதிக்கு சீனா தடை விதிப்பது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் அண்மைய தடைகளைத் தொடர்ந்து மேலும் ஒரு படியாக, நான்கு பிரதான சீனத் தொழில்துறை அமைப்புகள் அமெரிக்க மைக்ரோசிப்புகளை (chips) வாங்குவதற்கு எதிராக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் (WSJ) குறிப்பிட்டுள்ளதன்படி, ஒரு ஐரோப்பிய மைக்ரோசிப் வடிவமைப்பு நிறுவனத்தின் செயல் அதிகாரி, தாங்கள் அமெரிக்கர்கள் அல்ல என்ற உறுதிப்பாட்டைக் கோரி சீன வாடிக்கையாளர்களிடமிருந்து கவலையூட்டும் தொலைபேசி அழைப்புகளைப் பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க மைக்ரோசிப்புக்களை (chips) நீக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இது ஒரு நேரடி உத்தரவு அல்ல, ஆனால் ஒரு பயமுறுத்தும் விளைவை ஏற்படுத்தும்” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் (WSJ) கருத்து தெரிவித்துள்ளது.

சீனா கடந்த காலங்களில் அரிதான தாது மற்றும் முக்கிய கனிமங்கள் என்று அழைக்கப்படுபவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. 2010 இல் கிழக்கு சீனக் கடலில் சர்ச்சைக்குரிய சென்காகு/டயோயு தீவுகளைச் சுற்றியுள்ள கடலில் யப்பான் கடலோரக் காவல்படையினர் கப்பல்களுடன் ஒரு சீன மீன்பிடி படகு மோதியதைத் தொடர்ந்து அதன் கேப்டனை கைது செய்த பின்னர், ஜப்பான் மீது ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

மீன்பிடி படகு கேப்டன் விடுவிக்கப்பட்டவுடன் உடனடித் தகராறு தீர்க்கப்பட்டது, ஆனால் இந்தச் சம்பவம் தடைகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் இந்த நிகழ்வுகளை மதிப்பாய்வு செய்த உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum - WEF) பின்வருமாறு கூறியது: “இந்தத் தடை ஜப்பானிய தொழில்துறையை, குறிப்பாக காந்தங்களின் உற்பத்திக்கு அரிய மண் உலோகங்கள் இன்றியமையாதவையாக இருந்த வாகனத் துறையை பீதிக்குள்ளாக்கியது”. இந்த கனிமங்களின் விநியோகத்தில் 90 சதவீதத்திற்கு ஜப்பான் சீனாவை நம்பியிருந்தது.

தடைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, “இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு வருடத்தில் அரிதான தாதுக்களின் விலைகள் 10 மடங்கு உயர்ந்துள்ளன” என்று அது தொடர்ந்து எழுதியுள்ளது.

பின்னர் ஜப்பான் சீனாவின் மீதான தனது சார்பை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது, இதற்கு 1.2 பில்லியன் டாலருக்கு சமமான தொகை செலவானது. அந்தக் கட்டுரை குறிப்பிட்டதுபோல: “இதன் வேகமும் அளவும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருந்தது, இது அவசர நிலையின் தீவிர உணர்வைப் பிரதிபலித்தது.”

அமெரிக்காவின் அதிகரித்து வரும் தடைப் பட்டியலுக்கு சீனா தீவிரமாக பதிலளிக்கும் என்பதை தெளிவாக எதிர்பார்த்த உலகப் பொருளாதார மன்றம் (WEF), இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் சீனாவின் மீதான சார்பை குறைப்பதற்கான “ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சிகளை” மேற்கொள்வதே என்று கூறியது.

ஜப்பானின் அனுபவத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டால், இது ஒரு கடினமான மற்றும் அதிக செலவு பிடிக்கும் பணியாக இருக்கும். 2010 ஆம் ஆண்டு நிகழ்வைத் தொடர்ந்து பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ஜப்பான் இன்னும் அரிய மண் உலோகங்களுக்காக 60 சதவீதம் வரை சீனாவை பெரிதும் சார்ந்திருக்கிறது.

கடந்த அக்டோபரில் அமெரிக்க புவியியல் ஆய்வு (US Geological Survey) நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் முடிவின்படி, காலியம் மற்றும் ஜெர்மானியத்தின் முக்கிய விநியோகிப்பாளராக சீனா இருப்பதால், இவற்றின் ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டால், அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு 3.4 பில்லியன் டாலர் அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

என்விடியா (Nvidia) மீதான ஏகபோக எதிர்ப்பு விசாரணை அரசு ஊடகங்கள் வழியாக அறிவிக்கப்பட்டது. இது, இம்முடிவு விசாரணையை மேற்கொள்ளும் சந்தை ஒழுங்குமுறைக்கான அரச நிர்வாகத்தால் மட்டுமல்லாமல், சீன அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

சில விவரங்கள் வெளியிடப்பட்டன, ஆனால் அது 2020 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய நெட்வொர்க்கிங் நிறுவனமான மெல்லனாக்ஸ் டெக்னாலஜிஸை (Mellanox Technologies) $6.9 பில்லியன் டாலர் கையகப்படுத்தியது சம்பந்தமான விசாரணை தொடர்பானது. இது என்விடியாவுக்கு (Nvidia) ஒரு பெரிய சாதகமாக அமைந்தது மற்றும் செயற்கை நுண்ணறிவில் (AI) பயன்படுத்தப்படும் மேம்பட்ட மைக்ரோசிப்புகளின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலில் அதன் முன்னணி நிலைக்கு அதை உயர்த்த உதவியது.

என்விடியாவின் உலகளாவிய மொத்த வருவாயில் சுமார் 12 சதவீத பங்களிப்பை வழங்கும் சீனச் சந்தையில் தொடர்ந்து இயங்குவதற்கு அவசியமான சீன அரசின் அனுமதியின் ஒரு பகுதியாக, என்விடியாவும் மெல்லனாக்ஸும் (Mellanox) சீனாவுக்கு வரைகலை செயலாக்கிகளை (graphics-processing units) தடையின்றி வழங்க இணங்கின. இந்த செயலாக்கிகள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தகவல் பரிமாற்ற சாதனங்களின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவையாகும்.

சீன ஒழுங்குமுறை ஆணையம் தனது ஒப்புதலின் நிபந்தனைகள் எவ்வாறு மீறப்பட்டிருக்கலாம் என்பது குறித்த விவரங்களை வழங்கவில்லை. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளிலும் ஏகபோக எதிர்ப்பு அடிப்படையில் என்விடியா கண்காணிப்பின் கீழ் உள்ளது.

இந்தப் பரிசீலனைகளின் அடிப்படையில் விசாரணை முறையாக இருந்தாலும், இந்த முடிவுக்கான அடிப்படைக் காரணம் அதுவல்ல.

அமெரிக்காவானது சீனா மீதான ஏற்றுமதித் தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை கணிசமாக அதிகரித்த சில நாட்களுக்குள் இது நிகழ்ந்தது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. இதில் 140 சீன நிறுவனங்களை ஒரு “நிறுவன பட்டியலில்” சேர்த்ததும் அடங்கும். இதன் அர்த்தம், இந்நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபட வணிகத் துறையின் ஒப்புதலைப் பெற வேண்டும், இது அரிதாகவே வழங்கப்படுகிறது.

என்விடியா மீதான அறிவிப்பின் விளைவு உடனடியாக வோல் ஸ்ட்ரீட்டில் அதன் பங்குகள் கிட்டத்தட்ட 2.6 சதவிகிதம் சரிந்தன; அதன் சந்தை மூலதனத்திலிருந்து $8.9 பில்லியன் டாலர்கள் இல்லாமலாக்கப்பட்டது.

என்விடியா மீதான நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரும், சீன ஏகபோக எதிர்ப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவருமான அங்கேலா லாங், வோல் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் கூறுகையில், “மிகவும் மதிப்புமிக்க அமெரிக்க நிறுவனங்களில் ஒன்றை இலக்காக்குவதன் மூலம், சீனா இப்போது தனது ஒழுங்குமுறை வலிமையை வெளிப்படுத்தி, பதிலடி கொடுக்கும் தனது திறனையும், சாத்தியமான மேலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுக்கும் ஆற்றலையும் காட்டுகிறது” என்றார்.

அந்த பதிலடி எவ்வளவு தூரம் செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், சீனாவைப் பொறுத்த வரையில், அரசாங்கம் குறைந்த வளர்ச்சி விகிதங்களுடன் போராட வேண்டியிருக்கும் நிலைமைகளின் கீழ், அதற்கு எதிரான அமெரிக்க பொருளாதாரப் போரில் ஒரு பெரும் தீவிரத்தன்மையைக் கொண்டுவரும் அபாயம் அங்கே உள்ளது.

இதுவரை அதன் நடவடிக்கைகள் கவனமாக இலக்கு கொள்ளப்பட்டுள்ளன. சிட்னி மார்னிங் ஹெரால்ட் கட்டுரையாளர் ஸ்டீபன் பார்தலோமியூஸ் (Stephen Bartholomeusz) “முக்கியமான கனிமங்கள் மற்றும் அமெரிக்காவின் இரண்டாவது மிக மதிப்புமிக்க நிறுவனத்தை இலக்கு வைப்பதன் மூலம் ... சீனா அமெரிக்காவின் வர்த்தக தடைகளுக்கு பதிலளிக்கும் அதன் திறனை முன்னிலைப்படுத்துகிறது, இது அதற்கு சிறிய செலவாகும், ஆனால் அமெரிக்காவிற்கு மிகப்பெரும் செலவை ஏற்படுத்தும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மிகச் சமீபத்திய சுற்று நடவடிக்கைகளும் எதிர் நடவடிக்கைகளும் இறுதியானதாக இருக்கப்போவதில்லை.

ட்ரம்ப் சீனப் பொருட்களுக்கு எதிரான தனது 60 சதவீத வரிவிதிப்பை முன்னெடுத்துச் சென்றால் அங்கே இன்னும் கூடுதலாகத் தீவிரப்படல் இருக்கும். கடந்த ஞாயிறன்று என்பிசி (NBC) செய்தி நேர்காணல் ஒன்றில் அவர் அவ்வாறு செய்வேன் என்று தெரிவித்துள்ளார். இது சீனா மற்றும் அமெரிக்காவை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் பாதிக்கும், ஏனெனில், தற்போதைய பொருளாதார நிலைமைகள், மிக உயர்ந்த அளவில், இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த 1930களின் நாய்ச் சண்டையைப் போன்ற கடுமையான போட்டி நிலையை ஒத்திருப்பதாக மாறி வருகிறது.

Loading