ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடானது உலகளாவிய போருக்கு மத்தியில் டாலர் ஆதிக்கத்தை குறைக்கும் முயற்சிகள் குறித்து விவாதித்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவின் கஸான் (Kazan) நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் [BRICS (பிரேசில்-ரஷ்யா-இந்தியா-சீனா-தென்னாப்பிரிக்கா)] கூட்டணியின் மூன்று நாள் உச்சிமாநாடு வியாழக்கிழமையன்று (24-10-2024) நிறைவடைந்தது. ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஜெஷ்கியன், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா எல்-சிசி ஆகியோர் உட்பட மொத்தம் 36 நாடுகளின் பிரதிநிதிகள் அசல் பிரிக்ஸ் ஐந்து நாடுகளின் அரசுத் தலைவர்களுடன் கலந்து கொண்டனர் 

அக்டோபர் 24, 2024 வியாழக்கிழமையன்று ரஷ்யாவின் கஸான் நகரில், பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இருதரப்பு சந்திப்பின்போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், வலதுபுறம், வியட்நாமிய பிரதமர் பாம் மின் சின்னை வாழ்த்தியபோது. [AP Photo]

கஸான் உச்சிமாநாடு உலக முதலாளித்துவத்தின் அடித்தளத்தில் இருக்கும் ஆற்றொணா பொருளாதார, பூகோள அரசியல் நெருக்கடியை தீவிரமாகக் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் உக்ரேனில் ரஷ்யாவுடன் போரைத் தொடர்ந்துகொண்டிருக்கையில், அதேநேரத்தில் காஸாவிற்கு எதிரான இனப்படுகொலையை ஆதரிப்பதுடன், ஈரான் மீதான இஸ்ரேலின் சாத்தியமான தாக்குதலுக்கும் ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் இது நடந்துள்ளது. கஸானில் கலந்து கொண்ட பல நாடுகள் —குறிப்பாக ஈரான், ரஷ்யா மற்றும் சீனா— இப்போது அமெரிக்க ஊடகங்களில் “தீமையின் அச்சு” (Axis of Evil) என்று கண்டிக்கப்படுகின்றன.

ஏகாதிபத்திய சக்திகளின் இடைவிடாத ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு, பிரிக்ஸ் நாடுகள் பிராந்திய கூட்டாளிகளை வளர்க்கவும், அமெரிக்க டாலரை சர்வதேச அளவில் நம்பியிருப்பதைக் குறைக்கவும் முயற்சிக்கின்றன.

புதனன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட கஸான் உச்சிமாநாட்டு அறிக்கையானது உக்ரேனியப் போரை “பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலமாக” முடிவுக்குக் கொண்டுவர அழைப்புவிடுத்ததுடன், காஸாவில் “அப்பாவி மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டுக்கொண்டிருப்பது மற்றும் காயமடைந்துகொண்டிருப்பது, கட்டாய இடப்பெயர்வு மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பின் பரவலான அழிவு” குறித்து “ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்தியது. தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் குண்டுவீச்சையும் அது விமர்சித்துள்ளது.

சட்டவிரோத தடைகள் உள்ளிட்ட ஒருதலைப்பட்சமான கட்டாய நடவடிக்கைகள் பொருளாதார வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் அறிக்கை எடுத்துரைத்தது. 2018இல் ஈரான் அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா தனித்து இரத்து செய்ததையடுத்தும், 2022இல் உக்ரேன் போர் தொடங்கியதையடுத்தும், வாஷிங்டன் முதலில் ஈரானுக்கும் பின்னர் ரஷ்யாவுக்கும் அமெரிக்க டாலர் மற்றும் ஸ்விஃப்ட் (SWIFT) எனும் சர்வதேச வங்கி பரிவர்த்தனை முறைமையை பயன்படுத்த தடை விதித்து, அவற்றின் பொருளாதாரங்களை முடக்கியது. மேலும், உக்ரேனில் நேட்டோ இராணுவ ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், ரஷ்யாவுடனான வர்த்தகத்திற்கு நிதியளிக்கும் சீன வங்கிகள் மீதும் வாஷிங்டன் தடைகளை அமல்படுத்தி வருகிறது.

ரஷ்ய டாலர் கையிருப்புகளைக் கைப்பற்றுவதற்கான வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளின் அச்சுறுத்தல்கள், சவூதி அரேபியா உட்பட, பிரிக்ஸ் இல் உள்ள அல்லது அதில் இணையக்கூடிய பல நாடுகளை எச்சரிக்கையடையச் செய்துள்ளன. சவூதி அரேபியா அதன் எண்ணெய் விற்பனையிலிருந்து பெரும் டாலர் கையிருப்புகளைக் வைத்திருக்கிறது, ஆனால் இப்போது அது சீனாவுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளைக் கொண்டிருக்கிறது.

எனவே, கஸான் உச்சிமாநாடு டாலரைத் தவிர்த்த பணப் பரிமாற்ற முறைமைகளை உருவாக்கவும், அமெரிக்கக் கட்டுப்பாட்டிற்கு வெளியே நிதிச் சந்தைகளை நிறுவவும் முடிவெடுத்து அல்லது பரிசீலித்துள்ளது. “பிரிக்ஸ் நாடுகளுக்கும் அவற்றின் வர்த்தகப் பங்காளிகளுக்கும் இடையிலான நிதிப் பரிவர்த்தனைகளில் உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதை” அது ஆமோதித்துள்ளது. “பிரிக்ஸ் அமைப்பிற்குள் தானிய (பொருட்கள்) வர்த்தகத் தளத்தை (பிரிக்ஸ் தானியப் பரிமாற்றம்) நிறுவுவதற்கான ரஷ்யத் தரப்பின் முன்முயற்சியையும்” அது ஆதரித்துள்ளது. ஏற்கனவே, பெரும்பாலான ரஷ்ய மற்றும் ஈரானிய எண்ணெய் டாலருக்கு வெளியே வர்த்தகம் செய்யப்படுகிறது, குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவுடன், இதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க முடிகிறது. 

உச்சி மாநாட்டு அறிக்கையானது பிரிக்ஸ் வங்கிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு பொறிமுறையை (ஐ.சி.எம் - ICM - interbank cooperation mechanism) “ஒரு சுயாதீனமான எல்லை தாண்டிய தீர்வு மற்றும் வைப்புத்தொகை உள்கட்டமைப்பை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது, இது ஸ்விஃப்ட்டுக்கு (SWIFT) போட்டியாக இருக்கும்.

ரஷ்யாவும் சீனாவும் கூட அமெரிக்க டாலருக்கு மாற்றீடாக இருக்கும் திறனுடைய தங்கத்தை வாங்குவதை விரைவுபடுத்தியுள்ளன. உக்ரேன் போருக்கு மத்தியில் ரஷ்யாவுடனான வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் அதேவேளை அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் சீன வங்கிகளைப் பொருளாதாரத் தடைகளுடன் அச்சுறுத்தினாலும், வர்த்தகத்தைத் தொடரும் திறனுக்கு இது முக்கியமானது என்று கூறப்படுகிறது. கடந்த மாதம், “601 சதவீத அதிகரிப்பு: ரஷ்யா ஈடுஇணையற்ற தங்கம் வாங்கும் வெறியைக் கட்டவிழ்த்து விடுகிறது” என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் ஜெருசலேம் போஸ்ட் குறிப்பிட்டதாவது:

ரஷ்யாவும் சீனாவும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்குப் பணம் செலுத்தும் வழிமுறையாகத் தங்கத்தைப் பயன்படுத்தும் ஒரு புதுமையான அணுகுமுறையை வகுத்துள்ளன. ரஷ்யாவில் தங்கத்தை வாங்குவது, அதை ஹாங்காங்கிற்கு விற்பனைக்குக் கொண்டு செல்வது மற்றும் அதன் வருமானத்தை உள்ளூர் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வது ஆகியவை இந்தச் செயல்முறையில் அடங்கும். இந்தத் தீர்வு இரு நாடுகளையும் பொருளாதாரத் தடைகளைத் தவிர்த்து வர்த்தகத்தைத் தொடர அனுமதிக்கிறது.

இருப்பினும், இந்த மாற்று வழிமுறை எளிதானதாக இல்லை. ரஷ்ய நிறுவனங்கள் முக்கிய ஆவணங்களை நாட்டின் எல்லைகளைக் கடந்து நேரடியாகக் கொண்டு செல்லவும், சீன வங்கி அதிகாரிகளிடமிருந்து அவசியமான அனுமதிகளைப் பெறவும் தனியார் தூதுவர்களை நியமிக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இம்முறை பாதுகாப்பு மற்றும் செலவு சார்ந்த பல சவால்களை எழுப்பியுள்ளது.

உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், புட்டின் இவ்வாறு கருத்துரைத்தார்: “அரசியல் காரணங்களுக்காக, அமெரிக்க டாலரை உலகளாவிய சர்வதேச கட்டண அலகாகப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதால், அமெரிக்க டாலர்கள் பயன்படுத்தப்பட வேண்டுமா என்று முழு உலகமும் சிந்திக்கத் தொடங்கியுள்ளது.” ரஷ்யாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 95 சதவீதம், குறிப்பாகச் சீனாவுடனான அதன் வர்த்தகத்தில் 95 சதவீதம், டாலரில் அல்ல, தேசிய நாணயங்களில் பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டாளிகளும் இத்தகைய முன்முயற்சிகளை சீற்றத்துடன் பார்க்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் நீண்டகாலமாகவே மற்ற நாடுகளை டாலரைப் பயன்படுத்த ஊக்குவிக்க அல்லது கட்டாயப்படுத்த முயன்று வருகிறது. குறிப்பாக 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், அது வெறுமனே ஈராக் அல்லது லிபியா போன்ற நாடுகளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய எண்ணெய் பெருநிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிப்பதையும் தாண்டி நிதியியல் கணக்கீடுகளின் அடிப்படையில் எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு முழுவதிலும் ஏகாதிபத்திய போர்களின் ஒரு அலையை நடத்தியது.

அமெரிக்காவின் போட்டித்திறன் தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்கா ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் அளவிலான பெரும் வர்த்தக மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைகளை சந்தித்து வருகிறது. இந்தப் பற்றாக்குறைகளை சமாளிக்கவும், உலகளாவிய தொழில்துறைகளிலிருந்து தேவையான பொருட்களைப் பெறவும், அமெரிக்கா டாலர்களை அச்சடித்தது - இது பெரும்பாலும் பாரிய அளவிலான நிதி உதவிகளாக அமைந்தது. பிற நாடுகள் இந்த டாலர்களை ஏற்றுக்கொண்டன, அவற்றிற்கு அமெரிக்கப் பொருட்களை வாங்க இவ்வளவு பெரிய அளவில் டாலர்கள் தேவைப்படவில்லை என்றபோதிலும். காரணம், எரிசக்தி அல்லது தானியம் போன்ற அமெரிக்கக் கட்டுப்பாட்டிலுள்ள சந்தைகளில் டாலர் மதிப்பில் விற்கப்படும் பிற நாடுகளின் பொருட்களை அவை வாங்கி வந்தன.

ஆகவே அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள் பிரிக்ஸ் உச்சிமாநாடு தொடங்கி வைத்த நிகழ்வின் வகையைத் துல்லியமாகத் தவிர்ப்பதில் தீர்மானகரமாக இருந்தனர்: அதாவது, அமெரிக்க-நேட்டோ புவிசார் அரசியல் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்கும் சந்தைகளிலும் டாலர்களிலும் மேற்கொள்ளப்படாத முக்கிய பொருட்களின் சர்வதேச வர்த்தகத்தை நிறுவுவது ஆகும்.

இந்த அபாயமானது நேட்டோ உத்தியோகபூர்வ வட்டாரங்களில் நன்கு புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. 2019 இல், டென்மார்க்கின் சாக்ஸோவங்கி யூரேசிய வர்த்தகம் இனியும் டாலர்களில் குறிப்பிடப்படாவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து ஒரு ஆய்வை வெளியிட்டது, இது “உலகளாவிய வர்த்தகத்தின் கணிசமான பகுதியை அமெரிக்க டாலரிலிருந்து எடுத்துச் சென்று, அமெரிக்காவை அதன் இரட்டை இலக்க பற்றாக்குறைகளுக்கு நிதியளிக்க தேவைப்படும் உள்வரவை முன்பினும் பார்க்கக் குறைய வைக்கும்” என்று அனுமானித்தது. “சில மாதங்களுக்குள்” ஆசிய நாணயங்களின் சராசரிக்கு எதிராக “அமெரிக்க டாலர் 20 சதவீதத்தை இழக்கும்” என்றும், “தங்கத்திற்கு எதிராக 30 சதவீதம்” இழக்கும் என்றும் அது முன்கணித்துள்ளது.

உண்மையில், பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே, அமெரிக்க அதிகாரிகள் பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராகச் சரமாரியான அச்சுறுத்தல்களை விடுத்தனர். இவை பிரதானமாக ரஷ்யா மற்றும் வட கொரியாவை இலக்கில் வைத்துள்ளன, உக்ரேனில் சண்டையிட வட கொரியா ரஷ்யாவுக்கு துருப்புகளை அனுப்புவதாகக் குற்றஞ்சாட்டின — இருப்பினும் இது சீனாவை இலக்கில் வைத்து ஆசிய-பசிபிக்கில் பதட்டங்களையும் அதிகரிக்கிறது.

“வட கொரிய துருப்புக்கள் சென்றதற்கான ஆதாரங்களை நாங்கள் காண்கிறோம் ... இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ரோமில் செய்தியாளர்களிடம் கூறினார்: “அவர்கள் சக-சண்டையிடுபவர்களாக இருந்தால் —ரஷ்யாவின் சார்பாக இந்த போரில் பங்கெடுப்பதே அவர்களின் நோக்கமாக இருக்குமானால்— அது மிக, மிக தீவிரமான பிரச்சினையாகும்.” என்று அவர் தொடர்ந்து கூறினார், “அதுபோன்றவொரு நடவடிக்கையின் தாக்கங்கள் ஐரோப்பாவில் மட்டுமல்ல, இந்திய-பசிபிக் பிராந்தியத்திலும் உணரப்படும்” என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை கருத்து தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, உக்ரேனில் உள்ள வட கொரியப் படைகள் “தாக்கப்படாலாம்” என்றும், உக்ரேனில் உள்ள அமெரிக்கா தலைமையிலான படைகளால் குறிவைக்கப்படலாம் என்றும் கூறினார்.

இது பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய பலவீனத்தைச் சுட்டிக்காட்டுகிறது. சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதற்கு முன்னர் ஸ்ராலினிச அதிகாரத்துவமும் செய்ய முயன்றதைப் போல, நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுடன் ஏறத்தாழ அமைதியாக இணைந்து வாழக்கூடிய வகையில், ஒரு “பல்துருவ” உலக ஒழுங்கை அபிவிருத்தி செய்ய நம்பிக்கை கொண்டுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் ஒரு கூட்டணியாக அது உள்ளது. ஏகாதிபத்திய சக்திகள் ஏகாதிபத்தியத்துடன் ஒரு இணக்கத்தை நாடுகின்ற அதேவேளையில், ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் பங்கிற்கு இனப்படுகொலை மற்றும் போர் மூலமாக அவற்றின் நலன்களைப் பின்தொடர்வதில் முற்றிலும் பொறுப்பற்றவையாகவும் ஈவிரக்கமற்றவையாகவும் உள்ளன. அவர்கள் பல்துருவத்தன்மையை அல்ல, உலக மேலாதிக்கத்தையே நாடுகின்றனர்.

பிரிக்ஸ் நாடுகளின் ஆளும் வர்க்கம், அண்மைக் காலங்களில் தங்கள் நாடுகளில் பில்லியன் கணக்கான தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கை பெருகியது குறித்து வேதனையுடன் நனவுபூர்வமாக உள்ளன. 2013இல் எகிப்தில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பின் போது, தொழிலாளர்களின் புரட்சிகர போராட்டங்களை இரத்தக்களரியில் அடக்கியதற்காக அவதூறு பெற்ற எகிப்திய சர்வாதிகாரி அப்தெல் ஃபத்தா எல்-சிசி கஸான் மாநாட்டில் பங்கேற்றது, தொழிலாளர்கள் மீதான இவர்களின் எதிர்ப்பை காட்டுகிறது. மேலும், பாகிஸ்தான், இலங்கை போன்ற பிரிக்ஸில் உறுப்பினராக இணைய விரும்பும் நாடுகளில் தொழிலாளர்கள் மீது சிக்கன நடவடிக்கைகளை திணிக்கும் சர்வதேச நாணய நிதியத்திடம்”,போதுமான நிதி ஆதாரங்கள்” வழங்க வேண்டும் என இம்மாநாட்டின் அறிக்கை கோருகிறது.

உச்சிமாநாட்டிற்கு முன்னர் தனது செய்தியாளர் கூட்டத்தில், முதலாளித்துவம் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளின் பொதுவான அடிப்படையில் பிரிக்ஸ் நாடுகளை ஒன்றிணைக்கிறது என்று புட்டின் வாதிட்டார். “சீனக் கலாச்சாரம், கிறிஸ்தவ கலாச்சாரம், இஸ்லாமிய கலாச்சாரம் ஆகியவற்றின் பாரம்பரிய மதிப்புகள் என்று அழைக்கப்படுபவை அனைத்தும் உண்மையில் ஒரே மாதிரியானவை, ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டால்” என்று அவர் கூறினார்.

நேட்டோ நாடுகளைப் போலவே, பிரிக்ஸ் நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் மத்தியில், ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரேன் மீது படையெடுப்பதற்கான நேட்டோவின் அச்சுறுத்தல்களுக்கு அல்லது காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு நேட்டோவின் ஆதரவுக்கு எதிராக பொதுவான எதிர்ப்பும் கோபமும் நிலவுகிறது. எனினும், “பல்துருவ” முதலாளித்துவ உலகைக் கட்டமைக்கும் முன்னோக்கானது, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கான ஒரு நடைமுறைச் சாத்தியமான முன்னோக்காக அமையாது.

பிரிக்ஸ் அமைப்பானது பல்வேறு வகையான ஆட்சி முறைகளைக் கொண்ட நாடுகளின் கூட்டணியாகும். அமெரிக்க ஏகாதிபத்தியமும் டாலரின் மேலாதிக்கமும் ஏற்படுத்தும் பேரழிவு அச்சுறுத்தல் குறித்த புரிதலைத் தவிர வேறெதையும் இந்நாடுகள் பெரிதாகப் பகிர்ந்து கொள்வதில்லை. இக்கூட்டணி நாடுகளுக்கிடையே கடுமையான உள்முரண்பாடுகள் நிலவுகின்றன. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளாகவோ அல்லது உறுப்பினராக விழையும் நாடுகளாகவோ உள்ள இந்தியா-பாகிஸ்தான், ஈரான்-சவுதி அரேபியா போன்றவை ஒன்றுக்கொன்று பலமுறை போர் தொடுத்துள்ளன அல்லது போர் தொடுக்கப் போவதாக எச்சரித்துள்ளன.

ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர, சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே ஏகாதிபத்திய சக்திகளின் இடைவிடாத போர் தீவிரப்பாட்டைக் கையாள்வதற்கான ஒரே நம்பகமான முன்னோக்கு ஆகும்.

Loading